அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


1942-ல் மாஸ்கோ!

``மறுபடியும், 1947ல் மாஸ்கோ சென்று வர வேண்டுமென பேராவாக் கொண்டிருக் கிறேன்’’ தோழர் சக்லத் வாலா, 1934 ஆகஸ்ட் 12ந் தேதியிலே கூறினார். ஒருமுறை மாஸ்கோவைக் கண்டேன். மீண்டும் அதைக் காண அவாக் கொள்கிறேன். மாநிலம் முழுவதுமே மாஸ்கோ மணம் பரவச் செய்ய வேண்டும் என்ற மனம் எழுச்சி பெறுவதும் மதத்தை அறை கூவிய நகரமல்லவா மாஸ்கோ. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும், உடலைக் கசக்கிப் பிழிந்து சாறாக்கி பிறருக்கு பனி நீர் தரும் இன்ப வெள்ளத்தை, வாழ்க்கையிலே வறியராய் ஒட்டிய வயிறும், உலர்ந்த உதடும், காய்ந்த தலையும் பஞ்சடைந்த கண்களும், குழி விழுந்த கன்னங்களும் கொண்டோராய் உள்ள பாட்டாளி மக்களை வாழ்க்கையின் கூட்டாக்கி கோழை களை வீரர்களாக மாற்றி, கொடுங்கோலுக்கு உட்படுத்தப்பட்டு குலை நடுங்கிக் கொண்டிருந் தோர் தம் பயம் போக்கி உரிமைக்குப் போராடும் நெஞ்சர்களாக, புனல் சொரியும் கண்களில் கனல் எழச் செய்து கூப்பிய கரங்களை மடக்கி, மாhர் தட்டச் செய்து, ஆமை போல் அஞ்சியவர் ஆண்மையாளராக்கி, சாவுகோரி நின்றவர்களை ஜாரின் எடுபிடி ஆடகளாக இருந்த விரட்டிடும் வீரர்களாக்கி, அன்றெழுதியதை முடியும் கான்பதனை உலகுக்கு விளக்கி, வீரம் கொள்ள வெற்றி வெண்பா பாடி, விருதுகள் வாங்கு வதன்றோ மாஸ்கோ! ஜாரின் படைகள்... நடமாடும் ஒருபுறத்திலே குட்டிக் குபேரர் கூத்தாடுவர் மாளிகையிலே... சாலை ஓரத்தில கிடப்பர் பஞ்சைகள். தூக்கு மேடையிலே உருவங்கள்.. குடி ஒரு புறம், மடி மற்றும் மடமை ததும்பும், எங்கும் இடி, எவர்க்கும் தடியடி மாஸ்கோ மக்களை கசக்கியபடி இருந்தது, குபேரர்களின் குச்சு வீடு, ஜாரின் ஆணவக் கூடம், ரஸ்புடீனின் இல்லம் பாதிரிகளின் பாதகச் சாலை, ராணுவத்தினரின் விளையாட்டு வெளியாக இருந்தது மாஸ்கோ. அதனை மாபெரும் புரட்சிக் களமாக்கி, தனி உடமையை தகர்த்த தலம் மாஸ்கோவை மூன்றாவது முறையாக, மீண்டும் காண வேண்டும் என்கிறார், சக்லத் வாலா.

``மாஸ்கோ நகரமானது ஐரோப்பா கண்டத் திற்கே தலைநகராக விளங்காவிட்டாலும், மற்ற நகரங்கள் அதைப் பின்பற்றி நடந்துகொள்ளக் கூடிய ஒரு வழிகாட்டியாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளத் தக்க நிலையை அடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒற்றுமை, வலிமை முன்னேற்றம் ஆகியவைகளைக் கற்றுக் கொள்வதற்கு எல்லா தேசத்து மக்களும், மாஸ்கோ நகருக்குச் செல்ல வேண்டியதான யாத்திரை ஸ்தலமாகவும் அது சீக்கிரத்தில் விளங்கும்’’ என்று சக்லத்வாலா கூறினார்.

அந்தத் தலத்துக்குச் சென்ற வாரம், பிரிட்டிஷ் முதலமைச்சர் மிஸ்டர் சர்ச்சில் சென்றிருந்தார், ஸ்டாலினைக் கண்டார், கலந்து பேசினார், உயர் தர அதிகாரிகள் உடனிருந்தனர். நம் உபகண்டத்தின் படைத் தலைவராக உள்ள ஜெனரல் வேவல் உடனிருந்தார்.

மாஸ்கோவில், சர்ச்சில்! சோவியத் தலைவ ருடன் பிரிட்டிஷ் முதலமைச்சர்! எவ்வளவு விந்தையான மாறுதல்! எத்தகைய இன்பகரமான மாறுதல்! நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சி!

மாஸ்கோ மக்கள் சென்ற ஆண்டு மனம் பதறினார்கள், அவர்களின் வாயிலிலே வந்து நின்று நாஜிகள் கொக்கரித்தனர், அரசாங்க நிலையங்கள் கூட வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. ஒரு கையிலோ சுழல் துப்பாக்கி மற்றோர் கரத்திலே சுவஸ்திகக் கொடி தாங்கி, வந்தேன், கண்டேன், வென்றேன் என்று பாடலுடன், நாஜிகள் வாயலிலே நின்றனர். மாஸ்கோ. மக்கள், தங்கள் மார்புகளையே மதில்களாகக் கொண்டு, தெருக்களையே களங்களாக்கி, வீடுகளைக் கோட்டைகளாக்கி, ``தயார்’’ என்றனர். மாஸ்கோ நகருக்கவர இருந்த ஆபத்து, பறந்தது! மாஸ்கோ, மீண்டும் உலகின் வீரமணியாக விளங்கலாயிற்று. அத்தகைய மாஸ்கோவிலே, பிரிட்டிஷ் முதலமைச்சர் சென்று தங்கியதும், கலந்துரையாடியதும், சரிதச் சம்பவங்களிலே முக்கியம் வாய்ந்ததாகும்! ஸ்டாலினும், சர்ச்சிலும், ஒருவர் பக்கத்திலொரு வர் அமர்ந்தபோது, கண்ட மக்களின் மனதிலே என்னென்ன கருத்துக்கள் தோன்றியிருக்கும். கம்யூனிஸ்ட் ஸ்டாலின் தந்த தீக்குச்சி கொண்டு கன்சர்வெடிவ் கட்சித் தலைவர் தமது சுருட்டைப் பற்ற வைத்திருப்பார், ரஷ்ய நாட்டு மக்களின் பிரியமான பானமான `வோட்கா’வை, ஸ்டாலின் தர சர்ச்சில் ருசி பார்த்திருப்பார், இவையல்ல, நாம் வியந்திடுபவை. புரட்சியின் உருவம் ஸ்டாலின்! சர்ச்சிலோ, சட்ட திட்டம், கட்டுப்பாடு, விவாத விளக்கம் ஆகிய முறைகளைக் கொண்ட இறையின் பிரதிநிதி! தீப்பொறி ஒன்று! தீட்டுகோல் மற்றொன்று! இருவரும் வீரர்! இருவரும் இடுக்கணிலே சிக்கியுள்ள இருண்ட உலகின் விளக்குகள், வழிகாட்டிகள். இருவரின் எண்ண மும், பெர்லினிலே கிளம்பியுள்ள பேயனை வீழ்த்த வேண்டும் என்பதாகும். தணலிலே வெந்த தங்கம் இலண்டன் மண்ணை இரத்தக் குழம் பாக்கியும், மருட்சியடையாத மனப்பான்மையின் சித்திரம் மாஸ்கோ, மாவீரர் இருவரும் கூடிப் பேசியது, விரைவினில், `இரண்டாம் போர்முனை இதோ’ என்று பீரங்கி வேட்டு மூலம், வெடிகுண்டு வீறிடுவதன் மூலம், வீரர்கள் முழுக்கம் செய்வதன் மூலம் உலகினோரின் செவிகளிலே கேட்கும் நிலையை உண்டாக்க வேண்டும். உலகு அதைத்தான எதிர்பார்க்கிறது.

சோவியத் நாடு சொல்லொணாக் கஷ்டங் களை அனுபவித்தது. சோர்வின்றி, துணையின்றி, செயலாற்றி வருகின்றது. மாஸ்கோ; வெனின் கிராட் வயர்னேஷ், காலினின் முனைகளிலே, சோவிய படைகள் வெற்றிகள் கண்டன என்பது உண்மையே!

மே மாதம் 15ந் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15-ந் தேதி வரையிலே, சோவியத் களத்திலே, 77,000 ஜெர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 480,000 ஜெர்மானியர் வெட்டி வீழ்த்தப் பட்டனர். 3390 ஜெர்மன் டாங்கிகள் நொறுக்கப்பட்டன, 4000 பீரங்கிகள் பாழ்பட்டன; 4000 விமானங்கள் வீழ்த்தப்பட்டன.

இத்தகைய பிரம்மாண்டமான பலி கொடுத்துத் தான் ஜெர்மனி, ரஷ்யாவிலே சில பிரதேசங்களைப் பிடித்தது. ஆனால், ரஷியப் படைபலம் குன்றவில்லை. மார்ஷல் வரஷிலாவ், புதுப்புதுப் படைகளைத் திரட்டுகிறார், பயிற்சி தருகிறார், பாய்வதற்கு அவை தயாராக உள்ளன.

யுக்ரேனையிழந்து ரஸ்டான், செபாஸ்ட பூலையிழந்து காகச்சை எதிரி கண்ட துண்ட மாக்குவதைத் காணும் கஷ்டத்தை அனுபவிக் கிறது. கலங்கவில்லை. கல்லும் கரையும் அந்த மக்கள் படும் பாடு வெல்லும் வகையறிவர் அம்மக்கள். வீர நெப்போலிலியனை மிரட்டிய காதை அறிவர். அம்மக்கள். வீழ்வோம், அதுவே கதியாயின் ஆனால் பணியோம் என்பதை அவர் தம் பரணி. ஆம், ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்குச் சோவியத் நாடு, ஜெர்மனி, பின்லந்து, ருமேனியா, பல்கேரியா, இத்தாலி, பணிந்த பிரான்சு, சாகசம் செய்யும் ஸ்பெயின் ஆகிய நாட்டுப் பட்டாளங்கள், பிரான்சிலே, ஜெர்மனியிலே, போலந்து பெல்ஜியம், நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளிலே உள்ள தொழிற் சாலைகள் செய்து குவிக்கும் ஆயுதங்களுடன் தாக்குவதைத் தாங்குவது! வீரத்தை உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டிய மாஸ்கோவை கேரிலே கண்ட சர்ச்சில், ஸ்டாலினுடன் நேரடியாகப்ப் பேசிய சர்ச்சில், ரஷியாவின் நிலைமையை நன்கு தெரிந்து கொண்டிருப்பார் என்று நாம் நிச்சயமாக நம்புகிறோம். எனவே, விரைவில் இரண்டாம் போர்முனையைத் துவக்குவார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

வீரர் கோட்டமாக உள்ள மாஸ்கோவை 1947ல் காணவிரும்பிய சக்லதத்வாலா காணமுடி யாதபடி, மறைந்துவிட்டார். இரண்டாம் போர் முனை துவக்கி, ஜெர்மனியைத் தாக்கி, சோவியத் நாட்டின் நெருக்கடியைப் போக்கி, நாஜி ஆதிக்கத்தை ஐரோப்பாவிலிருந்து நீக்கி, நேச நாடுகளின் வெற்றிக்கொடி பறக்க, பிரிட்டன், முனையுமேல், சக்லத்வாலா காண விரும்பி, ஆனால் காணமற் போன, மாஸ்கோவை 1947ல், உலகின் பல பாகங்களிலிருந்தும், பல அறிவாளி கள் கண்டு, புத்தறிவு கொண்டு, சமதர்ம உளம் பெற்று, உலகைப் புன்னகைப் பூந்தோட்டமாக்க முடியும்! முதலாளித் தத்வம் எனும் கொந்தளிக்கும் கடலிலே, சிக்கித் தவிக்கும் `அரசு’ எனும் மரக் கலத்தை, அமைதி, ஆனந்தம் எனும் துறைமுகத்திலே வந்து தங்குமாறு அழைத்த கரங்களை விளக்கு மாஸ்கோ! அந்த விளக்கு சோவியத் மக்களின் இரத்தத்தை எண்ணெய்யாக ஊற்றி அவர்களின் நரம்பு களைத் திரியாக அமைத்து, இலட்சியம் எனும் தீக்குச்சி கொண்டு, புரட்சி வீரர், புத்துலகச் சிற்பி, பாமரரின் ரட்சகர், பாட்டாளி மக்களின் தந்தை, வாலிப உள்ளத்தின் கர்த்தா, லெனின், ஏற்றி வைத்தார்!

மாஸ்கோ புதுமையை வரவேற்று உபசரிக் கும் சமதர்மச் சித்திரம்! அதனை மண் மேடாக்கி, அதன் மீதோர் மட அரசு அமைக்கத் துடிக்கும் மதிகேடரை மண் கவ்விடச் செய்ய, மாவீரர் அனைவரும், தோள் தட்டி, கச்சையை வரிந்து கட்டி நிற்கின்றனர். இரண்டாம் போர் முனை யிலே இறுதிப் போர் நடத்திடத் தீர்மானித் துள்ளனர். திக்கெட்டும் திகைக்கிறது இன்று! தீரமான போரிடத் துடிக்கின்றது. இதனை உணர்ந்து பிரிட்டன், இரண்டாம் போர் முனையை உடனே துவக்க வேண்டும், சர்ச்சிலின் மாஸ்கோ விஜயம், பலன் இரண்டாம் போர்முனையாகத் தான் இருக்க வேண்டும்.

- திராவிட நாடு - 23-8-1942