அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


விழாவும் விளக்கமும்
1

சைப்ரஸ் கிளர்ச்சியும் விடுதலை விழாவும் -
நாகநாடு பிரச்சினை -
தி. மு. க. வின் இன்றைய நிலை -
எதிர்க்கட்சி

தம்பி!

வெடிகுண்டு வீசுகின்றனர், தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்! பதுங்கிப் பாடுகின்றனர். பிடிபட்டுப் பதறப் பதறச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்! ஆற்றல், ஆடவரின் தனி உடைமை அல்ல என்று முழக்கமிட்டுக்கொண்டு ஆரணங்குகள் கிளம்புகின்றனர், தாய்க்குலம்! ஆனால் எமக்கென்ன? தலை உண்டு, சிறை உண்டு என்று ஆட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்; பேயாட்சி இது, இதனிடம் நியாயம் கிடைக்காது, அறிவோம் என்று எழுச்சியுடன் பேசுகின்றனர் மாதர்குலமாணிக்கங்கள், சதி! பயங்கரத்திட்டம்! கொலை! கொள்ளை!! குலைநடுக்கம் தரும் கொடுமைகள்!! - என்றெல்லாம் இதழ்களில், கொட்டை எழுத்துக்களில் வெளிவருகின்றன!

முப்படையும் மும்முரமாகிறது, வீரரோ, காடுகளைக் களமாக்கிக் கொள்கின்றனர், மலைச் சரிவுகளை மன்றங்களாக்கிக் கொள்கின்றனர், பாசறைகள், அடர்ந்த அடவிகளிலே எழுகின்றன! இங்கு! இங்கு! - என்று அதிகாரிகள் கூறித்தேடுகின்றனர். ஓரிடம் சென்றால், புரட்சிப் படையினர் மற்றோரிடம் சென்றுவிடுகின்றனர்! மாயாவிகள்! மாபாவிகள்!! - என்று கடிந்துரைக்கின்றனர் ஆட்சியாளர்! எமது தாயகத்தை விடுவிக்கும் தங்கக் கம்பிகள்! அறிவுடை நம்பிகள், அடலேறுகள்! என்று வாழ்த்துகின்றனர், நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டோர்.

மலையும் வனமும், மனையும் தொழிலிடமும், அங்காடியும் அடுக்களையும் பூங்காவும் - எல்லாம் வீரக் கோட்டமாகி விடுகின்றன!

பரலோகம் குறித்த பஜனை நடைபெறும் இடங்கள் மட்டும் என்ன? அங்கும், விடுதலை பற்றியே உபன்யாசம்!!

சைப்ரஸ் தீவு, தம்பி! நான் மேலே காட்டியுள்ள இடம்!! படைவரிசையினர் மட்டுமல்ல, பள்ளிச்சிறார் மட்டுமல்ல, பாதிரிமார்களும் பங்குகொள்ளும் உரிமைக் கிளர்ச்சி வேகத்துடனும் விறுவிறுப்புடனும் நடத்தப்பட்டுவரும் சைப்ரஸ் தீவு.

பிரிட்டிஷ் பிடியில் இனியும் இருந்திடச் சம்மதியோம். எமது தாயகமாம், கிரீஸ் நாட்டுடன் இணைந்து வாழ்ந்திட அனுமதி அளியுங்கள். பீரங்கிப் படையைக் காட்டி எமது பிறப்புரிமையை அழித்திட முனையாதீர்கள்!! - என்று சைப்ரஸ் தீவிலே உருவாகியுள்ள உரிமைப் போர்வீரர் கூறுகின்றனர்.

வேண்டுகோள் கவனிக்கப்படவில்லை - கெஞ்சினர், மிஞ்சினர் - எனவே, பலாத்கார முறைகள், பயங்கரச் செயல்கள் கிளம்பின; இந்தப் போக்கை ஒடுக்க, பிரிட்டன், அடக்கு முறையை அவிழ்த்துவிட்டது, ஐயகோ! தம்பி! அடக்குமுறை வயிறு வெடிக்குமளவுக்கு, சைப்ரஸ் நாட்டு விடுதலை வீரரின் குருதியைக் குடித்தது.

கடைசிச் சந்திப்பு! இறுதி முத்தம்! இன்னுயிரே, என்றென்றும் எனை மறவாதே! - என்று கூறிவிட்டுச் செல்வான் காதலன். மறுநாள் இராணுவத்தினர் விதித்திடும் மரண தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான் - மலர் கருகும் - மனையில் ஓலம் பீறிட்டெழும் - மக்கள் கண்ணீர் பொழிவர் - புதிய வேட்டைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டு, அடக்குமுறை கிளம்பும்.

இந்தச் சைப்ரஸ் தீவில், கனலை மூட்டிவிட்டவர், கலகத்தைத் தூண்டிவிட்டவர், சதிச்செயல்களுக்குத் தூபமிட்டவர், பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட மகாரியாஸ் பாதிரியாரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிறைப்படுத்திற்று.

கர்த்தரின் நாமத்தைப் பூஜிக்கவேண்டிய வாயால், கலகமூட்டிப் பேசினார், ஜெபமாலை உருட்ட வேண்டிய கரங்களில் பயங்கரக் கருவிகளை ஏந்தினார், பரலோக மகத்துவத்தைக் குறித்துப் போதிக்க வேண்டியவர் புரட்சியை ஊட்டிடப் பேசினார், பாதிரி அல்ல இவர், பயங்கரவாதி! இவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆலயத்தை இவர் ஆயுதக்கிடங்காக்கி விட்டார் - ஆபத்தானவர்!! - என்றெல்லாம், மகாரியாஸ்மீது பிரிட்டிஷார், கண்டனம் வீசினர் - ஷீஷ்லீஸ் தீவு கொண்டு சென்று சிறைப்படுத்தி வைத்தனர்.

நெடுந்தொலைவிலே தாயகம் - அங்கு குன்றிலும் பொழிலிலும், காடு கழனியிலும், வீரர் முழக்கம் கேட்டபடி இருக்கிறது. - முதியவர் இந்தப் பாதிரியார், சிறை வைக்கப்பட்ட தீவிலிருந்துகொண்டே, மனக் கண்ணால், விடுதலைக் கிளர்ச்சியின் வடிவத்தைக் கண்டு களிகொண்டார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறிக்கு, இஃதோர் எடுத்துக் காட்டு - அதற்காகத்தான் அண்ணா, இதனைக் காட்டுகிறார் என்று கூறுகிறாய், தம்பி!

விடுதலை வேட்கை கொண்டவருக்கு, வந்துற்றிடும் இடுக்கண்கள் எண்ணற்ற வகையின என்பதை விளக்கிட, இதனைக் கூறுகிறேன் என்று கருதும் தம்பிகளையும் காண்கிறேன்.

நாடு நலிந்தால் நமக்கென்ன, நாமாவாளி பாடிடத்தானே நாம் இருக்கிறோம் - என்ற போக்கிலே ஆண்டிகளும் இருந்திட லாகாது. சைப்ரஸ் தீவின் விடுதலைக்கான கிளர்ச்சியிலே, ஒரு பாதிரியார் எத்தகைய தீவிரத்துடன் ஈடுபட்டு, எத்துணை இன்னலை ஏற்றுக்கொண்டார், காணீர் என்று இந்நாட்டுக் காவிக்கோமான்களுக்குக் காட்ட இதனை நான் எடுத்துரைக் கிறேன் என்று எண்ணும் தம்பிமார்களும் இருக்கிறார்கள்.

நான், இந்தக் கருத்துக்களுக்காக மட்டுமல்ல, இதனைக் கூறி இருப்பது.

பயங்கரப் பலாத்காரமும், அதை ஒடுக்க என்று கூறிக் கொண்டு மோசமான அடக்குமுறையையும் வீசும் நிலையில் உள்ள சைப்ரஸ் தீவில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர், நடத்திச் செல்பவர் என்று கருதப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவராயிற்றே, மகாரியாஸ் பாதிரியார், அவர் சென்ற கிழமை, விடுதலை பெற்றிருக்கிறார்! சைப்ரசில் மட்டுமல்ல, கிரேக்க நாடு முழுவதுமே, விழாப்போன்ற நிலைமை! உலகெங்கும் உயர்ந்த எண்ணம் படைத்தோரிடமிருந்தெல்லாம் வாழ்த்துக்கள்! அமெரிக்க மக்கள், தங்களைக் காண விழைகின்றனர், வருக! வருக! என்று அழைப்பு!! மகாரியாஸ் பாதிரியார் கிரேக்க மன்னர் அவை செல்கிறார். விருது அளிக்கிறார் பால் மன்னர்!

தம்பி! மறந்துவிடாதே, வெடிகுண்டு வீசி விடுதலைக் கிளர்ச்சி நடத்தும் இடம், சைப்ரஸ்; வெட்டி வீழ்த்தியும் சுட்டுத்தள்ளியும் விடுதலை வீரர்களை ஒழித்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முனைந்துள்ள இடம், சைப்ரஸ்!!

எனினும், மகாரியாஸ் பாதிரியாரை, விடுதலை செய்திருக்கிறது, பிரிட்டன்!

சைப்ரசில் பேயாட்சி நடத்தும் பிரிட்டன், மகாரியாஸ் பாதிரியாரை விடுதலை செய்திருக்கிறது.

அதேபோது, சாந்தமும் சன்மார்க்கமும், சீலமும் அகிம்சையும் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு இயங்குகிறது, "பாரதம்' - இங்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவை, மேலும் சில காலம் சிறையிலேயே வைத்திருக்க, தாக்கீது பிறந்திருக்கிறது!!

காஷ்மீரில், பொதுத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது - அதற்கான அமைதியான சூழ்நிலை கிடைத்திருக்கிறது - எனினும், பீரங்கி முழக்கமிடும் தீவின் பயங்கரமனிதர் என்று சித்தரிக்கப்பட்ட, பாதிரியார் விடுதலை செய்யப்படுகிறார் - என்ன செய்தார் என்பதுபற்றி வழக்கும் தொடராமல். இவர் வெளியே உலவுவது காஷ்மீரத்து நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று கூறிவிட்டு, சிறையிலே தள்ளினரே ஷேக் அப்துல்லாவை, அவருடைய சிறைவாசம் மேலும் சில காலத்துக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது!!

ஜெய்ஹிந்த் - சொல்லச் சொல்லிச் சொல்கிறீர்களா? - அல்லது வந்தே மாதரம் பாடுவமா - அல்லது கோஷ்டியாகக் கூடி ஜனகணமன பாடுவதா என்று கேளுங்கள், காங்கிரஸ் நண்பர்களை!

பிரிட்டிஷ் பேயாட்சியில் பயங்கர மனிதர் விடுதலை பெறுகிறபோது, நேருவின் மாஜி நண்பர் வெளியே விடப்பட்டால், எங்கோ அவர் ஒளித்து வைத்திருக்கும் அணுகுண்டை எடுத்து, அலகபாத்தாரின் அரண்கள்மீது வீசியா அழிவு உண்டாக்குவார் என்று அஞ்சுகிறார்கள்!

மகாரியாஸ் பாதிரியார் விடுதலை - ஷேக் அப்துல்லாவின் சிறைவாசம் நீடிப்பு - இந்த இரு செய்திகளையும், ஒரு சேர எண்ணிப் பார்த்திடும்போது என்ன தோன்றுகிறது - உனக்கல்ல - அவர்களுக்கு - காங்கிரஸ் அன்பர்கட்கு.

வீட்டுக்கொரு வீரன் வேண்டும்! வெற்றி அல்லது வீர மரணம் என்ற இலட்சியம் ததும்பும் இதயம் படைத்தோர், திரண்டு எழல்வேண்டும்! இனியும், வாளா இருப்பின் வையகம் நம்மைக் கேலியால் கொல்லும்! நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபட வாரீர், வாரீர்! - என்று இலங்கைத் தீவிலே உள்ள தமிழர் தலைவர்கள் முழக்கமிடுகின்றனர். எண்ணற்ற இளைஞர்கள், நான் நீ - என்று போட்டியிட்டுக்கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வருகின்றனர்.

"இலங்கையில் எங்குபார்த்தாலும், வானளாவும் நீலமலைகளின் உச்சி எல்லாம் பசுமை நிறைந்த தேயிலைச் செடிகள், இரப்பர் காடுகள், இவை தோன்றக் காரணமாயிருந்தவன் மலைநாட்டுத் தமிழன்.

மண்ணைப் பொன்னாக்கிக் குவித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி, சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவாழ வழி வகுத்த தென்னாட்டு மக்களின் உரிமையையும், அந்தஸ்தையும் பறித்து, அடிமைகளாக, இலங்கை வைத்திருக்கிறது. பல இலட்சம் தமிழ் மக்களின் இரத்த வியர்வையைக்கொண்டு உருவாக்கப்பட் டிருக்கும் இந்த இலங்கை நாட்டில், தமிழ் மக்கள் இன்று அந்த நாட்டிலே அடிமைகளாக, அனாதைகளாக, நாடற்றவர்களாக, நசுக்கப்பட்டு வருகிறார்கள்'' - என்று சென்ற கிழமை, நமது டி. கே. சீனிவாசன் கொழும்பு நகரத்தில் நாராயண குருமண்டபத் தில், தி. மு. க. ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

இந்த இலங்கைக்கு, நேரு பண்டிதர், மே திங்களில், செல்கிறார்!!

தமிழரின் துயர் துடைக்க! உரிமைக்காக வாதாட! பண்டார நாயகா சர்க்காரின் படுமோசத்திட்டத்தை ஒழித்திட! என்றெல் லாம், காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தமிழர் தத்தளிக்கின்றனர் - ஆனால் நேரு பண்டிதர் "விஜயம்' செய்வது, அவர்தம் பிரச்சினை குறித்துப் பேச அல்ல - பகவான் புத்தருடைய ஜெயந்தியில் கலந்து கொள்ளும்படி, பண்டார நாயகா சர்க்கார் விடுத்துள்ள அழைப்பினை ஏற்றுக்கொண்டு, செல்ல இருக்கிறார். பஞ்சையாய், பராரியாய், பாட்டாளியாய்க் கிடந்து உழலும், இந்தத் தமிழர்களுக்குப் பணிபுரிவதா, பார்புகழ் பண்டிதருக்கு இருக்கும் வேலை! அவர் புத்தர் விழாவில், பிரசன்னமாகி, சீலம், சாந்தம், சன்மார்க்கம், - சமரசம் - சத்காரியம் எனும் பொருள்பற்றி எல்லாம் பேசப்போகிறார்! என்னே, நேருவின் அறிவாற்றல்! - என்று ஏடுகள் எழுதப்போகின்றன! ஜனசமுத்திரம் காணீர் என்று இதழ்கள் படங்களை வெளியிடப்போகின்றன!!

உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ, பஞ்சசீலம் போதித்து வரும், பாரதப் பிரதமரே வருக, வருக!! - என்று பண்டார நாயகா வரவேற்புரை கூறுவார் - அதேபோது, இலங்கையில் வேறேதாவதோரிடத்தில், "ஏ! கள்ளத்தோணி! கட்டு மூட்டையை! சட்டமாவது! திட்டமாவது! ஓடுகிறாயா நாட்டை விட்டு, இல்லையானால் குத்திக் கொல்லட்டுமா'' என்று வெறியன் எவனாவது கொக்கரித்துக் கொண்டிருப்பான்.

அழாதே, தமிழா! அழாதே!! ஆயாசப்படாதே அன்பனே! உன் நாட்டின் அருமை பெருமை எப்படிப்பட்டது என்பதைப் பார்! இதோ உனக்கென்று, நீயாகத் தேடிப் பெற்றுக்கொண்ட முடிசூடா மன்னர் இருக்கிறாரே, நேரு பண்டிதர், அவருக்கு நடத்தப்படும் இராஜோபசாரத்தைப் பார்! அவர் முன்நின்று, வணங்கியும் வாழ்த்தியும், கைகுலுக்கியும் கனிவுரை பொழிந்தும் நிற்பவர்கள், சாமான்யர்கள் அல்ல - பண்டார நாயகாக்கள் - சேனாநாயகாக்கள் - கொத்தலாவலைகள் - கோடீஸ்வரர்கள்!! அவர்கள் சுட்டுவிரலிலே சட்டம் இருக்கிறது! அவர்களிடம் நாடு இருக்கிறது! அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் மெத்தப் பயபக்தியுடன், உன் பண்டிதர் முன்நின்று பணிவிடை செய்வதைப் பாராய் - என்று சொன்னால் - எப்படி இருக்கும், கண்ணீர் கொப்பளிக்கும் நிலையில் உள்ள, நம் உடன் பிறந்தார்க்கு!!

வெட்டுக் காயத்தில், அரைத்தெடுத்த மிளகாயை அப்பி வைத்து, உலைக்கூடத்திலே இருக்கச் செய்துவிட்டு, "பாக்யவான்டா நீ! உனை ஆளும் வேந்தன், வெண்ணெய்யால் பல்விளக்கி, பன்னீரால் வாய்கொப்பளித்து சுத்தம் செய்த பிறகுதான், தங்கக் கோப்பையில் கனிரசம் ஊற்றிப் பருகுவாராமே என்று சொன்னால், அவனுக்கு எப்படி இருக்கும். அதே நிலைதான் தமிழருக்கு!! அல்லலும் அவமானமும் தமிழருக்கு; வைபவமும் அரசாங்க மரியாதையும் நேரு பண்டிதருக்கு. கண்ணால் பாரும் எமது புண்களை - என்றுகூறத் தமிழர் துடிப்பர் - காதால் கேளும் என் பஞ்சசீல உபதேசத்தை என்று மட்டுமே பண்டிதர் கூறிட நினைப்பார்.

விசித்திரம் இதுமட்டுந்தானா?

பூசல்கள் கூடாது - சமரசமாகவே எந்தத் தகராறுகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் - அன்புதான் அடிப்படையாக இருக்கவேண்டும், பலாத்காரம் அறவே இருத்தல் கூடாது!! - என்றெல்லாம், கேட்போர், சாந்த சீலர்களாகும் விதமாகப் பண்டிதர் பேச இருக்கிறார். ஜெயந்தியில் - அவருடைய "பாரதத்தில்' நாகநாட்டவர் உரிமைக் கிளர்ச்சியை நீண்ட காலமாகவே நடத்திக் கொண்டு வருகிறார்கள் - அந்த மக்களுக்குச் சீலம் போதிக்க, நேரு பண்டிதரின் ஆட்சி

லெப் ஜெனரல் திம்மய்யா
லெப் ஜெனரல் தொராட்
மேஜர் - ஜெனரல் கோச்சார்
கர்னல் பிரேஸ்வர் நாத்

ஆகியோர் கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திற்று.

திம்மய்யாவும் தொராட்டும் படைகளை நாலாபக்கமும் அனுப்பி, நாகர்களை, கலகத்தினின்றும் விடுவிக்கிறார்கள்!! எப்படி? சுட்டுத் தள்ளுவதன் மூலம்!!

பாருக்கெல்லாம் பஞ்சசீலம்! பாரதத்தில்? பட்டாளத்துப் பெரும் தலைவர்களிடம், நாகநாடு பிரச்சினை பெரிதும் ஒப்படைக்கப்படுகிறது. நாள் தவறாமல், நாகர்கள் பிடிபட்டனர், சுடப்பட்டனர், விரட்டப்பட்டனர் என்ற "செய்தி'கள் தரப்பட்டு வருகின்றன!

குருதி கொட்டியா, பிரச்சினையைத் தீர்ப்பது, அன்பு நெறி மூலம், அகில உலகிலும் அமளி எழாமற் செய்ய இயலுமே, அண்ணல் காந்தி அதனைத்தானே அவனிக்கே அறிவித்தார் - என்று பாரதப் பிரதமர் அடுத்த திங்களில் பேசப்போகிறார்! இப்போது, நாகநாடு பிரச்சினையில் அவருடைய "இராணுவம்' மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது!!

இப்படி எண்ணற்ற விசித்திரங்கள், "பாரதத்தில்' உள்ளன. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இவைகளெல்லாம், விசித் திரங்களாகத் தோன்றவில்லை - தம்பி! அவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற, (மிகச் சிறிய அளவினதான) வெற்றியை, விசித்திரமானது என்று கருதுகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் என்ன?

காஷ்மீர் சிக்கல் இன்னமும் எத்தனை எத்தனை கோடிகளைத்தான் விழுங்கும்?

கோவாவில், நடைபெறும் அன்னிய ஆட்சியை நீக்கிட நேரு பண்டிதரால் ஏன் இன்னமும் இயலவில்லை?

என்பனபோன்ற பிரச்சினைகளைக் கூட, அலச, ஆராய, நேரமோ, நினைப்போ இல்லை. அவர்கள் கண்முன் இப்போது தெரிவதெல்லாம், 15!!

ஆமாம், பதினைந்து!! கழகம் பெற்ற வெற்றிபற்றிய எண்ணம்தான் குத்துகிறது, குடைகிறது!!

எப்படிப் பெற்றார்கள்? என்று கேட்டுக்கேட்டு, ஏதேதோ காரணம் கட்டிப் பார்த்து மகிழ்ந்தாகி விட்டது - இப்போது அவர்கள், இந்தப் பதினைந்து பேர் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேட்கின்றனர் - அதுகுறித்தே, தத்தமது தரத்துக்குத் தக்க வண்ணம், உரையாடித் திரிகின்றனர்.

திராவிட கழகத்தார் பரவாயில்லை. அவர்களுக்கு, புத்தம் புதிய வேலை கிடைத்துவிட்டது - அதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுவர் - இடையிடையே, இப்படியும் அப்படியுமாகக் குத்துவர் - ஆனால் அவர்களின் முழு ஆற்றலும், இப்போது, களத்துக்குத் திரட்டப்பட்டு வருகிறது!!

இனிச் சிலகாலம், காரசாரம், வீரதீரம், சூடு சூளுரைத்தல், இவைகளை, புதிய போராட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அணுகுண்டுகளை எல்லாம் ஆழ்கடலுக்குள் போட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் சரி, அவர்கள் அக்கறை காட்டவும் மாட்டார்கள், அக்கறை காட்டிட யார் முனைந்தாலும், அற்பனே! அதுவா இப்போதைய முக்கியமான பிரச்சினை!! இதோ, பார், இது பிரச்சினை - இதோ, இது, இது!!'' என்று கூறுவர்; மறுப்பவன் மீதோ, நாராச பாணங்கள் சரமாரியாக விடுப்பர்.

ஆனால், தீவிரமாக, தீரப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையிலும், "இந்தப் பயல்கள்... கண்ணீர்த்துளிகள்...'' என்ற அந்த அர்ச்சனையையும், கூறாமலிரார். ஆனால், தம்பி! போர்க்கோலம் பூண்டு நிற்கும்போது, அவர்கள் மிகச் சாமான்யமான காரியமான அரசியல் பிரச்சினையை அணுகும் நம்மைப்பற்றிப் பேசினால், நாம் கவலைப்பட்டு என்ன பயன்!!

வாகை சூடுக!! என்று நாம், மனதார அவர்களுக்குக் கூறிட விழைகிறோம்.

அவர்கள்போல, போர்க்கோலம் பூண்டுள்ளவர்கள் அல்ல, மிகச் சாமான்யமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நம் போன்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள், இந்தப் பதினைந்து பேர் சட்டசபையில் போய் இருந்துகொண்டு, என்ன சாதிக்கப்போகிறார்கள்? என்ன செய்ய முடியும்? என்ன திறமை இருக்கிறது? - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களைக் குறித்து நாம் யோசிக்கவேண்டும்.

அதற்கு முன்னதாக, ஏன், பதினைந்து பேர் பெற்ற வெற்றியை விசித்திரம் என்று கருதுகிறார்கள் என்பதுபற்றி, எண்ணிப் பார்த்தாயா, தம்பி.

நான் அது குறித்து எண்ணிப்பார்த்தேன் - அவர்கள் அவ்விதம் எண்ணுவதற்குக் காரணம், யார் தெரியுமா? நீதான் தம்பி! நீயேதான்!! நாள் தவறாமல் ஊரூருக்கும், பெருந்திரளான மக்களைக் கூடச்செய்து, விழாக் கோலம் காட்டி, நடத்திய வண்ணம் இருக்கிறாயே வெற்றிக் கூட்டங்கள் - வரவேற்பு விழாக்கள் - பாராட்டுக் கூட்டங்கள் - இவைகளைக் காணக் காணத்தான், அவர்களுக்கு, கோபம்கோபமாக வருகிறது - வெற்றியாம் விழாவாம்! வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்களாம் சட்டசபையில் என்று கோபமாகக் கேட்கின்றனர். நமது பேரில் அவர்களுக்குக் கிளம்பும் கோபத்தில், அவர்கள்,

காஷ்மீர் பிரச்சினை என்ன ஆகும்?
கோவா கொடுமை எப்போது ஒழியும்?
இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்ன?

என்பன போன்றவைகளைக் கூடக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நேரு பண்டிதரின் ஆட்சியிலே காணக்கிடக்கும் விசித்திரங்களைக்கூட மறந்து போகின்றனர்.

உள்ளபடி, சென்ற கிழமை, திருச்சியிலே, நமது தோழர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டத்தைக் கண்டவர்கள், காய்ந்து விழாமல் எப்படி இருந்திட முடியும்? நான் அந்தக் கூட்டத்திலேயே நிலைமையை எடுத்துரைத்தேன்.

"நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள்''

என்றுதான் குறைசொல்ல வேண்டும். பெற்றது 15 - தான் என்றாலும், 1,500 - இடங்களைப் பிடித்ததைப்போல இப்படி மலர் மாலைகளையும் கைத்தறி ஆடைகளையும் குவிக்கின்றீர்கள். ஏன்தான் நீங்கள் இப்படிச் செய்கின்றீர்களோ? நீங்கள் இப்படிச் செய்வதின் பலன் எங்கள் தலையில் வந்து விழுகின்றது.

நாளைக்கோ மறுநாளோ கூடிக்கூடி காங்கிரஸ்காரர்கள் பேசப் போகின்றார்கள்; முறைத்து முறைத்துக் கம்யூனிஸ்டுகள் ஏசப்போகிறார்கள் - திரும்பிப் பார்த்துவிட்டு பார்த்து விட்டுத் திராவிடர் கழகத்தவர்கள் தீப் பொறி பறக்கப் பேசப் போகிறார்கள் - என்ன இந்தப் பயல்களுக்கு இவ்வளவு கருவம்? - என்ன இந்தக் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய மாலை? அண்ணாத்துரைக்கு என்ன அவ்வளவு பெரிய மாலை! இதற்கு ஒரு போட்டோ, 150 - இடங்களைப் பிடித்தார்களே அவர்கள் இப்படியா ஆடினார்கள் - என்று.

நீங்கள் மெத்தப் பொல்லாதவர்கள். கொடுத்த வெற்றி குறைவுதான் என்றாலும், அதற்காக நீங்கள் நடத்துகின்ற கொண்டாட்டம் மிக அதிகம். ஆனால் உண்மையிலேயே நீங்கள் பொல்லாதவர்களா என்றால், உண்மையிலே பொல்லாதவர்கள் என்று பிறர் சொல்வார்களே தவிர, நீங்கள் நல்லவர்கள்.

இந்தக் கூட்டத்திற்கு வருகிற நேரத்திலே இந்த நகரத்து மக்கள் சிறு சிறு சோற்று மூட்டைகளைக் கட்டிக் கொண்டு, ஆடவனும் அவனுக்குச் சொந்தமான அணங்கும், அவர்கள் பெற்றெடுத்த பொற்கொடிகளும் செல்வங்களும் வரிசையாகச் செல்லக் கண்டேன்; நல்ல நிலவு, ஆற்றோரத்திற்குச் செல்லுகிறார்கள். அருமையாகச் சமைத்த பண்டத்தைச் சாப்பிடப்போகிறார்கள். அந்தச் சோற்றில் ஒரு சமயம் உப்பு குறைவாக இருக்கக் கூடும்; பண்டம் வேகாமல்கூட இருக்கலாம். ஆனால் அதை அன்போடு பிசைந்து தந்த ஆரணங்கு உப்பில்லாத பண்டத்தை உப்புள்ள தாக்குகின்றாள் - வேகாததை வெந்ததாக்குகிறாள் - கையிலே வாங்கி உண்ணுகின்ற நேரத்தில் உப்பு இல்லை என்று அவன் சொல்லுகின்றான் - அவள் சரியாகச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவேண்டிய முறைப்படி சொல்கிறாள் - பிறகு உப்பு இருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அவளுடைய கன்னத் திலே இடித்துச் சொல்லுகிறான், "நீ மிகப் பொல்லாதவள்' என்று! அந்த வகையிலே நீங்கள் பொல்லாதவர்கள்! என்று சொன்னேன்.