அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒரே ஒரு பிரச்சினை... !

அரசியலில் பெரியார் -
பெரியார் பார்வையில் காமராஜர்

தம்பி!

"நேற்று, கூட்டத்திலே என்ன விசேஷமான விஷயம் பேசினார். நான் வேறோர் இடத்திலே மாட்டிக்கொண்டேன், வம்பிலே சிக்கிக்கொண்டேன். அதனால் வரமுடியவில்லை.''

"போயும் போயும் உனக்கு நேற்றுத்தான் நாள் கிடைத்ததா வேறு வேலை பார்க்க. நேத்துப் பிரமாதம்....

"என்ன? என்ன? புது சேதி ஏதாவது....!''

"சாகடித்துவிட்டார்! அந்தப் பயல்கள் இருந்திருந்தால் முகம் செத்துப் போயிருக்கும். ஏண்டா பசங்களா! நீங்களா சட்டசபைக்குப் போகணும்? என்று கேட்டுவிட்டு ஒரு சமாசாரம் சொன்னார், தூக்கிவாரிப் போட்டுவிட்டது போயேன்....''

"என்ன சொன்னார்.... என்ன?''

"என்னோடு இருந்துவிட்டு ஓடிப்போனான்களே இந்தப் பசங்க, இதுகளெல்லாம், என்னமோ எம்.ஏ., பி.ஏ. என்று போட்டுக் கொள்கிறானுங்க. இந்த எம்.ஏ., பி. ஏ. எல்லாம் எப்படிக் கிடைச்சுது? போனா போகட்டும்னு நான் பல பேருக்குச் சொல்லி, மார்க்கு போடச் சொல்லி, இதுகளுக்கு பி.ஏ., எம்.ஏ ன்னு வாங்கிக் கொடுத்தேன் - என்று சொன்னாரு.... சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போச்சி போ....''

"அப்படியா சொன்னார்?''

"ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம் பிடுங்கித் தின்னுமல்லவா?''

"அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது; இப்படியெல்லாமா பேசுவது?''

"அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?''

"நீயும் நானும் பி.ஏ. இல்லெ.... ஆனா, நம்ம குருசாமி ஒரு பி.ஏ.; நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி, வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா! என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும் பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம் எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏ.வும் வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப் பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ., எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்... வெட்கமா இருக்கும்''

"அடெ, அதுக்குச் சொல்றியா''

"தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக் கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான் வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு இருக்கிற பி.ஏ. எம். ஏ.க்களுக்கும் இதே "சூடு' தானே கிடைக்கும், இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க, பேசிக்கொள்ள மாட்டாங்களா?''

"அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச் சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது; இல்லையா?''

"அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்பட வில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே! அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா, கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச் சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின் முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப் பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக் கொடுத்தேன்னு அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளு வாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக் கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக, யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக் கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர் பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா உள்ளவங்க எண்ணிக்கொள்ளமாட்டாங்களா? அதை நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது.''

"பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை. நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.''

"அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும் கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர் களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது''

"அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான் நீ... போ...''

என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல். கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத் தோன்றும் தம்பி!

கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன். சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல், முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல.

இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில், எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் "சபாஷ்' வாங்கிக் கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல் ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார் தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம் வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும் சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது - நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது.

திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில் ஒருவகை.

வாதிடுவது - வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப் பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில்.

தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும் மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும் நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும் இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, "ரோய ரோய'த் திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான் ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே! நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால் எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல பலன் தராது - என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும் திடுக்கிடட்டும், தீ போலச் சுடட்டும் என்ற முறையைப் பிறர் கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார் யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி - வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் - பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ எதிர்பார்த்து ஏவல் செய்வோர், "ஒழிந்தானுக! இனித் தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும் எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!'' - என்று பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் - உருவான பலன் கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால், உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும் விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக் கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி விட்டோம் என்பதும் புரியும்.

ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.

நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை.

அதனினும் கொடியது, கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு, அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும் ஏமாற்றம்!

அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும்.

பொறுக்கிப் பசங்க

போக்கிடமத்ததுக

என்ற "பாஷை' மளமளவென்று பிறக்கும். இது சகஜம்.

"திராவிட முன்னேற்றக் கழகம்' துவக்கியதிலிருந்து தம்பி, நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள?

திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள் போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம் என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம் வெளியேறினோம்.

வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன், திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர் யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம்.

அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடி களெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா? இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப் போகிறார்கள் - திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி, தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று "வாழ்த்தி வழியனுப்பினார்கள்.''

தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப் போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம்.

எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தராமலிருக்கும்.

தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது.

சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக் கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில், தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர் களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும் மிகச் சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது. இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா!

நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக் கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும், அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது - சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி!

இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை - கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப் போனவனல்ல.

அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு, அவர் சலித்துக் கொள்கிறார்.

ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றி ருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை பெற்றவர்களாகிவிட முடியாது.

சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும் பெற்றதில்லையே!

கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர் கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது பிய்த்தெறியப்படுகிறார்கள்.

ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணி யனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும் இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும், புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய், ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள்.

நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது, என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட அல்ல.

நண்பர் குருசாமிக்கே இது "மூன்றாவது ஜென்மம்' என்று கருதுகிறேன் - இருமுறை அவரும் "புளித்தவராகி' விட்டவர்தான்.

விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் - அந்தந்த "கால கட்டத்துக்கு' ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும், பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி, கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண் வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர் சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம் செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம்.

நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு ஏற்படுவதற்கான காரணம் இதுதான்.

"விரோதியாகு!'' என்கிறார்கள், "ஐயா! அது எப்படிச் சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால் எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக் கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்'' என்று நாம் கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாக வெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள் - இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர்.

அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட, அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து வரும் தேர்தல்.

"பயல்கள் சினிமா நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம் தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால் பார்த்துவிட்டுத்தான்.....'' என்று கூறினாராம், நீண்டகால நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயகமானவர்!

பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து வேண்டுமென்று விரும்புகிறார்.

கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை எத்தனையோ இருக்கிறது - எண்ணத்தில் அவைகளைக் கொள்ளக் கூடாதா!

இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன் உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத் தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது போலவும, அது கண்ட அவர், கையொப்பம் போடுவது போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட கூட்டத்தில், "பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில் திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன். கேட்டு இன்புறுக'' என்று படித்துக் காட்டுவது போலவும், நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா?

ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று நாம் பிச்சை எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்!

பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான் பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதா!

தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து, தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந் தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம் என்று அன்பர் ஆசைப்படுகிறார்.

தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால், தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம், துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை, மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல், நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத் தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது.

எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண விரும்பினார். முடியத்தான் இல்லை.

திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம் நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும் காட்சியைக் காண விரும்பினார்.

நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை எடுத்துரைத்தேன்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன்.

இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல; ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை.

இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில் இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால் போதுமல்லவா!!

தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப் போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்?

காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் - எனவே அவர்மீது "தூசு' விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது போலவாம்!

காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன?

திராவிட நாடு தேவை

என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால் அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல்.

காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார்.

தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால், நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால், காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம். பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக.

தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு, முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல், விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா! அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.

இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான்.

"நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா?

"ஆம்?'' என்றால் என் நண்பன். "இல்லை' என்றால் எனக்கு எதிரி.

"இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது. முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக் கிடையாது.''

எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா?

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல இல்லையா!

யாருடைய மணிமொழி? விடுதலைதான்!!

திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன், அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை! விட்டுத் தள்ளு! என்கிறார்.

வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து விட்டெரிகிறது அல்லவா?

அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர் - ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு - பாவிகளா, நீங்கள் பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும் முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான் வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல் மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான் வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார்.

ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக் கொண்டாரோ? இல்லை, இல்லை, அவரிடம் அதுபற்றி இவர் கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார்.

திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார் - பெரியாரோ, பி.ஏ., எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது என்று பேசுகிறார்.

தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை.

"திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள். தனது தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்? இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்''

தம்பி! தீப்பொறி கண்டாயா?

காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்!

துரோகியின் முகத்தில் காரித்துப்புங்கள்! விடுதலையில் வந்த வீர முழக்கம்.

எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால் முகம் சுளிக்கிறானோ, அவன் துரோகி.

அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப் போகிறது என்று கேட்டது விடுதலை.

திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று கேட்கிறார் காமராஜர்.

தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர்.

அவருக்கு "திருஷ்டி கழித்து', ஆலம்சுற்றிப் பொட்டிட்டு, அரசாள அழைக்க, "லாலி' பாட வேண்டுமாமே, சரியா?

அன்பன்,

19-8-1956