அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எனது ஆசிரியரை இழந்தேன்!
தமிழரின் பூந்தோட்டத்தில், மணம் வீசும் மலர்களைத் திடீர் திடீரென, காலமெனுங் கள்ளன், பறித்தழிக்கிறான். அந்தோ, மனதை மலரச் செய்யும் மாண்புகள் படைத்த நமது நண்பர்களை நாம் இழக்கும் கொடுமையில் அடிக்கடி சிக்கி அவதியுறுகிறோம். தமிழரின் நறுமணச் சோலை வேலியற்றதோ! ஏதோ, காலக் கள்ளனின் கன்னெஞ்சத்தின் காரணம்! பெறற் கரியவர்களைப் பெற்று, இனி நமக்கென்ன குறை என்று தமிழன் இறுமாந்திருக்கும் வேளையில், ஆரிய நச்சரவம் புற்றில் பதுங்கவில்லையேல், தலை போகும் என்று பயப்படும் நேரத்தில், எப்படியோ, இடர் நம்மைத் தாக்கி, நமது இன்ப எண்ணங்களை அழித்தொழிக்கிறது. இதனை என்னென்போம்!

திருச்சியில் தோழர் சுந்தர நாடாரைச் சூறையாடிச் சென்ற மரணம், தனது பசி அடங்கப் பெறாமல் சின்னாட்களுக்கு முன்பு, சிரித்த முகத்தழகன், சீர்மிகு குணக்குன்று, பொறுமையின் இருப்பிடம், பொன்னான பண்புகளின் தங்கு மிடம், மாணவர்களின் மனதை மயக்கி, அன்பால் பிணைக்கும் அருங்குண அண்ணல், தோழர் திருவேங்கிடசாமியையும் திருடிக் கொண்டு போய் விட்டது. திடுக்கிட்டேன் செய்தி கேட்டு. நீர் சுரக்கும் கண்களுடன் இங்குமங்கும் நோக்கினேன், ஏதேதோ எண்ணினேன், என் செய்வேன், இன்னமும், குழம்பிய சிந்தையில் தெளிவு ஏற்படவில்லை, கசங்கிய கண்கள் பழகிய நிலை பெறவில்லை, துடித்த நெஞ்சு துடித்தபடி இருக்கிறது.

தோழர் திருவேங்கிடசாமி அவர்கள், எனக்கு இன்டர்மீடியேட் வகுப்பில் ஆங்கில ஆசிரியர்! ஆனால் அன்று முதல், நேற்று வரை அவர் எனக்கு, வாழ்க்கையின் பல துறைகளுக்கும் ஆசிரியராக இருந்து வந்தார். நான் அவரிடம் வகுப்பிலே கற்ற பாடங்களை மறந்து விட்டேன், ஆனால், அவருடனிருந்த நான், கல்லூரிக்கு வெளியே இருந்தும், கல்லூரியை விட்டு நான் நீங்கிய பிறகும் பெற்ற பாடங்களை மறக்க வில்லை- மறக்கவும் மாட்டேன். பொல்லாங்கு எண்ணுவோரைக் காணும் போதும் புன்னகை செய்- கடமையைச் செய்யக் கலங்காதே- காலத்தை அறிந்து உதவி செய் - தமிழரிடம் பற்றுக் கொள்- அவர்களுக்காகப் பாடுபடுவதைப் பெரிய தோர் பண்பு எனக் கொள்- பார்ப் பனரிடையே உள்ள ஒற்றுமையைப் பார், அதுபோல் தமிழரிடை உண்டாக்க வேலை செய்- என்பன போன்ற அரும் பெரும் பாடங்களை எனக் களித்த ஆசிரிய, நண்பரை, தோழரை, இழந்தேன். தமிழர் ஒரு சிறந்த ஊழியரை இழந்தனர். சென்னை ஓர் சிங்கார புருடரை இழந்தது. பச்சையப்பன் கல்லூரி தனது பரிவுள்ள பரிபாலகரைப் பறிகொடுத்து விட்டது. தோழர் திருவேங்கிடசாமி மாரடைப்பினால் திடீரென மரணமடைந்தார். தமிழரின் திருவிளக்கொன்று அணைந்து விட்டது. என் செய்வது.

அவர், பச்சையப்பன் கல்லூரித் தலைவ ராக நியமிக்கப்பட்டபோது நான் கொண்ட மகிழ்ச்சி சொல்லுந்தரத்த தன்று. அவரது ஆட்சியின் கீழ் எனது கல்லூரி தமிழருக்கு அறிவூட்டும் ஊற்றாக விளங்கும என்றெண்ணிப் பூரித்தேன். அவருடைய தமிழ்ப் பற்றும், பகுத்தறிவுத் திறனும் கண்டு களித்த நான், அவரது புகழை மாற்றாரும் உரைக்கக் கேட்ட காதுகளில், அவரது மரணச் செய்தியைக் கேட்கும் துர்பாக்கியம் பெறுவேன் என்று எண்ணவில்லை. கண்ணால் கனியைக் காணும் நேரத்திலேயே, கல்லடிபட்டுக் கனி கீழே வீழ்ந்தது போல், அவர் மறைந்தார்.

சென்னைக்கு நீர் ஊற்றாக இருக்கும் மாதவரம் ஏரிக்கரை மீது, பெரியார் தடியை ஊன்றிக்கொண்டு நடக்க, அவர் பக்கத்தில், தோழர் திருவேங்கிடசாமி அவர்கள் நடந்து கொண்டு தமிழருக்குக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் பற்றி விளக்கிக் கூறிக் கொண்டு வர, அக்காட்சியைக் கண்டும், பேச்சைக் கேட்டும் மகிழ்ந்து நான் நடந்து சென்றதும்பின்னர் அவரது விடுதியில், பெரியாருக்குவிருந்தளிக்கப்பட்டதும், அதுபோது நானும் அவருடனிருந்து உண்டதும், பின்னர், கல்லூரி மாணவர்களின் ராணுவப் பயிற்சிப் படையின் விழாவுக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றதும், இப்போது தான் நடப்பது போல், என் மனக் கண் முன் தோன்றுகிறது. அது நாள் `விடுதலை’யை விட்டு விலகிய மறுநாள் நடந்தது. அதற்கு மறுநாள், எனது ஆசிரியர் என்னைத் தமது இல்லத்திற்கு வரவழைத்து, `விடுதலை’யை விட்டு விலகியது ஏன் என்று விசாரத்துடன் கேட்டு, பற்பல புத்திமதிகள் புகன்ற காட்சி,இதோ என் எதிரே சித்திரம் போல் நிற்கக் காண்கிறேன்.

ஆனால் அவர் மறைந்துவிட்டார். அவரது மறைவால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்றுரைப்பது சம்பிரதாயத்தைக் கடந்த பேச்சு.

அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை, வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தை எண்ணி, மிகக் கலங்கு கிறேன். என் நிலை இதுவெனில், அவரது குடும்பத்தினரின் நிலைமையாதாயிருக்கும், நினைக்கவும், நெஞ்சு வேகிறது.

(திராவிட நாடு - 12-4-42)