அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாடகமாடிடலாம்...(1)

காங்கிரசை எதிர்ப்போர் நிலை -
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.

தம்பி,

ஈவு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத் துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர், உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும் போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின் அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின் மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள் அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம் ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்; குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித் துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும் தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன் வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம் குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம் காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப் பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.

செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் குறித்து இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது.

அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம் நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற "செய்தி' பரவிப் பரவி, தைமூர் வருகிறான் என்று எந்தக் கோடியிலிருந்தாவது வதந்தி கிளம்பினாலும் போதும், பீதி கொண்ட மக்கள் பேழை வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள் இல்லங்களையும உடைமைகளையும் விட்டு விட்டு; முதியவர்களை விட்டு விட்டு வாலிபர்கள் ஓடிப்போன சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட "கணவன்' கூட இருந்திருக்கிறான்!!

இவ்வளவும், அச்சத்தின் விளைவு!

அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம் பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர் கையாண்ட முறை.

ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்?

அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவனாயிற்றே!

படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு!

வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்! என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த "பீதி'யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை, சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது.

அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது; அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர் சுடுகாடாகிவிட்டது - என்று சேதிகள் பரவின; அந்த நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக் கொள்ளையிட்டுச் செல்லும்.

தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, "பீதி' எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும் கோழைகளாக்கிவிட்டதோ, அதே "பீதி' ஜனநாயகமும் நாகரிகமும் மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.

பெர்லினில் கிளம்பிய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!

ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான், பெரும பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல, "அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று, பல்வேறு நாடுகளிலே "பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி அவனைத் தேடிவந்து, "சரண்' அடைந்தது.

சூறாவளிப் படை - என்று பெயரே ஏற்பட்டுவிட்டது.

படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள் வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது. இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோமல்லவா!

அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல, காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.

நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல், ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்தி வந்தது; வெளியே இருந்துகொண்டு "வீராவேசம்' காட்டியும் பழி பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள் வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச் சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ் ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது.

அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல் உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று.

பித்தாபுரம் மகாராஜா தோற்றார்
வெங்கிடகிரி ராஜா தோற்றார்
பொப்பிலி ராஜா தோற்றார்
ஏலேல சிங்கப் பிரபு தோற்றார்
கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார்

என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன.

சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும் மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்க ளாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை, தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே கிளம்பி, மக்களிடம் "ஓட்டுக் கேட்டு' மிரட்டியும் மயக்கியும் பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும் பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்; எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள் விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால் பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர், காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர். மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்!

முகத்தில் கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில் துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ் தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்! - இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது; இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச் செய்தது; பலர் "பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம், காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால் பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர்.

காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது - எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர் தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது - அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக் கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர், மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர் - காங்கிரசில் நுழைந்தனர்.

தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன? தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம் இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில் அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன் உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது - எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால், பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின் கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்! - என்று கூறினர்.

பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும் பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக் கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு ஈடும், எதிர்ப்பும் இல்லை, - என்று இறுமாந்து கிடந்திட முடிந்தது காங்கிரஸ் கட்சியினால்.

ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது. சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப் பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத் துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல், ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள வேண்டும். நாம், தேர்தலில் ஈடுபட முடிவு செய்தது, இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை மறவாதே!

நாம் இந்த முடிவு எடுக்காமுன்பு காங்கிரஸ் கட்சி இந்த முறை, தேர்தல் என்பது, மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது, எதிர்ப்பு அதிகம் எழாது, பல இடங்களில் "போட்டி'யே இருக்காது என்று மனப்பால் குடித்தது. காங்கிரசின் தலைவர்கள், தமக்குப் புதிய நேசமும் பாசமும், கூட்டுறவும் கிடைத்திருப்பதால், புதிய பலம் கிடைத்துவிட்டது, எனவே தேர்தலைக் குறித்துக் கவலைப்படத் தேவையேயில்லை, கேட்டால் தருகிறார்கள், வேறு யார் இருக்கிறார்கள் எதிர்த்து "ஓட்டு' கேட்க என்று எண்ணி இருந்தனர்.

இப்போது தம்பி, சென்னை முதலமைச்சர், "தேர்தல் பிரசார காரியாலயம்' துவக்கிவிட்டார்! நிதி அமைச்சர், பிரசார முறைகள் பற்றிய யோசனைகளைக் கூறிவிட்டார்! தரகர்கள் திக்கெட்டும் கிளம்பிவிட்டார்கள்! ஆட்பொறுக்கும் அலுவலில் அனுபவம் பெற்றவர்கள்; பணம் இருக்கும் இடத்தை மோப்பம் கண்டுபிடித்துக் கூறுபவர்கள், பஞ்சதந்திரம் அறிந்தவர்கள், பாசவலை வீசுவோர், நேசக்கரம் தேடுவோர், வாக்களித்து வளையவைப்போர் எனும் பல்வேறு துறையினர் கிளம்பிவிட்டனர்!

ஒரு கை பார்க்கிறேன் என்போரும், ஒழித்துக் கட்டுகிறேன் என்று உறுமுவோரும், சிண்டு முடிந்துவிடுவேன் என்று செப்புவோரும், காலைவாரிவிடுவேன் என்று கூறுவோரும் ஊரூராகச் செல்கிறார்கள்.

"முதலியார்வாள்! நாயுடுகாருக்குச் சொல்லுங்கள், படையாச்சி நம்ம பக்கம்தான் என்று! ரெட்டியார் பக்கம் நான் சாய்ந்து விடுவேன் என்று கோனார் பேசினதாகப் பிள்ளை கூறினார். நீங்கள் அதை எல்லாம் நம்பவேண்டாமென்று சொல்லுங்கள்; நம்ம நாடார் ஒருபோதும் சொன்ன சொல்லைத் தவறமாட்டார்; அதெல்லாம் ஐயர் ஐயங்கார் வேலை என்பதை விளக்குங்கள்; கவுண்டர் போட்டிக்குக் கிளம்புவாரே என்று சந்தேகம் வேண்டாம்; அவர் விஷயமாக தேவர் கூறிவிட்டார்'' என்று இப்படி, தேசியக் கட்சி, "ஜாதீயம்' பேசிக் கொண்டு படை திரட்டிக்கொண்டிருக்கிறது.

இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ?

இவருக்கு அவர் வேண்டியவரா?

இவர் அவருக்குப் "பாக்கி' சேரவேண்டுமாமே, உண்மை தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!! இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகிவிட்டனர்.

செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும் அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப் பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது.

எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால் மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு, தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே பலரும் கொண்டிருந்த அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது என்பதனால்.

பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு, பலருக்குக் "குளிர்' நீங்கிவிட்டது; இந்தப் "பயல்களே' தைரியமாகக் கிளம்பும்போது, நாம் மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும் நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள்.

தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும் செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில் காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள் தந்த தத்துவங்கள் உள்ளன, எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம் வைத்துக்கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாம லிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில் கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி! ஒரு ஆறு திங்களுக்கு முன்பிருந்த "திகைப்பு' போயேவிட்டது. சூடுபிடித்திருக்கிறது, சுறுசுறுப்பு ஏற்பட்டுவிட்டது. கதவில்லா வீடல்ல, தாளிட்டு, காவலும் வைத்திருக்கிறது என்று தேர்தல்பற்றி காங்கிரஸ் கவலையுடன் எண்ணிட - வேண்டிய கட்டம் பிறந்திருக்கிறது; எனக்குக் களிப்பு இதனால் நிச்சயமாகப் பிறக்கிறது; ஏனெனில் நான் இதைத்தான் விரும்பினேன், எதிர்பார்த்தேன். ஏமாறவில்லை. செல்லும் இடமெல்லாம், தி.மு.க. தேர்தலில் ஈடுபடப்போகிறது என்ற செய்தியை, நமது பிரதம பிரசாகர் போலிருந்துகொண்டு, முதலமைச்சர் காமராஜரே கூறிக்கொண்டு வருகிறார்!

வீணான தொல்லையை ஏற்படுத்திவிட்டானே என்று காமராஜர் கைபிசைந்துகொள்கிறார் - அவர் பேச்சு ஒவ்வொன்றும் அதைத்தான் காட்டுகிறது.

கைபிசைந்து பயன் இல்லை, கண் சிமிட்ட வேண்டும் என்று முறை கூறுகிறார் நிதி அமைச்சர்.

ஆடலும் பாடலும் உண்டாம்! நாடகம் நடத்திக் காட்டப் போகிறார்களாம்! சினிமாக் காட்சியும் இருக்கிறதாம்! இப்படிப்பட்ட முறைகளை எல்லாம், தேர்தலுக்குப் பயன்படுத்தப் போகிறார்களாம்! யார்? நாடகமாடுவதை நையாண்டி செய்த நாடாளும் கட்சியினர். ஏன்? இந்த முறைகளிலே, நாம் பயிற்சி பெற்றவர்கள், பொது மக்கள் இதனால் மயங்கிவிடக்கூடும் என்ற எண்ணம்! எனவே, இவர்களென்ன, நாங்களும்தான் நாடகம் நடத்தப் போகிறோம் என்று நாடாளும் கட்சி பேசுகிறது.

அவர்களுக்கு, நாடகம் நடத்த நிரம்ப வசதி இருக்கிறது என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! ஐம்பது என்பதை நூறு என்று வீசினால், நாடகமாட யாரும் வருவார்கள் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்; அவர்கள் எண்ணுகிறபடி பல நாடக நடிகர்கள், இணங்கவும் கூடும். ஆடவும் பாடவும் ஆட்களுக்கு என்ன பஞ்சமா?

எடுத்துக் காட்டுக்காகக் கூறுகிறேன் - என் வாக்கு பலித்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - குமாரி கமலாவை, அழைத்து ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரத்துக்கான நாட்டியம் அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, பட்டம் பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால், "பிரம்மானந்தமாக' இருக்கிறது என்று பாக்கார்டிலும், ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்!

அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
எல்லாம்
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!

என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று, அதற்கான அபிநயம் காட்டி,

பூதம் அஞ்சு
பஞ்ச பூதம் அஞ்சு
பாண்டவர் அஞ்சு
பஞ்ச பாண்டவர் அஞ்சு
தந்திரம் அஞ்சு
பஞ்ச தந்திரம் அஞ்சு!
நேரு மந்திரம் அஞ்சு
பஞ்ச சீலம் அஞ்சு!

என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும், உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக் காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச் சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும்.

ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு!
என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ,
பாணம் அஞ்சு!
பஞ்ச பாணம் அஞ்சு!
மன்மதன் ஏவும்
பாணம் அஞ்சு
என்று பாடிக் கொஞ்சுவர்!

புரிகிறது! இனிப்புக்கூடச் சுரக்கிறது! ஆனால், இவைகளின் மூலம், இன்னலால் தாக்குண்டு இல்லாமையால் இடர்பட்டுக் கிடக்கும் மக்களை, மயக்கிடவும், அவர்தம் உள்ளக் குமுறலை மாய்த்திடவுமா முடியும் நிச்சயம், அந்தப் பலன் கிட்டாது என்பதை, அவர்கள்,

ஆட்டமாடி
பாட்டுப்பாடி
அழகான ஜதை காட்டி
பார்த்த பிறகு தெரிந்துகொள்வார்கள்!

ஆனால் ஒன்று, தம்பி, நம்மை விட அவர்கள், பளபளப்பு அதிகம் காட்ட முடியும், நாடகங்களில்.

பேச்சு மேடையே, தெரியுமா, நாமும்தான் ஓயாமல் பேசுகிறோம், ஊரூர் சென்று பேசுகிறோம், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கூட்டம் கூடப் பேசுகிறோம் மேடையில் ஏறியதும், நாம் ஆட, நாற்காலி உடனாட, ஒலிபெருக்கி தானும் ஆட என்ற முறையிலே அமைப்பு இருந்திடக் காண்கிறோம். தேர்தல் வருகிறது என்றவுடன் அலங்காரமான மேலிட அமைப்பே ஒன்று இரண்டாயிரம் ரூபாய் செலவிலே புதிதாகக் கண்டு பிடித்து விட்டார்களே! மரத்தாலான மேடை! இரும்பாலான கால்கள்! பூட்ட ஒன்றரை மணி நேரம் பிடிக்குமாம்! கழற்ற முக்கால் மணிதானாம்! மேடையில் இருபது பேர் அமரலாமாம்! கண்டனராம் காங்கிரஸ் மந்திரிமார், கழிபேருவகை கொண்டனராம்.

இனி என்ன குறை! கோவைக்கு ஒன்று, மதுரைக்கு இரண்டு, நெல்லைக்கு ஒன்று, சென்னைக்கு நாலு என்று காங்கிரஸ் கட்சியால் இந்த "புதிய அமைப்பு' வாங்கிப் பயன்படுத்த முடியும்! பணம் இருக்கிறது, கொள்ளை கொள்ளையாக!

தம்பி! அவர்களின் வேலை துவங்கிவிட்டது. நாம்! அந்தக் கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே இருந்தால், வேலை ஏதும் நடவாது. எனவே, அவரவர்க்குக் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவரவர்க்கு உள்ள துறையில், அவரவர்க்கு உள்ள "சக்தியுக்தி'க்கு ஏற்ப வேலை செய்ய வேண்டியதுதான்.

ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக் காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்; எனவே "கூலிக்கு மாரடிக்க' ஆட்கள் தேட மாட்டோம், கொடி பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான் செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்; ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான காட்சிகள் உள்ளன!

நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்! அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறேன். ஆடட்டும்!

ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே, குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம் தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக் கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர், பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும் கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா, சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் "சன்மானம்' கொடுத்து "சபை'யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்? நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும் திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே!

உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது! அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால் போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம் பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப் போய்விட்டாய்! சரி, நாடகமும் தருகிறேன்! "கூடு' மட்டும் - எழில் உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன் குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு.

இந்த நாடகத்தின் பெயர் "பெரிய மனுஷா அப்படித்தான்!'' என்பதாகும்.

அடுத்த "கிழமை' நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

அன்பன்,

22-7-1956