அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாலும் நாலும்
2

நிலச் சீர்திருத்தச் சட்டம் என்பது, தம்பி! சமதர்மப் பொருளாதாரத் திட்டத்துக்கு அடிப்படையாக அமைவது. ஆயினும், காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தை, சமதர்மப் பொருளாதார அடிப்படை என்று கூறிடக்கூட அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அச்சத்திற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு அதிபர்களான பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள், இராமநாதபுரம் ராஜா, செட்டிநாட்டு ராஜா, வாண்டையார், வலிவலத்தார், நெடும் பலத்தார், மூப்பனார், செய்யூரார், சூணாம்பேட்டையார், இலஞ்சியார், சங்கரண்டாம் பாளையத்தார், கடவூரார், காட்டுப் புத்தூரார், ஒரக்காட்டார், பாண்டேசுரத்தார், வேட்டவலத்தார் எனும் இன்னோரன்ன பிற நிலப் பிரபுக்களைக் காங்கிரசில் நடுநாயகங்களாக வைத்துக்கொண்டு, சமதர்ம அடிப்படையான நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வருகிறோம் என்று கூற எப்படித் துணிவு பிறந்திட முடியும்? நெடுங்காலம் நிலச் சீர்திருத்தத்தை, நடைமுறைக்கு ஏற்றதல்ல, தேவையற்றது, பலன் கிடைக்காது என்று கூறி எதிர்த்து வந்தனர் நிலப் பிரபுக்களின் மனம் மகிழ. ஆனால் எதிர்க் கட்சிகள், இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு வளரவும் கிளர்ச்சி நடத்தவும் முற்படக் கண்டு, மக்களை இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து, நிலப் பிரபுக்களிடம் நிலைமைகளை எடுத்துக் காட்டி, இன்னின்ன முறைகளால், நீங்கள் உமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம், அதற்கெல்லாம் இடம் வைத்துச் சட்டம் இயற்றிவிடுகிறோம் என்று கூறிச் சம்மதம் பெற்று, உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்டது.

தம்பி! உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கம், ஆட்சியி லிருந்த காங்கிரசை மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளரும் நிலை கண்டு, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; உள்ளூரச் சமதர்ம நோக்கம் கொண்டு அல்ல.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, இன்று "ஜனநாயக சோஷியலிசம்' பேசும் இதே காமராஜர், நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, நிலச் சீர்திருத்தத்தையே எதிர்த்துப் பேசியது.

உழுபவனுக்கு நிலமாம்
உழுபவனுக்கு நிலம்!
இருப்பவனுக்கு வீடு!
ஏறுபவனுக்கு ரயில்!

இப்படிக் கேலி பேசினவர்தான் காமராஜர். இறுதிவரையில் எதிர்த்துப் பார்த்து, எவ்வளவு தாமதம் ஏற்படுத்தலாமோ அவ்வளவும் செய்து பார்த்து, கடைசியில், ஏராளமான விதி விலக்குகள் வைத்து, இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத்தைச் செய்தனர். இந்த விதி விலக்குகளைக் காரணமாகக் கொண்டு, நிலப் பிரபுக்கள், தமது ஆதீனத்திலிருந்த நிலத்தைப் பிரித்துப் பிரித்து பல்வேறு காரியங்களுக்காக என்ற பெயரால் - கோயில் கட்டளை என்பதிலிருந்து கல்லூரி நடத்துவது என்பது வரையில் பல பெயரால் - எழுதிவைத்துவிட்டு, சட்டத்தால் தங்கள் ஆதிக்கம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதபடி தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர் - காங்கிரஸ் அரசின் துணை கொண்டு, சட்டம் ஒரு கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போயிற்று.

எவரொருவரிடமும் இவ்வளவுக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என்ற ஒரு சட்டம் அமுலுக்கு வந்திடுவதால், ஏற்படக் கூடிய புரட்சிகர மாறுதல், இங்கே ஏற்படாமல் போனதற்குக் காரணம் இதுவே.

மீண்டும் அந்தச் சட்டத்தின் ஓட்டைகளை அடைத்திடவும், உருப்படியான பலன் கிடைக்கத்தக்க விதமாகச் செயல்படுத்தவும், விதிவிலக்குகளை நீக்கிடவும், போலி ஏற்பாடுகளை உடைத்திடவும், முற்போக்காளர் ஆட்சியில் அமர்ந்து எங்கே செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இத்தனை பக்குவமாக நமது நலனைப் பாதுகாத்து வரும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் நீடித்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நிலப்பிரபுக்கள் காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டு, ஊட்டம் கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.

நிலச்சீர்திருத்தச் சட்டம் பயனற்றுப் போய்விட்டது என்பதனைக் காங்கிரஸ் அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்து நிலைமைகளைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்களே கூறிவிட்டனர்.

சட்டம் ஓட்டைகள் நிரம்பியதாக இருக்கிறது.

சட்டத்தைச் செம்மையான முறையில் செயல்படுத்தவில்லை.

செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வமே இல்லை.

அவ்விதமான சட்டம் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பே அற்றவர்களாக அதிகாரிகள் உள்ளனர்.

இவ்விதம் அந்த ஆய்வாளர்கள் கூறிவிட்டனர். சட்டம் செய்து விட்டோம், நாங்கள் சமதர்மிகள் அல்லவோ! என்று காங்கிரஸ் அரசினர் கூறுவதும், சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம், நாங்கள் மட்டும் என்ன, சமதர்மிகள் அல்லவா!! என்று நிலப்பிரபுக்கள் பேசுவதும், சமதர்மம் பூத்துவிட்டது, அதன் மணம் என் நாசியிலே புகுந்துவிட்டது, ஓடோடிச் சென்று அந்த மலரினைப் பறித்துச் சூடிக்கொள்வேன், ஆடுவேன், பாடுவேன், எவரேனும் ஏனென்று கேட்டால் சாடுவேன் என்று கூறிச் சிலர் காங்கிரசுக்குள் ஓடுவதும் இப்போது புரிகிறதல்லவா?

தம்பி! இப்போதும் நாட்டிலே உள்ள மொத்த நிலத்தில் பாதி அளவு, நூற்றுக்குப் பத்துப்பேர் என்று சொல்லக் கூடியவர்களான பிரபுக்களிடம்தான். இது நான் தயாரித்த கணக்கு அல்ல; ஆய்வாளர்கள் அளித்தது. சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள குட்டிக் குபேரர்களிடம் மொத்த நிலத்திலே ஐந்திலே ஒரு பாகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலை, ஜமீன்களை ஒழித்துவிட்டோம், நிலத்துக்கு உச்சவரம்பு கட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளப் பயன்படும் சட்டங்கள் இயற்றிய பிறகு!!

இதுபோலத்தான், தயக்கம், தடுமாற்றம், தாமதம் ஆகிய கட்டங்களைத் தாண்டி, பணம் படைத்தோரின் மனம் நோகாதபடியும், ஆதிக்கம் கெடாதபடியும், சலுகை சரியாத படியும் பாதுகாப்புத் தேடிக் கொடுத்து, ஒப்புக்கு ஒரு ஓட்டைச் சட்டத்தைச் செய்துவிட்டு, ஒய்யாரமாக முழக்கமிடுகிறார்கள், சமதர்மம்! ஜனநாயக சோஷியலிசம்!! என்று.

அதனைப் பட்டக்காரரும் பாளையக்காரரும் ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, மேலும் உரத்த குரலில் முழக்கமிடுகிறார்கள், ஜனநாயக சோஷியலிசம் என்று. பெரும் பெரும் நிலப்பிரபுக்களும், கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களும், வெளிநாட்டு முதலாளிகளுடன் கூட்டாகப் பெருந்தொழில் நடத்துபவர்களும், காங்கிரசில் கூடி நின்று, ஜனநாயக சோஷியலிசம் பேசுவது, இருபதாம் நூற்றாண்டின் இணையிலாத அரசியல் மோசடி என்று நான் சொன்னால், கடுமையாகக் கூறிவிட்டேன் என்று யாரும் எண்ணிக் கோபிக்கக் கூடாது - எத்தனையோ வார்த்தைகளை, கடுமை என்பதற்காக வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, கடைசியாக நான் பயன் படுத்தியிருப்பது மோசடி என்ற வார்த்தை. அதைவிட நாகரிகமான வேறு வார்த்தை கிடைக்கவில்லை, இந்த நிலைமையை விளக்க. எனக்கு எவரையும் புண்படுத்த விருப்பம் ஏற்படுவதில்லை - திருடனைக்கூட நான் நடுநிசி உழைப்பாளி என்று கூறத் தயார். ஆனால் இந்த நிலைமையை விளக்க "மோசடி' என்ற பதத்தைக்கூட உபயோகிக்காவிட்டால், உண்மையைத் துளியும் விளக்கிட முடியாது.

இந்த அரசியல் மோசடி நடத்தப்படவேண்டியதற்காகவே, முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள், காங்கிரஸ் முகாமில் இருக்கிறார்கள் - ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையின்போதும், முரண்பாடு நெளிகிறது. முடிவிலோ, எவருக்கு எந்த நேரத்தில் வலிவு மிகுந்திருக்கிறதோ அவர் பக்கம் அனைவரும் நிற்கின்றனர்; எந்த நேரம் பார்த்துக் கவிழ்த்து விடலாம் என்ற நினைப்புடன்.

எனவே, கருத்து வேறுபாடும், அதனைத் தாராளமாக வெளியிடுவதும் எமது ஜனநாயகத்தின் மாண்பு என்று மார்தட்டிக் கூறுபவர்கள் கிளம்பும்போது, இதனை நினைவிலே கொண்டிட வேண்டுகிறேன்.

இனித் தம்பி! இத்தகைய அடிப்படை விஷயத்திலேயே அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் ஆளுக்கு ஒருவிதமாக, முரண்பட்டுப் பேசுகிறார்களே, இதனை ஜனநாயகப் பண்பு என்று கூறுபவர்களைக் கேட்டுப் பாரேன், இந்த அளவுக்கு வேண்டாம், மிகச் சாதாரணமான அளவுக்கு, - இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சினையில் அல்ல, மிகச் சாதாரணப் பிரச்சினையில் - வேறு கட்சிகளில், தலைவர்கள் வெவ்வேறு கருத்துக்களைப் பேசினால், இந்தக் கண்ணியவான்கள் என்னென்ன கூறுகிறார்கள் - எதெதற்கு முடிச்சுப் போடுகிறார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்க்கச் சொல்லேன்!!

வேலூரில் மாநாடு நடத்தலாம் என்று நண்பர் நடராஜனும், போளூரில் நடத்தலாம் என்று சுப்பிரமணியமும் கூறுவதாக வைத்துக்கொள் தம்பி! இந்தப் பெரிய கட்சியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு "சின்னப் புத்தி' வந்துவிடுகிறது - நடராஜன் - சுப்பிரமணியம் லடாய்! மாநாடு நடத்துவதில் தகராறு! பிளவு! பிளவு! குழப்பம்! குளறல்!! ஏ! அப்பா! கொட்டை எழுத்துக் கோமான்களும், நெட்டுருப் பேச்சாளரும், நெரித்த புருவத்தினரும் என்னென்ன பேசுவார்கள்! பேசினர்!! இதோ, தம்பி! உணவுப் பிரச்சினையிலே இருந்து ஊழல் பிரச்சினை வரை, சதாசர் சமிதிப் பிரச்சினையிலே இருந்து சமுதாய நலத் திட்டம் வரையில், கருத்தடைப் பிரச்சினையிலே இருந்து காவல் படைப் பிரச்சினை வரையில், இத்தனை முரண்பாடு பேசப்படுகிறதே, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில், ஒரு வார்த்தை பேசச் சொல்லு, பார்ப்போம்! என்னய்யா வேடிக்கை இது, நாலும் நாலும் ஏழு என்கிறார் ஒருவர், ஒன்பது என்கிறார் மற்றொருவர், இந்த இலட்சணத்தில் இருக்கிறதே உங்கள் கட்சிக் கோட்டைக்குள்ளே பிளவு, தகராறு, பேதம் என்று - சே! சே! இது பிளவும் அல்ல, பேதமும் அல்ல - இதுதான் உண்மையான ஜனநாயகம் என்று கூறுவர்! கூறுவரா? முழக்கமே எழுப்புவர்!

வேறொரிடத்திலே உள்ள ஒரு காங்கிரஸ் முகாமிலே, தம்பி! இந்த ஜனநாயகத்தை மேலும் சற்று விறுவிறுப்பாக நடத்திக் காட்டினராம்! அந்த ஜனநாயகத்தின் அருமை பெருமையை உணர முடியாத ஒரு காங்கிரஸ் தலைவர்.

என்மீது பாய்ந்து சட்டையைப் பிடித்திழுத்து அடித்தார்

என்று மற்றோர் காங்கிரஸ் தலைவர்மீது புகார் செய்திருக்கிறார்.

இப்படி பலாத்காரம் - வன்முறை - நடக்கலாமா என்று கேட்டுப் பார் தம்பி! உடனே பதில் பளிச்சென்று கிடைக்கும் "இது வன்முறையா! சே! சே! இது அன்புப் பெருக்கு!'' என்று.

பத்திரிகைகளில் விவரம் கொடுத்திருக்கிறார் - அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரிடமும் புகார் தரப்பட்டிருக்கிறதாம் - கமிட்டிக் கூட்டத்திலே நடைபெற்ற "காங்கிரஸ் ஜனநாயகம்' பற்றி.

"அடித்துப் பேசினார்' என்று எழுதுவதுண்டல்லவா? ஒரிசாவில் நடைபெற்ற கமிட்டிக் கூட்டத்தில், ஒருவர் பேசினார் - இன்னொருவர் அடித்தார்!!

தம்பி! ஒரு புதிய "கதாநாயகரை' கண்டெடுத்து, பொட்டிட்டுப் பூ முடித்துக்கொண்டு வந்து காட்டினார்கள் மக்களிடம்.

இதோ பாருங்கள் இந்த நாயகனை!

கட்டுடல் காணுங்கள், கண்ணொளி பாருங்கள். இவர் இளைஞர்! ஏறுநடை!

எதற்கும் அஞ்சா உள்ளம்!

ஆபத்துகள் இவருக்குப் பூச்செண்டு! ஆற்றல் இவருக்கு அபாரமாக உண்டு!

எதிரிகளை முறியடிப்பதில் இவருக்கு இவரே இணை,

வீழ்ந்துகிடந்த காங்கிரசை நிமிர்த்திவிட்டார்!

விரட்டி விரட்டி அடித்து வெற்றிகொண்டார், காங்கிரசை எதிர்த்தோரை.

பொருளாதாரப் பிரச்சினைகள் இவருக்குக் கற்கண்டு.

தொழில் நிபுணர்! நாட்டுக்குத் தோன்றாத் துணைவர்.

வாதிடுவதில் வல்லவர்! வரிந்து கட்டிப் போரிடுவதில் திறமை மிக்கவர்.

நேரு பண்டிதரே இவரிடம் யோசனைகள் கேட்கிறார்; அத்தனை நுண்ணறிவு இவருக்கு.

டில்லி அரசாங்கப் பணிமனையில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு! அங்கு இவர் விருப்பம்போல் செல்வர், உணர்ந்ததை உரைப்பார், அதனைத் துரைத்தனம் ஏற்றுக்கொள்ளும்.

இவ்விதமாகவெல்லாம், அர்ச்சனைகள் செய்து அரங்கமேற்றினர்; அவரும் ஆடினார் வேகமாக, காங்கிரசின் எதிரிகளைச் சாடினார் மும்முரமாக, காமராஜர் புகழையும் பாடிக் காட்டினார், கழகத்தை ஒடுக்கிட வழியும் கூறினார், அமெரிக்கா சென்றார், "பாரதம்' உய்ந்திடும் வழி கண்டறிய. தேர்தல் களம் நின்றார், வென்றார், முதலமைச்சர் ஆனார்! ஒரிசாவின் பட்நாயக் தம்பி, நினைவிற்கு வருகிறதா!

அவர்மீதுதான் புகார் கிளம்பியிருக்கிறது; "அடிதடி ஜனநாயகம்' நடத்தினார் என்று.

ஒவ்வொன்றுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு புது "வியாக்யானம்' கொடுக்கிறார்களே, இவர் என்ன வியாக்யானம் தருவாரோ, யார் கண்டார்கள்!

சீனப் பகைவன் தாக்கினால், என் நண்பரால் தடுத்துக்கொள்ள முடிகிறதா, தாங்கிக்கொள்ள முடிகிறதா என்று பரீட்சை பார்க்கவே பாய்ந்தேன், அடி விழுந்திருக்கும் போலிருக்கிறது அவசரத்தில். இதனை நான் தாக்கினதாக நண்பர் எண்ணிக்கொண்டார்; இது தாக்குதல் அல்ல; தேசியப் பாதுகாப்புத் துறைக்கான பயிற்சி!!

இப்படி ஒரு விளக்கம் கொடுப்பாரோ என்னவோ யார் கண்டார்கள்!!

இவ்விதமாகவெல்லாம், தம்பி! அந்த இடத்து விவகாரம் இருந்துகொண்டு வருகிறது. ஆனால் பேச்சு மட்டும் இருக்கிறது, எம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஆட்சி நடத்த என்று. நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று விவாதிப்பது போன்ற நிலையிலும் "அடிதடி ஜனநாயக' முறையிலும் இருந்து கொண்டே. பேச்சு மட்டும் இத்தனை சத்தத்துடன் இருக்கிறது. இரவல் நகைக்கே இத்தனை குலுக்கென்றால் சொந்தத்தில் நகை என்றால் சுருண்டு விழுவாள்போல இருக்கிறது என்று பேசிக் கொள்வார்கள், கொச்சையாக - அவ்விதம் இருக்கிறது இவர்கள் விவசாரம். ஆனால் தம்பி! அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். நீயும் நானும், மாறி மாறி இவர்களால் "கைது' செய்யப்படுகிறோம்; சிறையில் தள்ளப்படுகிறோம்!! தெரிந்துகொள்!

அண்ணன்

6-9-1964