அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதிரொலி

“வெள்ளையர் ஆதிக்கம் என்னும் “விஷம்” முற்றிலும் அழிக்கப்படும் வரைக்கும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது, நாகரிகம், மனித சுதந்திரம், ஆகியவற்றைக்காப்பது என்று பேசுவதற்கு அவர்களுக்கு (வெள்ளையர்களுக்கு) உரிமை கிடையாது”
- காந்தி.

அதுபோலவே திராவிட நாட்டில் ஆரிய ஆதிக்கம் என்னும் “விஷம்” முற்றிலும் அழிக்கப்படும்வரைக்கும், தமிழகத்தைக் காப்பாற்றுவது, நாகரிகம், மனித சுதந்திரம், மக்களின் நலன்களைக் காப்பது என்று பேசுவதற்கு ஆரிய ஆச்சாரியாருக்கோ, சத்தியமூர்த்திக்கோ அல்லது வடவருக்கோ உரிமை கிடையாது. திராவிடர்களுக்காகத் திராவிடத் தலைவர்கள் பேசட்டும்.
ஃ ஃ ஃ

“முஸ்லீம்கள் அதை விரும்பினாலும், இந்த உலகத்தில் எந்த சக்தியும் அவர்கள் அதை அடை
வதைத் தடுக்க முடியாது என்பதை நான் மீண்டும் கூறுகிறேன். ஏனெனில் மறுப்பதற்கான நிபந்தனை சண்டை போடுவதாகத் தானிருக்கும்.”
- காந்தி.

திராவிடர்கள் சம்பந்தமாகவும் தாங்கள் இம்மாதிரி அனுபவ அறிவுரைகள் சொல்ல அதிக காலமாகாது, திராவிடஸ்தான் முழக்கம் கேளாக்காதரையும்கூட பதைக்கவைத்துத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்யக் கிளப்பிவிட்டது!
ஃ ஃ ஃ

“நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தான் கொடுத்து
விடலாம் என்று வட இந்தியர்கள் சொன்னால் தமிழ் நாட்டவருக்கு எப்படியிருக்கும்?”
- என். அண்ணாமலைப் பிள்ளை

உண்மைத் தமிழன் களிப்படைவான். உரிமையோடு ஊராள்வான். சூத்திரநிலை, அடிமை வாழ்வு விரும்பும் பார்ப்பனப் பாதந்தாங்கிகள் திகைப்படைவர்; தில்லுமுல்லு பேசுவர்!
ஃ ஃ ஃ

“இந்தியாவிலுள்ள மற்றப் பகுதியினருக்குள்ள சுயநிர்ணயாதிகார உரிமை முஸ்லீம்களுக்கும் வேண்டும்.... முஸ்லீம்களை தங்கள் விருப்பத்திற்கு மாறாக நம்முடன் வசிக்கக் கட்டாயப்படுத்துவது பலாத்காரமாகும்!”
- சி. இராஜகோபாலாச்சாரி.

அம்மாதிரி சுயநிர்ணயாதிகாரம் வேண்டுமென்பதே திராவிட மக்களின் கோரிக்கை! திராவிடர்களை விருப்பத்திற்கு மாறாக அடிமையாகவும், இழிந்த குலத்தவனாகவும் “இந்து” என்றதரித்திரப் பெயர் சூட்டி இறுகப்பிணைத்து ஆரியத்தின் காலடியில் வாழச்செய்வது பலாத்காரமல்லாது வேறென்ன?

24.5.1942