அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (4)
1

மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் -
தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை

தம்பி!

தமிழகத்தின் தனிச்சிறப்பினை, இலக்கியமும், வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும். நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும் அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக' அமைகிறது.

பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட, உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன், புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்திடும்போது.

தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என் உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால் அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக, மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என் னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்! ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும், தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி மாற்றானைப் போரிட்டு விரட்டியதும், கீர்த்திக் கணவாயில் குருதி கொட்டியேனும் நாட்டை மீட்டிடக் கிளம்பிடும் ஆற்றல் படையினரின் அஞ்சா நெஞ்சமும், காணக்காண நெஞ்சு நெக்குருகும்.

மராட்டிய மண்டலம், அன்று அரசு பெற்று, அணியெனத் திகழ்ந்தது; இன்று அரசு இழந்து அல்லல்படுகிறது; எனினும், அந்த மக்கள் நாட்டுப்பற்றை இழந்தாரில்லை; தம் பண்டைப் பெருமையை மறந்தனரில்லை; மறவாதது மட்டுமல்ல, பெருமையை மீட்டிட முடியும் என்று உறுதிபூண்டு, இதுபோது பணியாற்றி வருகின்றனர்.

இந்த மாபெரும் எழுச்சியின் ஒரு சிறு கூறுதான் சம்யுக்த மராட்டிய சமிதி எனும் முயற்சி; இந்த முயற்சி, நம்பிக்கை தருவதாக அமைந்துவிட்டது! மராட்டிய மண்டலத்திலே, காங்கிரஸ் மேலிடம் இழைத்த அநீதியை எதிர்த்து, கொடுமைக்கு ஆளானார்கள் அனைவரும் ஒன்றுகூடி, காங்கிரசுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்தனர் புதிய முகாம் - சம்யுக்த மராட்டிய சமிதி வெவ்வேறு கட்சிகளை நடாத்திக்கொண்டு வருபவர்கள் - தத்தமக்கென்று தனிக்கொடியும் படையும் கொண்டுள்ளோர் - இந்த ஒரு நோக்கத்துக்காக, தமது ஆற்றலை தனித்தனியே செலவிட்டால் சிதறுண்டு போகும் என்பதற்காக ஒரு தனி முகாம் அமைத்து கூட்டுவலிவு காட்டிக் காங்கிரசை எதிர்த்தனர் - 135 இடங்களில் 100 இடங்களில் வாகை சூடினர்.

இங்கு, அது போன்ற முயற்சி வெற்றிபெறவில்லை!

உள்ளதை மறைத்திடாமல் பேசுவது என்றால், இங்கு காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போட்டி எத்துணை கடுமையோ, அதனினும் கடுமையாக, காங்கிரசுக்கு எதிர்ப்புக் கட்சிகளாக உள்ளவைகளுக்குள் இருந்து வந்தன!

காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூடப் பரவாயில்லை, இந்தக் கழகம் வெற்றிபெறக் கூடாது - என்பதை மேடையிலேயே பேசிடச் சிலர் கூசவில்லை.

எது எந்த நாசமாகப் போனாலும் பரவாயில்லை, பார்ப்பானோ பாதகனோ, மொண்டியோ முடமோ, கூனோ குருடோ, ஊர்க்குடி கெடுப்பவனோ ஊமையோ, கழுகோ வௌவாலோ, காட்டானோ காவாலியோ, எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, இந்தக் கண்ணீர்த்துளிகள், மட்டும் வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!!

மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை "அமோகமான' வெற்றி கிடைத்திருக்காது.

மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம்.

தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் "பங்குச் சண்டை' போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்!

எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும்.

எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு "அமோக' வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது.

மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை.

காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது "தீர்ப்பை' தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது.

தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த "ஓட்டுகள்' 19,722; காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.

பட்சிராஜன் - 8,270
சுயம்பிரகாசம் - 8,077
இராதாகிருஷ்ணன் - 4,648
இராமலிங்கம் - 4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் - 1,047

இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!

திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.

26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?

ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.

காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - "ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளில் 8,270 - நமது கழகத் தோழர் பட்சிராஜனிடமும், 8,077 - சீட்டுகளை, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவினருடன் கூடிக்கொண்ட சுயம்பிரகாசம் அவர்களிடமும் என்று இம்முறையில் ஐந்து தோழர்களிடம், ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 26,138 - ஓட்டுகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து விட்டனர் - பத்து ரூபாய் நோட்டு கிழித்துக் கொடுக்கப்பட்டது - துண்டுகளாக்கப்பட்டன - பலன் இல்லாமற் போய்விட்டது.

திருவையாறு தொகுதியில் 26,138 - மக்கள் காங்கிரசை எதிர்த்து ஓட்டு அளித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று விட்டதன் மர்மம், இதுதானே!

காங்கிரசை எதிர்த்து ஓட் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்த அந்த 26,138 - வாக்காளர்களும், தத்தமது அறிவு, ஆராய்ச்சி, தொடர்பு, தோழமை, தெளிவு ஆகியவற்றுக்குத் தக்கபடி, காங்கிரசை வீழ்த்தக் கூடியவர் இவராகத்தான் இருக்க வேண்டும், இவருக்கு ஆதரவு அளித்தால்தான் காங்கிரஸ் கட்சியை முறியடிக்க முடியும், என்று முடிவு செய்து, அதற்குத் தக்கபடி ஓட்டுக்களைத் தந்தனர். இவ்வளவு "அபேட்சகர்கள்' காங்கிரசை எதிர்க்கும்போது, காங்கிரசை எதிர்த்தொழிக்க எண்ணும் வாக்காளர்கள், குழப்பமடைவதும், அதன் பயனாக "ஓட்டுகள்' சிதறுவதும்தானே நடக்கும்.

காங்கிரசை எதிர்த்த அத்தனை அபேட்சகர்களும், காங்கிரஸ்கட்சி கூடாது, ஆகாது, அதற்கு ஓட்டளிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ்கட்சியை வீழ்த்தும் ஆற்றல், காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்கும் வலிவு எனக்கு உண்டு, எனக்குத்தான் உண்டு, காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார்களே மற்றவர்கள், அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது, வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை; எனக்கு ஓட்டு அளித்தால் மட்டுமே காங்கிரசை வீழ்த்த முடியும்! என்று பேசியிருப்பர். வாக்காளர்கள் இதுபோல நாலாபக்கமும் பிடித்து இழுக்கப்பட்டதால், முடிவு நைந்துபோய்விட்டது.

"காங்கிரஸ் கட்சி கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், காங்கிரசை வீழ்த்த, கழகத்தானால் முடியாது, நம்ம சுயம்பிரகாசம்தான் அதற்குச் சரியானவர் என்று 8,077 - வாக்காளர்க்குத் தோன்றியிருக்கிறது; இல்லை, இல்லை, என்ன இருந்தாலும், திராவிட பார்லிமெண்டரி கட்சி என்று சட்ட சபையில் இருக்கும்போது கூறிக்கொண்ட அதே சுயம்பிரகாசம் அவர்கள், இப்போது இழுத்தவன் பின்னோடு போகிற போக்கில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியிலே சேருகிறாரே, இப்படிப்பட்டவர் ஆதரித்துப் பலனுமில்லை, ஆதரிப்பது நிச்சயமுமல்ல, நாம் நமது கழகத்துப் பட்சிராஜனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று 8,270 வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; இத்தனை தொல்லை எதற்கு, ஐயங்கார் ஸ்வாமிகளை ஆதரித்துவிட்டுப் போவோம், அவர்தான் காங்கிரசை ஒழித்துக் கட்டக் கூடியவர் என்ற எண்ணம் 1,047 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; காங்கிரஸ் சர்வாதி காரத்தை முறியடிக்க, மற்றவர்களை ஆதரித்தால் பயன் இல்லை; சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும்; சரியான ஆசாமி இதற்கு, கம்யூனிஸ்டுதான், ஆகவே, அவருக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் 4,096 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது!

மொத்தத்திலோ 26,138 - வாக்காளர்களுக்கு, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்.

இதேபோலப் பல தொகுதிகளிலும், நிலைமை ஏற்பட்டு விட்டது; மொத்தத்தில் காங்கிரசை எதிர்த்து வாக்காளர்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்; ஆனால் தீர்ப்புச் சீட்டுகளை, பல்வேறு பெட்டிகளிலே பிரித்துப் பிரித்துப் போடவேண்டிய நிலைமை - மக்களால்கூட அல்ல - தலைவர்களால் ஏற்பட்டு விட்டது.

அதனால்தான் தம்பி! மக்கள் பேரில் குறை கூறுவதற்கில்லை, குற்றம் "தலைவர்கள்' பேரில்தான் என்று கூறினேன்.

நமது இராஜேந்திரன் தொகுதி தேனீயைப் பாரேன். நாடகமாடி நாடாளலாமா என்ற தத்துவம் கக்கினார்களே சிலர், இரண்டிலும் திறமையற்றவர்கள், அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சென்னையில் பல ஆண்டுகளாக "வாசம்' செய்து கொண்டுள்ள அந்த இளைஞன், தேனீ தொகுதியில் பெற்றிருக்கும் செல்வாக்கின் அளவை. 31,404 வாக்குகளல்லவா, கிடைத் திருக்கிறது, "மணிமகுடத்துக்கு!!' காங்கிரசுக்குத்தான் வெற்றி ஆனால் வெற்றி பெற்றவருக்கு, "விருது' என்ன தெரியுமோ! இராஜேந்திரனைத் தோற்கடித்த தேனீ தியாகராஜன்!! பார்த்தாயா, தம்பியின் சமர்த்தை! தியாகராஜனுக்கு, பத்ம பூஷணம் பட்டம்போல், இப்போது இராஜேந்திரன் பெயர் பயன்படுகிறது!! இதேபோலச் சென்னையில், கூட்ட விளம்பரச் சுவரொட்டி கண்டேன் - கேலிக்காக நானாக இட்டுக் கட்டிக்கொண்டு கூறினேன் என்று காங்கிரசார் யாராவது எண்ணிக் கொள்ளப் போகிறார்கள். 38,185 வாக்குகள் பெற்றார் தியாகராஜன்; காங்கிரஸ் வெற்றி பெற்றது; தேனீ தேசியக் கோட்டை என்று பெருமைப்படட்டும் - வேண்டாமென்று கூற, நாம் யார்.

ஆனால், தேனீ தொகுதி மக்களின் தீர்ப்பு என்ன?

காங்கிரஸ் அபேட்சகருக்கு வெற்றி கிட்டிற்றே தவிர 46,712 மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது, என்றல்லவா தீர்ப்பளித்துள்ளனர். 38,185 வெற்றிபெற்றது! 46,712 தோல்வியுற்றது! காரணம், தெரிகிறதல்லவா?

31,404 வாக்காளர்கள் காங்கிரஸ் கூடாது, ஆகாது, என்ற தம்முடைய தீர்ப்பினை, இராஜேந்திரன் மூலமாக, நாட்டுக்கு அறிவித்தார்கள்; 15,308 வாக்காளர்கள், காங்கிரஸ் கூடாது என்ற தீர்ப்பை, சீர்திருத்தக் கமிட்டி சார்பில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் மூலம், நாட்டுக்கு அறிவித்தனர்; மொத்தத்தில் காங்கிரஸ் கூடாது என்று தீர்ப்பளித்தவர் தொகை 46,712!! நோட்டு கிழிக்கப்பட்டுப் போய்விட்டது! ஓட்டுச் சிதறிவிட்டது! காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொண்டது.

தேனீ, காங்கிரசுக்கா ஆதரவு காட்டியிருக்கிறது? இல்லையே!!

பல்வேறு தொகுதிகளிலே, காங்கிரசுக்கு இதே முறையிலே தான் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது!

கொடைக்கானல் தொகுதியில், கழகத் தோழர் குருசாமிக்குக் கிடைத்த 17,452 வாக்குகளுடன், காங்கிரசை எதிர்த்த சுயேச்சை ஞானவரம் என்பவருக்குக் கிடைத்த 6,365 - வாக்குகளையும் கூட்டி, வெற்றி கிட்டியது என்ற நிலை பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் அளகிரிசாமியார் பெற்ற 21,107 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார். தவறு, மக்கள்மீது அல்ல என்ற பாடம் கிடைக்கும்!

அரியலூரில், தம்பி, 31,048 வாக்காளர்களை, 11,744 வாக்காளர்கள் தோற்கடித்திருக்கிறார்களே, தெரியுமா!!

காங்கிரஸ் கூடாது என்று 31,048 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர், ஆனால், கழகத் தோழர் நாராயணனிடம் 10,404 ஓட்டுகள் மட்டுமே தந்தனர்; 6,992 வாக்குகளை அப்துல்காதர் என்பவரிடமும், தனராஜ் என்பவரிடம் 4,797 வாக்குகளும், மாணிக்கம் என்பவரிடம் 3,069 வாக்குகளும், 2,640 வாக்குகளை அரசன் என்பவரிடமும், 2,154 வாக்குகளை தங்கவேலு என்பவரிடமும் தந்துள்ளனர்; கொடுத்தவரையில் கொடுங்கள் என்று 992 வாக்குகளை வடிவேலு என்பவர் பெற்றிருக்கிறார்.

இத்தனை பேரும், காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள்.

இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓட்டு அளித்தபோது, வாக்காளர் எண்ணிக்கொண்டது, காங்கிரசை வீழ்த்த நமது "ஓட்டு' பயன்படுகிறது என்பதுதான்! ஆனால் நடைபெற்றதோ, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் விரும்பாதது, எதிர்பாராதது; 11,744 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் அபேட்சகர் இராமலிங்கப் படையாச்சி என்பவர் வெற்றிக்கொடி நாட்டினார் - மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டு, முழக்கமிட்டவர்களில் யாருக்கு வாக்களித்தால் காங்கிரசை ஒழித்துக்கட்டலாம் என்பதில் மக்கள் குழப்பமடைந்தனர்; ஓட்டுகள் பிளவுபட்டன; காங்கிரஸ் பிழைத்துக்கொண்டது!

அரியலூரில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார், ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குச் செல்வாக்கு என்று கூறிட முடியாது, எதிர்ப்பாளர்கள் 31,048 ஆதரவாளரின் தொகை 11,744 மட்டுமே!

தங்கவேலுவோ, வடிவேலுவோ, அரசனோ அப்துல் காதரோ, நாமேன் வீணாக ஓட்டுகளைப் பிரியச் செய்வது, கழகத்துக்குத்தான் கைகொடுப்போமே என்று மட்டும் எண்ணியிருந்திருப்பின், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பாரேன், தம்பி! 10,404 வாக்குகளல்லவா பெற்றிருக்கிறார், நாராயணன் எனும் நமது கழகத்தோழர்! வெற்றி எக்காளமிட முடிகிறது காங்கிரசால்; பெற்ற வாக்குகளோ, 11,744!!

பாபநாசம் தொகுதியிலும் இதே நிலைமை - காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 38,971 - காங்கிரசை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் 50,761!! ஆனால், இந்த ஓட்டுகள் ஐந்து பெட்டிகளில் பிரிந்து பிரிந்து விழுந்தன.

மதுராந்தகம் தொகுதியில் 57,619 வாக்குகளை, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் மூவர், பங்குபோட்டுக் கொண்டு தோற்றனர்; 24,402 வாக்குகளைத் திரட்டி காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி தேடிக்கொள்ள முடிந்தது.

ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று.

சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார்.

கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி.

இராமச்சந்திரதுரை 9,839
தங்கமுத்து நாட்டார் 8,553
மாரிமுத்து உடையார் 1,638
தர்மராஜ மேற்கொண்டார் 1,115
இரங்கசாமி உடையார் 1,051

ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!!

தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர்.