அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தோ நெஞ்சு வேகிறது!
நமது பேரன்பர், தமிழர் தளபதி குடந்தைத் தோழர் கே.கே. நீலமேகம் அவர்களின் துணைவியார் தோழியர் தனபாக்கியத்தம்மாள், திடீரென மறைவுற்றது கேட்க, நெஞ்சு வேகிறது. தோழர் நீலமேகம் எவ்வளவு மனமுடைந்திருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்போது, எரிகிற எண்ணெயில் வீழ்வதுபோல், நமது நெஞ்சு வேகிறது. இயக்கப் பணியாற்றிவரும் அவருக்கு, அவரது துணைவியார், மிக்க உதவியாக இருந்து வந்ததை நாம் அறிவோம். அவரது இல்லத்தில் சென்று தங்கி, உபசாரத்தை நேரில் கண்டவர், இச்செய்தி கேட்டுக் கலங்குவார், பெரியாருக்கு ஒரு நாகம்மையார் கிடைத்து, மறைந்தார், அன்று அவரது வாழ்க்கையிலே ஏற்பட்ட பள்ளம், காலத்தாலும் மூடப்படவில்லை. அதுபோல் தோழர் கே.கே. நீலமேகத்துக்குற்ற துணைவியாக இருந்து வந்த அம்மையாரின் பிரிவு, அவருக்கு, ஆறுதல் அளிக்க முடியாத கலக்கத்தை உண்டாக்கி விட்டிருக்குமென்பதை நாமறிவோம். நாம் வேதாந்தி யல்ல மாயவாதம்புரிந்து அவரைத்தேற்ற, மத உபதேசியல்ல, மறு பிறப்பு பற்றிப்பேசி அவருக்கு மன ஆறுதல்தர, நாம் கருதினாலும் அவர் அதனை ஏற்கார். அவர் ஓர் சுயமரியாதைக்காரர்.

ஆம்! ஆகவேதான், அவர் இந்தச் ‘சோதனை’யிலிருந்து தப்பி, தத்தளித்துத்தேறி, கொந்தளித்துக் குளிர்ந்து, கதறிஓய்ந்து, பின்னர், அஞ்சோம் எதற்கும்’ என்று உறுதிகொள்வார் என்று நம்புகிறோம். அவரது வாழ்க்கைக் கப்பலின் எதிரிலே, பெரும்பாறை தட்டுப்பட்டு விட்டது. அதனைக்கடந்து, மரக்கலத்தைத் தோழர் கொண்டு செல்வார் என்று நம்புகிறோம்.

இத்தாலிய விடுதலை வீரர், காரிபால்டி, தனது, பிரிய மனைவி இறந்தபோது, “ஆம்! என்மனைவி இறந்தார், ஆனால் என் மனைவி மீது நான் கொண்ட அன்பு அணையாது. அந்தஒளி இன்னமும் இருக்கும், அதைத் துணைகொள்வேன், இத்தாலிய விடுதலைப் போரில் மேலும் ஈடுபடுவேன்” என்றுரைத்தாராம். போரிட்டார், வெற்றிகண்டார். தோழர் நீலமேகமும் அத்தகைய இயல்பு படைத்தவரே, இந்தநேரத்தில் அவருக்கும், அவரது மக்களுக்கும் நாம் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

29.3.1942