அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 2
1

பொது வேலை நிறுத்தமும் சர்க்காரும் -
பிப்ரவரி 20-ன் வெற்றி!

தம்பி,

‘‘இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், யாரோ ஒரு விஷமி, நமது மகாராஜாவுக்கு "வெண் குஷ்டம்' கண்டிருக்கிறது என்று ஓர் வதந்தியைப் பரப்பிவிட்டிருக்கிறான். நமது மக்களில் சிலர் அதை அப்படியே நம்பிவிட்டதாகத் தெரிகிறது. மகாராஜாவின் உடம்பு பத்தரை மாற்றுப் பசும்பொன் போன்றே எப்போதும் போல இருக்கிறது. ‘ஸநானம்’ செய்தானதும் சிவபக்தராம் நமது அரசர் பெருமான் தூய வெண்ணீறு அணிந்து கொள்வது வாடிக்கை, அதையே சில துஷ்டர்கள் ‘வெண்குஷ்டம்’ என்று கூறி விட்டிருக் கிறார்கள். இந்த வதந்திக்கு ஒரு துளியும் ஆதாரமில்லை.''

நகரெங்கும் இப்படி ‘தண்டோரா’ போடச் செய்தான் மந்திரி - இராஜாவின் பெயரைக் காப்பாற்ற!

அரசனுக்குக் குட்ட நோய் கண்டிருப்பதாக, யாரோ வதந்தி கிளப்பி விட்டார்கள் என்று கேள்விப்பட்ட ‘மந்திரி’ இராஜாவின் மரியாதையையும் புகழையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிறது, அதைத் திறமையாக நிறைவேற்றி விட வேண்டும், மன்னர் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, இவ்விதம் ‘தண்டோரா’ போடச் சொன்னானாம். நகரெங்கும் தண்டோரா போட்டனர். ஊர் மக்கள் அங்காடியிலும், நெடுஞ்சாலைகளிலும், முச்சந்திகளிலும் கூடினர்.

‘’விஷயம் தெரியுமா?”

‘‘எது? மகாராஜாவுக்கு வெண் குஷ்டம் என்பதுதானே. உனக்கு இப்போதுதான் தெரியுமா? எனக்கு நெடுநாளாகவே தெரியுமே”

‘‘அப்படியா, ஊரில் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டதால்தான், "தண்டோரா' போட்டார்கள் போலிருக்கிறது.”

‘‘ஆமாம். . . தண்டோரா போட்டு ஊர் மக்கள் ‘வாயை’ மூடி விடலாம் என்று எண்ணுகிறார் இந்தப் புத்திசாலி மந்திரி.”

‘‘திருநீறு பூசிக்கொள்கிறார் மன்னர்; அது குஷ்டம்போல இருக்கிறது என்று தண்டோரோ மூலம் தெரிவிக்கிறார்களே?”

‘‘வேறே, எப்படித் தெரிவிப்பார்கள்? பைத்யக்காரனாக இருக்கிறாயே, மகாராஜாவுக்குக் குஷ்டம் பிடித்து விட்டிருப்பது உண்மைதான் என்றா தண்டோரா போடுவார்கள்? திரு நீறு இவர் மட்டுமா பூசிக்கொள்கிறார்? திருநீறு பூசிக்கொள்கிறவர்களை எல்லாமா வெண்குஷ்டம் பிடித்திருக்கிறது என்று கூறுகிறோம்?

‘‘இல்லாமற் பிறவாது, அள்ளாமற் குறையாது.”

‘‘குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். மகாராஜாவுக்கு உண்மையிலேயே குஷ்டம் இல்லை என்றால், எவனோ பைத்தியக்காரன் எதையோ உளறினான் என்று சும்மா விட்டு விட்டிருப்பார்களா, இல்லை, இல்லை, மகாராஜாவுக்குக் குஷ்டம் இல்லை என்று "தண்டோரா' போடுவார்களா?”

‘‘அதுதானே, நானும் யோசிக்கிறேன். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று திகில், எங்கே ஊரிலே இதுபற்றி இழிவாகப் பேசுகிறார்களோ என்ற பயம். அதனாலே "தண்டோரா' போடுகிறார்கள்”

‘‘தண்டோரா போட்டு விட்டால், மக்கள் ஏமாந்து விடுவார்களா?”

‘‘அதெப்படி முடியும்? எனக்கு உண்மையில், தண்டோரா போட்ட பிறகுதான் ராஜாவுக்குக் குஷ்டம் என்கிற விஷயமே தெரிய வந்தது.”

மந்த புத்தி படைத்த மன்னர்களும், மதியற்ற மந்திரிகளும் இருந்த காலத்துக் கதை

இந்தக் காலத்திலும் இப்படி "தண்டோரா' போடும் மந்திரி இராஜ்யம் இருக்குமென்று என்னால் நம்பமுடியவில்லை - ஆனால் செவியில் விழுகிறதே "தண்டோரா.'

கடைகளை மூட வேண்டாம்
கடைகளை மூடவே வேண்டாம்
போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறோம்
போலீஸ் பாதுகாப்புப் போதுமான அளவு தருகிறோம்,
கடைகளைத் திறந்து வையுங்கள்
அர்த்தாலில் சேர வேண்டாம்.

என்றல்லவா "தண்டோரா' போடுகிறார்கள்! அதற்கும் போலீஸ் பாதுகாப்பு!!

மன்னனுக்குக் குட்டம் கிடையாது என்று தண்டோரா போட்ட பிறகே, ஊரிலே அனைவரும், மன்னனுக்குக் குட்டம் இருப்பதுதான் உண்மை என்று பேசிக் கொண்டனர் - அது போலவே, வசதிக் குறைவிலே இருந்து வந்த நம்மாலே தெரிவிக்க முடியாத இடங்களுக்கும் தண்டோரா மூலம் பிப். 20 அர்த்தால் நடைபெறப் போகிறது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. அங்காடியிலும் நெடுஞ்சாலையிலும் அர்த்தாலைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளலாயினர்.

அர்த்தாலாமே?
யார் சொன்னது?
சர்க்காரே தண்டோரா போட்டார்கள்!
அர்த்தால் நடத்தச் சொல்லியா?
இல்லை இல்லை, அர்த்தால் கூடாது என்று.
ஏன் கூடாதாம்?
அதைச் சொல்லவில்லை.
வேறே என்ன சொன்னார்கள்?

போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம், கடைகளைத் திறந்து வையுங்கள் என்று ‘தண்டோரா’ போட்டார்கள்.

அப்படியானால் நடக்கப்போகிற அர்த்தால், ரொம்பப் பிரமாதம் என்று தெரிகிறதே.

இல்லையானால், ஒரு சர்க்காரே தண்டோராப் போடுமா?

ஆமாமாம்!

“தண்டோரா” இதற்குத்தான் பயன்பட்டது.

ஜனவரி 27-ல் சர்வகட்சிக் கூட்டணி, "அர்த்தால்' பற்றிய தீர்மானம் தீட்டிற்று.

காங்கிரசும் திராவிடர் கழகமும் தவிர, பொதுமக்களிடம் தொடர்பு கொண்ட சகல கட்சிகளும், கூட்டணியில் இருந்த போதிலும், அவ்வளவு கட்சிகளும், பிரச்சார சாதனமான பெரும் பத்திரிகைகள் இல்லாமலிருந்து வருவன எனவே, பொதுக் கூட்டங்கள் மூலமாக மட்டுமே நாட்டு மக்களுக்கு பிப்-20 அர்த்தால் பற்றிய செய்தியைக் கூற முடிந்தது.

‘இந்து’வுக்கும் ‘மித்திர’னுக்கும், ‘தினமணிக்’கும் ‘எக்ஸ்பிரசு’க்கும், ‘மெயி’லுக்கும் இதுவா வேலை!!

இந்த நிலையில், தண்டோரா போடச் சர்க்கர் முன் வந்தது கூட்டணியின் திட்டத்தை அனைவரும் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தது.

சர்க்காரை நடாத்தும் பெரிய கட்சியே, ‘தண்டோரா’ போட்டு, அர்த்தாலில் சேராதீர்கள், சேரவில்லை என்பதற்காக யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்று அஞ்சத் தேவையில்லை, நாங்கள் பலமான போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம் என்று கூறவேண்டிய நிலமை வந்ததென்றால், ‘அர்த்தால்’ குறித்து, மக்களிடம் வெகுவாகச் செய்தி பரவி விட்டது, அர்த்தாலில் நாடு ஈடுபடத் தயாராகி விட்டது, சர்க்காரே குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தினாலொழிய அர்த்தால் முழு மூச்சுடன் நடைபெறும் என்பது விளங்கி விட்டது!

அந்த அளவுக்கு இந்தத் "தண்டோரா' நமக்கு உதவியாக இருந்தது. மகிழ்ச்சி, நன்றி.

மகா மேதை என்று கொண்டாடப்படும் ஆச்சாரியாரின் இராஜ தந்திரக் குறைவான போக்கு கண்டு, செச்சே! என்ன இந்தக் கிழவர் இப்படி ஆழம் தெரியாமல் காலை நுழைத்து விட்டு அவதிப்படுகிறார், இவர் அவதிப்படுவதுடன் காங்கிரஸ் கட்சியின் பெயரையுமல்லவா பாழடிக்கிறார். வயதாகி விட்டதாலே, வீணான வம்பு வல்லடிக்குத் தாமாகப் போய்த் தலை கொடுத்து விடுகிறார், நான் இப்படி நடந்து கொள்ளமாட்டேன். எனக்குப் ‘பக்குவம்’ தெரியும், பதம்பார்த்து நடந்து கொள்வேன், அனைவரையும் அணைத்துச் செல்லுவேன், எதிர்க் கட்சிகளைத் தோழமை கொள்ளுவேன், அதற்கெல்லாம் என்னிடம் ‘மந்திரம்’ இருக்கிறது. யாருக்கு எதிலே விருப்பம், எதைச் சொன்னால் யாருக்கு இனிக்கும், பிடிக்கும் என்பதை அறிந்து நடந்து கொள்வேன், ஏங்கித்தவிக்கும் இடங்களாகப் பார்த்து இரண்டொன்று வீசுவேன், இப்படி நடந்து கொண்டால் எதிர்ப்பாவது முளைப்பதாவது, எல்லாம் எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டுக் கொலுவீற்றிருக்கப் புறப்பட்ட கோமானல்லவா காமராஜர்! அவர் பார் தம்பி! தமது பக்குவம், திறம், பண்பு ஆகியவற்றைக் காட்ட வேண்டிய நேரம் வந்ததும், "எல்லாம் சொல்லுமாம் பல்லி, காடிப் பானையில் விழுமாம் துள்ளி' என்ற பழமொழிப்படி, ‘மகா மேதை’ செய்தது போலவே, தரக் குறைவும் ரசக் குறைவுமான காரியத்தில் ஈடுபட்டார்! "தண்டோரா' போடச் செய்தாரே!!

கலகம் குழப்பம், கல்லெறி கத்திக்குத்து, கொள்ளை கொலை, ஆகியவை எப்போது எங்கே நேரிட்டு விட்டாலும், தடுக்க, ஆட்களை மடக்க, பிடிக்க, தண்டிக்க, போலீஸ் எப்போதுமே இருக்கிறது, இதைத் தண்டோரா போட்டுத் தெரிவிக்க வேண்டிய அவசியமென்ன வந்தது!!

அதிலும் ‘அர்த்தால்’ நடத்தும்படி, மக்களைக் கேட்டுக் கொண்ட நாமெல்லாம் பெரிய கட்சியினரா, பெருந் தலைவர் களா, இல்லையே! வசதியற்ற, வாய்ப்பு இல்லாத கட்சிகள்!

"இதுகள்' பேச்சை, யார் கேட்கிறார்கள் என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம். பி. டி. ராஜனும், ம. பொ. சி. யும் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சுண்டல் கடையோ தண்டல் கடையோ, எதனையும் யாரும் அடைக்க மாட்டார்கள்; இதுகள் கரடியாய்க் கத்தி விட்டு, கடைசியில் முகத்தில் கரிபூசிக் கொள்ளட்டும், அப்போது நாம் பார்த்துக் கைகொட்டிச் சிரிப் போம் என்று இருந்திடும் தைரியம் காமராஜருக்கு ஏன் வரவில்லை.

முதல் மந்திரி வீட்டிலே மறியல் செய்தால் என்ன, குடியா முழுகிப் போய்விடும், ஒரு நாளைக்கு ஓடும் இரயிலை நிறுத்தித் தொலைத்தால், என்ன, "பிரளயமா' வந்துவிடும். அதற்காக வேண்டி, தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் செய்து, இந்தக் கிழப் பார்ப்பனர் காரியத்தைக் கெடுத்துத் தொலைத்தாரே! ஊரெல்லாம் கொதிக்கிறது - எல்லோரும் என்னையல்லவா கேட்கிறார்கள்? நானல்லவா, காங்கிரசின் செல்வாக்கைக் காப்பாற்றித் தீரவேண்டி இருக்கிறது - என்றெல்லாம் கதை அளந்து கொண்டு ‘கனம்’ ஆவதற்குப் பல்விளக்கிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, ‘அர்த்தால்’ நடத்துவதா? இதுகளா என் காலத்திலா? அதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா? என்று கருவிக் கொண்டு கிளம்பி, ‘தண்டோரா’ போட்டுவிட்டால் போதும், கடைக்காரர்கள், இவர் இருக்கும் திக்குநோக்கித் தெண்டனிட்டு விட்டு கடைகளைத் திறந்து வைத்துக் கொள்வார்கள் என்று எண்ணினார், காமராஜர்.

சர்வகட்சிக் கூட்டணி அர்த்தாலுக்காக எடுத்துக் காட்டிய காரணங்களை அங்காடி நண்பர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற அச்சமும், தக்க காரணம் காட்டப்படுவதால், கடைக்காரர்களும் அலுவலகத்தினரும் பிறரும், தமக்கும் நீதியிலும் நேர்மையிலும் நாட்டம் உண்டு என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அர்த்தாலுக்குத் தமது ஒத்துழைப்பை அளிக்க முன்வருவர் என்று புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பீதியும், சர்வ கட்சிக் கூட்டணி அர்த்தாலுக்காக எடுத்துக் கூறிய காரணங்களை மறுத்துரைக்க வக்கும் வழியுமில்லையே என்பதாலே ஏற்பட்ட மிரட்சியும் சேர்ந்து, சர்க்காரை, "தண்டோரா' தூக்க வைத்தது! இந்த விந்தையைக் கண்டவர்கள் கடை அடைப்பதுடன், கை கொட்டியும் சிரிப்பரே என்று காமராஜர் சர்க்காருக்குத் தோன்றாமற் போயிற்று!!

‘தண்டோரா’ போடும்போதே தம்மிடம் போலீஸ் படைகள் ஏராளமாக உண்டு என்பதையும் ஊராருக்குக் காட்டி விட வேண்டும் என்று எண்ணி, வகை வகையான போலீசை, நகரெங்கும் துரத்திற்று துரைத்தனம்.

சர்வ கட்சிக் கூட்டணி பிப். 20 அர்த்தால் குறித்து, நகரில் வெளியிட்ட சுவரொட்டிகளை, மூவர்ணச் சினிமா விளம்பரங்கள் விழுங்கியே விட்டன! புன்னகை பூத்த முகத்துடன் பூவையும், பொறி பறக்கும் கண்களுடன் கதாநாயகனும் பொன்னொளியும் புகழொளியும் பரப்பும் விதமாகச் சுவரெங்கும் காட்சி தந்தபோது, பிப்.20-ல் அர்த்தால் என்று நாம் வெளியிட்ட சுவரொட்டி எவ்வளவு மக்களுடைய கண்ணை ஈர்க்கும் என்று நான் கவலைப் பட்டதுண்டு. அந்தச் சுவரொட்டிகள் வெளியிடுவதற்கான பணம் தேடவே ‘உன்னைப் பிடி என்னைப் பிடி’ என்றாகி விட்டது!

கவச மணிந்த போலீசும், சைக்கிள் போலீஸ் படையினரும், போலீஸ் வான்களும் கிளம்பி நகரெங்கும் "பவனி' வந்தன - மக்கள் பிப்.20 நடைபெறவேண்டிய அர்த்தால் பற்றி, விவரமாக அறிந்து கொள்ள இந்நிலை பேருதவி புரிந்தது.

அர்த்தாலுக்குப் பேராதரவு இருக்கிறது - சர்வ கட்சிக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்திட மக்கள் தயாராகி விட்டனர் - அர்த்தால் வேண்டாம் கூடாது என்று, துரைத்தனத்தார் சொல்வது தூசுக்குச் சமம் என்று மக்கள் தீர் மானித்து விட்டார்கள். அர்த்தால் நடைபெறப் போவது உறுதி, நிலமையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமே என்ற கவலை, சர்க்காரைக் குடைகிறது. எனவேதான் கவசத் தொப்பி கிளம்பி விட்டது, சைக்கிள் படை புறப்படுகிறது, போலீஸ் லாரிகள் பவனி வருகின்றன என்று ஊரெங்கும் பேசிக்கொள்ளத் தலைப்பட்டார்கள்!

மன்னனுக்கு நிச்சயமாகக் ‘குட்டம்’ இருக்கிறது! - மக்கள் கூறி விட்டனர்.

துரைத்தனத்துக்குத் துதி பாடவும், ஆதரவு தேடவும், பெரிய இதழ்கள் பாடுபட்டன!

அர்த்தால் வேண்டாம் - ஜனநாயக ஆட்சியில் அர்த்தாலுக்கு அவசியமே இல்லை - என்று எழுதின.

பிப். 14-ல் அர்த்தால் வேண்டாம் என்று "தினமணி' தலையங்கம் தீட்டிற்று. பரிதாபம் என்ன என்கிறாய் தம்பி, பிப்.20-ல் இத் ‘தினமணி’ விற்பனை செய்யப்படும் கடைகளே திறந்தில்லை!!

வேடிக்கை ஒன்று தெரியுமா உனக்கு? அர்த்தாலாவது நடப்பதாவது, அர்த்தால் என்றால் என்ன சாமான்யமா? மகாத்மா நேரு போன்றவர்கள் நாட்டுக்குப் பெரிய நெருக்கடி ஏற்படுகிறபோது மட்டுமே ‘கட்டளை‘யிடுவார்கள், அப்போது தான் ‘அர்த்தால்’ நடைபெறும், கண்டவர்கள், கண்ட கண்ட காரணம் காட்டிக் கடை அடைக்கச் சொன்னால் நடக்குமா? என்று கேலி பேசிய ஏடுகளை, பிப்.20-ல் எப்படி வெளியே அனுப்பி வைத்தார்கள் தெரியுமா? 19-ந் தேதியே, ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஆகிய இரு இதழ்களுக்காகவும் துண்டு அறிக்கைகள் வெளிவந்தன.

பிப்.20-ந் தேதிய "இந்து' விடியற்காலை 4-30க்கே, தயாராகிறது. ஏஜண்டுகள், அங்கேயே வந்து பெற்றுக் கொள்ளவும்.

"இந்து' இதழை, நகரில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு வந்து தருவதற்கில்லை-அன்று அர்த்தால், ஆகவே கடைகள் திறந்திருக்காது-விடிந்து 6, 7, ஆகிவிட்டாலும், இங்கு வந்து இதழ்களை வாங்கிக் கொண்டு போவதிலே தொல்லை இருக்கும். எனவே, வெள்ளி முளைக்கு முன், 4-30-க்கே, ஓசைப்படாமல், ஒருவருக்கும் தெரியாமல், இங்கேயே வந்து, இதழ்களை எடுத்துக் கொண்டு போய்விடுங்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

கண்ணே! கதிரவன் ஒளிக்கீறல் தெரிகிறது! இனியும் நான் இங்கு இருப்பது, ஆபத்து! சென்று விடுகிறேன்! - என்று கூறிவிட்டு, யாரும் காணாவண்ணம் மறைந்து மறைந்து செல்வான் காதலன் என்று கதைகளில் படிக்கிறோமல்லவா! "இந்து'-விடியுமுன் வருக! என்று ஏஜண்டுகளை, முன்னாளே அறிக்கை மூலம் அழைத்தது. எக்ஸ்பிரசோ, 3-30க்கே வந்து விடுக என்று ஏஜண்டுகளை அழைத்தது, அறிக்கை வெளியிட்டது. பிப்.20 அர்த்தால் வெற்றியுடன் நடைபெறப் போகிறது என்பது. "இந்து' "எக்ஸ்பிரஸ்' ஆகிய இதழ்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டன. ஆனால் "மிடுக்கும் முடுக்கும்' குறையலாமா' அதனால் அர்த்தாலை அலட்சியப்படுத்துங்கள் என்று மக்களுக்கு மட்டும் எடுத்துக்கூறி வந்தன.

மொழிவழி அரசு பிரச்சினை சம்பந்தமாக, என்ன செய்வது என்பது தெரியாமல், சர்வ கட்சிக் கூட்டணியினர் திண்டாடிப்போய், எதையாவது செய்வோம் என்று இந்த அர்த்தாலில் ஈடுபட்டது போலவும், அவர்களுக்குச் சிறிதளவு தெளிவைத் தன் மேதாவிலாசத்திலிருந்து எடுத்தளித்தால் போதும் என்று எண்ணிக் கொண்டும் "தினமணி' எழுதிற்று.

"தமிழர் சம்பந்தப்பட்ட வரையில் தமது கோரிக்கைகளைத் தெரியப்படுத்துவதற்கு ஜனநாயக வசதிகள் நிறைய இருக்கின்றன. கூட்டம் போடுவது, விவாதம் நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புவது முதலியவைகள்தாம் சகஜமாகப் பின்பற்ற வேண்டிய முறைகள்.''

பார் தம்பி, பார்-அட்-லா படித்து அமைச்சர் வேலை பார்த்தும் பி. டி . ராஜனுக்கு, "முறை'' தெரியவில்லை!

தமிழர் நலனில் அக்கறை காட்டியதற்காகவே, வேட்டையாடி வாட்டப்படும், இன்னமும் காங்கிரசிடம் கனிவு காட்டுபவரான, ம.பொ.சி.க்குத் தெரியவில்லை!

மற்றும் ஜீவா, அந்தோணிப்பிள்ளை, சின்னத்துரை இவர்களுக்கெல்லாம், கோரிக்கைகளை எப்படித் தெரியப் படுத்துவது என்ற சாதாரண விஷயம் தெரியவில்லை.

இதய நாதத்தையும் இயற்கை எழிலையும், தமிழ்ப் பண்பையும் கலைச் செறிவினையும் கண்டறிந்து கவிதை வடிவாக்கித் தரும் பாரதிதாசனுக்கு இது தெரியவில்லை.

'திணமணி'க்குத் தெரிகிறது - தெரிந்து, இவர்களுக் கெல்லாம் அருளுகிறது - கனியிருக்கக் காய் கொள்கிறீரே, கருத்தற்றோரே! கருத்தற்றோரே! கோரிக்கையைத் தெரியப்படுத்தும் வழி தெரியாமல் திண்டாடித் தவித்துத் திறந்திருக்கும் கடைகளை மூடச் சொல்கிறீர்களே, தெளிவற்றோரே! என்னைக் கேட்கக் கூடாதா! சரி, இதோ கூறுவேன் கேண்மின் கோரிக்கைகளைத் தெரியப்படுத்த,

கூட்டம் போடலாம்
விவாதம் நடத்தலாம்
தீர்மானம் நிறைவேற்றலாம்
தீர்மானங்களை அனுப்பலாம்
இவை போதும்
- என்கிறது.

அன்றிரவு ஆசிரியர் ஆனந்தமாகத் தூங்கி இருப்பார் என்று எண்ணுகிறேன். நாட்டுக்கு வர இருக்கும் ஒரு நெருக்கடியை ஒரு தலையங்க மூலம் தடுத்து விட்டோம். இதற்காக, "பத்மவிபூஷண்' நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பார், தம்பி, கனவிலே கலாராணி வைஜயந்தி நாட்டியம் கண்டிருப்பார் - விருந்து வைபவம் பட்டமளிப்புக்காக நடைபெறுமல்லவா! அரிய பெரிய உண்மையை, அந்தரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சர்வகட்சிக் கூட்டணியினருக்கு அளித்துவிட்டோம், இனி அர்த்தால் இராது என்று எண்ணிப் பூரித்திருப்பார். ஒரு சமயம் இவ்வளவு அரிய பேருண்மையைக் கேவலம் ஒரு அணாவுக்கு விற்றுவிட்டோமே என்றெண்ணி வருத்தப்பட்டாரோ என்னவோ, அப்படியும் இருக்கலாமல்லவா! எப்படியோ ஒன்று, அர்த்தாலை நிறுத்திவிட, அவருக்குத் தெரிந்த காரணத்தைக் காட்டினார்.