அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாதுகா பட்டாபிஷேகம் பலிக்கவில்லை!
- பரதன்

பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறாரா? இல்லையா? என் கட்டளையை மீறவும் உனக்குத் துணிவு பிறந்ததா?

பரதனுக்கே இந்த நாடு சொந்தம், முடி அவனுடையது, அதை நான் இராமன் பறிக்க உடந்தையாக இரேன்.

துஷ்டன்! போ, வெளியே.உன் மந்திரி வேலை மாண்டது. நட, என் நாட்டை விட்டு.
மகாப் பிரபோ! நாடு இது ஒன்று தானா உலகில். மற்றவை காடா? மந்திரி வேலை ஒன்றுதானா மாநிலத்தில். வேறும் உண்டு, நீர் வாழும், நான் வெளியே செல்லுகின்றேன்.
* * *

இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்று தசரதன் சுமந்திரனிடம் பேசியபோது, கேகய நாட்டு மன்னனுக்கு தசரதன் முன்னம், தந்திருந்த வாக்கின்படி, பரதனுக்கே முடிதர வேண்டும் என்ற முறையை மந்திரி சுமந்திரன் மறக்காமல் அதன்படியே நீதியாகவே நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்ற நினைப்பு கொண்டிருந்திருப் பாரானால், நான் மேலே குறிப்பிட்டிருக்கும் உரையாடலும், அரண்மனைக் குழப்பமும் நடந்திருக்கும். மந்திரி, மன்னனின் மொழியை அவர் விழியாலேயே கண்டு அவ்வழி நடப்பவர். எனவே சதி வெற்றி பெற்றது.

மக்களாவது, மன்னனும், மந்திரியும் கூடி முடி யாருக்குச் சொந்தமோ அவருக்கே செல்ல வேண்டும் என்பதை வற்புறுத்தினாரா? இல்லை! அயோத்தி மக்கள், சிரித்துப் பேசிய இராமனிடம் சொக்கிக் கிடந்தனர். மேலும், மன்னன், புரோகிதன் மந்திரி தலை அசைத்தால், மக்களின் உடலும் உள்ளமும் அசையும் காலம் அது- பக்தி காரணமாக மட்டுமல்ல, பயத்தினால்! எனவே, மக்களும் சரி என்றனர். தோரணம் கட்டினர்- தெருக் கூட்டினர், திருவிளக்கேற்றினர்- திருவிழாக் கொண்டாடினர்- தெந்தினா பாடினார். மக்களின் மனம் மன்னனுக்குத் தெரியும், இயல்பும் தெரியும். அதனைத் தசரதர் இராமனிடம் எடுத்துரைப்பதை வால்மீகி தெளி வாகக் கூறுகிறார். மக்கள் மனம் ஒரு நிலையில் உள்ளதல்ல என்று. இல்லையேல் அவ்வளவு இலகுவில் இசைந்திருக்க மாட்டார்கள். அது தான் ஒழியட்டும். பரதன் காடு சென்று இராமனைக் கெஞ்சி, பாதுகையைப் பெற்று வந்து, பாதுகா பட்டாபிஷேகம் நடத்தினபோதாவது, ``பரத பூபதி! நீயாவது ஆண்டு கொண்டிரு. ஒரு ஜதை செருப்பை ஆளச் செய்கிறீரே செருப் பாளும் அளவு சிறுமையினரா யாங்கள்’’ என்றேனும் மக்கள் கேட்டனரா! இல்லை. பாதுகைக்குப் பல்லக்குத் தூக்கினர். நாம் நாட்டிலே உலவினால் என்ன? நாட்டிலே, நமது பாதுகையன்றோ ஆட்சி செய்கிறது என்று பூரித்திருக்கக் கூடும் இராமர் எப்படி ஒரு நாட்டு மக்கள், பாதுகையை ஆளச் சம்மதித்தனர் என்று நான் சில சமயங்களிலே எண்ணியதுண்டு. மக்கள் உள்ளம் இவ்வளவு மடைமையை வரவேற்குமா என்று ஐயங் கொண்டதுண்டு. பாதுகா பட்டாபி ஷேகம், எனக்கு அயோத்தி நாட்டு மக்களின் பாமரத்தன்மைக்கும், பயங்கொள்ளித் தன்மைக் கும், பித்துக் கொள்ளிப் போக்குக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவே தென்பட்டது. ஆரிய முனியாம் வால்மீகி, ஆரிய ஆட்சியிலே கிடந்த அநாரியர், எவ்வளவு கபோதிகள் என்பதை இதன் மூலம் விளக்கினார் என்றே நான் எண்ணுகிறேன். ஆளுநருக்குப் பதிலாக அவன் கால்ஜோடு! இது ஆரியத்திடம் அடிமைப் பட்டவருக்கன்றி. வேறு எவருக்கும் சம்மதமாக இருந்திக்க முடியாது. ஆரியத்திடம் அடிமைப் பட்டால் தான் ``அதற்காக இது?’’ என்பது நம்பிக்கையூட்டும். முள்ளம் பன்றிக்காக பலாக்காய்! பிதுர்க்கள் பிரீதிக்காக பார்ப்பன ருக்குத் தானம்! கங்கா ஜலத்துக்காக கிணற்று நீர்! என்று கூறுவர், நம்புவர். அதைப் போலத்தான் இராமனுக்குப் பதில் அவனது ஜோடுகள்!
* * *

இராமாயணக் காலத்திலே நடந்ததை ஏனப்பா, இப்போது கூறுகிறாய், திரேதாயுகத்துத் திருவிளையாடலைத் கலியுகத்திலே பேசுகி றாயே, நீ என்ன என்.எஸ். கிருஷ்ணனான, திரேதாயுகத்திலுமிருந்து, கலியுகத்திலும் காட்சி யளிக்க? அப்படி உனக்கென்ன என்.எஸ்.கிருஷ்ணன் போல் `சாப விமோசனம்' பெற வேண்டிய அவசியத்தை உண்டாக்கிய `சல்லா' உண்டா. அந்தவிதம் பேச நடக்க என்று என்னைக் கேட்பீர்கள். அன்று நடந்த பாதுகா பட்டாபிஷேகம் போல் இவ்வையகத்தில் சித்ரபானு வருஷம் ஐப்பசி மாதத்தில் இருபத்தி நாலாம் நாள் 14.11.1942ம் தேதி ஆகிய நன்னாளில் முகூர்த்த விசேஷங்கள் எனக்குத் தெரியாது. ஏதாவது முகூர்த்த விசேஷங்கள், முக்தி தரும் நகரத்தில், நகரமாம் காஞ்சி தொண்டை நாட்டு தலைநகரமாகவும் வைணவ, சைவ பக்தர்கள் தவமாகவும் உள்ள காஞ்சீபுரத்தில் நகர சபை மண்டபத்திலே பாதுகா பட்டாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது.

கலி யுகத்தில் பட்டாபிஷேகமா? காஞ்சியிலா என்று ஆர்வமாக கேட்க ஆவலாகத்தான் இருக்கிறது. காஞ்சீபுரம் முனிசிபாலிடியின் கவுன்சிலர் ஓர் ஸமார்த பிராமணர். டாக்டர் சீனுவாச அய்யர் என்பதையும், அவர் புதுக்கோட்டைவாசியானா லும், எப்படியோ தலைவராகி விட சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்பதையும், அன்னார் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நேயர்கள் அறிவர். உதவி சேர்மனும், சிறையில் இருக்கும் தனது தலைவர் பதவியை டாக்டர். ராமய்யர் என்கின்ற இன்னொரு ஸ்மார்த்த பிராமணக் கவுன்சிலருக்கு டாக்டர். சீனிவாச அய்யர் அளித்திருந்தார். அந்தத் தோழரின் சிறை வாசத்தை கண்டு திகிலடைந்திருந்த ரகுராமர் தனது கவுன்சிலர் பதவியை, ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தாலும், பதவி மோகத்தால் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டு, `டெலிகேட்' சேர்மனாக வேலை பார்க்கும் பாக்யத்தைப் பெற்றார்.

சென்ற 11-ம் தேதி நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் தமது கட்சி அங்கத்தினராலேயே விகற்பமின்றி டாக்டர் ராமர் தலைவராக ஒப்புக் கொண்டது ரகுராமன் சேர்மன் ஸ்தானத்தில் அமர்ந்து விட்டு தனது சுயரூபத்தை காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். பாரதி கீதம் ஒன்றைப் பாடி ஆரியர் வாழ்வை ஆதரிப்பவனே என்று முடித்ததுதான் தாமதம், பாடக் கூடாது எனும் எதிர்ப்பு பலமாக ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் அங்கத்தினர்கள், கவுன்சில் மண்டபத்திலிருந்து ஒவ்வொருவராக நழுவி விடவே, ரகுராமர்தான், தனியே மண்டபத்தில் தனித்து நின்று தவிர்க்கக் கண்டார். போதிய அங்கத்தினர்கள் இல்லாத காரணத்தினாலே கூட்டம் ஒத்திதி வைக்கப்பட்டது என்று புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு,

சூடு, சொரணை இல்லாத கூட்டமென்று தமிழரைக் - குறிப்பாகக் காங்கிரசுத் தமிழரைக் கருதுவதினால் தானே இந்தக் காரியம் நடந்தது! சிறையிலே போனவர் ``சிவனே’’ என்றோ, காந்தியோ என்றோ கிடப்பதை விட்டு, எதற்காக இன்னொரு ஐயருக்கு அந்த அதிகாரத்தைத் தர வேண்டும்’’ என்று கேட்கிறேன். இந்த அக்ரமத்தைக் கேட்பாரில்லையா! ஆரியத்தை அடக்குவாரில்லையா?

வந்த ``ஐயர், சும்மா இருந்தாரா? ``ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே’’ என்று பாடினார். ஏன் பாட மாட்டார்? ஆரியர் வாழ்வு ஆதரிக்கத் தானே பாடுகிறார்கள். ஒரு ஆரியர் சிறை புகுந்தார். அவர் அனுபவித்த அதிகாரம் மற்ற்றோர் ஆரியருக்கு! தமிழ் மண்ணிலே மானம் மங்கி விட்டது.
* * *

பாதுகா பட்டாபிஷேகம் போல, டாக்டர் சீனுவாச ஐயருக்குப் பதில், அவருடைய அனுமதி பெற்ற டாக்டர் ரகுராம் ஐயர் ஆட்சி செய்ய முன்வந்து, ஆரியம் வாழ்ந்திடக் கீதம் பாடினாரே தவிர, பட்டாபிஷேகம் நிலைக்க வில்லை. அயோத்தி மனப்பான்மை மாறிவிட்டது. அடுத்த கட்டத்தில் 14-11-1942ல் மீண்டும் கூட்டம் மாலை 6 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும், அரை மணிக்கு முன்னதாகவே ரகுராமர், சேர்மன் ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்கக் கண்டோம். டெலிகேட் சேர்மனார் கவுன்சிலில் தலைமை வகிக்க உரிமை கிடையாது. கவுன்சில் ஒரு தலைவரை அப்போதைக்கப்போது தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டுமென்று அரசாங்க அறிக்கை இருந்து வருவது ரகுராமருக்கு உண்மையிலேயே தெரியாதோ, அன்றி. தெரிந் திருந்தும் மற்றவர்களுக்குத் தெரியாது என்கிற மனப்பான்மை கொண்டிருந்தாரோ அறியோம். அன்று தலைவராக இருக்க ஒழுங்கற்ற முறைகள் இரண்டொன்றைக் கையாண்டும் பலிக்கவில்லை. நமது தோழர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் திரு. எம். கண்ணப்ப முதலியாரைப் பிரேரேபிக்க அபிப் பிராய பேதமின்றி ஏக மனதாக ஒப்புக் கொள்ளப் பட்டு சேர்மன் ஸ்தானத்தில் கண்ணப்ப முதலியார் அமர்ந்தார்.

ருசிகரமான சில விஷயங்களையும் நேயர்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம். அன்று நடந்த கூட்டத்தில் நமது தோழர் அப்பாயி செட்டியாரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, யுத்தத்தில் சேவை செய்யும் ராணுவங்களின் உதவிக்காக ரூ. 1000 சாங்ஷன் செய்யப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் சடகோபாச்சாரியார், வாசக சாலையின் ஆதரவில் நடைபெறும் ஓட்டலுக்கு, இலவச லைசென்சு கொடுக்கக் கேட்டுக் கொண்டது நிராகரிக்கப்பட்டது. தும்பவனம் வாசக சாலையில் இருந்த ரேடியோவைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேற்படி வாசக சாலைக்குக் கவர்ன்மெண்டு சகாய நிதி கேட்பதை நிறுத்தி வைக்கப்பட்டது. இவைகளனைத்தையும் விடத் தலைவர் தோழர் கண்ணப்ப முதலியார் அவர்கள் ஆரம்ப முதல் கடைசி வரை கூட்டத்தைத் திறமையாகவும், தைரியமாகவும் நடத்தியதையும், இரண்டு, மூன்று சமயங்களில் நமது தோழர்கள் பேசிக்கொண்டிருந்ததில் குறுக்கிட்டு, ரகுராமர் பேசியதை தலைவர் கண்ணியமாகத் தடுத்ததையும் நாம் பாராட்டுகிறோம்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் திராவிடத் தோழர்கள் இனியாவது தங்கள் உறக்கத்திலி ருந்து விழிக்கடும். டாக்டர் சீனுவாசனும், அவர் சிறையில் இருந்தாலும் அவன் தம்பி அங்குதன் என்பது போல் இன்னொரு ஸ்மார்த்தப் பார்ப்பானுமே தலைவர் பதவியை அடைய உரிமையுள்ளவர்கள் என்கிற அழுகிய மனப் பான்மை ஒழிய, அவர்கள் உள்ளத்தில் சுய மதிப்பு ஏற்பட வேண்டாமா என்பதே நமது கேள்வியாக இருக்கிறது.

கூடிய சீக்கிரம் சேர்மன் ஸ்தானமும், தேர்தலுக்கு வரக்கூடும். அதுசமயம் திராவிடத் தோழர்கள் எவ்விதம் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் சூடு கண்ட வேதாளம் மீண்டும் தலை நீட்டுமா?

``உங்களுக்குத் தெரியுமே, விக்கிரமாதித் தனின் சிம்மாசனத்தின் மீது போஜராஜா ஏறி உட்காரச் செல்லும்போது, பதுமைகள் கதை சொல்லி அவனை நிறுத்தின என்ற ருசிகரமான கதை! அதுபோல, இனி, ``தமிழர் தரணியிலே ஆரியர் ஆட்சி செய்ய முன் வந்தால், ``அகோ வாரும். பிள்ளாய்! ஆரியனே நில்லாய்! தமிழ் நாட்டிலே ஆரியன் நீ அரசு செலுத்தலாமா? பெரும்பாலானவர்களும், நாட்டுக்குச் சொந்தக் காரருமான தமிழர்களின் வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் இடத்திலே உழைக்காது வாழும் ஊர் உழைப்பை உறிஞ்சிகள், ஆள முனைந்தால் இனித் தமிழகம் பொறுத்துக் கொண்டிராது’’ என்று இடித்துரைத்துத் தமிழரைத் தரணியாளச் செய்ய வேண்டும். பாதுகா பட்டாபிஷேகம் பலிக்காது போனதே ஆரியருக்கு ஓர் பாடம்! ஆனால் இனித் தமிழரே ஆட்சி செய்யும் வழி வகுத்தால் தான் பாடம் பூர்த்தியாகும். செய்வரா?

(திராவிட நாடு - 29-11-1942)