அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மேற்கொண்டுள்ள மேலான பணி

தமிழ் நாட்டின் சிறப்பு -
பொதுச் செயலாளர் சுற்றுப் பயணம்.

தம்பி,

காஞ்சிபுரம், வாலாஜா, செங்கற்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், புதுவை, கடலூர், சேத்தியா தோப்பு அணைக்கரை, மாயவரம், குடந்தை, தஞ்சை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, நெல்லை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ஓட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, பவானி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர் ஆற்காடு, இராணிப்பேட்டை காவேரிப்பாக்கம், பெருமந்தூர், பூவிருந்தவல்லி.

இங்கே மோட்டார், மேலால் போக மறுக்கிறது! அங்கு இதயத்து மொழியை விழி காட்ட, ‘‘இதுவோ நான் உம்மிடம் எதிர்பார்ப்பது?” என்று கேட்டு நிற்கும் துணைவியாரின் கணையால் தாக்குண்டு நின்று விடுகிறார், நமது பொதுச் செயலாளர்; ஆனால் அதற்குள் ஆறு இரவுகள் ஓடிவிடுகின்றன - 12-ந் தேதி கிளம்பி 17-ந் தேதி இரவுதான் சுற்றுப்பயணத்தை முடிக்க முடிகிறது - ஓரளவுக்கு.

ஆறு நாட்கள், ஓரிடத்தில் மணிக்கணக்கில் தங்காமல், இரவு நடுநிசிக்குப் படுத்துறங்கி, விடிய எழுந்து பயணம் துவக்கி நடத்தி, இவ்வளவு இடங்களை மட்டுமே காண முடிகிறது - விடுபட்டுள்ள இடங்களோ, இதுபோல் பன்மடங்கு - நாகையும் திருத்துறைப்பூண்டியும், மன்னார்குடியும் பிறவும், கரூரும் ஆத்தூரும், ராசிபுரமும் நாமக்கல்லும் அருப்புக்கோட்டையும், காரைக்குடியும், சிதம்பரமும் வேறுபல பாசறைகளையும் காணமுடியாது - விடுபட்ட சிற்றூர்களோ, ஏராளம்; எனினும், வேறேதும் செய்வதற்கில்லை; இதற்குமேல் அதிக நாட்கள் இந்தக் காரியத்துக்காகச் செலவிடுவதற்கில்லை - என்ற வருத்தம் உடனிருக்க, இவ்வளவேனும் காணவாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதே என்ற உற்சாகம் ஊக்கிவிட, நமது பொதுச் செயலாளர், தம்பி! அனைவரையும் கண்டு பேச வருகிறார். நான் வரக்கூடும் என்று சென்ற கிழமை அறிவித்து இருந்தேன் - சென்னையில் நான் தங்கியிருந்து கவனிக்க வேண்டிய சில பணிகள் ஏற்பட்டுவிட்டன. சிரமம் பாராமல், நாவலர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் - தோழர் என்.வி. நடராசன் உடன் வருகிறார்; தோழர் கண்ணதாசனும் வருகிறார்.

பிப்ரவரி 20-ல், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், எவ்வளவு அமைதியான முறையில் நடைபெற்றாக வேண்டும் என்பதனை விளக்கிக்கூறிடவும், சர்வகட்சிக் கூட்டணி சம்பந்தமான முயற்சி பற்றி எடுத்துரைக்கவும் வருகிறார்.

பொது வேலை நிறுத்தம் என்பது சாமான்யமான காரியமல்ல.

ஜனநாயகம் நன்கு மதிக்கப்படும் நாடுகளில், ஆட்சியாளர்கள், இதனைத்தான் தமக்கு ஏற்பட்டுவிடக்கூடிய பெருத்த அவமானம் என்று எண்ணுவார்கள்.

காந்தியார், ‘‘யங் இந்தியா” பத்திரிகையில் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, ‘‘ஆயிரம் பிரசங்கங்களைவிட இந்த அர்த்தால் பலனுள்ளது” அதிலும் பிப்ரவரி-20, எந்த ஒரு கட்சியும் தனி உரிமை கொண்டாடும் காரியமாக இல்லை; பல்வேறு கட்சிகளும் தத்தமது சக்தியைக் கூட்டிக் காட்டிடும் மாபெரும் சம்பவமாகும்.

எனவேதான், நமது கழகத் தோழர்கள் துளியும் புகாருக்கு இடமற்ற முறையில், எவரும் கண்டு பாராட்டத்தக்க வகையில், நடந்து காட்ட வேண்டும்.

இந்தப் பொறுப்புணர்ச்சியை, பொங்கி எழும் ஆர்வத்தால் உந்தப்பட்டிருக்கும் தோழர்கள், மறந்துவிடலாகாது என்பதற்காகவே, பொதுச் செயலாளர் இந்த மின்னல் வேகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

தம்பி! காமராஜரும் பயணமாகி இருக்கிறார் - கடுங்குளிர் கொட்டும் அமிர்தசரசுக்கு.

இருவரும் போகும் திக்குகள் மட்டுமல்ல, வேறு வேறாக இருப்பது, இருவரின் நோக்கமும் வேறு வேறு!!

அமிர்தசரஸ் சென்றுள்ள காமராஜர், நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு வரப்போகிறார் - உங்களைக் காண வருபவரோ, நீங்கள் காட்டிடும் உற்சாகத்தைக் கண்டு களித்துப் புதியதோர் நம்பிக்கை பெற்று வரப் போகிறார்.

திரும்பி, வந்தவுடன், காமராஜர், போலீஸ் மேலதிகாரி களுடன் பேசக் கூடும்.

‘‘பிப்ரவரி-20, என்ன நேரிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”

‘‘சர்வகட்சிக் கூட்டணியாக இருப்பதால், சற்று வெற்றிகரமாகவே, அர்த்தால் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.” ‘

‘எந்த நிலைமையையும் சமாளிக்கத் தக்க ஏற்பாடுகள் உள்ளன அல்லவா!” ‘‘ஆகா! தாராளமாக தங்கள் உத்தரவைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

‘‘ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள்?”

‘‘வேலை நிறுத்த விஷயத்திலே அக்கறை காட்டுகிறார்கள், ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் கூட்டங்களில் - உற்சாகம் காட்டுகிறார்கள்.”

‘‘அது சரி! அது சரி! ஒரு நாளைக்கு நேருவை அழைத்து வந்து கூட்டம் போட்டால் போகிறது. இவர்கள் இப்போது செய்யும் காரியம் ஒரு பிரமாதமா? அது கிடக்கட்டும் - நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

‘‘நாமா. . . . தாங்கள் சொல்கிறபடி செய்யலாம். . . . முதலிலேயே, முக்கியமானவர்களைப் பிடித்துப் போட்டு விடலாம். . . . ”

‘‘நாற்பது ஐம்பதாவது இருக்கும் போலிருக்கே. . . . பிடிக்கப்பட வேண்டியவர்கள். . . .”

‘‘இருக்கும். . . . கமிட்டியில் 27 பேர். . . .”

‘‘கமிட்டியை அப்படியே. . . .”

‘‘அரெஸ்டு செய்துவிடலாம், எல்லோருடைய விலாசமும் குறித்து வைத்திருக்கிறோம். அன்றாட நடமாட்டம் பற்றிக் கூட குறிப்பு எடுத்திருக்கிறோம். விநாடி தவறாமல் கண்காணித்து வர ஏற்பாடு இருக்கிறது.”

‘‘அரஸ்டு செய்யலாம் ஆனால். . . .”

‘‘முன்பு தி.மு.க. மும்முனைப் போராட்டத்தின் போது, இது போலத்தான், அவர்கள் கூடி முன்னேற்பாடுகள் செய்வதற்குள், துளியும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தலைமை நிலையம் சென்று, சுற்றி வளைத்துக் கொண்டோம்; கமிட்டியை அப்படியே கொண்டு வந்து விட்டோம்.”

‘‘ஆமா. . . மாம். . . .”

‘‘ஏன்? ஏன்? ஏன் சிரிக்கிறீர்கள்?”

‘‘சிரிப்பா! இது என்ன சிரிப்பு! அப்போது நானும் என் நண்பர்களும், இதைவிடப் பலமாகக் கைகொட்டிச் சிரித்தோம். . . . என்ன பைத்தியக்காரத்தனம்! சீப்பை ஒளிய வைத்துவிட்டால் கலியாணம் நின்றா போகும்?. . . . இந்தக் கிழவர், இப்படி முக்கியமானவர்களை முன்னாலேயே சிறையில் போடுகிறாரே. . . . அந்த ஆத்திரம் போதுமே, மற்றவர்களுக்கு வீராவேசம் ஊட்ட! என்ன பைத்தியக்காரத்தனமான போக்கு இது? என்று பேசிச் சிரித்தோம். . . .”

‘‘அப்படியானால். . . .?”

‘‘அதே பைத்யக்காரத்தனத்தை நானும் செய்வதா? வேறு முறை கூறுங்களய்யா. . .”

‘‘வேறு. . . ! கலகம் குழப்பம் என்றால் முதலில் கண்ணீர்ப் புகை குண்டு வீசி விட்டு, பிறகு துப்பாக்கி. . . .”

‘‘பிறகு கீழே விழும், பிணத்தைப் பார்த்து மக்கள், என்னை வாழ்த்துவார்களா! . . .”

‘‘அதுவும் கவனிக்க வேண்டியதுதான். . .”

‘‘கடைகளை மூட வேண்டாம் என்று கூறி, போலீஸ் பாதுகாப்பு பலமாகக் கொடுத்து, கடை அடைப்பைத் தோற் கடித்தால் என்ன? அதற்குப் போதுமான போலீஸ் இருக்கிறதல்லவா?”

‘‘மாமாங்கத்துக்குப் போவது போக, மிச்சமிருப்பதைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். . . . ஆந்திரா, மலபார். . . . போலீசும் தருவிக்கலாம். . . . பட்டாளத்தைக்கூட பம்பாயில் தருவித்தார்கள்.”

திரும்பி வந்ததும் நமது பொதுச் செயலாளரோ,
எங்கும் எழுச்சி
எங்கணும் முழக்கம்
எவர் உள்ளத்திலும் உறுதி
சென்ற இடமெல்லாம் வீரம்
பரணி பாடி நிற்கின்றனர்
தியாகத்துக்குத் தயாராக உள்ளனர்

என்ற "சேதி'யை, இங்கு அவர் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் என்னிடமட்டுமல்ல, சர்வகட்சிக் கூட்டணியில் உள்ள தலைவர்களிடமெல்லாம் கூறப் போகிறார். - ஆமாம், தம்பி! உன்னைக் கண்டால், எவர் உள்ளத்திலேதான், வீர உணர்ச்சியும் நம்பிக்கையும் ஊற்றெடுக்காது.

ஆர்வம் கொழுந்து விட்டு எரிகிறது தம்பி, எங்கும்.

தமிழ் இனம், தன் இயல்பை இழந்துவிடவில்லை; வீழ்ச்சியுற்றது போல் காணப்படினும், எழுச்சி பெற நேரம் அதிகம் பிடிக்காது என்பதை எடுத்துக் காட்டவும், இடித்துக் காட்டவும் முடியும் தமிழகத்தால் என்பதை உணருகிறேன்.

தயார்! தாயர்! என்ற பேரொலி கிளப்பிடும் ஆயிரமாயிரம் தோழர்களைக் காணும்போது, வீரம் எத்துணை இங்கு இருக்கிறது என்ற எண்ணம் தேனென இனிக்கிறது. . . . ஒருகணம் - எனினும், மறுகணமோ, இத்துணை வீர உணர்ச்சி வீறிட்டெழும் நிலையில் நாடு இருக்கும் போதே, எத்தனை அக்ரமத்தைச் செய்ய, அநீதியைப் புரியத் துணிந்து விட்டனர், நேரு சர்க்கார் என்பதை எண்ணும்போது, துக்கம் நெஞ்சினைத் துளைக்கிறது.

ஒட்டகத்தின், "நகாரா' கொட்டுவோர்- ஓராயிரம் ஈராயிரம் என்ற அளவில், புதுச்சட்டை கிடைத்த மகிழ்ச்சியுடன் தொண்டர்கள். பூர்ண கும்பம் எடுப்போர், பொட்டிட்டு மகிழ்வோர், தட்டுத் தூக்குவோர், தாளம் கொட்டுவோர், கட்டியங் கூறுவோர், கானம் பாடுவோர், விட்ட அம்பு பாய்வது போலாகிய இட்ட பணியினைச்செய்து முடித்திடவல்லேன் என்று வீரம் பேசுவோர், வெட்டி வா என்றால் கட்டி வருவேனே நான்! என்று வீம்பு பேசி விருது தேடுவோர் ஆகிய அணிபணிபுனைந்த படைபுடை சூழ நேரு பெருமகனார், தலைவர் பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் தேபர் பராக்குக் கூற, அமிர்தசரசில் பவனி வருகிறார் - அவர் ஆணையை நிறைவேற்றித் தருவதற்கு, அதன் பயனாக அரசுக்கு இழுக்கு வரினும் மக்களுக்கு உரிமை பறிபோயினும், ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கப்படினும் கவலையில்லை, அவருடைய புன்னகை நம்மைக் கவர்னராக்கக் கூடும், அவருடைய தயவு நம்மைக் கோடீஸ்வரனாக்கக் கூடும், அவர் "தெரிசனம்' நமக்கு எத்தனையோ இலாபம் தரவல்லது, அது போதும், இந்த மக்கள் கிடக்கட்டும்! இதுகளுக்கென்ன! வறட்டுக் கூச்சலிடும் - சில நாட்கள்!! வீரம் பேசும்- சில வேளைகளில் காட்டவும் செய்யும் - துரத்தி அடித்தால் போகிறது - துப்பாக்கிக்கு முன் என்ன செய்யும் இந்தக் கும்பல்!! - என்று இறுமாந்து கூறிக்கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சர்கள், முடிச்சமைச்சர்கள் ஆகியோர்.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும் கனோசும், காமரூபமும் மாளவமும், கூர்ஜரமும் பிறவும் உருவாகாத நாட்களிலேயே, அயோத்தியும் அஸ்தினாபுரமும், காசியும் ஹரித்துவாரமும் "திவ்யக்ஷேத்திரங்கள்' ஆகாததற்கு முன்பே, பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிரி எனும் பல்வேறு துறை முகங்கள் கொண்டதாய் விளங்கியது எந்த நாடோ, எந்த நாட்டிலே முரசு மூன்று. தமிழ் மூன்று வகை என்றும், தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டிருந்தனவோ, எந்த நாட்டிலே நிலமே ஜவகையாக இயல்பும் எழிலும் பயனும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவழமும் பிறநாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித்தனரோ, எந்த நாட்டுப் புலவர்கள் புவியாளுவோரையும் துச்சமென்றெண்ணி அறநெறிக்கு மக்களை அழைத்துச் சென்றனரோ, எந்த நாட்டிலே முகிலின் முழக்கமும் முழவின் ஒலியும், மின்னல் ஒளியும் கன்னல் சுவையும், ஆடலழகியரின் கடையிடையும் ஆற்றலரசர்களின் கட்டாரியும் கொல்லவும் வெல்லவும் பயன் பட்டனவோ, எங்கு,

நற்றிணை நல்ல குறுந்தொகை
ஐங்குறு நூறு, ஒத்த பதிற்றுப் பத்து
ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு
அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்றபடி, பேரிலக்கியங்கள், கற்றோர் ஈட்டிய கருவூலமாக உளதோ, அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையினதான மொழிக்கும் கலைக்கும் இடமளித்துவிட்டு, இடர்ப்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத்தக்க விதத்தில் மானமழிந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்படுகிறது! எட்டுத் திக்கும் ஒரு காலத்தில் புகழ்க் கொடி பட்டொளி வீசிப் பறந்திட்டதாம்! இன்றோ, திக்குத் தெரியாத காட்டிலே சிறகொடிந்த நிலையில், தத்தித் தத்திச் செல்லும் தத்தை போலாகிக் கிடக்கிறது! முத்துப் பந்தலளித்து முழங்காற்படியிட்டுப் பணிந்தான் ஓர் மன்னன்! தந்தக் குவியல்களைக் காலடியில் கொட்டி, அரசர்க்கரசே! என்று அஞ்சலி செய்தான் மற்றோர் வேந்தன். படைகொண்டு வருவேன் என்று கூறினதும், திறை கொண்டு வந்தேன் என்று பதிலிறுத்தனர் மன்னர் பலர். காவிரிக் கரையிலே காதல் கீதம் பாடிய கட்டிளம் காளை, கட்கம் ஏந்திக் கங்கைக் கரையினரைப் போரிலே வென்று, அவர்தம் தேர்ச்சிலைச் சிலையினை, தமக்கு அதரத்தேனளித்து ஆட்கொண்ட ஆரணங்குகள் விளையாட வைத்திருந்த பொம்மைகளுக்கு அளித்தானாம்.

தம்பி! தம்பி! ஏன் பிறந்தோம் இந்நாட்டில்! பிறந்திடினும், தொதவர், தொம்பரவர் போல் இருந்து தொலைத்திடக் கூடாதா! ஏனோ, நம்மை எல்லாம் தமிழர் என்ற இன உணர்வும், அதனாலாய பெருமையினையும் பெறுமாறு நாவலரும் பாவலரும் செய்துவிட்டனர். அதனாலன்றோ நமக்கு நமது நாட்டின் அந்நாள் ஏற்றம் தெரிகிறது; தெரிவதனாலன்றோ, இன்றுள்ள இழிநிலையும், இனி எதிர்காலம் எப்படியோ என்ற அச்சமும் பிடித்தாட்டுகிறது- அல்லற்படுகிறோம் - அழுது நிற்கிறோம்.

இவை பற்றி ஏதும் தெரியாத காரணத்தால், அதோ பார், அந்த ‘அரும்பெருந் தலைவர்’ தொல்லையற்றுத் துயரற்று, அமிர்தசரசில், ஆனந்தமாகக் காட்சிகளைக் கண்டு களித்தபடி, தமிழ் நாடு தனியாக இருத்தல் கூடாது என்கிறீர்களா? சரி சரி! மெத்தச் சரி, தட்சிணப் பிரதேசமா? ஆஹா, அதனாலென்ன, ஏற்பாடு செய்வோம், கேரளமும் கருநாடகமும் தமிழகத்துடன் கூடி, ஓரரசு ஆகட்டும் என்று ஆணை பிறப்பிக்கிறீர்கள். சரி, அங்ஙனமே ஆகுக என்று கூறிக்கொண்டு நிற்கிறார், இங்கே அலைகிறார் அலைகிறார், ஐயகோ, தமிழரே! பரணை எல்லாம் பழந்தமிழ்ச் சுவடிகள், பாளையமெங்கும் பாவாணர் மரபுகள், வயலெலாம் செந்நெல், வாவி எல்லாம் வாளை, நினைவெலாம் நேர்மையின்மீது என்றெலாம் செப்பிடுவர் செந்தமிழ்க் காவலராம் பாவலர் பலர். இன்றோ, தமிழகம் தமிழர்க்கு இல்லையாம், தகுதியற்றோமோ, திறமை அற்றோமோ, அறிந்தோமில்லை. மொழி வழி அரசு எனப் பலகாலும் மொழிந்து வந்தனர், வாக்கினைத் தாமே மாய்த்திடும் வன்கணார்களாகி விட்டனர் ஆளவந்தோர். எனவே அரசு இனி, தமிழ் நாட்டுடன் அமையாது என்று அறைந்து விட்டனர்; பிற மொழியாளருடன் கூடி ஓர் அரசு நடாத்துவதே பெருமை அளிக்குமாம், சிறுமை ஒழிக்குமாம், பிணக்குத் தீர்க்குமாம், பிளவு போக்குமாம். இங்ஙனம் ஏலாதனவெல்லாம் கூறிப் பொய்யுரையைத் துணிந்து கூறிப் பொலிவுள்ள தமிழகத்தை, களமாக்கத் துணிந்து விட்டனர்.

சங்கம் அறிந்த சான்றோரே! சிலம்பொலி கேட்டுச் சிந்தையில் தேன் பெய்தது என்று கூறிக் களித்திடுவோரே? வீரம் செறிந்த தமிழ் நாடே! உன்னை வாழ்த்துகிறேன் என்று போற்றிடும் அன்பர்காள்! ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி வாக்கினை மாய்த்திட ஓர் மாபாதகத் திட்டம் வகுத்து விட்டனர் - வாய்க் கரிசியும் கைக்கிழங்கும் கிடைத்தால் போதுமென்றெண்ணி விட்ட ஆளவந்தார்கள், அத்தீய திட்டத்தினை நிறைவேற்றித் தர ஓப்பம் அளித்து விட்டனராம். ஓங்கு புகழ் நம்முடையது என்று ஓராயிரம் புலவர் பெருமக்கள், நம் இதயம் விம்மும் அளவு பாடி வைத்து விட்டனர்! ஒரு நொடியில் அதனை அழித்திடுவேன் என்று கூவுகிறார் நேரு; தாளம் கொட்டுகிறார் காமராஜர். இதற்கென்ன செய்வது? கூறுமின்! கூறுமின்! கூடிப் பணியாற்றிட வாரீர். பிப்ரவரி 20-ல், முதல் முழக்கம். அன்று தமிழரின் பெருமூச்சு, டில்லி செங்கோட்டையில் வீற்றிருக்கும் பாறை மனம் கொண்டோருக்கும் இரக்கம் எழத்தக்கதாக வேண்டும். அதற்கான அழைப்பினை நேரிலேயே தந்துவிட்டுப் போகவே, இதோ நான் வந்துள்ளேன். உமது வீரத்தை, ஆர்வத்தை, மொழிப்பற்றை, நாட்டுப் பற்றை, பண்பு கெடாமல் பணியாற்றும் திறத்தை நம்பி, பிறவேறு கட்சியினர் கூடியதோர் பேரவையில், சூழ் உரைத்து விட்டேன். அவர்களும் ஆமாம், உமது அணி வகுப்பின் ஆற்றலை நாங்கள் அறிவோம், நாடு அறியும் என்று கூறினர்.

நண்பர்களே, நாள் அதிகம் இல்லை. நாடெங்கணும் நடந்தாக வேண்டும், கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும். எனவே, உடனே துவக்குவீராக; வெற்றிக்கு வழிவகுத்துத் தருவீராக! தமிழகம், தன் வீரத்தை, உமது வெற்றியின் மூலம் விளக்கட்டும் - வீறு கொண்டெழுந்து இரத்தச் சேற்றிலே தள்ளப்பட்டாலும் தாயகத்துக்கு வர இருந்த தாழ்வினைத் தடுத்திடத் தவறினேன் இல்லை; இன்னுயிர் போகுமுன் அன்னையின் பொருட்டுப் பணியாற்றிவிட்டேன்; ஆவி பிரிகிறது எனினும், கண்மூடுமுன், இக்காரியத்தைத் தொடர்ந்து நடாத்தி வெற்றி காணும் வீரர் குழாம் எனைச்சூழ நிற்கக் காண்கிறேன் - அக்காட்சி தீட்டிடும் புன்னகையுடனேயே, புகழ்பெற்று மறைகிறேன் - தமிழ்நாடு மறையாது - மறையாது - என்று கூறும் அளவுக்கு வீர உணர்ச்சி கொள்வீராக - என்றெல்லாம் எடுத்துக் கூறிக்கொண்டு அலைகிறார், வாள் பெற உலைக்கூடமெங்கணும் சென்று காணும் பான்மை போல, அறப்போருக்கான அணிவகுப்பு அமைத்திட, வீரர் கோட்டமெலாம் வருகிறார். அவர்தம் வருகையின் போது வெற்றுரையும் வேண்டாம், விழாவும் கூடாது - வேலைத் திட்டம் தாருங்கள், பெறுங்கள் - நெடுஞ்சாலையோரமெல்லாம் நின்றிருந்து உரையாடுங்கள், கடும் போராயினும் கலங்க மாட்டோம் என்ற உறுதியினைத் தாருங்கள்; அமிர்தசரசில் ஆக்கப்பட்டு வரும் அக்ரமம், எந்த வடிவுடன் வந்தாலும், அதனை எதிர்த்தொழிக்கா முன்னம், ஊண் கொள்ளோம், உறக்கம் இல்லை என்று உறுதி கொள்ளுங்கள்.

ஆளைக் கொண்டுவருபவருக்கு ஜயாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் - என்று இந்தியப் பேரரசு, நாகர் தலைவன் பிஜோ குறித்து, அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது; அந்த உரிமைப் போர் வீரனுடைய சிரிப்பொலியை எதிரொலித்துக் கொண்டு குன்றும் மலையும், குணங்கெட்ட குடிலர்களின் கொற்றம் கொடுமை பல செய்கிறது, கொடுமை அதிகமாகவாக, அது அற்று வீழ்வது உறுதி என்று கூறுவது போல் நிமிர்ந்து நிற்கின்றன.

நமக்கும், அது போன்றதோர் ‘கொடுமை’யினைத் தாங்க வேண்டிய கட்டம் பிறக்கக்கூடும்.

பிப்ரவரி 20-ஒரு பெரும் பயிற்சி நாள்.

சர்வ கட்சிக் கூட்டணியின் பின்னால் திரண்டுள்ள சக்தியினை அறிந்துள்ள சென்னை சர்க்கார், டில்லி, சிண்டு பிடித்திழுத்து மண்டை ஓட்டு மாலையைக் கொண்டு வந்து தந்தாக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாலொழிய, நம்மைத் தீண்டும் என்று கூறுவதற்கில்லை, தீண்டியவர் என்ன ஆனார் என்பது அந்த நிலையிலேயே முதலமைச்சரானவருக்கா தெரியாமற் போகும்?

ஆனால் அதிகாரம், அத்தகைய அகந்தையை ஈன்றெடுத் தளித்திடும் - அதன் வயப்பட்டோருக்கு முன்னாள் நிலைமைகளும் நினைப்புகளும்கூட மறந்து போவதுண்டு.

எனவே, எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் தாங்கிக் கொள்ளும் தியாக உள்ளத்துடன் பணியிலே ஈடுபட வேண்டும். உனக்கென்ன, அறிவுக்கோ ஆற்றலுக்கோ பஞ்சமா? பழக்கமோ பயிற்சியோ இல்லையா? களம் பல கண்டவன்! வாகை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது; வழியிலே உள்ள முட்புதருக்காக அஞ்சிச் சிரித்திடும் முல்லையைப் பறித்திடாது திரும்பிடும் பேதையும் உளனோ?

தம்பி! உன்னைக் காணவரும் பொதுச் செயலாளரிடம் உறுதி கூறு,

பிப்ரவரி 20-ல்
அமைதி கெடாது
பலாத்காரம் தலைகாட்டாது
கண்ணியம் கெடாது
கட்டுப்பாடு குலையாது
களங்கம் ஏற்படாது!

என்று. உள்ள நாட்களோ குறைவு, மேற்கொண்டுள்ள பணியோ மேலானது.

அன்புள்ள,

12-2-1956