அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


புதுப் பா!
1

திராவிடர் உரிமை -
தனி அரசு -
தமிழ் நாடு பிரச்சினை.

தம்பி!

"ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருத்தல் இலாபமா? என்று யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலை யில்லையோ அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை.''

அதுசரி, அண்ணா! நாடு விடுதலைப் பெறவேண்டும் என்பதனை அழுத்தந்திருத்தமாகக் கூறவேண்டியதுதான் மரமண்டைகளுக்கும் புரியும்படி; ஆனால் விலகியோர் கூறுகிறபடி, எதற்காக அண்ணா! பால் உணர்ச்சி உள்ள பேச்சுப் பேசுகிறாய்? - என்றுதானே, தம்பி! கேட்கிறாய். இது, என் பேச்சு அல்ல! விலகியோரில் ஒருவரின் பேச்சு! சட்டசபை உறுப்பினர்! அமைதியாகப் பேசுபவர். அவருக்கே மனம் குமுறி, புதுவை மாநாட்டிலே, பேசினார் இதுபோல!

எடுத்துக்காட்டுகள், உவமைகள், கவிதைகள், கதைகள் ஆகியவைகளைக்கொண்டு, தேவையான அரசியல், சமுதாயக் கருத்துக்களை, எளிய முறையிலே அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யும் முறை - என் கண்டுபிடிப்பு அல்ல! நீண்ட பழம்காலந் தொட்டு, அறிவாளர் மெத்த அருமையாகக் கையாண்ட வழி - அதே முறைப்படித்தான், நம்மைவிட்டு விலகிய சட்டசபை உறுப்பினர் எம். பி. சுப்ரமணியம் அவர்கள், கழக மாநாட்டிலே, நாட்டு விடுதலையின் அடிப்படைத் தன்மையை விளக்க, இந்த உவமை காட்டிப் பேசினார் - புதுவையில். வழக்கறிஞர் பேச்சு வெறும் பேச்சாக அல்ல, வழக்கை விளக்க வாதம் தேவை அல்லவா - அம்முறையில்,

"நாடு புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்பட்டால், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே போதிய பணம் திராவிடத்திற்கு ஒதுக்கப்பட்டால், திராவிட நாடு கேட்க மாட்டீர்களா?'' என்பார்கள்.

"ஒரு நாடு விடுதலைபெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்திர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படக்கூடிய இலாப நட்டக் கணக்கல்ல - நாம் பார்க்கவேண்டியது. எல்லா வசதிகளையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் சிறைக் கைதியாக இருப்பாயா? என்று ஒருவனைக் கேட்டால், கூலிக்காரனாக இருந்தாலும் சுதந்திர மனிதனாகவே இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும்.''

என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம் போதும்போலிருக்கிறதே! மேலும் இதிலே பால் உணர்ச்சி இல்லை. இதுபோல் பேசினால் போதுமே! என்று, தம்பி! உனக்குத் தோன்றுகிறது. ஆனால், அவருக்கு அப்படித் தோன்றவில்லை; ஆகவே அவர் தமது வாதத்தைத் தொடர்ந்து பேசுகிறார்.

"அதைப்போலத்தான் ஒரு நாடு அடிமையாக இருப்பதால் இலாபமா? சுதந்திர நாடாக இருப்பதால் இலாபமா என்பதல்ல நாம் கவனிக்கவேண்டியது - ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா? என்று யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ, அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை.''

நம்மோடு இருந்தாலாவது இத்தகைய விளக்க உரைகளை நாம் அடிக்கடி கேட்கலாம் - ஆனால் இல்லை - என்ன செய்வது - எப்படி எப்படிப் பேசினார் - பேசக்கூடியவர் என்பதை எண்ணி மகிழ, அவருடைய உரையிலே சில பகுதிகளைத் தந்திருக்கிறேன்.

"இருண்ட கண்டம்' என்று சொல்லப்படும் ஆப்பிரிக்கா விலும், ஆசியாவிலும் இதுவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியங் களின் காலனிகளாக வைக்கப்பட்டிருந்த நாடுகள், இழைக்கப் பட்ட கொடுமைகளை வாய்திறந்து ஏனென்று கேட்காமல், அடிமைகளாய் வாழ்ந்த மக்கள், "மனிதர்களாய்ப் பிறந்தோம்; அடிமைகளாய் வாழ்ந்தோம்; கொடுமைகளைச் சுமந்தோம்; இனியும் சகியோம்; வாழ்ந்தால் விடுதலைபெற்ற மக்களாய் வாழ்வோம் அல்லது விடுதலைப் போரிலே மாள்வோம்; இனி, வீணில் காலம் கடத்தமாட்டோம்' என்று ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் விடுதலைப் போரிலே தங்களைத் தியாகம் செய்யும் நிலையினைப் பார்க்கிறோம்.

கொடுக்கவேண்டிய பலிகளைக் கொடுத்து, செய்ய வேண்டிய தியாகங்களைச் செய்து, விடுதலை பெற்ற மொராக்கோ, டுனீμயா, கானா, சைப்ரஸ் நாடுகளைக் காண்கிறோம். வெற்றியின் அருகிலே உயிரைப் பணயம் வைத்துப் போராடும் அல்ஜீரியா, நியூசிலாந்து நாடுகளையும் காண்கிறோம்.

இங்கே - "திராவிடம் விடுதலை அடையவேண்டும்' என்று நாம் சொல்லுகிறோம். இந்தியா ஒன்று என்பது என்று இருந்ததில்லை? இந்திய உபகண்டத்தின்மீது படையெடுத்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால், எவரும் திராவிடத்தில் நுழைந்த தில்லை. பேரரசர்கள் என்று புகழ் பெற்றோர் இந்திய உபகண்டத்தில் ஏராளம்; ஆனால், எவரும் திராவிடத்தைத் தன்னாட்சியின்கீழ் கொண்டு ஆண்டதில்லை.

"இந்தியா ஒன்று' என்று சந்திரகுப்தன் காலத்தில் இல்லை! சமுத்திரகுப்தன் காலத்தில் இல்லை! அசோகன் காலத்தில் இல்லை! ஹர்ஷன் காலத்தில் இல்லை! கனிஷ்கன் காலத்தில் இல்லை! அக்பர் காலத்தில் இல்லை! ஔரங்கசீப் காலத்தில் இல்லை! ஆனால், அலகாபாத் பண்டிதர் காலத்தில் மட்டும் எப்படி இந்தியா ஒன்றாகும்?

அந்நியன் - வெள்ளையனும், பிரெஞ்சுக்காரனும் ஆண்ட காலத்தில், தன் நிர்வாக வசதிக்காகத் துப்பாக்கி முனையில், சர்க்கஸ் கம்பெனியில் ஆட்டையும் சிங்கத்தையும் ஒருசேர வைப்பதுபோல் - இந்தியாவை "ஏக இந்தியா'வாக வைத்திருந்தான். அதனாலேயே, நாம், எப்படி வடவரோடு ஒன்றாக முடியும்?

மொழியால், கலையால், பண்பாட்டால், வரலாற்றால், பழக்க வழக்கங்களால், பூகோள ரீதியாகத் திராவிடர் வேறு - வடவர் வேறு. அப்படியிருக்க, நாம் அனைவரும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்த மதத்தைத் தழுவியவர்கள் இந்தியா முழுமையும் உள்ளவர்கள்; ஆகவே இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும் - என்றால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள் எல்லோரையும் ஓர் அரசின்கீழ் கொண்டுவர இயலுமா? கிருத்துவ மதத்தைத் தழுவியிருக்கின்ற காரணத்தினாலேயே அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்சும், ஜெர்மனியும், ஓர் ஆட்சியின்கீழ் இருப்பது சாத்தியமாகுமா? அதைப்போலத்தான், திராவிடமும் இந்தியாவோடு ஒன்றாக இருக்க இயலாது. இரண்டு கைதிகளை, வசதிக்காகப் போலீசுக்காரன் ஒரு கைதியின் வலதுகையுடன் மற்றவனின் இடதுகையைச் சேர்த்து விலங்கிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் பூட்டி வைப்பதாக வைத்துக்கொள்வோம். விடுதலை அடைந்ததும், அந்தக் கைதிகள் வீடு திரும்புகையில், அவரவர்கள் வீட்டுக்கு அவரவர்கள் போவார்கள். இதுவரை ஒன்றாகவே சிறையில் வைக்கப்பட்டிருந்தோம்; ஆதலால் இனியும் ஒன்றாகவே வெளியிலும் வாழ்க்கை நடத்துவோம்; அப்படித்தான் இருக்க வேண்டும் - என்பது எப்படி நீதியல்லவோ, அதைப்போலத்தான் வெள்ளைக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாம் வெள்ளையர்கள் வெளியேறியவுடன் தனித்தனியே வாழ்வது - அரசோச்சுவதுதான் நீதி என்கிறோம். நாம் நமது உரிமையைக் கேட்டால், "பகைமை பாராட்டு கிறோம்' என்கிறார்கள். "என் வீட்டுக்குக் காம்பவுண்டு சுவர் போடுகிறேன்' என்றால், "பக்கத்து வீட்டுக்காரன் திருடனா?' என்கிறார்கள் - இது எப்படி நியாயமாகும்? இந்திய அரசியல் சட்டம் என்பது, திராவிடர்களை வடவர்கள் அடிமைப்படுத்த ஏற்பட்ட அடிமை சாசனம் ஆகும். வெள்ளைக்காரன் வெளியேறி எத்தனை ஆண்டுகளாகி விட்டன? பிரெஞ்சுக்காரன் வெளியேறி எத்தனை ஆண்டு களாகி விட்டன? என்ன மாறுதல்களை வாழ்க்கையில் கண்டோம்? ★ வாழ்வு இங்கு மலர்ந்ததா என்றால், இல்லை! போதிய உணவு இந்த அரசால் இதுவரை நமக்கு அளிக்கப்படவில்லை! மக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் வசதியாகக் கிடைக்கவில்லை! ஆயிரக்கணக்கான நகரங்களிலும், கிராமங்களிலும் பாதுகாக்கப் பட்ட குடிதண்ணீர் இல்லை! இன்று மக்கள் குடிதண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலையினைக் கண்கூடாகக் காண்கிறோம்! இலட்சக்கணக்கானவர்களுக்குக் குடியிருக்க வீடில்லை! மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் எனப்படுபவை, உணவு - இருப்பிடம் - தண்ணீர்! இவைகள்கூட உத்தரவாதம் செய்யப்படவில்லை இந்த அரசால்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. வறுமை ஒழிந்தபாடில்லை! கல்வி எல்லோருக்கும் அளித்தபாடில்லை! இந்நிலை ஏன்? அரசு நல்ல அரசு இல்லை; திறமையான அரசு இல்லை என்ற காரணத்தால் மட்டுமல்ல - நம்மவர் அரசாகவும் இல்லை என்பதுதான் மேலே சொன்ன நலிவுகளுக்கு எல்லாம் காரணம் என்று நாம் சொல்கிறோம். பக்ரா - நங்கலைக் காட்டுகிறார்கள்; இராகுட் அணைத் திட்டத்தைக் காட்டுகிறார்கள்; தாமோதர் திட்டம், சிந்திரித் திட்டம் என்கிறார்கள்; பிலாய் என்கிறார்கள்! ரூர்கேலா என்கிறார்கள்; அத்தனையும் எங்கே - வடநாட்டில்! இங்கே - சொந்த நாட்டான் பிறந்த நாட்டில் வாழ்வதற்கு வழிவகை இல்லாமல், கூலிகளாய் சிலோனுக்கும், பர்மாவிற்கும், சிங்கப்பூருக்கும், மலேயாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றவன், அங்கிருந்து தற்போது துரத்தி அடிக்கப்படுகிறான். "நாடற்றவன்' என்று உதைத்துத் தள்ளப்படுகிறான். ஏனென்று கேட்க நாதியில்லை - வாவென்று சொல்ல நமக்கு உரிமை இல்லை - வந்தாலும், இன்று வசதி அளிக்கும் அதிகாரம் டில்லியில்! ஏன் இந்த நிலை? திராவிடம் புறக்கணிக்கப்படுவதைப் புள்ளி விவரத்தோடு நாள்தோறும் நாம் எடுத்துக் கூறிவருகிறோம். ஒப்ப மறுக்கும் ஆட்சியாளர்கள். மற்றக் கட்சிக்காரர்கள் எல்லாம் சிலபல சந்தர்ப்பங்களில் நாம் சொல்லியவற்றைச் சொல்லி மத்திய அரசினைக் கெஞ்சிக் கேட்கிறார்கள். நிதியமைச்சர் சுப்பிரமணியம் ஆனாலும் சரி - மைசூர் முன்னாள் முதலமைச்சர் அனுமந்தையாவானாலும் சரி - இப்போதைய ஜெட்டியானாலும் சரி - ஆந்திரத்தின் சஞ்சீவியானாலும் சரி - நாம் சொல்லியவற்றைச் சிலபல சந்தர்ப்பங்களில் ஒப்புக் கொள்கிறார்கள். மாற்றார், உடலில் உள்ள நோயை உணருகிறார்கள். ஆனால், நாம் சொல்லும் பரிகாரத்தை உணர மறுக்கிறார்கள் - ஒப்ப மறுக்கிறார்கள். ஒரு நாடு விடுதலை பெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்திர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படக்கூடிய இலாபநட்டக் கணக்கல்ல - நாம் பார்க்கவேண்டியது; "எல்லா வசதிகளையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும சிறைக் கைதியாக இருப்பாயா?'. . . என்று ஒருவனைக் கேட்டால். கூலிக்காரனாய் இருந்தாலும் சுதந்திர மனிதனாகவே இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும். அதைப்போலத்தான், ஒரு நாடும் அடிமையாக இருப்பதால் இலாபமா? சுதந்திர நாடாக இருப்பதால் இலாபமா - என்பதல்ல நாம் கவனிக்கவேண்டியது. ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா? - என்று யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை. நாடு புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் - மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே போதிய பணம் திராவிடத்திற்கு ஒதுக்கப்பட்டால், திராவிட நாடு கேட்க மாட்டீர்களா? - என்பார்கள். ஆகவேதான், திராவிடம் தனிநாடாக - விடுதலை பெற்ற நாடாக ஆகவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஒரு சிலர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள் - "உலகத்திலுள்ள நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ நினைக்கும் இந்த நேரத்தில், நாடு பிரியவேண்டும் என்கிறீர்களே; உலகப் போக்கினை உணர வில்லையே' - என்று. இன்று உலகத்திலுள்ள சின்னஞ்சிறு நாடுகளும் விடுதலைபெற்ற நாடாகத் தனிநாடாகவே திகழ விரும்புகின்றனவே தவிர, அண்டை நாட்டோடு ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஒரு நாடும் மற்றொரு நாடும் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும், ஐக்கியநாட்டு அமைப்புப்போன்றவைகள் எல்லாம் தாங்கள் பெற்ற சுதந்திரத்திப் பாதுகாத்துக்கொள்ளவும், சிறிய நாடுகளாயினும் பெரிய வல்லரசுகளோடு சரிநிகர் சமானமாக வாழ்வதற்குச் செய்துகொள்ளும் ஏற்பாடுகளே தவிர வேறில்லை. ஆதலால், திராவிடம் பிரியவேண்டும் என்பது குறுகிய மனப்பான்மையுமல்ல - உலகப் போக்கிற்கு மாறுபாடானதுமல்ல. திராவிடம் தனித்து வாழுமா - என்கிறார்கள்; இந்தியா தனித்து வாழ்கிறதா, உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா தனித்து வாழ்கிறதா என்றால் - இல்லை; இயலாது. அதைப்போலவேதான், பிரிந்த திராவிடம் தன் நலனுக்கு ஏற்ற வகையில் நேச நாடுகளோடு வியாபார ஒப்பந்தங்களோ, மற்றப் பல ஒப்பந்தங்களோ செய்துகொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவேதான், திராவிடம் பிரிந்தாகவேண்டும் என்று கூறுகிறோம். சின்னஞ்சிறு நாடுகள் - மொராக்கோ, டுனீμயா, சைப்ரஸ், கானா போன்ற நாடுகளின் விடுதலை வரலாறுகள், விடுதலைக்காகத் தியாகத் தழும்புகளை ஏற்றுத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்த இலட்சக்கணக்கான மக்கள் - விடுதலைப் போராட்டம் நடத்துகின்ற அல்ஜீரியா, நியூசிலாந்து, திராவிடம் போன்ற நாடுகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஊட்டு கின்றன. இந்தப் பணியை - தாய்த்திருநாட்டினை மீட்கும் பணியை ஏற்க இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது. இதன் வரலாறு குறுகியகால வரலாறு என்றாலும், பெருமைமிக்க வரலாறு. வாய் குளிர, கேட்போர் காது குளிர, பெருமைமிக்க வரலாறு! - என்று பேசக் கேட்டோம். ஒருமுறை அவரை எண்ணி நன்றி கூறிக்கொள், தம்பி! இனி அந்தப் "பெருமைமிக்க வரலாறு' எப்படி ஏற்பட்டது என்பதை எண்ணிப்பார். இன்றுள்ள எதிர்ப்பு, புதிதுமல்ல எதிர்ப்புமல்ல என்பது விளங்கும். வசவாளர்கள் இழிமொழி வீசினர்; பழி சுமத்தினர்; ஏளனம் செய்தனர்; எதனையும் நாம் பொருட்படுத்தவில்லை. அதனால்தான், குறுகியகால வரலாறு என்றாலும், பெருமைமிக்க வரலாறு என்று நற்சான்று அளித்தார் நண்பர் - அன்று. அந்தப் "பெருமைமிக்க வரலாறு' படைத்த பொறுப்பாளர் களான, நமது தோழர்கள் முன் வைக்கப்படும் பிரச்சினை யாயினும் சரி! சிக்கலென்பனவாயினும் சரி, எல்லாமே, "பழைய சரக்கு' - புதிய கண்டுபிடிப்புகள் ஏதுமில்லை. நைந்துபோனவை! வந்துவந்து போனவை! பலமுறை பாய்ந்துவந்து, சுருண்டு கீழே விழுந்தவை! - இப்படித்தான் உள்ளன இன்று கிளப்பப்படும் ஏசல், தூற்றல், எரிச்சல் யாவும். தூற்றல்களைப் பொறுத்தவரையிலே, அண்ணா! தரம் கெட்ட பலரும் முன்பு தூற்றிக்கொண்டுதான் உலவினர்; இது ஒன்றும் புதிது அல்ல; இவர்கள் பாபம், முன்பு "நாமாவளி' பாடியவர்கள்; அதற்காகவேனும் இவர்கள்மீது நமக்கு அனுதாபம் ஏற்படவேண்டும்! ஆனால், இப்போது தமிழ் நாடா? திராவிட நாடா? என்றல்லவா, பிரச்சினை புதிய வடிவமெடுத்திருக்கிறது - என்று கேட்கிறாய். தம்பி! இது பிரச்சினையுமல்ல, வடிவமுமில்லை, புதிதுமல்ல!! ஏன் பிரச்சினை அல்ல, என்கிறேன் என்றால், விடுதலைக்குப் போரிடுவோர், விடுதலையை மறுப்போர் என்ற இரு பிரிவினருக்குள்தான், பிரச்சினை எழ முடியும் - விடுதலைக்குப் போரிடுவோருக்குள்ளாகவே பிரச்சினை எழ முடியாது - போராட்ட முறைகளில், அளவில், வகையில் கருத்து வேறுபாடுகள் எழலாம் - பிரச்சினையாகா அவை. வடிவம் அல்ல என்று கூறுகிறேன் - தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறிக்கொண்டே, அது இந்தியப் பேரரசில் இணைந்து நிற்கும், பிரிந்து செல்லும் உரிமைபெற்று என்று பேசப்படுவதால்! புதிது அல்ல என்று கூறிடக் காரணம், தமிழ் நாடா? திராவிட நாடா? என்று திருச்சித் தோழர் கி. ஆ. பெ. விசுவநாதம் விவாதம் நடத்தியது, பல ஆண்டுகளுக்கு முன்பேயாதலால். எனவேதான், இது பிரச்சினையுமல்ல, வடிவமுமில்லை, புதிதுமல்ல என்றேன். ஆனால், இது, விலகியோர் இதனைக் கிளப்புவதைப் பொறுத்தவரையில்தான். தன்னாட்சி ஆர்வம் குன்றாமல், விடுதலை வேட்கையை மறவாமல், தமிழ் நாடுதான் சாலச் சிறந்தது. திராவிட நாடு அல்ல என்று பேசுவோரும் உளர். அவர்கள் கூறுவது புதிது அல்ல - எனினும் வடிவம் தெரிகிறது, ஏனெனில் வடவர்பிடி அறவே கூடாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒரு பிரச்சினையாக்குவது, மாற்றாருக்குத்தான் மகிழ்ச்சி அளிக்கும், என்பதற்காகச் சில கூற விரும்புகிறேன். அதற்கு முன்னர், அவர்கள் அறிந்துகொள்ள, வேறொன்றும் கூறவேண்டும் - தமிழ்நாடு தமிழருக்கே என்பது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல - நமக்கு அது நுழைவுவாயில்! ஆம்! நமது துவக்கக் கூட்டம்!! தனி அரசாகத் திகழவேண்டியது, தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற பிரச்சினையை, ஒன்றின்மீது மற்றதை ஏவிவிட்டு, மோதவிட்டு, அந்த தாக்குதலால், இரண்டுமே வதைபட்டு வலிவு குன்றிப்போகும் நிலையை உண்டாக்கவேண்டும் என்று எண்ணிப் பயன்படுத்தும் வன்கணாளர்கள் இருக்கிறார்கள். தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற பேச்சை, இரண்டுக்கும் இடையே பகையை மூட்டிவிடப் பயன்படுத்து வோருக்கு, உள்ள நோக்கம். தனி அரசு என்னும் திட்டத்தைத் தகர்க்கவேண்டும் என்பதாகும். தமிழ் நாடா? திராவிட நாடா? என்று பிரச்சினைக்கு வடிவம் கொடுத்து, எதற்கு எது விரோதம் என்று மோப்பம் பிடித்து, மோதுதலை உண்டாக்க நினைப்போர் நிறைய இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. திராவிட நாடு கேட்பவர்கள் தமிழ் நாட்டுக்குத் துரோகிகள் என்றோ, தமிழ் நாடு கேட்பவர்கள் திராவிட நாட்டுக்குப் பகைவர்கள் என்றோ பேசும்படி தூண்டிவிடுவது அடிப்படைப் பிரச்சினையை மாய்க்கமுனையும் மாபெருங் குற்றமாகும்; மாற்றாருக்கு, தெரிந்தோ தெரியாமலோ, கைக் கூலிகளாகிவிடும் கயமைப்போக்கை ஏற்படுத்திவிடும். அடிப்படைப் பிரச்சினை, தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற அளவு, முறை, வகை என்பதுதானா? அல்ல. அடிப்படைப் பிரச்சினை இந்தியப் பேரரசு என்ற ஒன்றின் கீழ் அடிமையாக இருக்கத்தான்வேண்டுமா? அல்லது விடுபட்டுத் தனி அரசு ஆகவேண்டுமா என்பதுதான். தமிழ் நாடா? திராவிட நாடா என்று பிரச்சினையைப் பேசத் தொடங்கி, இந்த அடிப்படையை, விடுதலையை தன்னாட்சியை, தனி அரசை, மறப்பதோ, இழப்பதோ, மாபெருந் துரோகச் செயலாகும்.