அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தராத்மாவே அவருக்குக் கூறு!

உங்கள் கட்சியின் கொள்கை என்ன?

நீங்கள் அதுபற்றித் தெரிந்துகொண்டதைக் கூறுங்கள். பிறகு நான் மாற்றத்தை கூறுகிறேன்.

ஜாதி இல்லை, மதம் இல்லை, அதுஇல்லை, இது இல்லை என்கிறீர்களாம்.

ஆமாம்! மனிதனை மனிதன் அடிமைகொள்ளும் கொக்கூடாது, மக்களைச் சுரண்டும் மதம் உதவாது, அது, இது என்று கற்பனைகள் கூறுகிறார்களே அவை கூடாது. மாதர் விடுதலை, தாழ்த்தப்பட்டார் விடுதலை, முதலியன வேண்டும். இது எமது சுயமரியாதைக் கட்சியின் கொள்கை.

ஓகோ! ரொம்பச்சரி! உங்கள் கட்சியிலே பார்ப்பனர் இருக்கின்றனரோ?

கிடையாது, கிடையாது!

சரி, அப்படியானால், உங்கள் கட்சி உருட்பபடாது.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

பார்ப்பனர் இருந்தால்தான், கட்சியைப் பலப்படத்த வெற்றிகரமாக நடத்திச் செல்வார்கள்.

அப்படியா? அவர்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி அடைய முடியும். இன்றில்லாவிட்டால் நாளை நடக்கும் பார்ப்பனர் உதவிகொண்டு வெற்றி தேவை இல்லை வெற்றி பெற நாங்களே போதும்.

அப்படி எண்ணிவிடாதீர். வெற்றிபெறும் ஜாடை தெரிந்தாலும் போதும், எங்கள் குலத்தவர் அந்தச் சமயத்திலே உங்கள் கட்சியிலே தோன்றி, அவர்கள் இருந்தாலேயே வெற்றி கிடைத்தது என்று மக்கள் நம்பும்படிச் செய்வோர்கள் பந்து கோல் (எணிச்டூ) வருகிற சம்யம்பார்த்து, பார்ப்பனர் புகுவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களுக்கும், தோழர் ஓ.அ.க. விசுவநாதம் அவர்களுக்கும் இதுபோன்ற சம்பாஷனை நடந்ததாம். தோழர் வ.வே.சு ஐயர் குறிப்பிட்டகாலம் இது தானோ? இதனால்தானோ, ஆச்சாரியார், பிரிவினைத்திடத்தை ஆதரிப்பதாக இப்போது முன்வருகிறார், என்று எண்ணுகிறேன், கலங்குகிறேன் என்று தோழர் விசுவநாதம், கோயில்பட்டி, விருதுநகர், ஆகிய இடங்கயில் பேசுகையில் கூறினதாகக் கேள்விப்பட்டேன். என்னை அந்தப்
பேச்சு தூக்கிவாரிப் போட்டு விட்டது, ஏனெனில் நானும் எதற்காக ஆச்சாரியார் திடீரென, தமது தீட்சணிய எதிர்ப்பைவிட்டு, தீப்பொறி வீசுவதை நிறுத்திக்கொண்டு, பிரிவினை கோருபவர்களைப் பித்தர், பேயர், என்று தூற்றியதைவிட்டு, தழுவிக்கொண்டு, உச்சிமோர வருகிறார், காரணம் என்ன, என்று யோசித்ததுண்டு. இப்போது நானும் எண்ணுகிறோன். வ.வே.சு. கூறினதுபோல், வெற்றி பிரிவினைக்காரருக்கு ஏற்படப்போகிறது என்பது தெரிந்துவிட்டால், சமயத்திலே சரசமாடு
வோம், சந்தன தாம்பூலாதி சோட சோபசாரமும், தட்சணையும் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு தான் ஆச்சாரியார் வருகிறார் போலும், என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்து என்ன? சுருக்கமாக “திராவிடநாடு’ பத்திரிகைக்கு எழுதி அனுப்புங்கள்.

பரிதாபம்! சந்தன தாம்பூலம் சாமரம் கிடைக்குமென்று கருதினார்; மதுரையிலே மல்யுத்தம், பம்பாயிலே தார்பூச்சு, வேலூரிலே கருப்புமாலை, கருப்புக் கொடி, கருப்புத் துணியால் மூடப்பட்ட எலுமிச்சம் பழம், கல்மண், இவ்வளவுமாம்!

“மஞ்சள் கருப்பாச்சுதே மரிக்கொழுந்து வேம்பாக்கதே” என்று புலம்புவரே சாவித்ரி, நாடகத்திலே, அதைப்போல், கல்வி முதலாய் கனபாடி ஏடுகள் கதறுகின்றன. நான் என்ன செய்வது, நீயுமா இன்னமும் ஆச்சாரியாரை எதிர்ப்பது? அவர்தான் உங்கள் பக்கம் வருகிறாரே என்றோர் காங்கிரஸ் தோழர் கண்களில் நீர்புரளக் கேட்கிறார், கடுங்கோபங் கொள்கிறார். ஆச்சாரியார், காங்கிரசைவிட்டு விலகியது போதாது, அவரது போர் நோக்கம் தெரியவேண்டும், பிறகே அவரிடம் நம்பிக்கைகொள்ள முடியும். “அங்கேதான் ஆசை” என்று அவர் இன்றும் கூறுகிறார், தெரியுமோ “எங்கே இருந்தாலும் என் துரை, சாமிக்கு என் மீதில் பட்சம், இருக்குமடி, போடி!” - தலைவன் வேறோர் தையலைத் தேடிச்சென்றான் என்று கூறிய தோழிக்குத் தலைவி சொன்னாளாம், இக்கீதத்தை. காங்கிரஸ் தேவியும், ஆச்சாரியாரைப்பற்றி, இப்படித்தான் கூறும்போலும்! அவர் எங்கே இருந்தாலும், என்னை மறந்தவர்போல் காணப்பட்டாலும், அவருக்கு ஆசை என்னிடந்தான், என்று காங்கிரஸ் கருதுமென்றே நான் நம்புகிறேன். ஏனென்பீர்கள். ஆச்சாரியாரின் பேச்சைக்கேளுங்கள். “நான் காங்கிரசை விட்டுப் பிரிந்தாலும், என் ஆசை எல்லாம் அங்கேதான் இருக்கிறது” என்று கூறுகிறார் நாடகத்திலே பாடுவார்களே, “ஆசையும் நேசமும் ஆனந்தமும் அங்கே... பேசலும் பிதற்றலும், பிறவும் இங்கே...” என்று, அதைப்போலில்லையா, ஆச்சாரியார் பேச்சு! ஆசை அங்கேயாம், அவர் இங்கேயாம், அது என்னைநிலை? ஆணுமல்ல பெண்ணுமல்ல, அலிஎன்றாலோ கோபிப்பென் என்ற மொழிபோலிருக்கிறதே தோழர்களே. காங்கிரசைவிட்டுப் பிரிந்துவருக்கு, ஏதோ விட்ட குறை தொட்டகுறை போலிருக்கிறதோ என்றும் இவரது பேச்சைத்தள்ளி விடுவதற்கில்லை. ஏனெனில், “நான் காங்கிரஸ் என்ற வண்டியிலிரந்து கீழே இறங்கியது, உளைச் சேற்றிலே அகப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த வண்டியை சேற்றிலிருந்து வெளியே இழுத்து விடவதற்காகத்தான்” என்றும் கூறுகிறார். எனவே அவர், காங்கிரசைத் தலைமுழுகிவிட்டார் என்று சொல்ல முடியுமா!

இருந்து முகந்திருத்தி, ஈரோடு பேன்வாங்கி, விருந்து வந்ததென்று விளம்பினார் ஆச்சாரியார், ஆனால் காங்கிரசென்னும் அடங்காப்பிடாரியோ, ஆடினாள், ஆடிப்பழ ..... பாட்டைப் பூராவும் பிரசுரித்தால், பக்தகோடிகளின் கண்கள் குளமாகும், பாபம்! அதற்குப்பிறகும், ஆச்சாரியார் “என் ஆசை அங்கே தான்” என்று கூறுவது அர்ததமுள்ளதா, அடுக்குமா அறிவுக்குப்பொருந்துமா, நீங்களே கூறுங்கள் பார்ப்போடம். ஏன் இன்னமும் அவருக்கு இந்தச் சபலம் இருக்கவேண்டுமோ எனக்குத்தெரியவில்லையே. ஆச்சரியார், இத்தகைய துறவுக்கோலம் பூண்டது மூன்றாம் முறை. முதலிலே குருகுலப்போராட்டம், காங்கிரசில் பார்ப்பனீயம் இருப்பதை எதிர்த்து பெரியார், கலியாணசுந்தரனார், டாக்டர் வரதராஜூலு நாயுடு, ஆகிய மூவரும் முரசுகொட்டியபோது, காங்கிரசைவிட்டு வெளி ஏறினார். இரண்டாவதாக, திருச்சியிலே, தேவருக்கு எதிரிடையாக, டாக்டர் ராஜன் வேலைசெய்து தேவர் தோற்கச் செய்தபோது, “டாக்டர் ராஜனா இப்படிக் காங்கிரஸ் கட்டளையை மீறி கடப்பது” என்று கேட்டு, கைகளைப் பிசைந்துக்கொண்டு, மற்றோர்முறை மரஉரி தரித்தார். தோவலனைக் கொன்றது தவறு என்பதை உணர்ந்து பாண்டியன், “யானே கள்வள், கெடுக என் ஆயுள்” என்று கூறி வீழ்ந்தானோமே உயிரற்று, அதுபோல், “இனி எனக்கென்ன காங்கரசிலே வேலை” என்று கூறி, வெளியே போனார். இது மூன்றாம் முறை! முன் இரண்டு முறையும், துறவுக் கோலம் கலைக்கப்பட்டதுபோல், இம்முறையும் நடந்தால் யார் ஆச்சரியப்பட்ட முடியும், என்று கேட்கிறேன். அதற்கு வழிசெய்வதே, ஆச்சாரியாரின் பேச்சின் மர்மமும்.

வைதீகக்கலியாணத்திலே கண்டிருப்பீர்கள். தெருக்கோடிவரையிலே மாப்பிள்ளை போவான் காசியாத்திரை போவதாகக் கூறிக்கொண்டு! பெண்வீட்டார் போய்; அவனை அழைத்து, ஓர் கன்னிகையைத்தானம் செய்கிறோம், வருக, என்று அழைப்பர். மாப்பிள்ளை திரும்புவார். அதைபபோல், -“நான் காங்கிரசை விட்டுப்போகிறேன்” என்று ஆச்சாரியார் நடிக்கிறார் என்றே நாம் நம்புகிறேன். அவரது எதிர்கால நடிவடிக்கை என்னை ஏமாளியாகவோ; பொய்யனாகவோ ஆக்கும் என்று ஆச்சாரியாரின் அன்பர்கள் கருதுவர். சிலர் கூறுவர், பார்ப்போம் என்று நான் பட்டவர்த்தனமாகக் கூறுகிறேன். நான் கூறுவதே உண்மை என்பதை எதிர்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.

ஏசுநாதர் சிலுவையிலே அறையப்படவில்லையா! நபிகள் நாயகம் கல்லால் அடிக்கப்படவில்லையா! பாலன் கண்ணனைக் கண்டபடி திட்டவில்லையா! போல் ராஜாஜிக்கு வசை கிடைக்கிறது! ஆனால் தாரை ஊற்றி உண்மையை மறைக்கமுடியுமா? என்று கல்கி கேட்கிறது. ஆஹா! தம்பி! இந்தப்புத்தி கொஞ்ச நாட்களுக்குமுந்தி வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பெரியார், சுயமரியாதை இயக்கத்தை துவக்கி, தமிழகத்தின் தனிக்குரலாக இருந்து போர் தொடுத்தபோது, காந்தீயர்கள் செய்த சேட்டைகள் இவ்வளவு அவ்வளவு என்று அளவிடமுடியுமா! எவ்வாளவு விஷமம்! எத்துணை காலித்தனம்! கல்அடியும் சொல்லடியும் எவ்வளவு! இவ்வளவு நடந்தபோது இன்று ஆச்சாரியாருக்கு நடக்கும் அலங்கோலங்களைக் கண்டு அழும் அம்மாமிப்பத்திரிகைகள், ஒருவார்த்தை, தங்கள் சீடர்களுக்கு ஒரு நல்லுபதேசம், ஒரு எச்சரிக்கை விட்டது உண்டா? மக்கள் ஆத்திரம் அடைந்தனர், ஈ.வே.ராவின் பேச்சு பிடிக்கவில்லை, என்று எழுதி காலித்தனத்தைத் தூண்டினரே, அதை மறக்கமுடியுமா! விதைத்தது வினை, தினை கிடைக்குமா தம்பி! படுகுழிவெட்டி அதைப்பச்சிலையால் மூடிவைத்தால், சிவமயம் வெட்டினவனே தன்னைமறந்து தடுமாறிக்குழியிலே வீழ்வதுண்டு. அதைப்போல அன்று ஆதரித்து வளர்த்த காலித்தனம், வளர்த்த கடா, மார்பிலே பாய்கிறது. வம்பைவிதைத்துப் பின்னர் கம்பு கேட்டுப்பயன் என்ன? என்று கசியும் கண்களுடன் விளங்கும் கல்கியைக் கேட்கிறோம்.

முஸ்லீம் லீகர்களும், திராவிடர்களும், இன்று ஆச்சாரியாருக்குத் தொல்லை தராமல், தூரநின்று வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு ஒன்றாகி, இன்றுள்ள ஆச்சாரியார் எதிர்ப்பும் சேர்த்துவிட்டால், தமிழகத்திலே தத்தளிக்கும் ஆச்சாரியார், தலைகாட்டமுடியாது, தக்ளியும் கையுமாக ஆசிரமத்திலே அமர்ந்து, பழங்களை எண்ணி பெருமூச்சுவிட்டுக்கொண்டு வாழவேண்டும். திராவிட இஸ்லாமியரின் பலம் ஆச்சாரியாருக்குக் கேடயமாக இருக்கும் என்று அஞ்சுவதால் மட்டுமே, ஆச்சாரியாரை எதிர்க்கும் கூட்டம், சற்று அச்சத்தோடு நடந்துகொள்கிறது. இதை ஆச்சாரியார் உணர்கிறாரா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். காந்தியரின் புதிய போர்த்திட்டம், நாட்டின் ரேதடிõரய கெடுக்கும், எதிரிக்கு இடமளிப்பதாக இருக்கும் யுத்த ஆதரவைக்குலைக்கும், என்பன ஆச்சாரியாருக்குத் தெரியும். இவைகளை ஆச்சாரியார் விரும்பவில்லை நாட்டைத்தாக்க நயவஞ்சகத்திட்டமிடும் ஜப்பானியரை எதிர்க்க நாட்டவர் நாடிமுறுக்குடன் வெளிவரவேண்டும், படையில் சேரவேண்டுமென்று ஆச்சாரியார் முரசுகொட்டுகிறார். அவர் முரசு இதுபோலும் அவரது சம்பந்தியார் போக்கு, எதிர்க்குத் தாம்பூலம் தருவதாகவும் இருக்கிறது உண்மையில் ஆச்சாரியார் நாட்டுக்குப் பணியாற்ற விரும்பினால், காந்தியார் இந்தக் கபோதி திட்டத்தை மண்டைமீதடித்து, நொறுக்கவேண்டும். ஆனால் ஆசை அங்கே இருக்கும்போது அவர் இதனைச்செய்வாரா?

காந்தியாரே துடிக்கிறாராம், தத்தளிக்கிறாராம் அவதது உள்ளம், அக்கினிப்பிழம்பாகி விட்டதாக அவரைக் சுற்றிக்கொண்டுள்ள சுருதிப் பெட்டிகள் காந்தியார் போர்க்கோலம் பூண்டு வெளிவரத்தயாராகிவிட்டார், பிரிட்டிஷ் ஏகாத்திபத்தியமே பார்த்துப் பிழைக்கபார்த்தார்! என்று கூறுகின்றன. 1920ம் ஆண்டு நடை பெற்றது போன்ற பரிய போராட்டமாம்! காந்தியாரின் தலைமையாம்! கடைசிப் போராம்! காந்தியார் அவரது கடைசி சக்தியை இதற்காகவே சேமித்து வைத்திருக்கிறோம். அவரது பேச்சும் எழுத்தும் இசாரமாகிக் கொண்டே வருகின்றனவாம். வருகிறது புலி! என்று வரட்டுக் கூச்சலைக் கிளப்பிவிட்டன வகையறியாத கூட்டம்! நான், காந்தியாரின் திட்டத்தைக் கண்டித்தது கண்ட ஒரு கதர்ச்சட்டைக்கு கண் களிலே மிரட்சியும், கைகால்களிலே துடிப்பும், நெஞ்சிலே சோகமும் ஏற்பட்டுவிட்டது. புரட்சி ஓங்க ஏகாபதிபத்தியம் ஒழிக! என்று கூவி விட்டு, ஸ்ரீஜக் என்ற அடைமொழியை எனக்களித்துக் கடிதம் தீட்டிவிட்டது ஒரு காங்கிரஸ் கபந்தம். புரட்சி ஏன் ஓங்கும், ஸ்ரீஜத் என்ற வடமொழியிலே மோகம் இருக்கிற போது? புரட்சி ஓங்குக என்ற கருத்துக்கும் இந்த ஸ்ரீஜத் என்ற ஆரிய அடை மொழிக்கும் பொருந்துமா என்று கேட்கிறேன். கூட்டிலேசிக்கி; கோவைக்கனி தின்று, சொன்னதைச் சொல்லும் கிளிபோல், புரட்சி ஓங்குக என்று யாரோ சொன்னதை உருப்போட்டு, வாந்தி எடுக்கும் காந்தி பத்தரே உம்மைத் தான் கேட்கிறேன். உள்ளத்திலே உறுத்தினால் பதற வேண்டாம், ஜாதிமத பேதமெனும் பித்துப்பிள்ளை விளையாட்டை ஒழித்து கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போகும்படி செய்து நாட்டிலே மக்களின் உரிமைகளை நர்த்தனமேடையாக்கிக் கொண்டு ஆணவ நடனமாடும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி, சமத்துவம் நிலவும் சமுதாயத்தை நிறுவுவது, புரட்சி ஓங்வா? அந்தப் புரட்சி ஓங்குக என்று எங்கே சொல்லு பார்ப்போம். பழங்குடி மக்களை ஆரியம் என்ற பல்லக்குத் தூக்குபவராக்கி, அமர்ந்து பார்ப்போரும் புரட்சி அல்லவா? அமெரிக்காவிலே அடிமை வியாபாரத்தை அடக்கினார், ஆபிரகாம்லின்கன். இது ஓர் புரட்சி! இங்குள்ள பார்ப்பனரின் பாதங்தாங்கிகரைத் தமிழர் இன்றும் இருப்பதை மாற்றி, ஆரிய ஆதிக்கத்தை அழித்தொழிப்பது, புரட்சி அல்லவா! அதைவிட மிக்க அவசியமான வேறோர் புரட்சி இருக்கிறதா என்று கூறுங்கள் கேட்போம். கோபம் வந்து விடுகிறது. ஆவேசமாடுறாய் தோழனே! ஆனால் இதைப் படித்துப்பார்!

ரோம் தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோவுக்கும் உங்கட்கும் என்ன வித்தியாசம் தாங்கள் தீயை மூட்டிவிட்டு, அதை அணைக் ஆற்றலுமற்று தீ கொழுந்துவிட்டொரியும் போது சோவெ கிராமத்திலே உல்லாசமாக வாழுகிறீரே? இது தர்மமா? நீதியா? என்று ஒரு நிருபர், காந்தியாரைக் கண்டித்துக் கடிதம் விட, சாந்த சொரூபிக்கு கோபம் சண்ட மாருதம்போல் கிளம்பி, “என்னையா” நீரோவுடன் ஒப்பிடுகிறீர்! நான் என்னையே தீயில் சுட்டெரித்துக் கொள்ளப் போகிறேன் தெரியுமா! என்று காந்தியார் கடுமையான பதில் எழுதியிருக்கிறார்.

தன்னைத்தானே. சுட்டுத் தள்ளிக்கொள்ளப் போவதர்காக காந்தியார் பேசுவதும் எழுதுவதும் ஒருவித ஹம்பக்! உப்பு சத்தியாகக் கிரகத்தின் போது கூறி என் பிணம் அரபிக் கடலிலே மிதக்கும்” என்று அதைப் போல் இது ஓர் ஹம்பக்! இதையார் நம்பி, கண்களைத் துடைத்துக் கொள்ள கால்கஜம் துணி தேடப்போடுகிறார்கள்! கனல் கக்கும் காந்தியார் விரைவில் புனல் தொட்டியாவார் என்பது மக்களுக்குத் தெரியும்.

பொருளற்ற அவரது பாட்டுக்களைச் சிலர் புத்தமுது என்றனர், øகைத் தாளமிட்டனர். இருளுக்குள் ஒளி காண, தீயில் குளிர்ச்சிக்கான எண்ணினர். அந்தக் வட்டத்தின் தலைமை தாங்கி நடத்திச் சென்றவரே ஆச்சாரியார், எனவே அவர் இன்று அதே காந்தியாரின் திட்டங்களைக் கண்டிக்க முன்வர இலச்சைப்படுவார், பாவம். நீரோவுக்கும் உனக்கும் என்னய்யா வித்தியாசம்? என்று கேட்க ஆட்கள் கிளம்பி விட்டது கண்டு கடுங்கோபம் கொண்ட காந்தியார், “என்னை இப்படிக் கூறுவதா! என்று கூறுகிறார். வேண்டாம், வேண்டாம், என்று நாட்டிலே உள்ளோர் வேண்டிக் கேட்டுக் கொள்வர் என்ற எண்ணம்போலும்! நிருபர் கேட்ட கேள்விக்கு நேரடியான ஒழுங்கான தக்க பதிலைக்கூற முடியாது தவித்து பள்ளிப்பிள்ளை கன்னாபின்னாவென்று கதறுவதுபோலன்றோ காந்தியார் பதில்கூறி இருக்கிறார். நீரோபோல, காந்தியார் இன்று இல்லை என்று கூறமுடியுமா? அழிக்க நகரங்கள், உடைந்த பாலங்கள், உயிரை இழந்த வீரர்கள், வீரச்சீனாவின் காட்சி இது. இரத்த ஆறு! பிணக்குவியல்! நொறுங்கிய டாங்கிகள் தூளான மோட்டார் சிதறிக்கீழே செங்குருதிச் சேற்றில் புதைந்துள்ள தலைகள், குடல்கள் கை, கால், முதலிய உறுப்புகள், இது வீர ரஷியாவிலே காட்சி! இத்தகைய கோரமும் கொடுமையும் தாண்டவமாடக் காரணமாக உள்ள அச்சு நாட்டிடம் கைக்கூலி வாங்கினவன், கடையன், மடையன், நெஞ்சிலே சூது எண்ணங்கொண்ட சடையன், சொல்லக் கூசும் சொற்களை காந்தியார் கூறுவதைக்கேட்டு அவரை நீரோ என்று யார், அழைக்காமலிருக்க முடியும்! எவ்வளவு பயங்கரமான நாட்கள்! எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது! இந்த நேரத்திலே உள் நாட்டுக் குழப்பத்தை செய்யத் தூண்டுபவர் யாராயிருந்தாலும், மகாத்மாவாக இருந்தாலும் மகரிஷியாக இருப்பினும் மகந்து மடாதிபதியாக இருப்பினும் அவர்களை, மட்டந்தட்டி, மூலையில் உட்காரவைத்தாலன்றி, நாட்டைக்காப்பாற்ற முடியுமா என்று கேட்கிறேன்.

இரத்தத்தைத் தண்ணீர்போல் இறைத்து பணத்தை மண்போல் வாரி வீசி, பிரிட்டன் தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளத் துணிகிறதே என்று அங்கலாய்த்துக்கொள்ளும் காந்தியார், இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தடுக்க மடத்தனத்தையா கேடயமாக உபயோகிப்பது என்று கேட்கிறேன். இந்தச் சமயத்திலே உள்நாட்டுக் கிளர்ச்சியைத் துவக்கினால், அது தீ மூட்டுவதாகும், அடக்கமுடியாத, மூட்டியவராலேயே அடக்கமுடியாத தீயைக் கிளம்பிபியாக முடியும். இத்தகைய தீயை மட்டிவிட்டு, வார்த்தாவிலே உல்லாசமாக வாழ எண்ணுகிறீரே வயோதிகரே, உமக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருநிருபர் கேட்டதிலே என்ன குற்றம் கூறுங்கள். பார்ப்போம். நீரோவைச் சரிதம் ‘டுகோலிட்டுக் காட்டுவதுபோலவே, காந்தியாரின் கதியுமாகும். ஆனால் அதனைச் செய்ய ஆச்சாரியார் முன் வரமாட்டார், அவருக்குத்தான் ஆசை இன்னமும் அங்கே இருக்கிறதே!

காந்தியாரின் கபோதித்திட்டத்திற்கு ஜனாப் ஜின்னா சரியான சவுக்கடி கொடுத்தருக்கிறார். என்னென்பது அந்த எஃகு உள்ளம்படைத்தவரின் ஆண்மையை! பிõட்டிஷாரே வெளியே போ! என்று காந்தியார் கூறும் திட்டம், பிரிட்டனை மிரட்டிப் பயிணவைத்து, இந்துராஜ்யம் ஏற்படுத்தச் செய்யும் ‘ழ்ச்சியே என்பதை ஜனாப் ஜின்னா, இவ்வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெளிவாகக் காட்டியுள்ளார். பிரிட்டிஷார் தாமாகவே இப்போது நாட்டைவிட்டு விலகிவிடவேண்டுமாம். இல்லையேல், காந்தியார் தமது கிளர்ச்சியைத் துவக்குவாராம். இந்த மிரட்டலைக் கேட்டுப் பிரிட்டன் பணியுமென்று கருதுவது, குதிரைக் கொம்புக்குத் தவங்கிடப்பதாகவே முடியும்.

சரி காந்தியாரே, இப்போது பிரிட்டிஷார், இந்தியாவைவிட்டுப் போய்விட்டால், நாட்டு ஆட்சி, யாரிடம் இருக்கும்? என்ற கேள்விக்கு, காந்தியார் கூறும் பதிலைக் கேளுங்கள்.

யாரிடமேனும் இருக்கட்டும். யாராரால், எங்கெங்கே, அதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறதோ, அவ்விதமே நடக்கட்டும்.

முஸ்லீம்கள் பாகிஸ்தானமும், இந்துக்கள் இந்துஸ்தானமும், சீக்கியர்கள் சீக்கிஸ்தானமும் அமைந்துக் கொள்ளட்டும். எதுவோ நடக்கட்டும், எப்படியோ, ஆகட்டும், பிரிட்டிஷார் போய்விடட்டும், என்று கூறுகிறார். இதுபொறுப்பு, நாட்டுப்பற்று தன்னம்பிக்கை, மனிதாபிமானம், சாந்தி, அமைதி, ஆகிய எதாவதோர் நற்குணத்தைக் காட்டுகிறதா என்று கேட்கிறேன், கலகம், குழப்பம், தொலை, குத்து வெட்டு, சண்டை சச்சரவு, தீமூட்டுதல், தெருச்சண்டை, காட்டு ராஜாக்கள் கிளம்புவது ஆகிய இத்தனையும் நடந்தாலும் பரவாயில்லை என்று கூறும் ஒருவø, பித்தரென்பதா, பேதையரென்பதா, சகலரையும் ஏய்க்கும் சித்தரென மனப்பால் குடிக்கும் மத்தரென்பதா, என்னவென்ற கூறுகூது? நாட்டிலே இன்றுள்ள கட்டும் காவலும் குலைந்து, சட்டமும் சாந்தியும் சரிந்து, இரத்தம் ஆறென ஓடி, பாகிஸ்தான், இந்துஸ்தான் ஆகிய எந்தஸ்தானமேலும் ஏற்படட்டும், என்று கூறும் நெஞ்சிரக்கமற்றவர், குழப்பமின்றி, உள்நாட்டுக் கலகமின்றி, கத்தியின்றி புத்தியை உபயோகித்து பாகிஸ்தானை ஒப்புக்கொண்டு உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுவதையும் தடுத்து, வெளியாளையும் விரட்ட, அறிவும் ஆண்மையும் புடைசூழ பவனிவரக்கூடாதா! வார்தாவின் விபரீத விஷவாடை, நாட்டைப்பாழாக்கத் துணிவுகொள்ளும் கொடுமையைக் காணீர்! ஜனாப் ஜின்னா இதனைக்கண்டித்து “ஐயா காந்தியாரே! உமது வயது முதிர்ந்த இந்தப்பருவத்திலே நீர் நாட்டுக்குச் செய்யும் நற்காரியம் இதுதானா?” என்றுகேட்கிறார். நாக்கைப்பிடுங்கிக்கொள்வர் மற்ற ஆத்மாக்கள், இந்தச் சுடுசொல்கேட்டு, வெட்கி! ஆனால் அவர் மகாத்மா வல்லவா, வெட்கமும் மானமும், ரோஷமும்வார் தாவை அண்டுவதில்லை!!

“பாகிஸ்தான் என்றால் என்னவென்றே எனக்கு விளங்கவில்லை. பாகிஸ்தானிகள் எனக்கு விளக்கம் கூறி, திருப்திசெய்யட்டுமே என்று கேட்கும் காந்தியாருக்கு ஜனாப்ஜின்னா, கூடச்சுடத்தருகிறார் சாட்டை!

“ஐயா மகாத்மாவே! முஸ்லீம்களின் கோரிக்கை நியாயமானது என்று எடுத்துச்சொல்லி உம்மைத் திருப்திசெய்வதில் யாராலும் வெற்றிபெற முடியாது போல் தோன்றுகிறது. ஒருவேளை அந்தராத்மா வேண்டுமானால் அதைச் செய்யக்கூடும்” என்று ஜனாப்ஜின்னா கூறுகிறார். வெட்கம் பிறக்கவேண்டாமா, வேதியக் கூட்டத்துக்கு வேண்சாமரம் வீசும் வார்தர வாசிக்கு!

பிரிட்டிஷாரை நம்பி அவர்களின் உதவியைக் கொண்டுதானா, நீங்கள் பாகிஸ்தான் பெறப்போகிறிர்கள்? என்றுகேட்டு, கிண்டல்செய்யும் காந்தியாருக்கு, ஜனாப்ஜின்னா, தெளியும் தீரமும் தொனிக்க, உறுதியும் உணர்ச்சியும் ததும்ப, நம்பிக்கையும் ஆண்மையும் பொங்க, அழகிய, பதில் கூறுகிறார். கொன்தகட்டிலே வைரத்தால் இழைக்கப்படவேண்டிய வாசக மென்பேன் அதனை. பத்துகோடி முஸ்லீம்களின் இருதய கீதமென்பேன்! ஆயிரமாண்டுகள் இருந்த இஸ்லாமிய அரசசரி தக்கீர்த்தியின் பட்டயமென்பேன். அந்தப்பேச்சை பாருங்கள் அதன் அருமையை!

“பிரிட்டிஷாரின் உதவியின் பேரிலோ அல்லது அவர்களது பாதுகாப்பின் கீழோ எங்களுக்குப் பாகிஸ்தானில் நம்பிக்கையில்லை. இந்திய முஸ்லீம்களின் நம்பிக்கைதான் பாகிஸ்தான். நாங்கள் இதை அடைய யாரையும் எதிர்பார்த்திருக்க வில்லை எங்களையே நம்பியிருக்கிறோம். இதற்கு இடையூராக எதிர்ப்பும் இடைஞ்சலும் எங்கிருந்து வந்தாலும் அதைச் சமாளிக்கவும் விருப்பத் துடனிருக்கிறோம்.

வார்த்தா, லண்டன், வாஷிங்டன், எங்கு இருந்து எதிர்ப்பும் இடைஞ்சலும் வரினும், ஒருகை பார்க்கத் தயார்! எங்களின் இலட்சியம் பாகிஸ்தான் அதை பெற நாங்கள் எங்களையே நம்பியிருக்கிறோம், எனும் இந்த மொழிகள், கோழைகளையும் வீரராக்கும்! இனத்தின் எழுச்சியைக்கண்டு, இனத்தின் நம்பிக்கையைப் பெற்று, இலட்சிய பூர்த்திக்காக எத்தகைய இடையூறு வரினும்சரி என்றுள்ள உறுதி கொண்ட உத்தம வீரர்கள் மட்டுமே இத்தகைய உயிர் வாசகத்தை உரைக்கமுடியும்!

அந்தராத்மாவே! அடிக்கடி காந்தியாரை ஏமாற்றி வருகிறாய். ராஜ்கோட்சம்பவத்தின் போது உன்னை நம்பிய “மகாத்மா” ரசாபாசத்தில் சிக்கிக் கொண்டு தவித்தார். ஆனால் இன்னமும் உன்னை தான் அவர் நம்புகிறாராம். தன்நிலை, நாட்டுநிலை முதலியன தெரியாது “உளுத்துப்போன பேச்சுப்பேசும் உன்மகாத்மாவுக்கு நீயாவது கூறு, “இனி பலிக்காது கடையைக் கட்டிவிடுவதே சிலாக்கியம்” என்று நாட்டிலே தோன்றியுள்ள இனஎழுச்சியை இனி அடக்கி ஆளமுடியாது என்பதை எடுத்துக்கூறு. அந்த இன எழுச்சி காரணமாகத்தான் கோட்டைகளின் சுவற்றின்மீது கமண்டைகள் மோத நேரிடினும், உடல் கழுகுக்கும் நரிக்கும் இரையானாலும், கவலையில்லை என்று வீரர்கள் வேலைசெய்தனர் என்பதை எடுத்துச் சொல்லு. ஏன் முஸ்லீம்களுடன், விண் மற்றும் காந்தியாரின் உள்ளத்திலே குடிபுந்துள்ள கபடத்தைத் தயவு செய்து கொல்லு! அவரைச் சூழ்ந்துள்ள மார்வார் குஜராத் முதலாளிகளைப் பிடரியைப் பிடித்துத்தள்ளு! நாட்டுக்கு நற்காலம் பிறக்கட்டும் என்றுபாடு, பள்ளு! விடிந்தது என்றெழுந்து துள்ளு!

ஆச்சாரியார், மஞ்சள் கருப்பாச்சுதே என்று மாறடித்துக்கொண்டு இருக்கிறார், எனவே அந்தராத்மாவே, நீயேனும் சற்று தெளிவுபடுத்து, காந்தியாருக்கு விஷயத்தைக்கூறு! இதைச் செய்யாமற்போனால் நம் மக்களின் சக்தி கிளம்பி, உன்மகாத்மாவை வெகுபாகுபடுத்திவிடும், என்பதை நான் முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன், கேட்டாலும் சரி, விட்டாலும் சரி, நாட்டு நிலைமையை நான் எடுத்துக்காட்டி விட்டேன், நடப்பன நடக்கட்டும் நான் என்ன செய்ய?

(திராவிட நாடு - 19.7.42)