அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!
தேவி குளமும் பீர்மேடும் -
காமராஜரும் நக்கீரரும்.


தம்பி!

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே!

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், மான் மழுவேந்திய மகேசன், மாலும் அயனும் தேடித்தேடிப் பார்த்தும் அடியும் முடியும் கண்டறியவொண்ணாதபடி அண்டசராசரமனைத்து மாய் நின்ற அரன், உமையொரு பாகன், சிறுபொறி கிளப்பிச் சிதறினாலே எதிர்ப்பட்டதனைத்தையும் சாம்பலாக்கிடத் தக்கதான "சம்ஹார சக்தி' படைத்த நெற்றிக் கண்ணைக் காட்டினார் - ஏடும் எழுத்தாணியுமின்றி பிறிதோர் பலமற்ற நக்கீரன் எனும் பெரும்புலவர், ஐயனே! யார் நீவிர் என்பதனை அறிந்தேன், எனினும் அச்சம் காரணமாகவோ, பக்திக்குக் கட்டுப்பட்டோ, என் நெஞ்சார உணர்ந்ததை எடுத்துரைப்பதை விட்டுவிடுவேன் என்று மட்டும் எண்ணாதீர், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று எடுத்துரைத்தாராம்.

தமிழர் பங்கமுறாமல் சங்கம் வளர்த்து, சான்றோராய், ஒழுகி வந்த நாட்களில், தமிழ்ப்பெரும் புலவர்களின் மனவலிவு எத்துணை ஏற்றமுடையதாக இருந்தது என்பதனை எடுத்துக்காட்ட, நக்கீரன் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று அஞ்சாது எடுத்துரைத்த காதையைக் கூறுவது, இப்போது, ஏறத்தாழ மேடை மரபு ஆகிவிட்டது.

தமிழன் எதற்கும் அஞ்சமாட்டான், மனதிற்குச் சரியெனப் பட்டதை, எவர் குறுக்கிட்டாலும், உருட்டி மிரட்டினாலும் எடுத்துரைக்கத் தயங்கமாட்டான், என்பதற்கான எடுத்துக் காட்டாக, நக்கீரன் விளங்குவதுபோல், பிறமொழியாளர்களிடம் காதைகள் உள்ளனவா என்பதுகூட ஐயப்பாடுதான்.

தமிழரின் அஞ்சா நெஞ்சினையும், தயாபரனின் உருட்டல் மிரட்டல் வேலையையும் விளக்கிடப் பயன்படுத்தப்படும் இந்த நக்கீரன், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா, செயற்கை மணமா என்ற பிரச்சினையை ஒட்டிப் பிறந்தது.

செயற்கையில்தான் மணம் என்பது நக்கீரன் வாதம்.

இல்லை, இயற்கை மணம் உண்டு என்பது இமயவன் இயம்பிய வாதம்.

நக்கீரனுக்கு நெஞ்சில் நடுக்கம் இல்லை - புலமை வலுவளித்தது.

உள்ள படைகள் உருக்குலைந்து ஓடிடக் கண்டான பிறகு மூலப்பலப் படையின் துணையை நாடும் முறைப்படி, சிவனார், புலமைக்கு உரிய வாதங்கள் பயன்படாமற் போன பிறகு, மூலபலம் காட்டும் போக்குடன், ஏ! எடு தூக்கியே! எம்மை யார் என்று காண்பாயாக! என்று எடுத்துக்கூறி, மடக்கிடும் முறையில், நெற்றிக்கண்ணைக் காட்டினார்.

கண்டேன், கண் மூன்றுடையோனே!, கண்டேன்! எனினும் குற்றம் குற்றமே என்று துணிந்துரைத்தார், நக்கீரர் என்னும் பெரும் புலவர்.

தமிழர் இதனை மேடைமரபு ஆக்கிக்கொள்ளும் அளவுக்கேனும் ஆர்வம் இழந்திடாமல் உள்ளனரே என்பதிலே மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்.

எனினும், என் மகிழ்ச்சி ஒன்றுக்குப் பத்தாகி, என் உள்ளத்தில் களிப்புக் கொந்தளிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் ஓர் நிகழ்ச்சி, சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்றது - பெரும்புலவனாம் நக்கீரன் பற்றி காமராஜர் பேசினார்!

ஆமடா, தம்பி, ஆமாம்! நக்கீரன் பற்றி காமராஜர் பேசினார்!!

தமிழன் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம், தோள் தட்டி ஆடலாம், பள்ளுப்பாடி மகிழலாம்; காமராஜர், மாநில முதலமைச்சர், சங்கம் புகழ விளங்கிய சான்றோராம் நக்கீரனார் குறித்துப் பேசிடவும், அதனை நாட்டுமக்கள் கேட்டு இன்புறவு மானதோர் நற்காலம் பிறந்துவிட்டதே என்று கூட ஒருகணம் எண்ணினேன் - மறுகணமோ...!

நக்கீரர் போலக் குற்றம் குற்றமே என்று எடுத்துக்கூறும் பண்பு பாராட்டத்தக்கது. அது வளர வேண்டும் என்று பேசுகிறார் என்றால், அதுதான் இல்லை!

"உன் புருஷனோடுதான் நீ எப்போதும் சரசமாடுவாயே இன்று என்னோடு கொஞ்சம் சிரித்துப் பேசேன்' என்று கேட்கும் பாவனையில், நக்கீரர் குறித்துச் சுட்டிக் காட்டிய காமராஜர், அவர்போல அஞ்சா நெஞ்சுடன், தவறு எத்துணை பெரிய இடத்தவர் செய்தாலும் கலங்காமல், அஞ்சாமல், குற்றம் குற்றமே என்று எடுத்துக் கூறுக என்று பேசாமல், நக்கீரர் பரம்பரை என்று கூறிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு ஏன் வடநாட்டினிடம் பயம், வடநாடு ஆதிக்கம் செலுத்தும் என்று ஏன் பயப்படுகிறீர்கள்? வடநாடுதான் ஆதிக்கம் செலுத்தட்டுமே? என்று பேசுகிறார்.

இதிலே, அவர் காட்டும் தெளிவு இருக்கிறதே, அதைக் கண்டு அகில உலகும் அதிசயிக்கும்!

முதுகின் மீது யார் ஏறி அழுத்தினாலும், வாய் திறவாமல் இருப்பதுதான் நக்கீரர் பரம்பரையின் போக்காக இருக்க வேண்டும் என்று கருத்துரை அளித்திட, காமராஜரால் தவிர வேறு ஒருவரால் நிச்சயமாக முடியாது!

வேறு ஒருவரால் முடியாது. சிவபெருமான் என்று தெரிந்த பிறகும், நக்கீரர் அஞ்சாமல் தமது எதிர்ப்பை, மறுப்பைத் தெரிவித்தார்.

அதே முறையிலேதான், சுட்டுச் சாம்பலாக்கவல்ல சக்தியைப் பெற்றவர் நேரு பெருமகனார் என்று தெரிந்தும் அந்தச் செயலில், அவருடைய துரைத்தனம் இந்த எட்டாண்டுகளிலே, நிரம்பப் பயிற்சியும் பெற்றுவிட்டது என்பதை அறிந்தும், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் துணிவும், தமிழ் மரபு இதுதான் என்பதைக் காட்டிடும் போக்கும். முன்னேற்றக் கழகத்திடம் இருக்கிறது. இதைக் கண்டு பெற வேண்டிய கருத்தைப் பெறாமல், அப்படிப்பட்ட நக்கீரர் வழி வந்தவர்கள், வடநாட்டுக்குப் பயப்படுவானேன் என்று வக்கணை பேசுவதற்குத் தேவையான சிறுமதியைப் பலர் பெற முயன்றாலும் முடியாது. நமது மாநில முதலமைச்சருடன் இதில் போட்டியிட எவராலும் இயலாது.

எனினும் எனக்கோர் மகிழ்ச்சி - கனியைப் பறித்து குறும்புக்காக மந்தி வீசினாலும், கனி கிடைப்பது நல்லதல்லவா! அதுபோல, தவறாகப் பயன்படுத்துகிறார் என்றபோதிலும், காமராஜர். தமிழகம் தாழ்ந்திடாமல் இருந்த காலத்துச் "செய்திகளை' மேலும் மேலும் தெரிந்துகொள்வது நல்லது என்று எண்ணவேண்டி இருக்கிறது.

நக்கீரர், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறியதும், என்னே இவர் தம் அஞ்சாமை! என்று வியந்து வெண்மதி சூடியோன், அவரை வாழ்த்தினன் என்று கதை இல்லை. வெந்தழல் நக்கீரர் உடலைப் பற்றிக் கொண்டதன்ன தோர் நிலையை மூட்டிவிட்டார் என்றும், பின்னர் அப்பெரும் புலவர் திருமுருகாற்றுப்படை பாடி உய்வு பெற்றார் என்றும்தான் திருவிளையாடல் குறித்து உரைக்கின்றனர்.

எனவே, நக்கீரர் காலத்திலும் சரி அஞ்சா நெஞ்சனைப் போற்றிட ஒரு சிலரே உளர் என்று கூறத்தக்க இக்காலத்திலும் சரி, நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறும் போக்கினை, மேலிடத்தில் அமர்ந்தவர்கள் பாராட்டுவது கிடையாது - பகைதான் பெரு நெருப்பாகும்.

நக்கீரர் கதியே இதுவாயிற்று - உண்மையைச் சொன்ன தற்காக உழல நேரிட்டது, அதுவும் உமாநாதனின் உக்கிரத்தினால் என்று கண்ட பிற்காலத் தமிழர்கள். ஒற்றைக் கண்ணனாக இருந்தாலும்கூட அவன் ஊராளும் நிலைபெற்றான் என்றால், அடங்கவும் ஒடுங்கவும், ஆமையாகவும் ஊமையாகவும் தாழ்ந்து போயினர். எனவே, எதைச் சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் பாவனைப் பணிவும், கோழை உள்ளமும் ஏற்பட்டுவிட்டது; அதன் விளைவாகவே இங்கு ஆரியம் நுழையவும், பிறகு ஆங்கிலேயர் அரசாளவும் இன்று வடவர் கொட்டமடிக்கவுமான கோணல் நிலை ஏற்பட்டது; இதை நாட்டுமக்களுக்கு எடுத்துக் கூறிடும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்; காமராஜரோ, நாவடங்கிக் கிடவுங்கள் என்று புத்தி கூற, நக்கீரர் கதையையே பயன்படுத்தப் பார்க்கிறார்.

போகட்டும் இதற்காக வேனும், இவர் நக்கீரர், கபிலர், இளங்கோ போன்றார் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைப்பது குறித்து நான் உள்ளபடி மகிழ்கிறேன்.

"முதியோர் கல்வி'யில் பலவகை உண்டு; அதில் இது ஒருவகை என்றெண்ணி மகிழ்கிறேன்.

பெறவேண்டிய "பாடம்' துவக்கத்தில் கிடைக்காமற் போயினும், தமிழகம் கொண்டிருந்த புலமையும், கோலோச்சிய தன்மையும், பெற்றிருந்த வளமும், பின்னர் அதனை இழந்ததன் காரணமும் அறிந்திடவும், அறிந்ததன் பலனாகவே, மீண்டும் தாழ்ந்த தமிழகம் எழுச்சி பெறுவதற்கான திட்டம் காணவேண்டும் என்று எண்ணவும், உள்ளத்தில் ஆவல் அரும்பும்! இது என் நம்பிக்கை.

நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! - என்று கூறிடும் அளவுக்கு நெஞ்சு உரம், தமிழகத்தில் இருந்து வந்தது; காமராஜர் அறிந்து உரைக்கும் அளவுக்கு, அந்தக் காதை நாட்டிலே சர்வ சாதாரணமாகிவிட்டு மிருக்கிறது - எனினும், அத்தகைய தமிழகத்தில், காணக் கிடைக்கும் எல்லா வகையான ஆதாரங்களையும் கொண்டு பார்க்கும் போது, தேவிகுளம் பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்துக்குத்தான் உரிமையான உடமைகள் என்பது தெரிந்திருந்தும், அதனைத் தேசியப் பாசம் குன்றாமுறையிலும், தெளிவு தெரியும் வகையிலும் எடுத்துக் காட்டியும், டில்லி ஏற்க மறுத்ததே அதுபோது, நக்கீரம் பேசும் இந் நற்றலைவர் செய்தது என்ன? தமிழரின் உரிமையை மறுப்பவர், எவராயினும், எத்துணை ஏற்றம் பெற்றோராக இருப்பினும், கொற்றம் கொண்டு அதனையே கொடுமைக்குக் கருவியாக்கிக் கொண்டோராக இருப்பினும், நான் பணிந்திடுவேன் அல்லேன், பணிந்திடுதல் பண்புமல்ல, தமிழ் மரபுமாகாது, என்றா சீறிக்கிளம்பினார்!!

தேவிகுளம் போனாலென்ன
வாவி குளம் வந்தாலென்ன
வாஞ்சனை போதுமய்யா, நேருவே!
வாய்திறவேனே, மெய்யாய்!

என்று கண்ணி பாடிக் கிடந்திட்டாரே! இப்படிப்பட்டவர் களிடம் தமிழகம் சிக்கிய பிறகுதான், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிடும் உள்ள உரம் உருக்குலைந்தது, எடுப்பார் கைப்பிள்ளைகளும், எனக்கென்ன பங்கு என்று கேட்பவர்களும் கொலு வீற்றிருக்கத் தொடங்கினர், கோல் சாய்ந்தது, கோலம் கலைந்தது, ஞாலம் புகழ வாழ்ந்த தமிழர், நாமம் மட்டும் தமிழரெனப் பெற்று வாழ்த்திடும் அவலம் பிறந்தது, அவதி மிகுந்தது.

எனவேதான், இதுகாலை தமிழரின் பண்டைய பெருமையினை எடுத்துக் காட்டியேனும், ஓர் புது எழுச்சி காணலாமா என்று தம்பி, நாமெல்லாம் எண்ணுகிறோம்.

தமிழ் இனம், பண்பு கெடாத நாட்களில் பாராண்ட பாங்குபற்றி, படிக்குந்தொறும் படிக்குந்தொறும் பாகெனச் சுவை அளித்திடும் பாக்களைக் காண்கிறோம்; பெருமூச் செறிகிறோம்.

கோடும் குவடும் பொரு தரங்கக்
குமரித் துரையில் முத்தும்
கொற்கைத் துறையில் துறைவாணர்
குவிக்கும் சலாபக் குவால் முத்தும்
ஆடும் பெருந்தண் துறைப் பொருளை
ஆற்றில் படுதெண் ணிலா முத்தும்
அந்தண் பொதியத் தடஞ்சாரல்
அருவி சொறியும் குளிர் முத்தும்!

என்று பாடுகிறார்கள் - உன் தமிழகம் முத்தும் மணியும் ஒளி தர விளங்கிய உயிரோவியம் என்பதனை அறிந்திடுக! என்று புலவர் பெருமக்கள், பொருளுரையும் பொழிப்புரையும் கூறுகின் றனர் - பழிப்புரை கேட்டும் பதைத்திடாதார் பரிபாலனத்திலே உள்ளோமே! முத்து கூத்தாடுமாமே முந்தையர் நாட்களில், வறுமை முடைநாற்ற மன்றோ துளைக்கிறது என்று எண்ணுகிறோம், ஏங்கித் தவிக்கிறோம்!

"குன்றின் இள வாடை வரும் பொழுதெல்லாம்
மலர்ந்த திருக்கொன்றை நாறத்
தென்றல் வரும் பொழுதெல்லாம் செழுஞ்சாந்தின்
மணநாறும் செல்வவீதி...''

என்று கூறுகிறார் புலவர் - தமிழகத்தின் புகழ் மணம், கமழ்ந்திருந்த அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன, அந்தச் "செல்வவீதி'களிலே இன்று தேம்பித் தவித்தும், திண்டாடித் திகைத்தும், உழைத்து உருக்குலைந்தும், பிழைப்பிற்கு வழி காணாது புலம்பியும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் கிடைக்காததால், இழிநிலை பெற்றும், தமிழர் உழல்கின்றனரே!

குன்றிலிருந்து கிளம்பும் காற்றும், ஊருக்குள் செல்கிறோம், மக்களுடன் உறவாடி மகிழச் செல்கிறோம், செல்லுங்காலை, எமைக்காண வந்த இளங்காற்றே! எமக்களிக்க எது கொணர்ந்தனை? என்று கேட்டிடின் என்ன செய்வது என்று எண்ணிப்போலும், மலர்ந்த கொன்றையின் மணத்தை வாரிக் கொண்டு வந்து தருகிறது; இளவாடை! தென்றல் வீசும்போது, இனியதோர் குளிர்ச்சி மட்டுமா! அந்தத் தென்றல் தமிழகத்தில் வீசுகிறதல்லவா, தமிழர், தென்றலுக்கே வாசம் அளிக்கின்றனர் - செழுஞ்சாந்தின் மணம் பெறுகிறது தென்றல்! இவ்விதமெல்லாம் இருந்த "செல்வ வீதி'களிலே இன்று காண்பது என்ன? இன்றைய நிலையை எண்ணி எண்ணி ஏக்கமுறும்போது, எதிரே வந்து நின்று காமராஜர், "ஓலமிட்டுக் கிடப்பானேன் - நீதான் நக்கீரன் பரம்பரையாயிற்றே!'' என்று கேலி பேசுகிறார். தமிழகம் எத்துணை தாழ் நிலையில் இருக்கிறது என்பதற்கு நான் ஓர் நடமாடும் சான்று என்று கூறிக்கொள்கிறார்!!

நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற நெஞ்சுறுதி கொண்டோராகத் தமிழர் இருந்த நாட்களில், சிங்களம், புட்பகம், யவனம், சீனம், சோனகம், வங்கம், மகதம், கலிங்கம், காந்தாரம், காமரூபம் - எனும் எண்ணற்ற நாடுகள் பலவும், தமிழகத்தின் திருவைக் கண்டு வியந்தன, திறனைக் கண்டு அஞ்சின, செருமுனைக்கு வரப் பயந்தன, தோழமைக்குக் காத்துக் கிடந்தன! இமயம் தொட்டு நின்ற அரசுகள் அனைத்தும் தமிழர் முரசு கொட்டுகின்றனர் என்று அறிந்தால், தமது அரசு கட்டில் ஆடிட அச்சம் கொண்டனர்.

கலிங்கத்துப் பரணி இதனைக் காட்டி நிற்கிறது.
கனக - விசயர் காதை இதனை அறிவிக்கிறது.

கடாரம் கொண்டான். கங்கை கொண்டான், இமய வரம்பன் - என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உள்ளன - ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரக் காதையை விளக்குவன!

அவ்விதம் புகழ் பரப்பி வாழ்ந்த தமிழன் இன்று, அடிபணிந்தும், அடிமையாகியும் உரிமை இழந்தும், உதவாக்கரை நிலை பெற்றும், இழிந்து கிடக்கிறானே, இந்த நிலை மாற வழி என்ன என்கிறோம் - காமராஜர், நீதான் நக்கீரன் பரம்பரையாச்சே! உனக்கென்ன குறை! - என்று நையாண்டி பேசுகிறார்.

நையாண்டி பேசட்டும், தம்பி, தாராளமாகப் பேசட்டும், பேசுவதற்காகவேனும், தமிழரின் வரலாற்றுத் துணுக்குகளைக் கேட்டுப் பெறட்டும் - அவை உள்ளத்திலே வந்து புகப்புக, நையாண்டி பேசும் போக்கே கூட மாறிவிடக்கூடும்.

"அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?
இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ் நாட்டு வேந்தர்''

என்று பண்பாடத் தோன்றும், தமிழகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்திடாமல், இந்தத் தடந்தோள்கள் எதற்கு என்று கேட்டிடும் ஆற்றல் எழும், தமிழ் அரசு அமையும்!

அந்த நன்னாளைப் பெறுவோம் என்ற நம்பிக்கை யுடனேயே, நக்கீரர் காதை காட்டி நையாண்டி செயும் காமராஜரை நாம் சகித்துக்கொள்கிறோம்.

அன்பன்,

14-10-1956