அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உழைப்பே செல்வம் !

சீனாவில் நடிகையின் அரசியல் வேலை -
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் -
உழைப்பின் பெருமை.

தம்பி,

நாடகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும். கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார் கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும் படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!

"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள் - என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் "தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால் உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள் நான்!''

" என் அன்பே! இன்பமே! அன்னமே!...''

"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?''

"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும், பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி யாளே!''

"ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும் பேய்க் குணம் கொண்டோராயினர்! வானத்து வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!''

"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள் காண விரும்புகின்றனர் போலும்!''

"கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது திருநாமத்தைத்தான் ஒலிக்கும்...''

"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே! நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன், ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர் துறப்பேன்''

தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.

நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற் கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப. காதல் மட்டும்தான் உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன? மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம் புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு, கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக் காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி காணவேண்டும்!

"பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக, எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும் பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்.''

"பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!'' "அப்பாவியும் அப்படிக் கூறானே! அன்புக்கே உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல் எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.''

"பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால் பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப் பொருள் தேவைப்படுகிறது.''

"பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?''

"இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்.''

"நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்.''

என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி, எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை, விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம், தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்? எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப் படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான் கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில் கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப் பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!

தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல் தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச் சந்திக்கலாம்!!

டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில் உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.

நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு, கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும் காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப் பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப் பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.

வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக இருக்கிறது! நாடகமேடையில் "நவரசம்' சொட்டச் சொட்ட நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில் காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.

புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும் புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும், தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும், புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும் மன்றத்திலே.

நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம் நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய, பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும் கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும் கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப் பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம் இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.

சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, - சட்டம் இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக் காணோம்.

இங்கு - காமராஜர் - கேட்கிறார் - அவர் கேட்கிறாரே நாமும் அதே "பாணியில்' பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும் கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று.

உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில், நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத் திகழும் சூயென்லாய், அந்த "நடிப்புச் செல்வி'யைப் பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன.

தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல் கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம் வெதும்பிய நிலையில் உள்ளவர்கள்.

"நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்கின்றனர்.

நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால் கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத் தாக்குதல். எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது; களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள் நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் - தங்களிடம் இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்!

நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும் ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.

நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!! பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித் துடித்து அழுதனர்.

தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில் காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத் தக்க திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம் கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!

சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா என்று கேட்கக் காணோம்! இது குறித்து நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது மற்றோர் தகவல்.

வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் - வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.

புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச் செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.

எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என் வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.

"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ''

என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக் கொல்லும் ஓர் கட்டழகி.

அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.

இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும் கரையச் செய்யும் என்பார்கள்.

இந்தச் "சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!

இந்த ருசிகரமான சேதியை "சோஷலிஷ்டு' இதழில் காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச் சம்மதித்தால்.

"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச் சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடக மாடுவோர்கள், நாடாள்வதாவது?'' என்று கேட்கிறார்.

இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும் என்னும் கதையாக, ஒரு அருமையான "பாயிண்டைக்' காமராஜர் பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.

இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில சம்பவங்கள் தெரியும்.

ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர் கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில் சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொண்டாராம்.

இந்த இளைஞர்தான், இன்றைக்கு ஆசியாவிலே வயது முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி தங்கத்தூரு - பிரகாசம் பந்துலுகாரு அவர்கள். அவர் நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?

அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை வாய்ந்தவர் ஸ்ரீ சத்திய மூர்த்தி அவர்கள்.

சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர் அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல. அவரே சில தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு நாடகம் நடித்துள்ளார்.

காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், "தீரர் சத்தியமூர்த்தி' என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம் வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும் சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.

தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண் டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப் பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன் மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று எண்ணிக்கொள்கின்றனர்.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம் அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற "தொடை நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள் உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.

பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி, புதிய "பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப் பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில் பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம் பிறக்கும்.

கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற, கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால் தராத பசுவுக்கு "தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன் கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும் கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும், எவரெவருக்கு என்னென்ன அச்சாரம் தரவேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி! "மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே'' என்று வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப் போவோம், கவலை என்ன!!

தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில் ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம் எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப் பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக் காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல், ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்; இவைகளுக்கெல்லாம், மக்கள், பாடம் புகட்டக் காத்துக் கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது, தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம் போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன் விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே, வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா? வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்; நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக் காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது; வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும் தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம் நிச்சயமாக!

தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்! மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந் தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார் களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம் நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது, ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது!

அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று உனக்குக் கவனத்திலிருக்கட்டும் - சென்ற பொதுத்தேர்தலில் பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர் கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக் கின்றனர்; வேறு சிலர் "வனவாசம்' சென்றுவிட்டனர்; ஆனால் அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக் காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும் நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப் பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ் இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம் நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்!

மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும், முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர்.

என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள் முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில் அதுபோலவே, எங்கும் "ஜெய பேரிகை' கொட்டப்போவது போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே, காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான் அறிவிக்கப்பட்டுவிட்டது!

வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று குழைந்தும், வாசனை பூசியும், "இரவல்களை' இழுத்துக் கொண்டு, இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ -வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்! கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!

ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.

மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.

நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.

நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.

நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின் வாழ்விலே ஒளி இல்லை.

முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!

பேசுவது "ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!

வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது. இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில் பேசியுமிருக்கிறார்.

தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு நடத்தப்படும் துரைத்தனம் இது.

வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!

தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி, இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு, "நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று ஏசுகிறார்கள்; ஏசட்டும்!

உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும் முற்போக்குத் திட்டங்களை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்.

எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக் காட்டுவோம்.

ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார் இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை எடுத்துக் கூறுவோம்.

இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே, அதனை உலகறியச் செய்வோம்.

இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம் தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின் இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே, கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன் பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார் வருகிற இடமெல்லாம், இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள்.

எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல் பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக் கழகத்துக்கும் தெரியப்படுத்து.

அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய்.

பணத்துக்கு என்னடா தம்பி, குறை!!

கள்ளங்கபடமற்ற உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம் ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழி வல்லவா! உன்னிடம் உள்ள "திறமை' பயன்பட்டால் போதும், பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை ஏதும் செய்துவிடாது!

தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன் வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை!

வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி! கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால், மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை.

செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும ஒரு அணா - தேர்தல் செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி கிடைக்கும்.

பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப் பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறு.

வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள் பரப்பு!

எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்!

அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே.

ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு இடமளித்துவிடாதே!

ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு வழி இழுத்துச் சென்றுவிடும்.

தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய விளக்கம் அளிக்கும்.

அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல, தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும் என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன்.

கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக் கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது! - எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம் உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்! வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! உழைப்பே செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா?

அன்பன்,

15-7-1956