அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பேசட்டும், தம்பி, பேசட்டும்
1

ராஜா சிதம்பரத்தின் காங்கிரஸ் நுழைவு -
அமைச்சர் சுப்பிரமணியம் -
தொழில் துறையில் சென்னையின் பின் தங்கிய நிலை.

தம்பி!

அமைச்சர் சுப்பிரமணியம் ரொம்ப ரொம்ப ரோஷக்காரர்!

நிறுத்து அண்ணா! யார் ஒப்புக்கொள்வார் இதை? துளியாவது அவருக்கு ரோஷம் இருப்பதாகக் காணோமே? என்று கூற எண்ணுகிறாய்.

தம்பி, சென்ற கிழமை அவர் லால்குடியிலும் திருச்சியிலும் பேசியதைப் பத்திரிகையில் பார்த்திருப்பாயே, அதற்குப் பிறகுமா, அவர் ரோஷக்காரர் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் என்கிறேன் நான்.

போ! போ! அண்ணா! ஏதோ இரண்டோர் கூட்டத்திலே தலைகால் தெரியாமல் அந்த ஆசாமி துள்ளிக் குதித்து, கண்மண் தெரியாமல் பேசிவிட்டதாலேயே, அவரைரோஷக் காரர் என்று கூறிவிட முடியுமா? எத்தனையோ வில்வங்கள், துளசிகள் விதவையானதுகள், இதைவிடக் கடுமையாகத் தாக்கிப் பேசி, தமது எரிச்சலைக் குறைத்துக்கொள்ள முயன்றன. இதை ஒரு காரணமாகக் கொண்டு, அமைச்சர் சுப்பிரமணியத்தை ரோஷக்காரர் என்று கூறினால், நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரோஷக்காரர்தான் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பொன்று அவருக்குக் கிடைத்தது - ஆனால், அவரோ தமது ரோஷத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, அகப்பட்டதை விடுவேனா என்று கூறினாரே தவிர, ரோஷக்காரராக நடந்து கொள்ளவில்லை, என்று கூறுவாய்.

தம்பி! கிடக்கட்டும்; நமக்குள் ஏன் தகராறு? அவர் கோபக்காரர், அதை ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறேன் - மறுக்க முடியாதல்லவா உன்னால்!! அதிலும் சென்ற கிழமை "கோபாதிபதி' அவருக்கு உச்சஸ்தானத்தில் இருந்திருக்கிறான்! எப்படி இல்லாமலிருக்க முடியும்? குடந்தையில் வரவேற்பு, திருச்சியில் விழா, சென்னையில் கொண்டாட்டம், கோவையில் குதூகலம், மதுரையில் மகத்தான வரவேற்பு என்றெல்லாம் பத்திரிகையில் செய்திகள் வருகின்றன - எல்லாம் தீனா மூனா கானக்களுக்கு! இதோ அவர் இருக்கிறார், அமைச்சர் வழக்கறிஞர், ஆச்சாரியாரின் அத்யந்த நண்பர்; அவரை அல்லவா நாடு இப்படிக் கொண்டாடவேண்டும். நாவலர் நெடுஞ்செழியனுக்கா இப்படிப்பட்ட நல்வரவேற்புகள் என்று எண்ணும்போதே உள்ளம் எரிமலையாகிறது - கக்கிவிட்டார்!!

சப்தரிஷீஸ்வரர் கோயில் அதிகாரிகள் பூர்ண கும்பம் எடுத்து வரவேற்க, எடயாத்து மங்களந்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹாலாஸ்யநாத குருக்கள், லால்ழுடி தாலூகா அர்ச்சகர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு உபசாரப் பத்திரம் வாசித்தளிக்க, வருக, அமருக! மாலை அணிந்து கொள்க! என்று வட்டாரப் பெரியவர், ராஜா சிதம்பரம் அன்பு ஒழுக ஒழுக உபசரிக்கப் பவனிவந்த, சென்னை ராஜ்ய நிதி அமைச்சர் கனம் சுப்ரமணியம் அவர்கள், பிரம்மானந்தமடைந்து, "ஓஹோ ஹோ! நமக்கும் இவ்வளவு அமோகமான ஆதரவு இருக்கிறதா, இனி என்ன தயக்கம், இதுகளை இதே நேரத்தில் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்' என்று தீர்மானித்து, நமது கழகங்களின்மீது பாய்ந்திருக்கிறார் சென்ற கிழமை!! ஆஹா ஹாரம் செய்து தமது மலைபோன்ற உடல் குலுங்கக் குலுங்க ராஜா சிதம்பரம் நகைத்திருப்பார்; அவ்வளவு காரசாரமாகப் பேசினாராம் அமைச்சர், ராஜா சிதம்பரம் அவர்களின் வீரதீரத்தைப் பாராட்டினாராம்!!

ராஜா சிதம்பரம் முன்பு காங்கிரசை எதிர்த்துவந்தார்; இப்போது காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; இது கோழைத்தன மல்ல; இதுதான் வீரம்! மந்திரியின் மணிவாசகம் இது. இதன் பொருள் பற்றிய விளக்கத்தைப் பிறகு கவனிப்போம், தம்பி! முதலில், இவர் இது போலப் பேசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி எண்ணிப் பார்த்தால், ருசிகரமான பல விஷயங்கள் தெரியும்.

யாராரோ ஏதேதோ பேசி இருக்கிறார்கள், ராஜா சிதம்பரத்தின் போக்குப்பற்றி! அமைச்சரிடமே சிலர் கூறியிருக்கக் கூடும் - பலர் அவர் காதில் படும்படி பேசி இருக்கவேண்டும். அல்லது, தன் போக்கைக் கேவலமானது, நாணய மற்றது நயவஞ்சகமானது என்ற பலரும் கூறி ஏசுகிறார்கள் என்று ராஜா சிதம்பரம் அவர்களே, அமைச்சரிடம் கூறி அழுதிருக்க வேண்டும்.

"பாரப்பா பார்! இந்தப் பெரிய மனிதர்களுடைய யோக்கியதை எப்படியிருக்கிறது பார்? ராஜா சிதம்பரம், காங்கிரஸ் மந்திரியை வரவேற்கிற காட்சியைப் பார்! காங்கிரசை முழு மூச்சாக எதிர்த்த கனவானப்பா இவர்! இப்போது பார், காவடி தூக்கி ஆடுகிறார்.''

"காங்கிரஸ் கவிழ்ந்துவிடப் போகிறது. எதிர்க் கட்சிகளுக்குத்தான் சான்சு. அதிலே இருந்தால்தான் நமக்கு ஒரு மந்திரி வேலை கிடைக்கும் என்கிற ஆசை மனுஷனைப் படாதபாடு படுத்திற்று - பிறகோ, காங்கிரஸ், பீடத்திலே உட்கார்ந்து கொண்டது. ஆசாமிக்குச் சப்பிட்டுவிட்டது - இனிக்காங்கிரசிலே சேர்ந்தாத்தான் ஏதாச்சும் துண்டு துணுக்காவது கிடைக்க முடியும் என்கிற எண்ணம் ஏற்பட்டது- இப்போது, எங்கள் மந்திரி! எங்கள் மந்திரி! என்ற மங்களம் பாடுகிறார்! பதவிப்பித்தம் இருக்கே, அடே அப்பா! ஆட்டிப்படைக்குது!''

"பெரிய வீராதிவீரர்போலே பேசி வந்தார், காங்கிரஸ் பதவிக்கு வராது என்கிற தைரியத்திலே! இப்போது ஒரே பயம் பிய்த்துத் தின்னுது. எதிர்க்கட்சியிலே இருந்தா ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லே என்கிற பயம் வந்து விட்டது. எனவே சரணாகதிப் படலம் ஆரம்பமாகிவிட்டது''

இப்படிப் பலர் பலவிதமாகப் பேசாமலிருந்திருக்க முடியுமா!

இவ்வளவு சாவதானமாகவும் அமைதியாகவும் பேச முடியாதவர்கள், சுருக்கமாகப்பேச, சுடு சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும்.

கோழைத்தனம் - பதவிப்பித்தம் - சுயநலவெறி

என்பனபோன்ற பட்டங்களைச் சூட்டியிருக்கக்கூடும். இது பற்றி ஏதோ ஓர் அளவுக்குத் தெரிந்ததால்தான், அமைச்சர் சுப்பிரமணியம், ராஜா சிதம்பரத்தின் போக்கை ஆராய்ந்திட வேண்டிய அவசியம் வந்தது. அந்த அறிஞர் பெருமானின் அபார ஆராய்ச்சியின் முடிவு யாதெனின், ராஜா சிதம்பரம் காங்கிரசிலே வந்து சேர்ந்தது கோழைத்தனமாகாது, அதுதான் வீரம் என்பதாகும்.

காட்டிக்கொடுத்தவர் - கட்சி மாறியவர் - என்றெல்லாம் கண்டிக்கிறார்கள் ஊரார், இதோ ஒரு "கனம்' வருகிறார். வாழ்க வீராதி வீரனே! என்று வாழ்த்துகிறார், விருதளிக்கிறார்.

பொதுமக்கள், ராஜா சிதம்பரத்தின் போக்கை, எப்படி வரவேற்றனர், எத்தகைய தீர்ப்பளித்தனர், என்பது மாவட்ட ஆட்சிமன்றத் தேர்தலில் தெரிந்தது. மிகமிகச் சாமான்யர் தர்மு, நமது கழக மாவட்டச் செயலாளர், அவர் தூக்கி அடித்தார் இந்த கிங்காங்கை இப்போது குப்புற விழுந்தவருக்குத் தங்கத் தோடா தருகிறார், அமைச்சர்! ராஜா சிதம்பரத்தைப் பாராட்டி, வீரராக்கி, உபசரித்ததுடன் இருந்திருந்தால் நமக்கு வேலையே எழாது. அமைச்சர் அத்துடன் விடாமல், பெரியாரென்றும் அறிஞர் என்றும் சொல்லிக் கொண்டால் போதுமா? அவர்களுக்கு இத்தகையவீரம் வர வேண்டாமா!! என்று கேட்டிருக்கிறார்! அருமை, அருமை!! அமைச்சர் பெருமானே! உமது அறிவின் முதிர்ச்சி இருக்கிறதே, அருமையினும் அருமை!! ராஜா சிதம்பரத்தைப் பிடித்துக்கொண்ட வீரம் எமக்கும் பிடிக்கவேண்டும் என்கிறீர்; எவ்வளவு அழகாக, வட்ட வடிவமாக, வெண்ணிலவு போல உடலெங்கும் காட்சி அளிக்கிறது, என்று குஷ்ட நோயாளியைப் பாராட்டிவிட்டு, அதுபோல உமக்கும் வரலாகாதா என்று வேறு கூறுவதுபோல இருக்கிறது, உமது பேச்சு - என்றெல்லாம் கூறத் தோன்றவில்லை., தம்பி! எனக்கு நான் முறுக்குத் தளராத வாலிபனாக இருந்தபோது கேள்விப்பட நேரிட்ட ஒரு கதை - நிஜச்சம்பவம் நினைவிற்கு வந்தது.

மணி பத்தாகும் - பாவை பாகு கனிமொழி தருவாள், பாலில் சீனியும் சேர்த்துத் தருவாள் - பருகுவான், என் நண்பன். எனினும் அவன் நினைவு பத்மாவின் பஞ்சணை மீதிருக்கும் - பத்மா அவன் மாதவி, அவன் கண்ணகியின் பெயர் குணவதி, அவனுக்குப் பெயரோ அன்பரசன்! கொட்டாவி விடுவான். கோகிலம், அவன் குறிப்பறிந்து வெற்றிலை மடித்தளிப்பாள்! குதப்பிவிட்டு, கடைவீதி சென்று நொடியில் வருகிறேன் - ஒரு கப் சாயா சாப்பிட்டுவிட்டு என்பான்! குணவதி, இதற்கு ஏன் வெளியே போக வேண்டும், இதோ நொடியில் நான் தயார் செய்கிறேன், என்பாள். செச்சே! காலை ஆறு முதல் இரவு பத்து வரை தான் வேலை செய்து அலுத்துக் கிடக்கிறாயே, இனியும் உனக்கேன் சிரமம், இதோ ஒரு அரைமணி நேரம் வந்து விடுகிறேன், என்று கூறுவான். பத்மா அழைக்கிறாள் அவன் என்ன செய்வான்! சீக்கிரம் என்பாள், குணவதி கொஞ்சு மொழியில்! "இதோ' என்பான், அவனும் கொஞ்சவதுபோல; எதற்கும் கதவைத் தாளிட்டுவை, என்று கூறிவிட்டு, கோடிவீதிக்கு, ஓட்டம் பெருநடையாகச் செல்லுவான். சாயாக் கடை திறந்திருக்கும், அங்கு அவன் செல்லான், நில்லான், நேரே அங்கு!!

கதவு தாளிட்டிருக்கும், இடுக்கின் வழியாகப் பார்த்தால் விளக்கொளி மினுக்கிடும்.

மெள்ளத் தட்டுவான், "பத்மா! பத்மா!''

பத்மா படுக்கையில் - தூக்கமல்ல, கோபம்!

கதவு தட்டுவான் அவள் கண் மூடுவாள்! இதழில் புன்னகை இருந்திடும்!!

பத்மா! பத்மா! - மெல்லிய குரலில்தான் கூப்பிட முடியும். அண்டை அயலார் காதில் விழக்கூடாது.

பத்மா, அவன் படும்பாடு அறிவாள். எனினும், தான் படும் பாடு அறியாமல் நடந்துகொள்வதற்குத் தண்டனை தருவதாக எண்ணிக்கொண்டு, நீண்ட நேரம் கதவு திறக்கவே கூடாது என்று துணிவாள்.

பத்மா! பத்மா! ஏ! பத்மா!

அவள் மனம் இளகிவிடும். இன்ப இரவு இப்படி சங்கடத் தோடு தொடங்கலாமா! அப்போதுதான் விழித்துக் கொண்டவள் போல. யாரது? என்பாள், "நான் தான். . . . பத்மா நான் தான்' என்கிறான். சாயா சாப்பிடக் கிளம்பியவன். "நான் தான் என்றால்'' என்று கேட்டபடி, பூங்கொடி அசைந்தாடி வருகிறது, கதவு திறக்கிறது, கைவளை ஒலிக்கிறது, கன்னம் படாதபாடு படுகிறது.

"போதும் உங்களோட கொஞ்சுதலும், சரசமும்!''

"என்ன பத்மா! ஏன் ஒரு மாதிரியா இருக்கறே?''

"மணி என்ன இப்ப?''

"பத்து இருக்கும்''

"குணா கடியாரத்திலே பத்து - பத்மாவீட்டுக் கெடியாரம் இப்ப பன்னிரண்டு அடித்தது''

"இருக்காதே!''

"சரி, ஒரு அரையோ காலோ குறைவாக இருக்கட்டும் - ஆனா, ஏனுங்க இப்படி என் மனசைச் சங்கடப்படுத்தறிங்க. எவ்வளவு நேரம் விழிச்சிக்கிட்டு இருக்கிறது - பத்து மணிக்காச்சும் வரப்படாதா.''

"எப்படி, பத்மா, அவ்வளவு பொழுதோடு வரமுடியும். யாராவது பார்த்து விட்டால். . . .''

"பார்த்துவிட்டால்தான் என்னவாம்! அட அடா! இந்தப் பாழாய்ப்போன பயம் ஏன் உங்களுக்கு இவ்வளவு இருக்கிறதோ?. . .''

"கண்டவர் கண்டபடி பேசுவார்களே என்கிற பயம் தான். . .''

"பயம்! பயம்! பயம்! செச்சே, இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது - ஆண்பிள்ளைதானே நீங்கள் . . . பக்கத்து வீட்டு மக்கு இருக்கே, சொக்கு, உங்க சினேகிதர் சிதம்பரத்தோட ஜோடி . . . அவர் எத்தனை மணிக்கு வந்தார் தெரியுமா, எட்டுக்கூட அடிக்கல்லே அவர் வருகிறபோது. . . உங்களைப் போல பயந்து பாதிராத்திரிக்குத் திருடன் போலவா அவர் வருகிறார். அவருக்கு இருக்கிற தைரியம் ஏன் உங்களுக்கு வரக்கூடாது. பயந்து பயந்து சாகிறீர்களே. . . செச்சே இவ்வளவு கோழைத்தனம் கூடாது. . .''

இப்போது கனம் சுப்பிரமணியனார் பத்மா பாணியில் பேசுகிறார்; கதை நினைவிற்கு வந்ததும் எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. ராஜா சிதம்பரம் எவ்வளவு தைரியமாகக் கட்சி மாறினார்.மக்கள் எக்கேடோ கெடட்டும், எப்படி வேண்டு மானாலும் பேசட்டும். காரியம் பெரிதே தவிர, கண்ணியம், நாணயம் இவைகளெல்லாம் அல்ல, என்று துணிந்து கதராடைக் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கிறார். இதைப் பார்க்கிறீர்களே, ஏன் உங்களுக்கு அந்தத் தைரியம், வீரம் வரவில்லை என்கிறார். வழிதவறி நடந்திடும் வாலிபனுக்கு விருந்தளித்து வசியப்படுத்த முனையும் வழுக்கி விழுந்த வனிதையின் பேச்சுப்போல, நாட்டில் மாபெரு:ம போராட்டம் நடாத்தி விடுதலை பெற்றுத் தந்ததென விருது படைத்த காங்கிரசில் கலந்து, கனமானவர் பேசுவது, ஆசை வெட்கமறியாதாமே!!

அமைச்சர் பெருமானின் அகராதிக்கு, நாம் மதிப்பளிக்க மறுக்கிறோம்; அவருடைய அழைப்பு, ராஜா சிதம்பரம் போன்றோரோடு நிற்கட்டும். தமக்கென்று ஒரு கொள்கையும் அதிலே வெற்றிகாணப் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியும் திறமையும் பெற்றோர்களிடம் இத்தகைய அழைப்பும் அங்கலாய்ப்பும், நிந்தனையும் நையாண்டியும் வீசிப்பயனில்லை.

இதை ஓரளவுக்கு உணர்ந்து, அமைச்சர், கடைக் கண் காட்டுவதை நிறுத்திக் கொண்டு, கனலை உமிழ்ந்து பார்த்தி ருக்கிறார்; கனிமொழி கேட்டுச் சொக்கிடாத நிலை மட்டுமல்ல, கனலைக் கண்டு கலங்கிடாத உள்ளமும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதை, அவர் அறியார் போலும்! அவருடைய குருநாதரிடம் அக்கினி யாஸ்திரங்களைக் கண்டு கெக்கலி செய்தவர்களிடம், இவர் தீக்குச்சி யாஸ்திரங்களை வீசிப் பார்ப்பது விந்தைதான்!

அமைச்சர், நாம் ஐந்தாண்டுத் திட்டத்திலே காட்டப்பட்ட ஓர வஞ்சனை பற்றிக் கூறிவருவது கண்டு, பீதி அடைந்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தை, ஐந்தாண்டுத் திட்ட கண்டன நாள் கூட்டங்கள், ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது.

மந்திரிகளாம், மந்திரிகள்! சுளை சுளையாகப் பணம் மட்டும் வாங்குகிறார்கள் சம்பளமாக! துளியாவது சூடுசொரணை காணோம். சூறாவளிபோலப் பிரசாரம் நடைபெறுகிறது, வடநாடு, தென்னாடு என்று! தடுத்திடும் ஆற்றல் காணோம் - நம்மைக் காணும்போது மட்டும், தாசானுதாசன் என்று தோத்தரிக்கிறார்கள்! ஏன் அந்தப் பிரிவினைக் கிளர்ச்சிக் காரருக்கு எதிர்ப்பிரசாரம் செய்யக்கூடாது? இதைவிட வேறு என்ன வேலை இவர்களுக்கு? இதையும் செய்ய முடியவில்லை யானால் இவர்களுக்கென்ன பட்டம், பதவி! என்று மேலிடம் இடிக்கும்போலத் தெரிகிறது - அந்த இடி தாங்காமல், இப்போது கனம்கள் "வடநாடு, தென்னாடு' பேதம் பேதமை, அதைப் போக்குவதே எமது கடமை என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

"புது டில்லியில் இருந்துகொண்டு மத்திய சர்க்கார் ஆட்சி செய்து வருகிறது. ஆகையால் தென்னாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. என்று தென்னாட்டில் பலத்த சந்தேகத்தைப் பலர் கிளப்பி வருகின்றனர் இதில் என்ன விசேஷமென்றால், சமீபகாலத்தில் நன்கு படித்தவர்கள் கூட இந்தப் பிரசாரத்தினால் ஓரளவு பாதிக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது.''

அழகேசனார் திருவாய் மலர்ந்தருளுகிறார் இதுபோல குடந்தையில் இந்தத் திங்களில் - தமது திக்விஜயத்தின்போது - மன்னிக்க வேண்டுகிறேன் - தீர்த்த யாத்திரையின்போது!!

பலத்த சந்தேகம் பரவி இருக்கிறது.

நன்கு படித்தவர்கள்கூட இந்தப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தெரிகிறதா நிலைமை!!

இந்தப் பிரசாரம் பரவாது "பிசுபிசுத்து' விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இப்போது பார்த்தாலோ, இது பரவிக்கிடக்கிறது. நன்றாகப் படித்தவர்கள்கூட இதை ஒப்புக் கொண்டு பேசுகிறார்கள் - என்பது அழகேசனாரின் கருத்துரை. அம்மி நகருகிறது என்று பொருள்!! பாடுபட்டு வருகிறோம் பலன் தெரியத் தொடங்கிவிட்டது! அமைச்சர்கள் "ஜல்லடம்' கட்டுகிறார்கள் - அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது, நமது பிரச்சாரம்!!

என்னதான் சமாதானம் சொல்லுங்கள், வடநாடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய அரசியல் சட்டதிட்டமே வடநாட்டு ஆதிக்கத்துக்கு வழி வகுப்பதாகத் தானே அமைந்திருக்கிறது

ஐந்தாண்டு திட்டத்தின் புள்ளிவிவரம் கூறும் கதையைப் பார்த்தால், நன்றாகத் தெரிகிறதே தென்னாடு புறக்கணிக்கப்படுவது.

இவ்விதமெல்லாம் படித்தவர்கள், அழகேசனார் காதுபடச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு மறுப்புரை, தெளிவுரை கூற முடியாமல் திண்டாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது - எனவேதான் திடுக்கிட்டுப்போன நிலையில் பேசுகிறார் திருவாளர் அழகேசனார், நன்றாப் படித்தவர்களும். . . .! இப்படி எண்ணுகிறார்களே, என்று கூறி, ஆயாசப்படுகிறார். அடுத்த கட்டம் அச்சம்!! வேறென்னவாக இருக்க முடியும்!!

அமைச்சர் சுப்பிரமணியம் திகைப்புக்கு இடமளிக்கவில்லை; தீ மிதிக்கிறார்! தென்னாடு ஐந்தாண்டுத் திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டது, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டது என்ற புகாரை, நான் அதிகார பூர்வமாக மறுக்கிறேன், என்கிறார்!!

அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது, அதனால் மறுக்கிறார் என்பதுதான் இதற்குப் பொருள்!