அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


புலித்தோலும் எலிவாலும்...
1

மறவரும் மகளிரும் -
மொழிவழி அரசும் பெரியாரின் கருத்தும்

தம்பி,

கிள்ளையும் நாகணவாய்ப் புள்ளினமும் அளித்திடும் இசையையும், சிரித்திடும் முல்லை பரப்பிடும் மணத்தினையும், வீசிடும் தென்றல் அளித்திடும் குளிர்ச்சியினையும், பெற்று மகிழ்ந்தவன்; இத்தனையையும் இவற்றினுக்கெல்லாம் மேலானதாக ‘காதல்’ கனிரசத்தினையும் பருகிடும் பருவத்தினன்; சோலையும் சாலையும், வாவியும் வயலும், மாடமும், கூடமும், எங்கும் எழிலாளின் இன்முகம் அன்றோ தெரிகிறது, ‘குறி’ இடம் சென்று அக்குமரியிடம் கொஞ்சுமொழி பெற்று மகிழ்வதற்குத் தடையாகவன்றோ கதிரோன் கண்விழித்தபடி உள்ளான், அவனுக்கு மதி புகட்டிட வளர்மதியே வாராயோ! என்று எண்ணிடும் இயல்பினன்; கொழுகொம்பினைத் தழுவிடும் கொடியினையும், பெடையுடன் பெருமிதத்துடன் உலவும் அன்னத்தினையும் கண்டு காதல் தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்தினனாகி தோழியின் பேருதவியைத்தொழுது பெற்றுத் தோகையாள் வரக்கண்டு விழ கூத்தாட, மொழி குளற, வழி தெரிந்ததோ, வாடாப்பூ மேனியாளே! மனம் இளகிற்றோ இப்போதேனும்! அச்சமும் மடமும் அரிவையர்க்கு அணிகலன் தான், ஆயினும், பிஞ்சுநிலை சென்றுவிட்ட என்னை ஏறெடுத்தும் பாராதிருந்திடலாமோ! என்றெல்லாம்பேசி, ஏந்திழையாளை, அருவிக்கரைக்கழைத்து மருவி மகிழ்ந்திடும் மணாளன், பிறகோர் நாள், என்ன இக்காளை, பெற்றோர் ஈட்டிய பெரும் பொருளைத் தின்றுதீர்த்திடும் போக்கினனாக உள்ளானே, குந்தித் தின்றால் குன்றும் கரையும் எனும் மொழியினையும் இவனயானோ! கடல் கடந்து சென்றேனும் பொருள் ஈட்டி வாழ்வதன்றோ பெருமைக்குரியது என்ற தமிழ் முறையை இவன் ஏனோ அறியாது போயினன் என்று பெரியோர் பேசிடக் கேட்டு, பொருள் ஈட்ட வெளிநாடு செல்லக் கிளம்புவான் - முன்னாளில் தமிழ் இளைஞன். செல்லுமுன்,சேயிழையை அருகழைத்து ஆயிரம் உறுதி மொழிகளை அளித்து, முகம் துடைத்து, முத்தமளித்து, மெல்ல மெல்லச் சேதிதனைச் சொல்லுவான்; சொல்லக் கேட்டதும் அனலிடை மெழுகாவாள்; புனல் பொங்கிடும் கண்களைக் கண்டு கலங்குவான், அவன், ‘‘பொன்னா வேண்டும்?” என்று கேட்பாள் அப்பூவை, அதைப் பெற என்னைப் பிரியவா துணிந்தீர் என்பாள்; உமக்கு அந்தத் துணிவு ஏற்படக் கூடும், ஆடவருக்கே அது இயலும், எனினும் என்னிடம் கூறுகிறீரே, நான் அதைக் கேட்டுக்கொள்ளும் துணிவு உடையவளோ- என்பாள்-இவ்வளவு மங்கையரின் தனி மொழியாம் கண்மூலம்! பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம், மின்னிடும் கண்ணொளியே போதும். பேச்சுக்கும் ஏச்சுக்கும் அஞ்சினேன், பிறிதொன்றில்லை. ஆடிப்பாடிக் காலங் கழிக்கிறான், பொருள் ஈட்டும் வகை அறியான் என்று பேசுவது கேட்டேன் - பிரிய எனக்கு மட்டும் மனம் இடம் தருமா? என்றெல்லாம் கூறி, அவளை அருகே அழைத்துக் கண்ணீர் துடைத்திடுவான். பொருள் பெறப் பிரிதல் - இத்துனை இடர்ப் பாட்டுடன் துவங்கும். எனினும் அதே மங்கை, அத்தமிழ் மகன் பொருள் ஈட்ட அல்ல, புகழ் ஈட்ட, தாய்நாட்டின் மானம் காக்க, உரிமையை அழித்திட எண்ணிடும் உலுத்தரின் கொட்டத்தை அடக்கிக் களம் செல்லக் கிளம்புங்காலை, கண்ணீர் சிந்தியோ, கரம் கூப்பியோ, தடுத்து நிறுத்தியோ, தழதழத்த குரல் காட்டியோ, காதற்கணவனை இல்லத்தில் இருந்திடச் செய்வதில்லை! வாளையும் வேலையும் எடுத்துத் தந்து வாகையுடன் திரும்பி வாரீர் என்று கூறி வழியனுப்பி வைப்பாள்! ஆற்றல் மறவர், அவர் தமக்கு ஏற்ற மகளிர்!!

எல்லையைக் கடந்து பகைவன் வந்ததில்லை - வந்தவன் தோற்றோ டாமல் இருந்ததில்லை.

பிறருடைய கொல்லையில்கூடத் தமிழன், காரணமற்று நுழைந்ததில்லை - எனினும், தாயகத்தில் ஒரு பிடி மண்ணையும் மாற்றான் கவர்ந்திட விட்டதில்லை.

வேண்டிக் கேட்பவனுக்கு இன்னுயிரும் தருவான்; பகை எனிலோ ஏழு கடலையும் கலக்குவான்!

கட்டழகியின் கட்டளைக்குக் கட்டுண்டு, மலர் கொய்து தருவான்; அதே கரங்கள், தாயத்தை இழித்துரையாடுபவனின் தலையினைக் களத்தில் கொய்திடும்.

செம்பஞ்சுக் குழம்பெடுத்து அவள் பாதத்தில் தடவி மகிழ்பவன், மாற்றான் வீசிய வேல், மார்பிலே பாய்ந்திட, அதனை அப்புறப்படுத்தும் போது, கொப்பளித்துக் கிளம்பும் குருதியைக் கண்டு களித்திடுவான் களத்தில்,

வீரமிக்க நாட்களைப்பற்றி விரித்துரைத்திடும் ஏடுகளிலே காணக்கிடக்கும் சொல்லோவியம், பலப் பல.

எந்நாட்டவர் கண்டறியினும், நாமேன் இந்நாட்டவராகப் பிறந்தோமில்லை என்று எண்ணுவர், அத்துணை ஏற்றம் பெற்று வாழ்ந்தனர், கொற்றம் இழக்காத நிலையிலிருந்த தமிழர்!

இன்று? கொற்றமில்லை; அஃது இல்லையே என்ற மனக் குமுறலும் போதுமான அளவு எழக் காணோம். புகழ் ஈட்டச் செல்லுங்காலை, பொற்கொடியும் தடுத்திடாள், பழந் தமிழ் நாட்டில் என்று செப்பும் ஏடுகளே, செல்லரித்துக் கிடக்கின்றன!

எனவேதான், இன்று எவனுக்கும் இந்நாட்டில் எதனையும் செய்து வெற்றிபெற முடியும் என்ற துணிவு பிறந்து விட்டது; பணிவோனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப்படும், எதிர்த் திடுவோனை இருக்குமிடம் தெரியாமல் ஒழித்திடுவேன் என்று - வீரம் பேசுகின்றனர், பிற பிரச்சினைகளிலே பேசிப் பேசிப் பணிந்திடும் பெருந் தலைவர்கள்!!

எல்லை குறைந்துபடும், அதனாலென்ன? எழிலிடங்கள் கவரப்படும், அதனாலுமென்ன! மொழிவழி அரசு அமைத்திட ஒப்பளிக்க மாட்டோம், என்ன செய்து விடுவாய்! உரிமை என்று நா உலரும்வரை கதறிக் கிட, இல்லை, இல்லை, அதனையும் நான் அனுமதிக்கமாட்டேன், என் காதுமல்லவா குடையும், எனவே துக்கம் துளைத்தால் தாங்கிக்கொள். எதிர்த்துப் பேசினாலோ, இருப்பதும் போகும் அறிவாய், அடங்குவாய் - என்று உலகுக் கெல்லாம் சாந்தம் போதிக்கும் நேரு பெருமகனாரே பேசுகிறார்!

கல்லினைக் கசடர் தலையில் ஏற்றியது அந்த நாள்! சுடு சொல்லினைத் தாங்கி, கருகிய உள்ளத்துடன், உழலுவது இந்த நாள்!!

தமிழகமே! தாய் நாடே! இத்துணை தாழ்ச்சியுறவோ நீ ஓர் நாள் அத்துணை ஏற்றத்துடன் பொலிவினைக் காட்டி நின்றாய்!!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எழில் நிரம்பி இருந்தது என்று எல்லா வரலாற்றாசிரியரும் எடுத்தியம்புகின்றனர்! ஏ! ஏ! இதென்ன காட்டுமிராண்டிப் பேச்சு! என் மொழி! என் இனம்! என் நாடு! என் அரசு! என்றெல்லாம் பேசுகிறாயே! என்று ஏசுகிறார் நேரு பெருமகனார்!

இந்த இழி நிலையினைத் தாங்கிக் கொள்ள மறுக்கும் தமிழர் உளர். இந்நிலையினை ஒழித்திட, தளராது உழைத்திடுவோம் என்று ‘சூள்’ உரைத்துக் கிளம்பும் தமிழர் உளர். தமிழர்க்குத் தமிழ்நாடு வேண்டும், தமிழ் நாட்டுக்குச் சொந்தமான இடம் பிற நாட்டுடன் பிணைபட்டு இருந்திடும் கொடுமை களையப்பட வேண்டும், எல்லை குறைதல் கூடாது, எமது இடத்துக்கு உரிய பெயராம் தமிழ்நாடு என்பதே எமக்கு வேண்டும், இவைதமை மறுத்திடும் போக்கில், மாய்த்திடும் கருத்துடன் வடநாட்டு ஆட்சியாளர் வகுத்துள்ள சூதுத் திட்டத்தை, அக்ரம ஏற்பாட்டை, அநீதியான தீர்ப்பை, நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், உரிமையும் நீதியும் கிடைக்கும்வரை போராட நாங்கள் உறுதி கொண்டு விட்டோம், கொடியும் கோட்டையும் வேறு வேறு, போக்கும் நோக்கும் பிற பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், வேறு வேறுதான், எனினும், தமிழ்நாடு அமைய வேண்டும், அது எல்லை குறையாத, ஏற்றம் கெடாத, உரிமை பெற்ற, மொழிவழி அரசாக மலர வேண்டும் என்பதிலே, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டிராததோர் ‘கூட்டணி' காணீர்! - என்று எடுத்துக் காட்டும், ஏற்புடைய நாள், எழுச்சி யூட்டும் நாள், நாடு விழிப்புற்று இருக்கிறது என்று விளக்கிடும் நாள், தாயகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடும் வீரம் கொண்டோர் முதல் முழக்கம் தரும் நாள், பிப்ரவரி 20.

பிப்ரவரி 20 என்ற நாள்பற்றி எண்ணிடும் போதே, தம்பி, பிற எந்த நாட்டாரும் பெற்றிராத எழிலரசினை நாம் ஓர் காலத்தில் பெற்றிருந்தோம் என்பதையும், பல்வேறு நாடுகள், பனி படர்ந்தும், பாலை மிகுந்தும், இடர் குவிந்தும் இயல்பு கெட்டும் இருந்திடுவது போலன்றி, வளமெல்லாம் குறைவறப் பெற்று, வாழ்விலே பெறத்தக்க பேறுகளை அடைவதற்கான அறிவாற்றலைக் கொண்ட மக்கள் மன்றமாக நமது நாடு, பன்னெடுங் காலத்துக்கு முன்பே பொலிவு பரப்பி வந்தது என்பதும் நினைவிலே நிற்க வேண்டும்.

வானிடை மிதந்திடும் தென்றலிலே
மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
தேனிடை யூறிய செம்பவள
இதழ்ச் சேயிழை யாருடன்

காதலின்பம் பெற ஆடிப்பாடி மகிழ்ந்தும், பகல் இரவாகி விட்டதோ என்று கூறத்தக்க வகையில் பெரும் புழுதி கிளம்பிடச் சுழலெனச் சுற்றிப் போரிட்டு வெற்றி காணும் வீரத்தைக் களத்திலே காட்டியும், அடிப்படை உண்மைகளை ஆய்ந்தறிந்து அவனியோருக்கு அளித்திடத்தக்க அறிவினை மன்றங்களில் விளைவித்தும் வந்த நம் தந்தையர் நாட்டிலே, இன்று, ‘அண்டை அயலார்கள்’ ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிழைத்திருக்க வேண்டுமானால், ஆளடிமை ஆகவேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

நீதி கேட்கிறோம் - வீதியில் நிறுத்திவைத்துச் சுட்டுத் தள்ளுவோம் என்கிறார்கள், நம் கொற்றம் பறித்தோர்.

எமது உரிமையும் உடைமையும் பறிக்கப்படலாமா என்று வாதாடுகிறோம்; பேதையே! உயிரைவிட்டு வைத்திருக்கிறோமே, அது போதாதோ என்று கேட்கின்றனர், நம்மைப் பிடித்தாட்டும் பெருந் தலைவர்கள்!!

அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டிலே, நேரு பண்டிதர், நடுவீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு அங்கேயே பதிலளிக்கப்படும் என்று பேசி, கோபமூட்டப்பட்டால், நான் டயரையும் மிஞ்சுபவனாகிவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இத்தனைக்கும், தம்பி, பிப்ரவரி 20-ல், நாம் நாட்டிலே என்ன நடைபெற வேண்டுமென்று கூறுகிறோம்?

பாசறைகளைத் தாக்குக; ஆயுதக் கிடங்குகளைச் சூறையாடுக; அலுவலகங்களில் புகுந்து கலாம் விளைத்திடுக - என்றா கூறுகிறோம்? இல்லை, இல்லை, முக்காலும் இல்லை.

அமைதி! அமைதி! என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறோம்.

பலாத்காரம் அறவே கூடாது என்பதைப் பன்னிப் பன்னிக் கூறுகிறோம்.

பட்டி தொட்டிகளிலும் இந்த அறிவுரை பரவ வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன், நமது பொதுச் செயலாளர், கழகத் தோழர்களை, ஆங்காங்குக் கண்டு பேசி வருகிறார்!!

கடை அடைப்பு - பொது வேலை நிறுத்தம் - காந்தியார் கையாண்ட தூய்மையான முறை - கருத்துக் கெட்டுக்கிடக்கும் ஆட்சியாளர்களுக்கு நல்லறிவு அளிக்கும் அறநெறி-இதுவே பிப்ரவரி 20-ல் நாம் மேற்கொள்ளும் திட்டம்.

ரயில்களைத் தடுத்து நிறுத்துவதா என்று கேட்கின்றனர் நமது கழகத் தோழர்கள் - தம்பி! இது சர்வகட்சிக் கூட்டணி. தி.மு.க. மட்டும் நடத்துவதல்ல. எனவே, பணியாற்றச் செல்லாதீர்கள் என்று பட்டாளிகளை வேண்டிக் கேட்டுக் கொள்வதும், அன்று மட்டும் பயணப்படாதீர்கள் என்று பொது மக்களை வேண்டிக் கொள்வதுந்தான், நாம் கையாள வேண்டிய முறையே தவிர, தண்டவாளத்தில் படுப்பதோ, சங்கிலியைப் பிடித் திழுப்பதோ அல்ல, என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

அனைவர் மனதிலும் அன்று ஓர் தூய்மை மலர வேண்டும். மலரச் செய்யும் அளவுக்கு நம்மிடம் அன்பு முறை எழ வேண்டும் என்றுதான் நாம் அவாக் கொண்டுள்ளோம். ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் நமது நோக்கமே அல்ல.

நாட்டின் நல்லோர் நமது நோக்கத்தை அறிந்து, பாராட்டி, துணைதர முன்வந்துள்ளனர்.

துரைத்தனத்துக்குத் தூபதீப நைவேத்தியம் செய்து ‘பிரசாதம்’ பெற நினைக்கும்போக்கினர், நமது முயற்சியைக் குலைத்திட முயல்கிறார்களாம்! வெண்மேகத்தழகினையும், அது விதவிதமான உருவம் காட்டி உலவுவதையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் ஓவியனைத் தீண்டிடக் கட்டுவிரியன், ஓசைப்படாமல், பசும்புற்றரையில் மறைந்து மறைந்து, வளைந்து வளைந்து வருகிறதல்லவா! மனித இனத்தில் நற்காரியத்தைக் கெடுத்திடும் பேராற்றல் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

இவர்களெல்லாம் கூடி, இப்படி எல்லாம் செய்வதா? அது வெற்றிகரமாக நடப்பதா? அதை நான் கண்டு சகிப்பதா? என்று எண்ணும் ‘நல்ல உள்ளம்’ படைத்தவர்கள் இருக்கிறார்களே! புள்ளிமான் துள்ளி விளையாடக் கண்டு, செச்சே! அடவியில் நானிருக்க, அழகு மான் இப்படியா ஆட்டம் போடுவது என்றுதானே சிறுத்தை பாய்கிறது! தம்பி! நாடு, சர்வ கட்சிக் கூட்டணியின் திட்டத்துக்குப் பேராதரவு தரத் தயாராகி விட்டது கண்டு, நடுக்கம் கொண்டுவிட்டவர்கள் நானாவிதமான, நய வஞ்சகமும் செய்து நமது அறப்போரின் தூய்மையைக் கெடுத்திட எண்ணங்கொண்டு, பல கூறுவர். நண்பர் போல், உசுப்பி விடுவர் உடன் இருந்துகொண்டு - மிகமிக விழிப்பாக இரு! ஆமாம், தம்பி! மிகமிகப் பொறுப்பான செயலில் ஈடுபட இருக்கிறாய் என்பது மட்டுமல்ல, இதிலே கிடைக்கும் வெற்றி வேறு பல நல்ல திட்டங்களுக்கு வித்தாகப் போகிறது!

தம்பி! இன்னுயிரையும் இழக்கச் சித்தமாகி, மாற்றானை விரட்டிடக் களம் சென்ற தமிழ் மரபிலே வந்த உதித்தவர்களை, நாம் பிப்ரவரி 20-ல் செய்யச் சொல்வதெல்லாம், அன்று தெருவெல்லாம் முடங்கி, நடமாட்டம் நின்று, அலுவல்கள் ஒடுங்கி, எங்கும் ஓர் அமைதியான செயலற்ற சூழ்நிலை தெரியச் செய்யுங்கள் - இந்நிலை கண்டால், முன்பு இனிக்க இனிக்கப் பேசினோமே, இப்போது வேண்டி நிற்கும் மக்களிடம் கடுகடுத்த முகம் காட்டலாமா என்பது பற்றியும் எண்ணிப் பாராமல், நெரித்த புருவத்துடன் நின்று, ஏகாதிபத்தியப் பொறி பறக்கும் போக்கில் பேசும் நேரு பண்டிதர் தம் கோலத்தை மாற்றிக் கொண்டாக வேண்டிய ‘காலம்’ வந்து விட்டது என்பதை அறிந்து கொள்வார்; நீதி வழங்கும் நிலைக்கு வந்து சேருவார்!

முப்பதாண்டு காலமாக, கருவில் உருவாகி வந்து இன்று ஓங்கி வளர்ந்துள்ள உரிமை உணர்ச்சி. மொழிவழி அரசு என்பது.

மொழிவழி அரசு அமைக்காமல், ஆணவ வழியில் அரசு அமைத்துக் கொண்டான் ஆங்கிலேயன்; அவனது ஆட்சி அழிக்கப்பட்டானதும் ‘இந்தியா’வில், மொழிவழி அரசு ஏற்படும் என்று ‘மகாத்மா’வே வாக்களித்தார்.

மாநாடு தவறாமல், இதற்கான தீர்மானங்கள், நிறைவேற்றப் பட்டன; நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வளர்ந்தது.

தலைவர்கள் மேடைகளிலே பேசும் போது, இந்த மொழிவழி அரசுத் திட்டத்தை வலியுறுத்தினர், விளக்கினர், அதனால் கிடைக்கக் கூடிய சுவையும் பயனும் பற்றி உணர்ச்சியூட்டினர்!

காங்கிரஸ், தேர்தல்களின் போதெல்லாம் மொழிவழி அரசு ஆதரவு காட்டியே ‘ஓட்டு’ வாங்கிற்று.

இப்போது, ‘நம்பிக்கை மோசடி’ நடத்தத் துணிந்துவிட்டனர்.

முதுபெருங்கிழவர் ஆந்திர நாட்டுத் தலைவர் பிரகாசம் கூறினார், ஆந்திர அரசு அமைந்த நாளில்: ‘‘மொழிவழி அரசு அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற தூய்மையான திட்டம் தந்தவர் தேசப்பிதா மகாத்மாவாகும். அவர் ஆணைப்படி, ‘இந்தியா’ மொழிவழி பிரிந்து, 21 அமைப்புகள் கொண்ட நிலையில்தான் காங்கிரசின் அலுவலே நடைபெற்று வந்தது.”

வங்க மாகாணக் காங்கிரஸ் கமிட்டி, மராட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி என்ற முறையிலேயே, காங்கிரஸ் கமிட்டிகள் பெரிதும் மொழிவழி அமைந்து பணியாற்றி வந்துள்ள பேருண்மையைப் பிரகாசம் சுட்டிக் காட்டினார்.

மகாத்மாதான் மறைந்துவிட்டாரே, இனி அவர்தம் மணிவாசகந்தனைக் கல்லில் செதுக்கிவிடுவோம், நம் நெஞ்சினின்றும் அவர் தந்த நல்லறிவைக் கல்லி எடுத்து எறிந்திடுவோம் என்று துணிந்து விட்டனர், அவர் பெயர் கூறி ஆளவந்தார்களாகிவிட்ட மகானுபாவர்கள்.

‘மொழிவழி அரசு’ இருந்தால் மட்டுமே, உண்மை ‘தேசியம்’ உறுதியான ஜனநாயகம் மலரும் என்று அறிவாளர் பலர் கூறினர்; ஆமாம் என்றனர் நேரு உள்ளிட்ட தலைவர்கள்.

ஆள்பவருக்கும் ஆளப்படுவோருக்கும் ஓர் தொடர்பும் தோழமையும் ஏற்பட்டால்தான், குடி அரசுக் கோட்பாடு தழைத்திடும். எனவே, அந்த அரசிலே உள்ள மக்களின் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்; அம்முறைப்படி, ஆந்திரருக்கு அமையும் ஆட்சி மன்றத்தில் தெலுங்கு மொழிக்கும் ஏற்றம் இருந்திடல் வேண்டும்; எனவே மொழிவழி அரசு வேண்டும் என்றனர், தேசியம் அறியாதவர்களல்ல, அது நின்று நிலைத்து, கனிந்து சுவைதர யாது செயல் வேண்டும் என்பதனை அறிந்த அரசியல் நிபுணர்கள்.

‘ஆந்திர நாடு’ அமைக்கப்படுவதற்கான திட்டம், டில்லி மக்கள் மன்றத்தில் அலசப்பட்ட போது, கட்ஜு கூறினார்: ‘‘புதிய ஆந்திர மாகாணம், இனி அமைய இருக்கும் மொழிவழி அரசு அமைப்புகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. மக்கள் ஆட்சி மன்றங்கள் பல மொழி பேசும் இடங்களாக இருக்குமாயின், அங்கு, ஜனநாயகம் எப்படிச் சரியாகப் பணியாற்ற முடியும் என்பதை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை'' என்று மேதைப் பேச்சளித்து, மொழிவழி அரசு அமைவதுதான், ஜனநாயகத்துக்கு வெற்றி தரும் என்றார்.

கட்ஜு, நேருவின் நேசத்தைப் பெற்று, தேசத் தலைவர்களிலே ஒருவராக விளங்கிடும், காங்கிரஸ் பிரமுகர். கண்டிப்பானவர்; அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட மறுப்பவர்: அவர், மொழிவழி அரசு மூலமே ஜனநாயகம் உயிரூட்டம் பெறும் என்று 1953 செப்டம்பர் 8-ஆம் நாள் டில்லியில் பேசினார்; நேரு பெருமகனார் இதை மறுத்தாரில்லை இன்றோ - அதே டில்லியில் பலமொழி ராஜ்யமே சாலச் சிறப்புடையது என்று கூறப்படுகிறது- காரணமும் காட்டப் படுவதில்லை.

மத்ய பாரதத்தைச் சேர்ந்த தேஷ்முக் எனும் காங்கிரஸ் தலைவர், அதுகாலை, பலமொழி ராஜ்யங்கள்தான் இந்தியாவின் ஒற்றுமையை வளர்த்திடும் என்று கருதுவது தவறு - என்று இடித்துரைத்தார்.

தியோகிரிகார் எனும் பம்பாய் காங்கிரஸ் தலைவர், நீண்ட காலமாகத் தூய்மையானது, தேவையானது என்று காங்கிரஸ் கட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிவழி ராஜ்ய அமைப்புத் தத்துவத்தை, இன்று கசக்கிறது என்று காங்கிரஸ் மூலவர்கள் ஏன் கூறுகிறார்களோ தெரியவில்லையே சரியில்லையே அவர்தம் போக்கு என்று கூறினார்.

இந்தியாவில், நாம் ஏன் மாகாணங்களைப் பிரித்து அமைக்கிறோம், அறிவீரா? என்று கேட்டுவிட்டு, கட்ஜு பதிலளிக்கிறார். இந்தியாவின் ஒற்றுமையைத் தக்கவிதத்தில் பாதுகாக்கவும், ஜனநாயகம் திறமையுடன் பலனளிக்கவும், சிறு அரசு அமைப்புகளே தேவை. அரசு, சிறிய அளிவினதாக இருந்தால்தான், ஆட்சி மன்றங்களிலே மக்களின் குரலுக்கு மதிப்பு இருக்கும், ஆட்சி நடைபெறும் விதம் பற்றி மக்கள், அறிந்து கொள்ள முடியும், ஆட்சியின் போக்கை மக்கள் கண்காணிக்க இயலும். எனவேதான் சிறிய அளவினதாக ராஜ்யங்கள் இருத்தல் வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம் - என்று அறிவளித்தார். இன்றோ, அதே டில்லியில், "என்ன அறிவீனம்! என்ன அறிவீனம்! மொழிவழி அரசு என்பது காட்டு மிராண்டித் திட்டம், சிறிய அரசுநாட்டு ஒற்றுமையைச் சீர்குலைக்கும்'' என்று பேசுகிறார் பண்டிதர் - காரணம் காட்டாமலேயே கண்டிக்கிறார்.

இந்தியா எங்கணும், மொழி வழி ராஜ்யங்கள் அமைந்திட வேண்டும் என்று நேரு பண்டிதருக்கு எடுத்துரைக்க ஓர் தனி மாநாடே கூட்டினர் 1953 செப்டம்பர் 26-இல். அதிலே நேரு பண்டிதரால் அலட்சியப்படுத்திவிட முடியாதவகையில் நாட்டுப் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். பட்டாபி சீதாராமையா, மொழிவழி ராஜ்யம் அமைவது, இந்தியாவைப் பிளவுபடுத்துவதாகும் என்று எண்ணுவது பெரும் பிழை, தவறான வாதம் - என்று கருத்துரை வழங்கினார். அவர் இன்று கவர்னர்! நேரு பெருமகனாராலேயே இந்த ஏற்றம் அளிக்கப்பட்டது. இன்றோ பட்டாபி எதை அறிவீனம் என்று கூறிக்கண்டித்தாரோ, அது டில்லியில் பேரறிவு என்று கொண்டாடப்படுகிறது.

மனு, வேண்டுகோள், மாநாட்டுத் தீர்மானம், உண்ணா விரதம், பொட்டி சீராமுலுவின் உயிர்த் தியாகம், இத்தனைக்கும் அசைந்து கொடுக்காத இந்த ஆட்சி, ஆந்திரம் பெற்றே தீருவதென்று, மக்கள் வீறுகொண்டெழுந்து வீதிகளில் வந்த பிறகு தான், வழிக்கு வந்தது; ஆந்திர நாடு தந்தது! இம்முறைதான் ஏற்றது, என்று ஆட்சியாளர்கள், மொழிவழி அரசு கோரும் மற்றவருக்கும் கூறுகின்றனரா? என்றே கேட்டு விட்டார் ஒருவர், மக்கள் மன்றத்தில், அன்று. இன்று நடுவீதியில் மக்கள் கூடினால் சுட்டுத் தள்ளப்படுவர் என்று மிரட்டுகிறார், ஜாலியன் வாலா படுகொலையைக் கண்டித்த, மனிதருள் மாணிக்கமான, மாபெரும் தலைவர் - ஜவஹர் பண்டிதர்!

மொழிவழி அரசு கூடாது என்று இன்று, பண்டிதர் பேசுவதைப் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தமது எண்ணத்தை வெளியிட அவர்கட்கு உரிமை அளிக்கப்படவில்லை - மீறுவோர் மீது கட்டுப்பாடு எனும் கட்டாரி வீசப்படுகிறது - எனவே பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிட வேண்டி ஏற்பட்டு விட்டது.

உள்ளத் தூய்மைகொண்டவர்கள், ஒருவரிருவர், இன்றும் முழக்கமிடுகின்றனர் - வீரமும் உரிமை வேட்கையும் அறவே அற்றுப் போய்விடவில்லை.

காட்கில் அமிர்தசரசிலேயே பேசுகிறார்.

அந்த அவையில், பல தலைவர்களின் வாழ்வை ஆக்கவும் அழிக்கவும் வல்லமைபெற்ற பண்டிதர் இருக்கிறார் என்பதை அறிந்தும், அவர் ஆதரவு சேக் அப்துல்லாக்களை ஷேரேகாஷ் மீர் ஆக்கும், அவர் வெறுப்பு, அதே அப்துல்லாவைக் கைதியாக்கி, விசாரணையுமின்றிச் சிறைக்குள் இருக்கச் செய்திடும் - என்பதை அறிந்தும், அஞ்சாது கூறுகிறார், பல மொழி ராஜ்யம் பற்றிய தத்துவார்த்தம் பேசுங்கள், கேட்டு ரசிக்கிறேன், ஆனால் அதை நடைமுறைத் திட்டமாக்கி, என் நாட்டை என் நாட்டவர்க்கு அளிக்காது இருப்பீரேல், மராட்டிய மண்டலம் அமைத்து, பம்பாயை மராட்டியருக்கு அளித்திடாது போவீரேல், பெரியீர்! பேராற்றல் கொண்டோரே! நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் - கட்சி பெரிது, என் நாடல்ல, மக்களல்ல, என்று கூறிக் கிடந்திட மாட்டேன், அறப்போர் தொடுத்து, உரிமையைப்பெறவே உறுதி கொள்வேன் என்று பேசுகிறார்.

மொகலாய ஆதிக்கத்தின் முன்பு நாம் எங்ஙனம் தலை காட்ட முடியும், என்று கோழைகள் குப்புறக் கவிழ்ந்தகாலை, குன்றேறிக் கொடி நாட்டிய மாவீரன் சிவாஜியின் மரபு பட்டுப் போகவில்லை. காட்கில், மரபு காத்திடுகிறார்.

1953, அக்கேடாபர் 1-இல் ஆந்திர அரசு அமைந்தது; மொழிவழி அரசு அது.

பொட்டியின் உயிரைக் குடித்தான பிறகு, பெட்டிப் பாம்பானார் பண்டிதர். கொட்டு முழக்கத்துடன் கர்னூல் வந்தார், ஆந்திரருக்கு அரசு அமைத்துத் தந்தார்.

தந்தகாலை, வாழ்த்தியோரும் வரவேற்றோரும் கூறினர், இதோ ஓர் புது அரசு-மொழிவழி அமைகிறது; இது எந்த வகையில் வளர்ச்சி பெறுகிறது; இதனால் தேசியம் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து, பிற ராஜ்யங்களை அடுத்தடுத்து அமைப்போம் என்று கூறினர்.

இன்று, என்ன இழிவும் பழியும் வந்துற்றது?