அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


போலீஸ்! போலீஸ்! - 1

பண்டித நேருவின் போக்கு -
மொழிவழி அரசின் அவசியம்

தம்பி!

"எங்கெங்கு கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்படக் கூடும் என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் பலமான பாதுகாப்பு அமைத்துக்கொள்ள வேண்டும்; அது குறித்து, உடனே எமக்குத் தெரிவிக்க வேண்டும்''

போலீஸ் பாதுகாப்பு அமைத்துக் கொள்வதென்றால் என்ன என்பதைத்தான், எல்லோரும் அறிவார்களே! பொதுக் கூட்டத்திலே போலீஸ் வளையம் இருக்கும்! அத்துமீறிப் பேசினார்கள் என்ற காரணம் காட்டி வழக்குகள் தொடரப்படும். தடியடி, துப்பாக்கி, இவைகளெல்லாம் கிளம்பும்.

கல்லக்குடியிலும் தூத்துக்குடியிலும் நாம் அனுபவித்தோம்.

பிற கட்சிக்காரர்கள் பிற இடங்களிலே கண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு! தம்பி! வெள்ளைக்கார ஏகாதிபத்யம் எந்தமுறையைக் கையாண்டு வந்ததோ அது இன்னும் மடிந்துபட வில்லை. மாறாக, புது மெருகுடன் புறப்படுகிறது.

கொதிப்பும் கொந்தளிப்பும் உள்ள இடங்களிலே போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கட்டும் என்றால், அதன் பொருள், மக்கள் தங்கள் மனக்குறையை எடுத்துக் கூறினால், குமுறலை வெளியிட்டால், பிடி, அடி, சுடு, விடாதே என்பதுதான்.

கொதிப்பும் கொந்தளிப்பும், மக்களிடம் ஏன் ஏற்பட்டது. மக்களுடைய இயல்பா அது, பொழுது போக்கா! பாடு பல பட்டு கிடைப்பதைக் கொண்டு குடும்பம் நடத்திச் செல்வோம் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டுவரும் மக்கள், அமைந்திருக்கிற சர்க்கார் கேட்கும் வரி கொடுத்து, காட்டும் வழி நடந்து, திட்டும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டுவரும் மக்கள், ஏன்கொதிப்பு அடைகிறார்கள்? என்ன காரணத்தால் கொந்தளிப்பு ஏற்படுகிறது, அந்தக் கொதிப்பையும் கொந்தளிப்பையும் போக்குவதற்கான வழிவகை என்ன என்பது பற்றி எண்ணிப் பார்த்திடாமல், அதற்கேற்ற முறையில் காரியமற்ற முன்வராமல், "கொதிப்பா? கொந்தளிப்பா? சரி! சரி! சரியான முறையிலே போலீஸ்பாதுகாப்பு அமைத்து பயல்களின் கொட்டத்தை அடக்கிவிடு!'' - என்று கட்டளை பிறப்பித் திருக்கிறது டில்லி. ஆமாம், தம்பி! டில்லி சர்க்கார் மாகாண சர்க்கார்களுக்கு அனுப்பியுள்ள "தாக்கீதின்' கருத்தினைத்தான் நான் துவக்கத்திலே குறித்திருக்கிறேன்.

நேரு பண்டிதரின் நேர்த்தி மிக்க குணங்களைப் பாராட்டி' அவருடைய "பவனி'யைக் கோலாகலமான விழாவாக்கிக் கொண்டாடி, மகரதோரணம் கட்டி, ஊரெல்லாம் அழகாக்கி, பாதைகளைச் செப்பனிட்டு, மரங்களுக்கும் சாயமடித்து, மட்டற்ற உற்சாகத்தோடு மகோற்சவம் கொண்டாடினார்களே, அந்த மக்களுக்கு - ஏலக்காய் மாலையும், பொன்னாடையும், ரோஜாவும், மல்லியும், வரவேற்பும் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு சென்றாரே அந்தப் பண்டிதர், சுடச் சுடத்தருகிறார், உடனடியாகத் தெரிவித்துக்கொள்கிறார், தமது நன்றியறிதலை! போலீஸ் படை தயாராக இருக்கட்டும்! யாரார், இது அறமல்லவே, அழகல்லவே என்று கூறுகிறார்களோ, அவர்கள் மீது, எங்கெங்கு ஏன் என்ற குரல் கிளம்புகிறதோ அங்கெல்லாம் போலீஸ் கண் பாயட்டும்; எங்கெங்கு மனக்குறை வெளியிடப் படுகிறதோ, அங்கெல்லாம் போலீஸ் இருக்கட்டும்; உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எனக்கு அறிவித்து விடவேண்டும்! - என்று கூறி இருக்கிறார்!

கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட இருக்கிறது என்பதைப் பண்டிதர் உணருகிறார்: ஏனெனில் பண்டிதரின் போக்குத்தான், இந்த கொதிப்புக்கும் கொந்தளிப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது! கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பப் போகிறது, ஆகவே போலீஸ் படைகளை அனுப்பி, அடக்கு! அடக்கு முறையை அவிழ்த்துவிடு, என்கிறார் அகில உலகிலும் பவனி வந்து சாந்தி, சமாதானம், சமரசம் போன்ற பேருண்மைகளைப் பேசிவரும், பஞ்ச சீலர்!

கொதிப்பும் கொந்தளிப்பும் கொள்ளக் கூடும் - காரணம் கண்டறிக; குறை கூறுவர், சமாதானம் கூறுக; துயர் அடைவர், துயர் துடைத்திடுக! - என்று கூறுவார் எமது பண்டிதர். அதிகார வெறியும் ஆணவப் போக்கும், ஏகாதிபத்தியத் திமிரும் கொண்டவர்களன்றோ, மக்களிடம் கிளம்பும் கிளர்ச்சியைத் தடுக்க அடக்குமுறை வெறி நாய்களை அவிழ்த்துவிடுவர்; காலமெல்லாம் விடுதலைக்குப் போராடிய கர்மவீரன், காந்தி அடிகளின் வாரிசு, மனிதருள் மாணிக்கமாம் எமது நேருவா, வெள்ளையன்போல் வெறியாட்ட மாடுவார், என்று பேசிடும் காங்கிரஸ் அன்பர்கள், முக்காடிட்டுக் கொள்ள வேண்டிய வகையிலே, நேரு சர்க்காரின் உத்தரவு உருவெடுத்திருக்கிறது. கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பினால், குண்டாந் தடியும் குண்டு மாரியும் புறப்படும் என்று!

அஹிம்சையை அவனிக்கே போதித்த அண்ணல் காந்தியின் ஒப்பற்ற வாரிசே, வருக!

அவனி புகழும் அன்பு நெறியை, அறநெறியை, போர் வெறி கொண்டு அலையும் வல்லரசுகளுக்கும் ஊட்டி வெற்றி கண்ட, முடிசூடா மன்னா வருக!

மக்களாட்சியின் மாண்பினை அறிந்து ஒழுகும் மனிதகுல மாணிக்கமே வருக!

இவை போன்ற புகழ் மாலைகளை, அவர் "பெரும்பாரம்' என்று கூறத்தக்க அளவு சூட்டி மகிழ்ந்தனர், மக்கள், பெருந் தன்மையுடன். அவர்களிடம் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பும் எனத் தெரிகிறது, எனவே உடனே அடக்கிடப் போலீசை ஏவுக! என்று கட்டளையிடுகிறார் கண்ணியர்!

தம்பி! வெள்ளைக்காரன் போடும் உத்தரவுபோல இருக்கிறதே என்று கேட்கிறாயா! ஆமாம். இன்றைய டில்லி ஆட்சி நிறத்திலே சற்றுப் பழுப்பே தவிர, நடவடிக்கையிலே அதற்கு அண்ணன் என்பதை அடிக்கடி நினைவூட்ட, துப்பாக்கிச் சத்தம் கிளப்பியபடிதானே இருக்கிறது துரைத்தனம்!

எதாவது ஒரு பிரச்சினை எழுப்பினால், மக்கள் உள்ளத்தை அந்தப் பிரச்சினை உலுக்கினால், வெள்ளைக்கார ஆட்சி முதலில் "கவனியாமல்' இருக்கும், பிறகு அலட்சியமாகச் சில "புத்திமதி கூறும், பிறகு கண்டிக்கும், எச்சரிக்கை விடும், பிரச்னை குறித்து மக்களிடம் அக்கரை தொடர்ந்து இருக்குமானால், மக்களைச் சில காலம் செயலற்றவர்களாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்யும் - அதுதான் கமிஷன் அமைப்பது என்பது!

"பிரச்சினை, சிக்கல் நிறைந்தது - பலர் பலவிதமான கருத்துரை கூறுகின்றனர் - உண்மை எது பொய்யுரை எது என்பது விளங்கக் காணோம் - எனவே இது சம்பந்தமான எல்லா உண்மைகளையும் அறிந்து ஆய்வுரை வழங்க ஆண்டிப்பட்டி வேந்தர் தோண்டியப்பர், ஆஸ்தீக பூஷணம் ஆனந்தாச்சாரி, மவுலானா மவுலவி ஷருபுதீன், மேரிமாதா கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் ஆகியோர் கொண்ட கமிஷனை நியமித்திருக்கிறோம்'' என்று அறிக்கை வெளியிடுவர்!

"கமிஷன்' அமைக்கப்படுகிறது என்றால், "பிரச்சினை' குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காதே என்பது மட்டுமல்ல, பேசாதே, சிந்திக்காதே, என்பது பொருள்! காலங்கடத்தும் மார்க்கம்! கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிடும் தந்திரம்! துரைமார் சர்க்கார் இதை அடிக்கடி கையாண்டனர்; இப்போது அவர்களே மூக்கின்மீது விலல்வைத்து ஆச்சரியப்படும் வகையில், அந்தத் தந்திரத்தை நேரு சர்க்கார் கையாண்டு வருகிறது!

ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் அமைப்பு இத்தகைய தந்திரத்திலே ஒன்றுதான்!

இங்கு மக்கள், சாத்பூரா மலைச்சாரலிலிருந்து குமரி வரை யிலும், கேட்டது ராஜ்ய புனரமைப்பு அல்ல!

மக்கள், கேட்பது மொழிவழி அரசு!

மொழிவழி அரசுக் கிளர்ச்சி வலுப்பெற்றது; வெள்ளையர் போலவே வடவர் அழைத்துள்ள சர்க்கார், ஒரு "கமிஷன்' அமைத்தது. கமிஷனுக்குச் சர்க்கார் இட்ட வேலை, மொழிவழி அரசு எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதல்ல; ராஜ்யப் புனரமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதாகும்!

மொழிவழி அரசு என்ற மக்கள் கோரிக்கையை மதித்து அதன்படி நடத்திடத் துரைத்தனத்தார் முடிவு செய்திருப்பார் களானால், எல்லைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; ராஜ்ய புனரமைப்பு என்ற ஏமாற்று வேலைக்கு இடம் ஏற்பட்டிருக்காது!

ஆனால் டில்லி சர்க்கார், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை, மழுப்பவும், காலத்தை ஓட்டவும், கவனத்தை வேறு பக்கம் திருப்பவுமே விரும்பினர் : எனவேதான், ராஜ்யப் புனரமைப்பு கமிஷன் அமைத்தனர்.

அப்போதே இதனைக் கண்டித்தனர், விளக்கமறிந்தோர்; ஆட்சியாளர்களின் ஆதரவு தேடி அலையும் அடிவருடிகளோ, மொழிவழி அரசுபற்றி இப்போது ஏதும் கிளர்ச்சி வேண்டாம், இதோகமிஷன் அமைந்துவிட்டது; நியாயம் கிடைக்கும்; நேரு ஆட்சியிலே நீதி கிடைக்கும், என்று நல்வாக்குக் கொடுத்தனர்.

"கமிஷன்' தன் அறிக்கையை நீட்டிவிட்டது; நாட்டிலே பல்வேறு இடங்களில் கொதிப்பும் கொந்தளிப்பும் கருவில் உருவாகிவிட்டன; இது தெரிந்ததும், கொந்தளிப்பு கிளம்பக் கூடிய இடங்களுக்குப் போலீஸ் படைகளை அனுப்புக! என்ற டில்லி உத்தரவு பிறப்பித்து விட்டது!!

கண் விழித்துக் கொண்டால், அவன் தலை மீது போடுவதற்கு, பாராங்கல் ஒன்றை முதலிலேயே தயாராக வைத்துக் கொள் - என்று கைதேர்ந்த திருடன், ஆரம்பக்காரனுக்குச் சொல்வானாம்!!

மாகாண சர்க்காருக்கு மத்திய சர்க்கார், கூறுகிறது, மக்கள் கிளம்பினால், உடனே மண்டையிலடித்து உட்கார வைக்கத்தக்க முறையில், போலீஸ் ஏற்பாடு தயாராகட்டும் என்று!

கமிஷன் வெளியிட்ட அறிக்கை, நிச்சயமாகக் கொதிப்பையும் கொந்தளிப்பையும் உண்டாக்கும் என்பதை நேரு நன்றாக அறிவார்!

மக்களுடைய உரிமை மண்ணாக்கப்படும் போது, நீதி புறக்கணிக்கப்பட்டு, நியாயம் நசுக்கப்படும் போது, கொதிப்பும் கொந்தளிப்பும் மட்டுந்தானா. புரட்சியே வெடித்திருக்கிறது என்பதையும், அதனை அழித்தொழித்திட போலீசும் படையும் பாய்ந்தோடித் தாக்கியும் முடியாது போயிற்று என்பதையும் வரலாற்றுச் சுவடி எடுத்துக் காட்டத்தான் செய்கிறது. எனினும், நேரு பண்டிதர், மக்களிடம் தாம் ஊட்டிவிட்ட போலித் தேசிய அபின்' அவர்களைச் செயலாற்றவர்களாக்கி விட்டது; அவர்களுக்கு, தங்களுக்குள்ளாகவே தகராறுகளை வளர்த்துக் கொள்ளவும் சிண்டு பிடித்துச் சண்டையிடவும், சிறு மதி கொண்டு சச்சரவு கொள்ளவும், கூடிக் கெடுக்கவும், காலை வாரிவிடவும், காட்டிக்கொடுக்கவும்தான் விருப்பமும் பயிற்சியும் இருக்கிறதே தவிர, அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டுக் கொடுமையைக் களைந்திட, அக்ரமத்தை எதிர்த்திட, அடிமைத் தலைகளை நொறுக்கிட ஆற்றலுடன் போரிடமாட்டார்கள், என்று நம்புகிறார் மக்களைப்பற்றி மதோன்மத்தர்கள், கொண்ட கருத்தைத்தான் இந்த மனிதகுல மாணிக்கமும் கொண்டிருகிறது! எனவேதான், போலீஸ்! போலீஸ்!! என்று டில்லி கொக்கரிக்கிறது!

மொழிவழி அரசு என்பது இன்று நேற்று முளைத்ததல்ல!

காந்தீயக் கழனியிலே பயிரிடப்பட்டதாகும்!

அதற்கும் முன்பேகூட, விடுதலைக் கிளர்ச்சிக்கான முயற்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, மொழிவழி அரசு மக்கள் மன்றத்திலே உலவிற்று.

பாரத மக்களே! பரங்கியின் ஆட்சியை நீக்கிட வாரீர் - என்று மட்டும் கூறினாரில்லை. பாலகங்காதர திலகர்! - அவருடன் இருந்தோரும் அவர் வழி வந்தோரும் விளக்கமாகவே பேசினர், மக்கள் வீறு கொண்டு எழத்தக்க வகையில் மொழிவழி அரசு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன்.

சுயராஜ்யப் போர்ப்படை திரட்டிப் பணியாற்றிய சோர்விலாத் தலைவர்கள், எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழி யாளர்களைக் கண்டனரோ, அவர்களுடைய வரலாற்றை எடுத்துக் காட்டித்தான், உணர்ச்சியூட்டினர்!

சேரனும் சோழனும் பாண்டியனும் ஆண்ட செந்தமிழ் நாட்டவரே! இன்று செக்குமாடுகளென நம்மை நடத்தும் வெள்ளையன் ஆதிக்கத்தை எதிர்த்திட வாரீர்! என்று கூவி அழைத்தனர்.

மாவீரன் சிவாஜியின் வழி வழி வந்த வீரர்கள்! மராட்டியம் இன்று மமதை நிறைந்த வெள்ளையன் பிடியிலேசிக்கிச் சீரழிவதைப் பார்த்தும் உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா! எங்கே சிவாஜி ஊட்டிய வீரம்! அந்த மாமன்னன் தந்த விடுதலை உணர்ச்சி மங்கிக் கிடக்கிறது. மராட்டிய மாவீரர்காள்! மடிந்து போகவில்லை! மாற்றானை ஓட்டிட வாரீர்! மராட்டியத்தின் கீர்த்தியை மீண்டும் நிலை நாட்டிட வாரீர் - என்றுதான் அழைத்தனர்!

விஜய நகர சமஸ்தான காலத்தைக் கவனப்படுத்தித்தான் ஆந்திரர்களை அழைத்தனர்!

ரஞ்ஜித் சிங்கின் அருமை பெருமைகளை எடுத்துரைத் தனர், பாஞ்சாலத்தில்!

ஷா ஆலம் சக்கரவர்த்திக்கு வெள்ளையர் இழைத்த கொடுமைகளை எடுத்துக் கூறித்தான், டில்லி வட்டாரத்தினரை, இஸ்லாமியரை அழைத்தனர்!

இங்ஙனம், மொழிவழி அமைத்திருந்த அரசுகளின் முன்னால் சிறப்புகளை எடுத்துக் காட்டித்தான், போர்முகாம் அமைத்தனர்!

இது போதாது என்று, காந்தியார், தெளிவுபட, திட்டவட்டமாகத் தெரிவித்தார், சுயராஜ்யம் கிடைத்ததும், "மொழிவழி அரசு' தான் அமைக்கப்படும் என்று.

அன்று முதல் இன்று வரை, "மொழிவழி அரசு' என்ற பிறப்புரிமைக் கிளர்ச்சி இருந்து வருகிறது.

மக்களுடைய கிளர்ச்சிக்கு மதிப்பளிக்கும் மாண்பு இருந்திருக்குமானால், "மொழிவழி அரசு' திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர நேரு சர்க்கார் முனைந்திருக்கமே தவிர, மூக்கில் கொஞ்சம் நாக்கில் கொஞ்சம் அறுத்து எடுத்து ஒட்டு வேலை நடத்தச் சொல்லும் ராஜ்ய புனரமைப்புக் கமிஷனையா நியமித்திருக்கும்!!

மொழிவழி அரசு என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டால், எந்தெந்த இடத்தில் எந்த மொழியாளர் தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து அந்த வகையிலே எல்லைகளை நிர்ணயிக்கும் வேலை நடந்திருக்கும்: ராஜ்ய புனரமைப்பு என்ற "கபட நாடகம்' நடைபெற்றிருக்காது.

பொறுப்பற்ற முறையில், மக்களுடைய உரிமையை உதாசீனம் செய்துவிட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கும் திட்டத்தை நீட்டி, இதைக் கண்டு மக்கள் குமுறினால், சும்மா விடக்கூடாது கூப்பிடு "போலீசை' என்றா கூவுவது' இதற்கா நேரு சர்க்கார்! இந்த நேர்த்தியான முறையிலே ஆட்சி நடத்துகிறார் என்று மகிழ்ந்தா தம்பி, ஊரெல்லாம் உற்சவம் கொண்டாடி னார்கள், உலகெலாம் சுற்றி வரும் அந்த மலைமகனுக்கு!!

அன்புள்ள,

 

23-10-1955.