அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கிட்கிந்தையில் கிரிப்ஸ்
மரக்கிளைகள் முறிந்தன! கனிகள் கசக்கிப் பிழியப் பட்டன! காய்கள் கடித்தெறியப்பட்டன! துளிர்கள் துவைத்து மிதிக்கப்பட்டன! ஒரே ரகளை! கூத்தாட்டம்.

மற்றோர் புறத்திலே, மதுமயக்கத்தால் மல்லாந்து படுத்தும், புரண்டுகொண்டும் குளறிக்கொண்டும பல குடிவெறியர்கள் இருந்தனர்.

சாலை ஓரத்திலும், மாவிலை மெத்தைமீதும், மரப்பொந்துகளிலும் மலைச்சாரலிலும், சல்லாபங்கள் சொல்லொணாக் கோலாகலத்துடன் நடந்து கொண்டிருந்தன. களியாட்டம், வெறியாட்டமாகிவிட்டது. குதூகலம், ஆர்ப்பாட்டமாகிவிட்டது. குதூகலம் மிதமிஞ்சிவிட்டால், மனிதர்களிற் சிலரையே குரங்குச்சேட்டையில் கொண்டு போகிற தென்றால், குரங்குகளுக்குக் குதூகலம் பிறந்துவிட்டால், அவைகளின் கும்மாளத்தைக் கூறவும் வேண்டுமா! கிஷ்கிந்தையில், வானரங்கள், மனம்போனபடியெல்லாம், ஆடின, பாடின, மது குடித்துப் புரண்டன, மரங்களின் மீது குதித்தன. மலைகள் மீது தாவின!

வானர அரசன், தனது குடிமக்களின் கோணல் சேட்டையை அடக்கமுடியவில்லை. முயற்சிக்க முன் வரவுமில்லை. ஏன்! அரசனே அந்தப்புரத்தில் காமமும் கள்ளம் கலந்து பருகியதால், கட்டுக்கடங்காது ஆடிக்கிடந்தான்!

பிறக இலட்சுமணன் வந்து கடிந்துரைக்கத் தெறிந்தான் சுக்ரீவன், வானரர்களும் வழிக்குவந்தனர் என்று வால்மீகி, கிஷ்கிந்தையில் நடந்த ரசமான ரகளைபற்றி வரிணித்திருக்கிறார், இராமாயணத்தில்.

மேடை முறிந்தது! ஒலிபெருக்கி கெட்டுவிட்டது! ஆரவாரம் கிளம்பிற்று! ஆவேசமாகப் பேசினார்! என்று இரண்டு வாரங்களாக ஆசசாரியார் சுற்றுப் பிரயாண சம்பவம் பற்றிப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

சென்னை, திருமயிலையில் (திரு உபயோகித்தற்காக, தோழர் பக்தவச்சலம் கோபித்துக்கொண்டு ஸ்ரீமயிலையில் என்ற கூற முன்வரவுங்கூடும்) சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு வந்து பேசினபோது ஆச்சாரியார், நான் விரைவில் வடநாடு போகப் போகிறேன். எனது கிஷ்கிந்தையில் வானரசைன்யம் தயாராக இருக்கிறது என்று அங்குள்ள சசோதரர்களுக்குச் சொல்லலாமா, என்று கேட்டார்.

இது என்ன பரதா! துண்டு துண்டாக ஏதேதோ கூறுகிறாய், சம்பநதம் என்ன என்ற கேட்பீர்கள். சரி, சரி, இன்னமோர் துண்டு சேர்த்துககொள்ளுங்கள், பிறகு தொடுத்துப் பார்ப்போம்.

சர், ஸ்டாபோர்டு கிரிப்ஸ், இந்தியாவுக்கு வர இங்கிலாந்திலிருந்து புறப்பட்டுவிட்டார்!

வால்மீகி வர்ணித்த கிஷ்கிந்தை, ஆச்சாரியாரின் சுற்றுப்பயணம், அவரது மயிலைச் சொற்பொழிவு, கிரிப்சின் வருகை, இவைகளைத் தொடுத்து, நான் முதலிலே கொடுத்துள்ள தலைப்பு இருக்கிறதே, கிஷ்கிந்தையில் கிரிப்ஸ் என்பது, அதைப் பொருத்திப் பாருங்கள், பொருள் விளங்கிற்றா? விளங்காதவர்கள், கேளுங்கள், விளங்கிக்கொண்டவர்கள் நான் கூறுவது சரிதானா என்பதைக் கவனியுங்கள். இராமாயண காலத்திலே, இராமருக்கு உதவி செய்வதாகக் கூறிய வானரப்படையும், அரசரும், ஆனந்த அமளியில் ஈடுபட்டு, குடித்து வெறித்துக் கூத்தாடினதாக வால்மீகி கூறியுள்ளார். பிரிட்டிஷாருக்கு இப்போது உதவி செய்வதாகக் கூறிக் கிளம்பியுள்ள ஆச்சாரியாரின் பிரயாணம், பிரசங்கம், ஆங்காங்கு நடந்த சம்பவங்கள், ஆகியவை எனக்கு, வால்மீகியின் வர்ணனையைக் கவனப்படுத்தின. வாலி கொல்லப்பட்டு, கிட்கிந்தையின் முடிதனக்குத் தான் என்பது ஏற்பட்டுவிட்டதும், சுக்ரீவன், சுந்தராங்கிகளின் சுகுணத்தைச் சுரிதியாக்கொண்டு ஆடினான்! வானரர்களில் சுந்தராங்கிகளா? என்ற என்னைக் கேட்காதீர்கள். வால்மீகியின் வாழையடி வாழையாக வந்தோரைக் கேளுங்கள். சுக்ரீவன் ஆடியபடி, இங்கும் நடக்கிறது போலும், நாட்டுக்கோர் புது அரசியல் தருகிறோம் என்பது வெளிப்படையாகக் கூறப்பட்டு நம்பினோர்க்கு நிரிவாக சபையிலே பதவி கிடைக்கும் என்று ஜாடைமாடையாகக் கூறப்பட்டும வருவதால், ஆச்சாரியார் அன்று கிட்கிந்தையில் வானர அரசன் அடைந்ததுபோன்ற ஆனந்தங்கொண்டுள்ளார் போலும் என்று கருதினேன். பெளியே கூறவில்லை. ஏதோ ஒரு ஊரில் அவர் சகாக்களுடன் அமர்ந்திருக்க பிரசங்க மேடை கூடமுறிந்து விழுந்ததாகப் பத்திரிகையிலே படித்ன். உடனே கிட்கிந்தையில் மரக்கிளைகள் முறிந்தன என்று வால்மீகி கூறினாரே அது நினைவுக்கு வந்தது. அன்று கிட்கிந்தையில் நடந்ததுபோல் இன்று இங்கு நடக்கிறது என்று எண்ணினேன். எண்ணினதை எடுத்துரைத்தால், ஆசசாரியாரையும் கிட்கிந்தா வாசியையும் ஒன்றாக்கிப் பேசுகிறாயா என்று கேட்க பாரத மாதாவின் பிள்ளைகள், கண்கள் சிவக்க (கோபத்தால் தான்!) கைகால் துடிக்க (ஆத்திரத்தால்!) கிளம்பிவிடுகிறார்களே என்றெண்ணி, மனமே பொறு என்ற கூறி என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். சில சமயங்களில் மௌனம், பேச்சைவிட சிலாக்யிமல்லவா! ஆனால், அன்பர் ஆசசாரியார், தாமாகவே, வலிய நான் கூற எண்ணியதைக் கூறிவிட்டார். மயிலாப்பூரில் பேசுகையில், எனது கிஷ்கிந்தையில் வானர சைன்யம் தயாராக இருப்பதாக நான் வடநாட்டாருக்குக் கூறட்டுமா என்று கேட்டாரல்லவா? தமிழகம், அவரது கருத்தின்படி கிட்கிந்தை! தமிழ் நாட்டவர் (நானும் நீங்களுமல்ல, ஆச்சாரியாரின் திருவடிகளே சரண அடியேன் கூறினதல்ல இப்போது சொல்லுங்கள். ஆச்சாரியாரின் பிரயாணப் பிரபாவத்தைக் கண்டதும் எனக்கு கிட்கிந்தைக் காட்சி பற்றிய கவனம் வந்தது தப்பா!ஆச்சாரியாரே கூறிவிட்டாரே, தமிழகம் கிட்கிந்தை என்று, தமிழர் வானரர் என்று, சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், இங்கு இன்னம் சிலநாள்களில் வரப்போகிறார் ஆகையால்தான், கிட்கிந்தையில் கிரிப்ஸ் என்ற தலைப்பிட்டேன்.

வருகிற சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஆச்சாரியார் திரட்டிவைத்துள்ள வானர சேனையைக் கண்டு, கண்டேன், அதை வேண்டேன் என்று சொல்வாரா, என்பது அரசியல் ஆரடக்காரருக்குத் தெரியும். நமக்கு அந்த ஆரூடத்தில் நம்பிக்கை கிடையாது.

போர் சம்பந்தமாகத் தாங்கள் பரிபூரணமாக ஒத்துழைக்கத் தயார் என்பதையும், போர் ஆதரவுப் பிரச்சாரத்தை மக்களிடம் செய்யத் தயார் என்பதையும், பணம் திரட்ட, பட்டாளத்துக் ஆட்கள்சேர்க்க, பீதிகளைத தடுக்க, எதிரியின் கேடான குணங்களை எடுத்துரைக்கத் தாங்கள் தயார் என்பதை, வருகிறவருக்கு முன்கூட்டியே தெரிபிக்கிறார். வசிஷ்ட வர்க்கத்தவர்! இவ்வளவு செய்ய நாங்கள் சம்மதிக்கிறோம். செய்துகொண்டும் இருக்கிறறோம். இத்தகைய ஊழியர்களை வேலைக்க அமர்த்திக்கொள்ள வேண்டும தரையே என்று சர்ச்சில் சர்காருக்குக் கூறுவதே ஆச்சாரியாரின் பிரசார நோக்கம்.

ஜப்பானிய படை எடுப்பினால் இந்திய பெரிதும் பதிக்கப்படுமே

ஆமாம்! அதைத்தானே நான் மாகாணமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கிறேன்

கட்டுப்பாடாக மக்கள் இருக்கவேண்டும். பீதி கூடாது தைரியம் வேண்டும்
அதேதான் சார். நான் சொல்லிவருகிறேன்.

எதிரியைத் தடுக்க, வீட்றகொரு ஆள் கிளம்பவேண்டும்
போதாது துரையே! இதோ பாருங்கள், பத்திரிகையை, பதினைந்து நாள்களுக்கு முன்பு மயிலாப்பூரில் பேசினேன் என்ன சொன்னேன். படியுங்கள். இதோ நானே படிக்கிநேன். வீட்டிற்கொரு இராமனும், இலட்சுமணனும் கிளம்பவேண்டும். வீட்டிற்கு இரண்டுபேர் தேவை ஒருவலல்ல!

ரொம்பசரி! ஆனால் இந்த அஹிம்சை, அஹிம்சையென்று கூறிவந்தீர்களே!

அதுவா! அதுசும்மா தந்திரத்துக்காக. எங்கள் ஜனங்கள், ஜாதிமதபேதம், வறுமையாகிய கொடுமைகளால் எங்கே கிளடம்பி விடுகிறார்களோவென்று அடக்கிவைக்க அந்தப்போதனை செய்துபார்த்தோம். அதைவிட்டு விட்டேன். இதோ கேளுங்கள். ஹிம்சை என்ற மதுவைப் பருகியுள்ள எதிரியை நாம் அஹிம்சை ஆயுதத்ததைக்கொண்டு தடுக்க முடியாது. என்று மயிலைப் பேச்சில் இருக்கிறது ஜப்பானியன் இம்சைக்காரன் அவனிடத்தில் நமது அஹிம்சை பலிக்காது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

அதுதான் சரியான பேச்சு! யாரே, இனி இதர கட்சிகளுடன் ஒரு சமரசத்திற்கு வரவேண்டியதுதான் பாக்கி, வந்ததும் உமது மனு கவனிக்கப்படும்.

இவ்விதமானதாகத்தான், சர், கிரிசுக்கும் ச.இராஜகோபாலாச்சாரியாருக்கும் சம்பாஷணை இருக்க முடியும்! இவ்விதம், தமது பிரிட்டிஷ் பக்தி, போர் ஆர்வம், ஆகியவற்றை விளக்க, ஆதாரங்கள் திரட்டுகிறார், அலைந்துதிரிந்து. அந்த ஆதாரங்களான, பத்திரிகைகளுடன், சர்.கிரிப்சைக் கண்டு பேசுவார் ஆச்சாரியார் சைமன் சிரிப்பார்!

கிஷ்கிந்தையில் சகலமும் தயார் என்ற ஆச்சாரியார் கூறினதும், ஆமாம் என்ற சுர்.கிரிப்ஸ் நம்பிவிடுவாரானால், அது அவருடைய அவசரப் போக்கைக் காட்டுவதாகுமே தவிர, அறிவின் பக்குவத்தைக் காட்டுவதாகாது. தயாராக வானரவேனையை வைத்துக் கொண்டிருப்பதாக ஆச்சாரியார் கூறுவதை சர்.கிரிப்ஸ் நம்புமுன்னம், லிபியாவில், பர்மாவில், மலேயாவில், சிங்கப்பூரில், இரத்தஞ் சிந்தி, தங்கள் உடலங்களைக் கழுகுக்கும், கடலில் நடமாடும் சுறாமீனுக்கும், மண்ணுக்கும் இறையாகப் போட்ட வீரர்கள், ஆச்சாரியார், போர் எதிரிப்பு செய்தபோது சிறையில் சிங்காரமாகப் படித்துககொண்டிருந்தபோது, திரட்டப்பட்டவர் என்பதையும், இதுவரை போருக்காக நடந்த பிரசாரமும், குவிக்கப்பட்ட பணமும், ஆச்சாரியாரும் அவரது வானரவேனையும் வழிமறித்து வம்புசெய்துகொண்டிருந்த நேரத்தில் இதரர்கள் செய்தது என்பதையும் கவனத்தில் வைக்கவேண்டும் இல்லையேல், அந்த அஇதரர்களின் கவனம், செய்ந்நன்றி கொன்றவர்கனை என்னசெய்வது! ஏன் அவர்களுக்கு இன்னமும் இதவுவது? என்ற விபருதமான வழியில் திரும்பிவிடவுங்கூடும்!

போர் துவக்கப்பட்டபோதே, இதரகட்சிகளக்கு, இந்தியாவுக்கும் ஆபத்து விளையக்கூடும், ஆகையால் இந்தப்போரில் நேக சாட்டினரை முழுமனத்துடன் ஆதரித்து, எதிரியின் இடுப்பை முறிக்கவேண்டும என்பது தெரிந்துவிட்டது. தெருக்கோடியில் பிடித்த தீ நம் வீட்டிற்கும் வரக்கூடும் என்று தெரிந்துகொண்டவர்கள், தீ அணைக்கத் தாமாக ஓடோடி வந்தனர். அன்று தீர்த்தமாடி, திருநாமமிட்டு திருப்பல்லாண்டு பாடிக் கண்டிருநதவர்கள் இன்று உதவிசெய்கிறோம் என்று கூறிவிட்டால் அதைக்கண்டு மலைத்துவிடுவது மடமையின் அறிகுறி வீட்டிற்கொரு இராம இலட்சுமணர்களைக் கேட்கும் இந்த மாம்பல மாவீரர், எந்த ஞானோதயம் பெற்றதாகக் கூறுகிறாரோ, அதனை வெகுநாள்களுக்கு முன்னதாகவே இதரகட்சித் தலைவர்கள் பெற்றதனால்தான், போர் மூண்டது. வருகிறது ஆபத்து, வரிந்துகட்டுங்கள் கச்சையை என்று மக்களிடம் கூறினர். அந்த நேரத்தில், வாதுஞ் சூதும் பேசியவர் ஆச்சாரியார். இன்று தத்தோம் எனத் தாண்டவமாடுகிறார்! ஏன்? போரை எதிர்த்து சிறை சென்றவர், இன்று போருக்கு ஆட்கள் திரட்ட முன் வருகிறாரே, இது ஏன்? என்ற சந்தேகம் எல்லோருகும் ஏற்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட ஆச்சாரியார், தமது நெல்லைப் பிரசங்கத்திலே நான் மந்திரியாவதற்கு இந்தப் பிரசாரம் செய்வதாக கெடுதலான் எண்ணமுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம் என்ற கூறினார்! நான் குடித்துவிட்டுப் பேசுவதாக இவன் எண்ணுகிறான். நானா குடித்தேன் என்று குளநாத குடியன் கிடையாது!

நான், போன வாரமும் சொன்னேன், அதற்கு முந்திய வாரமும் சொன்னேன். ஆச்சாரியாரின் இந்தச் சுற்றுப்பிரயாண நோக்கம், பதவி பெறுவதற்குத்தான் என்று. இது கெடுதலான எண்ணத்தால் சொன்னதல்ல! ஆச்சாரியாரின் அந்தரங்க ஆசைகள் அவரது சொற்பொழிவிலே அவ்வப்போழுது வெளிப்படுகிறது. அதைக்கண்டு நான் சொன்னதாகும். இப்போதும் சொல்கிறேன். பதவிக்காகத்தான் இந்தப் பிரசாரம்! இல்லை என்றால் ஆச்சாரியார், யாரோ மந்திரிகளாக இருக்கட்டுமூ, எனக்கு அக்கரை இல்லை, ஜப்பானிய ஆதிக்கம் கூடாது, அதைத் துடுக்கவேண்டும், போரியவேண்டும், அதற்காக மக்கள் கிளம்பவேண்டும் என்று கூறட்டுமே பார்ப்போம். யுத்த ஆதரவுதேட, சர்வகட்சித் தலைவர்களும் கொண்ட ஒரு பிரசாரசபை றிறுவட்டும், அது நியாயம். ஆனால், யுத்த ஆதரவு பெருகவேண்டுமானால், தமக்குப் பதவி கிடைக்கவேண்டும் என்று கருதினால், அதை யார் ஒப்புக்கொள்ளமுடியும்? பதவி வேண்டாமே! என்றுகூற அவருக்குத் துணிவில்லை. அப்படித்தான் வைத்துக்கொள்வோம், நான் மந்திரியாகிவிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன? என்று கேட்கிறார் ஆச்சாரியார். என்ன நஷ்டம்? கேளும் ஓய், நீர் மந்திரியாகிவிட்டால், போர் ஆதரவு குறையும், காரணம், உமது ஆட்சி இந்த மாகாணத்துத் திராவிட மக்களால் வெறுக்கப்பட்டது. மீண்டும் உமக்க முடி சூட்டுவார்களேயானால், இஸ்லாமியர், திராவிடர் ஆகிய இரு இனமக்களுக்கும் மனம் புண்படும். இவரியந்தானா ஆட்சி போகிறது என்று இருதய வலியுடன் கேட்பார்கள். உமது யுத்த ஆதரவுப் பேச்சு, மனப்பூரிவமானதுதான? மாற்றானிடம் நீர் மண்டியிடாது எதிர்த்து நிற்பீரா? மகாத்துமாவின் பேச்சைக் கேட்டு, மண்டலத்டிதை மாற்றானிடம் விடடு விடுவீரானால் என்ன கதி? என்ற எண்ணங்கள் தோன்றக்கூடும். இத்தகைய எண்ணங்கள், எதிரியைத் தலைவாயிலில் காணும் நேரத்தில் மக்களுக்கு இருப்பது மகா ஆபத்தானதாகும். இதுதானய்ய, நீர் வருவதால் ஏற்படக் கூடிய நஷ்டம். பயங்கரமான நஷ்டம், சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் முன்பு இந்தியா வந்த போது, காங்கிரஸ் தலைவர்களுடன் கூடிக் குலாவினார். காந்தி ஆசிரமத்தில் தங்கினார். அத்தகையவர், இப்போது இதர கட்சிகளுக்கு நம்பிக்கை பிறக்கக்கூடிய விதத்தில் தமது விசாரணையை நடத்தவேண்டும். பூர்வாஸ்ரம யோசனைகள், பூசுரர் சேர்க்கையால் வரும் புளகாங்கிதம், ஆகியவைகள் சர்.கிரிப்சுக்கு இருக்கும். ஆகவே அவரைச் சரிப்படுத்திக்கொள்ளலாம் என்று காங்கிரசார் கருதுவர். அங்ஙனம் நடக்கும் என்று, சர்.கிரிப்ஸ் தமது பேச்சாலோ, போக்காலோ காட்டிக் கொண்டால், இந்த நாட்டுப்பழங்குடி மக்களின் பாசத்தைப் பாழாக்குவதாக முடியும்.

பெர்லின், டோக்கியோ, ரேடியயோக்கள், இந்தியாவிலுள்ள பெரிய கட்சியாகிய காங்கிரஸ் பிரிட்டனை ஆதரிக்கவில்லை என்று விஷமப் பிரசாரம் வெய்கின்றன. அதை அடக்க, ஏதாவது செய்து காங்கிரசை யுத்த ஆதரவில் சேரும்படி செய்ய வேண்டும் என்பது பிரிட்டிஷ் சர்க்காரின் நோக்கம் என்ற காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தக் கருத்தோடு, காங்கிரசைத் தட்டிக் கொடுக்கத் துணிந்தால், அதனால், இஸ்லாமியரும் திராவிடரும் மனம் நொந்து கொள்வர் என்பது திண்ணம், அது, பெர்லின், டோக்கியோவுக்கு எட்டமற்போகாது. அப்போது, பெர்வின், டோக்கியோ ரேடியோக்கள், பிரிட்டிஷார் கைராட்டினத்தைக் கட்டிக்கொண்டு அழுகிற காந்திக் கட்சியுடன் குலவுகின்றனர். அதனால் இஸ்லாமியரும் திராவிடரும் மனம் புழுங்கி உள்ளனர். அவர்கள் பிரிட்டிஷாரின் போக்கை ஆதரிக்க மறுக்கிறார்கள் என்று பேச எவ்வளவு நேரமாகும்? என்பதைப் பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் யோசித்தே தீருவார்கள். ஆச்சாரியாரிடன் ன்புகொண்டு ஆங்கிலேயர், பிறரைப் புறக்கணித்தால் அது பெருமையையோ, பலனையோ பிரிட்டிஷாருக்கு அளிக்காது. எட்டுகோடி முஸ்லீம்கள், ஏனோ தானோ வென்று இருக்கிறார்கள். காங்கிரசாரும் பிரிட்டிஷாரும் கூட்டாகிவிட்டனர் என்பதனால், முஸ்லீம்கள் மனமுடைந்துவிட்டனர் என்ற செய்தி, இந்தியாவில் மட்டுமல்ல. எல்லைப்புறத்திலிருந்து துவங்கி, ஆப்கன்நாடு, பெர்ஷியா, சிரியா, அரேபிய, துருக்கிவரை, துடிதுடிப்பை உண்டாக்கம். சர்கிரிப்ஸ், கிட்கிந்தா காட்சியைமட்டுமூ கண்டு, முடிவு செய்யமாட்டார், செய்தால், அந்தமுடிவு, மற்றோர் ம்யுனிச்சாகவே இருக்கும்!

ஜீவமரண போராட்டத்தில், மந்திரிப் பதவி சர்வசாதாரண விஷயமாகும், இதையே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மதியீனர்கள்! மதியீனர்களுக்கு அரசியலில் இடம் இல்லை இது ஆச்சாரியார் பேசியது. காங்கிரஸ் வட்டாரம் இதை மறவாதிருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்! எங்கள் ஆச்சாரியார் மந்திரியாகப் போகிறார்! ஜவஹர் மந்திரியாகப் போகிறார், என்ற மார்தட்டிக்கொண்டு காங்கிரஸ் தோழர்கள் பேசக்கேட்டிருக்கிறேன். அவர்களை, ஆச்சாரியார், எந்தப் பட்டியில் சேர்த்திருக்கிறார் என்பதைக் கவனிக்கவேண்டுகிறேன்!

(திராவிடநாடு - 22.03.1942)