அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


திருமணம்

சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும் திருமண விழாவும்.

தம்பி,

ஒரு திருமணம், காண்போம் வருகிறாயா? தடையா கூறப்போகிறாய்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுவிட்டதால் பண்பு கெட்டுப்போன திராவிடச் சமுதாயத்தில், புத்தறிவு புகட்டும் புதுமுறை முயற்சியல்லவா, நமது சீர்திருத்தத் திருமண முறை! அதைக் காண்பதிலேயே ஓர் களிப்பு, அதில் கலந்து கொள்வதிலே ஓர் பெருமை, அதனால் ஓர் இனிமை ஏற்படுமே! நானா, திருமணம் காணத் தடை சொல்லப் போகிறேன். வா, அண்ணா! போகலாம் என்றுதான் கூறப் போகிறாய் தெரியும். அங்கு சென்றால், பண்டைத் தமிழகத்தின் பாங்கும், பகைவரின் பாதம் பற்றுவோராக நம் இனத்தவர் கீழ்நிலை சொல்லுமுன் திருஇடத்தில் இருந்து வந்த சீரும் சிறப்பும், தலைவன் தலைவி என்ற தொடர்பிலே இருந்த தூய்மையும் தோழமையும், சத்தற்ற சடங்குகட்கும் பொருளற்ற மந்திரங்கட்கும், புரோகிதப் பித்தலாட்டத்துக்கும் ஆட்படாமல், காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற கொள்கையும், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில என்ற மறைமணி ஒளியும், திருமணம் என்பது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் எனும் பேருண்மையும், கேட்போர் ஏற்கும் வண்ணம் எடுத்தியம்பிட நமது தோழர்கள் வருவார்கள், கேட்டு இன்புற, பழைமை விரும்பிகள் கூடப் பேராவல் காட்டுவர். மணமாலை அணிந்து முகத்தை மலராக்கிய நிலையில் மணமக்கள் அமர்ந்திருப்பர், அங்கு புகையும் நெடியும், குமுறலும் குளறலும், வாதமும் பேதமும், வம்பும், வல்லடியும் இரா. எவரிடமும் இன்முகமும் இன் மொழியுமே காணப்படும், அப்படிப்பட்ட அழகிடம் வருவதற்கு யாருக்குத்தான் விருப்பம் எழாது, இதோ வருகிறேன், அண்ணா! எங்கே அந்தத் திருமணம்? தலைமை தாங்குபவர் யார்? எவரெவர் பேசுவர் என்றெல்லாம்தான் கேட்டிடத் துடிக்கிறாய். ஆனால் தம்பி, நான் உன்னை அழைப்பது, சீர்திருத்தத் திருமணத்துக்கு அல்ல! இது வேறோர் வகையான - முற்றிலும் வேறான - திருமணம். எனினும், கண்டால், உள்ளத்திலே ஓர் எழுச்சி பொங்கும், உரையிலே ஓர் புது உறுதி ஒலிக்கும், கண்களிலே ஓர் புத்தொளி எழும். இத்தகைய திருமணம், அடிக்கடி காணக் கூடியதுமல்ல, கண்டால் எளிதிலே மறந்துவிடக்கூடியதுமல்ல என்பதனை நீயே ஒப்புக்கொள்வாய்.

நெடுந்தொலைவிலே நடைபெறும் திருமணம் - தம்பி - சிந்தனைச் சிறகடித்துக்கொண்டு கிளம்புகிறோம். எளிதாகச் சென்றுவிடலாம், கடலும் மலையும் குறுக்கிட்டு நம்மைத் தடுத்திட முடியாது - பல்வேறு நாட்டுக்கட்டு திட்டம், சட்டம் எதுவும் நம்மைத் தொட்டிழுத்திடாது அல்லவா!

மணமக்கள், தம்பி, ஆமாம்! முகத்திலே இனிமையுடன் ஓர் கெம்பீரம் தெரிகிறதல்லவா!! மணவிழாவில் கலந்து கொள்வதிலே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டோராகக் கூடி இருப்போர், ஏன், மணமக்களை அப்படிப் பாசத்தோடு பார்க்கின்றனர் என்று புரியவில்லை அல்லவா? இதைக் கேள் தம்பி, புரியும்.

மணமகன் - ஓர் கைதி! ஆமாம், தம்பி, சிறையினின்றும் விடுதலை பெற்று, உடனே, முன்பே ஏற்பாடாகி இருந்த திருமணத்தை முடித்துக் கொள்கிறான் போலும் என்று எண்ணிக்கொள்வாய். அது போன்ற நிகழ்ச்சியேகூட உள்ளத்திலோர் நெகிழ்ச்சி தரவல்லதுதான். இஃது, அதனினும் அரியதோர் நிகழ்ச்சி.

மணமகன், கைதி! திருமணம் செய்துகொள்வதற்காக மட்டுமே, "விடுதலை' இவ்வீரனுக்குத் தரப்பட்டிருக்கிறது; திருமணமானதும் மீண்டும் சிறை செல்ல இருக்கிறான்.

கைதிக்குக் கடிமணம்; அதைக் காண ஓர் கூட்டம்; காண்பதிலே ஓர் பெருமை! வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

இந்தக் கைதி, ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தைத் தன் தொண்டினால் தொட்டுவிட்டவன்; எனவேதான் அவன் திருமணம் காணத் திரண்டுள்ளனர்.

இடம், சைப்ரஸ்! தீவு!! இந்தத் தீவு இன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறது. தாயகமான கிரீஸ், இந்தத் தீவு, அன்னியர் பிடியில் இருப்பதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளும்? சைப்ரஸ் தீவும் எப்படி, தாயகத்திலிருந்து வேறாக்கப்பட்டு, பிரிட்டனுக்கு வெள்ளாட்டி வேலை செய்து பிழைக்கும் தாழ்நிலையை ஒப்பும்? எனவே, அங்கு விடுதலைக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெறியைத் தாங்கிக்கொண்டு, வீர இளைஞர்கள் விடுதலைப் போர் நடத்துகிறார்கள். மனுப் போடுவதும் மாநாடு நடத்துவதும் பலன் தரவில்லை! நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தினர், மதிக்கவில்லை. கல்லூரிகளில் விடுதலை முழக்கம் கேட்டது - கவலை கொள்ளவில்லை. மாதா கோயில்களிலே "விடுதலை மான்மியம்' உபதேசிக்கப்பட்டது-சட்டை செய்யவில்லை. கர்த்தரின் ஊழியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்-அதனையும் மதிக்க மறுத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பிறகு கைக்குண்டு வீசியும் காடுகளில் பாசறை அமைத்துப் போராடியும், பிரிட்டிஷ் தளங்களைத் தாக்கியும் போரிடலாயினர். சைப்ரசில், பிரிட்டிஷ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதிரியானாலும் பல்கலைக் கழக மாணவனானாலும், அடுக்களை அணங்காயினும், அலுவலகத் தானாயினும், சைப்ரஸ் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கம் காட்டினால், பிரிட்டிஷ் எதேச்சாதிகாரிகளால், சிறைச் சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்!

இந்த மணமகன், அதைப்போலச் சிறைப்பட்டவன்!

தாயக விடுதலைக்காகப் பாடுபட்டான்; எதேச்சாதிகாரி களிடம் பிடிபட்டான்; சிறை சென்றான்!!

அவன் காதலைப் பெற்றவள் கண் கலங்கி நின்றாள்.

பேயரிடம் பிடிபட்டவன், என்ன முடிவு எய்துவானோ? வீர சுதந்திரம் வேண்டுபவரை, வெறியர், எதுதான் செய்யா திருப்பர். மகாரியாஸ் பாதிரியாரை, அவர் ஜெபதப மூலம் கர்த்தரின் அருளைப்பெற்று அனைவருக்கும் வழங்கிடும் பூஜிதர் என்பது பற்றியும் கவலையற்று, அவர் காட்டிய நாட்டுப் பற்றினையும் விடுதலை வேட்கையினையும், மன்னிக்க முடியாத குற்றமெனக் கொண்டு, கண்காணா இடம் இழுத்துச் சென்றல்லவா, சிறைப்படுத்தி விட்டனர்! இவனோ காளை! இவனை பிரிட்டிஷ் ஆட்சியாளர் என்னென்ன கொடுமை களுக்கு ஆளாக்குவரோ - சிரச்சேதமோ சித்திரவதையோ - என்ன நேரிடுமோ... என்றெல்லாம் எண்ணி எண்ணி, அவனைக் காதலனாகப் பெற்ற காரிகை கண்ணீர் உகுத்திடாதிருந்திருக்க முடியுமா?

கண்டனர் - காதல் கொண்டனர் - கடிமணம் அவர்கட்கு இன்ப வாழ்வளிக்கும் - என்று உற்றார் உறவினர் எண்ணி யிருப்பர்; ஊரார் பொருத்தமானதோர் காதல் ஜோடி இது என்று கூறி வேடிக்கை பேசியிருப்பர்.

எல்லாம் கனவு! எல்லாம் கனவு! என்று - கூறுவது போல, இளைஞன், சிறைக்குள் தள்ளப்பட்டு விட்டான்.

அவள் கன்னத்தைக் கிள்ளிய போதும், கூந்தலைக் கோதியபோதும், அதரம் அதரத்துடன் உறவாடிய வேளையிலும், ஆரத்தழுவிய போதும், அன்பே! ஆருயிரே! என்று கொஞ்சியபோதும், இருவரும் இன்பலோகம் சென்றிருப்பர்.

ஆனால் காதலியைப் பெற்றதால், அவன் அடைந்த களிப்பு-அவன் கண்களை மறைத்துவிடவில்லை-அதேபோது அவனுக்குத் தன் தாயகம் தளையுண்டு, தருக்கர் ஆட்சியில் சிக்குண்டு, மதிப்பிழந்து கிடந்திடும் கீழ்நிலையும் தெரிந்தது - தெரிந்ததும் நெஞ்சிலோர் தணல் நுழைந்தது.

பக்கத்திலே ஓர் பாவை, காதற் கனிரசம் ஊட்ட! பருவமோ காதற் பாங்கினை அனுபவித்திடுவதற்கு ஏற்றது! எனினும், உலவும் மண், உள்ளே புகும் காற்று-அடிமை முடைநாற்றம் வீசுவதாக இருக்கிறது! நாடு அடிமைக் காடாகிக் கிடக்கிறது - காதல் வாழ்விலே நாம் இன்பம் தேடிக்கொள்கிறோம் - நாடோ அன்னியன் பிடியில் சிக்கி நாற்றமடித்துக் கிடக்கிறது இந்நிலையில் நாட்டை மறந்து, நாம் காதற் தோட்டத்திலே உலவிக் களிப்படைவது இயலுமா, முறைதானாகுமா? என்று அந்த இளைஞனால் எண்ண முடிந்தது. தம்பி! காதலியின் கடைப்பார்வை கண்டு விட்டால், எதனையும் மறந்து, எல்லாம் இந்த ஏந்திழையாளின் முகத்தில் கண்டிடலாம் என்றிருப்பதற்குத் தான், மிகப் பெரும்பாலான இளைஞர்களால் முடியும். முதியவர்களே, தின்றதை மென்று அசைபோடும் முறையில், அப்போது நடந்தவைபற்றி எண்ணி மகிழத் தொடங்கிவிட்டால், மற்றவற்றை மறந்திடும் நிலைபெற்று விடுகிறார்கள் என்றால், இளைஞன் நிலை எங்ஙனம் இருந்திடும். எனினும், காதலின்பத்தில் கட்டுண்டு கிடந்த இக் காளைக்கு, நாட்டு நிலை பற்றியும் எண்ணிட முடிந்தது - நாட்டு அடிமைத்தளைகளை உடைத்திடும் நற்பணியாற்ற வேண்டும் என்று துணிந்திடவும், செயல்படவும் முடிந்தது! சிறைப்பட்டான்! கண்ணீர் சிந்தியிருப்பாள், அவன் விரும்பிய சிற்றிடையாள் - எனினும் அந்த நிலையிலும், அவள் முகத்திலோர் தனிவகை எழில் பூத்துத்தான் இருக்கும்; என் கண்ணாளன் என் அருகில் இல்லை - என் எதிரில் இல்லை-என்னைத் தொட்டிழுத்து விளையாடவும், கட்டி முத்தம் தந்திடவும் முடியாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டுத்தான் இருக்கிறான், சிறைக்கொட்டடியில், அவனைக் காணாததால் என் களிப்பு கருகிடத்தான் செய்கிறது! ஆனால், என்னை வென்றோன், நாட்டு விடுதலை வீரன் - அஞ்சாநெஞ்சன் - தன் சுகம், தன் இன்பம் பெரிதல்ல, தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் கடமையே பெரிது என்று கொள்கைகொண்ட குணக்குன்று என்று எண்ணும்போது, நெஞ்சிலே சுரக்கும் தேன் ஊற்று கருகிடும் களிப்பை, செழித்திட வைக்கிறது. புதியதோர் பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன் என்று அந்தப் பூவை எண்ணாமலிருக்க முடியுமா?

அவளும் அவனும், சைப்ரஸ் தீவுக்கு மட்டுமல்ல, விடுதலைக் காவியத்துக்கே ஏற்றவர்களாகி விடுகின்றனர்.

எப்போது திருமணமடி உனக்கு?

அவர் வெளியே வந்ததும்!

இந்த உரையாடலில், பிரிவாற்றாமை தரும் வாட்டத்தை ஓட்டி விடுமளவுக்கு, காதலன் நாட்டுக்கு உழைத்ததால் சிறைப்பட்டிருக்கிறான் என்ற உணர்வு தரும் பெருமையுமல்லவா ஒலிக்கிறது!

அத்தகைய திருமணமடா, தம்பி இது!!

நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைத்திடும் போக்கினருக்கு, எக்காரணத்தாலோ, நகைச்சுவையும் இருக்கும்போல் தோன்றுகிறது. ஆகவேதான், எந்த வீரனைப் பிடித்து வெஞ்சிறையில் அடைத்தனரோ, அவனை, திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து, அதற்காக வெளியே சென்றுவர "விடுதலை'யும் தந்தனர்.

கைதியைக் கடிமணம் செய்துகொள்ள, காரிகைக்கு மனம் இடம் தராது என்றெண்ணினரோ - அன்றி, கைதியாக இருக்கும் நிலையில் கலியாணம் ஒருகேடா, என்று அந்தக் கர்மவீரனே சலித்துக்கொள்ளுவான் என்று எண்ணினரோ - காரணம் எதுவோ தெரியவில்லை. சிறைப்பட்டுக் கிடந்தவனைத் திருமண விழாவுக்காக மட்டும் வெளியே விடுவித்தனர்.

"அவனும் அவளும்' சைப்ரஸ் தீவின் எழுச்சியும் எழிலும் உருவெடுத்ததுபோல, மணவிழா நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்; இந்த வீரனுக்கு நடைபெறும் மணவிழாவில் கலந்துகொண்டு விடுதலை வரலாற்றிலே இடம் பெறப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் உற்றார் உறவினரும் ஊர்ப் பெருமக்களும் கூடி உள்ளனர்.

மணமகன் பெயர் ஆண்டிரியாஸ் ஜோனைட்ஸ்.

ஜோவுலா ஜோனாட்பூர் என்பது மணமகள் பெயர்.

உச்சரிக்கவோ, நினைவிற்கொள்ளவோ, கடினமான பெயர், தம்பி. எனவே நாம் மணமகனை எழுச்சி என்றழைக்கலாம், மணமகளை எழில் என்று அவனை அழைத்திடச் சொல்வோம்.

திருமணம் நடைபெறும் இடத்தின் பெயரும், உச்சரிக்கக் கடினமானது - கோகிநோட்ரிமிதியா - நமக்கேன் தொல்லை - இந்தச் சிற்றூருக்கு நாம் வீரபுரி என்று பெயர் வைத்தழைப்போம்.

மணமகன், கரங்களில் விலங்குடன்தான் அழைத்து வரப்பட்டான்... போலீஸ் அதிகாரிகள் உடன்வந்தனர்.

திருமண மண்டபத்துக்குள் நுழையும்போதுதான், விலங்குகள் அகற்றப்பட்டன.

அவனை மணாளனாகக் கொள்ளும் எழில் இருபதாண்டுப் பாவை!

பாதிரியார், ஆசீர்வதிக்கிறார்-அந்தச் சிற்றூரின் மக்கட் தொகை ஆயிரத்துக்கும் குறைவு - ஆனால் அவ்வளவு மக்களும் அங்கு கூடி இருக்கிறார்கள்; முக மலர்ச்சியும் கண்ணீரும் சேர்ந்து காட்சி தருகிறது.

வாழ்க! வாழ்க! என்று அவர்கள் தழதழத்த குரலில் வாழ்த்துகிறார்கள். தம்பி! மணமக்களை மட்டுமா? வீரத்தை வாழ்த்துகிறார்கள்! பெருமைக்குரிய அந்த மணப்பெண்ணின் உளத்திண்மையை வாழ்த்துகிறார்கள்! இத்தகைய சம்பவங்கட் கெல்லாம் பிறப்பிடமாகிவிட்ட தமது தாயகத்தை வாழ்த்துகிறார்கள்.

அதோ பார் தம்பி! கிராமத்து மக்களின் கனிவை - பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். கண்ணீரைத் துடைத்தபடி, மணமக்களின் கைகுலுக்கி வாழ்த்துகிறார்கள்!

வெண்ணிற ஆடை அணிந்த மணமகள் - மணமகனைத் தழுவிக்கொள்கிறாள்! இருவரும் ஏதோ பேசுகிறார்கள். என்ன பேசுவார்கள்?

எண்ணம் ஈடேறிவிட்டது, இன்பமே!

கனவு பலித்தது, கண்ணாளா!

வானகம், வையகம் வந்தது என் வண்ணப் புறாவே!

தேனமுதைச் சொல்லாக்கித் தருகிறீரே, என் தேவனே!

மலர் பறிப்போமா, என் மனோஹரி!

மணம் தேடிச் செல்கிறீரோ, என் மணாளரே!

பெரும் பிழை புரிந்துவிட்டேன், பெருமைக்குரியவளே உன் முகமலர் என் கரத்திலிருக்க, நான் வேறு மலர் தேடுவது, மடத்தனம்தான்.

போதும் விளையாட்டு!

புனலாடலாம், பொழுது சாயும்வரை.

பிறகு... அதற்குப் பிறகு....

உன் மடியில் நான்.... என் கரத்தில்....

அந்தி சாய்ந்ததும், ஆரணங்கே....

அந்தி சாய்ந்ததும்...

கன்னங்களைக் கீறிக் கீறி...

கண்ணே...

என்ன, அன்பே! குழந்தைபோல!

நகரத்து நாட்டிய சாலைக்கு உன்னை அழைத்துச் செல்வேன்...

சாயம் பூசிய உதட்டுக்காரிகளின் சல்லாபம் பார்க்கவா...? வேண்டாம்....

படக்காட்சிக்குச் செல்வோமா....?

அங்கு காதல் கிடைக்கப் பெறாததால் கலங்கும் காட்சி காட்டுவர்.. வேண்டாம், அன்பே...

ஓவியக் காட்சி...?

எனக்கென்று உள்ள இந்த உயிரோவியம் போதும் என்று சொன்ன சொல்லை மறந்தீரோ....?

மறப்பேனா, மாதரசி! உன்னை மகிழ்விக்க, நான் என்ன காட்சிக்குத்தான் அழைத்துச் செல்வது...?

என்னை மகிழ்விக்கவா, மன்னா?

ஆமாம், என் இன்பமே!....

என்னை மகிழ்விக்க....

எங்கு அழைத்துப்போக, ஆருயிரே....

என்னை மகிழ்விக்க... என் குணாளா! எங்கும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்... என் அருகில் இருந்தால் போதும்.... என் அருகில் இன்னும்.... இடைவெளி இல்லா நிலையில் இதுதான் கண்ணே என் இன்பம்.... ஆம்! வேறு மகிழ்ச்சி தரும் இடமும் உண்டா என்னைப் பிரியா நிலை வேண்டும்.... என் அருகே... இன்னும் அருகே...

இது போலவும் இதனினும் சுவை கொட்டவும் காதலர்கள் பேசிக்கொள்வர்.... நாடக மேடையிலேனும்!''

தம்பி! கடிமணம் முடிந்தது - இவர்கள் ஏதும் அதிகம் பேச முடியாது.

அதோ வந்துவிட்டார்கள் அதிகாரிகள், அவனை அழைத்துச் செல்ல.

மணமகன், மீண்டும் கைதியாகிறான்!

கரம் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள் - இதோ அந்தக் கரங்களில் மீண்டும் விலங்கு பூட்டுகின்றனர்.

திருமணம் முடிந்தது - அவனுக்கு மணவிழா விருந்து இல்லை; சிறையில் வழக்கமாகத் தரப்படும் ரொட்டியும் தண்ணீரும்தான்!!

மணவிழா முடிந்தது, மணமக்கள் இருவரும் கை கோத்துக் கொண்டு மலர்ச் சோலை செல்லப் போவதில்லை, அதோ மணமகன் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டான்!

சென்று வருகிறேன்! - அவன் கை அசைத்துக் கூறுகிறான்.

கண்ணாளா! திருமணம் முடிந்ததும், பிரிவுதானா...? தையல் தேம்புகிறாள்!

தாயகமே! சைப்ரசே! இங்கு இளம் தம்பதிகள், பிரித்து விடப்படும் கொடுமையைப் பார்! பார்! அம்மா, உன் மக்களுக்கு வந்துற்ற அவதியைப் பார்! - ஊர் மக்கள் புலம்புகிறார்கள்.

நீ, ஏனடா, தம்பி, அழுகிறாய்? என் கண்களிலே ஏன் நீர் துளிர்க்கிறது? என்றா கேட்கிறாய். என்ன செய்வது? கண்ணீர், அவர்கட்கு நாம் அளிக்கும் காணிக்கை!

சைப்ரஸ் தீவிலே இதைக் கண்டோம்! தம்பி! நாட்டுப் பற்று மக்களை எத்தகைய வீறுகொள்ளச் செய்கிறது என்பது கண்டோம். எழுச்சி தரும் நிகழ்ச்சியாக அமைந்த திருமணத்தைக் கண்டோம்.

காதற் கணவனை எண்ணிக் கண்ணீர் உகுத்திட, அப்பெண்மணி சென்றுவிட்டாள்.

என் வாழ்வுக்குத் திருவும் மணமும் தேடிக்கொண்டேன். என் தாய்நாட்டுக்கு விடுதலையும் வாழ்வும் பெற்றளிக்க, இனி நான் செய்ய வேண்டியது என்ன என்ன என்று எண்ணித் திட்டமிட்டபடி மணாளன் சிறை சென்றுவிட்டான்.

கடிமணம் புரிந்துகொண்டான். கடுஞ்சிறையில் கொண்டு சேர்த்தனர்-இத்தகைய காதகர் ஆட்சியை வீழ்த்துவது எங்ஙனம் என்று எண்ணிக் குமுறியபடி வீரபுரி மக்கள் தத்தம் வீடுகளுக்கும் வயல்களுக்கும் சென்றுவிட்டனர்.

தம்பி! வா! இனியும் நமக்கு இங்கு என்ன வேலை? நமது தாயகமாம் திராவிடத்தின் விடுதலைக்காக, நாம் செய்ய வேண்டிய பணியினைத் திறம்படிச் செய்தற்கான, உள்ள உரம் தரும் மாநில மாநாடு காணச் செல்வோம்!!

கரம் பிடித்த காதலியைக் கண்ணீர் பொழியும் நிலையில் விட்டு விட்டு, சிறைக் கோட்டம் சென்றுள்ள எழுச்சியை நினைவிலே வைத்துக்கொண்டு, திருச்சி மாநில மாநாட்டுக்குப் போய்ச் சேருவோம். தத்தமது நாடுகளை விடுவிக்க அரும்பாடு பட்டவர்கள், ஆற்றல்மிக்க வீரர்கள், தியாகிகள், அனைவரையும் மனதிலே கொண்டு பிறந்த நாட்டுக்கு வந்துற்ற இழிவும் இன்னலும் நீங்கிடப் பெருங்கிளர்ச்சியில் ஈடுபட, நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதற்கான பாசறையாக அமைந்துள்ள மாநில மாநாட்டுக்குச் செல்வோம்.

எல்லோரும் என் காலில் சிக்குண்டு போயினர் - இதுகள் ஏனோ தாவிக் குதிக்கின்றன!

இதுகள் நடத்தும் கட்சி ஒரு அரசியல் கட்சியா? இது குழப்பக் கட்சி!

தேர்தலுக்கு நிற்பார்களாமே - நிற்கட்டும் - நிற்கட்டும் - தீர்த்துக் கட்டிவிடுகிறேன்!

பெயர் மாற்ற ஒரு போராட்டமாம் - பூ! பூ!-இது ஒரு கட்சியா...?

தம்பி! பச்சைத் தமிழர் காமராஜர் இதுபோலக் கேவலமாகப் பேசுகிறார், நமது கழகம் பற்றி!

உன் நோக்கத்தைக் கேவலம் என்கிறார்; உன் அறிவாற்றலை அபத்தம் என்கிறார்; உன் வீரத்தைக் கேலி செய்கிறார்; தியாகத்தைத் தூசு என்கிறார்; நாட்டையே கூட அல்லவா, தமிழ்நாடு என்று அழைக்க மறுத்துக் கேவலப்படுத்துகிறார்.

இதற்கு-இவர்தம் ஆணவப் பேச்சுக்கு - அலட்சியப் போக்குக்கு - என்ன பதில் அளிப்பது - எவ்வகையில் பதில் அளிப்பது?

திருச்சி மாநில மாநாடு, வீரர் கோட்டம் என்பது விளக்கப்பட்டால்,

பட்டிதொட்டிகளிலிருந்தெல்லாம் பல்லாயிரவர் கிளம்பி, பல இலட்சமாகப் பெருகி, எழுச்சி வெள்ளமாகக் காட்சி அளித்தது மாநில மாநாடு என்றால்,

அங்கு எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், இனிமை பயக்கும் கலை விருந்து இவற்றோடு அமைந்துவிடாமல் திறம்படப் பேசி, செயல்படத் துணிவுகொண்டு, தீவிரமான திட்டம் தீட்டினர் என்றால்,

திருச்சி மாநில மாநாடு அரசியல் வட்டாரத்துத் திருவிழா அல்ல, விடுதலை வரலாற்றிலே ஓர் கட்டம் என்பது விளக்கப்பட்டால்,

கேவலமாகப் பேசிவரும் காமராஜர், உண்மையை உணர முடியும்! அவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உலகு உணரும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்று அந்த உளப் பண்பு உணர்ந்த அறங்கூறும் பெரியோன் குறிப்பிட்டது, ஜாதியை அல்ல-குணத்தை-அறிவை- ஆற்றலை!

உலகம் உணரட்டும் தம்பி, உன்னையும் என்னையும் ஆட்கொண்டிருக்கும், விடுதலைக் கிளர்ச்சி, வீண் வேலை அல்ல என்பதனையும், உயர் இடம் அமர்ந்து கொண்டவர்களின் அலட்சியமும் ஆணவமும், அந்த விடுதலைக் கிளர்ச்சியைக் குலைத்துவிடாது என்பதனையும்.

தம்பி! சைப்ரஸ் தீவுத் திருமணத்திலே நாம் கண்ட எழுச்சி- எழில்-நினைவிலே பதிந்து நிற்கிறதல்லவா!

வாழ்க சைப்ரஸ்!-என்ற வாழ்த்தொலியை மணவிழாவிலும் கேட்டோம்.

வாழ்க திராவிடம்!-என்று முழக்கமிட்டபடி, திருச்சி செல்வோம், வா

 

அன்பன்,

6-5-56