அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வினோபாவைக் கண்டேன்
1

வினோபாவுடன் திராவிட நாடு பிரச்சினை-
காங்கிரசும் வினோபாவும்

தம்பி,

புனிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி,

தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன்

என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப் படுவதும் உண்டு - எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு என்ன பழி சுமத்தப்படுமோ என்ற அச்சத்துடனேயே நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவேண்டி இருக்கிறது. என் செய்வது?

வினோபாவைக் கண்டேன்! தமிழகத்தில் தண்ணொளி பரப்பும் நோக்குடன் தவப்புதல்வர் வருகிறார், மும்மலங்களை விட்டொழித்திடச் சொல்லும் முனிபுங்கவர் வருகிறார், பூதானம் பெற்று, மக்களில் ஒரு சாராரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் பேராசையை விரட்டிடும் பெம்மான் வருகிறார், அவருடைய புனிதப் பாதம் பட்டதால், தமிழ்நாட்டின் சாபம் விமோசனமாகும் என்றெல்லாம் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகள் எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும் ஆவல்கொண்டேன் - உடனே ஒரு அச்சமும் பீடித்துக் கொண்டது - நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள் நாசமாகிவிடுவதாகக் கூறும் "நல்லவர்கள்' இருக்கிறார்களே! ஏழை எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக் கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும் பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக் "குடில்' வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக் கொள்வார்களே சில புண்ணியவான்கள்' என்று எண்ணினேன். ஆவலை அடக்கிக் கொண்டேன்.

ஆனால், வந்ததும் வராததுமாக வினோபா, திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவைகளைக் காண விரும்புகிறார், தமது பூதான இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்க விழைகிறார் என்று "செய்திகள்' வந்தன.

அந்தப் பெரியாருடைய அந்த நோக்கத்தைச் சிலர் எப்படிக்கருதினர் என்பதை, இதழ்களில் வெளியான கேலிச் சித்திரங்கள் காட்டின.

ஒரு இதழில் - நாகப்பாம்புகள் படமெடுத்தாடுகின்றன - வினோபா "மகுடி' ஊதுகிறார் - பாம்புகள், தம்பி, நாமும் திராவிடர் கழகமும்! பெயரே எழுதப்பட்டிருக்கிறது.

நச்சுப் பாம்புகளய்யா இந்தக் கழகங்கள் - என்று வினோபாவுக்கு எச்சரிக்கவும், அவர் "மகுடி' ஊதி, உங்களை மயங்க வைப்பார் என்று நமக்கு எடுத்துரைக்கவும், அவ்விதம் படம் தீட்டினர்.

ஒரு குறிக்கோளைத் தம் இதயநாதமாகக் கொண்டவர் எவரும், அந்த குறிக்கோளுக்கு யாராரிடமிருந்து ஆதரவு கிடைப்பதாயினும், பெற்றாக வேண்டும் என்று எண்ணுவதும், அதற்காக முயற்சிப்பதும், அவர்களுடைய உள்ளம் தூய்மையானது என்பதனையும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை "தொட்டால் சுருங்கி'யல்ல என்பதையும் எடுத்துக் காட்டுவதாகும்.

அம்முறையில், ஒரு கட்சிக்கோ, குறிப்பிட்ட கூட்டத்துக்கோ, ஒரு ஜாதிக்கோ மதத்துக்கோ, என் பூதானத் தொண்டு சொந்தமானதல்ல, அனைவருக்கும் இதிலே பங்கு உண்டு, ஏழை அழுத கண்ணீர் துடைத்திடுவதே எம்மானுக்கு ஆற்றும் பணி என்று எண்ணி எவரும் இதிலே ஈடுபடலாம், என்று வினோபா அறிவிக்கிறார்!

எதனையும் தமதாக்கிக்கொண்டு - தமக்குச் சாதகமான தாக்கிக்கொண்டு - தமக்கு ஆதிக்கமளிக்கும் கருவியாக்கிக் கொண்டு பிழைக்க, கொழுக்க விரும்பும் "குணவான்கள்' வினோபாவின் இயக்கத்தில் மற்றவர் எவரும் நுழைந்திடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, அடிகள் யாராருடன் தொடர்புகொள்ள வேண்டுமென்று ஆவல் தெரிவிக்கிறாரோ, அவர்களைப் "பாம்புகள்' என்று சித்தரித்துக் காட்டுகின்றனர்.

இனி, வினோபா, நம்மீது பார்வையைச் செலுத்தமாட்டார் - படம் போட்டுக் காட்டிவிட்டனர் - என்று நான் எண்ணிக் கொண்டு - தொலைவிலிருந்தே அவர் நடாத்திவரும் தூய தொண்டு வெற்றிபெறுவது கண்டு மகிழலாம் என்று தீர்மானித்தேன். ஆனால், வினோபாவின் அன்பழைப்பு என்னை விடாமல் துரத்திற்கு! "பாம்பு' - என்கிறார்களே, எப்படித்தான் இருக்கிறது பார்ப்போம் - என்று எண்ணிக்கொண்டார் போலும். வினோபாவைச் சந்தித்தேன். நான் பாம்பல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளாமலிருந்திருக்க முடியாது!

பூஜிதரே! புண்ய புருஷரே! நீரோ பூதானம் கேட்கிறீர்! நீர் காண விரும்பும் அந்தப் புல்லர்கள், பூதானம் தரமாட்டார்கள், அவர்களே காமராஜரிடம் பூதானம் கேட்டுத் தொல்லை தருகிறார்கள் - திராவிட நாடு கேட்கிறார்கள் - எனவே, அவர்களைச் சந்தித்து என்ன பயன் என்று வினோபாவைக் கேட்பதுபோல, ஒரு இதழ் வினோபா, தி.மு.க. விடம் பூதானம் கேட்பதுபோலவும், தி.மு.க. காமராஜரிடம் திராவிட நாடு தானம் கேட்பதுபோலவும், கேலிப்படம் வெளியிட்டது.

இது கண்டும் அந்த இதயசுத்தி உள்ள பெரியவர், தமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை; சந்திக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். வினோபாவைச் சந்தித்தேன்.

7-6-56 "கிராமோதயம்' இதழில் (சர்வோதய இதழ்) வினோபா - ம.பொ.சி. சந்திப்பு பற்றிய கட்டுரையில்,

"திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கழகங்களின் தலைவர்களைக்கூட சந்திக்க விரும்புகிறேன். அவர்களுடைய ஆதரவும் பூமிதான இயக்கத்திற்குக் கிடைக்குமென்று நம்புகிறேன்''

என்று வினோபா கூறியதாக வெளியிடப்பட்டிருக்கிறது. கழிபேருவகையுடன் கண்டு பேசிடத்தக்க கண்ணியமிக்கவர் வினோபா என்று எப்படி என்னாலே எண்ணாமலிருக்க முடியும். கண்டு பேசினேன்.

தயக்கத்துடன்தான் நான் சென்றேன்.

காங்கிரஸ் ஏடுகள் யாவும், வினோபாவை வாழ்த்தி வரவேற்பதையும், அர்ச்சித்து அஞ்சலி செலுத்துவதையும், அவர் அருளால் அஞ்ஞானம் அழியும், மெய்ஞ்ஞானம் பரவும். வகுப்புவாதம் ஒழியும், வர்க்கபேதம் தொலையும் என்றெல்லாம் கூறிப் பூரிப்பதையும், அவருடைய முகத்திலே "ஜோதி' காண்கிறோம், கண்களிலே அருள் வடிந்திடக் காண்கிறோம், அவர் நடையிலே காந்தியார் காணப்படுகிறார், உடையிலே மகரிஷிக் கோலம் தெரிகிறது என்றெல்லாம், வர்ணிப்பதையும் கண்ட நான், ஓகோ! வினோபா மூலமாக அவர் திரட்டி வரும் மகத்தான செல்வாக்கின் மூலமாக இவர்கள், தமது இழந்த செல்வாக்கை மீட்டிடவும், இவர்களைக் கப்பிக்கொண்டு வரும் இருட்டினை ஓட்டிடவும் முயற்சிக்கிறார்கள், இந்நிலையில், நாம் குறுக்கிட்டு அவர்கள் ஆசை குலையவும், நேசம் முறியவும் காரணமாக இருக்க வேண்டாம் என்று கருதினேன். ஆனால் வினோபா அந்தக் காரியத்துக்காகத் தம்மை ஒப்படைத்தவரல்ல, அவருடைய உள்ளத் தூய்மை "குத்தகை'ப் பொருளல்ல என்பதைப் பூதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நண்பர்கள் என்னிடம் கூறினர்.

சிறப்பாக தோழர் ஜகன்னாதன் என் தயக்கம் போகப் பெரிதும் பயன்பட்டார்.

அடக்கமும் அன்பும், ஆற்றலைக்கூட மறைத்துக் காட்டும் பண்பும் கொண்டு, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூதான இயக்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றி வருபவர் நண்பர் ஜகன்னாதன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே எனக்கு அறிமுகமானவர்; வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நமது கழகத் தோழர்களிடம், பூதான இயக்கம் பற்றிக் கலந்து பேசுபவர்; நமது பொதுச் செயலாளரிடமும் தோழர் சம்பத்திடமும் பல முறை இப்பிரச்சினை குறித்துப் பேசியுமிருக்கிறார். நான் வினோபாவைச் சந்தித்ததற்குப் பெரும் காரணமாக அமைந்தவர் அவரே! அங்குச் சென்ற பிறகு எனக்குற்ற நண்பர்கள் வேறு பலரும் அங்கு இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.

காஞ்சிபுரத்தில் சர்வோதய மாநாடு நடைபெறுகிறது - அந்தச் சமயம், வினோபாவைக் காண வேண்டும் - என்று நண்பர் ஜகன்னாதன் கூறினார் - எனக்கும் விருப்பம் எழுந்தது.

சம்மேளனமும், நமது மாநாடும், ஏறத்தாழ ஒரு கால அளவுக்குள்ளாகவே இருந்தது. எனவே, நான் நம்மேளனத்தில் கலந்துகொள்ள இயலவில்லை; அது எனக்கு முத-ல் வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும், சம்மேளனம் குறித்த நடவடிக்கைகளைச் சேதிகளாகக் கண்ட பிறகு, நான் போகாமலிருந்தது, எவ்வளவோ பேருக்கு மன நிம்மதியாக இருந்திருக்குமல்லவா என்பதனால் மகிழ்ச்சி பிறந்தது; சென்றிருந்தால், நான் ஓரளவு மனச்சங்கடத்தைச் சமாளித்துக் கொண்டுதான் அங்கு இருந்திருக்க முடியும் அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டது.

மனிதன் உள்ளத்திலே பேய்க்குணம் புகுந்து, உலகம் கெட்டுவிட்டது.

அவா புகுந்தது; அழுக்காறு குடைந்தது; பகை புகைகிறது; பாபம் பெருகுகிறது.

சுயநலம், சுரண்டிக் கொழுத்தல், சுகபோக நாட்டம் எனும் தீயசக்திகள், மனிதனை மிருகமாக்கிவிட்டன.

எதனையும் தன் ஆதிக்கக் கருவியாக்கிக்கொள்ளத் துணிந்துவிட்டனர், இதனால் துன்பம் பெருகிற்று, தூய்மை அருகிப்போய்விட்டது-

வினோபாவின் கருத்து இவை.

சம்மேளனத்துக்குத் "தூண்களாக'க் காட்சி தந்தவர்களிலே பலர், இத்தனைக்கும் பிறப்பிடம், இருப்பிடம்! இதை நான் அங்கு சென்று கண்டு, எங்ஙனம் வெளியிடாமல் இருந்திட இயலும்; வெளியிட்டிருந்தால், சபையின் வனப்பு எப்படிக் குலையாதிருக்க முடியும்!

சென்று வந்தவர்களும், பூதான இயக்கத்திலும், வினோபாவின் அப்பழுக்கற்ற தொண்டிலும் மனது இலயித்திருப்பவர்களுமே, சர்வோதய சமமேளனத்தில் கண்ட காட்சியைக் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

"புது வாழ்வு' என்றோர் இதழ் - இதோ என் எதிரில் - சேலத்திலிருந்து வெளிவரும் முற்போக்கு இதழ் - அதிலே, நான் காண்பது, தம்பி, உன் மூலம், நாடு காணட்டும் :

"சென்ற மாதம் இறுதியில் காஞ்சிமா நகரில் 8-வது சர்வோதய சம்மேளனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இமயத்திலிருந்து குமரிவரை, ஏன், சிலோன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளினின்றும் ஆயிரமாயிரம் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் விஜயம் செய்து, சம்மேளனத்தைச் சிறப்பித்தார்கள்.

ஆனால் அவர்கள் தாம் எதிர்பார்த்தபடி மன நிறைவு கொண்ட மனதினோடு திரும்பினரா? இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏன்? காங்கிரஸ் கட்சியின் கண்மூடிச் செயல், ஆளும் கட்சியின் அநாகரீக தர்பார், நல்லவர்களின் உள்ளங்களை யெல்லாம் வதைத்து விட்டது.''

தம்பி, வினோபா பூதானம் கேட்கிறார் -அவருடைய தூய்மை கண்டு அளிக்கிறார்கள் - ஆனால் ஆளும் கட்சியோ, அவரிடம் இரத்ததானம் கேட்கிறது! உண்மை ஊழியர்களுக்கு வேதனை உண்டாகிறது, ஆனால் அதற்காக, ஆளும் கட்சியினர். இந்தப் பொன்னான வாய்ப்பையா இழந்துவிடுவார்கள்! அவர்கள் பாபம், ஆகாவழியில் ஆட்சி நடத்துவதால், மக்களை அணுகவே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். அருள் நெறியினர் அண்ணல் வினோபா என்பதற்காக ஆயிரக் கணக்கிலே அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள் என்று அறிந்ததும், அவர் நிழலில் பதுங்கிக் கொண்டு, மக்களிடம் சென்று, புன்னகை செய்தும், புண்யவான் என்று பேசியும், மதிப்புப் பெறலாமா என்று முயற்சிக்கிறார்கள்.

அவர்களாக, மக்களைச் சந்திக்க, எத்தனையோ திறப்பு விழாக்கள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள் நடத்திப் பார்க்கின்றனர் - அலுத்துப்போன அதிகாரிகளும், ஆயாசப்படும் கனதனவான்களும் மட்டுமே காட்சி தருகின்றனர்- மக்களோ, அங்காடியில் நின்றபடி கெக்கலி செய்கின்றனர். இந்த நிலை கண்டு நொந்து போயிருப்பவர்களுக்கு, வினோபாவின் விஜயத்தைச் சர்வரோக நிவாரணியாக்கிக்கொள்ளலாம் என்ற அற்ப ஆசை ஏற்படுகிறது. ஆகவேதான், தம்பி,

"வினோபா பிரார்த்தனையில் விளம்பரம் பெறும் நோக்கத் துடன் காங்கிரஸ்காரர்கள் அவர் மேடைமீது நிரம்பத் துவங்கி விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது செலவற்ற தேர்தல் வேலை என்று கருதி விட்டார்கள்!''

என்று அந்த ஏடு எழுதுகிறது.

எனக்கு எடுத்துச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. இவ்வளவு கூச்சம்விட்டா, பெருந்தலைவர்கள் நடந்துகொள் வார்களென்று தோன்றுகிறது. ஆனால், அந்த இதழ், திட்டவட்டமாகக் கூறுகிறது, வினோபா கூட்டத்தைத் தமது விளம்பரத்துக்குக் காங்கிரஸ்காரர் பயன்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட அவலட்சணத்தை.

"இதனால் வினோபாவுக்கே மேடையில் இடம் இல்லை. அவர்பாடு சங்கடமாகிவிட்டது. எனவே சர்வோதய ஊழியர்கள் கூடி, பிரார்த்தனையின்போது, வினோபாஜி, அவரது மொழிபெயர்ப்பாளர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் மேடைமீது அமரக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் விளம்பரத்திற்கே வாழும் காமராஜர் இதனைப் பொருட்படுத்தாது, மேடையின்மீது வந்து ஆனந்தமாக அமர்ந்தார்.

ஏற்கனவே செய்யப்பட்ட முடிவுக்கு மாறாக நடந்ததைக் காண சர்வோதய ஊழியர்கள் உள்ளம் நொந்தார்கள். உத்தமத் தோழர், ஒப்பற்ற வீரர், தமிழ்நாடு மாணவ பகுதி பூமிதானக் கமிட்டிக் கன்வீனர் த.ஃ.கிருஷ்ணமூர்த்தி மெத்தவும் துடித்து காமராஜரை அணுகி, மேடையைவிட்டுக் கீழே இறங்கு என்று கர்ஜித்தார். காமராஜர் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பேசினார். முடிவில் அநீதியை அப்பால் அகற்றத் தன்னால் முடியாது என அறிந்த கிருஷ்ணமூர்த்தி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.''

தம்பி, காமராஜர் குறித்து இவ்வளவு விஷயம் வெளியிடும் இந்த "ஏடு'-நமது முகாம் அல்ல - சர்வோதய சம்மேளனம் வெற்றிபெறுவதற்காகப் பணியாற்றிடும் நண்பர் குழாம் - நினைவிருக்கட்டும்.

மனம் அவ்வளவு புழுங்கிடும் அளவுக்கு, சர்வோதய சமமேளனத்தைக் காங்கிரஸ் மாநாடு ஆக்கியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் மாநாடாக மாறியதுகூட அல்ல, அந்தச் சம்மேளனம், போலீஸ் மாநாடாகிவிட்டதே என்று துளைத்திடும் துக்கத்தை ஏடு வெளியிடுகிறது; படித்துக் காட்டு; புனித இடங்களை நான் பாழ்படுத்திவிடுகிறேன் என்று புகார் கூறிடும் நண்பர்களுக்கு.

"ராஜன் பாபு வந்தாரோ இல்லையோ, சம்மேளனம், ஏன், காஞ்சி வட்டாரமே போலீஸ் இராஜ்யம் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மலபார் போலீசும் இதர போலீசும் குவிந்துவிட்டனர். எங்கும் போலீஸ் மயம்! அது போலீஸ் மகாநாடாக மாறிவிட்டது. எல்லோரும் சமம் என்பதை நிலை நாட்ட எழுந்த அந்த மகாநாட்டிற்கு ராஷ்டிரபதி ராஜன்பாபு வந்ததற்காக பல இலட்சங்கள் செலவு!

ஒரு மனிதரைக் காப்பாற்ற ஆயிரமாயிரம் போலீஸ். மழை காரணமாக பல குடிசைகளில் நீர் நிரம்பிவிட்டதால் பல பிரதிநிதிகள் வெட்ட வெளிகளில் தங்கினார்கள். தொண்டு கிழங்களும், தாய்மார்களும், தரையில் புரண்டார்கள். மகரிஷி வினோபா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்குக்கூட எளிய குடிசைகள்தான். ஆனால் அதே சம்மேளனத்திற்கு வந்த ஒரு மனிதர் ராஜன் பாபு இரண்டு நாட்கள் தங்கப் பத்தாயிரம் ரூபாய் செலவில் புதியதோர் நவநாகரிக மாளிகை நிர்மாணிக்கப் பட்டது. எத்தனையோ நூறு நூறு உள்நாடு, அயல்நாட்டு மக்கள் வெப்பத்தைப் பொருட்படுத்தாது சம்மேளனத்தில் தங்கினார்கள். ஆனால் அந்த ஒரு மனிதருக்குப் பல ஆயிரம் ரூபாய் செலவில் மித உஷ்ண அறைகள் அமைக்கப்பட்டன!

ஓரம் ஓரம் என்று போலீஸ் பொதுமக்களுக்கு தெரு ஓரச் சாக்கடைகளைக் காட்டினர்.

பலர் சாக்கடைகளில் விழுந்தனர்

. சமுதாயத்தில் மூண்டுவிட்ட சீர்கேடுகளை நீக்கச் சம்மேளனம் கூடுகிறது - உண்மை ஊழியர்கள் உள்ளம் வெதும்பி, அங்கு காணப்பட்ட சீர்கேடான நிலையைக் கூறி வருந்துகிறார்கள். மேலும் எழுதுகிறது, "புது வாழ்வு'.

"அடுத்தது காங்கிரஸ் தலைவர் தேபர். இம்மனிதர் வழக்கப்படி தமது சின்னத்தனத்தைக் காட்டச் சிறிதும் தவறவில்லை. ஒரு சர்க்கஸ் கம்பெனியைப்போல் பரிவாரங்கள் புடைசூழ வந்தார்''-

தம்பி, இவ்வளவு கொதிப்பு "புதுவாழ்வு' இதழ் கட்டுரையாளருக்கு ஏற்படும் விதமாகச் சூழ்நிலை இருந்தது என்றால், நான் இங்குச் சென்றிருந்தால், மனம் என்ன பாடுபடும் என்பதையும், புதுவாழ்வு கட்டுரையாளர் கூறுவதிலே பத்திலொன்று நான் கூறிட நேரிட்டால் எவ்வளவு பதறிப்போய், பாவி! பாதகா என்று பழித்திருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பார்.

"ஒன்று மட்டும் சம்மேளனத்தில் தெளிவாகிவிட்டது. காங்கிரஸ்காரர்கள் கட்சி விளம்பரத்திற்குத்தான் பூமி தானத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அது!'' உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், சொந்தம் கொண்டாடிக் கொண்டும் சம்மேளனத்தில் கலந்துகொண்ட ஒருவர், அங்கு காட்சிகளைக் கண்ட பிறகு அளித்திடும் தீர்ப்பு இது.

எனக்கு முன்கூட்டியே நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று மனதில்பட்டது - ஆனால் அதனை நண்பர் ஜகன்னாதனிடம் எடுத்துச் சொல்வது கண்ணியக் குறைவாகத் தென்படும் என்று எண்ணினேன்.