அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 3
1

கூட்டணித் தலைவர்களும் ஊர்வலமும் -
காமராஜர் ஆட்சி -
கழகத்தை ஒழிப்பவர்.

தம்பி,

ஏன் நான் உயரமாக இருந்திருக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு பிப். 20-இல் ஏற்பட்டதென்று சென்ற கிழமை கூறினேனல்லவா! காரணம் என்ன தெரியுமா? அன்று சென்னையில், அதுநாள் வரையில் கண்டிராத மகத்தானதோர் ஊர்வலம் நடைபெற்றது. அதிலே கலந்து கொள்ளும் அவசியம் எனக்கு வந்துற்றது! எதிரே என்ன நிலை, பின்புறம் என்ன நிலைமை, பக்கவாட்டங்களிலே எப்படி இருக்கிறது என்பவைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன், ஆனால், நான் குள்ளமாயிற்றே - என்னால் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் சிறிதளவு உயரமாக இருந்தால், ஊர்வலத்தின் போக்கையும் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும், நிலைமைக்குத் தக்கபடி, தோழர்களை நடத்திச் செல்லவும் முடியும் என்று எண்ணினேன். எண்ணி என்ன பயன்? வருத்தப்பட்டேன்!!

ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது என்பதையும், நமது கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் அவ்வப்போது நடத்தும் உற்சாகமான ஊர்வலத்தின் போது, என்னைத் தேடிப் பிடித்திழுத்து வந்தாலும், நான் ஓடி ஒளிந்து கொள்பவன் என்பதும் உனக்குத் தெரியும். அப்படிப்பட்ட சுபாவமுள்ள நான், அன்றைய ஊர்வலத்தை நடத்திச் செல்பவர்களில் ஒருவனாக வேண்டி நேரிட்டது.

ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கினார், பி. டி. ராஜன், உடனிருந்து நடத்திச் சென்றார், ம. பொ. சி.

நமது பொதுச் செயலாளர் ஊர்வலத்தில், படைத் தலைவர், தமது படை வரிசைகளை ஒழுங்குற நடத்திச் செல்லும் பான்மையில் சென்றார்.

நானோ, தம்பி! திகிலும் திகைப்பும் கொண்ட நிலையில் இவ்வளவு திரளான மக்கள், எதைக் கண்டு கோபம் கொண்டு விடுகிறார்களோ, எந்த "விஷமி' எத்தகைய கலகமூட்டி விடுவானோ, அதனால் எத்தகைய விபரீதம் விளைந்துவிடுமோ, என்ற அச்சத்துடன் சென்றேன் - சென்றேனா! - ஓட்டமும் பெருநடையுமாகச் சென்றேன்.

ஊர்வலம், "ஐலண்ட்' மைதானத்திலிருந்து கிளம்புவதற்குள், போலீஸ் தடியடியும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடைபெற்று, மக்கள் பல திசையிலும் துரத்தப்பட்டு, ஒரே குழப்பமாகிவிட்ட நிலை; ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகக் கிளம்பிய நமது பொதுச் செயலாளரையும், துணைச் செயலாளரையும் வழியனுப்பிவிட்டு, கிடங்கில் இருந்தேன், ஒரு அரைமணி, முக்கால் மணி நேரத்துக்கெல்லாம் நமது நாவலர் சென்ற மோட்டார் திரும்பி வந்தது.

ஒரே குழப்பமாகிவிட்டது. சுட்டு விட்டார்கள்! மக்கள் ஆத்திரமடைந்து விட்டார்கள்! தலைவர் தாக்கப்பட்டார். மக்களைப் போலீஸ் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து விரட்டுகிறது. பெரிய அமளி!

என்று நண்பர் வந்து கூறினார்; என்ன செய்வேன், கிளம்பினேன். திடல் சென்றேன். மக்கள் கூட்டம், கண்களை மிரட்டும் அளவுக்கு! அவர்கள் மனநிலையோ என்னை மருட்டும் விதத்தில்! ஆனால், ம. பொ. சி. யும், பி. டி. ராஜனும், நாவலரும் பிறரும் அங்கு நிலைமையைச் சரிசெய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுக்குத் துணையாக நின்றேன்.

போலீஸ் அதிகாரிகள், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்ற காரணம் காட்டி ஊர்வலத்தைத் தடுத்து விடலாம் என்று எண்ணியிருப்பர். தடியடி, தலைவர்கள் தாக்கப்பட்டனர், மக்கள் கொதிப்புற்ற நிலை. கண்ணீர்ப் புகைக் குண்டு கிளப்பிய, புகையும் நெடியும், தடியடியால் ஏற்பட்ட தழும்பும் குருதியும், இவை எல்லாவற்றையும்விட, நடுங்கும் குரலில், கண்ணீர் சிந்தியபடி நண்பர் நடராசன் நடைபெற்ற சம்பவத்தை என்னிடம் சொன்னதும், என்னை வெகுவாக உருக்கிவிட்டது.

பி. டி. ராஜன் என்ன சொல்கிறார்? என்று கேட்டேன்.

ஊர்வலம் நடத்தியே தீர வேண்டும் என்று கூறுகிறார். போலீஸ் அதிகாரிகளிடம் கூறிவிட்டார் - என்றார் நடராசன்.

தம்பி! பி. டி. ராஜன் இருக்கும் இடம் நோக்கி என் விழிகள் சென்றன. அந்தத் தமிழ்த்தலைவர், மக்களை அமைதிப்படுத்திக் கொண்டும், ஒழுங்குபடுத்திக் கொண்டும் இருந்த காட்சி என் உள்ளத்தைத் தொட்டது.

ஊர்வலம் கிளம்பிற்று; ம. பொ. சி. உடனிருந்தார்; நான் ஓழுங்கு! அமைதி! ஒழுங்கு! அமைதி! என்று கூவினேன் - "வாழ்த்தொலி' என்னைக் களிப்பிலாழ்த்திற்று - கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது ஊர்வலம்.

தம்பி, எழுச்சியுற்ற தமிழகத்தைக் கண்டேன், எந்தையர் நாடு இனி எத்தரின் பிடியிலிருந்து விடுபடும் என்று உறுதி கொண்டேன், அதே தமிழர், வரிசை வரிசையாக வருகிறார்கள் - வாழ்த்தொலியுடன் அடிபட்டார்கள் தடியால் - போலீஸ் துரத்திற்று, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது - கலங்கினரோ தோழர்கள்? கடமையை மறந்தனரோ? இல்லை, தம்பி! பெருங்கூட்டம் ஆத்திரமடைந்து, கட்டுக்காவலை மீறிக் கையில் கிடைத்ததைக் கொண்டு எதிர்த்தோரைத் தாக்கி இடர் விளைவித்து நாசம் நர்த்தனமாடச் செய்வதற்கான, எரிச்சல் என்னென்ன உண்டாக்க முடியுமோ, அவ்வளவையும், மக்கள் போக்கறியாப் போலீஸ் செய்துவிட்டது.

அமைதியை நிலை நாட்டச் சென்ற ஜீவாவைத் தாக்கிக் கீழே சாய்ப்பதைக் கண்ட பிறகும், மக்கள் எங்ஙனம் கட்டுக்கு அடங்கி நிற்க முடியும்? எந்த விநாடியிலும், எரிமலை நெருப்பைக் கக்கும் என்ற நிலை - குமுறலே, பயமூட்டுவதாக இருந்தது. எனினும் எடுத்த காரியத்தைப் பழுதின்றி முடித்தாக வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும், ஆத்திரத்துக்கு இடமளித்தால் அதுவரை பெற்ற மகத்தான வெற்றிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும், தமிழரின் பண்பாடு கெட்டு விடும், இழிவும் பழியும் வந்து தாக்கும் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பொறுமையும், மக்களை ஒரு கட்டுக்குள், ஒப்பற்ற ஒழுங்குக்குள் கொண்டுவந்து நிறுத்தி வைத்தது. ஆகஸ்ட்டுக் கலகம் அறிந்த மக்கள் - பம்பாய் சம்பவம் பற்றிய பத்திரிகைச் சேதிகளைப் படித்த மக்கள், அன்று மட்டும் தமது கோபத்துக்கிடமளித்திருந்திருப்பாரானால், தம்பி! வெண்ணிற மணல் செந்நிறமாகி இருக்கும், நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிந்தோ அல்லது வெட்டுண்ட கரம், கால் கண்டு துக்கித்துக் கொண்டோ இருந்திருப்போம். மயில்தானே ஆட வேண்டும்! வான்கோழியுமா? காங்கிரஸ் பெருந் தலைவர்கள் மட்டுந்தானே, அர்த்தால் நடத்த முடியும் - இதுகளெல்லாமா என்று கேட்டு, இந்நேரம், தண்டோரா சர்க்கார் நம்மை இடித்துரைத்திருக்கும் - இழித்துரைத்திருக்கும்; நாமும் பதிலளிக்க முடியாமல் திண்டாடித் தேம்பிக் கிடந்திருப்போம். ஆனால் தீயில் தள்ளப்பட்டது போன்ற நிலை எனினும், தமிழர், தமது பண்பினை இழந்தாரில்லை! வீரம் கொழுந்து விட்டெரிந்தது. ஆனால் வெறி தலை காட்டவில்லை. ஆர்வம் ஆற்று வெள்ளம் போல் எழும்பிற்று. எனினும் கரை உடைபடவில்லை. குறிக்கோளை மறவாத பொறுப்புடன் நடந்து கொண்டனர்.

தம்பி! "உறுதிமொழி' எடுத்துக் கொள்ளும்படி, கூட்டணித் தலைவர் கேட்டுக்கொண்ட போது, அவர் நிகழ்த்திய உரை, என்னென்பேன், நெஞ்சம் கரைந்தது, கண்களில் நீர் நிரம்பிற்று, எங்கிருந்து கிடைத்தது அவருக்கு அந்த உருக்கம்? எவரிடம் கற்றார் அந்தக் கனிவு? மக்கட் கூட்டத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ளாதவர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளான ஓர் கட்சியின் தலைவர், அன்று மக்களைத் தன் வயப்படுத்திய திறமையை இதுநாள் வரையில் எங்கே "ஒளிய' வைத்திருந்தார் என்று நான் எண்ணி எண்ணி வியந்தேன்.

"திருஷ்டி பரிகாரம்' போல, சிறு குழப்பம் நடைபெற்றது - அது கண்டு நான் வருந்துகிறேன் - அதுவும் இல்லாதிருந்திருக்கு மானால், நாம் இன்று பெற்றுள்ள வெற்றி, மாசுமறுவற்றதாகும் என்று கூறினார் கூட்டணித் தலைவர். கண்ணியத்தை அணியாகக் கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே, அது போல் கூறியிருக்க முடியும்.

பொதுவாகவே தம்பி! மக்கள், பெருந்திரளாக, வெள்ளம் போல் கூடியிருக்கும் நேரத்தில், அவர்களிடம் ஆத்திரத்தை மூட்டிவிடுவதும், அவர்களைப் பலாத்காரத்தில் ஈடுபடச் செய்வதும் எளிதான காரியமாகும். அது மட்டுமல்ல, இரண்டாந்தர மூன்றாந்தரத் தலைவர்கள், அதே மன அரிப்புடன் இருப்பர்; இச்சமயம் தவறினால் மறு சமயம் வாய்ப்பதரிது என்ற போக்கிலே,

இழுத்துப் போட்டு உதையுங்கள்!
இடியுங்கள்! உடையுங்கள்!
கொளுத்துங்கள்!
அஞ்சாதீர்கள், தாக்குங்கள்!
போலீஸ் சுண்டைக்காய்போல்!
குண்டுகள், உமது கரங்களுக்கு விளையாட்டுச் செண்டுகள்!

என்றெல்லாம் "தூண்டிவிட்டு'க் கலகம் மூட்டிவிடுவதற்குத் தான் துடியாய்த் துடிப்பர்.

தமிழ்த் தலைவர்கள் அங்ஙனமா நடந்து கொள்வர்!

அன்று, பி. டி. ராஜன் கொண்டிருந்த கவலையெல்லாம், மக்களைச் சமாதானப்படுத்தி, மனக் கொதிப்பை மாற்றி, அவர்களை அமைதியான முறையில் தத்துமது இல்லம் சென்று, அன்று நடத்திய அர்த்தாலின் வெற்றியை நேர்த்தியானதாக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதுதான்.

அவரே, பிறகு கூறியபடி, அப்படிப்பட்ட மக்கட் கூட்டத்தை அவர் அதற்கு முன்பு கண்டதில்லை.

மக்களோ, தடியடி கண்டு கொதிப்படைந்த நிலையில் உள்ளனர்.

ஒரு இலட்சத்திற்குக் குறையாது என்று மாற்றார்கள் ஒப்புக் கொள்வர்.

அவர்கள் ஆலைகளிலிருந்தும் தொழிற்சாலை களிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் குடில்களிலிருந்தும் வந்துள்ளனர்.

எளிதாக, அவர்களைத் துப்பாக்கி மிரட்டிவிடாது!

கண் எதிரே, தமது தோழன் சுடப்பட்டுச் சுருண்டு கீழே வீழ்ந்தாலும்; அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மாற்றாரை நோக்கிப் பாய்ந்து தாக்கிடும் வல்லமை பெற்றோர்.

மார்பில் பாய்ந்த வேலினை இழுத்தெடுத்து, எதிரேவரும் வேழத்தின் மீது வீசிய வீரர் வழி வந்தவரல்லவா! வீரத்திற்கும் நெஞ்சு உரத்துக்கும் பஞ்சமா? அவர்கள் ஈடுபட்டிருக்கும் காரியமோ, தாயகத்துக்கு வந்துற்ற கேட்டினை ஓட்டிடும் விடுதலைக் கிளர்ச்சி! இந்நிலையில் அவர் அச்சம் கொள்வரோ? அப்படிப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு அமளியை மூட்டிவிடுவதுதானே எளிதான காரியம். ஆனால், பி. டி. ராஜன் இதயத்திலிருந்து கிளம்பி, கேட்போர் இதயத்தில் சென்று தங்கும் திறன் படைத்த பேருரையால், அவ்வளவு மக்களையும் அமைதியுறச் செய்தார்! அன்று, ஒரு துளி கலகமும், சிறு அடிதடியும், எத்தகைய கூச்சலும் குழப்பமுமின்றி, அவ்வளவு மக்களும் கலைந்து சென்றனர். எத்தனை சம்பவங்களை இதற்கு ஈடாகக் காட்ட முடியும், எங்கள் கட்சி பெரிய கட்சி என்று "விருது' பேசுவோரால்!

தம்பி! கோவாவில் நடைபெற்ற கொடுமையைக் கண்டிக்கச் சென்னையில் அர்த்தால் நடத்தினர். சர்க்கார் துணை நின்றனர். சகல கட்சிகளும் கலந்து கொண்டன. எதிர்ப்பாளர், ஏளனம் பேசுவோர், எவரும் கிடையாது, தண்டோரா இல்லை. அர்த்தால் வேண்டாமென்று தலையங்கம் தீட்டவில்லை. பெரியார் கூட, அதனைப் பலாத்காரம் என்று பேசினாரில்லை. திராவிடர் கழகமும், திருநாளில் கலந்து கொள்வது போல, அதிலே கலந்து கொண்டது. கண்ணீர்த் துளிகள் கலந்து கொள்ளும் காரியத்தில் நாங்கள் கலந்து கொள்வதா, என்ன ஆவது எமது கண்ணியம் என்று வாதாடவில்லை. அதே கடற்கரையில், கூட்டம் நடைபெற்றது.

எதிர்ப்பே இல்லாத அந்த அர்த்தாலில்கூட, அமளி மூண்டது; குழப்பம் ஏற்பட்டது.

பிப். 20-ல் நடைபெற்ற அர்த்தாலை நடத்தியவர்களை, கக்கன் அரசியலில் தோற்றோடிப் போனவர்கள் என்று கேபேசின ôரல்லவா, அவர், வாய் பொத்திக் கொண்டுதான் கிடந்தார்.

நமது நடராசன்
ம. பொ. சி.
சுயம்பிரகாசம்
விநாயகம்
இரத்தினம்
ஜீவானந்தம்

ஆகியோரெல்லாம் இருந்துதான் அர்த்தால் கூட்டம் நடத்தினர்.

டாக்டர் வரதராஜுலுவும், ராஜாராம் நாயுடுவும், அண்ணாமலைப் பிள்ளையும், இவர்களுடன் தோளோடு தோள் சேர நின்றனர். தேசியம் தீட்டுப்பட்டுவிடவில்லை! நாடு நாசமாகி விடவில்லை! காமராஜர் சர்க்கார், "தண்டோரா' போட்டுக் கடைகளைத் திறவுங்கள், போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம் என்று கனிவு காட்டவில்லை; ஜனநாயக முறைகள் இருக்கும் போது, ஏன் அர்த்தால் நடத்துகிறீர்கள் என்று "தினமணி' கேட்கவில்லை, 'மெயில்' தன் "மேதாவிலாசத்தை'க் காட்டவில்லை.

முதன் மந்திரி காமராஜர் காலையும் மாலையும் நகரைச் சுற்றிப் பார்த்தார் - எல்லாம் அமைதியாகவே இருக்கிறது என்றார்.

அமைதியின் இலட்சணம் எப்படி இருந்தது தெரியுமா, தம்பி!

"பஸ்கள் ஓடின; ஊர்வலம் நடத்தியோரும் தொழிலாளர்களும் குறுக்கிட்டதால் நின்றன! மீண்டும் ஓடத் தொடங்கின! மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பஸ்கள் நின்று விட்டன.''

இது, கோவாவுக்கான அர்த்தாலின்போது! "தினமணி' யே எழுதியது.

கூட்டணியோ, பஸ்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது. மக்களை மறிக்கவும் கூடாது - ஒருவரையும் வற்புறுத்தக் கூடாது - என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்த அர்த்தால் கண்டிக்கப்பட்ட.து. கோவாவுக்கான அர்த்தால் பற்றியோ, கொஞ்சுமொழி பேசினர், வேளைக் கேற்ற கொள்கை பேசும் போக்கினர்.

கல்லெறி சரமாரியாக நடைபெற்றிருக்கிறது, கோவா அர்த்தாலின்போது.

காலிகள் கல் வீச்சு - என்று கூறவில்லை. "தினமணி' கனிவுடன் பேசுகிறது! பஜாரியை மனைவியாகக்கொண்ட பயங்தாங்கொள்ளிக் கணவன், அவளிடம் "பாத பூஜை' பெற்றாலும், கோபம் காட்டாமல், உதைக்காதே பெண்ணே! உன் கால் வலிக்கும்படி கண்ணே என்று பேசுவானாமே, அதுபோல கல்லடி கண்டும், கனிவு ஒழுக ஒழுக எழுதுகிறது.