அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கனவில் கண்ட கன்னிகை!

“சிற்பிகள் தமது சிந்தனையைச் சித்திரமாக்கியதுபோல் சமைத்த ஓர் சிங்கார நிலையம். நிலா காய்கிறது! வாரிவீசுகிறது ஒளியை! முல்லைச் சிரிப்புடன், முற்றத்திலே ஓர் மங்கை நின்று கொண்டிருக்கிறாள். அவளது ரூபலாவண்யமோ, வர்ணனையைக் கடந்தது. என்னைத்தனது கண்களால் அழைத்தாள். மதனனே! வா! என்று பாடினாளா? இல்லை! ஏன் பாடவேண்டும்! அவளது பார்வை, பல்லாயிரம் பாடல்களின் கருத்தைத் தெரிவித்தன. தென்றல் எனைத்தழுவிற்று. தேன் குடத்தை நாடிநான் நடந்தேன். பூங்கொடியின் புன்னகை எனை இழுத்துச்சென்றது. கிட்டே சென்றேன்! தொட்டேன் கரத்தை! மட்டற்ற மகிழ்ச்சியுடன், அவளது கண்ணாடிக் கன்னத்தில், முத்தமிடத் துடித்தேன். நெஞ்சு நெகிழ்ந்தது! ஆனால்...”

“பிறகு என்ன நடந்தது?”

“திடீரென்று நான் விழித்துக் கொண்டேன்.”

“விழித்துக்கொண்டாயா! அப்படியானால் நீ இதுவரை கூறிவந்தது, கனவில் நடந்த விஷயமா?”

“ஏன் கேட்கிறாய் அந்த வெட்கக்கேட்டை. கனவில் கண்டேன் அந்தக் கண்கவரும் கன்னிகையை. விழித்தேன் திடீரென்று. மாளிகை ஏது! மங்கை ஏது! அவளது சதங்கை ஒலி ஏது! எல்லாம் போயின. ஏக்கமே நின்றது.”

“அட துர்ப்பாக்கியமே; விழித்ததும் சர்வமும் சூன்யமாயிற்று போலும்.”

“அதுபோன்றிருந்தாலும் கவலை அதிகமிராதே. கனவில் நான் கண்டதோ ஓர் கட்டழகியை. ஆனால் விழித்துக்கொண்டு பார்க்கிறேன், யாரைக் கண்டேன், என்று எண்ணுகிறாய்? விளக்குமாறும் கையுமாக வேலைக்காரி வீராயி நிற்கக்கண்டேன். வீடு கூட்ட வேண்டும், வெளியே போய்ப்படுங்கள்” என்று உத்திவிட்டது, அந்த உருவம். கனவில் கண்டதற்கும் கண்ணெதிரே நிற்பதற்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டு கலங்கினேன்! என்று கனவில் தான் கண்ட கன்னிகையைப் பற்றி ஒரு வாலிபன் தனது நண்பனிடம் கூறும் கதைபோலாயிற்று, காங்கிரசாரின் நிலைமையும்.

கனவில் ஓர் கடைக் கண்ணழகியைக் கண்டதுபோல், இந்தியாவுக்கு வந்த சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ்மீது புகழ்பாடி, பூரித்து, கேட்டதைத்தருவார் என்று நம்பி மகிழ்ந்தனர், ஆனால், விழித்துக் கொண்டவன் விம்மியதுபோல், இன்று சர். கிரிப்ஸ் தந்த திட்டத்தைக் கண்டு, கைப்பிசைந்து நிற்கின்றனர். சர். கிரிப்சை நம்பியது, கனவில் கண்ட காட்சிபோலாயிற்று அவர்களுக்கு.

கிரிப்ஸ் எமது நண்பர். காந்தியாரின் சீடர். ஜவஹரின் தோழர். அவரும் ஒரு மகாத்மா! அவர் இனி நாட்டுக்கு நாம் கோருவதைத் தருவார், என்று காங்கிரசார் வாயாறப்புகழ்ந்தனர், வந்துவிட்டது யோகம் என்றனர். கிரிப்சின் உடை, அவரது நடை, அவரது பேச்சு, மூச்சு, புன்சிரிப்பு, புதுப்பார்வை, முதலியன பற்றி வர்ணித்தனர். அவர், கதர் சட்டை அணிந்திருந்தார், காந்தியாருக்குக் கதவண்டை வந்திருந்து கைலாகு கொடுத்தார், ஜவஹருடன் விருந்துண்டார், பிர்லா மாளிகைக்கு வந்து போனார். அவர் காங்கிரசுக்குத்தான் கடாட்சிப்பார், என்றுரைத்தனர், பூரித்தனர்.

இந்த எண்ணம் வீண்கனவாயிற்று! முன்பு, காந்தியாஸ்ரமத்தில் வந்து தங்கிய கிரிப்ஸ், இம்முறை வைசிராய் மாளிகைக்குச் சென்றார். முன்பு காங்கிரஸ்காரருடன் மட்டுமே பழகியவர், இம்முறை எல்லாக் கட்சித்தலைவர்களையும் கண்டு பேசினார். அந்தக் கிரிப்ஸ் வேறு, இந்தக் கிரிப்ஸ் வேறு என்பதைக் காங்கிரசார் உணரும்படியாயிற்று.

முஸ்லீம் லீகோ, நந்தம் கட்சித்தலைவர்களோ, சர். கிரிப்ஸ் வந்தபோது, “எந்தன் இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன?” என்று பாடி ஆடிடவில்லை. வருகிறவரிடம் நமது குறையையும் கோரிக்கையையும், முடிபுகளையும் முதுமொழிகளையும் எடுத்துரைத்து நீதிவழங்குமாறு கேட்போம். தந்தால் பெறுவோம். இல்லையேல், போரிடுவோம், என்று மட்டுமே தீர்மானித்தனர். எனவே, சர். கிரிப்சின் வருகைக்குப்பிறகு, காங்கிரசார் .... நாமிருக்கக் காரணமில்லை. நாம் அதிகமாக ஏதும் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் ஏமாளியாக இருக்க நமது கட்சி என்றைக்கும் இசைந்ததில்லை, இசையப்போவதுமில்லை. நமது கட்சி, கானலை நீரெனக்கருதி அலையாது, மயக்குபவரைக்கண்டு மலைக்காது.

காங்கிரசாருக்கோ, திடீர்க்காதல் ஏற்படும், உடனே மனமுறிவு உண்டாகும், காமமேலீடுகள் எழும். உடனே வேதாந்த விசாரம் உண்டாகும், இத்தகைய குணாதிசயங்களைக், காங்கிரசின் கொள்கை மாற்றங்கள், திட்டங்கள் தீக்கிறையானது ஆகியவை களைக் கவனிப்போர் உணர்வர்.

எனவே, அவர்கள், சர். கிரிப்ஸ் வரப்போகிறார் என்ற செய்தி வெளிவந்ததும் ஆனந்தத்தாண்டவமாடினர். அதுகண்டு நாம், இது இப்போது, பிறகு யாது நடக்கிறதோ பார்ப்போம், என்று கருதினோம்.

லீக், திராவிடக்கட்சி, ஆதிதிராவிடச்சங்கம், ஆகிய எதையும் சர். கிரிப்ஸ், ஆதரிக்கமாட்டார். காங்கிரசே இந்தியாவின் ஏகப் பிரதிநிதி என்றுரைப்பார். சீமையிலேயே நமக்காகப் போராடினவர், இங்கு வந்தால், கைமேல்கனி கிடைக்குமென்று கூறினர். இப்போது?

சர். கிரிப்ஸ், சிரித்துக்கொண்டே நம்மைச்சித்திரவதை செய்துவிட்டார். நாட்டைத் துண்டாடும் திட்டத்தை நீட்டுகிறார். பொறுப்பைத்தர மறுக்கிறார், இவரது புன்சிரிப்பு யாருக்கு வேண்டும்? இந்த இலட்சணமான திட்டத்தை எடுத்துக்கொண்டு இங்கு ஏன் வந்தார். போய்வரட்டும், கிரிப்ஸ்துரை! போதும் அவரது உறவு! என்றும், மற்றும் பலவும் பேசுகின்றனர், தேசபக்தியை, அறிவைவிட அதிக சக்திவாய்ந்ததெனக்கருதும் காங்கிரசார்.

சர். கிரிப்ஸ், வருவதற்குள், நாட்டிலே பல கட்சிகளும் கலந்து பேசி, ஒரு பொதுத்திட்டத்தைத் தயாரித்திருந்தால், இன்று கிரிப்ஸ் திட்டம் குற்றுயிராகக் கிடக்க நேரிடாது, காங்கிரசும், கண்கலங்க நேரிட்டிராது. பேராசை பெருநஷ்டம் என்பது பெரியோர்களின் வாக்கு. அதை மறந்தது காங்கிரஸ்.

கிரிப்ஸ் திட்டம், நமக்கோ, முஸ்லீம் லீகுக்கோ, பூரணத் திருப்தி அளித்துவிடக்கூடிய தென்று நாம் கூறவில்லை.

சர்க்கசிலே, கம்பிமீது நடக்கும் வித்தைக்காரர்போல், சர். கிரிப்ஸ், இந்திய அரசியல் சிக்கலின்மீது நின்று கொண்டு தாண்டவமாடுகிறார். மற்றவர்களைவிடச்சற்று சாமர்த்தியமாக இவர் ஆடுகிறார்! ஆனால் சிக்கல்தீரா முன்னம், இந்திய அரசியல் நல்லமுறையில் இராது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி, இப்போதைய கிரிப்ஸ் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டதாம்.

எதிர்கால அரசியல் திட்டம் எங்ஙனமிருப்பினும் இப்போது, இந்தியப் பாதுகாப்புப் பொறுப்பை, இந்தியரிடம் ஒப்புவிக்க வேண்டுமாம். இந்தமாற்றம் நேரிட்டால், காங்கிரஸ் இணங்குமாம். சர். கிரிப்சும், இன்னும் சில தினங்களில், சிக்கல்கள் தீர்ந்துவிடுமென்று கூறுகிறார். நம்பிக்கை நல்லதோர் மருந்து என்பதை நாமறிவோம். நடப்பது எதுவெனக்கண்டு, பிறகு நமது கருத்தை வெளியிடுவோம். நமது தலைவர்கள், சர். கிரிப்சினிடம், திராவிட நாடு தனிநாடாக அமைதல் வேண்டுமென்பதை வற்புறுத்தி உரைத்தனர் என்பது கேட்டுப் பெருமகிழ்வடைகிறோம், நமது தலைவர்கள் செய்யும் முடிவு, திராவிடச் சமுதாயத்துக்கு ஏற்றதாகவே இருக்கும், அந்த முடிவு தெரிந்து, திராவிடர், திரண்டெழுந்து, தலைவரின் ஆணைப்படி நடப்பர் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. நமது எதிர்கால வாழ்வுபற்றி இன்று போரிடும், நால்வரும், நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, சர். கிரிப்சிடம் பேசியதும் பிறவுமாகியவைகள் பற்றிப்பிரசாரம் புரியவேண்டுகிறோம். தமிழகம், நால்வரின் நாதத்தைக் கேட்டு இன்புற, எழுச்சிபெறத் தயாராக இருக்கிறது.

சர். கிரிப்சின் திட்டத்தை ஏற்பதும் ஏற்காததும், கட்சியின் தீர்ப்பைப் பொறுத்திருக்கிறது. ஆனால், எது எப்படி யிருப்பினும், சர். கிரிப்ஸ், மூன்று அடிப்படையான உண்மைகளை உணர்ந்து உரைத்திருப்பது கண்டு மகிழ்கிறோம்.

(1) இந்தியா ஓர் உபகண்டம்.
(2) இங்குபல இனமக்கள் வாழ்கின்றனர்.
(3) கூட்டாட்சியில் சேர எந்த மண்டலமேனும் மறுத்தால், அது தனிநாடாக அமைதலே முறை என்ற இம்மூன்று அடிப்படை உண்மைகள் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதபடி வெளியாகி விட்டன.

சர். கிரிப்சின் திட்டத்தின்படி திராவிட நாடு நமக்குக் கிடைப்பதாயின் பொன்னேபோல்போற்றி வரவேற்போம். இல்லையேல், நமது இன எழுச்சியை உலகு அறியும் வண்ணம், வீறுகொண்டு மிளிரச்செய்வோம். நமது இனத்தின் முற்காலச் சிறப்புகளின் மறுபதிப்புகள் இயற்றுவோம். கிரிப்சுகள் பலர்கூடி நின்று தடுத்தாலும் நில்லோம். பகைவெல்வோம். பார்புகழ், திராவிட நாட்டை அமைத்தே காட்டுவோம்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு, நமது பிரிவினைத் திட்டத்தைப்பற்றி ஏளனம் செய்தனர் ஏமாளிகள்! கண்டித்தனர் கசடர்கள்! எலிவளை எலிகளுக்கே என்று குறும்பு மொழிந்தனர்.

இதோ காணீர் அந்த எலி, இரண்டாண்டுகளுக்குள், புலியெனப் பாயத்தொடங்கி விட்டது. இரண்டே ஆண்டுகளுக்குள் அதற்கெனப் பிரத்தியேகப் பிரசாரமோ, படைதிரட்டவோ இல்லாமற் போயுங்கூட திராவிடநாடு தனிநாடாக அமைதல் வேண்டும் என்ற நமது கோரிக்கை, பிரிட்டிஷ் தூதராலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. சர். கிரிப்ஸ், ஜஸ்டிஸ் கட்சிக்கு நண்பரல்ல! ஆனால் அவர் நீதிக்கு விரோதியாக முடியாது! நீதியின் வழி நிற்கவிரும்புவோர் நமது உரிமையை மறுக்கத் துணியார்.

பாகிஸ்தான்-திராவிடஸ்தான்-இடையே ஆரியஸ்தான் என்று மூன்று மண்டலங்கள் அமைவதே, நாட்டின் எதிர்காலத்தில் அமைதியை நிலைநாட்டும். பிறதிட்டங்கள், அமளியைத் தூண்டிவிடும். நாட்டின் எதிர்காலம் இவ்விதமான மூன்று தரணிகள் கொண்ட முறையாகவே இருத்தல் வேண்டும். நமது நாட்டை நாமாள விரும்புவது நமது பிறப்புரிமை. அதை மறுக்க யாருக்கும் உரிமை இல்லை.

போரின் போக்கு பயங்கரமானதாகிக்கொண்டே வருகிறது! வீரரஷியர்களை வசந்தகாலத்தில் வாட்டி வதைக்க, வன்னெஞ்ச நாஜிப்படைகள் வண்டி வண்டியாகச் செல்கின்றன. கருங்கடலைக் கடக்கவும், காகசஸ் கரையோரம் சேரவும், நாஜிகள் தமது ராணுவத்தையும் ராஜதந்திரத்தையும் ஏவுகின்றனர். பல்கேரியா, ருமேனியா, துறைமுகங்களில் அச்சுநாட்டுக் கப்பல்கள் அணி அணியாக உள்ளனவாம். கடற்கோட்டைகளான மால்ட்டா, ஜிப்ரால்டர், ஆகியவைமீது நாஜி விமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. எகிப்திலும் சிரியாவிலும் நாஜிகள் தமது படைகளை ஏவதிட்டமிட்டுள்ளனர் என்றும், டார்டனல்ஸ் ஜலசந்தி வழியாக அச்சுக்கப்பல்கள் போக அனுமதி தரும்படி, வான்பேபன், துருக்கி சர்க்காரிடம் காவடி எடுப்பதாகவும், இதற்கு ‘இலஞ்சமாக’ கிரீசில் சில பிரதேசங்களைத் துருக்கிக்குத்தர இசைவதாகவும் தெரிகிறது.

மேற்கே இதுவெனில், கிழக்கிலோ, ஜப்பானின் வேகம் குறையக்காணோம். பர்மாவில் ஜப்பானியப் படைகளைச் சீனர் எதிர்த்துநின்ற போதிலும், ஜப்பானிய முற்போக்கு குறையக் காணோம். அந்தமான் வீழ்ந்துவிட்டது. தென்னிந்தியா பூராவும் திகில்கொண்டு வதைகிறது. இத்தகைய நிலைமையில், நாட்டுப் பாதுகாப்புக்காக, பிரிட்டிஷார், ஒரு கட்சியின் தனிநபரை அதிகாரியாக்குவதைவிட, சகலகட்சிகளின் தலைவர்கள்கொண்ட, நாட்டுப்பாதுகாப்புக் கழகத்தை உடனே அமைத்து, அந்தக் கழகத்தின் பொறுப்பில், படைதிரட்டுவது, உள்நாட்டுப் பாதுகாப்பு, பணந்திரட்டுவது பீதியைத் தடுப்பது ஆகிய பணிகளை ஆற்றும் பொறுப்பை ஒப்படைத்தலே முறை.

இடைக்கால இடரைப்போக்க, இம்முறையில் ஜனாப் ஜின்னா, பெரியார், டாக்டர் அம்பேத்கார், பண்டித ஜவஹர், எம்.என். ராய், சர். சண்முகம், சர். கே.வி. ரெட்டி ஆகியோர் கொண்ட நாட்டுப் பாதுகாப்புக் கழகத்தை சர்க்கார் அமைத்துவிட்டு, போர் முடிந்ததும், முஸ்லீம்களுக்குப் பாகிஸ்தான், திராவிடருக்குத் திராவிடஸ்தான், ஆரியருக்கு ஆரியஸ்தான் அமைத்துத் தரப்படும் என்று வாக்குறுதியும் தந்துவிட்டு சரிதம், இலக்கியம் ஆகியவற்றைச் சாட்சியாகக்கொண்டு, மூன்று மண்டல அமைப்பு ஏற்படச் செய்தால், என்றென்றும் பிரிட்டிஷ் புகழ் மங்காதிருக்கும். காங்கிரசின் கண்சிமிட்டலையோ, கைப்பிசைவதையோ கண்டு, பிறகட்சியினரை ஒதுக்கிவிட்டு, ஆரிய- ஆங்கிலேய ஆலிங்கனம் நடைபெற்றால் நாடு தாங்காது, அன்று ஏற்படக்கூடிய கொதிப்பை; சர். கிரிப்ஸ், நெருப்புடன் விளையாட மாட்டார் என்றே நம்புகிறோம். காங்கிரசார், கனவில் கண்ட கன்னியைக் காணோமே என்று கலங்குகின்றனர். ஆனால் அவர்கள், எந்த நேரத்திலும் வளைந்துகொடுக்கும் வகை கற்றவர்கள். எனவே, பிரிட்டிஷ் சர்க்கார், ஏமாறாமல் இருக்கவேண்டும். இல்லையேல், இஸ்லாமியர், திராவிடர் ஆகியோரின் அன்பை இழக்கவேண்டி நேரிடும். அதுபோய், மற்றதெது விருப்பினும், நீரில்லா ஆறு, நிலவில்லா வானம், உப்பில்லாப் பண்டம், போன்றதே யாகும்!

5.4.1942