அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


துறவி - காவியில்லை!
1

ஆரியத் தவசிகளும், துறவிகளும் -
மேல்நாட்டு எலினார் அந்தனி கதை.

தம்பி!

இயற்கை தீட்டித் தந்துள்ள "எழிலோவியம்' குற்றாலம், கண்டேன், களித்தேன் என்று கூறினேன் அல்லவா, நினைவிருக்கிறதா, அருவியில், "தருமபுரம்' கண்டேன் என்று குறிப்பிட்டிருந்ததை. அந்தத் "துறவியைக் கண்டதும், என் எண்ணம், துறவறத்தின்மீது சென்றது. இதோ பாரேன், நாமெல்லாம்படுகிற தொல்லைகளை. திராவிடம் ஏன் தனி நாடாக இல்லை, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நமது பலம் பொருந்திய மந்திரிமார்கள், டில்லியால் இளித்த வாயராக்கப்பட்டு விட்டார்களே! என்ன வெட்கக் கேடு இது? சேலத்து இரும்பும் நெய்வேலி நிலக்கரியும் நமக்குப் பயன் படவில்லையே, எவ்வளவு அநீதி இது? என்றெல்லாம் கவலைப் படுகிறோம்; கோவாவில் படுகொலை, பீகாரில் சித்திரவதை, பஞ்சாபில் அடக்குமுறை, என்ற இவைகளைப் பற்றி எல்லாம் எண்ணுகிறோம். நெஞ்சில் பாரம் அதிகமாகிறது, இதோ தருமபுரத்' துறவியானதால், இத்தகைய சுமைகளைத் தாங்கித் தத்தளிக்க வேண்டிய தொல்லைக்கு ஆளாகாமல், மந்திரமாவது நீறு! சுந்தரமாவது நீறு! என்று கீதமிசைத்துக் கொண்டு, (மெல்லிய குரலில்-மனதுக்குள்ளாகவே சில வேளைகளில்) உமையொரு பாகனை எண்ணிப் பெருமிதம் கொண்டு, சிவானுக்கிரகத்தைப் பருகி, பொன்னர் மேனியராக விளங்கி,

காமாட்சி
மீனாட்சி
விசாலாட்சி
நீலாயதாட்சி
சிவகாமசுந்தரி
குழல்வாய்மொழி
குவளைக்கண்ணி
கோமதி
குமாரி

என்று அம்மைக்கு அஞ்சலி செலுத்தியும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளே! என்றும், பாகுகனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா! என்று முருகனைத் தோத்தரித்தும், "அருக்கு மங்கையர் மலரடி வருடியும் கருத்தறிந்தபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் ஆங்குள அரசிலை தடவியும் அழியாதே' என்று அறநெறி உரைத்துக் கொண்டும், திருக்கோலம் காட்டியும், அடியார் தரும் காணிக்கையைக் குவித்துக் கொண்டும், கோலோச்சமுடிகிறது. பண்டங்களின் விலை வீழ்ந்தாலும் ஏறினாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்தாலும் கூடினாலும், எது பற்றியும் கவலையின்றி இவைகளைப்பற்றி எண்ணி ஏங்கிடச் "சாமான்யர்கள்' உளர், நாம் சதாசிவத்தின் பூலோகப் பிரதி பிம்பமாகக் காட்சி தருவோம் என்று கூறாமற் கூறிக் கொலு வீற்றிருக்க, அவரால் முடிகிறது. துறவி! எனவே அவருக்கு எதுவும் துரும்பு! வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும்போது ஏன் அவர் ஏழையர் உலகுக்கு வந்துற்றிடும் இடர்ப்பாடுகள் பற்றி ஏக்கம் கொள்ளப் போகிறார்! விடைஏறும் எம்மான், அவருக்கு அளித்துள்ள பதவி இருக்கும்போது, பஞ்சமும் பட்டினியும், பசியும் கொட்டுவதாலே பதறிப் பரதவிக்கும் பாமரரின் நிலையிலா அவர் இருக்க வேண்டும்! செச்சே! சிவனருள் சாமான்யமோ! செய்வருக்கும் சில பல மனக்குறை எழக்கூடும்! கோட்டையில் கொடிகட்டி ஆள்வோருக்கும் சிற்சில வேளைகளில் தொல்லையும் துயரமும் தாக்கிடும். இந்தத் தறவிக்கோ, எல்லாம் இன்பமயம்! எங்கும் இன்பமயம்! காலையிலே, மாலையிலே, காகம் கரையும் வேளையிலே மடத்திலே, வேறு இடத்திலே, எங்கும், சிவானுபவம், சுகானுபவம்! துறவிக்கன்றோ கிட்டும் இத்தகைய தேன் சொட்டும் வாழ்க்கை!

தம்பி, துறவிக்குக் கிடைக்கும் இந்த "இன்ப வாழ்வு' பற்றிய எண்ணம். எனக்கு மேலிட்டதால், நான் முன்னாளில் துறவியின் நிலை இருந்த தன்மை பற்றியும், இந்நாளில் துறவி என்பது எத்தகைய பக்குவமான பதவியாக மாறிவிட்டது என்பது பற்றியும் எண்ணிடலானேன். அரண்மனையில் பிறந்த இளங்கோவும் துறவிதான்! இதோ என்று அடுப்படி உழன்றோர் கூட துறவிகளாவதன் மூலம், அரண்மனை அந்தஸ்துப் பெறுகிறார்கள்! துறவி இளங்கோ தமிழில் காவியம் இயற்றினார் - சிலம்பு ஒலிக்கிறது! இன்றையத் துறவிகளின் சன்னதியில்,

நூபுரம் கலீர் கலீரென
நேத்திரம் சுரீல் சுரீலென
பாத்திரம் பளா! பளாவென!

தோத்திரங்கள் நடைபெறுகின்றன என்று கேள்விப்படுகிறோம்.

ஒரு வேடிக்கை தெரியுமா, தம்பி! துறவி - தவசி - என்று இரு சொற்கள் கேட்டிருக்கிறோமல்லவா - முன்னது பெரிதும் தமிழகத்துக்கே உரிய தனிப்பண்புக்கு உறைவிடமாகவும், பின்னது ஆரிய கலாச்சாரத்தின் இருப்பிடமாகவுமே, ஆதி நாட்களி லேயே இருந்து வந்திருக்கிறது.

இன்பமான வாழ்க்கையில் இருப்பதற்கான நிலை இருந்து, அதனைத் துறந்திடும் பெரியோன், துறவி! அத்தகைய துறவிகளைத் தமிழகம் அந்நாளில் கண்டது. கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் வாய்ப்பும், கோகில மொழியாள் கொஞ்சிட, மஞ்சமதில் மிஞ்சு சுகம் பெறுவதற்கான வசதியும், நிரம்ப இருந்ததைத் துறந்தார் இளங்கோ அடிகள்! பட்டுப் பட்டாடையைத் துறந்து, காவி அணிகிறார்! வரி கட்டினாரா? கப்பப் பணம் தப்பின்றி வந்து சேர்ந்ததா? கரிப்படையில் குறைவேதேனும் உளதோ! வேற்படைத் தலைவனைக் காணோமே, எங்கே? - என்று கேட்டு அரச காரியத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலை இருந்தது, இதனைத் துறந்தார், செந்தமிழின் சிறப்பினை விளக்கிடும் சிலம்பு சமைத்தளித்த சீலர், கணிகையர் குலத்துதித்த மணிமேகலை, துறவுக்கோலம் பூண்டு மக்களின் பசிப்பிணிப் போக்கிடப் பாத்திரமேந்தி நின்றதுடன், மக்கள் தம் பவப்பிணி ஒழித்திடும் மார்க்கம் போதித்து வந்தது பற்றிப் படித்துப் பெருமிதம் கொள்கிறோம். துறவு இத்தகைய தூய்மைக்கு நிலைக்களனாக, தொண்டுக்கு வாய்ப்பாக, இருந்தது. எல்லாத் துறையிலும் செம்மை கண்ட நந்தம் நாட்டிலேதான்! ஆனால் ஆரிய பூமியிலோ! தவசிகள் உண்டு! துறவிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம்! துறவிகள் மனிதருள் மனிதராக, ஆனால் மாமனிதராக இருந்து வந்தனர்! ஆரியத் தவசிகளோ, மனிதருள் தெய்வங்களெனக் கருதப்பட்டு வந்தனர். காடு சுற்றியும் கானாற்றின் கீதம் கேட்டு இன்புற்றும், கல்சொல்லும் கவிதையையும் காரிருளைப் போக்கிடும் மதிதரும் அன்புரையையும் மக்களுக்கு உய்யும் வழி கிடைத்தற்கான அறநெறியையும், அருளினர், நந்தம் நாட்டுத் துறவிகள்! அடி வீழ்ந்து வணங்கிட மன்னர்களும், கேட்டபோது நவநிதி கொட்டித்தரக் காவலரும், ஆடிடும் அணங்குகளும், பாடிடும் பாவையரும், பணிவிடைக்காகப் பட்டுடுத்திப் பார்வையால் கொல்லும் பசுங்கிளிகளும், தேவை என்று நமது துறவிகள் கேட்டதில்லை - அந்நாளில்! மலரம்பு பட்டதால் துடித்துக் கிடக்கும் பட்டத்தரசர்களுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியூட்டும் மாமந்திரம் கூறிடும் ஆற்றலற்றவர்கள் நமது துறவிகள்! ஆரியத் தவசிகளோ! பர்ணசாலைகள், ஆற்றோரத்தில் சோலையின் நடுவில். சாலைப் பக்கத்தில்! தென்றல்சாமரம் வீச, தேமாங்கனி குலுங்கும் பூங்காவிலிருந்து கிளியும் நாகணவாய்ப்புள்ளும், குயிலும் புறாவும் பிறவும் இசை பயில, மான்கள் துள்ளித்திரிய, மன்னர்கள் கைகட்டி, வாய்பொத்தி நின்று, கேட்டது தர, பணிவிடைப் பெண்கள் புடைகுழ, பத்தினிகளுடன் "ரசானுபவத்தைப்' பருகி இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஈசனை மறந்தனரோ எனின், இல்லை, இடையிடையே யாகம், யோகம், உண்டு. வேள்விப் புகை கானகத்தை மணக்காடாக்கும் - தவசியின் பர்ணசாலைகளைச் சிங்காரக் கூடமாக்கும்! தேவலோக மேனகை தொட்டிட, காமம் துளிர்த்தது ஆஸ்ரமத்திலன்றோ! திலோத்தமையும் ரம்பையும், ஊர்வசியும் மற்ற மற்ற விண்ணு லகத்து ஆடலழகிகளும், ஆட்கொல்லிகளும் அடிக்கடி வந்து, தடைகாட்டி, கனகப் பந்தினை ஆட்டி, காவி கமண்டலமேந்தி களைப், பம்பரமாக்கி கலகலவெனச் சிரித்து, பொலபொல வெனக் கண்ணீர் உகுத்து, இன்பப் பெருக்கால் ஆஸ்ரமங்களை இந்திராதிதேவர்களும் கண்டு பொறாமைப் படத்தக்கதான புனித ஸ்தலங்களாக்கி உள்ளனர்.

"கோழி கூவிற்று கோகிலமே! ஆறு சென்று அனுஷ்டா னாதிகளை முடித்துக் கொண்டு வருகிறேன்! அன்னமே! ஏன் எழுந்திருக்கிறாய்! கமண்டலத்தை நான் தேடி எடுத்துக் கொள்கிறேன். ஆயாசம் நிரம்ப இருக்கிறது ஆருயிரே! நீ சற்று நேரம் அயர்ந்து நித்திரை செய்'' என்று கூறிவிட்டு அவர் செல்ல, அவள் கண் அயர்ந்த நிலையில், "அன்னமே! சொர்ணமே! கன்னலே மின்னலே! கட்டித் தங்கமே! எட்டிப் போகாதே என் இன்பமே!'' என்று மீண்டும் கொஞ்சுமொழி கேட்ட பாவை, கேட்டார்க்குக் கேட்டது அருளும் வள்ளல் போல் மனதறிந்து நடந்துகொள்ள, அந்த விருந்து உண்ட நிலையில், அவன் ஆஹஹாரம்! போட, புதுமையா இருக்கிறதே! இதுநாள் வரை நான் கண்டறியாத பேரின்பமாகவன்றோ இது உளது! என்றெண்ணி, அந்தப் பூவை புளகாங்கிதமடைய, கபடமறிந்த கௌதமன், கல்லாக்கிய, அந்தக் கட்டழகி அகலிகை கண்ணாயிரம் உடையான் என்று இன்று பாமரர் கொண்டாடும் இந்திரனைக் கூடிச் சுகித்த இடம் தவசியின் ஆஸ்ரமமன்றோ! அங்கம் தங்கம்! ஆடும் முல்லை பாடும் கண்கள்! தேடும் இதழ்! என்றெல்லாம் பரவசப் பட்டுக் கூறி, கெண்டை அழகும் கொண்டை அழகும், இடையின் நெளிவும் தொடையின் தரமும், அங்கம் ஒவ்வொன்றிலும் பருவ கருவம் பதிந்து கிடக்கும் பான்மையும் இருத்தலைக் கண்டு, துஷ்யந்தன் மனமகிழ்ச்சி கொண்டு, மானும், அன்னமும் மிரண்டோட, மலர்கசங்க கனிசிதற, கன்னியர் வெட்கத்தால் கண் பொத்திக் கொண்டு, வேறுதிக்கு நோக்கி ஓடிட, துடியிடையாளைத் தொட்டிழுத்து முத்தமிட்டுப் பட்டத்தரசி யாக்குவேன்! கட்டிக்கரும்பே! என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்! என்று கனிமொழி பேசி, கன்னியின் புதுப்பார்வையால் துளைக்கப்பட்ட கட்டுடலின்மீது பட்ட காமன் கணைகள் பொடிபட இன்பம் பெற்று இகத்தில் இதோ பரம் கண்டேன் என்று பூரித்துக் கூறிக் சகுந்தலையை வாரி அணைத்துக் கொண்ட இடம், கண்வரின் ஆஸ்ரமம் அல்லவோ!! அத்திரியும் பிறரும், தவசிகளில் குறிப்பிடத்தக்க எவர் பற்றியும் கூறப்பட்டுள்ள புண்யகாதைகளில் இந்தப் "புனிதம்' ததும்பிடக் காண்கிறோம். தவசிகள் இருந்தநிலை, பல ஆண்டுக்காலம் பகலென்றும் இரவென்றும் பாராமல், ஊணும் உறக்கமும்கூட மறந்து தொழில் நடத்திப் பெரும் பொருள் ஈட்டி, இனித் தம்மிடம்குவிந்துள்ள செல்வம், சிதையாது குறையாது என்ற நிலை பிறந்ததும், பாரிசு சென்று, என்னைப் பார் என் அழகைப் பார் கண்ணாலே! என்று இதழால் கூறிடும் இன்ப வல்லிகளுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடும் கனவான் போன்று பெரிதும் இருப்பதைக் காணலாம். ஆரியத் தவசிகள், ஆசாபாசங்களை விட்டொழித்தவர்களாகவோ, காமக் குரோதாதிகளைச் சுட்டெரித்தவர்களாகவோ, பற்று அற்றவர்களாகவோ காட்டப்பட்டு இல்லை! மாபெரும் போர் பல புரிந்த பிறகு, மன்னர்கள் பெறக்கூடிய மதுநிகர் இன்பத்தை இந்தத் தவசிகள், மகேசனுக்கு எம்மிடம் மட்டற்ற அக்கறை உண்டு என்று கூறுவதாலேயே பெற்றனர்! அவர்களுக்கு குலச் சண்டை, குடும்பச்சண்டை, குமரிகளால் மூண்டிடும் குத்து வெட்டு, யாருக்கு யார் சீடர், என்பது பற்றிக் கிளம்பிடும் சச்சரவு சமர், யாருடைய அந்தஸ்து பெரியது என்பதுபற்றிய அமளி,எல்லாம் உண்டு!! காட்டு ராஜாக்கள் என்று கூறி, அது எத்தகையது என்பதுபற்றி எண்ணிப்பார்த்துத்தெரிந்துகொள்க என்று கூறிடத் தோன்றுகிறது, தம்பி, அவ்வளவு கோலாகலமாக இருந்து வந்தனர் ஆரியத் தவசிகள்! ஆரியத் தவசிகள் துறவிகளல்ல மிக மிகக் கர்விகள் என்பதைத்தான் அவர் பற்றிய சில பல கதைகள் காட்டுகின்றன!

இன்று தமிழகத்தில் உள்ள துறவிகள், இளங்கோ காட்டிய வழியில் செல்கின்றாரில்லை, செல்லும் திறனும் இருப்பதாகத் தெரியவில்லை, அவர்தம் நெஞ்சை இன்று ஆட்கொண்டி ருப்பது. அன்றைய ஆரிய தவசிகள் முறைதானோ என்று எண்ணத்தக்க வகையில், காரியம் பல நடைபெற்று, மூடி மறைக்கப்பட்டதுபோக, புடைத்து வெடித்து வெளியே சில தெரிந்திடக் காண்கிறோம். துறவிகள் தவசிகளாகி விட்டனர்.

தம்பி, துறவிகளின் நிலை பற்றிய எண்ணம் குடைந்த நிலை யிலிருந்த எனக்கு, ஒரு துறவி பற்றிய சிறு ஏடு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜெரோம் - கே-ஜெரோம் - என்பவர், ஆங்கில உரைநடை யாசிரியரில் கீர்த்தி பெற்றவர். நகைச்சுவை ஏடுகள் தீட்டுவதில் சமர்த்தர். அவர்தம் ஏடுகள், பல்வேறு மொழிகளிலே வெளியிடப்பட்டன. அவருடைய புத்தகமொன்று படித்தேன், குற்றாலத்தில்,

கதைதான்! மிகமிகச் சாதாரணமான கதை! அதிலே சரசம் சாகசம், சதி, துப்பறிதல், கொலை வஞ்சம் தீர்த்தல். இயற்கை வருணனை, வழக்கு மன்ற வாதம், இவைகள் ஏதும் கிடையாது. ஒரு சாமான்யனுடைய மிகச் சாதாரணமான கதை. கொல்லன் மகன் ஒருவன், உழைப்பாலும் திறமையாலும் ஏழ்மையை விரட்டி அடித்து, செல்வனான வாழ்க்கை வரலாறு. காதல், நெஞ்சை அள்ளத்தக்க வகையில் இல்லை! நள்ளிரவு சந்திப்புகள், நயவஞ்சகனின் எதிர்ப்பு, ஏந்திழையாள் உகுத்த கண்ணீர், இவன் இதயத்தைத் துளைத்திடுவது இதெல்லாம் இல்லை. சாதாரண கதை. சரி, கேளேன், கதையைத்தான்.

அந்தனி ஜான் என்பது பெயர்; கதாநாயகன் பெயரும் அதுதான்.

அந்தனி, ஒரு கொல்லன் மகன்! தந்தை கடுமையாக உழைக்கிறார்.

போதுமான வாழ்க்கை வசதி கிடைக்கவில்லை. தாயார் பாடுபடுகிறார். குடும்பம், தட்டித்தடுமாறி நடந்து கொண்டிருக்கிறது. சிறுவனாக இருப்பது முதலே, அந்தனி, சுறுசுறுப்பும் அறிவுத் திறனும் மிகுந்தவனாக இருக்கிறான். எதையும் துருவித்துருவி ஆராய்கிறான், ஏன்? ஏன்? என்ற கேள்விதான் அவனுக்கு அரிச்சுவடியாக அமைகிறது.

முறைப்படி அந்தனியைப் படிக்க வைக்கிறார்கள்; கல்வியில் அவன் கருத்தூன்றிப் பலன் காண்கிறான்.

அவன் மாமன், ஒரு முரடன் ஊரார். அவனை நாத்திகனென்கிறார்கள். அவனிடம் அந்தனி, அன்பு கொள்கிறான்.

அந்தச் சிற்றூரில் ஒரு சீமான் குடும்பம்!

சீமான் வழக்கறிஞர், வணிகர், இதனாலேயே சீமானானவர்; நல்லவர்; பிறருக்கு உதவிபுரியும் நன்னெஞ்சினர்.

அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் பெய்ô, பெட்டி.

அந்தக் குடும்பத்தின் உதவி கிடைக்கிறது, அந்தனிக்கு பெட்டி அந்தனியிடம் பாசம் கொள்கிறாள். அது காதலாக மலரும் என்று பலரும் கருதுகிறார்கள்!

தொழிலில் தேர்ச்சிபெற்று, அந்தனி, தன் குடும்ப நிலையை உயர்த்துகிறான்.

ஊழியனாகச் சேர்ந்தவன், நாளா வட்டத்தில், சீமானுடைய தொழிலில் பங்காளனாகிறான்; பணம் குவிகிறது; படாடோபம் தலைதூக்கவில்லை; பணம் கெடாத வகையில் வாழ்க்கை நடத்துகிறான்.

எல்லோரும் அந்தனி, சீமானின் மருகனாவான் என்று எதிர்பார்க்கிறார்கள். பெட்டியும் மறுத்திருக்க மாட்டாள். எனினும் அந்தனியின் மனம் வெறோர் மங்கையை நாடுகிறது. பெட்டி கண்ணீர் பொழியவுமில்லை, "காதகா! பாதகா! கனவு கண்டதெல்லாம் பொய்த்துப்போய் விட்டதே! இனி என் எதிரே நிற்காதே! என் மாளிகையில் உனக்கு இடம் கிடையாது. நட, நட!'' என்று கனல் கக்கவில்லை. எலினார் மணமகளாகிறாள்.

குடும்பம் குதூகலமாக நடந்து வருகிறது - குழந்தைகள் பிறக்கின்றன.

சீமானும் அவன் மகனும் இறந்து விடுகிறார்கள்.

அந்தனி, ஏழைகளுக்கு இதம் தரும் பணிகள் பல செய்கிறான்.

புகழ் பெறுகிறான் - எனினும் அவன் மனதில் சாந்தி இல்லை.

கடவுள் பற்றி அவன் சிறு வயது முதல் சிக்கல் நிரம்பிய சிந்தனையில் ஈடுபடுகிறான்.

முடிவில், கடவுள் தன்மை பற்றி இதுவரை கூறப்பட்டு வந்த கொள்கைகள் பொருளற்றவை என்று உணருகிறான்.

ஏழைகளுக்கு உதவுவதற்காகப் பொருள் ஈட்டுவது முறை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தவன், அதுவும் தவறு என்று உணருகிறான்.

உண்மையான தொண்டு, தன்னலமற்றதாக இருத்தல் வேண்டும் என்று உணருகிறான்.

மிகுந்த செல்வ நிலையில் இருந்தவன், அனைத்தையும் துறந்துவிடத் தீர்மானிக்கிறான்.

மீண்டும் ஏழைகளிடையே சென்று, எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டு, அவர்களுக்கான பணியாற்ற முனைகிறான்.

பெட்டி, அவனுடைய போக்கை ஆதரிக்கிறாள்.

சுகபோகமும், செல்வநிலையும் இழந்தாலும் பரவாயில்லை, அந்தனிக்குத் துணைநிற்பதுதான் அறிவுடைமை அன்புடைமை என்று எலினாரும் முடிவு செய்கிறாள்.

அந்தனி, துறவியாகிறான்! மனைவி, குழந்தைகள், உண்டு!! தொழில் நடத்துகிறான், தன்வாழ்க்கைக்கான வசதிபெற! தொண்டுபுரிகிறான்! அவனுடைய துறவு, ஏழைகளுக்கு ஓர் நல்வாய்ப்பாகிறது.

தம்பி! இதுதான் கதை!! ஒரு கவர்ச்சியும் தெரியவில்லை அல்லவா!! இச்சொலியும் விம்மலும், முழக்கமும் முணுமுணுத் தலும், கூடிப்பிரிதலும் கொண்டாட்டமும் ஏதுமில்லை. எனினும், இந்தக் கதையின் மூலம், ஜெரோம்-கெ-ஜெரோம், அளிக்கும் கருத்து, உண்மையிலேயே, படிப்போரை, புதியதோர் உலகுகொண்டு சேர்க்கிறது.

உண்மைத் துறவு, என்ன என்பதை உணரமுடிகிறது!

இக்காலத் துறவிகளைக் கண்டு, என்னே! காலத்தின் கோலம்! என்று ஏங்கும் மனத்தினருக்கு, அந்தனி கதை, உண்மைத் துறவு நிலை எங்ஙனம் மேம்பாடுடையதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

குப்பை மேட்டில் பிறந்த அந்தனி, கோலாகலமான வாழ்க்கை நடத்துவதற்கான வசதியைப் பெறுகிறான்.

கொல்லன் பட்டறையில் பிறந்தான், கோட்டை போன்ற மாளிகையைப் பெறமுடிந்தது.

நாற்றமடிக்கும் சேரியில் பிறந்தான், உல்லாச உலகிலே இடம் பெற்றான்; ஏழையர் விடுதியில் நாற்றம் குறையவும், சிறிதளவேனும் அவர்களுக்கு ஏற்றம் கிடைக்கவும், அவன் வழிகண்டான்.

எனினும், இறுதியில், அவன் தன்னலமறுப்பு ஒன்றின் மூலமாகத்தான் ஏழையர் உலகுக்கு உய்வுதேட முடியும் என்று உணருகிறான் - துறவியாகிறான்!

அவன் விரும்பி இருந்தால், சீமானாகவும் தர்மவானாகவும் மதத் தலைவனாகவும், ஊராள்வோனாகவும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.

உழைப்பால் உயர்ந்தோன்-என்று ஊரார் அவனைப் பாராட்டினர்.

ஏழையாகப் பிறந்தாலென்ன, அறிவு இருந்தால், அந்தனி போல அந்தஸ்தான நிலை பெறமுடியும் என்று அனைவரும் கூறினர்.

அவன் ஒரு எடுத்துக்காட்டாக, விளங்கினான்,

எனினும், உடைமைகளை உதறிவிட்டு உயர்ந்த இடத்தை விட்டு விலகி, எளிய வாழ்க்கையையும் ஏழையர் உலகிலே ஒரு இடத்தையும் மீண்டும் கொள்கிறான் - துறவியாகிறான்.

துறவின் மூலம், அவன் வானுலகில் இடம் கேட்டா னில்லை-வணங்கத்தக்க தெய்வத்தினிடம் வரம் கேட்க அல்ல, அவன் துறவியானது, துடிக்கும் ஏழையர்க்குத் தொண்டாற்றத் துறவியாகிறான்.

அந்தத் துறவியுடன், நாம் காணும் ஆதீனத் துறவிகள், அஷ்ட ஐஸ்வரியத்தைப் பெற்று ஆனந்த வாழ்வு நடாத்தும் துறவிகள், ஆகியோரை ஒப்பிடும்போது, நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது.