அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சந்தனம் அரைத்த கரம்
2

சவுதி அரேபியாவோடு நின்று விடுவதா, நேரு பவனி.

நேரு பவனி ஒரு நீண்ட தொடர்கதை...

அமெரிக்கா அழைக்கிறது, ஆஸ்திரேலியாவில் அலுவல் இருக்கிறது, எங்குதான் செல்லக்கூடாது! செல்கிறார்!!

இதற்காகச் செலவாகும் தொகையை எமக்குச் செல விட்டால்கூடப் போதுமே, புளித்த கூழுக்கு ஒரு துண்டு கார மிளகாயாவது கிடைக்குமே! என்று கேட்பர் இந்தப் பஞ்சைகள்.

பஞ்சைகள் எப்போதும் எந்த நாட்டிலும் இப்படித்தான் கேட்பது வாடிக்கை; பவனிவரும் ஆட்சியாளர் குறுநகை புரிந்தபடி, "குறைமதியினரே! வீணாக ஏதேதோ கூறிக் கிடக்கின்றீரே! பவனியால் எமக்கா இன்பம்? நாட்டின் மதிப்பன்றோ உயருகிறது'' என்று பேசுவதும் வழக்கம்!

பொறுமையின் எல்லைக்குப் பஞ்சைகள் சென்று முகட்டின் மீது நிற்பர். மேலால் செல்ல வழி இருக்காது. பிறகுதான் திரும்பிப்பார்த்திடுவர். தம்பி! அப்படித் திரும்பிப் பார்த்திடும்போதுதான், "பஞ்சடைந்த கண்களிலே கனல் கக்கும் புழுவும் போரிடும்' என்ற நிலை பிறக்கும்.

அது, இப்போது, உடனடியாக நடைபெறக் கூடியதா, என்ன? எனவே, வீண் பீதிக்கு இடமளிக்காமல், நேரு பெருமகனார். சந்தனக் காப்பு உற்சவத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தம்பி! எப்படிப்பட்ட எழில் மிக்க நாட்டிலே இருக்கிறாய் தெரியுமா என்று, எந்த ஏழையைக் கேட்டாலும், அவன் ஒரு விளக்கமற்ற பார்வையால் நம்மைத் திகைக்கவைப்பான்.

இமயப் பனிமலையின் எழிலும் கங்கை புரண்டோடும் கவர்ச்சியும், காதல் மாளிகையாம் தாஜ்மஹாலின் தகத்த காயமும், குதுப்மினாரின் கெம்பீரமும் அஜந்தா சித்திரமும், விஜயநகர சாம்ராஜ்யச் சேதக்குவியலும், மாமல்லபுரத்துச் சிற்பங்களும், குமரிமுனைக் கோலமும் அவன் எங்கே கண்டான்? எங்ஙனம் காண்பான்? இதோ வருகிறார்கள். இந்த எழில் கண்டு மகிழவும், இவை தம் ஏற்றத்தை எடுத்துரைக்கும் பிரமுகர்களுடன் அளவளாவவும், இந்த நாட்டுக் கலை கல்லிலே வடித்துக்காட்டப்பட்டது மட்டுமல்ல, காவலர்களே! கல்லிலே நீவிர்கண்ட குமரியை, அஜந்தா சித்திரத்திலே உங்களை வசீகரித்துக்கொண்ட அந்த வளைவு, குழைவு, நெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு குழைவு தெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடச்செய்யும் வகையில் எடுத்துக் காட்டும், மாலாக்களையும் பாலாக்களையும் குமரிகளையும் தேவிகளையும் காணீர். அவர்கள் கரத்தால் கமலம் காட்டுவர், கண்ணால் கடலைக் காட்டுவர், வெறும் ஆடலல்ல அன்பரீர்! கேவலம் இச்சையைக் கிளறும் அங்க அசைவுகளல்ல! இவை ஆன்ம சுத்திக்காகவே எமது ஆன்றோர் அளித்துச் சென்ற "கலோபாசனை' - கலைமூலம் கடவுளைப் பூஜிப்பதாகும்! - என்று கூறுவர்.

இந்த உபசாரம், உலா, பெறுவதற்கு இப்போது தூர இருக்கும் தலைவர்களின் பட்டியல், தற்காலிகமானது, தருகிறேன், பார் கந்தப்பன் கரத்திலே சுளுக்கு இருந்தால் என்ன, சந்தனக்காப்பு சம்பிரமமாக நடைபெறுகிறதே அந்தச் சம்பவம் நினைவிற்கு வரும்.

எதியோபிய சக்கிரவர்த்தி
இந்தோனேசியத் தலைவர் டாக்டர் சுகர்ணோ
போலந்து முதலமைச்சர்
தாய்லந்து முதலமைச்சர்
சிரியா நாட்டுத் தலைவர்
இலங்கை முதலமைச்சர்
நேபாள நாட்டு முதலமைச்சர்

இவர்களெல்லாம் "விஜயம்' செய்ய இருக்கிறார்கள்!

விருந்து, வேட்டை, கேளிக்கை, கண்காட்சி, இடை யிடையே சர்வதேச நிலைமை பற்றியும் பேசுவர்!

ஒவ்வொருவருக்கும், குடியரசுத் தலைவர் விருந்தளிப்பார். குடியரசுத் தலைவருக்கு அவர்கள் ஒவ்வொருவரும் விருந் தளிப்பர்! முதலமைச்சர் ஒவ்வொருவருக்கும் விருந்தளிப்பார், ஒவ்வொருவரும் முதலமைச்சருக்கு விருந்தளிப்பர்; எல்லா விருந்துகளிலும் நளினிகளின் நடனம் உண்டு! எல்லாம் கந்தப்பன் அரைத்தெடுத்த கலவைச் சந்தனம் தம்பி, அவன் கைக்கு எருக்கம்பாலடித்து, களிமண் பூச்சுத் தடவிவிடப்பட்டிருக்கிறது!

ஒரே அடியாக உன் அண்ணன், எரிந்து விழுகிறான், நாங்களெல்லாங்கூட வருத்தப்படக்கூடிய விதமாகப் பெரும் பொருள் இப்படிப்பட்ட விருந்து, உபசாரம், உலா, உற்சவம், ஆகியவற்றுக்குச் செலவாகி விரயமாகிறது. ஆனால் எல்லாப் பணமும் இதற்கே பாழாகிவிடுவது போல எடுத்துக் கூறுவது, சரியல்ல; வாழ்வும் வளமும் தரத்தக்க எத்துணையோ நல்ல திட்டங்களுக்குப் பணம் செலவிடப்படுகிறது, என்று தம்பி! காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும்.

அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது என்பதையும், அந்தப் பொல்லாத மனிதர், கவர்னர் குமாரசாமிராஜா சென்ற கிழமை எடுத்துக் காட்டிவிட்டார்.

பிரம்மாண்டமான பணவிரயம் - வீண்செலவு! - என்று குமாரசாமிராஜா கூறுகிறார்.

பத்துக்கோடி ரூபாய் செலவில் இங்கு கட்டப்படுகிறது, பவானிசாகர்! மிகப் பிரமாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும் தாமோதர் திட்டத்தை நான் பார்த்தேன் - அங்கு பிரம்மாண்டமான பண விரயம் நடந்துகொண்டிருக்கிறது' - என்று, சென்ற கிழமை கோவையில் கூறினார்.

அஞ்சா நெஞ்சும், நேர்மைத் திறனும் கொண்டிருந்தா லொழிய, இவ்வளவு வெளிப்படையாக, இந்திய சர்க்காரின் திறமைக் குறைவை, ஊதாரித்தனத்தை, கண்டித்திருக்க முடியாது.

இந்திய சர்க்காரின் நிர்வாகத்தைக் கண்டிப்பது என்றால் நேருவைக் கண்டிப்பது என்று பொருள்! நேருவுக்கோ யாராவது ஒரு சிறுசொல் கூறிவிட்டாலும் கண் சிவந்துவிடும். நேரு புருவத்தை நெரித்தால், எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும் எதிர்காலம் இருண்டுவிடும்!

இவை தெரிந்தும், உள்ள நிலையை எடுத்துக் கூறத்தான் வேண்டும் என்ற வீரத்தைக் காட்டிய, குமாரசாமிராஜாவைப் பாராட்டாதவர்கள், பண்பற்றோரே!

கவர்னர் பதவி என்பது காந்திகோயிலில் பஜனை செய்வதற்கும் கலா பவனத்தில் காட்சி காண்பதற்கும் மட்டுமே உள்ள "பொழுதுபோக்கு' என்று கருதாமல், நாட்டவருக்கு உண்மையை நடுக்கமின்றி எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கவர்னருக்கு உண்டு என்ற தூய நோக்குடன், குமாரசாமிராஜா பேசினார்.

எங்கள் பக்கம் அணை கட்டுவதற்கு, செலவு சற்று அதிகம்தான் பிடிக்கும் - உங்கள் பகுதியில் கிடைப்பதுபோன்ற கற்கள் இங்கு கிடைப்பதில்லை, எனவே இங்கு சிறிது பணம் அதிகமாகச் செலவாகிறது என்று, திட்ட அலுவலக அதிகாரி சமாதானம் கூறுகிறார். குமாரசாமிராஜா அவர்கள் பல உண்மைகளைத் தமது "இரத்னச் சுருக்கமான' பேச்சிலே வெளியிட்டிருக்கிறார்; முப்பது ஆண்டுகள் இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி இதமாக எடுத்துச்சொன்னாலும், இதுபோன்ற அஞ்சா நெஞ்சுடன் நம்ம காமராஜர் பெரிய இடத்தின் போக்கைக் கண்டித்துப் பேசும் அஞ்சாமையைப் பெறுவாரா என்பதும் சந்தேகமே!

1. இங்கு செலவாவதைவிட வடக்கே, பணம் அதிகம் செலவாகிறது.

2. செலவு செய்யப்படும் முறை, வீண் விரயத்துக்கு இடமளிக்கிறது.

3. அனாவசியமாக அதிகமான அளவு மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை, திட்டம் அமுல் செய்யப்படுவதுபற்றி, நேரில் கண்டறிந்தவர், பொறுப்பான பதவியில் அமர்ந்திருப்பவர், கூறுவன.

வடக்கு என்பதற்காகவே, ஏதாவது வம்பும் தும்பும் பேசும் வட்டாரமல்ல.

தேர்தல் ஆசை பிடித்துக்கொண்டதால், பேசும் பேர்வழியுமல்ல!!

பணம் விரயம் ஆவதை மட்டுமல்ல, அவர் சுட்டிக்காட்டி இருப்பது.

தாமோதர் திட்டத்தில் தேவையைவிட அதிகத் தொகை செலவிடப்படுகிறது என்பது மட்டுந்தான் ராஜாவின் மனக்குறை என்றால், உயரிடத்தில் அமர்ந்துள்ள அவர், இதனை நேருவிடம் ஜாடை மாடையாகக் கூறினாலே போதும், ஆனால் "ராஜா' - கோவைப் பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்களும்' துரைத்தனத்தாரும் கூடியிருந்த மன்றத்தில் எடுத்துப்பேசி இருக்கிறார்.

திட்டங்களைச் சிக்கனமாகச் செலவிட்டு முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகப் பேசினதாக யாராவது கருதிக் கொண்டு, தமது பேச்சின் சூட்சமத்தை அறியாது போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தினால் உந்தப்பட்ட நிலையில், ராஜா மேலும் சில உண்மைகளை எடுத்துக் காட்டினார்.

1. வடக்கே, பேசுவது சர்வோதயம் பற்றி! ஆனால் நடைமுறை என்ன என்றால், பிரம்மாண்டமான நவீன அமெரிக்க யந்திரங்களை வரவழைப்பது!!

இந்தக் "கேலி'க்கு ஈடாகச் சமீப காலத்தில், எந்தத் தலைவரும் வட நாட்டுப் போக்கைக் கண்டித்ததில்லை என்று கூறலாம்.

கட்டுவது காவி
தொட்டு இழுக்கிறான் பாவி!

என்று காரிகை கதறக் கேட்டால் எப்படி இருக்கும்? அது போல, பேசுவது சர்வோதயம், வரவழைப்பதோ அமெரிக்க நவீன யந்திரம் - என்று குட்டுகிறார் ராஜா!!

சர்வோதயம் - ஒரு இலட்சியம், உத்தமரொருவர் ஊருக்கும் உலகுக்கும் காட்டும் பாதை! இதற்கு உதட்டுபசாரம் அளித்துவிட்டு, தமது தேவைக்கு, வசதிக்கு, அமெரிக்காவி லிருந்து நவீன யந்திரங்களை வரவழைத்துப் பயன் பெறு கிறார்கள் வடக்கே!

சர்வோதயம் பேசப்படுகிறது - செயலோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது.

இந்தக் கபடத்தைக் காட்டமட்டும் ராஜா இதைக் கூறினதாக நான் எண்ணவில்லை, தம்பி, இதற்கு உள்ளே மிகப் பெரிய உண்மை உறங்கிக்கொண்டிருக்கக் காண்கிறேன்.

ஓ! என் நாட்டவரே! உரத்த குரலில், சர்வோதயம் பற்றிய உபதேசம் நடக்கிறது; வடக்கே இருக்கும் தலைவர்களெல்லாம், அந்த இலட்சியத்தை வாழ்த்திப் பேசுவது கேட்டு, மயங்கிவிடாதீர்கள்! சர்வோதயம் பேசும் அந்த வடக்கத்தித் தலைவர்கள், இனிக்க இனிக்க, நெஞ்சு நெக்குருகப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்களுக்கு சர்வோதயத்திலே நம்பிக்கை கிடையாது; சர்வோதயம் பேசிக்கொண்டு அவர்கள் அங்கே சர்க்கரை ஆலை வேண்டாம் கருப்பட்டி போதும், நூலாலை வேண்டாம் சர்க்கா போதும், காகித ஆலை வேண்டாம் பனை ஓலை போதும், மோட்டார் தொழில் வேண்டாம், கட்டை வண்டி போதும், டிராக்டர் வேண்டாம் ஏர் எருது போதும். என்றெல்லாம் இருந்துவிடுகிறார்கள் போலும் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நாமும் இங்கு சர்வோதயம் காண்போம் என்று மனதார நம்பி வளர்ச்சியைக் குலைத்துக்கொள்ளாதீர்கள்; வடக்கே உள்ளவர்கள் பேச்சிலே தான் சர்வோதயம்; ஆனால் நடைமுறையிலோ, நவீன அமெரிக்க யந்திரங்களைத்தான் வரவழைக்கிறார்கள்.

அவர்களுடைய இந்தக் கபடத்தை நான் கண்ணால் கண்டேன் - ஏமாறாதீர், என் நாட்டவரே! அவர்களின் சொல் வேறு, செயல் வேறு! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்!

குமாரசாமிராஜாவின் பேச்சிலே இவ்வளவும், எண்ணிப் பார்க்கப் பார்க்க, இதனினும் அதிகமாகவும், பொருள் பொதிந்திருக்கக் காண்கிறேன்.

சர்வோதயம் பேசுகிறீர்களே! இப்படி நவீன யந்திர மோகம் கொண்டு அலைகிறீர்களே! - என்று ராஜா, வடக்கே இடித்துக் கூறவில்லை, தம்பி, இங்கு நமக்கு எச்சரிக்கை செய்கிறார், சர்வோதயம் பேசும் வடநாட்டார் தங்கள் தொழிலில் பழைமையின் சாயலைக்கூட வைத்துக்கொண் டில்லை, எல்லாம் அமெரிக்க யந்திர மயமாக இருக்கிறது; உண்மையை அறியாமல், அவர்கள் உதட்டசைவு கேட்டு, மயங்கிவிடாதீர்கள்; சர்வோதயம், பேச்சு; செயல், நவீனம், நவயுகம் அமெரிக்க முறை! என்று எடுத்துக் கூறுகிறார்.

தம்பி! பலமுறை பார்த்து, மிகவும் மனம் புழுங்கி நீண்ட காலம் மறைத்துப் பார்த்து, கடைசியில் இனியும் நாமறிந்த இந்த உண்மையை நமது மக்களுக்கு எடுத்துக் கூறாமலிருப்பது, மக்களுக்கு நாம் மனதறிந்து செய்யும் துரோகமாகும் என்று உணர்ந்து, என்னை நேரிட்டாலும் கவலை இல்லை, நேருவுக்கு கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, பேசின பேச்சு என்றே நான் இதனைக் கொள்கிறேன்.

தம்பி! வடக்கு வளருகிறது தெற்கு தேய்கிறது என்று நாம், கூறும்போது, அலங்காரப் பேச்சு அடுக்குமொழி என்று கேலி பேசினரே, அவர்கள், ராஜா அம்பலப்படுத்தியிருக்கும் உண்மையைக் கண்ட பிறகேனும், சிந்திப்பார்களா என்று கேட்டுப்பார்.

அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ, குமாரசாமி ராஜா அவர்கள் நிரம்பச் சிந்தித்திருக்கிறார் என்பதும், செயல்படக்கூட விரும்புகிறார் என்பதும் விளங்கும் வகையில், மேலும் சில உண்மைகளை அவர் கூறுகிறார்.

1. மத்திய சர்க்கார் அனாவசியமாக மாகாண சர்க்காரின் அலுவலில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது.

மத்திய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது, மாகாண சர்க்காருக்கு முழு உரிமை கிடையாது என்று நாம் பேசும்போது, முகம் சுளித்துக் கொள்கிறார்களே காங்கிரசார், அவர்கள் இந்தக் "குற்றச்சாட்டு' ஒரு கவர்னர் மூலம் பதிவு செய்யப்படுவது கண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து நிற்பார்கள் என்று எண்ணுகிறேன். எவ்வளவு திறமையாக, அப்பழுக்கற்ற முறையில் மாகாண சர்க்கார் ஒரு திட்டம் தயாரித்தாலும், தங்கள் அதிகாரமும் அமுலும் இருக்கவேண்டும் என்பதற்காகவென்றே, மத்திய சர்க்கார், அதிலே அங்கொரு மாற்றமும் இங்கொரு மாற்றமும் செய்து, திட்டத்தைத் திருத்துகிறது என்று கூறுகிறார், ஒரிசாவில் கவர்னராக வேலை பார்க்கும் ராஜா.

கூறினதுடன் அவர் அமைதி கொள்ளவில்லை; மத்திய சர்க்கார் இனியும் இந்தப் போக்கிலே இருக்கக் கூடாது என்று புத்திமதி கூறலாமா என்றுகூட அவர் எண்ணிக் கொள்ளவில்லை.

புத்திமதி கூறும் கட்டம்போய் விட்டது; பிறர் கூறும் அறிவுரையைக் கேட்கும் நிலையிலும் மத்திய சார்க்கார் இல்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. எனவே குமாரசாமிராஜா, போர்க்கொடி உயர்த்துவது போலவே பேசுகிறார்.

2. மேலிடத்தவரின் குறுக்கீடுகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காலம் விரைந்து வருகிறது.

என்று கூறியிருக்கிறார்.

தம்பி! பொறுமை உணர்ச்சியும் பொதுப் பிரச்சினை களிலே அக்கரையும் கொண்ட காங்கிரஸ் நண்பர் யாராவது உனக்குத் தெரிந்திருந்தால், அவரை, குமாரசாமிராஜாவின் பேச்சிலே பொதிந்து கிடக்கும் உண்மைகளைப்பற்றி விளக்கும்படி கேள்; கேட்டுக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தால் நீ விளக்கிக் காட்டு.

வடக்குவேறு
தெற்குவேறு
வடக்கு வஞ்சனையுடன் நடந்துவருகிறது.
வடக்கே, பணம் விரயமாகிறது.

தெற்கு ராஜ்ய அலுவலில் வடக்கு, அனாவசியமாகக் குறுக்கிடுகிறது.

வடக்கு குறுக்கிடும் போக்கை, தெற்கு எதிர்த்துப் போரிடவேண்டும்.

அந்தக் காலம் விரைவில் வருகிறது.

இவ்வளவும், சுரங்கத்துள் தூங்கும் தங்கம் போலவோ, கடலுக்குள் உறங்கும் முத்து போலவோ கூட அல்ல, தோலுக்குள் இருக்கும் சுளை போலவோ, நெல்லுக்குள் இருக்கும் அரிசி போலவோ, இருக்கிறதா இல்லையா என்று கேட்டுப்பார்.

குமாரசாமிராஜா இந்த அளவு எடுத்துக் கூறியது எனக்கென்னமோ, கை சுளுக்குடன் கஷ்டப்படும் கந்தப்பனுக்கு வலி போக்கிக் கொள்ளக் கிடைக்கும் பச்சிலைத் தைலம் போலத் தோன்றுகிறது. இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழக்கூடத் தோன்றுகிறது.

கவர்னர் பதவியிலிருந்து விலகியதும், இது குறித்து, மேலும் பல உண்மைகளை, விஷயங்களை நான் கூறுகிறேன் - என்று குமாரசாமிராஜா கூறுகிறார்.

இதற்குள், தூதும், சமரசப் பேச்சும், ஆகாது கூடாது, அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், இவர்கள் ஏளனம் செய்வார்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறும் பாசவலையும் வீசப்பட்டிருக்கும்.

அத்தனைக்கும் தம்பி வந்து, ஆற்றலுடன், குமாரசாமி ராஜா அவர்கள், வடக்கு கொண்டுள்ள கோலத்தையும் போக்கினையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, வடக்கு செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்து, ஏன் என்று கேட்கும் வீரத் தலைவராக வெளிவர வேண்டும்.

முடிகிறதோ இல்லையோ, இப்போதைக்கு இந்த அளவுக்கேனும் அஞ்சா நெஞ்சுடன் உண்மையை எடுத்துரைத்த நேர்மையைப் பாராட்டத்தானே வேண்டும். செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அறைத்திடும் கந்தப்பனுக்கு, கை சுளுக்குப் போக, எருக்கம் பாலும் களிமண் பூச்சும் மட்டுமல்ல, பச்சிலைத் தைலமும் சிறிதளவு கிடைக்கிறதென்றால், கொஞ்சம் நிம்மதிதானே!

அந்தவிதமான மகிழ்ச்சி நமக்கு, ராஜாவின் பேச்சு கேட்டதில், வாழ்க அவர்தம் வாய்மைப் பற்று, வாழ்க அவர்தம் அஞ்சாமை என்று நீயும் நானும் வாழ்த்துவோம், தம்பி! வேறு என்ன இருக்கிறது நம்மிடம், அவருக்கு அளித்திட.

அன்பன்,

9-9-1956