அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆளுக்கொரு துப்பாக்கி!

“மேன்மைதங்கிய வைசிராய் அவர்களே! நாட்டுப் பாதுகாப்புக்காக, நாங்கள் கஷ்ட நஷ்டமேற்கத் தயார். திராவிடர்கள் சாவுக்கஞ்சாதவர்கள், அவர்களிடம் ஆயுதங்கள் கொடுத்து, உள்நாட்டுக் கொந்தளிப்போ, வெளிநாட்டினரின் படையெடுப்போ நேரிட்டால் சமாளிக்கும் பொறுப்பைத் தாருங்கள். வீட்டிற்கொரு ஆள் கிளம்பத் தயார்! ஆனால் ஆளுக்கொரு துப்பாக்கி தேவை” என்று கடந்த வாரத்தில் சென்னையில் கூடிய ஜஸ்டிஸ் வாலிபர் மாநாட்டில் பேசப்பட்டது. உணர்ச்சியின் வேகமட்டுமல்ல, அந்த உரைக்குக் காரணம். வீட்டிற்கொரு ஆள்தேவை என்று சர்க்காரும், நாட்டுப் பற்றுக்கொண்டாரென்ற நல்விளம்பரம் பெற்றோரும் பேசுகின்றனர், ஆனால் ஆயுதமற்ற ‘ஆட்கள்’ காகிதச் சிப்பாய்கள் தானே! ஆகவேதான், அத்தகைய முயற்சி பயன்தரவேண்டுமானால், ஆயுதமளிக்க வேண்டும் என்று வாலிபர் மாநாட்டில் கூறப்பட்டது.

வீட்டிற்கொரு இராம இலட்சுமணர்கள் (சீதையின்றி என்று நாம் கருதுகிறோம்!) கிளம்பவேண்டும் என்று ஆச்சாரியார் கூறுகிறார். வில்லும் அம்புறாத் தூணியுமில்லாமல் கிளம்பிப் பயன் என்ன?
இதுபற்றி, ‘மெயில்’ பத்திரிகை யோசனை கூறுகையில், துப்பாக்கி முதலிய ஆயுதங்களைத்தர வகையும் வசதியுமில்லாது போயினும், இந்த நாட்டுக்காரருக்கு அரிவாள் கொடுத்துதவி, அதை உபயோகிக்கும்படியாகச் செய்யலாம் என்று எழுதிற்று. ஆகாய விமானங்கள் ஆயிரமாயிரமடி உயரத்தில் பறந்து போர் நடத்தும் 1942இல் அரிவாள் படையேனும் இங்கு இருக்கட்டும் என்று இந்த ஆங்கில ஏடுகூற முன்வந்தது காண மகிழ்கிறோம்.

ஆயுதமில்லாததால் இந்த அரிவாள் படைதிரட்டும் யோசனையை மெயில் கூறியிருக்கலாம், ஆனால் அரசாங்கத்தின் யோசனை வேறு விதமாகக் காணப்படுகிறது.

ராஜாங்க சபையில் இதுபற்றிய விவாதம் நடந்தபோது, ஆயுதங்களை மக்களுக்களிக்கும் ஏற்பாடு நடைபெற்றால், காலிகளிடம் ஆயுதம் சிக்கிக்கொள்ளும், காலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு, ஆயுதங்களைத் தாங்கள் பெற்றுவிடுவார்கள் என்று சர்க்கார் சார்பாகப் பேசப்பட்டது. ஆயுதந் தர மறுப்பதற்கு இஃதோர் காரணம். பிறிதொன்றும் கூறுவர் அரசாங்கத்தார். வகுப்புக்கலகங்கள் நேரிடுமாயின், அச்சமயத்தில் மக்களிடம் ஆயுதமும் இருந்தால், நிலைமை மோசமாகிவிடக்கூடும் என்பர்.

இரண்டும் ஒரு விதத்தில் உண்மையே. ஆனால் இருவிதமான சங்கடங்களும் நேரிடாதவகையில் போர் ஆதரவாளர்களைக் கொண்ட உள்நாட்டுப் படைகளை ஆங்காங்கேதிரட்டி, ஆயுதப் பயிற்சியைக் கூடுமான மட்டும் அளித்து, ஆயுதங்களை, ஒவ்வோர் ஊருக்கும் ஒரு ராணுவ அதிகாரியை நியமித்து அவர்வசம் ஒப்புவித்து, போர் நெருக்கடி, எதிர்பாராத விதமாக முற்றுமே
யானால், அந்தச்சமயத்தில், பயிற்சிபெற்றவர்களிடம் கொடுத்து, துணைக்குக் கொஞ்சம் அளவுள்ள ராணுவத்தினரையும் உடனிருக்கச் செய்யலாம்.

பிரிட்டனில், உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, மிகச் சாதாரணமான முறையிலே முதலில் துவக்கப்பட்டது. இப்போது ராணுவத்தினரும் புகழத்தக்க முறையிலே, அந்த உள்நாட்டுப் படை, பலமும் பயிற்சியும் பெற்றுவிட்டது.

திராவிட நாட்டைப் பொறுத்தவரையில், வகுப்புக் கலகங்கள் எழக்காரணமே இல்லை. இந்தப் பகுதிக்குத்தான் முதலில் நெருக்கடி ஏற்படக்கூடுமென்றும், இலங்கைத் தீவுமீது எதிரியின் நாட்டமிருப்பதாகவும், அங்கு எதிரி வெற்றிபெற்று விட்டால் தென்னாட்டின் மீது தாக்குதல் நடத்துவர் என்றும் சில ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதிக்கேனும், சர்க்கார், ஆயுதங்கொண்ட உள்நாட்டுப் பொதுமக்கள் படையை நிறுவுவது மிகமிகப் பயன்தருமென்று நாம் திடமாக நம்புகிறோம்.

போர் மூண்டதும், காங்கிரசார், போர் ஆதரவு காட்ட முடியாதென்று புகன்றபோதே, சர்க்கார் போரை ஆதரிக்கும் கட்சிகளிடம், போர் ஆதரவு பிரசாரப் பட்டாளத்தைப் பெருக்கும்பணி, பணந்திரட்டும் வேலை, உள்நாட்டுப் படைகள் அமைப்பது ஆகியவற்றை ஒப்படைத்து, உடனிருந்து உதவியிருந்தால் இன்று நாட்டின் நிலைமையே வேறுவிதமாக இருந்திருக்கும். தோழர் எம்.என். ராய், சிலமாதங்களுக்கு முன்பே, ஆங்காங்கு உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளை சர்க்கார் ஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறினார். அவரது கருத்துகளை ஒலிபரப்ப பத்திரிகைகள் கிடையாது. ஒலிப்பரப்பப்படாத கருத்துகள் சர்க்கார் செவியில் புகுவதுமில்லை! எனவே அந்தயோசனை கவனிப்பாரற்றுப்போய் விட்டது.

அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வந்திருக்கும் சர். கிரிப்சின் முயற்சி, எங்ஙனமாயினும், இந்தயோசனையை, நாட்டுத் தலைவர்களனைவரும், சர். கிரிப்சுக்குக் கூறி, விரைவில் ஆவனசெய்யின், நாட்டுக்கு ஈடில்லாத பணியாற்றினவராவர். அந்தமான் வீழ்ந்தது என்றதும், “ஐயோ! இனி என்னசெய்வது! அங்கிருந்து நமது நாட்டைத்தாக்க எதிரிக்கு முடியுமே” என்று திகில்படும் மக்களுக்கு, ‘ஆளுக்கொரு துப்பாக்கி’ இருக்கிறது என்றால், எவ்வளவோ நம்பிக்கையும் ஆறுதலும் உண்டாகுமன்றோ!
29.3.1942