அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வேதனை வெள்ளம்

கே. வி. கே. சாமியின் மறைவு

தம்பி!

நெஞ்சிலே பெருநெருப்பு மூண்டதடா, தம்பி ஓராயிரம் நச்சுப் பாம்புகள் ஒருசேரக் கூடி, இதயத்தைக் கடித்துக் கடித்து, மென்று மென்று கீழே உமிழ்ந்தவண்ணம் இருக்கிறது. வேதனை வெள்ளத்தில் வீழ்ந்து, கரைகாணாமல் தவிக்கும் நிலையிலே இருக்கிறேன். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று நான் சொல்லாத நாளில்லை. இதயம் தாங்கிக்கொள்ள முடியாத பெரு நெருப்பு புகுந்து, சுட்டு எரிக்கிறது. உட்கார்ந்தால் உடல் சாய்கிறது. உடலைக் கீழே சாய்த்தால் தானாக எழுகிறது. நடமாடினால் கால்கள் நடுக்கமெடுக்கின்றன, பேசினால் நாக்குக் குளறுகிறது. நண்பர்களைச் சந்தித்தாலோ, கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்புகிறது. ஐயயோ வேதனை, வேதனை, இது நாள்வரை நான் அனுபவித்தறியாத வேதனை! எவராலும் தாங்கிக் கொள்ள முடியாததோர் வேதனை! எந்தக் காதகனும் கன்மனம் படைத்தோனும், எண்ணவும் சொல்லவும் கூசும் விதமான கொடுமை நேரிட்டுவிட்டதே! வாழ்கின்ற இடம் நாடா, காடா? சூழ இருப்போர் மனிதர்களா, கொலைபாதகர்களா, கொடிய காட்டு மிருகங்களா? இதென்ன 1956 தானா அல்லது நாக்கறுத்து மூக்கறுத்து, கண்டதுண்டமாக்கிக் கொலைபுரியும் காட்டுமிராண்டிக் காலமா? என்றெல்லாம் எண்ண எண்ண, நெஞ்சிலே குபீல் குபீலென்று ஓர் ஜுவாலை கிளம்பி, தகித்துத் தள்ளுகிறது என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது. ஐயயோ! என்று அலறி மாரடித்து அழுது புரண்டு புரண்டு அழுது, காணும் நண்பர்களுடன் கூடிக் கூடி அழுதாலும், கப்பிக்கொண்டுள்ள துக்கம் ஒரு துளியும் விலகுவதாகக் காணோம். என்னைப் பிடித்திழுத்து, செயலற்றவனாக்கிவிட்டது. பித்தன்போல, வெறிச் சென்றதோர் பார்வையுடன் இருக்கிறேன். பேயறைந்தது என்பார்களே, அதுபோன்றதோர் கோலம் என்னைப் பிடித்துக்கொண்டது. நான் எந்நாளும் இதுபோன்றதோர் வேதனையைக் கொண்டதில்லை.

நடுநிசிக்குமேல், இரண்டிருக்கும். அடிகள் நாக்குக் குழறக் குழற, சென்னையிலிருந்து கிடைத்த சேதியைக் கூற வந்தார். இல்லத்தில் படுத்து, அந்தக் கிழமை இதழில் நான் நாட்டுக்கு அளித்துள்ள கருத்துகளைப்பற்றி எண்ணியபடி இருந்த என்னிடம்.

"அடிகள்?'' - என்று நான் கேட்கிறேன் - படியிலிருந்து கீழே உருண்டு விழுந்து விடுபவர்போல் காணப்பட்டார். என்ன? - என்று நான் கேட்க, "நமது சாமி... தூத்துக்குடி சாமி...'' என்றார், கண்ணீர் தளும்பியபடி... "என்ன, என்ன தூத்துக்குடி சாமிக்கு... என்ன?... என்ன...'' நான் கேட்கிறேன், நடுக்கும் குரலில்... "யாரோ, அவரை... கொலை... போய்விட்டாராம்....'' என்றார்; அந்தத் தாக்குதலிலிருந்து நான் இந்த விநாடிவரையில் மீளமுடியவில்லை, முழுதும் மீள என்றைக்குமே முடியாதடா தம்பி, முடியாது. இதயத்திலே ஏற்பட்டுவிட்ட பிளவு, குறையாது, மறையாது...

அந்த விநாடியிலிருந்து வேதனை வெள்ளத்தில் வீழ்ந்து பட்ட நான், என்ன செய்வது, என்ன எண்ணுவது என்று தெரியாமல், திகைத்துப்போய், கிடக்கிறேன்....

அஞ்சாதீர்கள் - எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் - மலை குலைந்தாலும் மனம் குலையாதவன் தமிழன் - இன்னல் இடுக்கண் வரிசை வரிசையாக வந்து தாக்கினாலும், கலங்காதவன் திராவிடன்! அஞ்சா நெஞ்சுடையோன்! தம்பி, ஆயிரம் தடவை கூறி இருப்பேன், பல்லாயிரம் தடவை எழுதி இருப்பேன், மேடைகளிலே நின்று இவைதமை முழக்கியிருக்கிறேன், இதோ கவிழ்ந்த தலையைத் தூக்கிவிட முடியவில்லை, பொங்கும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பதறும் உடலத்தைக் கட்டுக்குக் கொண்டுவர இயலவில்லை, வேதனை பிடித்தாட்டுகிறது. ஆபத்து என்றால் அஞ்சா நெஞ்சம் இருந்தால்போதும் எதிர்த்து நிற்க. இது நமது இதயத்தை அல்லவா சுட்டெரிக்கும் பெருநெருப்பு - அந்தோ! எத்தனை நாளாக எண்ணி எண்ணித்திட்டமிட்டு, இதயத்தில் இந்தப் பெருநெருப்பை மூட்டினரோ... எத்தகைய இதயம் படைத்த இழிகுண மக்களோ, மனித உருவத்தை எப்படித்தான் பெற்றனரோ, அந்த மாபாவிகள்... எண்ணும்போதே நெஞ்சு வெடித்து ஓராயிரம் சுக்கலாகிவிடும் போலிருக்கிறதே... இப்படியும் ஒரு கொடுமை நடப்பதா... இது போன்றதோர் கொடுமை நடைபெறக்கூடும் என்று எண்ணவே நெஞ்சு நடுக்குறுமே! நடத்தினரே நாசகாலர்கள்! காலம் சுமக்கிறதே அக்கயவர்களை, மண்ணிலே அவர்கள் நிற்க முடிகிறதே! எத்தனை எத்தனை இலட்சம் மக்களின் இதயத்தைப் புண்ணாக்கிவிட்டனர் அந்த இதயமற்ற கொடியவர்கள்... அந்தோ! அந்தோ! அக்ரமமே உருவான அந்த மாபாவிகள் இந்த நம் மண்ணிலே தோன்றினரே! தூத்துக்குடி சாமியை, தமிழ் மாநிலமே! திருஇடமே! பெற்றெடுத்துப் பெருமை பெற்றாய் - எப்படித்தான் இத்தகையோரைப் பெறமுடிந்தது. இதோ தெரிகிறானே அந்த மாவீரன், வடித்தெடுத்த வேல்போல நிற்கிறான், கொள்கைப் பற்று கொழுந்துவிட்டெரியும் கண்களால் பார்க்கிறான் உழைத்து மெருகேறிய உடற்கட்டுடன் நிற்கிறான், உறுதி படைத்த உள்ளம் எனக்கு உண்டு என்று அந்த உருவமே அறிவிக்கிறதே - திருஇடமே! இதோ உன் விடுதலையைத் தன் பேச்சாக மூச்சாகக்கொண்ட செயல் வீரனைக் காண்பாய் உன் தலை உடைபடும் வரையில் ஓயாது உழைக்கும் நோக்குடன் தன்னைத்தானே உனக்கு அர்ப்பணித்துவிட்ட ஆற்றல் வீரனைக் காண்பாய், மக்கள் பணியன்றி வேறோர் நோக்கமில்லை, கழகத் தொண்டன்றிப் பிரிதொன்றிலே என் எண்ணம் பாய்வதில்லை என்று கூறிப் பணியாற்றி வரும், குன்றெடுக்கும் நெடுந்தோளுடையானைக் காணாய்! எவரிருக்கிறார்கள், பிறந்த நாட்டைப் பீடுடையதாக்கும் பெரும் பணியாற்ற? மக்கள் தொண்டாற்ற யார் இருக்கிறார்கள்? அதற்கேற்ற மனதிடமும் கொள்கைப் பற்றும் குன்றாமல், குறையாமல், குலையாமல் கொண்டோர் யார் இருக்கிறார்கள்? என்று கவலைப்படத் தேவையில்லை, இதோ சாமி, தூத்துக்குடி சாமி, பாண்டி மாநாட்டின் படைத் தளபதி, பாட்டாளிகளின் தோழன், கழகத்தின் காவலன், உண்மை உழைப்பாளர்களின் உற்ற நண்பன், என் தம்பி, என் தம்பி, என்று நான் பெருமையுடன் கூறிக்கூறி, திருஇடமே! உனக்குக் காட்டினேன்! அந்தத் திருவிளக்கு அணைந்துவிட்டதே - எண்ணெய் தீர்ந்தா? அல்லவே! அல்லவே! திரி குறைந்தா? அதுவும் இல்லையே! இருளொழிக்கும் இன்ப ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இதயமற்ற கயவர் சிலர் அந்தத் திருவிளக்கை அணைத்து விட்டனரே...

தூத்துக்குடி சாமி - என்றால் தமிழகம், கேட்ட விநாடியிலேயே ஓர் களிப்பு காட்டுமே - பல ஆண்டுகளாக அந்தக் கொள்கை வீரனின் தொண்டு தழைத்து, மணம் தந்து வருவது கண்டு, மகிழ்ந்து இறுமாந்தல்லவா இருந்து வந்திருக்கிறது. தூத்துக்குடி கே. வி. கே. சாமி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டதும் எந்த மன்றத்திலும், மாநாட்டிலும், உள்ள மக்கள், நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களுக்கு ஓர் விருந்து, இதயத்துக்கு ஓர் நம்பிக்கை, நாடு விடுதலை பெற்றுத் தீரும் என்பதற்கோர் அத்தாட்சி இதோ, இதோ, என்று சுட்டிக்காட்டி அல்லவா இன்புறுவர். தத்துவ விளக்கமா செய்வார்? தர்க்கமா பேசுவார்? தழதழத்த குரலா? தட்டுத் தடுமாறும் போக்கா? ஒரு துளியும் கிடையாதே! கழகம் இன்ன திட்டம் தீட்டுகிறது. நான் அந்தக் கட்டளையை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன், கடமையை, எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் நிறைவேற்றியே தீருவேன், இது உறுதி என்றல்லவா தொண்டு உள்ளத்துடன், வீர உள்ளத்துடன் எடுத்துக் கூறுவர். ஆம்! இந்த மாவீரன், செய்து முடிப்பான்! அதற்கான ஆற்றல் இவனிடம் இருக்கிறது! - என்று எவரும் கூறுவரே! அத்தகைய மாவீரனை, தம்பி, இழந்தோமே - நாம் வாழ்கிறோம், வேதனையால் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், வன் கணாளர்கள் நமது குலக்கொடியை வேரோடு பறித்தெடுத்து அழித்து விட்டனரே!

தம்பி, நான் உங்கள் யாவரிடத்திலும், உரிமையுடன் பேசுவேன். சாமியிடம் நான் சொந்தத்துடன் பேசுவேன் - என்னை நன்றாகப் பார்த்தபடியே அவர் இருக்கமாட்டார் - நான் பேசும் போது, அவர் அப்படியா? என்று கேட்டதில்லை, ஆகுமா! என்று கேட்பதில்லை, ஆகட்டும் என்பதன்றி பிறிதோர் சொல்லை அவர் எனக்கு அளித்ததில்லையே! அவரிடம் நான். பழகிய ஆண்டுகள் பலப்பல, சுயமரியாதை இயக்க கால முதற்கொண்டு, அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த வாய்ப்பு, எனக்கு, நாம் எடுத்துக்கொண்டுள்ள இலட்சியத்தில் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கான நம்பிக்கையை மிகுதியாக்கிற்று செயல்படு திட்டம் எது என் எண்ணத்தில் எழும்போது அடுத்த விநாடி சாமியின் பெயர் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட தம்பி, அந்த ஆற்றல் வீரன், அவனுக்கா இந்தக் கொடுமை!! அந்த மறத்தமிழ் வீரனுக்கா இந்தக் கொடுமை!

வெட்டினராம், குத்தினராம், பயங்கரமான ஆயுதங்களால், வெறியர்கள்; தனியாக நின்றான்; அவன் கூப்பிடு குரலுக்கு ஓடிவர இலட்சக்கணக்கான மக்கள் உள்ளனர், தமிழகமெங்கும். ஆனால், யாரும் உதவிக்கு வராததோர் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, சண்டாளர்கள், தாக்கினரே கொன்றனரே! ஐயோ, இக் கொடுமையைக் கேட்கவே நமக்கு வேதனை பிறக்கிறதே - அந்த இரவு அக்ரமக்காரர்கள் தாக்கிய போது, எதிர்த்துப் போரிடமுடியாத நிலையில் சூழ நின்று அவரைச் சித்திரவதை செய்தபோது, நம் சாமி அந்தோ! என்னென்ன எண்ணினாரோ, ஏதேது நினைத்தாரோ, எப்படி எப்படித் துடித்தாரோ, வெட்டும் குத்தும் அவர் மீது பாயப்பாய, வெறியர்கள் தாக்கத் தாக்க, நம சாமி இரத்தம், வெள்ளமாகி ஓட, உயிர் ஊசலாட நின்ற நிலையிலும் வீழ்ந்திடும் போதும், "ஐயோ! திருஇடமே! தாயகமே! பார்! உன் உண்மைத் தொண்டனை இந்த உலுத்தர்கள் உருக்குலைப்பதைப் பார்! ஊருக்கு உழைப்பவனை இந்தக் கொலைபாதகர்கள் கொன்றுபோடும் கொடுமையைப் பார்! பாட்டாளியின் நண்பனை இந்த மாபாவிகள், பதைக்கப் பதைக்க வெட்டுவதைப் பார்! பார்! தாயகமே! பார்! - என்று எண்ணியிருந்திருப்பார்! என் குரல் கேட்டு ஓடிவர, இலட்சக்கணக்கான வீரர்கள் உள்ளனர் - எனக்காக இன்னுயிரும் தர பாட்டாளிகளின் படைவரிசை அணி அணியாக இதே தூத்துக்குடியிலிருக்கிறது எனினும், அவர்கள் எவரும் வர முடியாத நிலையிலே, என்னைக் கொல்கிறார்களே, கொடியவர்கள், என் செய்வேன்'' என்று அல்லவா குத்தும் வெட்டும் உடலைத்தாக்கி உயிரைக் குடித்திடும்போது எண்ணியிருந்திருப்பார்.

மலை மலையாக நாம் இருக்கிறோம், அணி அணியாக இருக்கிறோம், நாடெங்கும் இருக்கிறோம், நாசகாலர்கள், நமது சாமியைப் படுகொலை செய்துவிட்டனரே! ஏழைகளின் இன்னல் துடைக்க, அவர்தம் உரிமைக்காக அல்லும் பகலும் பாடுபடும் ஆர்வமிக்க தொண்டராயிற்றே, பொதுத் தொண்டிலே, துள்ளும் பிள்ளைப்பருவ முதற்கொண்டு ஈடுபட்டு, எதிர் நீச்சு நடத்தி ஏற்றம் பெற்றவராயிற்றே! எங்கு அநீதி தலை விரித்தாடினாலும், அக்ரமம் கொக்கரித்தாலும் பாய்ந்து சென்று அதனை எதிர்த்தொழிக்கும் அஞ்சாநெஞ்சனாயிற்றே என்று எதனையும் எண்ணிப்பார்த்தார் இல்லை அந்தக் கொலை பாதகர்கள். ஐயகோ! அவ்வளவு ஆற்றல் படைத்தவர் என்பதற் காகவே அவரை அடித்துக் கொல்லக் கிளம்பிய கொடியவர் களல்லவா, அந்தக் கொலை பாதகர்கள்!

எங்கும் சாமி! எதற்கும் சாமி! எப்போதும் சாமி! எங்கள் சாமி! - என்று நாடே பூரிப்புடன் பெருமிதத்துடன் கூறிடக் கேட்டதால், கெடுமதியாளர்கள் பொறாமை படமெடுத்தாடும் பாம்பாயினரோ! எங்கள் சாமி! என்று எண்ணற்ற வீரர்கள், நேருக்கு நேர் நின்று போரிடும் வீரம் காட்டிட எவர் வரினும் அவர்தம்முடன் வீரப் போரிட்டு வெற்றி கொள்ளத்தக்க அடலேறுகள், சொந்தம் கொண்டாடினர், பந்த பாசம் கொண்டிருந்தனர். பாட்டாளிகள், எங்கள் சாமி! எங்கள் சாமி! என்று பரிவுடன் அழைத்தனர். ஆலைத் தொழிலாளரும் உப்பளத் தொழிலாளரும், கல் உடைப்போரும் கட்டை வெட்டுவோரும், எங்கள் சாமி! எமக்குற்ற குறை அறிந்து உருகி, அக்குறை தீரத் துடிதுடித்தெழும் உள்ளம் படைத்த எங்கள் சாமி! என்று பாசம் காட்டினர். பள்ளிச் சிறுவர்களும், எங்கள் சாமி! என்று அன்புடன் அழைத்தனர். வணிகர் கோட்டத்திலும், நகராட்சி மன்றத்திலும் எங்கள் சாமி! என்றுதான் உவகையுடன் அழைத்தனர். எங்கள் சாமி! எதற்கும் அஞ்சா நெஞ்சினன்! எந்த இன்னலுக்கும் கலங்காத உள்ளத்தினன்! - என்று நமது கழகம் பெருமையுடன் நாடெங்கும் கூறிற்று! ஓங்கி வளர்ந்தது புகழ்! ஒப்பற்ற தொண்டு உயர்ந்தது, உயர்வளித்தது, பலன் தெரிந்தது! இது கண்டு பொறாதார், இது போன்ற ஆற்றல் பெற இயலாதார், பொறாமை கொண்டனர், பொச்சரிப்பு உமிழ்ந்தனர், நச்சரவு ஆயினர், நள்ளிரவிலே, நாட்டுக்குக் கிடைத்த நல்ல புதல்வனை, வெட்டிக்கொன்றனர் - படுகொலை புரிந்தனர்.

அடுத்து வரும் தேர்தலில் எங்கள் சாமி வெற்றிக்கொடி நாட்டப்போகிறார். K.V.K. சாமி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மாவட்டச் செயலாளர்; செயற்குழு உறுப்பினர்; உப்பளத் தொழிலாளர் தலைவர்; ஆலைத் தொழிலாளர் தலைவர்; இம்மட்டோ, விரைவிலே K.V.K. சாமி, M.L.A. ஆகப் போகிறார் என்று கூறிக் குதூகலித்தோமே - நமது தேர்தல் வெற்றிபற்றிய பட்டியலை எண்ணும்போதே, முதல் வெற்றி என்று இதனைக் குறித்திருந்தோம் - நமக்குச் செந்தேனாக இனித்த இதே எண்ணம், செந்தேளாயிற்றோ பொறாமை உள்ளம் கொண்டோருக்கு - ஆகா! ஓங்கி வளருகிறான், புகழ் ஓங்குகிறது, ஓங்கியபடி இருக்கிறது, எப்படி இதனைக் கண்டு சகிப்பது என்று எண்ணினரோ அந்த இதயமற்றோர் படுகொலை செய்துவிட்டனரே! பூவும் பிஞ்சும் தோன்றி கனி குலுங்க வேண்டிய பக்குவம் பெற்ற பச்சை மரத்தை வெட்டி வீழ்த்தினரே, பாரில் எங்கும் கேள்விப்படமுடியாத பாதகச் செயலன்றோ செய்தனர்.

பாவிகளா! படுபாவிகளா! சாமியை வெட்டினீர்கள், சாமியைமட்டுமா, எமது இதயங்களை எல்லாமல்லவா ஈட்டி கொண்டு குத்திவிட்டீர்கள் - குருதிகொட்டி அந்த வீரன் பிணமானான், இதோ நாங்கள் பல்லாயிரவர், இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு நடைப்பிணமாகிவிட்டோமே - உமக்கு நாங்கள் இழைத்த கொடுமைதான் என்ன? ஏன்தான் இத்தகைய பயங்கரப் படுகொலை செய்தீர்கள்? சட்டமே! கேள்! சமூகமே! நீதிக்காக வாதாடு! நீதியே, உன் நீண்ட கரத்துக்கு வேலை கொடு! படுகொலை செய்த பாதகர்களைப் பாருக்குக் காட்டு. காரி உமிழட்டும் கற்றறிந்தோர்; சட்டம் அதன் சக்தியைக் காட்டட்டும்.

ஈடு செய்யமுடியுமா இந்தப் பெரும் இழப்பை - ஏது? ஏது?

எம்மிடம் பேச்சாளரும் எழுத்தாளரும் நிரம்ப இருக்கிறார்கள் - நடிகர்கட்குக் குறைவில்லை - நல்லோருக்குக் குறைவில்லை - வல்லோருக்கும் குறைவில்லை - ஆனால் நமது சாமி நல்லவர், வல்லவர், எனும் இரு அருங்குணமும் ஓருருவாய் அமைந்து, பேசுவோருக்கும் எழுதுவோருக்கும் பெருந்துணையாய், பேசப்படத்தக்க பெரும் பொருளாக அல்லவா விளங்கிவந்தார் - அவரல்லவா அனியாயமாக வெட்டி வீழ்த்தப்பட்டார். செயல்முறையிலே ஓர் நாட்டம், செயல் படுவதிலே ஓர் தனி ஆர்வம், செயலில் ஓர் எழுச்சி - இவையாவும் ஒருங்கு அமைந்த ஓர் படைத்தளபதி அல்லவா நம் சாமி! கட்டளையிட்டுவிட்டுக் கண்ணயர்பவரா, உத்தரவு பிறப்பித்துவிட்டு உறங்கச் செல்பவரா, அல்லவே; படை அமைத்து, படை வரிசையை நடத்திச் சென்று, பணியாற்றி வெற்றிகாணும், வீரம் செறிந்த தலைவராக அல்லவா விளங்கிவந்தார்.

நரை முளைக்காப் பருவம் - நாற்பதுக்குச் செல்லவே இன்னும் எட்டாண்டு செல்லவேண்டும் - போய்விட்டாளே அந்த வாலிப வேந்தன் - எப்படித் தாங்கிக் கொள்வோம்!

அழுகிறேன், அழுகிறீர்கள், அழுகிறோம் - நம்மை அழ வைத்துவிட்ட அக்ரமக்காரர்கள் எங்கோ இருந்துகொண்டு சிரிக்கிறார்கள். பெருமைப்பட்டுக்கொண்டிருந்தீர்களே, எங்கள் சாமி, எங்கள் சாமி என்று. மார்தட்டித் தட்டிப் பேசினீர்களே, எங்கள் சாமி!, எங்கள் சாமி! என்று எங்கே உங்கள் சாமி? என்று கேட்கின்றனர்; ஐய்யயோ? என்னபதில் சொல்லுவோம். வேதனையால் தாக்கப்படுகிறோம்; படுபாவிகளா! எங்கள் சாமியைப் படுகொலை செய்துவிட்டீர்கள், பாதகம் புரிந்துவிட்டீர்கள், பண்பற்றவர்களே! எங்கள் சாமியின் உடலைத்தான் வெட்டி எறிந்தீர்கள், அவர் உள்ளம் எங்களோடு இருக்கிறது, வேறெங்கும் செல்லவில்லை, அது அழிந்துபட வில்லை, எங்களோடு இருக்கிறது, எங்களுள் இருக்கிறது, நாங்கள் யாவரும் கே. வி. கே. சாமிகளாகிறோம், அவர் காட்டிய ஆர்வத்தைக் கொள்கிறோம். அவர் பெற்றிருந்த ஆற்றலைப் பெறுகிறோம். பேயர்களே! எங்களையும் கொலை செய்ய, கத்தி தீட்டுங்கள், அரிவாள் எடுங்கள், வாருங்கள், நாங்கள் சாக அஞ்சும் பரம்பரை அல்ல, என்றெல்லாம் தம்பி, கூறத் தோன்றுகிறது, நா எழமறுக்கிறது, அழுகிறோம், அழுகுரல் கேட்கிறோம், ஆறுதல் பெறமுடியவில்லை. ஆறுதல் அளிக்கச் சக்தி இல்லை. ஒருவரை ஒருவர் காணும்போது கண்ணீரைத்தான் பரிமாறிக்கொள்கிறோம். மறைந்த மாவீரன் குடும்பத்தாருக்கு நாம் என்ன ஆறுதல் கூற முடியும். நாமும் அவர்கள் கூடநின்று கதறித் துடிப்பதன்றி வேறென்ன செய்யும் நிலை இருக்க முடியும். அவர் நமது சாமியாயிற்றே, அழுகிறோம், அழுகிறாய், அழுகிறேன், தம்பி, செய்திகேட்டதிலிருந்து வேதனையால் தாக்கப்பட்டுக் கிடக்கிறேன் - வேறு எதுவும் எழுத முடியவில்லை.

அன்பன்,

30-9-1956