அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஐந்து அரசுகள்

பெரியார்: ‘திராவிட நாடு’ தனி அரசாக அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைபற்றி தங்கள் கருத்து என்ன?

கோதவரிமிஸ்ரா: நியாயமான கோரிக்கையே! அந்தந்த இனம் தங்களின் தனி ஆட்சி கோருவதிலே தவறு என்ன இருக்கமுடியும்?

பெரியோர்: காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பதன் நோக்கம் என்ன?

மிஸ்ரா: அவர்கள் மறுக்காதது எது? எங்கள் கதையைக் கேட்டால், என்ன சொல்வீரோ?

பெரியார்: என்ன? என்ன?

மிஸ்ரா: ஏன் கேட்கிறீர்கள் அந்த வயற்றெரிச்சலை, எனக்கும் வார்தாவுக்கும் சண்டை ஏற்பட்ட இரகசியம் என்ன தெரியுமோ? எல்லாம் நீங்கள் கேட்கிறது போல, என் மாகாண மக்களுக்கு நியாயம் வழங்கும்படி கேட்டதுதான்.

பெரியார்: என்ன கேட்டீர்கள்? ஏன் மறுத்தார்கள்?

மிஸ்ரா: விவரத்தைக் கேளுங்கள். ஒரிசா மாகாணம் பதியது. இதற்கென ஏற்பட்டுள்ள எல்லைக் கோடு சரியல்ல. அதனால் பலதொல்லை. எல்லையைத் திருத்தி அமைத்தால், மாகாணத்தின் செல்வநிலை விருத்தி அடையும்.

பெரியார்: ஒரிசாவுக்குச் சொந்தமாக ஏதேனும் இடம், இன்னமும் ஒரிசாவில் சேர்க்கப்படவில்லையோ?

மிஸ்ரா: ஆமாம்! ஜெம்ஷெட்பூர் பிரதேசம் இருக்கிறதே, அது பீகாருக்குச் செல்வமாக இருக்கிறது, ஆனால் இது பெருவாரியும் ஒரியாமக்களே உள்ள இடம், ஒரிசாவுக்கே சொந்தம், அதை பீகாரிலே சேர்த்து விட்டனர். அதை ஒரிசாவிலே சேர்க்க காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டுமென்று கெஞ்சினேன், வார்தா வரந்தர மறுத்துவிட்டது.

பெரியார்: ஏன்?

மிஸ்ரா: ஒருக்காலும் ஜெம்ஷெட்பூர் பிரதேசத்தை, பீகாரிலிருந்து பிரிக்கக்கூடாது என்று பாபு ராஜேந்திரபிரசாத் கூறிவிட்டார், வார்தாவிலே. பீகாருக்கு வருமானம்கெட்டுவிடும். அது பிரசாதுக்குப் பிடிக்கவில்லை. பிரசாதுக்குப் பிடிக்காதது காந்தியாருக்குப் பிடிக்கவில்லை. காந்தியாருக்குப் பிடிக்காதது காங்கிரசுக்குப் பிடிக்குமோ! ஆகவே எனக்கு வரம் இல்லை! இதுமட்டுமா? சிட்டகாங் பிரதேசமிருக்கிறதே, அங்கே பெருவாரியான மக்கள் ஒரியர்கள். ஆகவே அந்த இடமும் ஒரிசாவுடனே தான் இணைக்கப்பட்டாக வேண்டும். இதைச் செய்யுங்கள் என்று கேட்டோம் இதையும் மறுத்துவிட்டனர்.

பெரியார்: இதற்கு யார் தடை சொன்னது?

மிஸ்ரா: சுபாஷ் சந்திரபோஸ் இதைப் பலமாக எதிர்த்தார். சிட்டகாங், வங்காள மாகாணத்திலே இப்போது இருக்கிறது. அதை இழக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் காந்தியாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்தார். ஆகவே எனக்கு “இல்லை” தான் கிடைத்தது!

பெரியார்: போசுக்கு சிட்டகாங்மீது அவ்வளவு ஆசை பிறக்கக் காரணம் என்ன?

மிஸ்ரா: காரணமா? வங்களாத்திலே இந்துக்களும், முஸ்லீம்களும், இருக்கும் விதம் தெரியுமே உங்களுக்கு முஸ்லீம்கள் மெஜாரடி என்ற போதிலும் அதிகமான மெஜாரடியல்ல. 56% முஸ்லீம், 44% இந்து என்ற அளவு இருக்கும். சிட்டகாங், ஒரியர்கள் வாழும் இடம், இந்துப்பிரதேசம். இதை வங்கத்திலிருந்து பிரித்துவிட்டால், வங்கத்திலே முஸ்லீம்களே மிக மெஜாரடி! பஞ்சாபிலுள்ளது போன்றாகிவிடும். இந்து ஆதீக்கம் குறையும், எண்ணிக்கையும் குறையும், இது சுபாஷுக்கு இஷ்டமில்லை, சிட்டகாங் போய்விட்டால், வங்காளத்திலே, இந்துக்களின் ஆதிக்கம் ஏற்படவே முடியாது. வங்காளமோ ‘வந்தே மாதரம்’ பிறந்த இடம். எனவே வம்புக்கு நிற்கிறது முஸ்லீமுடன் சச்சரவிடுவதற்காக, இந்து எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட, சிட்டகாங்கைவட மறுக்கிறார்கள் வங்க இந்துத் தலைவர்கள்.

பெரியார்: இப்படியா இருக்கிறது? பிறகு உங்கள் மாகாணத்தின் கதிதான் என்ன?

மிஸ்ரா: இப்போது பூரி ஜகன்னாதர்தான்! எங்கள் கிளர்ச்சி வலுத்து ஒரியர்கள் பெருவாரியாக உள்ள இடம், ஒரிசாவுக்கு என்ற திட்டம் நிறைவேறினால் ஒரிசா மாகாணம் முன்னுக்கு வரமுடியும்.
***

மிகப்பழய, மிகச்சிறிய மாடிவீட்டிலே, இந்த சம்பாஷனை நடந்தது, சிலமாதங்களுக்கு முன் நமது ஆசிரியரும் உடனிருந்தார் அன்று. பண்டிட் கோதாவரி மிஸ்ரா, ஒரிசா மாகாண மந்தியாவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு நடந்த உரையாடல். அன்று ஒரிசாவின் நிலைமை விளக்கப்பட்டது போலவே ஒவ்வோர் மாகாணத்திலும், (சிந்து, எல்லைப்புறம் தவிர இந்தப் பிரிவினைக்கிளர்ச்சி சம்பந்தமாக பல நிபுனர்கள் இங்கும் இந்தக்கதிதான்! என்று முறையிட்டனர்.

பஞ்சாப்! இங்கு மக்கள் பஞ்சாபிகள், ஆனால் சூத்திரக்கயறு, வியாபாரம், ‘பாம்பே வாலாவிட்டம் இருக்கிறது. என்று லாகூரிலே ஒரு பிரபல வியாபாரி கூறினார். அவரும் வெளிமாகாணத்தாரே!
அசாமிலே ஒரு சிமிட்டிக் கம்பெனியின் ஆரம்ப விழா! அதை ஆதரிக்கும்படி வெளியிடப்பட்ட அறிக்கையிலே, கம்பெனியின் விசேஷ குணங்களை விளக்கியிருந்தது. கம்பெனியின் திறமையை விளக்குவதை விட, அசாமின் நிலைமை நன்குவிளங்கிற்று அந்த அறிக்கை மூலம்! இந்தக் கம்பெனியின் டைரக்டர்கள், மிக்கதிறமைசாலிகள். ஐந்துபேர் வங்களர்கள் இருவர் ஐரோப்பியர், என்று அறிக்கை தெரிவித்தது அசாமிய நாட்டுக்கம்பெனிக்கு வங்க, ஐரோப்பிய முதலாளிகள்!

பம்பாயில் ஒருபகுதி, மத்திய மாகாணத்திலே சில இடங்கள், ஆகியவற்றினைக் கொண்டு விதாபம் என்ற மாகாணத்தை அமைக்கவேண்டுமென்பது ஆனே அவர்களின் கருத்து. அதற்கான கிளர்ச்சியும் இருந்து வருகிறது.

பீகாரிலே, வெளிமாகாணத்தாரின் ஆதீக்கத்தையும் உயர்ந்த ஜாதிக்காரர் என்போரின் ஆளுகையை கிழித்து பீகாரின் பூர்வகுடிகளுக்கு உரிமை ஏற்பட பீகாரிலே அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிபாசி இயக்கம் இருக்கிறது. (ஆதிவாசி, பூர்வகுடிகள், என்பதன் ஆதிபாசி என்பது) இதனைப் பக்குவமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

நாட்டிலே இன்றுள்ள உணர்ச்சியை, நாட்டின் பெரியகட்சி என்று பாத்யதை கொண்டாடும் காங்கரஸ்குறைக்கப் பார்க்கிறது என்ற போதிலும், பிரிவினை உரிமை, எனும் எண்ணம், எங்கும் தோன்றியுள்ளது. ‘திராவிடநாடு’ தனிநாடாக வேண்டுமென்ற நமது கிளர்ச்சி, இதிலே ஒருபகுதி.

பிரோஸ்தான் நூள். அலிகார் பல்கலைக்கழக மாணவர் கூட்டத்திலே பேசுகையில், இந்தியா.

1. எல்லைப்புறம், பலுசிஸ்தானம் பஞ்சாப்
2. வங்காளம், அசாம்
3. ம. மாகாணம், ஐக்யமாகாணம்
4. பம்பாய்
5. திராவிடநாடு (சென்னை)

என ஐந்து அரசுகளாகப் பிரித்து அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். வெளிநாட்டுப் படை எடுப்பு ஏற்பட்டால் என்ன செய்வதென்று பேசுவாரின் வாயை அடக்கவும் வழியொன்று கூறியிருக்கிறார் இந்த ஐந்து அரசுகளும் அனுப்பும் பிரதிகளை கொண்ட மத்தயசர்க்கார், பாதுகாப்பு, நாணயகர் முறை ஆகியவற்றை நடத்தி வரலாமென்றும் கூறியிருக்கிறார்.

நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆய்வர்கள் தனி அரசுகளாக இருந்தார் சாத்யமாகி இருக்கிறதே இங்கு, ஐந்து அரசுகள் ஏற்படுவதிலே என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கிறார். ஐம்பத்தாறு அரசுகள் இருந்தனவாம், இந்து ஆட்சிக் காலத்திலே, புராண இதிகாசாதிகளும், ஆரம்பகால கவிதைகளும் இதனை வலியுறுத்துகின்றன. ஐம்பத்தாறு அரசுகள் கொண்ட பூபாகத்திலே இன்று சர். நூன் கூறும்விதமான ஐந்து அரசுகளும்கூட இருக்க ஐந்துத் தலைவர்கள் சம்மதிக்காதது விந்தைதான்! இதற்குக்காரணம் முன்னாளிலே இருந்த ஐம்பத்தாறு அரசுகளும் ஆரியக் கூடங்கள்! ஆகவே அந்தநிலை, பாரத மாதாவை வெட்டுவதாகத் தோன்றவில்லை. இப்போது தனி அரசுகள் ஏற்பட்டால், ஆரிய ஆதீக்கம் அழிந்தொழியும். எனவேதான், இன்று, தனி அரசுகள் அமையக் கூடாதென்று ஆர்ப்பரிக்கின்றனர்.

எவ்வளவு கடுமையான கூக்குரலைக் கிளப்பினாலுஞ் சரியே இந்தப்பிரிவினைக் கிளர்ச்சி அடங்காது. வேரூன்றி விட்டது. முறைகள், திட்டங்கள், பலப்பல வெளியிடப் படக்கூடும். சர். நூன் கூறும் மத்திய அரசு என்பதை, இந்திய நேசநாடுகளின் கூட்டு அமைப்புக் கழகம் என்ற அளவிலே மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். திட்டங்களிலே பலவிதம் விவாதக்கப்படுவது சகஜமே. ஆனால் அடிப்படையான கோட்பாடு. இனிமாய்க்க முடியாததாகி விட்டதைக் இவர்கள் உணர மறுப்பது ஏனோ! யார் மறத்தாலும் இந்த கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அறிவாளிகளின் இந்தக் கிளர்ச்சி பற்றி அலட்சியமாக இருந்துவிட முடியாது. “காகிஸ்தான் பிரிட்டிஷாரால் தரமுடியாது முஸ்லீம்கள் அடையவும் முடியாது” என்று முப்புரிதரித்த முதியோர் ராமஸ்வாமி சாஸ்திரியார் கூறுகிறார். காலப்போக்கையும் கருத்து கிளரிச் சியையும் உணர மறுக்கும் உன்னதமான உரிமையை அவர் பெற்றிருக்கிறார் போலும்! பலபல ஆண்டுகளுக்கு முன்பு “எதிரி எப்படி வருவான் எடுத்துவீச துளசியை எங்கும்” என்று கூறினாராமே தஞ்சை மன்னனுக்கு ஒரு கனபாடி, அந்த வாழையடிவாழையாக வந்த திவான்பகதூருக்கு இத்தகைய உரிமை நிச்சயம் உண்டு! கிடக்கட்டும், இத்தகைய விழியிருந்தும் வழிதெரியாத வித்தகர்கள் ஒருபுறம்!

சர். நூன் போன்றாருக்கு நாம் நமது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். வைசிராய் நிர்வாகசபை மெம்பரும், இஸ்லாமிய உலகின் மணிகளில் ஒருவரும், சிலமாதங்களுக்கு முன்புவரை. இலண்டனிலே உயர்பதவியிலிருந்தவருமான சர். நூன், உலகநிலை, மக்கள் மனநிலை, சர்க்காரின் போக்கு ஆகியவற்றினை நன்கு உணர்ந்தவர். எனவே, அவர், ‘திராவிடநாடு’ தனிநாடாக அமைதல் வேண்டும் என்று குறிப்பிட்டது, மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய அறிவாளிகளின் உள்ளதை வென்ற திட்டங்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கூறவும் வேண்டுமா!

டாக்டர் அம்பேத்கார் சென்றவாரத்திலே தமது சொற்பொழிவிலே எடுத்துக்காட்டியுள்ளபடி, நமது கிளர்ச்சிக்குரல், வெளிநாடுகளிலும் கேட்குமாறு செய்யவேண்டும். எந்தத் திட்டம் வந்தாலும், எத்தனை அரசுகள் அமைக்கப்பட்டாலும், இயற்கை, சரிதம், இனப்பண்பு, இலக்கியம், இன்றைய நிலைமை முதலிய எந்த ஆதாரததைக்கொண்டு அரசுகள் அமைப்பதானாலும், நர்மதை ஆற்றங்கரையிலிருந்து கன்னியாகுமாரி வரையிலே “திராவடநாடு’ அமைக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை.

(திராவிடநாடு - 30.8.1942)