அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தம்பி உடையான்!
2

ஆனால் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறினர், 100-க்கு அறுபது குடும்பத்தினர் பஞ்சத்தின் பிடியில் உள்ளனர்; பசி நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்,

விலைவாசிகள் விஷம்போல ஏறிவிட்டிருப்பதையும், கூலி உயர்வு என்பது பணத்தின் அளவிலேயே தவிர, பண்டத்தின் அளவிலே அல்ல என்பதையும்,

பணத்துக்கு உள்ள வாங்கும் சக்தி தேய்ந்து போயிருப்பதையும்,

பாட்டாளிகளின் கடன் சுமை அதிகமாகிவிட்டிருப் பதையும் வேலையில்லாத் திண்டாட்டம் விரிந்து போய்க் கொண்டிருப்பதையும்,

எதனைத் தொழிலாளரும் உழவர்களும் நடுத்தரக் குடும்பத் தினரும், தமது கண்ணீராலும் பெருமூச்சாலும் எடுத்துக்காட்டி வந்தனரோ, அதனை ஆய்வாளர்கள் புள்ளிவிவரங்களாக்கித் தந்தனர். இந்த நாட்டு ஆய்வாளர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளி லிருந்து இதற்காகவே அழைக்கப்பட்டிருந்தவர்களும்.

அந்த ஆய்வாளர்கள் அதேபோது, மற்றும் சில உண்மைகளையும் எடுத்துக் காட்டினர்.

வரிச்சுமை அதிகமாகிவிட்டிருக்கிறது; ஏழையை அழுத்துகிறது என்பதையும்,

நோட்டுகளைக் கண்மூடித்தனமாக அச்சடித்துப் பரப்பி, பண வீக்கத்தைச் சர்க்கார் உண்டாக்கி விட்டார்கள் என்பதையும்,

நாணயத்தின் மதிப்பு தேய்ந்துவிட்டு இருப்பதையும்,

உலகின் நானா பக்கங்களிலும் கடன் வாங்கி வாங்கி, நாட்டின் எதிர்காலத்தை அடகுவைத்து விட்டிருப் பதையும் எடுத்துக்காட்டினர்.

இந்தக் கேடுகளில் ஏதேனும் ஒன்றைச் செய்தால்கூடப் போதும், மக்கள் சீறி எழுந்து அந்த அரசு நடாத்துவோரை விரட்டி விட்டிருப்பர், பிற நாடுகளில்.

இந்தப் புண்ணிய பூமி அவ்வளவையும் தாங்கிக் கொண்டது; பொழுது புலரும், புது வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையை அணைத்துக் கொண்டபடி.

மற்றவர்கள் - குறிப்பாக எதிர்க் கட்சியினர் - இந்தக் கேடுபாடுகள் குறித்துச் சுட்டிக் காட்டிய போது சீறி வீழ்ந்த ஆளவந்தார்கள், ஆய்வாளர்களே இடித்துரைக்கத் தலைப் பட்டதும், சிரம் கவிழ்த்துக் கொண்டனர்; மெள்ள "ஆமாம்' என்று கூறினர்.

ஆய்வாளர்கள் மற்றும் ஓர் உண்மையையும் எடுத்துக் காட்டினர். இத்தனை கேடுபாடுகள் நெளிகின்ற நிலையில், நாட்டிலே தொழில் வளர்ந்திருக்கிறது, உற்பத்தி பெருகி இருக்கிறது, செல்வம் வளர்ந்திருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டினர்.

இஃது விந்தையன்றோ என்று கேட்டனர் மக்கள். செல்வம் வளர்ந்திடின் சீர் வளர்ந்திடும். தொழில் வளம் பெருகிடின் விலை குறைந்திடும் - இது பொது உண்மை. விளைச்சல் மிகுந்திடின் களஞ்சியம் நிரம்பிடும், மழை பெய்திடின் பூமி குளிர்ந்திடும், மலர் பூத்திடின் மணம் பரவிடும் என்பது போன்ற பொது உண்மைகள். ஆனால் இங்கோ தொழில் வளர வளரத் தொழிலாளர் துயரம் வளருகிறது; உற்பத்தி பெருகப் பெருக விலைகள் ஏறியபடி உள்ளன; செல்வம் வளர வளர வறுமை பரவுகிறது. காரணம் என்ன இந்த வேதனை நிரம்பிய விந்தைக்கு?

அதுதான் எனக்கும் புரியவில்லை; விளைந்த செல்வம் எங்கே போய்விட்டது? என்று கேட்டிடலானார் காமராஜர்.

நல்லவர்! ஏழைப் பங்காளர்! திறமைமிக்கவர்! காலம் தந்திட்ட கருவூலம்! காமராஜர்!! - இவர் மட்டும் இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்திருப்பின் இந்த இடர்ப்பாடு வந்தே இருக்காது; ஏழைக்கு வேதனை மூண்டிருக்காது. அவரோ, பாவம் கானடா நாட்டு அரசியலைச் செப்பனிடவும், அமெரிக்க நாட்டுத் தொழில்வளப் பெருக்கத்துக்கான வழி கூறிடவும், சந்திர மண்டலம் யாருக்கு என்பதற்காக ரμயர்மம் அமெரிக்காவும் மோதிக் கொள்ளாதிருக்க ஒரு சமரசத் திட்டம் தந்திடவும், தமது நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுக் கொண்டு, காலையில் மாஸ்கோ, மாலையில் இலண்டன், மறுநாள் வர்μங்டன், அதற்கு அடுத்த நாள் ஓட்டவா என்று பயணம் நடத்திக் கொண்டிருந்து விட்டார்; அதனால் இந்த அவதி இங்கு ஏற்பட்டுவிட்டது என்றாவது கூறி ஆறுதல் அடையலாமா என்றால், முடியவில்லை. பெரியவர் இங்கேயேதான் இருந்து வந்தார், பெரிய இடத்திலே தான் இருந்து வந்தார். அவர் கண் முன்பாகத்தான் இத்தனையும் நடைபெற்றது.

எட்டு ஆண்டுகள் அல்லவா அவர் முதலமைச்சராகக் கொலுவீற்றிருந்தார்!

இருந்து? இப்போது அவரும் கேட்கிறார், முத்தன் முனியன்போல, வளர்ந்த செல்வம் எங்கே போய்விட்டது என்று!

இந்த நாடு தவிர வேறு எந்த நாடும் இந்த விந்தையைத் தாங்கிக் கொள்ளாது.

ஆய்வாளர்கள் தெளிவளிக்க மீண்டும் முன் வந்தனர்.

மகனாலோபிஸ் குழுவினரின் அறிக்கை வெளிவந்தது.

செல்வம் எங்கெங்குச் சென்று முடங்கிக் கொண்டது என்பது பற்றிய விளக்கம் அளித்தது.

ஏகபோகமாகப் பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர் பற்றியும் ஒரு தனிக் குழு தனி அறிக்கை கொடுத்தது.

இனியும் மறைத்துப் பயனில்லை என்று கண்டு கொண்ட ஆளவந்தார்கள், இப்போது முற்பகுதியை ஒப்புக்கொள்கிறோம், பிற்பகுதியை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

காங்கிரசாட்சியில் பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்.

என்ற முற்பகுதியை ஒப்புக் கொள்கிறார்களாம் பெருந் தன்மையுடன்!!

ஏழை மேலும் ஏழையாகி இருக்கிறான்.

என்ற பிற்பகுதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்! ஏன் என்று கேட்காதீர்கள். ஏதோ பெரிய மனது வைத்து, இவ்வளவு இடிக்குப் பிறகு ஒரு பகுதியையாவது ஒப்புக் கொண்டிருக் கிறார்கள் அல்லவா? மகிழத்தானே வேண்டும். அந்தப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? இது என்ன பிரிட்டனா, அமெரிக்காவா இப்படி ஒரு அரசா என்று கொதித்தெழுந்து அந்த அரசினை வீழ்த்திட

இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன?

ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் இந்த நிலை ஏற்படுவதைத் தடுக்கவில்லை?

நிலைமை இவ்விதம் வடிவம் கொள்வது புரிய வில்லையா?

புரியவில்லையென்றால் என்ன காரணத்தால்? புத்தித் தெளிவு இல்லாததாலா? அல்லது மமதை காரணமாகவா?

புரிந்தும் நிலைமையைச் சீர்திருத்தவில்லை யென்றால், முயன்று முடியாமற் போய்விட்டதா?

ஆமென்றால், இந்த அளவு திறமை இல்லாத நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டும்? என்றெல்லாம் கேட்பர் அங்கு!

இங்கு? அச்சம் பிடித்தாட்டும் நிலை சிலருக்கு! "நம்மவர்கள்' ஆயிற்றே என்ற மயக்க உணர்ச்சி சிலருக்கு!!

அந்த அச்சத்தையும் மயக்கத்தையும் போக்கிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டுப் பெரும் அளவு வெற்றி கண்டிருக்கிறோம்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியிலே அமர்ந்திருப் பவர்கள் "நம்மவர்கள்' என்பதாலேயே, அது நமக்காக உள்ள ஆட்சி என்றோ, நல்ல ஆட்சி என்றோ கூறிவிடுவதற்கு இல்லை என்பதனை நாடு அறிந்திடச் செய்திருக்கிறோம்.

கொடியிலே பச்சைப் பாம்பு சுற்றிக் கொண் டிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

பச்சைப் பாம்பு இருப்பதைக் கண்டறிவது எவ்வளவு கடினமோ அதனைவிட அதிகக் கடினம், அதனை அடித்துப் போடுவது ஏனெனில் அது, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மறையும்; ஒளியும்; கொடியுடன் கொடியாக அசைவற்று இருக்கும்.

"நம்மவர்கள்' நடாத்திடும் ஆட்சியை மாற்றி அமைத்திட முனையும்போது, இதனை நன்கு நினைவிற் கொள்ள வேண்டும்.

மக்களுக்குத் தெளிவளிக்க, "நம்மவர்' நடாத்திடும் ஆட்சியின் உண்மையான போக்கினை எடுத்து விளக்கிட நாம் கடினமாக உழைத்ததால் பலன் கண்டோம் என்பதுடன், காங்கிரசில் இப்போது குடியேறியுள்ளவர்களின் பட்டியலே, பொது மக்கள் மனத்தில் தெளிவு வளர வழி செய்து விட்டிருக்கிறது.

இது ஏழைக்காக அமைந்துள்ள அரசு என்று பெருந் தலைவர்கள் பேசி முடிந்ததும், மக்கள் எவரெவர்களைக் காண்கின்றனர் மேடை மீது!

ஏழைகள் இந்த அளவுக்கு வளர்ந்திட யார் காரணமாக உள்ளனரோ அவர்களை!!

யாரார் ஊர் நிலத்தைத் தமது உடைமையாக்கிக் கொண்டு, உழுபவனைக் கூலியாக்கி விட்டனரோ அவர்களை!

யாரார் போட்ட முதலுக்கு ஒன்றுக்குப் பல பத்து இலாபமாகக் குவித்துக்கொண்டு, தொழிலாளி கூலி உயர்வு கேட்டால், கதவை அடைத்து விடுகிறார்களோ அவர்களை!

யாரார் கள்ளக் கடத்தல், கணக்கில் வராத பணம் ஆகியவற்றினுக்கு அதிபர்களோ அவர்களை!

யாரார் இலஞ்சம் வீசி, அதிகாரிகளில் சிலரையும் கெடுத்து நிர்வாகத்தைப் பாழாக்குகின்றார்களோ, அவர்களை!

யாரார் ஒரு தொழிலை நடத்தி அதனால் கிடைத்திடும் இலாபத்தைக் கொண்டு ஒன்பது புதுத்தொழில் துவக்கி மேலும் பணம் குவித்துக் கொள்கிறார்களோ, அவர்களை!

யாரார் வருமான வரி கொடுக்காமல் சர்க்காரை ஏய்த்துவிட்டுக் காங்கிரசின் தேர்தல் நிதிக்கு நன்கொடை கொடுத்துப் பெரியவர்களின் புன்னகையைப் பெற்று, அதனைத் துணைகொண்டு புதிய அக்ரமங்களைத் துணிவுடன் செய்திட முற்படுகின்றனரோ அவர்களை!

எதிர்க்கட்சிகள் என்ன பிரசாரம் செய்து ஏழைகளை விழிப்படையச் செய்தாலும், பணத்தை வீசிப் பாமரரை மயக்கிட முடியும் என்ற கணக்குக் கூறுபவர்கள் யாராரோ அவர்கள்!

அவர்கள் "புடைசூழ'த்தான் பவனி வருகின்றனர், ஏழை பங்காளர் யாமே என்ற விருது தேடிக்கொண்டுள்ள ஆளவந்தார்கள்.

"அவர்களை'க் கண்டதும் மக்களுக்கு நிலைமை மிக நன்றாகத் தெரிந்து விடுகிறது. அதனால், தம்பி! நமது வேலையும் ஓரளவு எளிதாகிவிடுகிறது.

அவர் காங்கிரசிலா?

இவர் கூடவா, காங்கிரஸ் கட்சியில்?

அவர் எப்போது காங்கிரசில் சேர்ந்தார்?

இவரை எப்படிக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார்கள்?

இவர்களெல்லாமா இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில்?

இவர்களுக்குத்தானா இருக்கிறது காங்கிரஸ் கட்சி?

இவர்களைக் காட்டித்தானா காங்கிரசை ஆதரிக்கச் சொல்கிறார்கள்?

தம்பி! ஊரார் இதுபோலத்தான் பேசிக்கொள்கிறார்கள், "அவர்கள்' புடைசூழக் காங்கிரசின் பெருந்தலைவர்கள் பவனிவரக் காணும்போது.

தம்பி! கொட்டு முழக்குடன், கோவிந்தா எனும் ஒலியுடன், மஞ்சள் ஆடை அணிந்து, வலம் வருகிறது ஒரு "கோஷ்டி'

பக்திமிக்கவர்கள் திருப்பதி செல்கிறார்கள். அவர்கள் ஏந்திவரும் உண்டியலில் நம்மாலானதைப் போட்டால் நமக்குப் புண்ணியம் வந்து சேரும் என்று எண்ணிக்கொண்டு, அன்றைய செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பெருநடையாய் வருகின்றனர்.

அருகே வருகிறது ஊர்வலம்! பார்த்தால், யார் தெரிகிறார்கள்?

கன்னக்கோல் சின்னப்பன், காதறுத்த மல்லப்பன், குத்திக்குடலெடுத்த குமரப்பன், இப்படிப்பட்ட பேர்வழிகள்!

உண்டியில் பணம் போட மனம் வருமா! இந்தப் பாவிகளா! இந்த வேடத்திலா! மஞ்சள் ஆடையைக் கட்டிக் கொண்டால் மயங்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? ஏமாந்த நேரத்தில் நடத்தியது போதாது என்று இப்போது பட்டப் பக-லேயே வேடமிட்டுப் பொருள் பறிக்க வந்தனரோ பாவிகள் என்று மனம் குமுறிக்கிடப்பர்.

"அவர்கள்' புடைசூழக் காங்கிரசின் பெருந்தலைவர்கள் வருகிறபோது, மக்கள் அடையும் கசப்புணர்ச்சி இதுபோன்றதே.

"பீகார் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்களை எல்லாம் விடாப்பிடியாக எதிர்த்துக்கொண்டு வந்திருக்கிறார் இந்த மகாராஜா. ஏதாவது தந்திரம் செய்து தன் உடைமையை, முதலாளித்தனத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். பொய்யான ஏற்பாடுகள், போலியான தர்ம ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி வைத்துக் கொண்டு, சட்டத்தையும் சர்க்காரையும் மோசம் செய்திருக்கிறார். மிகத் துணிந்த பேர்வழி! பேர்போன குற்றவாளி!!''

தம்பி! பீகார் மாநில முதலமைச்சர் பிதோனாந்தா ஜா என்பாருக்கு 1961-ல், பண்டித ஜவஹர்லால், ராம்கர் ராஜாவைப்பற்றி குறிப்பு அனுப்பினார்.

அந்த ராம்கர் ராஜா தமது "கோஷ்டியுடன்' இப்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

ஜனநாயக சோஷியலிசமே என் பேச்சு - மூச்சு - என்று கூறிடும் காமராஜர், பண்டித ஜவஹர்லால் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட அந்த ராஜாவைக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார்.

பீகாரில், காங்கிரஸ் வெற்றி என்றால், அது இனி சட்டத்தையும் சர்க்காரையும் மோசம் செய்த பேர்வழி என்று பண்டித ஜவஹர்லால் நேருவால் கண்டிக்கப்பட்ட ராம்கர் ராஜாவின் வெற்றி என்றுதானே பொருள்படும்!

அதுதான் தம்பி! காமராஜர் காட்டும் ஜனநாயக சோஷியலிசம்!!

ராம்கர் ராஜாவுடன் சேர்ந்து ஜனநாயக சோஷியலிசம் உண்டாக்க, நம்மையும் அழைக்கிறார்! அது அல்லவா வேடிக்கை!!

ஆனால் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டுவிட்டுள்ளனர். கொடி எது, பச்சைப் பாம்பு எது என்பது புரிந்துவிட்டது! இனி மக்களை மயக்கிட, ஏய்த்திட முடியாது என்பது விளக்கமாகிக் கொண்டு வருகிறது. மக்களின் இந்தத் தெளிவுக்குக் காரணம், அச்சமற்று, பணியாற்றிய என் தம்பிகளன்றோ என்று எண்ணும்போதே, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் எனும் கவிதை செவியினில் ஒலிக்கிறது, இதயத்தில் இனிமையைச் சேர்க்கிறது.

அண்ணன்,

19-6-66