அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவருக்கு இவர் எழுதினால்!

திரு. வி. கலியாணசுந்தரனாருக்கு, சர். பி.டி. இராசன் அவர்கள்

முதலியார்வாள்!
நமஸ்காரம், நாட்டரசன் கோட்டையிலே நீர்பேசினதாக வெளிவந்த ஒரு பிரசங்கத்தைப் படித்ததும், இந்தக் கடிதத்தை எழுதவேண்டுமென்று என் மனதிலேபட்டது. நான் கலைகிலை தெரிந்தவனல்லன். மெருகுமுலாம் தெரியாது. மனதிலே பட்டதை அப்படியே சொல்லுபவன். அந்தப் பிரசங்கத்தைப் படித்தபோது, எனக்கு உண்மையிலேயே மகா கோபந்தான். இவ்வளவு தமிழ்ப் பற்றும், சைவப்பாசமும் கொண்டவர், ஈரோடு நாயக்கருக்கு ஒருபடி மேலே போய்விட்டாரே என்று வருத்தந்தான். ஈரோடுக்காரர், தமது அபிப்பிராயத்தை ஒளிக்காது குறைக்காது பல வருஷங்களாகக் கூறுகிறார். அவர் இஷ்டம், அது எனக்குக் கஷ்டமில்லை. ஆனால், சுயமரியாதைக்காரர் எனக்குப் பிடிக்காது என்று கூறும் சைவர்கள் சார்பாக நீர் இருக்கிறீர் என்று சைவ உலகம் பூரித்திருக்கிறது. அத்தகைய அன்பராகிய உள்ளங்கள், முருகன் என்றால், பழனியிலே உள்ள சாமி அன்று, முருகன் என்றால் அழகு என்று பெயர், தனது அழகை ஓம்பினர், போற்றினர் என்று பேசினீரே, இது தருமமா! சுயமரியாதைக்காரர்கள் கண்டிக்கிறார்கள் என்பதற்காகச் சாட்சாத் சுப்பிரமணியப் பெருமானையா தாங்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது. முருகன் என்றால் பழனிமலையப்பனல்லன் என்று சொன்னீரே, பதறுகிறதே என் மனம். பாலசுப்பிரமணியருடைய பாதக மலங்கள் சாட்சியாகச் சொல்கிறேன், இதைவிடப் பச்சையாகப், பகிரங்கமாக நாத்திகம் பேசிவிடலாம். முருகன் என்றால் அழகுதான், வேறு அல்ல, என்று சாதிக்கிறீர். முதலியார்வாள்! அழகு எதிலே இல்லை. அன்று அலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், அதைக்குடைந்து வெளியே வரும் நிலவு, வானவில், கடல், கன்னி, கற்கோட்டை, சிலை எதிலே இல்லை. ஏன் அழகு இங்கெல்லாம் இருக்க, முருகன் என்ற தனிச்சிருஷ்டியை மட்டும் மக்கள் பூஜிக்கின்றனர். இதை என்னால் கேட்டுச் சகிக்கமுடியவில்லையே. முருகன் அழகு, என்று முடிக்கிறிரே, கச்சிக் குமரகோட்டம், திருச்செந்தூர் வேலாயுதர், சிக்கல் சிங்காரவேலர், பழனி மலையப்பன், திருத்தணித் தண்டபாணி, என்று திருத்தலங்களும் ஆங்கு திருவிழாக்களும், ஏன் அழகை ஓம்ப, இயற்கையை உணருவோம், என்று இருக்கலாமே காவடி எடுப்பதும், கந்தா, முருகா, வள்ளி மணாளா, என்று பூஜிப்பதும், ஏன் வெறும் அழகுதான் முருகன், என்றால், வள்ளி திருமண சத்கதா காலட்சேபங்களும், சூரசம்மாரத் திருவிழாவும், வேலு மயிலும் சேவலுடனே வீதிவலம் வருவதும், தேவையில்லையே. அழகைப் போற்றுவோம், வளர்ப்போம், அதற்கு அந்தக் கோயில்களிலே ஆறுகாலப் பூஜை ஏன், அந்தாதி பாடுவானேன். உலாவும் உற்சவமும் ஏன்? ஊர் மக்கள் பணத்தைச் செலவிடுவது ஏன்? மலரிலே அழகு கண்டால், சூடுவோமே தவிர, அதற்குப் பூசை புரிவோமா - என்றால்லாம், சுயமரியாதைக்காரர் கேட்பார்களே, என்ன பதில் கூறுவீர். சிவனாரின் மைந்தன், வள்ளி மணாளன், விநாயகரின் இளையோன், திருமாலின் முருகன், என்ற திவ்ய புராணங்கள், முருகன் என்றால் அழகுதான் வேறன்று என்ற உமது விபரீதம் உண்மையானால், இருக்கத் தேவையில்லையே. முருகர் தலங்களிலே, அழகுப் போட்டி நடத்துவோமா? அங்கு உள்ள செல்வத்தை அழகு வளர்ச்சிக்குச் செலவிடுவோமா? கூறும். ஏனய்யா, இப்படி முருகனை நிந்திக்கிறீர். வள்ளியம்மைக்கு வாட்ட மூட்டுகிறீர். மகாபாவம்! முருகன் மகாசக்தி வாய்ந்தவர். இலேசாக எண்ணக்கூடாது. இப்படி எல்லாம் பேசுவதை விட, வெளிப்படை யாக சுயமரியாதைக்காரராகலாம், எனக்கு அது சம்மதம். ஆகவே நாட்டரசன் கோட்டையிலே பேசியபடி மறுபடியும் பேசி, நாத்திகத்துக்கு அஞ்சி, தத்தவார்த்தக் காட்டிலே நுழையும் ஆத்திகர் என்ற பெயரெடுக்காதீர். முருகன் மீது பாரத்தைப் போட்டு விட்டேன். எல்லாம் அவன் செயல்.

தங்களிடம் பெருமதிப்புக்கொண்ட
பி.டி. இராசன்

(திராவிடநாடு - 21.03.1943)