அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாடகமாடிடலாம்...(2)
1

காங்கிரஸ் முன்னும் பின்னும் -
தேர்தலில் பணம் -

தம்பி,

உள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள் - பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன் -மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது - நமது கழகம் எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது - பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது - அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும் என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக் களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து, அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ முதலமைச்சர் "தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!'' என்று ஒரே வரியிலே கூறிவிடுகிறார்.

எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்? நமக்கோ, நாட்டுக்கோ. புரியாததோர் கண்டுபிடிப்பை அவர் எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக் கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்; தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன? தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்!

கோயில்பட்டி வட்டாரத்திலே, வழக்கப்படி மின்னல் வேகச் சுற்றுப்பயணம் நடத்தினார்; இடி முழக்கம் கேட்டனர், இன்மொழி மழை பொழிந்திருக்கும், பிரமுகர்கள் கூடி இருப்பர், பேழையுடையோர் குழைந்திருப்பர்; இவைகட்குப் பிறகு, முதலமைச்சர், இரத்தினச் சுருக்கமாக' "தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை'' என்று கூறி இருக்கிறார்.

அவர் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது; ஒன்று அவர், அவருடைய கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்பது, மற்றொன்று நமது கழகத் தோழர்களுக்கு மனக் கசப்பு உண்டாக்க வேண்டும் என்பதாகும்; இதில் அவர், அவருடைய கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையிலே எதிர்பார்த்த பலனைப் பெற்றிருக்கக்கூடும்; நமது கழகத் தோழர்களைப் பொறுத்தவரையில் அவர் கசப்பூட்டும் நோக்குடன் பேசியது கேட்டு, நம்மில் யாரும் நாடி நரம்பு தளர்ந்துபோய், "ஐயகோ! நாம் ஏதோ பெரும் பலம் பெற்று விட்டோம் என்று பேசித் திரிகிறோமே, தேர்தலில் ஈடுபடவும் திட்டமிட்டு விட்டோமே, நமக்கு எங்கும் பலமே கிடையாதாமே, எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ள காமராஜரே இதனைக் கண்டறிந்து கூறிவிட்டாரே! இனி என்ன செய்வது?'' என்று கதறிக்கொண்டிருக்கப் போவதில்லை; செயலற்றுப் போய்விடவும் மாட்டோம். நமக்கு உள்ள பலம் நமது கொள்கையிலும், அதனை எடுத்துரைக்க நாம் மேற்கொள்ளும் முறையிலும், அந்த முறை பிறருக்கு வேண்டுமென்றே பெரும் பீதியும் அருவருப்பும் தரத்தக்கதாக இல்லாமல், பலரையும் அருகே ஈர்த்திடத்தக்கதான பண்புடையதாகவும் அமைந்திருப்பதையும் பொறுத்திருக்கிறது. இதனை நாம் செய்து வருகிறோம் - செம்மையாகச் செய்து வருகிறோம் - நாளுக்கு நாள் நமது முறையிலும் திறத்திலும் முன்னேற்றமும், மக்களை நம் பக்கம் கொண்டு சேர்க்கும் தன்மையும் வளர்ந்து வருகிறது என்பதை எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்கும் ஏற்புடையோர் எடுத்தியம்புகின்றனர். நமக்குப் புரிகிறது! எனவேதான் காமராஜர், நமக்கு எங்கும் பலம் இல்லை என்று கூறுவது, பொருளற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை - என்று கூறிடாமல், தி.மு.க.வுக்குப் பணம் இல்லை என்று காமராஜர் கூறியிருந் திருந்தால், பெருமூச்சுடன் "ஆமய்யா, ஆம்!' என்று நாம் ஒப்புக்கொள்வோம்!

ஆனால், காமராஜர் அகராதியில் - அரசியலுக்காகத் தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம் என்று பொருள் இருக்கும் போலும்!

பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை!

இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக் கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர், சம்பளம் எவ்வளவு பெறுகிறார்?

தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக் கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள் தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும், அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும் இருந்தால் போதும்.

பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது பேதமை, பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.

பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும், அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது கடும் போட்டி இருக்கத்தான் போகிறது.

சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம் படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில் கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல் தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன்.

இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டு கோல்; முழு நாடகமல்ல!!

பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.

எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு "இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,.....

பெரிய மனிதர்கள்...!

இடம் : கீரோடு இரயில்வே ஸ்டேஷன்

இருப்போர் : செட்டுக்காரர் அவர் கணக்காளர் பணியாட்கள் போட்டர் சின்னான்

காலம் : 1940

நிலைமை : கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத் தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.

சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார்.

கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக் கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.

வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு, ஒரு பணிப்பெண் வருகிறாள்.

ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் "பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.

புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும் நிலையில் ஓடி வருகிறார்.

அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி...

செட்டிக்காரர் : என்ன சாமி!

புண்யகோடீஸ்வரர் : (பச்சைச் சிரிப்புக் காட்டியபடி....) என்ன கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே கிளம்பிடறதோண்ணு, பயம்....

(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து, அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.

செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து கொண்டபடி....)

செட் : இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர். அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட...

புண் : நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம் போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா....

செட் : யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?

புண் : நம்ம பாகு...!

செட் : அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?

புண் : என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்... நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்... தெரிஞ்சுண்டா... அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான் நின்னுதுன்னு வையுங்கோ...

செட்டு : அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம்...

புண் : இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம் கண்ணைப் பறிச்சுட்டுது போங்க....

செட் : அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே... பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா...

புண் : தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்?

செட் : எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான்...

புண் : சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச் சொன்னேன்.

செட் : அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்....

புண் : ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம், அம்பாளோடே போட்டி போடறது போலத்தான் இருந்ததுன்னு சொல்லணும்...

செட் : போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான் பிரமாதமாப் புகழ்ந்து பேசறது...

புண் : கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை... உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா? (பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும் போர்ட்டரைப் பார்த்து)

செட் : ஏண்டா, மரமாட்டமா நிற்கறே... சாமான்களை எடுத்து வண்டியிலே வையேன்....

(போர்ட்டர் மகிழ்ச்சியுடன், சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.)

புண் : கின்னையம்பதியிலே எத்தனை நாள்?

செட் : நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி. அது முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான்.

புண் : என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு...

செட் : கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது. அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கான்...

புண் : என்ன சொல்லுங்கோ... அவன், எத்தனை பெரிய சேட் நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல, இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே, பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது...

செட் : டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா, திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள் கொஞ்சம் "கலாட்டா' செய்துவிட்டானுக...

புண் : கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ...?

செட் : அதெல்லாம் இல்லே... எல்லாம் வெளியூர்லே இருந்து கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும் காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன். திருப்தியாத்தான் பேசினார்... ஆனா, நம்ம ஊர் பசங்களும், வரவர தலையரட்டலாயிட்டுதுங்க...

புண் : சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம் வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே என்ன....?

(போர்ட்டர் பணிவாக)

போர் : வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம், வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா...?

(செட்டுக்காரர் கோபம் கொள்கிறார்.

கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு அவரை எதிர்கொண்டு அழைக்கிறார்.

கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.)

கலெக்டர் : சீலமா...?

செட் : இல்லே, சின்னையம்பதிக்குத்தான்.... எப்படி இருக்குது ஊர் நிலைமை... என்னமோ சத்தியாக்கிரகம்... நின்னு தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக...

கலெக் : ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு....

வந்தே மாதரம்!

மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே!

என்ற கோஷம் கேட்கிறது.

எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது.

எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள்.

வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள்.

போர்ட்டர் சின்னான் ஒரு கதர் மாலை போடுகிறான்.

இதற்குள் போலீஸ்படை வருகிறது.

கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது.

மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள்.

போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.

போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது.

மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான்.

கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்.

(போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட...)

புண் : என்னடா இது, பாவிப் பயலே!

போர்ட் : (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா....?

புண் : வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை...? அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே போகணும்னேன்...?

போர் : என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை, பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என் சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்...

செட் : யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி! இனி ஊர்லே ஒரே ரகளைதான்... டே! நீ, போர்ட்டர் தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே பிழைக்க வேண்டியவன்...

போர் : ஆமாங்க.... வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க? அள்ளக் கூடாது திருடக் கூடாது....

செட் : சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட என்னடா வேலை.... பெரிய லீடர் அந்தத் திருமலை... நீ போனயோ, அவனைத் தரிசனம் செய்ய....

புண் : (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ....

செட் : போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா மண்டையிலே போடப்படாதா...? எனக்கு மட்டும் ஒரு ஆறு மாதம் "பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப் பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக் கொள்ளுவானுங்க.

போர் : (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா... சுட்டுத் தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்... கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித் தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு....

செட் : என்னடா ஒரு தினுசாகப் பேசறே - திமிரு பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக் கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை... எவனோ சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும், வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு...