அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"ழ' கரமும் "ற' கரமும்

தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பு -
மொழிவழி அரசு அமைதல்.

தம்பி!

புதிதாகப் பதவியேற்ற பிரன்ச்சு அமைச்சர், அலுவலகத் தைப் பார்வையிடச் சென்றார் - முதல் அறையில் பணியாளர் இல்லை! இரண்டாவது அறையிலும் யாரும் இல்லை! மூன்றாவது அறையில் நாற்காலியில் உட்கார்ந்தபடி ஒரு பணியாளர் உறங்கிக்கொண்டிருந்தார்! அமைச்சருடன் வந்தவர், உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புவதற்காக அருகே சென்றார். அமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தி, "வேண்டாம்! வேண்டாம்! அவரை எழுப்பிவிடாதே! எழுந்தால், அவரும், மற்ற இருவரும் வெளியே சென்றுவிட்டது போல, அலுவலகத்தை விட்டுப் போய்விடப் போகிறார்!'' என்று கூறினாராம்.

ஒருவர்கூட அலுவலகத்திலே இல்லாதிருப்பதைவிட, உறங்குபவர் நிலையிலாவது ஒருவர் இருக்கட்டும், என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார் போலும்!

பொறுப்பற்ற தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குவதாக இருக்கிறது.

பிரன்ச்சு அமைச்சர் உறங்கிக் கிடப்பவரை எழுப்பிவிடா தீரய்யா, அவரும் வெளியே போய்விடப் போகிறார் என்று கூறி, வேதனையை நகைச்சுவையால் மாற்றினார்.

இன்று நமது திரு இடத்தில் ஒரேவழி ஒருவரிருவர், இங்கொன்றும் அங்கொன்றுமாக, மொழி, நாடு, இனம், என்பன குறித்து ஒருசிறிதுபேசும்போது, அவர்கள் இவ்வளவுதானா கூறுவது, அவர்களின் பொறுப்பும் பணியும் இந்த அளவோடு முடிந்துவிடல் வேண்டும், அவர்தம் அறிவாற்றலுக்கு ஏற்ற அளவுக்கா இப்பணி இருந்திடக் காண்கிறோம் என்ற எண்ணம் நமக்கெல்லாம் எழத்தான் செய்கிறது; தம்பி! அத்தரத்தினர் மீது நீ கோபித்துக்கொள்ளும்போது, எனக்கு அந்தப் பிரன்ச்சு அமைச்சருக்கு ஏற்பட்டது போன்ற கவலைதான் பிறந்துவிடுகிறது.

இவர்களைக் கோபித்துக்கொண்டால், இவர்கள் இதனையும் கூறாதிருந்துவிடின் என்ன செய்வது - ஏதோ இதையாவது சொல்கிறார்களே - ஓரோர் சமயத்திலாவது பேசுகிறார்களே - சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பாதுகாப்புச் சுவர்களையும் பக்குவமாக எழுப்பிகொண்ட பிறகேனும், சிலகூற வாய் திறக்கிறார்களே, இவர்களைத் தம்பி, கடிந்துரைத்தால், இதனையும் கூறாது இருந்துவிடுவரே என்ற அச்சம் எனக்கு.

பேராசிரியர் சேது(ப்பிள்ளை), அவர்கள் செந்தமிழின் சுவையினை நாட்டு மக்களுக்கு விருந்தாக அளித்திடும் நல்லவர்! பொன்னாடை போர்த்தி அப்புலவரைப் பெருமைப்படுத்தினர். நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேனில்லை எனினும், இருக்குமிடத்திருந்தே அவர் பெற்ற ஏற்றம் கண்டு இறும்பூதெய்து பவன், அவர் அறியார் என்று எண்ணுகிறேன், அவரிடம் தொடர்புகொண்ட குழாத்தினரில் கூட - அவர் பால் பெருமதிப்புக் கொண்ட என்போன்றார் அதிகம் இரார்.

பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலிமாட்சி குறித்து, அழகுறப் பேசியிருக்கிறார்.

தமிழ் மொழிக்கே அணியாக விளங்கிடும் "ழ' கரம் "ற' கரம் குறித்து எடுத்துக்கூறி, "ழ' அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகையை ஒலி மாட்சியை, பிறமொழிகள் பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகைகொள்ளாதிருத்தல் குறித்தும் அதன்உயர்வறியாது அதனைப் பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார்.

எழுந்திரு-ஏந்திரு என்றாகிவிட்டதையும்,
திருவிழா-திருவிஷா என்று கெடுவதையும்,
பழம்-பளம் ஆகிப் பாழ்படுவதையும்,

கிழவி, கியவி ஆகி "ழ' கரம் கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய் மொழிக்கே அழகளிக்கும் "ழ' கரம் இங்ஙனம் பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி மொழி யினைக் கொலை செய்கிறார்களே என்றுகூறிக், கசித்துருகி நிற்கிறார்.

"ற' கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்றனர், உரையாடலில்!

"ற' கரம் வன்மையான வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல், "ற'வை, படாத பாடுபடுத்துகிறார்கள் நம்மனோர். காற்று, காத்தாகிவிடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயோ! அம்மவோ! சிலம்பளித்த செல்வன்,

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!

என்று கண்ணகி கூறுவதாகச் செப்புகிறாரே, ஆறு றகரம் ஒலிக்கிறது கேண்மின் - என்று எடுத்துக்காட்டுகிறார்.

மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக் கவலைப்படுகிறார்.

"ழ' கரம் - "ற' கரம் பாழ்படுகிறது!!

"ழ' தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பளிக்கும் அழகணி, இதனை அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போ ராகின்றனர்!

அவர்தம் போக்குக் கண்டு, மொழியின் சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும், "ழ' கரத்தின் அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும் முறையே- குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு "ற' கரம் ஒலித்திடும் சிலப்பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையி லேயே, அந்த "ற' கரங்கள், தமிழ்மொழியின் ஒலி மாட்சியையும், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கிறோம். மறுப்பாரில்லை! அத்தகைய மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாமலில்லை!

மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால் செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்கதோர் நிலைதான். ஐயமில்லை! ஆனால் . . . .!

மொழியின் "ஒலி' மட்டுமா இன்று பாழ்பட்டுக் கிடக்கிறது.

"ஒளி' மங்கி மறைந்து கொண்டிருக்கிறது!

ஒலிகெட்டும் ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது.

பாவலரும் காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும், ஆடலரங்கிலும், புலவர் மன்றமதிலும், பூங்காவிலும், கடலின் மீதும், குன்றின்மீதும், களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங்கவலை கொள்வதுபோல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறது! கேட்பார் யார்? எங்குளர்? மொழியின் வளம் பேசிமகிழ்வோர் உளர்! ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின்நிலை! அந்நிலைக்கு வந்துள்ள கேடு? அக்கேட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம்பெற எண்ணும் முதுகெலும்பற்றோர்! இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்?

அவள் காற்சிலம்பு! கைவளை! அவள் மேனியில் இடம் கொண்டோம் என்பதால் கர்வம் கொண்டிருந்த கச்சு! அவள் கரம்பட்ட செம்பஞ்சுக் குழம்புக் கலயம்! அவள் தோகை மயிலெனச் சாய்ந்திருந்த மஞ்சம்! . . . என்று காட்டிக் காட்டி, பெருமூச்சுவிட்டு, கண்ணீரையும் சிந்தவிட்டு, அம்மங்கை நல்லாள் எங்கே? என்று கேட்பவனிடம், "அவளா? இமயத்தான் இழத்துச் சென்றான் - என்னை எண்ணி எண்ணி அவள் சிந்தும் கண்ணீர் வெள்ளத்தில், அவன் ஓர்நாள் அழிந்தொழிந்து போவான் - உறுதி! உறுதி! உறுதி! - என்று கூறிப்பயன் என்ன? இருந்ததை இழந்தோம் என்பது கேவலம். இழந்திடுவோம் என்ற நிலையை முன்கூட்டி அறிந்திடாதிருந்தது மடைமை. அறிந்தபிறகு தடுத்திடும் முயற்சியில் ஈடுபடாதிருத்தல் கொடுமை. இழந்தபின் காதணி, காலணி, காட்டிக் கண்ணீர் சிந்துவது, இவை யாவும் கூட்டிச்சேர்த்த சேறு அன்றோ!

மொழி இன்று தாக்கப்படுகிறது. சிறுகச்சிறுக அழிக்கப் பட்டு வருகிறது - அரசு அவை அதனை ஏற்க மறுக்கிறது - அஞ்சல் நிலையத்தார் அதனை அடித்து விரட்டுகிறார்கள் - நாணயம் அதனைத் தாங்கிட மறுக்கிறது - நயாபைசா வருகிறது! இந்நிலையில், பழம் பளமானது பற்றியும், கிழவி கியவியானது பற்றியும் காற்றைக் காத்தாக்கி, நாற்றை நாத்தாக்கி விட்ட கொடுமை பற்றியும் எடுத்துப் பேசுவது, சாமான்யர்களுக்கே ஏற்றதாகாது என்றால், போராசிரியர்களுக்கே இவ்வளவுதான் கூறமுடியும் என்றா நாம் மன அமைதி கொள்ளமுடியும்! கேட்டால், இதனையும் கூறாது சேது(ப்பிள்ளை) பெரும் பேராசிரியர் வையாபுரி(ப்பிள்ளை)யாக வடிவமெடுத்து விடுவாரோ, என்றல்லவா அச்சம் பிறக்கிறது. எழுப்பி விடாதே இவனும் வெளியே போய்விடப் போகிறான், என்று கூறினபிரன்ச்சு அமைச்சன் போலல்லவா, ஏதோ, இதனையாவது பேசுகிறாரே என்று எண்ணிக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது மிகப் பெரியவர்கள் மிகத் துணிவுடன் மிகப்பெரிய உண்மைகளை மிகச் சாமர்த்தியமாக மறைத்துவிடும் காலமாக இருக்கிறது! காலமாகவா? மிகப் பெரிய மனிதராவதற்கு, இஃதொன்றேயன்றோ, வழியாகவே அமைந்துவிட்டிருக்கிறது.

தம்பி, பணிக்கர் தெரியுமல்லவா உனக்கு! சீனாவிலும், ஈஜிப்டிலும், பணியாற்றிய பெரியவர். அவர் கூறுகிறார் துணிந்து, மொழி, பண்பாட்டுக்கு உயிர் என்கிறார்கள். மொழி மூலமாகத்தான் பண்பாடு உருவாகிறது வளருகிறது என்கிறார்கள், அது தவறு, பண்பாட்டினை எடுத்துக்கூறும் முறைகளில் மொழி ஒன்று, அவ்வளவுதான்! என்கிறார் கூறிவிட்டு, மொழிவழி அரசு கேட்பது தவறு, மிகப் பெருந்தவறு! என்று பேசுகிறார். அவர் சென்னையில் பல்வேறு இடங்களில் பேசியிருப்பதிலிருந்து, அவர் மொழிவழி அரசு கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, "எனக்கு என்ன வழி?'' என்று நேரு பண்டிதரைக் கேட்கிறார் என்பதும் நன்றாகத் தெரிகிறது.

"மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொடர்பு இல்லை' என்று துணிவுடன் கூறுகிறார் பணிக்கர்.

பண்பாடு, பாரதத்தில் இருக்கிறது, இராமாயணத்தில் இருக்கிறது. வங்க மொழிமூலம் ஓர் பண்பாடு, மராத்தி மூலம் மற்றோர் பண்பாடு, தமிழ்மூலம் தனியானதோர் பண்பாடு ஏற்பட்டுத் தழைத்திருக்கிறது என்று கூறுவது தவறு என்கிறார். மொழி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஓய்வோ வாய்ப்போ பெறமுடியாத அளவுக்கு, உலகு எங்கணும் ஓடோடிச் சென்று, உபசார மொழிகளைச் சொறிந்து உச்சி ஏறி நிற்கும் தலைவர்களுடன் உறவாடிடும் பணிக்கர், "தொல்காப்பியம் என்றோர் ஏடு உண்டு ஐயா! அது எமது தொன்மையான பண்பாட்டினை உருவாக்கிய கருவூலம்'' என்று கூறினால், அவர் "ஒரு சர்வதேச ரீதியான! "புன்னகையை வருவித்துக் கொண்டு, இதெல்லாம் பழைய - கஞ்சி என்று கூறிவிடுகிறார்! மொழியின் தொன்மை மென்மை, வளம், இவைகள் இடது கரத்தால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியன என்கிறார். வலக்கரம் கொண்டோ, இராமாயண பாரதச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் செந்தாமரை இதழ்களைப் பொறுக்கி எடுக்கும் பணியிலே ஈடுபடுகிறார். பெரியவர்! எனவே பெருந்துணிவுடன் இவ்வண்ணம் பேசுகிறார்! பேராசிரியர்களோ, "ழ' கரம் பாழ்பட்டுவிட்டதே. "ற' கரம் "ட' கரமாகிவிட்டதே என்ற கவலையில் தங்களை மறைத்துக் கொள்கிறார்கள்!

இமயம் முதல் குமரிவரை, பணிக்கர், இராமனையும் கிருஷ்ணனையும் பார்க்கிறாராம். "பாரதம்' முழுவதும் பகவத்கீதை இருக்கிறதாம். எனவே, மொழிகளைக் கடந்து ஓர் பண்பாடு இருந்திடுவது புலனாகிறதாம்.

எப்படி, வாதம்? வாதத்தின் திறத்தை அல்ல தம்பி, நான் கவனிக்கச் சொல்வது. அந்தத் துணிவைக் கவனித்தாயா!! இராமனும் கிருஷ்ணனும், இமயம் முதல் குமரி வரை இருக்கிறார்கள் - எனவே மொழிவழி அரசு கேட்பதோ, மொழி வழி பண்பாடுகள் அமைகின்றன என்று கொள்வதோ கூடாது என்று வாதாடுகிறார் - இந்தத் துணிவு, எவரிடம் காட்டப் படுகிறது என்று கவனித்தாயா தம்பி! இங்கு, திரு இடத்தில்! திரு இடத்தில் மட்டுந்தான்!

லிஸ்பனிலிருந்து லெனின்கிராட் வரையில், இலண்டனி லிருந்து ஜிப்ரால்டர் வரையில், ஆட்டவாவிலிருந்து அடிலெய்ட் வரையில், என்று இப்படி குறுக்கும் நெடுக்குமாகப் பல கோடுகள் கீறிக்காட்டி, நீயும் நானும் கூறமுடியும். இங்கெல்லாம் ஏசுநாதர் தெரியும்! பைபிள் படிக்கப்படுகிறது! எனினும் இங்கெல்லாம் ஏசுவும்மேரி அன்னையும் தெரிவதால், பைபிள் இங்கெல்லாம் புனித ஏடாக இருப்பதால், ஒதே பண்பாடுதான் இருக்கிறது என்று அறிக, எனவே ஒரே அரசு அமைதலே பொருந்தும் என்று உணர்க என்று கூறிடவும், அமெரிக்கா, கானடா, மெக்சிகோ, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே ஸ்வீடன், ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, என்றெல்லாம் தனித்தனி அரசுகளாக ஆகாது, ஒரே பண்பாடு, ஒரே அரசு என்று பணிக்கர் அங்கு எங்கும் பேசத் துணிவு கொள்ளமாட்டார். இங்குதான், எதையும் பேச எவரையும் அனுமதித்து விடுகிறோமே! பேசுகிறார்!

ஜாதி - வர்ணாஸ்ரமம் - சுவர்க்கம் - இவைபோன்ற முறைகளே எமக்கு உரியன அல்ல, எனவேதான் எமது மொழியில் அச்சொற்களே இல்லை, என்று புலவர் பெருமக்கள் கூறுகின்றனர்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிபம் எமது முறையல்ல. எமது இலக்கியம் காண்போர் இதனினை அறிவர் என்று புலவர் பெருமக்கள் பேசுகின்றனர்.

எமது நிலமே, ஐந்தாகத் தரப்பட்டிருக்கிறது.

எம்மிடம் திணை ஒழுக்கம் உண்டு.

எமது ஆட்சிமுறை, போர்முறை யாவுமே தனியான பண்பாடு விளக்கமளித்திடும்.

இவ்விதமெல்லாம் பேசுகின்றனர் - முத்தமிழ் என்று யாம் இயல், இசை, நாடகம் என்று கூறும் நிலை பிற மொழியாளருக்கு இல்லை என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர்.

எமக்கென ஓர் மொழி, அம் மொழிவழி எமக்கென்றோர் பண்பாடு, அப்பண்பாட்டுக்கு உறைவிடமாகவும் உள்ள ஓர் அரசு - இவற்றினுக்கெல்லாம் எம்மிடம் சான்றுகள் உள்ளன என்று சாற்றுகின்றனர். எனினும் இவர்தம் சான்றுகளைச் சருகு என்கிறார். சேற்றிலே சந்தன மணம் கமழ்கிறது என்கிறார், துணிந்து பணிக்கர்.

அறிவு அறை போகிய பொறி அறுநெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!

என்பதில் காணக்கிடக்கும் "ற' கரத்தின் பெருமையில் பேராசிரியர் நீந்திக் களித்திடுகிறார் - இன்று இறைமுறை பிழைத்தோன் வாயிலோனாக உள்ள பணிக்கர்கள் கண்ணீர் பொழிந்திடும் கண்ணகிகளை "வழக்காடவும் துணிந்தனையோ! அவன் தலை வெட்டுண்டதுபோல உன் நாவும் வெட்டுப்பட வேண்டியோ, எமது கொற்றத்தினைக் குறைபேசி நிற்கிறாய்'' என்று கேட்கின்றனர். நமது பேராசிரியர்கள் அந்த வாயிலோன் எது செய்யினும் பரவாயில்லை, "ழ' கரம் பாழ்படாது இருக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லோக்சபா - ராஜப்பிரமுக் - ராஷ்டிரபதி - நயாபைசா! இவ்வண்ணம் படை எடுக்கின்றன, வழக்கில் நடமாட வேண்டிய சொற்கள்! "ழ' வும் "ற' வும் மட்டுமா, மொழியே பிழைப்பது கடினம் என்று நிலை பிறந்திருக்கிறது. கேட்கும் உரிமை உணர்ச்சி, அதற்கான உள்ள உரம் எழக்காணோம்! இரயில்வே நிலையங்களில் இந்தி, அஞ்சல் அட்டைகளில் இந்தி, நாணயங்களில் இந்தி, அலுவலகங்களின் பெயர் பொறிப் பலகைகளில் இந்தி, பட்டாளத்தில் இந்தி - என்று எங்கும் இந்தி நுழைக்கப்படுகிறது! ஆட்சி மன்றங்களிலிருந்து அங்காடி வரையில் இந்தி அரசோச்சக் கிளம்பிவிட்டது. கேட்பார் இல்லை!

"தமிழ் இலக்கியம் எதையும சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தில் அது தனித்து இயங்கவல்லது.

இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவி லிருந்தே அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது.

17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது.

தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன.''

பிலியோஜாத் எனும் பிரன்ச்சு நாட்டு, மொழித்துறை ஆராய்ச்சியாளர் கூறுகிறார். நாள் பத்து ஆகவில்லை இங்ஙனம் இவர் சென்னையில் கல்லூரியில் நடைபெற்ற, தமிழ்க்கலைக் கழகக் கூட்டமொன்றில் பேசி! பேராசிரியிர் சேது(ப் பிள்ளை) அவர்களும் அந்த மன்றத்தில் அமர்ந்திருந்தார் என்று தெரிகிறது. எனினும், என்ன பயன்? ஏற்புடையது! ஈடில்லாதது! தனியாக இயங்கவல்லது! பண்பின் பெட்டகம்! இன்ப ஊற்று! என்றெல்லாம் கூறித்தான் என்ன பயன்? இந்தி இழிவு படுத்துகிறது - அதனை இழிவென்று எண்ணாதீர், என்னைப் பாரும், என் சொல்லைக் கேளும், அடுத்த உத்தியோகம் கிடைக்கும்வரை நான் இப்படி "அடப்பம்' தாங்கும் பணிபுரிபவன் அறிமின்! என்று கூறி வருகிறார் பணிக்கர்.

பணிக்கர்கள் இதுபோலப்பேசுவது கேட்டும், பாரத அரசில் பணியாரத்துண்டுகள் வெறுவதற்காகப் பல்லிளித்துக் கிடப்போர், மொழி, பண்பாடு, அரசு எனும் எதனை விட்டுக் கொடுத்தேனும், நத்திப்பிழைத்திடும் போக்கிலே செல்வதைக் காணும்போதும், மிகுதியும் துக்கம் துளைத்திடுகிறது. அந்த வேளையில், ஓரோர் இடத்திலிருந்து உள்ளத்திலுள்ளதை ஒரு சிலர் துணிந்து கூற முன்வருவது காண்பது, பாலைவனத்திலே கிடைக்கும் நீரோடை போலாகிறது. மகிழ்ச்சி இனிப்பூட்டுகிறது. இதோ மற்றோர் தமிழாசிரியர்; ழ' கர "ற' கரத்தோடு நிற்பவரல்ல, நம்மோடு நெடுந்தூரம் வருபவருமல்ல, எனினும், நாம் செல்லும் திசையைச் சுட்டிக்காட்டிடும் அளவுக்கு முன்னணி வருகிறார், டாக்டர் இராசமாணிக்கனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் உள்ளவர்.

"இந்திய வரலாற்றுக் காலம் தோன்றிய நாள் தொட்டு வெள்ளையர் ஆட்சி ஏற்படும் வரையில், தமிழகம் இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசாலும் ஆளப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் பெரும் பகுதியை ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட அசோகன் காலத்திலும், தமிழகம் தனியாட்சி புரிந்தது என்பதை அப்பேரரசன் வெளியிட்ட கல்வெட்டுக்களே தெரிவிக் கின்றன. இங்ஙனம் பல நூற்றாண்டுகளாகத் தனிப்பட்டு இருந்த தமிழகம் தனக்கென ஒரு மொழியையும் அதற்குரிய இலக்கியங்களையும் தனிப்பட்ட பண்பாட்டையும் வளர்த்து வந்தது.''

தமிழாசிரியர்கள் அனைவரும் இத்தகைய வரலாற்று உண்மைகளை எடுத்துக்கூறும் உள்ளத் திண்மை பெற்று விட்டால், மொழி ஆராய்ச்சித் துறையிலே அல்ல, ஆட்சியாளர்களுக்கு நேசத்தொடர்புகளை ஏற்படுத்தித் தரும் துறையிலே, பணியாற்றும் பணிக்கர் இவ்வளவு பதட்டமாகவா பேசிடுவார்!

ஏன், தமிழறிந்தோர் துணிவு பெறாதுள்ளனர்?

டாக்டர், அந்த நோயின் தன்மையையும் விளக்குகிறார்.

"தமிழன் - தமிழனாக வாழ்தல் வேண்டும். அவன் தன் தாய் மொழியின் சிறப்பை அறிதல் வேண்டும்; தமிழிலேயே தனக்குரிய சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று தமிழில் வல்ல சான்றோர் கூறினால், இவர்கள் நாத்திகர்கள் - வடமொழியை வெறுப்பவர் - ஒருமைப்பட்டுள்ள சமுதாயத்தில் வேற்றுமையை உண்டாக்குகின்றனர் என்று ஒரு சாரார் பழிதூற்று கின்றனர். இவர்களுக்குள்ள நாளிதழ்களின் செல்வாக் காலும். உயர் அலுவலரது மறைமுகமான செல்வாக்காலும் இச்சான்றோர் பலவாறு அழுத்தப்படுகின்றனர். தமிழருள்ளே அறிவற்ற புல்லுருவிகளை ஏவிவிட்டுத் தூற்றவும் செய்கின்றனர்''

+இந்த அச்சம்தான் பலரை "ழ' கர "ற' கரத்தோடு நிறுத்திவிடுகிறது.

புல்லுருவிகள்! பொன்னுருவிகள்! கண் சிமிட்டிகள்! காசு வீசுவோர்!- அந்தப் படைவரிசையில் உள்ளவர்கள் பல வகையினர். ஒன்றால் வீழ்த்த முடியாவிட்டால், மற்றொன்றால்! அடிக்கும் கரத்தால் ஆகாததை அணைக்கும் கரம் சாதித்துத் தருகிறது. பலத்தால் முடீயாததை பாவத்தால், பரதத்தால், சாதித்துக்கொள்ள முடிகிறது! எல்லாவற்றையும்விட "பழி' தாக்கிடும் என்ற பயமே, பலரை வீழ்த்திடப் பயன்படுகிறிது.

படித்திருப்பாயே தம்பி, பம்பாயில் பத்து நாளைக்கு முன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது என்று ஒரு புரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை எவனோ ஒரு எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி வைத்திருக்கிறான், கடல்நீர் இன்றுமட்டும் இனிக்கும் என்று அவ்வளவுதான், சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம்.

கடல் நீர் கரித்தது! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். எனவே கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்து மாவுக்குத்தான் இனிக்கும் என்று கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்து விட்டனர் - பெரும்பாலோர்! துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும்போல் கரிக்கத்தான் செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும் புரளி என்று! ஆம்! - என்று கூட பக்தர்கள் கூறவில்லையாம் - முகம் "ஆம்' என்றதாம்'

அதுபோலத்தான் தம்பி, தேசத் துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - சமுதாயத்தில் பிளவு மூட்டுபவன் - என்று பழி சுமத்துவரே என்று அஞ்சி, "ழ' கர "ற' கரத்தோடு நின்றுவிடுகிறார்கள்.

இந்தியப் பேரரசு, இந்தி தேசிய மொழி; என்பவைகளை மறுப்பது ஆபத்தாக முடியும் என்று அஞ்சிக் கிடப்பதும் , "ழ' கரத்தையும் "ற' கரத்தையும் காத்திட நம்மாலான முயற்சி செய்வோம் என்று முனைவதும், பலனளிக்காது. வேரிலே கொதி நீர் ஊற்றும் காதகர்கள் இருக்கும்போது, இதழின் அழகு பற்றிப் பேசி மகிழ்வது பலன் தராது! "ழ' "ற' மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழகத்துக்கு ஆபத்து என்பதை அஞ்சாது எடுத்துரைக்க முன்வருதல் வேண்டும்.

தம்பி! பேராசிரியர், "ழ' கர "ற' கரத்தோடு நின்று விட்டாலும், நீயும் நானும், நம் போன்ற சாமான்யர்களும், கடல்நீர் கரிக்கிறது - பணிக்கர் பேச்சு புளிக்கிறது - டில்கொட்டுகிற து - என்ற உண்மைகளை எடுத்துரைப்போம். பேராசிரியர்களின் பெரும்புலமை நாட்டுக்குப் பலனளிக்கத் தவறிவிட்டாலும், நாம் நமது தூயதொண்டு மூலம், நாட்டு விடுதலைக்கான "சூழ் நிலை'யை உருவாக்க வல்லோம் - அதிலே எனக்குள்ள உறுதி , நான் நாட்டு மக்களின் நல்லார்வத்தைக் காணுந்தோறும் காணுந்தோறும், வளர்கிறது, மிளிர்கிறது!!

அன்புள்ள,

11-9-1955.