அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மகுடி ஊதும் மகானுபாவர்கள்!

கலையைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துதல் -
ஆச்சாரியாரின் இலக்கிய நுழைவும் குழப்பமும்

தம்பி!

"ஆமாம். இவர்கள் பூஜையும் பக்தியும் பத்தி எரிஞ்சாப் போலத்தான் இருக்கு சுட்ட செங்கல்லை வைத்துச் செய்கிற பூஜைக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?'' என்றாள். அவர்கள் பூஜித்த தெய்வம் செங்கல்லால் ஆனதுதான்.

எனக்குக் கோபம் வந்தது. "நீ கோவிலிலேபோய்க் குடும்பிகிற கருங்கல் சாமியிடம் மாத்திரம் என்ன இருக்கிறதாம்?'' என்றேன்.

"போதும்' பேசாமல் இருங்கள். கோவில்களிலே மந்திரங்கள், யந்திரங்கள் எல்லாம் செய்து விக்ரஹங் களைப் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். அந்த விக்ரஹங் களும் இந்தச் சுட்ட செங்கல்லும் ஒன்றாய்விடுமாக்கும்?'' என்றாள்.

"அது எனக்குத் தெரியாது. முன்பு கஜனி மகமதும் அவனுடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி, விக்ரகங்களை எல்லாம் மசூதிகளில் வாசற்படிகளாகப் போட்ட காலத்தில், இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்ததுபோல், அந்த வாசற்படிகளி லிருந்து வந்து. கஜனியின் ஆட்களை; ஹிரண்யனைக் கிழித்தது போல கிழித்துவிட வில்லை. பூஜைக்குக் கருங்கல்லாய் இருந்தாலென்ன? தெய்வம் கல்லுக் குள்ளேயா இருக்கிறது? நெஞ்சுக்குள்ளே வேண்டும்'' என்றேன்.

ராணியும் நானும் இப்படிப் பேசிக்கொண்டோம் என்று எண்ணிவிடாதே - வாதாடும் அளவுக்கு நேரம் கூடக் கிடைக்கிறதா! இது சில நாட்களுக்குமுன் நான் படித்த கதையில், ஒரு புருஷனும் மனைவியும் நடாத்தும் உரையாடல், சிறுகதை பெரிய தத்துவ விளக்கத்துக்காகத் தீட்டப்படும் "ரகம்'' இது என்று முன்னுரை சிபாரிசு செய்கிறது. கதை கூறுகிறேன். ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறான் ஒரு இலக்கிய ஆய்வாளன்! வெளியில் ரிக்சாக் காரர்கள் செங்கல் ஒன்றை நிறுத்திவைத்துப் பூச்சொரிந்து பூஜை செய்கிறாôகள். சரஸ்வதி பூஜை!! இந்த இலக்கிய ஆய்வாளரும், சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டுத்தான் உட்காருகிறார். ரிக்ஷாக்காரர் நடத்தும் பூஜையில் உண்மையான பக்தி இருப்பதை இவர் உணருகிறார். (இவர் உணர்ந்து என்ன பலன்! கடவுளல்லவா உணர வேண்டும்! உணர்ந்தால் இந்த ஜென்மங்களை ஏன் மனித மாடுகளாக்கி வேதனைப் படுகுழியில் தள்ளவேண்டும்? என்று கேட்பாய், தம்பி.) உணர்ந்து உவகையுடன் தன் இல்லாளைக் கூப்பிட்டு, இதோ பார்! இவர்கள் நடத்தும் பூஜையை. இதிலல்லவா உண்மை பக்தி இருக்கிறது'' என்று கூறுகிறார். அந்த அணங்கு, செங்கல்லை வைத்துக் கும்பிடுவதைக் கேலி செய்கிறாள். உடனே, இவர், இலக்கிய ஆய்வாளர் அல்லவா, ஒரு தத்துவத்தை எடுத்து வீசுகிறார்; "கடவுள் கல்லிலா இருப்பார், நெஞ்சிலல்லவா இருக்கிறார்'' என்கிறார். கூறிவிட்டு "மறுப்பாயோ இதனை'' என்று கேட்கிறார்; மாது சிரோமணி "எனக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம். இட்டிலிக்கு அரைக்கணும்'' என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருத்துக் குலுங்கும் கதை தீட்ட முடியும் என்று எண்ணிக் கொள்வாய். நீ மட்டும் என்ன தம்பி, நானும் அப்படித்தான் எண்ணினேன்; எழுதினவரும் நாமெல்லாம் அவ்விதம் எண்ணிக்கொள்ள இடம் வைத்துத்தான் எழுதினார். ஆனால், கதையின் நோக்கம் முற்றிலும் வேறு!!

எழுதியவர், சுயமரியாதைக்காரராக இருக்கத் துணிய வில்லை; "மேதை'' யாகிவிட விரும்புகிறார். எனவே கடவுள் எங்கு உறைபவர்? கருத்திலா, கல்லிலா, என்ற விவாதத்தைத் துவக்கி, முடிவு கூறாமல், அம்மையை மாவு அரைக்க அனுப்பி விட்டு, ஐயாவைக் கொண்டு, கார்ல் மார்க்ஸைத் தோற்கடிக்கச் செய்கிறார்!!

ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தாரல்லவா, பக்தியுடன் பூஜை செய்யும் ரிக்ஷாக்காரர்களை. அவர்கள் அன்று இரவு குடித்துவிட்டு அடிதடியில் இறங்கி ஆபாசமாக நடந்து கொண்டார்களாம். இதைக் கண்டு இவர் மிக வருந்துகிறார். இவ்வளவுதானா இவர்களின் பூஜையும் பக்தியும் என்ற எண்ணி உள்ளம் நைந்து போகிறது. இந்தக் கட்டத்தோடு கதையை முடித்துப் பூஜைகள் செய்து விடுவதாலேயே, போக்கு மாறிவிடுவதில்லை. பூசல் ஒழிந்து போவதில்லை, புத்தி தெளிவாவதில்லை என்று அறிவுரை தருகிறாரா என்றா கேட்கிறாய். தம்பி? அது நமது "முறை' - மேதைகள் அப்படிச் செய்வார்களா?

இலக்கிய ஆய்வாளர் இல்லக்கிழத்தியுடன், கல்லிலா கடவுள் இருப்பார், இருந்திருந்தால் கஜனி மகமது கண்டதுண்ட மாக்கப்பட்டிருக்க மாட்டானா? என்று வாதாடினாரல்லவா! அதே முறையில், கல்லைக் கடவுளாகக் கருதிக் கும்பிடுவதும், பூஜை செய்வதும், கன்னத்தில் அடித்துக் கொள்வதும், காப்பாற்று சாமி என்று வேண்டிக் கொள்வதும், நல்லறிவையும் நன்னெறியையும் தரக்கூடுமானால், காலையிலே (இவர் பார்த்து மெச்சத்தக்க வகையில்) பூஜை செய்த ரிக்ஷாக்காரர்கள், மாலை குடித்துவிட்டு வந்து கும்மாளமடிக்கும் நிலை வந்திருக்கலாமா, என்றெல்லாம் ஆராயவில்லை.

ஆராய்வாரா! "மேதை' யாக இருக்க வேண்டுமானால், அத்தகைய ஆபத்தான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாதே! சுயமரியாதைக் காரணாக்கி விடுமே!

இவருடன் வாதாட முடியாமலோ, விருப்பமில்லாமலோ, மனைவி, இட்லிக்கு மாவு அரைக்கச் சென்றுவிட்டார்கள்; இவர், இந்தக் காட்சி கிளறிவிடக் கூடிய கருத்துக்களைச் சந்திக்க அஞ்சி, தூங்கச் செல்கிறார்.

காலையில் மார்க்கட்டுக்குச் செல்கிறார்.

குடிபோதையில், எந்தச் சாமி, பந்தலை ரிக்ஷாக்காரர் பிய்த்திப் போட்டனரோ, அதை அவர்கள் செப்பனிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறார்!

இவர், உங்கள் மனதிலே நேற்றைய பூஜை உயரிய எண்ணங்களைத் தரவில்லையா! மனிதன் தேவனாகக் கூடும் பூஜா மகிமையால் என்று கூறப்படுகிறது. நீங்களோ கேவலம் மிருகமாகி விட்டீர்களே நேற்றிரவு - என்று விரிவுரையாற்றி னாரா? இல்லை! சிறிதளவு பயம் இருந்திருக்கலாம், "சரிதான், போசாமி! சும்மா என்னமோ எங்களைத் திட்டறே! வா, சாமி, என்கூட! எத்தினி பெரிய பார்ப்பானுங்களெல்லாம் குடிச்சிப் போட்டு மில்ட்டேரி ஒட்டல்லே பிரியாணி குர்மாவைத்தின்னு ஏப்பம் விடறானுங்கோன்னு காட்டறேன்'' என்று ரிக்ஷாக்காரன், "வம்பு தும்பு' பேசிவிடக் கூடும். எனவே, இவர் இதமாக அவர்களிடம் பேசி, குடிக்கக்கூடாது என்று உபதேசிக்க, அவர்களும் சாமி சாட்சியாகக் குடிப்பதில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

இதுதான் கதை! இதிலிருந்து இவர் பெற்று, படிப்போரு க்குத் தரும் பாடம் என்ன தெரியுமோ? கபந்த தத்துவத்தைப் போதித்த கார்ல் மார்க்சின் போதை சித்தாந்தம் கொஞ்சமும் உண்மையில்லை - என்பது பாடம் - பாடமாம்!!

இவர் தீட்டிய கதைக்கும் மார்க்சின் தத்துவத்துக்கும், என்ன தொடர்பு? எந்தச் சம்பவம் மார்க்சின் தத்துவத்தைப் பொய்ப்பிக்கிறது? - இவை பற்றி விளக்கினாரா - இல்லை! ஏன் விளக்க வேண்டும்! மேதைகளுக்கு அதுவா வேலை!!

மார்க்ஸ், மதம் மக்களுக்கு அபின் என்றார்.

அபின் போதை தருவது, மதமும் மக்கள் மனதிலே ஒரு மயக்கமளிக்கிறது, என்பது பொருள்!

அந்தத் தத்துவம் பொய் என்று கதை எங்கே காட்டுகிறது?

மதம் - பூஜை செய்ய வைத்தது - செய்தனர்.

குடி - சண்டையைக் கிளப்பிற்று - சண்டை போட்டனர்.

சண்டையை நிறுத்தி சன்மார்க்கத்தில் ஈடுபடுத்த மதமா பயன்பட்டது? இல்லை! குடிக்காதீர்கள் என்ற அறிவுரை பயன்பட்டது.

குடித்துவிட்டுக் கூத்தாடிய ரிக்ஷாக்காரர்கள் தெளிவு பெறுகிறார்கள், இவர் "போதை' கொள்கிறார் - மதபோதை!!

இதைக் கக்க, ஒரு கதை!

இந்தக் கதையின் இடையே கடவுள் எங்கே இருக்கிறார். கல்லிலா, நெஞ்சிலா என்று ஒரு விவாதம் - முடிவு பெறாமல்!!

மேதைகளென்றும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களென்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள், பெரும்பாலும், இதே "பாணி'யில் தான் எழுதுகிறார்கள்.

முற்போக்குக் கருத்துகள் தூவப்படும்! பிறகு, அது மறைக்கப்படும் அளவுக்குப் பழைமை கொட்டப்படும்!!

இந்தப் போக்கினர்தான், கதை, நாடகம், சினிமா இவைகளிலே பிரச்சாரம் கூடாது - பொதுவாகக் கலையைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினால், அதன் மேன்மையே குலைந்து போகிறது, தூய்மை நாசமாகிறது என்று "இலக்கிய உபதேசம்'' செய்பவர்கள்.

கார்ல் மார்க்சின் தத்துவத்தைக் கண்டிக்கவேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது இதிலே? ஏன் அதைச் சொருகிக் காட்டுகிறார்! இது பிரசாரமல்லவா?

பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற பேசுபவர்கள், தமது ஒவ்வொரு முயற்சியிலும் பிரசாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் - வெற்றி பெறுவதில்லை, பாபம். அதனால் தான், வெந்த உள்ளத்துடன், பிறர் வெற்றிகரமாகக்கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது கண்டு வெகுண்டு, கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள்.

"அது என்ன வழக்கம், சார்? எனக்குத் துளியும் பிடிப்ப தில்லை, மனைவியைக் கூட்டிக் கொண்டுதான், "பீச்' சுக்கு வர வேண்டுமா? பொம்பனாட்டிங்களோடு அவளை வரச் சொல்லிவிட்டு, வரப்படாதோ! நான் அப்படித்தான்'' என்கிறார் எம்பெருமாளய்யங்கார்! காரணம் இருக்கலாம் - அவரைப் பொறுத்த வரையில்! அம்மையின் திருப்பாதங்கள். கஜமுகன் அருள் பாலிக்கப்பட்டவையாக இருக்கலாம், வெளியே அழைத்து வந்தால், ஆபாசமாக இருக்குமென்று ஐயங்கார் சுவாமிகள் கருதியிருக்கலாம்.

"இந்த "ஜட''த்தோடு யார் போவா, பீச்சுக்கு? இது மூஞ்சியும் முகரக் கட்டையும் பார்த்தாலே, "பீச்'சுக்கு வர்ரவா, கேலியான்னா பேசுவா? இதனோட "தொணதொணப்பை' ஆத்திலே சகிக்கிறது போதாதுன்னு, பீச்சுக்குப் போய் வேறே பிராணனை விடணுமா? - வேண்டாம்டிம்மா நான் போகல்லே, அவரோட'' என்று சகதர்மணி கூறிவிட்டிருக்கலாம்.

அநாகரிகமான வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

அவர், தமது துணைவியை உடன் அழைத்து வராததாலேயே, அதுதான் முறை, தமது இல்லக்கிழத்தியுடன் வருபவர்கள், நாகரீக மற்றவர்கள் என்று பேசுவது அறிவுடைமையாகுமா!

அதுபோலத்தான், இவர்களால் கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை.

அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கிட்டவில்லை.

இதைக் கொண்டு, கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பார்த்து, பொம்மனாட்டிகளை ஏன் அழைச்சிண்டு வரணும் என்று கேட்கும் போக்கில், கலையில் பிரசாரம் இருக்கலாமா, என்று இந்த "மேதைகள்' பேசுகிறார்கள்.

தம்பி! நான் இப்படிச் சொல்வதால், சுவையும் அழகும் கொண்ட வகையில் எழுதக்கூடியவர்கள் நம்மவர்கள் மட்டும்தான், மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அவ்விதம் எழுதவே தெரியாது, என்று அகம்பாவம் கொள்கிறேன் என்று எண்ணிக் கொள்ளப்போகிறார்கள் - சொல்லிவிடு அவர்களுக்கு நான் அப்பப்பட்டவனல்ல என்பதை!

அவர்கள் தோல்வி அடைவதற்குக் காரணம் அழகாக, அருமையாக எழுதத் தெரியாததால், அந்தத் திறமை இல்லாததால் அல்ல! அவர்களின் தோல்விக்குக் காரணம், அவர்கள் மனதிலே, தெளிவான திட்டமான கொள்கையும், அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை.

பழைமை செத்து விடுகிறதே என்ற துக்கம் குடைகிறது. அதேபோது இந்த நாட்களில் பழைமையை ஆதரிப்பதா என்ற வெட்கமும் வேலாகிக் குத்துகிறது. எந்த முகாமில் இருப்பது, என்பது பற்றி முடிவெடுக்க இயலாமல், அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்! அந்தக் குழப்பம், அவர்களின் திறமையை மண்ணாக்கி விடுகிறது.

இந்தக் கதையையே பாரேன்? கல்லுக்கு மந்திர சக்தி ஊட்டுகிறார்கள் தெய்வம் ஆகிறது - என்ற பழைமையைப் "பாரியாள்' கூறிடக் கேட்டோம். இது நமக்குப் புரிகிறது! ஓஹோ! இது பத்தாம் பசலி! எவ்வளவு சொன்னாலும் ஏறாது!! என்பது தெரிகிறது. ஆனால் இலக்கிய ஆய்வாளனாகவும், அந்த மாது சிரோமணியின் மணவாளனாகவும் இருப்பவரின் போக்கு எப்படி இருக்கிறது? பழைமையின் பக்கம் நிற்கிறாரா! புதுமைக்காகப் போர்முரசு கொட்டுகிறாரா? என்று பாருங்கள்; குழம்புகிறார், வேறென்ன!

புதுமைக் கருத்திலே திளைத்தவர் போல மனைவியிடம், "கஜனி மகமதும் அவருடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி விக்ரஹங்களை எல்லாம் மசூதியிலே வாசற் படிகளாகப் போட்ட காலத்தில் இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்தது போல அந்த வாசற் படிகளிலிருந்து வந்து கஜனியின் ஆட்களை ஹிரண்யனைக் கிழித்தது போலக் கிழித்து விடவில்லை,'' என்று கூறி, ஏன் என்று கேட்கிறார்? எவ்வளவு தீவிரத் தன்மை சுடர்விடுகிறது! எத்துணைப் பகுத்தறிவுக் கதிர் தெரிகிறது! ஆனால் எற்றுக்கு!!

நேக்கு இந்த வம்பு தும்பு தெரியாது என்று கூறிவிட்டு அந்த அம்மை இட்லிக்கு மாவு அரைக்கச் சென்று விடுகிறார். நான் அந்த அம்மையை மதிக்கிறேன். நமக்குத் தெரியாது தேவையற்றது இந்தப் பிரச்னை என்ற தன்னடக்கம் இருக்கிறது, இவர்களிடம். சரியோ, தவறோ, பழமைதான் பிடித்தமாக இருக்கிறது! அதற்கு ஆதாரம் தேட வேண்டாம் என்ற அவசியமும் தோன்றவில்லை! அவர்களின் நிலை, புரிகிறது, நன்றாக. ஆனால் இவர்! அசகாயசூரர் போல ஒரு பிரச்னையைக் கிளப்புகிறார். தூணிலிருந்து வெளிப்பட்ட துளசிமாலையோன், ஏன் கஜனி மகமதைக் கிழித்தெறியக் கல்லிலிருந்து வெளிவரவில்லை என்று கிளப்பி விட்டு, பதில் அளிக்கிறாரா, எந்தப் பக்கமாகவாவது? அதுதான் இல்லை! அம்மைசுட்டுத் தரப்போகும் இட்லிக்குக் காத்துக் கொண்டிருக்கிறவராகத் தெரிகிறதே தவிர, கடவுள் எங்கு இருப்பார், கல்லிலா, நெஞ்சத்திலா என்ற சிக்கலான பிரச்னையைக் கிளப்பி விட்டோமே, ஒரு கதையில்; இதற்கு ஏதாவதோர் சார்பில் பதில் தரவேண்டாமா என்ற பொறுப்புக் கொண்டவராகத் தெரியவில்லை.

"தெற்கே போகிற வண்டிங்களா! நீங்க எங்கே மதுரைக்குப் போகிறிங்களா?'' என்று பன்னிப் பன்னிக் கேட்டு விட்டு, "அந்த ரயில் வந்ததும் வராததும் எனக்குத் தெரியாதுங்க'' என்று பேசும் திம்மப்பன்போல, "யாருக்கு? உன் மக கலியாணமா! ஆவணி பதினைந்தா! ஆற்காட்டிலா! ஆறு பவுனிலா செயின் போடனும்! செலவு ஆயிரத்துக்கு மேலே ஆகுமோ! நல்ல மனுஷன், உனக்குச் சகாயம் செய்ய யாருக்கும் இஷ்டம்தான், பகவான் எல்லாக் காரியத்தையும் சுபமாக முடித்து வைப்பார், கவலைப்படாதே'' என்று உபசாரத்தை வாரி வழங்கிவிட்டு, கடைசியில், "இப்ப என்னிடம் பணம் இல்லையே, வேறே இடம் பாரப்பா!'' என்று கடன் தந்து உதவாமல் விரட்டிவிடும் திமிரப்பன் போல், கடவுள் கல்லில் இருந்தால் கஜினியைக் கிழித்தெறிந்திருக்க வேண்டாமா என்று சூரத்தனமான கேள்வியைக் கிளப்பிவிட்டு, சுட்டுக் கொண்டு வா, இட்லியை என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுவதா!!

இந்தப் போக்கினால்தான், இவர்களைவிட இலக்கியத் திறமையும் எழுதும் திறமையும் குறைந்த அளவு பெற்றுள்ள நம்மவர்கள் பெறுகிற வகையான அளவுள்ள வெற்றியை இவர்களால் பெற முடிவதில்லை. ஆச்சாரியாரல்லவா இந்தக் கோஷ்டிக்'க்குத் தலைமை வகிக்கிறார்! எவ்வளவு பரிதாபம் பாருங்கள்? இந்தத் தள்ளாத வயதில், இதுநாள் வரை தாம் பெற்ற அனுபவத்தின் காரணமாக பெறக் கிடைக்கும் அரசியல் நுணுக்கங்களை எழுத வேண்டியவர், அனுமனின் வாலில் மூட்டப்பட்ட தீ பற்றி எழுதிக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது!

பழமைக்கு ஏதோ புது விளக்கம் கொடுத்து, நம்மவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி விடுவதாக மனப்பால் குடிக்கிறார்கள்; புதுமையோ எந்தத் திக்கிலும் இவர்களைத் தாக்கித் தகர்த்த வண்ணம் இருக்கிறது!

இவர்களின் பழைமைப் பிரசாரத்தின் காரணமாக, பக்தர்'களாக இருந்து வருபவர்கள், இவர்கள் நமக்குச் சமாதானம் கூறுவதற்காக விளக்கங்கள், தத்துவார்த்தங்கள் தருகிறார்களே. அவைகளையாவது ஏற்றக்கொண்டு, அவைகளின்படியாவது தங்கள் போக்கை மாற்றிக் கொள்கிறார்களா என்று பார்த்தால், அதுவுமில்லை

வயலில் விளைச்சல் அதிகம் வேண்டும் - அதற்கு வனதேவதைக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்ற பழைமை எண்ணம் பிடித்த ஆதிவாசிகள், கடந்த கிழமைதான், எட்டு வயதுப் பாலகளைக் கொன்று படைத்திருக்கிறார்கள்!

எத்தன் இவன் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினான் என்கின்றனர் போலீசார்; பிடிபட்ட பாஸ்கரராவ் என்பவனோ, நான் பக்தன் எத்தனல்ல! பணத்தை எடுத்தேன்; செலவிட்டேன்; எதற்கு? பகவானைப் பிரத்யட்சமாகக் காட்டுவதாகப் பக்கிரிசொன்னான், அவன் சொன்னபடி பூஜை பல செய்யவே செலவிட்டேன்! களவு என்கிறீர்கள், கடவுளைத் தேடிக காணச் சென்ற என் புண்ணிய காரியத்தை! என்று வாதாடுகிறான்.

புதுமையின் வேகத்தையும் தடுக்க முடிவதில்லை - பழைமையாளர்களையும், நாசுக்காகவாவது திருத்தமடயச்செய்ய முடிவதில்லை. காரணம், இவர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல; உள்ள சரக்கு மகாமட்டம். ஊசல் சரக்கை உண்மை அறிந்த மக்கள் குப்பைக்குப் போடுகிறார்கள்; இவர்கள் அதைக் குனிந்தெடுத்து, கூவிக் கூவி விற்கிறார்கள்! வியாபாரம் மிக மந்தமாக இருக்கிறது!

தம்பி, ஆச்சாரியார் போன்ற அதிமேதாவிகளுக்கே ஏற்படும் குழப்பத்தைப் பாரேன், நிலைமை விளங்கும்.

சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

திருநீறு, திருநாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

"சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக் குறியிலிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லாருக்கும் தெரியும்படியாகப் போட்டுக்கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக்கிறார்கள்.''

இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். சைவர்களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மை யுடன் ஒப்புக்கொள்வோம்.

திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரேதவிர, அவருக்குக் குழப்பம் வராமலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர்களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியிலே நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

"எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

எப்படி இருக்கிறது வாதம்? எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு?'

திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சார்யாள் சொல்லியிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும், அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சார்யாளின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

எதிலும் உறுதிப்பாடும் உத்வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப் படுவதிலே ஆச்சரியமென்ன.

தம்பி! இவைபற்றி நான் எழுதுவதற்குக் காரணம், இவர்களைக் கேலி பேசிக் களிப்பூட்ட வேண்டும் என்பதல்ல. நாம் பெற்றுள்ள கருத்துகள், மேற்கொண்டுள்ள பணி, எவ்வளவு மாண்புள்ளது என்பதை விளக்கத்தான்! திறமை முழுவதையும், ஆற்றல் அவ்வளவையும், தந்திரம் அத்தனையையும் உபயோகித்தாலும், வெற்றி காண முடியாத நிலையில் ஆச்சாரியார் போன்றோர் தள்ளப்பட்டுள்ளனர் - காரணம், அவர்கள் செத்த பாம்பின் முன்பு மகுடி ஊதிப்பார்க்கிறார்கள்!! இவர்களைவிட "எனக்கொன்றும் தெரியாது. இட்லி மாவு அரைக்க வேண்டும்'' என்று கூறிவிட்டுச் சென்ற அம்மையார் எவ்வளவோ மேல், என்பேன். செத்த பாம்பைப் படமெடுத்தாடச் சொல்லி மகுடி ஊதும் இந்த மகானுபாவர்களைவிட இந்த மாது சிரோமணி எவ்வளவோ மேல்தான், சந்தேகமின்றி!

அன்புள்ள,

26-6-1955