அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மாமியார் வீட்டில்...
1

தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் -
வடநாட்டார் தலைமை.

தம்பி!

மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும்.

பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை.

கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது!

மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் "ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன். அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள் அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை - என்று மாமியார் சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல இருக்கிறது - என்று எண்ணிக் கொள்வார்கள் - மதிப்புப் பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் - "பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான்.

மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது, என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான்.

சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள். தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன் வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து, உரலிலிட்டு "மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால், அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை தருவதாக இருக்கும்.

இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி உலர்த்தும் வரையில் இருக்கும்.

"மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ.''

"உஹும், வேண்டாம்''

"ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை.''

"வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது''

"சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு.''

"ஐயயே! எனக்கு அந்த "நெடி'யே பிடிப்பதில்லை.''

"எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை.''

"தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார மெல்லாம் பிடிக்காது.''

மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில் நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை. வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான்.

இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன் மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன் டாட்டா கம்பெனி "ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு உயரும் என்று எண்ணிக்கொண்டான்.

"எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு தின்றாலும் தெவிட்டாது'' - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

வீணான பிகுவு

பிடிவாதம்

கௌரவம் பார்க்கிறார்.

என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப் பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டு!

உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை!

மணம், காற்றடிக்க அடிக்க, "கமகம'வெனக் கிளம்புகிறது, மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது. பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்!

கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்!

ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிட்டிருக்கலாம்.

மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள்.

நான்தான் சற்று அதிகமாகவே "பிகுவு' காட்டிவிட்டேன்.

இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக் கொட்டுகிறது.

மாப்பிள்ளை, பாபம், "சிம்மிளி' தவிர வேறு எதுபற்றியும் எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான்.

விசித்திரமான யோசனை - நிலைமைக்கு ஏற்றபடி - எழுந்தது அவன் உள்ளத்தில்.

உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்குமல்லவா!

எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும், சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும் - கிடைக்கும் - அதையாவது எடுத்து, வாயில் போட்டுக் கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான். உரல் இருக்கும் இடத்துக்கு.

"எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு, குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும் இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட "வீராப்பு' கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில் வருகிறாயா, வா! வா!'' என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு உள்ளே துழாவினான் - அடியில் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும் தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன. ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும் -அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் "சிம்மிளி'யைக் கண்டறிந்து எடுக்க!

அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை "நிமிர்ந்திடலானான் - முடியவில்லை - தலை "கலவடை'யில், உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை.

"ஐயோ!'' என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும் "கண்றாவிக்' கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம்.

மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவதுண்டு.

நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற, பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக் கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே "மாப்பிள்ளை' அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால், அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும், "மதிப்பு' பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம் என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த "வித்தையை'க் கூற அல்ல இதைச் சொன்னது.

மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம் அவர்கள், "கலவடை'யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில்.

இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர் திறமை, பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும் எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தபடி இருக்கிறார்கள்.

இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான் டில்லியில் மதிப்பு அதிகம் - அவரைச் சீந்துவதில்லை - என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும் நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக் கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்!

டில்லியோ. "தட்டிவிட்டு' வேடிக்கை பார்ப்பது, பலனும் சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது.

எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப் பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு, நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது வரையில்? - அவர் "பரிபூரண அடிமை'யாக இருக்கும் வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி - தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் "ஆசாமிகள்' இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக் காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய, குழைய, கெஞ்சிட, முன்வந்து, "மதிப்பு'ப் பெற முயற்சி எடுத்துக் கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும் முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக் கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் - நாசவேலையை, அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர்.

காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப் பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப் ஜின்னாவின் செல்வாக்கையே சின்னாபின்னமாக்கத்தக்கவர் என்று இஸ்லாமிய உலகுக்கு "சிபாரிசு' செய்யப்பட்டவர் தம்பி, ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை, உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்μயைப் பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்திவிட்டது!

ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் "அஸ்தியில் ஜுரம்' கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால், டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும் போதனை செய்துவிடுவார்களோ - என்ற திகில் குடைந்தபடி இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித் தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும், இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக் காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில் நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம், இதற்கான விளக்கம் கூறுவான்.

"மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு அந்த எண்ணம் தோன்றிற்று?''

"உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார் என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ் பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்து விட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு.''

மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் உண்மையைக் கூறமாட்டார்கள்!!

ஆனால், ஒருவர்மீது ஒருவர் "சாடி' சொல்லும்போது மட்டும், உண்மையைக் "கசிய' விடுவார்கள்.

தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள் கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப் பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும் சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான "அர்த்தால்' மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது, அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம் காட்டினார்?

டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப் பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!!

இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும் "உதவாக்கரை'களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர் குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? - என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர் "நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள், பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!'' என்று, "ரோஷம்' இருந்தால், அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின் தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக, தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம் - பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப் பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள் முன்னிலையில் "முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள், பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள் "ராஜிநாமா'க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி கொடுத்ததும், "விக்கல், விம்மல்' ஆக அல்லவா மாறிவிட்டது!!'' என்று சொல்லக்கூடும்.

அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி! உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும், மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில் மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம் முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும்.

தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும் - எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து, தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில், பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி, குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார் என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே, இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம், மாவட்டக் கலெக்டரிடம்.