அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சுகஸ்தான் வாசி...
1

தொழில் துறையில் வடக்கும் தெற்கும் -
ரோச்விக்டோர் யாவும் T.V.S.-ம்

தம்பி!

அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிடமெல்லாம்!!

தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?'' என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்!

இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை.

வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது.

தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள்.

சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன.

தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டு மானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும்.

இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள் ஒப்புகின்றனர்.

சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடு களிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று.

நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர்.

குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.

இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது.

துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!!

தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!!

அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது. இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!'' என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும்.

தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள், வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன.

சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது.

கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6 இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது.

கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர்.

தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்வே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர்.

குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப் பட்டாகிவிட்டன.

தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது.

தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங் கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது.

தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர் களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்:

வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர்.

ஆனால், தம்பி! 1953 இல் மைசூர் மகாராஜாவால் துவக்கப் பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்!

துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது! - என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடை பெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது.

கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள் களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன் நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர்.

முதல் தவணை - அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர்.

தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெற வில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத் திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக் காட்டியும் வருகின்றனர்.

இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்!

இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு - அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு - மைசூர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு கரடி'யை அவிழ்த்துவிட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு 5 டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே - இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும் - இந்த நிலையில். புதிய தொழிற் சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள் - விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது.

எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக் கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது.

தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக் காட்டித்தான், 1953 இல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது - இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க.

இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கில்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது.

மகள் ஆறு மாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பி விட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!!

துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்"சேதி' தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை.

வெடி குண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள், இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க, புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர்.

இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை.

தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன?

தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, "கட்டை' போடுவதும் வேறு வேறா!!

எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை!

இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் "வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி.

1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர்.

1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர்.

1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை.

1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்?

நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா?

1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது.

தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்!