அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மூவர் முரசு
1

மூவர் முரசு
இத்தாலி நாட்டில் ஒரு கொடிய நிகழ்ச்சி -
அமைச்சர் பதவியும் சுப்பிரமணியமும் -
வடக்கும் தெற்கும் -
ஆச்சாரியார்.

தம்பி!

படித்து முடித்ததும், அந்தப் பாவை என் மனக்கண்முன் தோன்றிடவே "வீர வணக்கம், வனிதாமணியே! உலகிலே மாண்பும் அறமும் அடியோடு அழிந்து படாமலிருப்பது, உன்போன்ற ஆரணங்குகள் ஒரு சிலர் அவ்வப்போது ஆற்றலுடன் பணிபுரிவதனாலேதான்! தாய்க்குலத்தின் தனிப் புகழைத் தரணிக்கு விளக்கிய ஒளிவிளக்கே! உன் தாள் பணிகிறேன்! தையல் என்போர் மையல் ஊட்டும் மைவிழியும், களிப்பூட்டும் கொவ்வைக் கனிவாயும், தாலாட்டும் திருக்கரமும் மட்டுமே கொண்டவர்கள்; அவர்கள் மெல்லியலார், சுடு சொல் கூறிடக் கேட்டாலே அவர்தம் அகம் அல்லற்படும், முகம் பொலிவிழந்து விடும்; அனிச்சப்பூ போன்றார் அரிவையர், என்று மட்டுமே பேசுவர். ஆனால் பிறர் திகைத்துப் போயிருக்கும் நேரத்தில், அம்மையே! நீ காட்டிய அஞ்சா நெஞ்சு, அவனிக்கே ஓர் அணி எனலாம்!! வாழ்க உன் திருப்பெயர்! வளர்க மகளிர் மாண்பு'' - என்றெல்லாம், கூறிக் கூறி வியந்து பாராட்டினேன். ஆமாம், தம்பி, அனைவருமே போற்றிடத்தக்க வீரச் செயலைப் புரிந்தார் அந்த மாதர்குல மாணிக்கம்.

எழு நூறு போலீஸ் வீரர்கள் தடியும் துப்பாக்கியும் தயாராக வைத்துக்கொண்டுள்ளனர் - ஆனால் செய்வது யாது என்ற அறியாமல் திண்டாடித் தவிக்கின்றனர்; கட்டிடத்துக்கு வெளியே இருந்தபடி. உள்ளே இருந்தோ "ஐயய்யோ! அம்மம்மா! ஆபத்து! ஆபத்து! ஆண்டவனே! காப்பாற்று ஓடிவாருங்கள். வாருங்கள் ஓடி!'' என்ற கூக்குரல் பீறிட்டும் கொண்டு வருகிறது. துப்பாக்கி வேட்டுக் கிளம்பி உள்ளே நுழையலாம்!! ஆனால், துப்பாக்கியால் சுட்டால், கொடுமைக்காரர்மீது குண்டு பாய்ந்திடாமல், ஆபத்தில் சிக்கிக்கிடப்போர்மீது வீழ்ந்தால், என்ன ஆவது என்ற அச்சம் போலீசாரைச் செயலற்றவர்களாக்கி விட்டது.

பள்ளிக்கூடக் கட்டிடம் தம்பி, உள்ளே தாளிடப்பட்டுக் கிடக்கிறது - ஆறு வயதிலிருந்து பத்து வயது வரையில் உள்ள சிறார்கள் சிறுமியர்கள் - அந்தச் சிட்டுகள் உள்ளே சிக்கிக் கொண்டன, சித்திரவதை செய்யப்போகிறோம். வெட்டிக் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்போகிறோம் என்று வெறியர் இருவர் கொக்கரிக்கின்றனர். எப்படியோ, பள்ளிக்கூடத்துக்கு உள்ளே நுழைந்துவிட்ட இரண்டு வெறியர்கள், பள்ளி மாணவர்களின் கைகாலைக் கட்டிப்போட்டு விட்டனர்; ஆசிரியர்களையும் சிறைப்படுத்திவிட்டனர் - வெறியர் கரத்தில் கத்தியும் இருக்கிறது, துப்பாக்கியும் இருக்கிறது. எவ்வளவு பதைபதைத்திருக்க வேண்டும் அந்தப் பாலகர்கள்!!

ஆறு மணி நேரம் 92 குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள் இப்படிச் சிக்கிக் கொண்டனர் - இரண்டு வெறியர்கள் உள்ளே இருந்துகொண்டு கொக்கரிக்கிறார்கள் - மரியாதையாக நாங்கள் கேட்பதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உங்கள் குலக்கொழுந்துகளை மீட்டுக்கொண்டு செல்லுங்கள்!! தாக்கிட நுழைவீரேல், நாங்கள் பிடிபடுமுன்பு, குழந்தைகளை வெட்டிக் குவிப்போம்!! - என்கிறார்கள். அந்தக் கொடியவர்கள் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டது என்ன தெரியுமா, தம்பி, கேள், 18,24,000 ரூபாய் வேண்டும் என்கிறார்கள்!!

உள்ளே, துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினர் - அவர்களை உயிரோடு திரும்பப் பெறவேண்டுமானால், பதினெட்டு இலட்ச ரூபாய் தரவேண்டும் என்கிறார்கள் - கூறுபவர்கள் கரத்தில் கத்தி, துப்பாக்கி! வெளியே பல நூறு போலீஸ்!! வந்தது வரட்டும் என்று உள்ளே நுழையலாம். ஆனால், பாதகர்கள், மிரட்டுகிறபடியே, குழந்தைகளைக் கொன்றுவிட்டால்...?

அவ்வளவு வெறிபிடித்தவர்களா என்ற சந்தேகத்துக்கு இடமேயில்லை - ஏனெனில், குழந்தைகளைக் கட்டிப்போட்டு விட்டு, கொண்டுவா, பணத்தை! - என்று கொக்கரிக்கும் இருவரும், பைத்தியக்காரர்கள்! மிகப் பயங்கரமான போக்குடைய பித்தர்கள்! பித்தர்கள் விடுதியிலிருந்து தப்பி ஓடிவந்து விட்டவர்கள்!

இப்போது, ஒரு முறை அந்தக் காட்சியை மனக்கண்ணாலே பார் தம்பி! உள்ளபடி, திடுக்கிடச் செய்கிறதல்லவா?

அப்படிப்பட்ட சமயத்திலேதான், அந்த ஆரணங்குக்கு எங்கிருந்தோ ஓர் வீர உணர்ச்சி பொங்கி எழுந்தது! குலக்கொடிகள், உயிரோவியங்கள், கட்டப்பட்டு, கண்ணீர் வடிக்கின்றன! கொஞ்சி விளையாடும் சிறார்கள், சிறுமிகள்! கன்னக்குழியைக் காட்டி மகிழ்விக்கும் ஓர் சிட்டு, கண்ணில் குறும்பு காட்டி களிப்புறச் செய்யும் ஓர் மான், இசைபாடி இன்பமூட்டும் ஓர் குயில், களிநடம் காட்டி கவலையைப் போக்கிடும் ஓர் கலாபம், மழலையால் மனதுக்கு மதுரம் தரும் பருவத்தினர், தாய் உச்சிமோந்து முத்தமிட்டு பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பருவத்தினர் - பாதகர் இருவர், பயங்கரம் பேசுகின்றனர். அவர் தம் கரத்தில் கத்தியும் இருக்கிறது, புத்தியிலோ கோளாறு! எதையும் செய்வர்! எதற்கும் அஞ்சார்! பாதகம் இது, தீது, ஆகாது என்ற பாகுபாடு அறியா மனம்! எந்த நேரத்திலும், சுட்டுத் தள்ளிவிடக் கூடும், வெட்டிச் சாய்த்துவிடக் கூடும்!!

குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்புகிறது! பயன்? எதையாவது செய்து, ஆபத்தைப் போக்கியாக வேண்டும். அதுவும் விரைவில்!

பூவை புலியானால்! வெறியன்மீது பாய்ந்தாள் - அஞ்சாமையன்றி வேறொர் ஆயுதம் இல்லை! ஆனால் அஞ்சாமையைவிட ஆற்றலளிக்க வல்ல ஆயுதம் வேறென்ன உண்டு! பாய்ந்தாள் - பித்தன் கரத்திலிருந்த கத்தியைப் பறித்துக்கொண்டாள் அந்தக் கத்தியைக்கொண்டே அவன் மண்டைமீது தாக்கவே, மதி குழம்பிக்கிடந்த அந்த வெறியனின் மண்டை பிளந்தது, கீழே சாய்ந்தான்! வெற்றி - முதல் கட்டம்! கட்டிடக் கதவினைத் திறந்திட முடிந்தது. காரிகையைக் கொன்றுபோடக் கிளம்பினான் மற்றோர் பித்தன்! அவனைச் சுட்டுச் சாய்த்தது, உள்ளே நுழைந்த போலீஸ், குழந்தைகள் பிழைத்துக் கொண்டன! ஊரார் குதூகலமடைந்தனர்! இரு பித்தர்களில் ஒருவன் மருத்துவமனையில் இறந்தொழிந்தான் மற்றவன் கூண்டில் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்.

தெய்வமே! தெய்வமே! எங்கள் குடும்பத்துக்கு நீயே கண்கண்ட கடவுள்! - என்று பலரும் கண் கசியும் நிலையில் நின்று, அன்பைக் காணிக்கையாக்கி அந்த ஆரணங்கின் காலடியில் கொட்டி இருப்பர். நமக்கே தோன்றுகிறதே, அந்த நல்ல பெண்மணியின் நாமத்தை வாழ்த்த வேண்டும் என்று. தம்பி! கார்ட்டோரி என்பது அந்தக்காரிகையின் பெயர். பித்தர் இருவரில். ஒருவன் பெயர் ஆர்ட்டூரோ, மற்றவன் பெயர் ஆஸ்வால்டோ. பெயர், அந்த நாட்டுக்குத் தக்கபடி, மொழியின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கட்டும் - அந்த அணங்கு காட்டிய தீரத்துக்குத் தக்கவிதத்தில் பெயர் சூட்டி நாம் மகிழலாம், தம்பி, மறக்குடி மகள்!!

மகளிர் குலத்தின் மாண்பினை விளக்கிடும் நோக்குடன் யாரோ ஆசிரியர் ஆர்வத்துடன் கட்டினார் போலும் - வீரக்காதை தீட்டும் புலமை இதிலே விளக்கமாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டுவிடாதே தம்பி, இது கதை அல்ல; உண்மை நிகழ்ச்சி - சென்ற திங்களில், இத்தாலி நாட்டில் டெராஜானோ, எனும் ஊரில் நடைபெற்றது.

இந்த வீரக்கதையை நான் படித்ததும், வியப்புற்றேன் - பலப்பல கருத்துக்கள் அலை முறையில் தோன்றிடலாயின!

கொடுமை இந்த அளவுக்கெல்லாம் செல்லுகிறதே என்று ஓர் எண்ணம் குடைந்தது - உலகு இன்றளவும் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கக் காணோமே என்ற கவலை மனதினை அரித்தது.

அந்த வனிதையின் வீரமே வீரம் என்ற எண்ணம் வந்தது - ஆம்! ஆம்! உலகு கெட்டுக் கிடப்பினும், நம்பிக்கைக்கு இன்னமும் இடமிருக்கிறது, இத்தகைய நாரீமணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் - என்ற மகிழ்ச்சி மலர்ந்தது.

அந்த இரண்டு பித்தர்களை எண்ணிக்கொண்டேன் - கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தைகளிடம் தமது கொடுவாளைக் காட்டி நின்றனரே! என்பதை நினைத்தபோது நடுக்கமே எடுத்தது. இவர்களிடம் மனிதத்தன்மை மாண்டொழிந்தது ஏனோ என்று எண்ணினேன் - பித்தர்களன்றோ! அவர்கட்கு, தாம் எது செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்று என்ன தெரியும் - குழம்பிய மனம் - என்பதை எண்ணினேன், ஓரளவு சாந்தி பெற்றேன். அதிலிருந்து தம்பி, என் மனம், நமது நாட்டு அரசியலுக்குத் தாவிற்று - என் மனக்கண்முன், மூன்று தலைவர்கள் போர்க்கோலம் பூண்டு, மும்முரமாகப் பரணிபாடி பவனி வரும் காட்சி தெரியலாயிற்று.

கெடுமதியுடையோய்! எதையோ சொல்லி வருகிறாய் என்றெண்ணிப் படித்துக்கொண்டே வந்தால், இடையிலே நீ எமது தலைவர்களை இழித்துப் பேசும் கட்டத்தைப் புகுத்துகிறாயே, பித்தர்களின் பேய்ச் செயலைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, எமது "மூவர்' பற்றிப் பேச வருகிறாயே, அங்ஙனமாயின், எமது "மூவர்' பித்தர் என்று கூறவா துணிகிறாய், விடமாட்டோம் உன்னை... என்று கோபத்துடன் கூறிடக் கிளம்பும் காங்கிரஸ் நண்பர்கட்கு, என் விளக்கத்தைத் துவக்கத்திலேயே கூறிவிடுகிறேன் - நான் காட்டிய நிகழ்ச்சியில், விவரமறியாச் சிறுவர்கள் கட்டிப் போடப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடியவர் இருவரின் பயங்கர ஆயுதங்களுக்கு இரையாகும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்டார்களே, அதுவரையில்தான், நம் நாட்டு அரசியல் நிலைமையுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறிவிடுகிறேன். இத்தாலி நாட்டிலே இரு பித்தர்கள் செய்த வெறிச்செயல் போன்றதோர் நடவடிக்கை தமிழக அரசியலிலும் இதுபோது நடை பெற்றுக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறதே தவிர, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், பித்தர்களாகத் தெரிகிறார்கள் என்று கூறவில்லை. எனவே நமது தலைவர்களைப் பித்தர் என்று தூற்றுகிறேனோ என்றெண்ணிக் கோபம் கொள்ளற்க! என்று நான் கூறுவதாகத் தம்பி! காங்கிரஸ் நண்பர்களுக்குச் சொல்லிவிடு. நமக்கேன் நல்லவர்களின் பொல்லாப்பு!

இத்தாலி நாட்டு இரு பித்தர்கள் பள்ளிச் சிறார்களைக் கட்டிப் போட்டு, கத்தி காட்டி, கொன்று போடுவதாக மிரட்டி பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சித்ததுபோல, இந்நாட்டு மக்களைத் தெளிவுபெறாத நிலையில் தள்ளிவைத்துவிட்டு, அடக்குமுறை, பணபலம் எனும் இரு பயங்கரக் கருவிகளைக் காட்டி, அழித்தொழித்து விடுவதாக மிரட்டி, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுகளைக் கொள்ளையிடத் திட்டமிட்டு வேலைசெய்து வருகின்றனர். மற்றவர்கள் திகைத்துப்போய், செயலற்றவர்களாகிக் கிடந்தபோது ஓர் ஆரணங்கு, அஞ்சாது போராடி, கொடியவர்களின் கொலைபாதகச் செயலைத் தடுத்து வெற்றி கண்டதுபோல, நாம், இந்தத் தேர்தலிலே, காங்கிரசை எதிர்த்து நிற்கிறோம். அந்த ஆரணங்குக்கு இருந்த அஞ்சா நெஞ்சம், நம்மில் ஒவ்வொருவருக்கும் தேவை - எங்ஙனம், கயவர்களிடம் கத்தி இருக்கிறதே, காட்டுக் கூச்சலிடுகிறார்களே, துப்பாக்கி இருக்கிறதே, துடுக்குத்தனமாகத் தாக்குகிறார்களே, என்பதுபற்றித் திகில் கொள்ளாமல், அந்த மங்கையர் திலகம் கொடியவனின் கொடுவாளைப் பறித்து எறிந்தாளோ, அதுபோல் செயலாற்ற, நமக்குத் துணிவுவேண்டும், ஏனெனில், துரைத்தனத்தில் அமர்ந்துள்ளவர்களிடம், படைக்கலன்கள் மிகுதியாக உள்ளன என்பதுமட்டுமல்ல, அவர்களில் மிகப்பலருக்கு, வெறி அளவுக்கு நம்மீது கோபம் பிறந்துவிட்டிருக்கிறது அதிலும் நம்மை எல்லாம் ஆளாக்கிவிட்ட பெரியாரையே அன்புக் கயிற்றினால் கட்டிப்போட்டுவிட முடிந்தது, இந்தப் "பொடியன்கள்' அல்லவா போரிடக் கிளம்பு கிறார்கள் என்று எண்ணும்போதே, அவர்களுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அது நமக்கு நன்றாகப் புரிகிறது! கடந்த பத்து நாட்களாக, பவனிவரும் "மூவர்' செல்லுமிடமெல்லாம் சீறிச் சீறிப் பேசுகிறார்கள் - இதுகளை ஒழித்துக்கட்டுவோம் என்று உறுமுகிறார்கள்! தேர்தலுக்காகச் செலவிடத் தம்மிடம் குவிந்துகிடக்கும் பணத்தையும், மேலும் இலட்சக் கணக்கில் கொட்டித்தர, கொள்ளை இலாபக்காரரும் கள்ளமார்க்கட் அதிபரும் காத்துக்கிடக்கும் காட்சியையும், தமது வீரதீரம், அறிவு ஆற்றல், பக்தி யுக்தி பற்றி எல்லாம் புகழ்பாடிட பத்திரிகைகள் பல பராக்குக்கூறிக் கிடப்பதையும் காணும்போது, அவர்களுக்கு ஏன் அந்த அளவுக்கு ஆணவம் பிறக்காது! அம்மி குழவியையே அப்பளமாக்கிவிட்டோம், இந்த இஞ்சி பச்சடிகள் எம்மாத்திரம் என்று எக்காளமிட்டு வருகிறார்கள்.

கொப்பம்பட்டியிலே தமது "குரலை' உயர்த்திய காமராஜர்' ஒரு பத்து நாள் படபடவெனப் பேசிவிட்டு, அதன் பலனாக ஆயாசம் தவிரப் பிறிதொன்று காணாததால், சிறிதளவு அமைதி பெற்றார். வாய்மூடிக் கிடந்திடலானார். இப்போது, "மூவர்' கிளம்பியுள்ளனர், முரசு அறைந்திட!

ஆஹா! தம்பி! இந்த "மூவர்'களின் பொருத்தம் இருக்கிறதே, சொல்லி முடியாது.

பெரியார், நாட்டுக்கு ஒவ்வோர் நாளும் எடுத்துச்சொல்லி வருவது தெரியுமல்லவா? காமராஜர் நல்லவர், நம்மவர், ஆனால் இந்தச் சுப்பிரமணியம் இருக்கிறாரே, ஆபத்தான "பேர்வழி' - ஆச்சாரியாரின் கையாள் - சமயம் பார்த்துக் குழி பறிப்பவர் - சந்தர்ப்பம் பார்த்துத் தட்சிணப் பிரதேசத் திட்டத்தைப் புகுத்திவிடக் காத்துக்கிடப்பவர் - என்பது பெரியாரின் ஆய்வுரை. அவர் கூறுவதற்கேற்பவே, காமராஜர் தட்சிணப் பிரதேசம் கேட்பவர்களைத் தாக்கிப் பேசினார், சுப்பிரமணியனார், தட்சிணப் பிரதேசத்தின் அவசியத்தைச் சிலர் உணராமலிருக்கிறார்களே, என்ன அறிவீனம் என்று கேலி பேசுகிறார்.

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்துக்கு, கனம் சுப்பிரமணியம் தாலாட்டும் பாடினார், பிறகு அதை அவரே சவக்குழியில் புதைத்துவிட்டு, ஒப்பாரி வைத்தாலும், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், ஒரு சொட்டுக் கண்ணீரும் விடாமலிருந்துவிட்டார்.

ஆச்சாரியார் காலத்திலே, இந்த ஆற்றல்மிக்க அமைச்சர், கொதித்ததையும் குதித்ததையும், நாடு கண்டது குலக் கல்வித் திட்டத்தை இந்தக் கொள்கை வீரர், விட்டுக் கொடுக்கவே மாட்டார், பதவிப் பிசின் அவரை ஒன்றும் செய்யாது, தன்மானம் பெரிது, கேவலம் பதவி அல்ல என்று கருதும் தமிழர் இவர், இவரிடம் கொங்குநாட்டு உறுதிப்பாடு உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது என்று பலரும் கருதும்படி பேசினார் - மறுப்புக் கூறினோரை ஏசினார்! கல்வித்துறையில் இந்தத் திட்டத்தைப் புகுத்தாவிட்டால், இந்த "ஜென்மம்' கடைத்தேறாது என்று "கர்ஜனை' செய்தார்.

நாடு சீறிற்று - காமராஜர் கண் சிமிட்டினார் - காங்கிரஸ் கமிட்டிகளே களமாயின! ஆச்சாரியார் கவிழ்ந்தார் - காமராஜர் துறவறத்தைத் துறந்து, தமது ஓய்வைத் தியாகம் செய்துவிட்டு, பதவியில் வந்து அமர்ந்தார்; பக்கத்திலேயே பல்லை இளித்துக்கொண்டு நின்றார் இந்தப் பண்பாளர்! நான், நாட்டுக்குத் தந்த நல்ல திட்டத்தை, ஆயிரம் எதிர்ப்புகளையும் கண்டு நான் அஞ்சாமல் திணித்த இந்தத் திட்டத்தைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்ட இந்த அமைச்சர் அவையில் நான் இடம் பெற்றால், எவர்தான் என்னை மதிப்பர், காலம் முழுவதும் கைகொட்டிச் சிரிப்பரே, பதவி மோகம் விட்டதா பார் என்று கேலி பேசுவரே, நான் எப்படி இந்த அமைச்சர் அவையில் இருக்கலாம் - வேண்டேன்! என்று கூறிவிட்டு, கோவை சென்று, வக்கீல் வேலையை விட்ட இடத்திலிருந்து துவக்குவார், குருநாதர் இராமாயணம் பற்றி எழுத, இவர் பாரதம் பற்றி எழுதுவார், என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அமைச்சர் பதவி என்ன சாமான்யமானதா! அந்த வெல்வட்டு மெத்தையின் சுகம் வேறு எங்கு கிடைக்கும்! ஆனந்தமாக அங்கு அமர்ந்துகொண்டு, அலட்சியமாக மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, ஆணவமாக எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் வாய்ப்பை இழக்க மனம் வருமா! பில்லை போட்ட சேவகர்கள் எத்துணை பேர்! பிரியத்தைக் கொட்டிடத் துடிப்போர் எத்துணை! சீமான்கள், கட்டியங் கூறி நிற்கிறார்கள், காளையையும் தன்னையும் ஒரேவிதமாகப் பார்த்து வந்த பட்டக்காரர்களெல்லாம், "கனம்' ஆன பிறகு, கைலாகு கொடுக்கிறார்கள். கொடுத்துவிட்டு, கை வலிக்கிறதோ! - என்று கனிவுடன் கேட்கிறார்கள்! இந்தச் சுகானுபவத்தை இழக்க மனம் வருமா! தோட்டக் கச்சேரிகள், அதிலே வந்து கலந்துகொள்ளும் துதிபாடகர்கள்! மாநாடுகள், அதிலே, மதிப்பளிக்க வரும் மகானுபாவர்கள்! கலைக் காட்சியைத் திறந்திட, கானமழையில் நனைந்திட "கனம்' ஆக இருந்தால், தனிக் கவர்ச்சி காணலாமே! இசைவாணரிடமே இசை இலக்கணம் பற்றிப் பேசி, ஆசான் கோலமே காட்டலாம்! தமிழ்ப் பேராசிரியரிடமே, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டு, அவர் முகம் சுளிக்கிறதா என்றுகூடக் கவனிக்கலாம்? நடனக் கச்சேரிகளில் தலைமை தாங்கி, "மனிதனைத் தேவனாக்கும் மதுரமான கலை! அம்பலத்தானின் அடிபணியும் பக்தியை ஊட்டும் லலிதக் கலை! கண்டேன்! களிப்புக்கடலில் மூழ்கினேன்! அந்தக் கட்டிளங்குமரியின் கடை வெட்டினையும் இடை நெளிவையும் கண்டபோது, நான் கைலை சென்றது போன்றே களிப்புப்பெற்றேன்'' என்று பேசலாம்! தம்பி! இவ்வளவு இன்பம் கூட்டித்தரும் பதவியை இழக்க அவர் என்ன இளித்த வாயரா?

கல்வித்திட்டம் வேண்டாம் என்கிறீர்கள், அவ்வளவு தானே! உங்களுக்குக் கல்வித் திட்டம் பிடிக்கவில்லை, நான் அல்லவே! சரி! கல்வித்திட்டம் வேண்டாம்! அதைக் குழிதோண்டிப் புதைக்கத்தானேவேண்டும், உமக்கு ஏன் அந்தச் சிரமம், நானே செய்கிறேன் - எனக்குத்தான் அந்தக் குழி எத்துணை ஆழமாக இருக்கவேண்டும் என்பது தெரியும் என்று கூறினார்போலும், பதவியில் ஒட்டிக்கொண்டார்!

அப்படிப்பட்ட தன்மானம் ததும்பும் மனம், தம்பி, இந்த அருமை அமைச்சருக்கு!

அவருடன், காமராஜர்! ஊரிலே, பெரியார் பேசுவதோ நான், கனம். சுப்பிரமணியம் ஆச்சாரியாரின் கை ஆளாக இருந்துகொண்டு, என் காமராஜரைக் கவிழ்த்து விடாதபடி பாதுகாப்பு அளித்து வருகிறேன், என்பதாகும்.

காமராஜர், பெரியார்மீது அன்பும் பொழிவதில்லை, வம்புக்கும் நிற்பதில்லை.