அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வளை ஒலி கேட்கிறதா!!

அண்ணாவின் வடநாட்டுப்பயணம் -
ஹரித்துவாரமும் சாதுக்களும்

தம்பி!

சில தினங்களுக்கு முன்னர் நேரு பண்டிதர் ஹரித்துவாரம் எனும் ஊருக்குச் சென்றிருந்தார்; இமயமலையின் அடி வாரத்திலே இருக்கிறது இந்த ஊர்; இந்துக்கள் இதைப் புண்ணிய ஸ்தலம் என்று கொண்டாடுகிறார்கள். இங்கு வந்து இமயத்திலே இருக்கும் ரிμகேசம் போன்ற ஸ்தலங்களுக்குப் போகிறார்கள். சிறிய ஊர்தான். நான் அங்குப் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்கிறேன், பெரியாரின் அன்புப் பாத்திரமாக இருந்தபோது! - அந்தப் பழைய நாட்களில். அப்போது நான் "விடுதலை''யில் எழுத்தாளன். பெரியாருடன் வரும் பேச்சாளன். ஆமாம், மறந்து போகிறேன் பார் தம்பி, திராவிடர் கழகச் செயலாளனாகவும் இருந்து வந்தேன். பார்ப்பனரை இந்த நாட்டை விட்டு ஓட்டும் ஒரே அபார சேவை செய்வதற்காகவே, இன்று அல்லும் பகலும் கடுமையான நோயைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவோ லாபகரமான தொழில்கள் வருந்தி அழைத்தும், வருக! வருக! என்று பலர் பணத்தைக் கொட்டி ஆசை காட்டியும், "லட்சியத்தைக் கைவிடேன்! துரோகிகளை ஒழித்துக்கட்டியே தீருவேன்! என்று முழக்கம் (ஆறு திங்களில் நான்கு முறையேனும்), செய்து கொண்டும், நாள் தவறாமல் எழுதிக் கொண்டும் வரும் சிலம்புக் கூட்டத்தார், என்னைக் கேபேசி யும் பெரியாரைப் பின்பற்றும் "பேதமை''யை எடுத்து விளக்கிக் கொண்டும், இதை நாம் உட்கொள்வதற்காக வேண்டி, இடையிடையே சுவையுள்ள விருந்து (அன்புடன்தான், மறக்க முடியுமா!) அளித்துக்கொண்டும் இருந்த நாட்கள்! திடீரென்று ஒரு தினம் பம்பாயிலிருந்து எனக்கோர் தந்தி வந்தது. "உடனே கிளம்பி ஹரித்துவாரம் வந்து சேரவும்'' என்று. தந்தி தந்தவர்கு பெரியார்; அவர் பம்பாய் பகுதி சென்று அங்கிருந்து ஹரித்துவாரம் சென்றுவிட்டு, வடநாட்டிலே வேறு பல ஊர்போக திட்டம் இட்டு இருந்தார் போலிருக்கிறது, எனக்கென்ன தெரியும்? யாருக்குத்தான், எப்போதுதான் அவர் போடும் திட்டம், அவராகச் சொல்லுமுன் தெரிகிறது?

ஹரித்துவாரம் வந்து சேர் - எனக்கு இப்படி ஒரு தந்தி.

என் சுபாவம், "உனக்குத் தெரியும், ஏன், ஏறக்குறைய கழகத் தோழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே. பக்கத்திலே உள்ள ஆற்காடு போவதானாலும் நாலு நண்பர்கள் கூட வேண்டுமே எனக்கு. அப்படிப் பழகிப்போன என்னை ஹரித்துவாரம் வரச் சொல்கிறார்: என்ன செய்வது? கிளம்பினேன்: தோழர் குருசாமி இரயிலடி வந்திருப்பதாக நினைவு.

பத்து நாட்கள் ஹரித்துவாரத்தில் இருந்தோம், ஒரு ஐயர் வீட்டில்.

அவர் காலஞ்சென்ற பேரறிஞர் எம். என். ராய் அவர்களின் இயக்கத்தவர். எனவே, எங்களை அன்புடன் தமது இல்லத்தில் வைத்து, உபசரித்தார்.

உங்களில் பலருக்குத் தெரிந்திராது தம்பி! பெரியார் அங்குதான், வால்மீகி இராமாயணம் பற்றிய குறிப்புரைகள் தயாரித்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதின கவனம் இருக்கிறது.

அந்த ஹரித்துவாரம் "சாதுக்களின்'' கோட்டை! எந்தத் தெருவுக்குச் சொன்றாலும், சந்நியாசிகள்! எவ்வளவு "கம்பீரமாக'' நடந்து செல்கிறார்கள் தெரியுமா! அவர்களும் சரி, கொழுத்துக் கிடக்கும் பெரிய பெரிய பசுக்களும் சரி. ஹரித்துவாரத்து வீதிகளிலே நடமாடும் உரிமை தமக்கே என்ற தீர்மானத்துடன் இருப்பது போலத்தான் தோன்றும்.

கங்கை-நடுப்பகல் இரண்டு மணிக்குக் கால் வைத்தாலும் "ஐஸ்'' போல இருக்கிறது, கொட்டுகிறது.

ஹரித்துவாரத்தில், ஆற்றோரத்தில் அழகான சோலைகள் - பழமுதிர் சோலைகள்! சோலைகளை வேலிகளாகக் கொண்ட பெரிய மடங்கள் - ஒவ்வொரு மடத்திலும் நூற்றுக்கணக்கான சாமியார்கள்: உலக மாயையை மிக நன்றாக உணர்ந்து உலகோர்க்கு உபதேசம் செய்யும் "புனிதத் தொண்டு'' புரியும் அவர்களுக்காக, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கோதுமை மாவும், டின் டின்னாக மணம் கமழும் நெய்யும்! இந்த மடங்களில் ஒரு குறையும் இருத்தல் ஆகாது என்பதற்காக ஏராளமான "சொத்து'' சாசனப்படுத்தப்பட்டிருக்கிறது.

மாலை வேளைகளிலே பெரியார் உலாவச் செல்வார். சாலையில் உடன் நான் சொல்வேன். வெண்ணிறத் தாடி; பொன்னிறமேனி; ஆரஞ்சு நிறச் சால்வை நான் கொட்டும் குளிருக்குப் பயந்து முரட்டுத்துணிச் சட்டை போட்டுக் கொண்டு, அதற்குள் கரங்களை விட்டுக் கொண்டு, கை கட்டிய வண்ணம் அவர் பின்னால். சாது சந்நியாசிகளைக் காண்பதையே வேலையாகக் கொண்ட அந்த நாட்டு மக்கள், ஹரித்துவாரம் இதுவரை காணாத மகிமை பொருந்திய குரு மகான், தன் பிரதம சீடனுடன் செல்கிறார் என்று எண்ணிக் கொண்டு, பக்தியுடன் கைகூப்பித் தொழுவர். இப்போதும் மனக்கண் முன்னால் அக்காட்சியைக் காண முடிகிறது; எங்களுடன் மணி இருப்பார். ஓஹோஹோ! மணி என்றதும், ஆச்சரியத்தால் கண்களை அகலத் திறக்கிறாயா தம்பி! விடுதலை அச்சகத்தில் மணி என்றோர் அச்சுக் கோர்ப்போர் இருந்தார். அவர் பெரியாருக்குப் பணிவிடை செய்வதற்காக வந்திருந்தார், அவரைக் குறிப்பிட் டேன்; அப்போது ஈ.வெ.ரா. மணியம்மையார் பற்றிய நிழல் உருவச் செய்தியும் கிடையாது.

இவ்வளவு மடங்கள் - கவாத்துக் கொடுத்து, காக்கி உடை அணிவித்து, கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட்டால், பட்டாளத்திலே "சர்தார்களாக'க் கூடிய உடற் கட்டமைந்த சன்னியாசிகள் கூட்டம் கூட்டமாக - அவர்களின் பராமரிப்புக் காக இலட்சக் கணக்கில் பொருட் செலவு - அவர்களோ இகலோகத்தின் இழிதன்மையைப் பற்றியும் பரலோகத்தின் பெருமையைப் பற்றியும் உபதேசம் செய்வர். இந்த விசித்திரக் காட்சி, என் உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்களைக் கிளறும். இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழி காட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு "பட்டாளமே'' இருக்கிறதே! எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா! இங்கு அடிதொழுது கொண்டிருப்பதைப் பெறற்கரிய பேறு என்றல்லவா கருதுகிறார்கள்; வேதனை நிரம்பிய விசித்திரமாக இருக்கிறதே, என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன்.

சம்சாரி உழைத்து
சன்யாசி கொழுக்க
தருமம் புரி எனல் ஆஸ்திகமா?
அது சரியில்லை என்பது நாஸ்திகமா?

என்று உடுமலை நாராயணகவி "சொர்க்கவாசல்'' படத்துக்குப் பாடல் தீட்டினார். கே. ஆர். ராமசாமி பாடினார். நண்பர்கள் சிலரும் கேட்டு இன்புற்றோம். நீ கேட்டிருக்க முடியாது தம்பி. சென்சார் அதைக் கத்தரித்து விட்டு பாரதப் பண்பை காப்பாற்றி விட்டதாகப் பூரிப்படைந்தனர். அந்தப் பாடலும் அதற்குரிய காட்சியும் தயாரிக்கப்பட்டபோது எனக்கு ஹரித்துவாரக் காட்சி நன்றாகத் தெரிந்தது.

நேரு பண்டிதருக்கு, இந்த "மாமிச மலைகளை''க் கண்டதும், உண்மையிலேயே கோபம் கொந்தளித்திருக்கிறது ஆனால், பாமர மக்களின் அன்பை இழக்க நேரிடுமே என்ற அச்சம் அவரை வாட்டி வதைத்தும் இருக்கிறது; எனவேதான் அவர் ஹரித்துவாரத்தில் கண்ட "ஆள்விழுங்கிகளை'ப்' பற்றிய கண்டனத்தை, வேறொரிடம் சென்று, ஜாடைமாடையாகக் குறிப்பிட்டுப் பேசினார் - 50 இலட்சம் சாதுக்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில் - இவர்களில் ஒரு சிலர் உண்மையானவர்களாக இருக்கலாம், - பெரும் பாலானவர் பிறர் உழைப்பைத் தின்று கொழுப்பவர்கள் - இவர்கள் நாட்டுக்குப் பெரியதோர் சுமை - நஷ்டம் - என்ற கருத்துப்பட நேரு பண்டிதர் பேசினார்.

அதுமட்டுமல்ல! ஹரித்துவாரத்தைப் பற்றியே அலட்சியமும் அருவருப்பும் கலந்த முறையில் குறிப்பிட்டார்.

அவர் பேசினார், "ஹரித்துவாரம் இந்துக்களின் புண்ணியஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது'' என்று.

கவனித்தாயா, தம்பி! அவர் பேச்சை. ஹரித்துவாரம். புண்ணிய ஸ்தலம் என்று கூறவில்லை - அப்படிக் கருதப்பட்டு வருகிறது! நான் கருதவில்லை, பாமரர்கள் கருதுகிறார்கள் அவ்விதம் என்ற கேலி அதிலே தொக்கி நிற்கிறது. தெரிகிறதா. அவர் அப்படி ஒன்றும் கேலி பேசவில்லை. நீயாகக் கற்பனை செய்கிறாய் என்று பக்தர்களும் கூறக்கூடும். காங்கிரஸ் நண்பர்களும் கூறக்கூடும். ஏன் வீண் சந்தேகம்? பண்டிதரின் பேச்சு முழுவதையுமே கூறுகிறேன், அப்போது விளக்கமாகி விடுகிறது.

"ஹரித்துவாரம் இந்துக்களின் ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபுவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன.''

நேரு பண்டிதர் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காகச் சாமியார் கோலம் பூண்ட சோற்றுத் துருத்திகளைப் பற்றி, நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி பிறக்கத்தானே செய்யும் - அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு காலம் கழித்துவிடுவோம் என்று வேதியத் தலைவர் இங்கு நடந்து கொள்ளும் முறையுடன் இதை ஒப்பிடும்போது, நேரு பண்டிதரிடம் மதிப்புக்கூட பிறக்கிறது. ஆனால் அந்தோ! மறு கணமோ, அவர் பிரச்சினையை விட்டுவிட்டு, வெகு வேகமாக வேறு பக்கம் சென்றுவிடுவதைக் காண நேரிடுகிறது. கோபமும் வருகிறது. வருத்தமாகவும் இருக்கிறது.

நச்சரவம் புரளுகிறது என்று தெரிந்து தெரிவித்துவிட்டு, என்ன செய்யச் சொல்லவேண்டும் - நச்சரவம் நெளியும் இடம் இது. இதைப்போய் நாதன் அருள் பெறும் தலம் என்கிறார்களே. நல்லவர்களே! நாசத்துக்கு இடமளிக்காதீர்கள். நச்சரவத்தை ஒழித்திட வாரீர். நச்சரவம் குடிபுகும் புற்றுக்களை ஒழிப்போம். புற்றுக்கள் தோன்றக்கூடிய காட்டினையே அழிப்போம், கிளம்புங்கள், என்று சொல்லத்தானே வேண்டும். தண்டச் சோற்றுத் தடிராமன்கள் இலட்சக்கணக்கிலே உலவுகிறார்கள், இவர்களை நம்பி உழைத்துச் சேர்த்ததைக் கொட்டி அழ வேண்டாம், என்று தானே அறிவுரை கூற வேண்டும்; ஏமாளிகளை ஏய்த்துப் பிழைப்போரைச் சாடவேண்டும். சட்டத்தின் துணையையும் நாடி இத்தகைய சழக்கர் கூட்டத்தைக் கலைக்கவேண்டும்; மக்களுக்குத் தெளிவும் துணிவும் பிறந்திடத் தக்கவகையில் பகுத்தறிவு புகட்ட வேண்டும். நேரு பண்டிதர் இதைச் செய்கிறார் இல்லை!! நச்சரவம் உலவுகிறது. நாவற் பழமும் தின்போம் வாரீர்! என்று ஒன்றுக்கொன்று ஒட்டாத முறையில், எதையோகூற விரும்பி, இடையே பயந்து, வேறு எதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

ஹரித்துவாரத்தை அவர் புண்ணிய ஸ்தலமாகக் கருதவில்லை - கூறுகிறார்.

நீங்களும், பேதமை கொள்ளாதீர்கள். புண்ணிய ஸ்தலமாவது பாப பூமியாவது என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறாரா

இல்லை!!மாறாக, கும்பமேளம் கண்டு களிக்கும் பெரும் கூட்டத்தை, இவர் கண்டு களிப்படைகிறார்!!

சாதுசன்யாசிகள் என்றபேரால் சோம்பித்திரிந்து, சொகுசாக வாழும் சழக்கரைக் கண்டித்துவிட்டு, அடுத்தகணம் ஐந்தாண்டுத் திட்டம், அணுகுண்டு யுகம், ஐசன் அவர் போக்கு என்று, வேறு பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறார்!

புண்ணிய ஸ்தலம் எனக்கு ஹரித்துவாரமல்ல, எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடக்கிறதோ, அவைதாம் எனக்கு புண்ணிய ஸ்தலம் என்கிறார்; ஆனால், இவர் பெற்றுள்ள இந்தப் புத்தறிவை மற்றவரும் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை! எனக்குச் சீரகச் சம்பாவில் சாதம், தக்காளி சூப், கோழிக் கறி வறுவல் இவைதான் பிடிக்கும் என்று, புளித்த காடியும் புழுத்துப்போன கருவாட்டையும் சுவையான உண்பண்டம் என்று எண்ணிக் கிடப்போனிடம் கூறிப் பயன் என்ன?

அவர்களின் மனப்போக்கை அல்லவா மாற்றவேண்டும்.

அவர்களைச் சாது சன்யாசிக் கோலத்தில் உலவும் சடலங்களைக் கொழுக்கச் செய்யும்'' சேவை''யில் ஈடுபட விட்டுவிட்டு எனக்கு இது பிடிக்காது, என் காசி சிந்திரி, என் கங்கை பக்ரா நங்கல், என் கயா சித்தரஞ்சன், என் புண்ணியஸ்தலம் அபிவிருத்தி வேலை நடக்கும் இடம் என்று பேசிப் பயன் என்ன?

இங்குதான், நாம் தேவைப்படுகிறோம், தம்பி! பெரிய இடத்திலே உள்ளவர்கள், பாமரரின் சீற்றத்தைக் கிளறிவிடக் கூடிய ஒரு சொல்லும் கூறமாட்டார்கள்! உலகுக்கு உபதேசம் செய்வார்கள்! ஊராரிடம் பகுத்தறிவு பேசமாட்டார்கள். "ஓட்டு'' இருக்கிறதே தம்பி, அது "வாய்ப்பூட்டு'' போட்டு விடுகிறது!! நாம்தான் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பணியினைத் தொடர்ந்து செய்கிறோம், துணிந்து செய்கிறோம், தூய்மையின் நோக்கத்துடன் செய்கிறோம். தக்க பலன், மலரவும் காண்கிறோம், மகிழ்கிறோம்.

பட்டவர்த்தனமாக, மூடத்தனத்தைக் கண்டித்துப் பேசினால், பாமர மக்கள் சீறிப் பாய்வர், அரசியல் பீடத்தி லிருந்து உருட்டிவிடக் கிளம்பக்கூடும் - எனவே ஜாடைமாடை யாக மட்டுமே கூற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அறிவு முதிர்ச்சியின் காரணத்தால் அல்ல, தம்பி, அச்சத்தால்தான். நமக்கு அவ்விதமாக அச்சம் எழக் காரணம் இல்லை. நாமோ அரசியல் ஆண்டிப் பண்டாரங்கள்! எனவே பிறர் அச்சத்தால் வாயடைத்துப் போகும் நிலையிலும், நாம் பேசுகிறோம்; ஏசுகிறார்கள், மேலும் பேசுகிறோம்; கல் வீசுகிறார்கள், தொடர்ந்து பேசுகிறோம்; காலிகளை ஏவுகிறார்கள், எனினும் பேசுகிறோம். நாம் இம்முறையில் துணிந்து செயலாற்றினால்தான், அச்சம் காரணமாக வாயடைத்துக்கிடப்போரும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்வோரும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறிவோரும், நாம்தானா இதற்கெல்லாம் என்ற சலிப்படைவோரும், மெள்ளமெள்ளத் தமது போக்கை மாற்றிக் கொண்டு, ஜாடைமாடையாக முதலிலும், வெளிப்படையாகவே பிறகும், வீரத்துடன் எதிர்காலத்திலும் பேச முற்படுவர்;

குன்றக்குடி அடிகளாரின் போக்கைக் கவனித்து வருகிறார்யல்லவா தம்பி! பார்க்கிறாயல்லவா அவர் சைவ மாவட்டத்தில் சுயமரியாதை மாநாடு நடத்திவரும் வேடிக்கையை பயனுள்ள வேடிக்கையை.

அதுபோல எண்ணற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்ட உள. ஹரித்துவாரத்தை புண்ணிய ஸ்தலம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்து, எங்கெங்கு அபிவிருத்தி வேலை நடக்கிறதோ அவைகளே என் புண்ணிய ஸ்தலங்கள் என்று பேசிடும் பண்டிதரின் கருத்துரையை அலசிப் பார் தம்பி. புண்யம் என்றால் என்ன? எதைப் பாமர மக்கள் புண்ணியம் என்று எண்ணி ஏமாறுகிறார்கள்? அறிவுத் தெளிவுள்ளோர் எதைப் புண்ணியம் என்று கொள்வர்? மக்கள் வாழ வழி செய்வதும், வாழ்வின் வளத்தைப் பெருக்குவதும்தான் "புண்ணியம்' அதற்கான வேலைகள் நடைபெறும் இடமே புண்ணிய ஸ்தலம். மடங்களிலே உள்ள சடலங்களாலல்ல, தொழிற்சாலைகளிலே நரம்பு முறியப் பாடுபடும் பாட்டாளிகளால்தரன் நாடு செழிக்கும். புண்ணிய தீர்த்தத்தால் அல்ல, புதிய புதிய நீர்த் தேக்கங்களால் தான் பாலைவனம் சோலைவனம் ஆகும். ஆறுகால பூஜை, அபிஷேகம், ஆராதனை இவைகளால் அல்ல, அணைக்கட்டு, மின்சார நிலையம், உர உற்பத்தி இவைகளால்தான் மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் என்ற இன்னோரன்ன கருத்துக்களெல்லாம் ஊற்றெடுத்து ஓடிவரும்! ஆனால் அலசிக் காட்டும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

தம்பி! ஐந்தாண்டுத் திட்டத்திலே நடைபெற்ற ஓர வஞ்சனையைப்பற்றி, நாம் உள்ள உரத்துடன், ஊராள்வோரின் பகைபற்றிக் கவலைப்படாமல் காங்கிரசில் இருப்போரும் நுழைவோரும் கண்டிப்பது பற்றிச் சட்டை செய்யாமல் எடுத்துக் காட்டியதால்தான், இப்போது காங்கிரஸ் வட்டாரமேகூட அதுபற்றிப் பதைத்தும் பதறியும் துக்கம் தொண்டையை அடைக்க, வெட்கம் பிய்த்துப் பிடுங்கும் நிலையில் பேசிடக் கேட்கிறோம். சதேசமித்திரன் கேலிச்சித்திரம் போட்டிடக் காண்கிறோம். தலைமை நிலையத்திலிருந்து உங்கள் ஊருக்கு வந்திருக்குமே படம்!!

தம்பி! இடையே இதையும் சொல்லி வைக்கிறேன்.

எவ்வளவோ செலவாகிறது. எதெதற்கோ செலவாகிறது, எதையாவது குறைத்து பணம் சேர்த்து அந்தக் கேலிக் சித்திரத்தைப் பெரிய அளவில் பத்தாயிரம் மக்கள் கொண்ட கூட்டத்திலும், கோடியில் உள்ளவருக்குப் பளிச்சென்று தெரியும் வகையில் துணியில் ஓவியமாக்கி வைத்துக்கொண்டு, நமது கழகக்கூட்டங்கள் நடைபெறும்போது மேடை அருகில் அதைத்தொங்கவிடு - ஒரு மணிநேரச் சொற்பொழிவை அந்தப் படம் தந்துவிடும்.

காங்கிரஸ் வட்டாரமே இப்போது துணிந்து கிளம்புகிறது தம்பி, வடநாட்டின் போக்கைக் கண்டிக்க. ஆமாம், வீணுக்கா உழைத்தோம், தூவிய விதை என்ன, பதறா? காங்கிரஸ் நண்பர்களின் மனம்தான் என்ன வறண்ட பாலையா? பலன் தெரிகிறது மெள்ள மெள்ள!

பல இதழ்கள், சில சோகமாகவும், சில கோபமாகவும், மத்திய சர்க்காருக்கு அநீதியை எடுத்துக் காட்டுகின்றன.

வடநாட்டுச் சர்க்கார் என்று விளக்கமாக நாம் சொல்கிறோம். இந்த ஏடுகள், மத்திய சர்க்கார் என்ற விநயமாகச் சொல்கின்றன.

ஆரம்பக் கட்டமல்லவா, கூச்சம், அச்சம், இருக்கிறது. காதல் கனிரசமா, துவக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது, கடைக்கண் வீச்சுதானே, தம்பி, அது என்ன சாமான்யமானதா!! எத்தனை இன்பக் கனவுகளைக் கிளறிவிடுகிறது!!

அதுபோலத்தான், இந்த இதழ்கள் அச்சத்துடனும், கூச்சத்துடனும் இப்போது எழுதுவது!!

யாராவது பார்த்துவிட்டால்!! வெட்கமாக இருக்கிறது!; உஹும், நாளைக்கு! சோலையில்!? என்று கொஞ்சுமொழி பேசி விட்டுக் காதலன் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் நத்தை, என்று வைத்துக்கொள்ளேன்!

சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஏடுகள் இப்போது மத்திய சர்க்காரின் போக்கைப் பற்றி எழுதுகின்றன - கவனித்தாயா!!

ஹரித்துவாரம் பற்றிப் பேசிய நேரு பண்டிதர், புண்ணிய ஸ்தலம் என்பதுபற்றி தமது கருத்துரையை அளித்தவ ரல்லவா. அதையே, சாக்காக வைத்துக் கொண்டு ஒரு காங்கிரஸ் ஏடு மத்தியச் சர்க்காரின் போக்கை இடித்துரைத்திருக்கிறது. கன்னத்தில் இடித்து "காலை பிறந்ததும் என் நினைவே போய்விடுமல்லவா, கண்ணாளா'' என்று கேட்கும் காரிகை போல, கதைகளில் இந்த ஏடு எழுதுகிறது - இத்தனைக்கும், விகடன் செய்யும் வேலையை மேற்கொண்டுள்ள ஏடுதான்!! ஆனந்தவிகடன், அது எழுதுகிறது.

"அரித்துவாரம் இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன என்று கூறித் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

புண்ணிய ஸ்தலங்கள் என்னும்போது வடஇந்தியாவை விடத் தென்இந்தியாவிலேயே இவை அதிகம் என்று கூறலாம். எனினும் பொருளாதாரத் துறையில் தென்னிந்தியா பின்னணியிலேயே இருந்துவருகிறது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும், தென்னிந்தியா நேருஜியின் அர்த்தப்படி புண்ணிய ஸ்தலங்களாகச் சீர்பட வில்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும் தென்னிந்தியா பொருளாதாரப் புண்ணிய ஸ்தலமாகத் திகழும் பாக்கியம் பெறாதோவென ஐயுற வேண்டி யிருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வடஇந்தியாவிலேயே நிர்மாணிக்கப்படுவதைப்பற்றியும், தென்னிந்தியா அலட்சியம் செய்யப்படுவதைக் குறித்தும் வினவினால், நிதி மந்திரி தேஷ்முக் உட்பட இந்திய சர்க்கார் மந்திரிகள் அனைவரும் சரியான பதில் அளிப்பதில்லை.

தம்பி! எப்படி, எந்த இடத்திலிருந்து நமது பிரச்சாரம் பலன் அளித்திருக்கிறது பார்!!

காரம் இல்லை என்பாய் - ஆமாம் - எப்படி இருக்கமுடியும் - இப்போது?

எழுதுகிற பாணிகூட அரசியல் எழுச்சி ஊட்டத்தக்கதாக இல்லை - தெரியாததால் அல்ல, ஏ அப்பா! வெளிநாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதும்போது பார், புரட்சி படமெடுத் தாடும் இந்த ஏடுகளில்! ஆனால் நேருஜியை பற்றி எழுதும்போது, நாம் நெளிய வேண்டியிருக்கிறது, "நெஞ்சில் இடம் கொண்டான்'' ஆயிற்றே அதனால்.

அவளுக்குத்தானா கண்ணா! பாரிஜாதம்! எனக்குக் கிடையாதா! என்னிடம் அன்பு இருந்தால் எனக்குப் பாரிஜாதம் தரவேண்டும்' என்று, ராதா கேட்கிறாள் கண்ணனிடம். பாரிஜாத புஷ்ப ஹரணம் பார்த்திருப்பாயே நாடகம். பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பு நடக்கும். அந்தப் பாணியில் எழுதுகிறது விகடன்-என்றாலும், விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டது அல்லவா, இதற்காக நாம் பட்ட கஷ்டம் கொஞ்சமா?

எல்லாத் தொழிற்சாலையும் வடநாட்டில், தென்னிந்தியா அலட்சியப்படுத்தப்படுகிறது.

விகடனிடமிருந்து இந்தக் கருத்துரை - இடித்துரை - வருமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

திராவிடம் என்ற சொல்லையே கூற முடியவில்லை விகடனால். தென்னிந்தியா என்று எழுதுகிறது, - பரவாயில்லை. அதனால் என்ன - அத்தான் என்று அன்பு சொட்ட அழைத்திட ஆரணங்கால் முடிகிறதா? "அப்பா எங்கேடா கண்ணு!'' என்று குழந்தையைப் பார்த்துக் கேட்பதுதான் தெரியுமே நமக்கு. அதுபோல் இது என்று எண்ணிக் கொள்வோம்.

விகடன் மட்டும் அல்ல, வேறு வேற வேலையாகக் கூறிடும்போது, யாராருக்கோ இந்தக் கருத்துதான் வருகிறது! யார் உள்ளத்தையும் இந்தக் கருத்துச் சும்மா விடுவதில்லை. புகுந்து குடைகிறது!?

தங்களுக்கு இப்போதுள்ள அதிகாரம் போதாது, மேலும் சில பல அதிகாரம் வேண்டுமென்று கேட்க மாநாடு நடத்துகிறார்கள், சென்னை ராஜ்ய நகராட்சி மன்றத் தலைவர்கள்! அங்கு "ஏகமனதாக'' நிறைவேறியிருக்கும் தீர்மானம் இதுதான் - முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது எல்லா பெரிய தொழிற்சாலையும் வடநாட்டிலேயே அமைத்து விட்டார்கள். இந்த இரண்டாவது திட்டத்திலாவது தென்னாட்டில் அதிகமான பெரிய தொழிலும், திட்டமும் வேண்டும்.

சாலையிலே, சோலையிலே, ஆற்றோரத்தில், அக்கிர காரத்தில், பத்திரிகை நிலையத்தில், கமிட்டிக் கூட்டங்களில், வியாபாரச் சங்கத்தில், விசேஷ மாநாடுகளில், அமைச்சர் மாளிகையில், அரசாங்க அலுவலகங்களில், எங்கும் பேசப்படும் பிரச்சினையாகிவிட்டது - எங்கும் நிறைநாதமாகிவிட்டது - செங்கொடிக்காரன் இடம் தவிர. அவர்களுக்குப் பாவம், ஒரே அதிர்ச்சி, அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி, எனவே இந்த எழுச்சி புக இடமில்லை - நேரமுமில்லை. அந்த ஒரு இடம் தவிர, மற்ற எல்லா இடத்திலும், சிந்தனையைக் கிளறி விட்டிருக்கிறது நாம் எடுத்துக் காட்டியிருக்கும் பிரச்சினை.

ஐயே! உங்களைத்தான், காதிலேயே விழலையா நான் கூப்பிடறது - இந்தாருங்கோ காப்பி! - என்று கதவிற்குப்பின் புறம் மறைந்து நின்றபடி, காரிகை அழைக்கும்காட்சி தெரிகிறதா, கைவளை ஒலி கேட்கிறதா!!

அன்புள்ள,

12-6-1955