அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தம்பி, தயார்! தயார்!
1

மொழிவழி அரசு -
தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை -
இந்திய யூனியனில் ஆங்கில மொழி -
பிப்ரவரி 20 போராட்டம்

தம்பி,

சிறைக் கதவுகள் தூளாயின! போலீஸ் ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன! இரயில்வேக்கள் தடம் புரண்டன! வட்ட மிடும் விமானம் வந்திறங்க முடியவில்லை, பாடவந்த பாகவதர்கள் வீடு திரும்பியோடினர், ஆலைச் சங்கு ஊத வில்லை, மாலைக் காட்சிகள் கொட்டகையில் இல்லை, பள்ளிக்கூடம் இல்லை பணிமனைகள் வேலை செய்யவில்லை, போக்கு வரத்து செயலற்று நின்றது - நாடு போர்க்கோலம் பூண்டு விட்டது.

‘‘எத்தனை எத்தனை இலட்சம்! அவர்கட்குத்தான் என்னிடம் எத்தகைய பக்தி! எவரும் கண்டு சொக்கிடும் வகையிலல்லவா வரவேற்புகள் அளிக்கிறார்கள்! மலர் மாரி பொழிகிறார்கள்! இதயத்தைக் காணிக்கையாக்கித் தருகிறார்கள். நான் செல்லும் பாதையில் மலர் தூவி, என் முன் சிரம் தாழ்த்தி நிற்கிறார்கள். என் சுட்டு விரல் காட்டும் வழியில் சென்று செயல் புரியக் காத்துக் கிடக்கிறார்கள் கோடிக்கணக்கான மக்கள். வெள்ளிப் பனி படர்ந்து, வண்ணப் பூக்களும் வகை வகையான பழங்களும் குலுங்கிடும் பூஞ்சோலைகளும், படகு வீடுகள் மிதந்திடும் பாங்கான ஏரிகளும் கொண்ட எழில்மிகு காஷ்மீரி லிருந்து, கடல்கள் ஒன்றை ஒன்று முத்தமிட்டுத் தழுவிக் கொள்வது கண்டோ என்னவோ முறுவலித்து நிற்கும் குமரிமுனை வரையிலும், அவர்கள், பஞ்சாபிகள், சிந்திகள், மார்வாடிகள், குஜராத்திகள், வங்கத்தார், கலிங்கத்தார், மராட்டியர், ஆந்திரர், ஓரியர், தமிழர், கேரளத்தார், கன்னடத்தார், இந்து, முஸ்லீம், பார்சி, கிறிஸ்தவர் எனும் எவராக இருப்பினும், அவரெல்லாம் என்னைக் காணுந்தோறும் காணுந்தோறும், ‘எமை ஆளும் தலைவா வருக! எமக்கு வாழ்வளித்த மாவீரனே வாழ்க! உலகில் உயரிடம் பெற்றவனே வருக! ஆசிய ஜோதியே வருக! அகிலம் புகழும் ஆற்றலரசே வாழ்க!’ என்றெல்லாம் வாழ்த்தி வரவேற்கிறார்கள். என்னே அவர்தம் அன்பு! எவரிடத்தும் இது நாள் வரை காட்டாத பேரன்பை என்பால் இம்மக்கள் காட்டுகின்றனர்! உலகப் பெருந் தலைவர்கட்கெல்லாம், இந்தக் காட்சியைக் கண்டால், சிறிதளவு பொறாமையாகக்கூட இருக்கும்!-” என்றெல்லாம் எண்ணி, எந்தப் பண்டித நேரு புளகாங்கிதமடைகிறாரோ, அதே பண்டிதர்தான் ஆட்சி செய்கிறார். அவர்தம் கொற்றம் கவிழவில்லை, எனினும் கோல் சாய்ந்தது என்று அறிந்த மக்கள், எத்துணைப் பேராதரவு அளித்துப் பெருந்தலைவராக்கினோம், காட்டிய வழியெல்லாம் சென்றோம், களத்தில் நின்று கடும் போரிட்டோம், கேட்ட காணிக்கை எல்லாம் கொடுத்தோம், அவரைக் கண்டதும் அகமும் முகமும் மலர நின்றோம், ஆயிரம் புகழுரைகளால் அர்ச்சித்தோம், நீதியின் பிறப்பிடமே! நேர்மையின் இருப்பிடமே! உரிமையின் உயர்வை உணர்ந்த உத்தமனே! மக்கள் மனப்போக்கை மதித்திடும் மாவீரனே! என்றெல்லாம் சிந்து பாடினோம்; வந்தனை வழிபாடு செய்து, நொந்த வாழ்வினைச் செம்மைப்படுத்தி அருளும்படி தேவனைத் தொழுதிடும் பக்தர் போல இவர் முன் நின்றோம்; அவர் பவனி வருகிறார் நமது பட்டினத்துக்கு என்றால், அந்நாளைத் திருநாளாக்கினோம், ஊரெல்லாம் எழிலாக்கி, உளமெலாம் மகிழ்வு மயமாக்கி, மணிக்கொடியைப் பறக்கவிட்டு, மகரதோரணங்கள் கட்டி, பாதைகளைச் செப்பனிட்டு, இல்லங்களில் புத்தொளிகாட்டி, வரவேற்று மகிழ்ந்தோம். நம்மிடம் இத்துணை அன்பினைப் பெற்றவர், நம்மிடம் இவ்வளவு ஆதரவு பெற்றவர், ஐயகோ! இவ்வளவு கன்நெஞ்சராகவா மாறிவிட வேண்டும்? யாரிடம் நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்த்து, ஏத்தி ஏத்தித் தொழுது வந்தோமோ, அவரே அல்லவா, அநீதிக்குப் பரிந்து பேசுகிறார், அக்ரமத்துக்கு உடந்தையாகிறார்! எவரிடம் நல்வழி காட்டிடும் இன்மொழி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோமோ, அவரிடமிருந்தல்லவா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சும், ஏறெடுத்தும் பாரேன் என்ற போக்கும், என் ஆணையை அறியீரா என்ற ஆர்ப்பரிப்பும், என்னை எதிர்ப்போர் என்ன கதி அடைவர் தெரியுமா என்ற மிரட்டலும் பீறிட்டுக் கிளம்புகிறது. பண்டிதரே! பண்டிதரே! பாமரருக்குப் பாதுகாவலர் என்ற பட்டப் பெயர் பெற்றது போதும், இனி ‘இம்’மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்று தண்டனை கொடுக்கும் கொடுங்கோலராகி மகிழலாம் என்று துணிந்து விட்டீரோ! ஏனோ இக் கெடுமதி? எதற்கோ இக்கடும் சித்தம்? இதற்கோ நீர் எமக்கெல்லாம் இத்துணைக் காலம் நம்பிக்கை ஊட்டி வந்தீர். அழகாக ஆடிடும் பாம்பு, "படம்' கண்டு பரவசமடைந்திருப்போன் சிறிதளவு ஏமாந்ததும், அவனைத் தன் நச்சுப் பல்லால் தீண்டிக் கொல்வது போலல்லவா நிலைமை ஆகிவிட்டது! இறுமாந்து கிடந்தோம். எமது பண்டிதருக்கு இணை ஏது என்று கேட்டு மகிழ்ந்தோம்! அவர் அறியாத பொருளில்லை, அவர் புகழ் பரவாத நாடில்லை, அவர் சொல் கேளாத தலைவனில்லை, அவர் உறவு நாடாத நாடில்லை! கர்ஜனை புரியும் கம்யூனிஸ்ட் நாட்டுத் தலைவர்கள், அவர் முன் காதல் கானம் பாடி நிற்கிறார்கள்! தங்கத் தாளம் கொட்டிப் பிறரை ஆடச் செய்யும் அமெரிக்காவும், தங்கத்தையும் கொட்டிக் கொடுத்துவிட்டுத் தயவுக்கும் காத்துக்கிடக்கிறது! கண்ட துண்டோ இவர் போல்!! என்றெல்லாம் கேட்டோம். மார்பை நிமிர்த்தி நின்று கேட்டோம்!

பேதைகளே! என்னை முழுவதும் கண்டுவிட்டீர்களோ! வீர சுதந்திரம் வேண்டி நின்ற கோலம், காந்தியாரின் பாதம் பணிந்த கோலம், வெஞ்சிறையில் வாடிக்கிடந்த கோலம், சமதர்மம் பேசி மகிழ்வித்த கோலம், அரியனை அமர்ந்த கோலம், அவனி எங்கணும் பவனி வந்த கோலம், இவைகளைத்தானே கண்டீர்! இவைகளைக் கண்டு விட்டால் போதுமோ? கருத்தற்றவர்களே! கோலமெல்லாம் கண்டு விட்டதாக உமது எண்ணமோ? இதோ காணீர் ஓர் கோலம்! கண் அலட்சியத்தை உமிழ, கரம் துப்பாக்கி தூக்கி நிற்போரை ஏவிடும் குறி காட்ட நின்று "என்'' என்று கேட்போரை என் பாதையில் குறுக்கிடுவோரை, ஏன் அறிவைச் சந்தேகிப்பவர்களைச் சுட்டுத் தள்ளிடும் ‘சம்ஹாரக் கோலம்’ காட்டுகிறேன். காணீர் இதுவும் கண்டால் தான் என்னைக் கண்டறிந்து கொண்டதாக முடியும் என்று கூறுபவர் போலல்லவா, கொடுங்கோலர்கள் எந்த மொழி பேசுவரோ, எந்த வழி காட்டுவரோ, எந்த முறை கொள்வரோ, அது போன்று நடக்கத் தலைப்பட்டுள்ளார்! இத்தனைக்கும் நாம் அவர்க்கு இழைத்த தீங்கு ஏதேனும் உண்டோ! மணிமுடியைத் தட்டிப் பறித்திடத் திட்டமிட்டோமா, அவருடைய அரண்மனை வாழ்வுக்குக் குந்தகம் விளைவித்தோமா, அடிதொழ மறந்தோமா, அன்பு பொழிவதை நிறுத்திக்கொண்டோமா! இல்லையே! விளக்குக்கு எண்ணெய் கேட்டோம், விழிக்குப் பார்வை இருத்தல் வேண்டுமென்று’ சொன்னோம், உரிமை கேட்டோம் - உப்பரிகை வாழ்வுகூடக் கேட்டோமில்லை! வாக்களித்ததைக் கேட்டோம், பல காலமாகக் கூறிவந்த ஆசை வார்த்தையை நிறைவேற்றித் தரும்படி கேட்டோம், இழந்ததைக் கேட்டோம், பிறர் எவர்க்கும் இடரோ இழிவோ தராத தன்மான உரிமை கேட்டோம். தாயகம் கேட்டோம்! தாயகம் கேட்டோம், பேயகம் ஆக்கி விடுகிறேன் நாட்டை என்றா இப்பெருந் தலைவர் கிளம்பிட வேண்டும்! பிறப்புரிமை கேட்டோம், அதற்கோ நம்மை வேட்டையாடி வாட்டி வதைக்கக் கிளம்பி விட்டார் இந்த வல்லவர்! தாயகம் கேட்பது தவறா? கேளாதிருப்போன் மனிதன்தானா? கேட்டோர் பெறாது போயினர் என்று வரலாற்றுச் சுவடி காட்டுகிறதோ? தாயகம் தரப்படும், சுற்றிலுமுள்ள கள்ளி காளானும், சூழ்ந்து கொண்டுள்ள வெள்ளை ஆட்சி எனும் முட்புதரும் அழிக்கப்பட்டான பிறகு, நிச்சயம் தாயகம் தரப்படும்! மலைமேல் செல்வது மூலிகை எடுக்க, கடலில் குளிப்பது முத்து எடுக்க, காடு செல்வது சந்தனம் பெற, பூமியைக் குடைவது பொன் எடுக்க என்பது போல, வெள்ளையரை எதிர்த்துப் போராடிச் சுயாட்சி பெறுவதே, தாயகம் அவரவர்க்குக் கிடைக்கச் செய்வதற்கேதான் என்று சொன்ன சொல் கொஞ்சமா, கொடுத்த வாக்குறுதி வெறும் வார்த்தைக் கோவைதானா, தீர்மானங்கள் எழுதப்பட்ட தாட்கள், குப்பைதானா?- இவைதமை மறந்து, மமதை மிகுந்து, தாயகமா வேண்டும் தாயகம்! இதோ அங்குச் செல்லும் வழி என்று இறுமாப்புடன் கூறி, துப்பாக்கியை அல்லவா பேச வைக்கிறார்! கேட்டது தாயகம், அவர் கொடுப்பதோ கல்லறை! இஃதோ இவர், நம்மிடமிருந்து பெற்றதத்தனைக்கும் நன்றி காட்டும் செயல்! என்று கேட்டனர், கொதித்தெழுந்தனர் - ஓடும் இரயில் நின்றது, பாடும் இடம் பீதி கொண்டது, பள்ளிகளில் மாணவருமில்லை, ஆசிரியருமில்லை, வகுப்பறையில் நடைபெற்ற பாடமத்தனையும் அளித்த உரிமை உணர்ச்சி அவர்களைச் சீறிப் போரிடச் செய்தது, அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டனர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் கதிகலங்கிப்போயினர், போலீஸ்! போலீஸ்! என்று கூவியபடி ஓடினர் - எங்கும் கலாம் - பம்பாயில், கோலாப்பூரில், புனாவில், கட்டாக்கில், கல்கத்தாவில், நாசிக்கில்! சட்டம் சரிந்துவிட்டதோ என்று இங்குள்ளோர் கேட்டிடவும், நேருவின் செல்வாக்குக் காகிதக் கோட்டை தானோ என்று வெளிநாடுகளில் கேலி பேசிடவுமானதோர் நிலைமை ஏற்பட்டது. எல்லாக் கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில் தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப் போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுபது பிணங்கள், நூற்றுக்கணக் கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை, எமது உரிமையையாவது தாருங்கள், அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார் காட்டி நின்றனர் மக்கள்.

இவர்கள்தானா புல்கானின் பவனியின் போது நேரு பண்டிதரின் புகழ் பாடி நின்றவர்கள் என்று எவரும் திடுக்கிட்டுக் கேட்பர். எங்கிருந்து பிறந்தது இந்த வீரம்? எவரிடமிருந்து கற்றனர் இந்த உரிமை முழக்கத்தை? ‘ஜே’ போட்டுத் திரிந்தவர்கள் ‘சீ’ கூறி உமிழ்கிறார்களே, படத்திறப்பு விழா நடத்தியவர்கள், சிலைகளை மூளியாக்குகிறார்களே, என்று எண்ணிச் சர்க்கார் திகைக்கவேண்டி வந்தது. தம்பி, இந்தத் திங்கள், உத்தரப் பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும், வெளிநாட்டுத் தலைவர்கள் மெச்சிக்கொள்வதற்காக, நேரு, முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டோம் என்று வீரம் பேசுகிறார் - ஆனால், நடுக்கம் காலில் மட்டுமல்ல, கருத்திலும் புகுந்து விட்டது.

மொழிவழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.

கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை. பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப்போய் நிற்கிறது.

புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பம்பாயில் உத்தரப் பிரதேசப் போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப் பிரதேசப் போலீஸ்! இவ்விதம் "ராஜதந்திரம்' கையாளப்பட்டு வருகிறது. எரிமலை மீண்டும் எப்போது நெருப்பைக் கக்கும் என்று கூறமுடியாத நிலைமை. நாடு பெருஞ் சோதனையில் சிக்கிக் கிடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களே பீதியுடன் பேசுகின்றனர்.

அருந்தமிழ் நாட்டில் மட்டும், தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்ரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும் அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங் காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்; மற்றையோரில் ஒரு பகுதியினர் மனம் இறுகிக் கிடக்கின்றது; மற்றோர் பகுதியில், மனமாச்சரியங்களை விட்டொழிக்க முடியாது திண்டாடுவோரும், பிரச்சினையின் அளவுகண்டு, நம்மால் எப்படி இதனைத் தீர்த்து வைக்க முடியும் என்று திகைத்துக் கிடப்போரும், பிரச்சினை தீருகிறதோ இல்லையோ, இதை யார் தீர்த்து வைப்பதால் செல்வாக்குப் பெற்றுவிடுவார்களோ என்று பொச்சரிப்பால் பயமடைவோருமாக இங்கு இருப்பதால் தம்பி! அக்கிரமம் செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அதனால் என்ன என்றும், ஆமாம் அப்படித்தான் என்றும், ஆனது ஆகிவிட்டது இனிச் செய்யக்கூடியது ஏதுமில்லை என்றும் பேசும் அமைச்சர்களும், எஜமானுக்கு உடலைச் சொரிந்து விட்டு அவர் மகிழும்போது ஊதியத்தை உயர்த்தச் சொல்லிக் கெஞ்சும் ஊழியக்காரன் போக்கிலே சில அமைச்சர்கள் இங்கு பேசவும், உரிமைக்காகத் துணிந்து பேசுபவர்களை ஏசவும் துணிவு பெறுகிறார்கள் - துரைத்தனம் இருக்கிறதல்லவா துணைக்கு, அதனால்.

தம்பி! பிரச்சினை உனக்கு நன்கு தெரியும் - விளக்கம் தேவையில்லை.

‘‘மொழிவழி பிரிந்து, இனவழி ஒன்றுபட்டு, சோஷலிசத் திராவிடக் குடி அரசுக் கூட்டாட்சி அமைப்பது” என்பதல்லவா நமது கொள்கை. அதற்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் - அதற்காகப் பணியாற்றி வருகிறோம்.

நாம் இதற்கு இப்போது போரிட்டாக வேண்டிய கட்டம் பிறந்து விட்டது - போர் என்றால் கண்ணியம் கடமை கட்டுப்பாடு கெடாத, அமைதி குலையாத, பலாத்காரம் தலைகாட்டாத அறப்போர் என்பதையும் அறிந்திருக்கிறாய், தம்பி! அதற்கான வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், பூத்தக் கிடக்கும் மல்லிகைக்கொத்தினைப் பறித்துச் சூடிக்கொள்ளப் பூங்கொடியாள் புள்ளி மானெனத் துள்ளி ஓடுவது போல, களம் சென்று பழக்கப்பட்டும் இருக்கிறாய்.

தி.மு. கழகத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் உள்ளவர்கள், குறிப்பாக நமது பொதுச் செயலாளர், இதனை மறந்து, இது நாள் வரை வாளா இருந்துவிடவில்லை.

நாட்டிலே கிடைத்திடக்கூடிய, நல்லோர் அனைவரும் தந்திடக்கூடிய ‘சக்தி’ அவ்வளவையும் ஒன்றாகத் திரட்டி, ஒரு முனையில் நிறுத்தி, ஒழுங்குபடுத்திப் போரிட வேண்டிய நிலைமை இப்போது.

ஆற்றல் நம்மிடம் நிரம்ப இருக்கிறது - ஆயிரமாயிரம் தோழர்கள் வீரச் செயலுக்கும் கஷ்ட நஷ்டம் ஏற்பதற்கும் உளர் - அறிந்து அகமகிழ்கிறேன் - எனினும், ஆற்றல் கொண்டவர் என்ற முறையில், நாம் அறப்போர் துவக்கினால், பிறரிடமிருந்து பெறக்கூடிய துணையை இழந்திட வேண்டி நேரிடக்கூடும் என்பது மட்டுமல்லாமல், நாம் அவசரப்பட்டுத் துவக்கி விட்டதால், அருமையாக அமைய இருந்த ஓர் ‘ஐக்கியம்’ கூட்டு முயற்சி கெட்டு விட்டது என்று பழி கூறுவோர் இருக்கிறார்களே தம்பி! அதற்கேன் இடமளிக்க வேண்டும், சிறிதளவு பொறுத்திருப்போம். பெருமுயற்சி ஒன்று எடுத்துப் பேரவை என்று கூறத் தக்கதோர் கூட்டு முயற்சிக்கு வழி காண்போம் என்று எனக்குத் தோன்றிற்று; ஆச்சரியம் இதிலே இல்லை; பொதுச் செயலாளருக்கும் தோன்றிற்று; அவருடன் அடிக்கடி அரசியல் பிரச்சினைகளையும் கழகப் பிரச்சினைகளையும் கலந்து பேசும் வாய்ப்பினை நான் பெற்று மகிழ்பவன். எனவே, கலந்து பேச முடிந்தது, ஒத்த கருத்து அவர் உள்ளத்திலும் இருக்கக் கண்டேன்; களிப்புற்றேன்.