அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர் அவ்வளவு முட்டாளல்ல!

ராஜபார்ட்டுக்கு வேண்டிய கெம்பீரம் இல்லை! ராஜபார்ட்டுக்குத் தேவையான சோபிதம் இல்லை. ......சத்துக்கோ உருக்கும் குணமில்லை. எந்த வேடத்தில் தோன்றினாலும், கல்மாரி காண முடிகிறதே யொழியே, மலர்மாரி காணமுடியவில்லை. எதோ கொஞ்சம் காசு கிடைக்கிறது, என்றாலும், நடிகர் உலகிலே இடமில்லை. காரணம் கம்மலான சாரீரம், தாளமோ பூஜ்யம், சரீரத்திலோ தளர்ச்சி, நினைப்போ நடிப்பின்மீது செல்வதில்லை. இத்தகைய நடிகர், நாலாறு மாதங்களோ, ஆண்டுகளோ, “சங்கீத விற்பன்ன கோலாகலர்” என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்து விட்டுப், பிறகு, அவன் அனுமந்த வேடத்துக்குத் தானே பொருத்தம். அவன் பாடுவதைக் கேட்டால் கழுதை கெட்ட வண்ணான் பழுமிதுடுத்தோடி வாரானோ” என்று ரசிகர்கள் கண்டிக்கக் கேட்டு, மூலையில் உட்கார்ந்துதீர வேண்டிவரும். நடிப்புத் திறமை இல்லை என்றதும் நாடகமேடைக்கும் நமக்கும் பொருந்தாது என்று சென்றுவிடுதல் புத்திசாலித்தனமே யொழியே, ‘அந்தப்பார்ட்’ முடியாவிட்டால், ‘இன்னொரு பார்ட்’ போட்டு ஆடிப்பார்ப்போம் என்று எண்ணும் நடிகன், நாட்டுக்கே வேம்பாவான்!

அரசியலில் ஆச்சாரியாரின் கதி அதுதான், என்பதை நாம் முன்கூட்டியே கூறிவிடுகிறோம். அவரது அடியார்கள் துடிக்கலாம், ஆனால் உண்மையை உரைக்கிறோம், காலம் தீர்ப்பளிக்கட்டும்.
இந்திய உபகண்டத்து விடுதலைப் போரை நடத்த, வீரமும் விறுவிறுப்பும், அஞ்சாத நெஞ்சமும் அணையாத ஆர்வமும், ஜாதி குலம் குடும்பம் ஆகியவற்றைக் கடந்த உள்ளமும், எத்தகைய கஷ்ட நஷ்டத்துக்கும் ஆள்படும் சித்தமும், எவ்வித மோகனாஸ்திரத்துக்கும் மயங்காத மனப்பான்மையும் கொண்டவர்கள், அரசியல் யூகம் அறிந்தவர்கள், சரிதத்தைச் சான்றாகக் கொண்டவர்கள், கொதிக்கும் குருதி, முறுக்கேறிய நரம்பு கொண்டவர்கள். உலகப் போக்கை உய்த்துணரும் பண்பினர் வேண்டும். செப்புமொழி, பஞ்சாங்கப் பேச்சு, ....... கொண்டோர், பலநாளோ சிலநாளோ படாடோபமாக உலவலாம், ஆனால் அவர்கள் இலட்சியம் வெற்றிபெறாது.
ஆச்சாரியார் அறிவாளி. ஆனால் காலதாமதமாகியே அவருக்கு அறிவு உதயமாவது வாடிக்கை! அஹிம்சை காலத்துக்கேற்றதன்று என்ற அறிவு அவருக்கு இன்று இருக்கிறது. ஆனால் அது சரியான நேரத்தில் தோன்றிற்றா! இல்லை! ஜப்பான் முதலிய நாட்டார் இங்கு நடமாட விடக்கூடாது என்ற அறிவு அவருக்கு இன்று இருக்கிறது. ஆனால் அது எவ்வளவு காலதாமதமாகித் தோன்றிற்று! நாட்டைப்பாதுகாக்க, போரில் உதவிசெய்ய வேண்டும் என்ற அறிவு போர்தொடங்கிய மூன்றாமாண்டன்றோ இம்முதியோருக்குதித்தது! நாட்டிலே உள்ள பலகட்சிகளும் கூட்டாக ஆள்வதே முறை என்ற அறிவு உதயமாகி இருக்கிறது. ஆனால் நினைப்பிலே இதுநிலைக்க எவ்வளவு காலம் பிடித்தது! முஸ்லீம்களைச் சமரசப்படுத்தாமுன்னம், சாந்தியும் சக்தியும் பிறக்காது என்ற அறிவு உண்டாகியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சிக்குரிய செய்தி! ஆனால், அது 1935 முதல் இருந்திருந்தால் நாட்டின் நிலைமை இன்று எப்படி இருந்திருக்கும். காங்கிரசைவிடத் தேசமே முக்கியம் என்று நேற்று பேசுகிறார். கோகலே மண்டபத்தில், ஆனால் காங்கிரசே தேசம், தேசமே காங்கிரஸ் என்று எவ்வளவு பிதற்றியிருக்கிறார், பேதமையுடன் எவ்வளவு காலம் புரண்டு கொண்டிருந்தார்! கோகலே ஹாலிலே, கூச்சலும் குழப்பமும் உண்டானதும், அபிப்பிராயத்தை எடுத்துரைக்க உரிமை உண்டு என்று கூறினார். ஆனால் இதே விதமான உரிமையைக் கோரிய நரிமனை நசுக்க கரேயைக் கவிழ்க்க, ராயை விரட்ட, சுபாஷைப் பொசுக்க, இவர் எவ்வளவு துடைதட்டிக்கொண்டு கிளம்பினார். “தனிஆளாக இருப்பினும், காங்கிரசிலிருந்து விரட்டப்பட்டாலும், எனது அபிப்பிராயத்தை நான் அடுத்தடுத்துக் கூறிக்கொண்டுதான் இருப்பேன்” என்று வீரம் பேசுகிறார் இன்று. ஆனால் இவ்விதமான உரிமையைக் கேட்டவர்களைப்பற்றி ஊரெங்கும் தூற்றி, உறுமி, வீண்கலகம் விளைவித்தார். பாகிஸ்தான் ஆதரிப்பைக்கேட்டு இமயம் முதல் குமரிவரை உள்ள முஸ்லீம்கள் சந்தோஷப்படு
கிறார்கள் என்று இன்று கூறுகிறார். ஆனால் நேற்றுவரை, இமயம் முதல் குமரிவரை உள்ள முஸ்லீம்களை இவர் எவ்வளவு கண்டித்தார், ஏளனம் செய்தார், எதிர்த்தார்! இஸ்லாமியருக்கு பாகிஸ்தானே மணம், முஸ்லீம் வீணைக்கு பாகிஸ்தானே நாதம், என்ற அறிவு, பாகிஸ்தான் கிடைத்தால்தான் முஸ்லீம்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற அறிவு அவருக்குப்பிறக்க, எத்தனை ஆண்டுகள் ஆயின!

இன்று தோன்றியுள்ள காங்கிரசைவிடத் தேசம் பெரியது, காங்கிரசின் கட்டளையைவிட நாட்டின் அழைப்பு முக்கியமானது, கட்சி முன்னேற்றத்தைவிட மக்களின் ஒற்றுமையே முக்கியமானது, முஸ்லீம்களைச் சரிப்படுத்துவதே ராஜதந்திரம் என்ற இந்த அறிவு, ஆச்சாரியாருக்கு, உதயமானது மகிழ்ச்சிக்குரியதே, ஆனால் எவ்வளவு காலதாமதாகிப் பிறந்தது என்பதை எண்ணிப்பாருங்கள்.

போர் துவங்கியதும் இந்த அறிவுடன் ஆச்சாரியார் முனைந்திருந்தால், இன்று நாட்டின் நிலை எப்படி இருந்திருக்கும்! காலை 8 மணிக்குப் புறப்படும் இரயிலுக்கு 10க்கு வீட்டைவிட்டுப் புறப்படுகிறார் நல்ல சகுனம் பார்த்துக்கொண்டு! இரயில் கிடைக்கவா போகிறது! அதிலும் அவர் டிக்கட் வாங்கி எடுத்துச்செல்லும் பணம், செல்லுபடியாகாது!!

திராவிட நாட்டுப் பிரிவினையை இன்னமும் அவர் மௌனத்தால் மாய்க்கலாம் என்ற கள்ளக்கருத்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் வழங்குவதன் மூலம் திராவிடஸ்தான் கிளர்ச்சியைக் கருவித் தவிர்க்கலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் இந்த விஷயத்திலும் அவருக்கு இன்று தோன்றா விட்டாலும், அறிவு சற்று காலதாமதமாகியாகிலும் தோன்றும்.

அவர் கேளாக்காதர், சுலபத்திலே அவர் செவிக்கு விஷயம் புகுவதில்லை! கருப்புக் கண்ணாடியார், பார்வையில் பொருள்கள் சரியாகப்படுவதில்லை. ஆனால், இப்போது பாகிஸ்தான் சம்பந்தமாக அவருக்குப் பக்குவமான அறிவு தோன்றியிருப்பது போல், சற்று காலதாமதமாகி, திராவிடநாடு தனிநாடாக வேண்டியதன் அவசியமும் அவருக்குப் புலப்பட்டே தீரும். அந்த அறிவு பிறக்காமுன்னம், செல்லாக்காசு எடுத்துக்கொண்டு இரயிலுக்குச் செல்லும் சிதைந்த சிந்தனைக்காரரின் நிலைமைதான் அவருக்கு இருக்கமுடியும்.

தான் சொன்னதைத் தானே மறுக்கவும், தனது கொள்கையைத் தானே கொளுத்தவும், தனது கட்சியைத்தானே கண்டிக்கவும், தனது சீடர்களிடமிருந்துதானே தொல்லை பெறவுமான, இத்தகைய நிலை அவர் பெற்றுவருவதற்குக் காரணம், அவர், சரியான காலத்திலே கருத்தைக் கூராக்கிக்கொள்ளாத காரணத்தால்தான். அவருடைய ‘இனம்’ அவரைக் காப்பாற்றியிரா விட்டால், அவர் மூலைக்குச் சென்று நெடுங்காலமாகி இருக்கும்.

இப்போதும் கேட்கிறோம், பாகிஸ்தானை ஒப்புக்கொண்டு திராவிடநாட்டுப் பிரிவினையைப் பற்றி மௌனம் சாதிப்பது, அறிவாகுமா? ஆச்சாரியார் என்ன எண்ணுகிறார்? பாகிஸ்தான் ஆதரிப்புக்காக இனி அவர் திரட்டித் தீரவேண்டிய காரணங்கள், சக்திகள், பாகிஸ்தானின் தோழமைக் கொள்கையாகிய திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் பக்கபலமாகாமலா போகும்! ஏன் இதனை முன்கூட்டியே உணர்ந்து, இன்றே அவர் திராவிட நாட்டுப் பிரிவினையை ஒப்புக்கொண்டு கண்ணியமாகக் காலங் கழிக்கக் கூடாது என்று கேட்கிறோம். பாகிஸ்தான் கொடுத்துவிட அட்டி
யில்லை என்றபிறகு, திராவிட நாட்டை மறுக்க, எந்தமானமுள்ள, அறிவுள்ள, நெஞ்சில் ஈரமுள்ளவன் முன்வர முடியும்!

பாகிஸ்தான், இந்தியாவில் மூன்றிலோர் பாகம், வடமேற்கு எல்லைப்புறம், பஞ்சாப், சிந்து, வங்காளம் அசாம் பகுதிகள் கொண்ட வட்டாரம். இன்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்கிறபடி, இந்த மூன்றிலோர் பாகம், பிறைபறக்கும் பிரதேசமாகி, மூன்றிலிரண்டு பாகம் இந்து ஆட்சியில் இருக்கும்! இது அவரது நினைப்பு! மூன்றிலொன்று போனாலும், மூன்றிலிரண்டு பாகமாவது இந்து ஆட்சியில் இருக்கட்டும் என்று தந்திரமாகத் திட்டமிடுகிறார்.

இது ராஜதந்திரம் என்று அவர் கருதலாம். இது அறிவின் கூர்மை என்று அவரது அடியார் கூட்டம் கூறலாம்.

நாம் கூறுகிறோம், இதைப்போன்ற எதிர்காலத்தை முன்கூட்டி உணரமுடியாத போக்கு வேறு இருக்கமுடியாது. இந்தியாவில் மூன்றிலோர் பாகம் முஸ்லீம் ஆட்சியிலும், மூன்றிலிரண்டு பாகம் இந்து ஆட்சியிலும் இருக்குமானால், இந்திய கண்டத்தில் சிறு பாகம் முஸ்லீமிடமும், பெரும்பாகம் இந்துவிடமும் இருக்குமானால், சர்வதேச விவகாரங்களிலும், கண்டத்துக்குள்ளாகவே தோன்றக் கூடிய விவகாரங்களிலும், பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய மதிப்பைவிட, செல்வாக்கைவிட இந்துஸ்தானுக்கே அதிகம் ஏற்படும்! இதனை முஸ்லீம் ஆட்சியினர் விரும்பமாட்டார்கள்!! விரும்புவது ராஜதந்திரமுமாகாது, ஏனெனில், இந்துஸ்தானம் ஒரே வட்டாரமாக இருந்தால் அங்கு ஆரிய ஆட்சிதான் இருக்கும்! ஆட்சி இந்திய கண்டத்தில் சக்திப்போட்டியான அமைப்புடன் இராது. இதற்காகவேண்டி பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா, அரபு, துருக்கி ஆகிய வட்டாரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, ஆசிய கண்டத்து இஸ்லாமிய கூட்டாட்சி அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாகிவிடும். அதன் பலன்கள் என்னவென்று எண்ணினாலும் ஆரியர் அஞ்சி அஞ்சிச் சாவார்!!

முஸ்லீம்கள் அங்ஙனம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் பிறக்குமா என்று கேட்டால், பாகிஸ்தான் இந்துஸ்தான் என்ற இரண்டே வட்டாரம் இந்தியாவில் அமைந்தால், நிச்சயம் அந்த நிலைமை உண்டாகியே தீரும், ஆரிய ஆட்சி வீரத்தை நம்பாது சூட்சியில் நம்பிக்கை கொள்ளும்.
மெஜாரடி ஸ்தானங்களை குறுகிய புத்தியுடைய லீகர்களுக்குக் கொடுப்பதைவிட பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டிலே இருப்பதே மேல்.

லீகர்களுக்குத் தேசபக்தி கிடையாது.

இந்தியாவைத் தாய் நாடென்று அவர்கள் சொல்வதில்லை.

இவை மே 15-ல் தினமணி எழுதியவை! இத்தகைய நினைப்புதான் ஆரிய ஆட்சியில் இருக்கும். எனவே பாகிஸ்தான் மட்டும் ஏற்பட்டு, இந்தியாவில் பெரும் பகுதி இந்து ஆட்சியில் இருந்தால், விரைவில் நாட்டிலே ரணகளம் ஏற்படும். ஆனால் மூன்று வட்டாரமாக, பாகிஸ்தான், ஆரியஸ்தான், திராவிடஸ்தான் என்று பிரிந்தால், சக்திகளின் சமத்துவம் ஏற்படும், சமர் எழக் காரணமேற்பட பாகிஸ்தான் ஏற்பட்டு, இந்தியாவின் மற்றப்பகுதி ஆரிய ஆட்சியில் இருந்தால், அங்குள்ள முஸ்லீம்கள் நிம்மதியாக வாழமுடியாது! அவர்கள் கொடுமைப்படுத்தப் படுவார்கள். ஏனெனில், பாகிஸ்தானைவிட இந்துஸ்தான் பெரிது என்ற மமதையும் இந்துமதத் திமிரும் ஆரிய ஆட்சியாளரிடம் இருக்கும். திராவிட நாடு தனிநாடானால் அங்கு முஸ்லீம்கள் சரிசமமாக வாழமுடியும்! ஏனெனில் அவர்கள் திராவிட இனத் தோழர்கள். இதனை ஜனாப் ஜின்னா மறக்கவில்லை! எனவே பாகிஸ்தான் பண்புடன் விளங்க, திராவிடஸ்தான் ஏற்பட்டே தீரவேண்டும். இதனை ஜனாப் ஜின்னா அறியாமலில்லை! ஆச்சாரியார் இதை இன்றே உணருதல் நன்று!!

பாகிஸ்தான் பிறந்துவிட்டால், ஆரியவேட்டைக்காரர்களுக்கு அங்கு இடமிருக்காது. ஆகவே வடநாட்டு முதலாளிகளின் படை திராவிடநாட்டில் பெருவாரியாகப்புகுந்து, வியாபாரத்துறையில் மேலும் ஆதிக்கம் செலுத்தும். மார்க்கட் சுருங்கிவிட்டால், திராவிடநாட்டைப் பூராவும் பண்ணையாக்கி, வடநாட்டார் வியாபார மிராசுதாரர்களாகத்தானே வாழப்பிரியப்படுவார்கள். அதனைச் சகிக்கவோ, தாங்கவோ திராவிடரால் முடியாது. எனவே பாகிஸ்தான் பிரிந்து திராவிடஸ்தான் ஏற்படாது போனால், திராவிடர் தத்தளிக்க வேண்டும். எனவே அவர்கள் திராவிடநாடு பெற, உயிரைப் பணயமாகவைத்து உக்கிர விளையாட்டு நடத்தியே தீருவர்.

இவைகளை முன்கூட்டியே ஆச்சாரியார் உணருவது நல்லது. “பதவியில் அமரேன் நான் அவ்வளவு முட்டாளுமன்று, கெட்டவனுமன்று” என்று கோகலே மண்டபக்கூட்டத்தில் ஆச்சாரியார் கூறியுள்ளார்.

பதவியில் அவர் அமரட்டும், அமராமற் போகட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு இணங்கி திராவிட நாட்டுக்கு மறுப்பதென்றால், “அவர் அவ்வளவு அறிவாளியுமன்று, நல்ல வருமன்று” என்று திராவிடநாடு தீர்ப்பளிக்கும் என்பது நிச்சயம்.

17.5.1942