அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"பாவி, பொல்லாதவன்..."

வாஷிங்டன் கதை -
இராமாச்சாரி கதை -
தட்சிணப் பிரதேசமும் தமிழ்நாடும் -
டில்லியின் ஆதிக்கம்.

தம்பி,

அந்தக் காரியாலயத்துக்குத் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கவந்த இளைஞர், மேனாடு சென்று, பல அலுவலகங்களின் வேலை முறைகளைக் கண்டறிந்து வந்தவர்.

இதுவரையில்தான் இராமாச்சாரி தலைமை அதிகாரியாக இருப்பவர்களை ஏய்த்து வந்தார். இனி அவர் ‘ஜம்பம்’ பலிக்காது; புதியவர் நெருப்பு என்கிறார்கள்; சோம்பேறித் தனமாக இருப்பவர்கள், சூதாக நடந்து கொள்கின்றவர்கள், தவறான வழி செல்பவர்கள் ஆகியோரைக் கண்டு பிடித்து விடுவார் என்று அலுவலகத்து ஊழியர்கள் பேசிக் கொண்டனர்.

நீண்ட காலமாகத் தன்னிச்சையாக நடந்துகொண்டு வந்த இராமாச்சாரிக்கு இனி பிடித்தது தலைவலி என்றனர். இரண்டு மாதங்கள் சென்றன! அலுவலகத்திலே புதிய கண்காணிப்பு, புதிய கண்டிப்பு.

எந்த வேளையிலே தலைமை அதிகாரி குறைகண்டு பிடித்து விடுகிறாரோ, அதனாலே என்ன தண்டனை கிடைக்குமோ என்று பயந்து பயந்து பணியாற்றி வந்தனர்.

எல்லோரும் இராமாச்சாரிக்குத்தான் முதல் தாக்குதல் கிடைக்கும்; அவருடைய ‘சீட்டு’தான் கிழிக்கப்பட்டு விடும் என்று பேசிக் கொண்டனர்.

இரண்டு மாதம் சென்றதும், இராமாச்சாரிக்கு வேலை உயர்ந்தது!

மற்ற யாரையும் விட திறமையில் குறைவானவர், தில்லுமுல்லு செய்பவர், இராமாச்சாரி; அப்படிப்பட்டவருக்கு ‘மேலிடம்’ தரப்பட்டது கண்டு பலரும் திகைத்தனர்.

புதிய மேலதிகாரி, எதையும் நுண்ணறிவுடன் கண்டு பிடிக்கக் கூடியவர் என்றல்லவா எண்ணிக் கொண்டோம். இராமாச்சாரி சூதுக்காரன் என்பதை எங்கே கண்டறிந்தார்? தெரிந்திருப்பாரானால், அவனுக்கா மேலிடம் தருவார்? என்று பேசிக் கொண்டனர்.

இராமாச்சாரிக்கு மேலிடம் கொடுத்தது மட்டுமல்ல, மேலதிகாரி மேகநாதன் அவரை வெகுவாகப் பாராட்டி, குறிப்பு எழுதி வைத்தார்.

‘‘பயல்கள் இஞ்சி தின்ற மந்தி போலாகி விட்டார்கள். புதிய மேலதிகாரி வந்ததும் என் தலை மீதுதான் கை வைப்பான் என்று பேசிக்கொண்டனர். இப்போது, அவனே எனக்கு மேலிடம் கொடுத்ததுடன், என் திறமையைப் புகழ்ந்து குறிப்பும் எழுதி இருக்கிறான். காரணம் என்னவென்று கண்டுபிடிக்க எல்லோரும் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டு கிடக்கின்றனர்!” என்று கேலி செய்தார் இராமாச்சாரி, தன் ‘பார்யாளிடம்’ பேசும் போது.

‘‘நீர்தான், யாரையும் சொக்குப்பொடி போட்டு விடுவீரே! உம்மோட சமர்த்து நேக்கல்லவா தெரியும்?”என்றாள் சகதர்மிணி.

‘‘உன்னாலேகூட அப்பாவோட சாமர்த்தியத்தைக் கண்டு பிடிக்க முடியாதடி அம்மா” என்றான் வாசுலி இராமாச்சாரியாரின் ஏகபுத்ரன். ‘‘அப்படிச் சொல்லுடா, சிங்கக் குட்டின்னேன். இவ என்ன, இவளைப் படைச்ச பிரம்மதேவன் வந்தாலும், என்னோட முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதுன்னேன்” என்று பெருமை பேசினார் இராமாச்சாரி.

‘‘உம்ம பிரதாபத்தை நீரே பேசிண்டிரும், நேக்கு நேரமில்லை, அதை எல்லாம் கேட்டுண்டிருக்க, நேந்திரங்கா வந்திருக்கு, ‘பொடி மாஸ்’ பண்ணனும்’ என்று கூறி விட்டு, அம்மையார் அடுக்களை சென்ற பிறகு, மகன் கேட்டான் தந்தையை ‘‘எப்படியப்பா, மடக்கினீர்? என்னமோ இலண்டன் போய் வேலை கற்றுண்டு வந்தானாமே, வெள்ளைக்காரனிடம்” என்று.

‘‘வெள்ளைக்காரனிடம் வேலை கத்துண்டு வந்துவிட்டாப் போதுமாடா! எல்லாம் ஏட்டுப்படிப்புத்தானே! ஒரு விநாடியிலே நான் அவனை எடை போட்டு விட்டேன். நிறைய படிச்சிருக்கான், ஆகையாலே ஜீரணமாகி இராது என்பது புரிந்தது சரி, இவனைச் சுலபமாக மயக்கலாம்னு, தைரியமும் வந்தது. ஒருநாள் ரயிலுக்கு ஒரு பத்து பார்சல் அனுப்புவதற்கு, பார்சல் கிளார்க், மோசஸ், வேலை செய்துண்டு இருந்தான். அவன் ஒரு முசுடு. உலகத்தையே பறிகொடுத்தவனாட்டம் எப்பவும் ‘உம்’முனு இருப்பான். ஒரு காரியம் அவனாலே ஆகவேண்டி இருந்தது. அங்கே போயிருந்தேன் - கிடங்கு அறைக்கு.

மோசஸ் வழக்கப்படி, கூலியாட்களை வாய்க்கு வந்தபடி வைதுண்டு இருந்தான்; அதனாலே அவாளும் வேலையை ஒண்ணும் பாதியுமா செய்துண்டிருந்தா. ஆனா ஒரு பய மட்டும், ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்துண்டிருந்தான். நான் அவனையே கவனிச்சிண்டிருந்தேன் என்பது அவனுக்குத் தெரியாது.

மோசஸ் நாற்காலியில் உட்கார்ந்துண்டு, நாயே! பேயே!ன்னு கூலியாட்களைத் திட்டிண்டு இருந்தான். நானும் அவனோடு சேர்ந்துண்டு திட்டுவது உண்டு. சில வேளைகளிலே நாலு தட்டு கூடத் தட்டுவதுண்டு. அப்படிப்பட்ட எனக்கு அன்னக்கி வேறுவிதமா நடந்துகொள்ளோணும்னு எண்ணம் வந்தது.

‘‘மோசஸ்! தொழிலாளிகளை இப்படி அமுல் செய்தா வேலை எப்படி சரியா செய்வா? இதமாத்தான் பேசவேணும். மேலும், அவாளும் மனுஷ ஜென்மம்தானே. கூடமாட வேலை செய்தா உன் கௌரவமா கெட்டுவிடும்” என்றேன். மோசஸ் திகைத்துப் போனான், கூலிக்காரன்லே ஒருத்தன் ரொம்பச் சுறுசுறுப்பா இருந்தான் என்றேன் பார், அவனோட முகத்திலே ஒரே ஆனந்தம் தாண்டவமாடறது நன்னாத் தெரிந்தது. சரின்னு என்ன செய்தேன் தெரியுமோ, கோட்டைக் கழற்றி வைத்துவிட்டு, நானே பார்சல்களைத் தூக்கறதும் இறக்கறதுமா, கூலிக்காரர் களுக்கு உதவியா இருந்தேன்...”

"ஏன்! ஏன்! அதென்ன பைத்தியக்காரத்தனம்?''

‘‘இதே போல எண்ணிண்டுதான் மோசசும் என்னைக் கேட்டான். என்னோட செய்கைக்கு என்ன காரணம் என்கிறது, அவனுக்கு எப்படித் தெரியும். . . இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அதாவது மறுநாள், என்னை மேகநாதன் தன் ஆபீஸ் அறைக்கு அழைத்து, வெகுவாகப் பாராட்டி, ‘மேலிடம்’ கொடுத்தார்.”

‘‘கூலிக்காரர்களுக்கு உதவி செய்ததற்குப் பரிசா?”

‘‘அப்படின்னு அவன் சொல்லோணுமோ? நாமே தெரிஞ்சுக் கொள்ள வேண்டியதுதான். . . .”

‘‘ஆமாம். . . . கூலிக்காரர்களுக்கு உதவி செய்தீர் என்பதனாலே. . . ?”

‘‘மண்டு! ஒரு உத்யோகஸ்தன், தன்னோட அந்தஸ்து, கௌரவம் இவற்றைக் கவனிக்காமப்படிக்கு, ஆபீஸ் காரியம் நடக்கோணும் என்கிறதுக்காக, கூலிக்காராளுக்கு உதவி செய்தான் என்றால் அவனுக்கு ஆபீஸ் காரியத்திலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு அர்த்தம். அவனுடைய நிர்வாகத்திலே வேலை செய்கிறவாளுக்கு, எவ்வளவு அபிமானம் ஏற்படும், அதனாலே காரியாலயத்துக்கு அவர்கள் எவ்வளவு அன்போடு பாடுபடுவா, இதெல்லாம் புரியாதோ, எந்தத் தலைமை அதிகாரிக்கும். அதனாலேதான், கூலிக்காராளுக்கு இவ்வளவு உபகாரமாக இருந்தவனுக்கு உண்மையிலேயே சிலாக்கியமான குணம் இருக்கு என்பதை எண்ணி எனக்கு மேலிடம் கொடுத்தான் மேக நாதன்.”

‘‘சரி, நீர் கூலிக்காரனுக்கு உதவியாக இருந்தீர் - உம்முடைய அந்தஸ்து, கௌரவம் இவைகளைக்கூடக் கவனிக்காமல் பாடுபட்டீர், அவாளோடு பக்குவமாகவும் பிரியமாகவும் பேசினீர் என்பது மேகநாதனுக்கு எப்படித் தெரிந்தது?”

‘‘அசடே! அவன்தான் என்னோட வேலையைப் பார்த்துண்டே இருந்தானே. . . .”

‘‘பார்த்துண்டு இருந்தானா? எங்கே இருந்து?”

‘‘அந்தரத்திலே இருந்து! சொல்றேன் கேள். மண்டு! நான்தான் இந்த மேகநாதன் நிறையப் படித்தவன் என்று சொன்னேனே. ஒருநாள் அவன் ரொம்ப சுவாரஸ்யமாக வாஷிங்டன் சரிதம் வாசித்திண்டிருந்தான், பார்த்தேன். வாஷிங்டன் தெரியுமாடா. . . ?”

‘‘தெரியாமலென்ன. அமெரிக்க பிரசிடெண்டு.”

ஆமாம்! அதைக் கவனிச்சுண்டேன். கூலிக்காரனுக்கு நான் உதவி செய்தது இருக்கே, அந்தச் சூட்சமம், மேகநாதன் வாஷிங்டன் புத்தகத்தைப் படித்ததாலே ஏற்பட்டதுதான். ஏண்டா பேந்தப்பேந்த விழிக்கறே? இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்கிறாயோ! இருக்கு. வாஷிங்டனைப்பற்றி ஒரு கதை சொல்லுவாளே தெரியுமா. . . . ? ஒருநாள், வாஷிங்டன் வெளியே படை வீரர்கள் வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டு வரச் சென்றான். ஒரு இடத்தில், பிரம்மாண்டமான மரத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நாலைந்து போர் வீரர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாக இருந்தவன், உதவி செய்யவில்லை, ஆகட்டும் சீக்கிரம், தூக்குங்கள் சோம்பேறிக் கழுதைகளா! என்று மிரட்டிக் கொண்டிருந் திருக்கான், நம்ம மோசஸ் போலவே. அப்போது இன்னொரு குதிரை வீரன் அங்கு வந்தான் - இதைப் பார்த்தான். பார்த்து விட்டு, ஏன் ஐயா! இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே, .நீரும் ஒரு கை கொடுத்து உதவி செய்யக் கூடாதோ? என்று கேட்டான். அவன், ஏய்! யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறே, நான் இவர்களுக்குத் தலைவன் என்று அவன் தற்பெருமையுடன் கூறினான். குதிரை வீரன், அப்படியா! அது தெரியாது எனக்கு என்று கூறிவிட்டுக் குதிரையைவிட்டுக் கீழே இறங்கி வந்து, மரத்தைத் தூக்குவோருக்கு உதவி செய்துவிட்டு, போகும்போது சொன்னான்: ‘‘ஐயா! இதுபோல எப்போதாவது உதவிக்கு ஆள்தேவை என்றால் உடனே எனக்கு சொல்லி அனுப்பும், வருகிறேன் - நான்தான் வாஷிங்டன், சேனாதிபதி என்றான். எப்படி இருக்கும் அந்தத் தலைவனுக்கு! அசடு வழிந்திருக்கும், பயம் பிய்த்துத்தின்னிருக்கும், மேகநாதனிடம் வாஷிங்டன் புத்தகம் இருப்பதைப் பார்த்ததும் எனக்கு இந்தக் கதை கவனத்துக்கு வந்தது. வந்திருக்கும் குதிரை வீரன் வாஷிங்டன் என்று தெரியாததால் தானே, அந்த அசடன் மாட்டிண்டான். அதுபோல நான் மாட்டிக் கொள்வனோ? அன்று மோசசிடம் திட்டுக்கேட்டுண்டு அதே போது சுறுசுறுப்பாக இருந்தான் ஒரு கூலிக்காரன் என்று சொன்னேனே, அவன் வேறு யாருமில்லை, சாட்சாத் மேகநாதன்தான். . . .”

‘‘அதெப்படி உனக்குத் தெரிந்தது. . . .”

‘‘எப்படி என்பது இருக்கட்டும், அது தெரிந்தது. அதனாலே தான், எனக்கு வாஷிங்டன் கதை கவனத்துக்கு வந்தது. உடனே இதுதான் மேகநாதனை வளையக் கட்டச் சரியான சமயம் என்று கூலிக்காராளைச் சகோதராளாக பாவித்து நடத்த வேணும் என்று மோசசுக்குச் சொன்னேன், நானே அவாளோடு சேர்ந்து பாடுபட்டேன். இதைக் கண்டு மேகநாதன் பூரிச்சுப் போகாமலிருக்க முடியுமோ! அதனாலேதான். மறுநாள் என்னைப் பாராட்டி, "மேலிடம்' கொடுத்தான். நான், எப்போதும் இதுபோல வேலையாட்களுடன் சரிசமமாகப் பழகி, உதவி செய்து, பக்குவமாக நடந்துகொள்பவன் என்று எண்ணிக்கொண்டான். அந்த ஏட்டுச் சுரைக்காய். அவன் கண்டானா, என்னோடது நடிப்பு என்பதை, ஏமாந்து விட்டான். ஆபீசிலே உள்ள அத்தனை பேரும் சேர்ந்துண்டு, அவனிடம் சொல்லட்டும், இராமாச்சாரி சுத்தச் சோம்பேறி, ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார், எல்லோர் மீதும் எரிஞ்சு விழுவார் என்று சொல்லிப் பார்க்கட்டும்; மேகநாதன் ‘‘பொறாமை பிடித்தவர்களே, அந்தத் தங்கமான மனுஷனை அவ்விதம் சொல்லாதீர், எனக்குப் பிரமாதமான கோபம் வரும். என் கண்ணாலே பார்த்தேன். அந்த ஆசாமி கூலிக்காரர்களிடம் அன்பாகப்பழகி, கூடவே இருந்து வேலை செய்ததை; அவரைப் போய், வாய்க்கு வந்தபடி பேசுகிறீர்களே. வயிற்றெரிச்சல்தானே இதற்குக் காரணம்?” என்று கூறிக் கண்டிப்பான்.''

‘‘அது சரி, மேகநாதன் அங்கு இருந்தது உமக்கு எப்படித் தெரிந்தது என்பதைக் கூறவில்லையே. ..”

‘‘கூலிக்காரர்களிலே ஒருவன், மற்றவர்களைவிட அதிக சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான் என்று சொன்னேனல்லவா. அவன் சில சமயங்களிலே மோசசைப் பார்த்த பார்வை எனக்கு ஒரு சம்சயத்தைக் கிளப்பிற்று; மேகநாதன், மாறுவேடம் போட்டுக் கொண்டு வந்து இப்படி வேவு பார்க்கிறானோ என்றோர் சந்தேகம். வாஷிங்டன் புத்தகம் அவன் படித்தானே. அது கவனத்துக்கு வந்தது. வேலையின் போது இரண்டோர் நிமிஷம் அவன் தனியாகச் சென்றிருந்தான். பிறகு, அவன் போய்விட்டு வந்த இடத்தை, நான் போய்ப் பார்த்தேன். பாதி இருக்கும், சிகரட், அவன் பிடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தான். கூலிக்காரனாவது இப்படி பாதி சிகரெட்டை வீணாக்குவதாவது! சரி, இவன் மாறு வேடம் போட்டுக் கொண்டிருக்கும் மேகநாதன்தான் என்று முடிவுசெய்து கொண்டேன். சிகரெட்டைக் கூர்ந்து பார்த்தேன், விலையுயர்ந்தது, 555. போதுமல்லவா ஆராய்ச்சி. ஆசாமி, ஏதேதோ புத்தகத்தைப் படித்து விட்டு இப்படிச் செய்கிறான். இவனை இதே சமயத்திலேதான் சாய்க்கணும்னு ‘பிளான்’ செய்தேன். உடனே தான், தொழிலாளியானேன் - தோள் கொடுத்தேன் பார்சலைத் தூக்க. அசடன், அதை நம்பியே விட்டான். ”

‘‘பலே! பலே! உன்னோட சமத்து வேறு யாருக்கும் வராதப்பா.”

‘‘புத்தி தீட்சணியம் இருக்கவேணும்; சமயமறிந்து நடக்க வேணும்.”

தம்பி! இராமாச்சாரி கதை ஏன் கூறுகிறேன் என்று எண்ணுகிறாய் அல்லவா! இராமாச்சாரிகள் இப்படி நரித்தந்திரம் செய்து பிழைக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக மட்டுமல்ல, மேனாடு சென்று படித்து, புதிய முறைகளிலே தேர்ச்சி பெற்று ஏடு பல படித்துப் பக்குவம் தேடிடும் மேகநாதர்கள் கண்களில், வெகு எளிதில், இராமாச்சாரி போன்றார்களால் மண்ணைத் தூவி விட முடிகிறது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், மேகநாதர்கள் மனம் எதிலே இலயிக்கும், என்பதைக் கண்டறிய வேண்டியதுதான். அதை அன்பர் ஆச்சாரியார் செய்து நேரு பண்டிதரை எளிதாகத் தம் வலையில் விழச்செய்கிறார் - முன்பு பல முறை செய்திருக்கிறார் - இப்போதும் செய்கிறார். இதை எண்ணிப் பார்த்தபோது எனக்கு இராமாச்சாரி கதை கவனத்துக்கு வந்தது. நாட்டிலே எங்கோ, எப்போதோ நடைபெற்ற சம்பவத்தைத்தான் கதையாக்கினேன் தம்பி!

ஆச்சாரியார், ‘தட்சிணப் பிரதேசம்’ கேட்டார்; யாருக்கும் உதிக்காத ஓர் அற்புதமான யோசனை இவருக்கு உதித்ததே - ஞானவான்களுக்கு எப்போதும் இப்படித்தான் என்று ஆச்சாரியாரின் திருப்பல்லாண்டு பாடுவதிலே பயிற்சி பெற்ற கூட்டம் பாராட்டிற்று.

தமிழ் நாடு - மிகச் சிறிய அமைப்பு - இந்திய அரசியலிலே இந்தச் சிறிய அமைப்புக்குச் செல்வாக்கு ஏற்படாது - பெரிய அளவில் உள்ள உத்தரப் பிரதேசம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்று காரணம் காட்டினார், ஆச்சாரியார்.

எப்போது இதைச் சொன்னார் என்றால், ஆந்திரம் பிரிந்த போது அல்ல; ஆந்திரம், கருநாடகம், கேரளம் எனும் அமைப்புகளை எப்படி எப்படி உருவாக்குவது, எந்த அடிப்படையில் என்பது பற்றி மூவர் கூடி ஒரு அறிக்கை வெளியிட்ட பிறகு!!

தமிழ்நாடு - மிகச் சிறிய அமைப்பு, ஆகவே அதற்குச் செல்வாக்கு இராது என்று கூறினதும், அப்படியானால், ‘சிறுசு பெரிசு’ பார்த்துத்தான் இந்திய அரசியல் நடந்து கொள்ளுமா, நீதி, நேர்மைக்கு இடமளிக்காதா - தமிழ்நாடு சிறிய அளவாகவும் உத்தரப்பிரதேசம் பெரிய அளவிலும் இருந்தாலென்ன, எல்லாவற்றுக்கும் ‘மேலே உள்ள அதிகாரி, நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடாதோ என்று யாரும் கேட்கவில்லை! கேட்டால் மட்டும் என்ன, ஆச்சாரியார் காதில் போட்டுக்கொள்வாரா! அவர்தான் கேளாக் காதர் என்பதை நாடு அறியுமே.

உலகிலே, பிரிட்டனும் பிரான்சும் அளவிலே சிறிய நாடுகள் - விரிந்து பரந்துகிடக்கும் அமெரிக்காவுடன், உலக அரங்கிலே அவை சமமாகத்தான் நடத்தப்படுகின்றன - அது மட்டுமல்ல, மிகப்பெரிய சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ‘முடிவு’ காண, இந்த நாடுகளிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது.

தனி அரசு நடாத்தும் நாடுகளிலேயே, அளவுபற்றி அல்ல அந்தஸ்து கிடைப்பது என்பதற்கு இதுபோன்ற ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன - தமிழகத்து மன்றங்களிலே தளராது நமது தோழர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

தம்பி! மிகப் பெரிய சீனாவை, இராணுவத் திறனாலும் அமெரிக்க உதவியாலும், சிறிய ஜப்பான், ஆட்டிப் படைத்ததே!

ஜப்பான் விமானம் வட்டமிடுகிறது என்ற பீதியில் சென்னை நகரே காலி செய்யப்பட்டதல்லவா - உடைமையுடையோர்களால்!

பெரிய அளவு - சிறிய அளவு என்பதல்ல, ஒரு நாட்டின் செல்வாக்கை நிர்ணயிக்கும் காரணம் - அதற்கு ஏற்ற எத்தனையோ காரணங்கள் உள்ளன.

இவ்வளவு பெரிய நாடுதானே பண்டிதரின் பாரதம், நாள் தவறாமல் நானிலத்திலே பல நாடுகளிலே இருந்தும், ‘தலைவர்கள்’ பவனி வருகிறார்கள், பாராட்டுத் தருகிறார்கள், பொது உடைமைத் தலைவரும் பூர்ப்படைகிறார், மத அதிபர் எனத் தக்க முறையிலே உள்ள சவூதி அரேபிய மன்னரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார், எனினும் போர்ச்சுகல் போர்க்கோலமே போட்டுக்காட்டுகிறதே, கோவா - என் கொல்லை என்று கொக்கரிக்கிறதே! அளவுதான் ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிப்பது என்றால், போர்ச்சுகல் பாரதத்தை நிமிர்ந்து நின்று பார்க்கக் கூட முடியாதே! என்ன செய்ய முடிகிறது பண்டிதரால்? அகிம்சை பேச முடிகிறது! அவ்வளவுதானே!!

நாட்டுக்கே அளவு முக்கியமல்ல என்றால், ஒரே பேரரசில் ஒரு அங்கமாக உள்ளவைகளிலே, ஒன்று பெரிய அளவு, மற்றொன்று சிறிய அளவு என்று இருந்தால், என்ன குடிமுழுகி விடும்? நீதியுடன் பரிபாலனம் செய்யும் ஆட்சியில், அளவு பற்றிய கவலை கொள்வானேன்!

வங்கமும் பாஞ்சாலமும் துண்டாடப்பட்டுப் போயின - அளவு குறைந்துவிட்டன, எனவே அவைகளை, மூலையில் தள்ள வேண்டியதுதான், தென்னகம் என்ற பெரிய அமைப்பு ஆந்திரம், தமிழகம், கேரளம், கருநாடகம் என்றெல்லாம் தனி அமைப்புகளாகி விட்டன, சிறிய அளவு - எனவே, சீந்தத் தேவையில்லை, என்று ஒரு அரசு எண்ணுமானால், நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட மறுக்கிறது என்று பொருள். ஆச்சாரியாருக்கு இந்தச் சந்தேகம் வருவானேன்? ஏதோ ‘வாடை’ அடிக்கிறது.

ஊரிலே உள்ள சுருள் கத்திக்காரனுக்குத்தான் போலீசில் மரியாதை கிடைக்கிறது, சாதுவுக்கு மரியாதை கிடையாது என்று கூறினால், அந்த ஊர் போலீசின் தரமல்லவா, மிக மட்டம் என்று பொருள்? பெரிய அளவான அமைப்புக்குத்தான் செல்வாக்கு கிடைக்கும், சிறிய அளவுக்குச் சீரழிவுதான், ஏற்படும் என்று சொல்லும்போது, மேலே உள்ள அரசு, வலுத்தவனுக்கும் இழுத்தவனுக்கும் பெண்டாகும் போக்கிலே உள்ளது என்று ஆச்சாரியார் கருதுகிறார் என்றுதானே பொருள்! அவரும் ‘ஜாடைமாடையாக’ அதைக் கூறவும் செய்கிறார் - மாகாண ஆட்சி என்று ஒரு புகைக் காட்சிதான் இருக்கிறது. உண்மையில், ‘பாரதம்’ இன்று ஒரு பண்டிதருடைய ஆட்சியில்தான் இருக்கிறது என்று கூறுகிறார். கூறி, அங்கலாய்க்கிறாரா, ஆனந்திக்கிறாரா என்று தெரியவில்லை.

ஒரு நேரு - என்று அவர் கூறுவதற்கு, ஒரு என்பதற்கு இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம்.

ஓரு - ஒப்பற்ற என்றும் கெள்ளலாம். ஓரே ஒரு தனி மனிதர் என்று வெறுப்புக்கும் இடமளிக்கிறது.

உபநிஷத் படித்த பெரியவர் ஒரு என்ற பதத்துக்கு அவர் இன்னும் பல பொருள்களை வைத்துக் கொண்டிருக்கக்கூடும் - ஒவ்வோர் இடத்துக்கு ஒரு பொருள் என்ற முறையிலே. மறைந்த மதிவாணர் சர். சண்மும், பொருளற்றா கூறினார், ஆச்சாரியார் குல்லூக பட்டர் என்று!

ஒரு நேருதான் பாரதத்தை ஆட்சி செய்கிறார் என்றால், அவருக்கு நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கையும் பற்றும் இருப்பதாக ஆச்சாரியார் மனதார நம்பினால், ஏன் தமிழ் நாடு சிறிய அளவான அமைப்பாயிற்றே, செல்வாக்கு ஏற்படாதே, சீர் குலைந்து போகுமே என்று சிந்தாகுலராக வேண்டும்?

ஒரு நேருவிடம், அளவற்ற அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது - பல "அரசுகள்' உள்ளன பாரதத்தில் என்று கூறப் பட்டாலும், உண்மையில் அரசாள்வது பண்டிதர்தான் என்றால், ஆட்சியிலே அனைவருக்கும் பங்கும் பலனும், நீதியும் நேர்மையும் கிடைக்க வேண்டும் என்று ஆச்சாரியா கருதுவாரானால், அவர் ராஜ்யங்களின் அளவுபற்றி அல்ல கவலைப்பட வேண்டியது. தமிழ்நாடு எவ்வளவு அளவுள்ளது, ஆந்திரத்தின் அகலம் என்ன என்பது அல்ல, அவர் கவனிக்க வேண்டிய பிரச்சினை!

சாவிலிருந்து காப்பாற்றுவதா, சர்வேஸ்வரன் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடுவதா என்பதுதான் பொருளுள்ள பிரச்சினையாக இருக்கலாமே தவிர, கழுத்தை நெறித்துச் சாகடிப்பதா, விழித்திருக்கும்போதா தூங்கும் போதா, விஷமிட்டா, கத்தியால் வெட்டியா என்பதையா பிரச்சினையாக்கிக் கொள்வது?

அது போலவே, ஒரு நேருவிடம், எல்லா அதிகாரமும் குவிந்திருக்கிறதே, இந்த ஆட்சி முறை நல்லதா, அல்லது ஆட்சிப் பொறுப்பும், அதனை நிறைவேற்றுவதற்கான வசதிகளும் வாய்ப்புகளும், பாரதத்தில் பல்வேறு பகுதிகளிலே உள்ள அரசு களுக்கும் நீதி நேர்மையின் அடிப்படையிலே பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதுதான் நல்லாட்சி முறையா என்றுதான் ஆச்சாரியார் பேசியிருக்க வேண்டும்.

அது விஷயமாக அவருக்கு ஒரு தெளிவான, முடிவான கருத்து இருப்பதாகவே தெரியக் காணோம்.

உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு என்பார்களே அது போல, சென்னையிலே செல்வாக்கு கிடைத்தால், டில்லியில் இவ்வளவு அதிகாரமா என்று எண்ணுகிறார், சென்னையிலே பிடி தளர்ந்தால், டில்லியிடமே இருக்கட்டும் எல்லா அதிகாரமும் என்று எண்ணுகிறார்.

தன்னைத்தான் மிக முக்கியமாக முன்னாலே நிறுத்தப் பார்க்கிறாரே தவிர, தாயகம், தனி அரசு என்ற முறையிலே அவர் இந்தப் பிரச்சினையை அணுகவே இல்லை.

தன்னிலிருந்து, எப்போதாவது வளருகிறார் என்றால், தன் இனத்துக்கு எது நல்லது, சென்னையில் அதிகாரம் வளமாக இருப்பது நல்லதா அல்லது டில்லியில் குவித்து வைப்பது நல்லதா என்று யோசிக்கும் நிலைக்குச் செல்கிறார். அவ்வளவுதானே தவிர, அதிகாரங்கள் அனைத்தையும் டில்லியில் குவித்து வைத்து விடுவதால் தென்னகம் தேய்கிறது, தன்மானம் மாய்கிறது என்பது பற்றிய கவலை அவருக்கு எழுவதாகக் காணோம்.

ஆகவே, அவர் இப்போது, தமிழ் நாடு அளவில் சிறியதாகி விடுவதாலே, இந்தியப் பேரரசிலே செல்வாக்கு இராது, என்று பேசும் போது, அவருடைய ‘இதய சுத்தி’யிலே நமக்கெல்லாம் சந்தேகம் வரத்தானே செய்யும்?

டில்லியில் ஏன் இவ்வளவு அதிகாரம்?

டில்லி எதற்காக இந்த ஆதிக்கம் செலுத்த வேண்டும்?

சென்னை, கப்பம் கட்டி கட்டியங் கூறி, காவடி தூக்கி, சேவடி தாங்கி தன்மானமிழந்து தவிக்கிறதே, இது தகுமா?

இவைபற்றி அல்ல அவர் கேட்பது? இவைபற்றிக் கொதித் தெழ அவருக்கு மனம் இடம் தரவில்லை. இதுதான் பிரச்சினை என்று அவர் கூற மறுக்கிறார். டில்லியில்தான் எல்லா அதிகாரமும் இருக்கும், அதன் ஆதிபத்தியத்தின் கீழ்தான் எல்லா இராஜ்யங்களும் இருக்கும், இராஜ்யங்கள் வரிகளைத் திரட்டும்; டில்லி வாரிக் கொண்டுதான் போகும், இதை மாற்ற வேண்டியது பிரச்சினை அல்ல! இந்த ஆதிக்கம் டில்லியிலிருக்கும் போது, சென்னை, அதைத் தாங்கிக் கொள்ளும் ‘வலிவு’டன் இருக்க வேண்டுமே - தமிழகம் என்று பிரிந்து, குறைந்த அளவிலே இருக்குமானால், எப்படித் தாங்கிக்கொள்ளும் என்று கேட்கிறார் ஆச்சாரியார்!

‘‘பாவி! பொல்லாதவன்! படுக்கையைத் தட்டிப் போடு!! - என்று கூறிய பாட்டியின் கவலை, பாவையின் கற்பைக் காப்பாற்றுவது அல்ல - அது முடியாத காரியம் என்று பாட்டி விட்டு விட்டாள் - கற்பை இழந்துவிடப் போகும் காரிகைக்குக் குத்தும் வெட்டுமாவது இல்லாமலிருக்கட்டுமே என்பதுதான் பாட்டியின் கவலை. ஆச்சாரியாருக்கும், டில்லிக்கு ஏன் இந்த ஆதிக்கம் என்று கேட்கும் துணிவும் எழக் காணோம், தூய்மை உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவலையெல்லாம், டில்லியின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளும் ‘வலிவு’ வேண்டுமே, ‘தமிழ் நாடு, என்றாகிவிட்டால், வலிவு இராதோ என்ற சம்சயம்தான். தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்தில், வேறு எந்தத் தத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘‘பாவி! பொல்லாதவன்! படுக்கையைத் தட்டிப்போடு” என்று பேசும் பாட்டிப் போக்குத்தான் இந்தத் தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்திலே தொக்கிக் கிடக்கிறது.

இனி, மேகநாதனை இராமாச்சாரி எப்படித் தந்திரமாகத் தன் வலையில் விழச்செய்தாரோ அதுபோல, நேருபண்டிதரை, ஆச்சாரியார், தம்முடைய தட்சிணப் பிரதேசத்துக்கு அழைத்து வர எடுத்துக் கொண்ட முயற்சி எப்படிப்பட்டது என்று அறிய ஆவல் ஏற்படும், தம்பி. அடுத்த கிழமை வரையில் ஆவலை அடக்கிக் கொண்டிரு. நல்ல தம்பியல்லவா. . . .

அன்புள்ள,

1-1-1956