அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கூண்டிலிருந்து வெளியேவாருங்கள்!

காந்தியாரின் புகழ் உன்னத நிலையில் இருந்த காலத்தில் அவர் இறந்திருந்தால் அவரது வாழ்க்கை வரலாறு உலக சரித்திர ஏட்டில் மிகவும் பரிமளிக்கத் தக்கதாய் இருந்திருக்கும்; ஆனால் இப்பொழுதோ அவர் வெளியிட்டுவரும் முன்னுக்குப்பின் முரணான கோரிக்கைகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த மதிப்பை எல்லாம் இழந்துவிட்டார் என்று ஓர் அமெரிக்கப் பத்திரிகை குறிப்பிடுகிறது.

காந்தியாரும் காங்கரசும் தோன்றி இராவிட்டால் இந்திய மக்களுக்கு அரசியல் துறையில் இத்துணை கேடுபாடுகள் ஏற்பட்டிரா என்று நாம் பகலகாலும் வலியுறுத்திக்கூறி வந்துள்ளோம். இரண்டொரு நாட்களக்கமுன் ‘அந்தராத்மா’ வால் உந்தப்பெற்று வார்தா முனி வெளியிட்டுள்ள அறிக்கையும், அங்கு ஒன்பது நாட்களாக காங்கர சுக்கமிட்டி மலைகெல்லி ஆலோசித்து முடிவுசெய்த நெடிய தீர்மானமும் நமது கருத்தை வலுப்படுத்துகின்றன. பிரிட்டிஷார் இந்தியாவி
லிருந்து உடளே வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷாருக்கு ஓர் அவசரக்கட்டளை. அந்தக்கட்டளைப்படி நடக்காவிட்டால் நாடெங்கம் பரந்த அளவில் பலாத்காரமற்ற போராட்டம் தொடங்கப்படும் என்று எச்சரிக்கை. இவைதான் காந்தியாரின் அறிக்கை, காங்கிரசின் தீர்மானம் இவற்றின் அடிப்படையான கருத்துகள். இந்தியாவின் தற்போதைய அரசியல் சமுதாய நிலைமைகளில் காந்தியாரின் கூற்றும், காங்கரசின் தீர்மானமும் இந்திய மக்களுக்கு மாபெரும் கெடுதி விளைக்கும் என்று அஞ்சவேண்டியிருக்கிறது. உலகம் எங்கும் காந்தியாரின் கூற்றையும் காங்கரசுத் தீர்மானத்தையும் கண்டு வியப்புடன் கலந்த அறுவறுப்பே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி பிரிட்டிஷ் அமெரிக்கப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள கருத்துகளை நமது நாட்டினர் கவனிக்கவேண்டுமாய் அவற்றை இங்கே எடுத்துக்கூற விரும்புகிறோம். காங்கரசின் தீர்மானத்தைப் பற்றி பொறுமையுடன் கருத்துக்கூறுவது கடினமாய் இருக்கிறது. காங்கரசுத் தலைவர்களுக்கும் இந்திய அரசியலின் உண்மை நிலைமைகளக்கும் சம்பந்தம் இல்லை என்றே இந்தத் தீர்மானத்தினால் வெளிப்படுகிறது என்று “மார்க்ஷயர் பொஸ்ட்” பத்திரிகை கூறுகிறது. உண்மையை ஒளிப்பு மறைப்பின்று கூறுவதாயின் இந்தியாவின் பொதுநலனுக்குமாறாக காங்கரசுக்கட்சியார் தங்கள் சுயநலத்துக்கு ஆக்கம் தேட முற்பட்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிட்டால் காங்கரசுத் கட்சிக்கே மாபெரும் கேடு விளைகளையும் ஜப்பானின் ஆக்கிரமிப்பு கல்கத்தாவையும், ஏன் டில்லியின் வாயிலையும், அணுகியிருக்கிற இந்த வேளையிலே இவ்விதத் தீர்மானத்தை வெளியிட்டிருப்பது எவ்வளவு முட்டாள் தனம் என்று பாருங்கள் என்ற “பர்மீங்காம் போஸ்ட்” பத்திரிகை சடாவுகிறது இந்தியாவின் உண்மை நிலைபற்றிய அறிவு முழுவதையுமே காங்கரசுத் தலைவர்கள் இழந்து விட்டார்கள் என்று இதனால் தெரிகிறது என்று “லிவர்பூல் டெயிலி போஸ்ட்” குறிப்பிட்டுள்ளது.

பளீர் என்று அறைகொடுப்பது போல “லண்டன் டைப்ஸ்’ பத்திரிகை கூறியிருப்பதைப் பாருங்கள் இந்தியா சம்பந்தமாக ஏதும் புதிய திட்டம் வெளியிடப்படும் என்ற பேச்சக்கே இடம் இல்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள திட்டமே மிக விரிவானதும் பூர்ததியானதுமாய் இருக்கிறது. இப்பொழுது முஸ்லீம் லீகுடனும் மற்ற பெரிய சிறுபான்மைக் கட்சிகளுடனும் ஒப்பந்தம் செய்துகொள்வதே காங்கிரஸ்கட்சியார் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும் என்று “டைம்ஸ்” பத்திரிகை யோசனை கூறுகிறது லண்டன் டைம்ஸ் பத்திரிகையை பிரிட்டிஷ் அரசினரின் வாய் என்று கூறுவதுண்டு. எனவே ரிட்டிஷ்ஷார் காந்தியாரின் இந்தப்புதிய கபட நாடகத்துக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என்று நம்ப இடமிருக்கிறது. சர் ஸ்டாபோர்டு கிரிப்சு அளிக்கச்சென்ற விடுதலைத்திட்டம் பற்றி காங்கரசுக்கு கவலையில்லை. தன் சர்வாதிகார நிலைமையைப் பலப்படுத்திக் கொள்வதில் மாத்திரம் அது சிரத்தைகொண்டுள்ளது என்று “டேய்லி டெலிகிராப்” பத்திரிகை கூறுகிறது இனி, காந்தியாரின் விபரீதப்போக்கால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மனப்பான்மையை விளக்க இரண்டொரு சான்றுகள் இங்கே தருகிறோம்.

“பிரிட்டிஷார் தவறுசெய்யவில்லை என்று சொல்ல முடியாதாயினும், இப்பொழுது காந்தியார் கேட்டப்படி செய்வார்களாயின் அவர்கள் முன்னிலும் அதிகமான தவறைச் செய்தவர்களாவர் என்று “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை எழுதியுள்ளது. “வாஷிங்கடன் போஸ்ட்’ என்ற பத்திரிகையோ காந்தியாரின், பிடிவாதம் போக்கைக் கவனித்தால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர அவருக்கு சக்தி இல்லையோ என்று சந்தேகம் உதயமாகிறது என்று குறிப்பிட்டுள்ளது இதுவரை இந்தியாவைப்பற்றி அமெரிக்க நாட்டினர் டை உண்டாகி இருந்த நன்மதிப்பெல்லாம் காந்தியார் காங்கரசு இவைகளுடைய தற்போதைய நயவஞ்சக திட்டத்தினால் அழிந்து பட்டதுமன்றி காங்கரசு தலைவர்களின் அரசியல் ஞானசூனியத்தைக் கண்டு அமெரிக்காவில் இகழ்ச்சியும் வெறுப்பும் துளிர்ந்துள்ளது என்பதை இதனால் தெரிந்து கொள்ளலாம். முன்பு காந்தியார் தோற்றுவித்த ஒத்துழையாமை வட்ட மறுப்புப் போன்ற இயக்கங்களுக்கு அவற்றின் புதுமையைக் கண்டு மதிமோசம்போய் பல்லாயிரம் மக்கள் ஆதரவு தந்தனர். இப்பொழுதோ அப்படியில்லை யுத்த நெருக்கடியும், யுத்தபீதியும் மக்களைப் பலவழிகளிலும் கலவரப் படுத்தி நிற்கின்றன. மேலும் காந்தியாரின் முந்தின இயக்கங்கள் ஒவ்வொன்றும் மிகவும் கேவலமான தோல்வியைப் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு குந்தகம் ஏற்பட்டதைக் கண்டு பொது மக்கள் இப்பொழுது கண்விழித்துள்ளனர். சிறுபானமைக் கட்சிகளும், முஸ்லீம்லீகும் காந்தியாரின் புதிய நாடகத்தை எதிர்க்க முற்பட்டு நிற்கிறார்கள். சர்க்கார் இந்த மிரட்டலுக்கு பணிந்து காங்கரசுத் தலைவர்களிடம் அரசாங்க அதிகாரத்தை ஒப்படைத்தால் நாட்டில் உள்நாட்டுக்கலகம் ஏற்படும் என்று முஸ்லீம்லீம் தலைவர் ஜனாப் ஜின்னா தெள்ளத்தெளிய எடுத்துக் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சட்டசபை ஜஸ்டிஸ் கட்சித்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான குமார ராஜா சர் எம்.ஏ. முத்தையா செட்டியார் காந்தியாரின் போலித்திட்டத்தை மாபெரும் முயற்சி என்பறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உண்மை நிலைமைகளை உணர்ந்து அவற்றுக் கேற்ப ஏற்பாடுசெய்ய காங்கரசுத் தலைவர்களுக்கு ஆற்றல் இல்லை என்பதுதான் காங்கரசு நிர்வாகக் கமிட்டி தீர்மானத்தால் வெளிப்படுகிறது. காங்கரசுயராஜ்யம் நிறுவுவதற்காக பிரிட்டிஷ் சர்க்காரை மிரட்டிப் பணியவைப்பது அதன் நோக்கம் என்று தெரிகிறத. ஆனால் உள்நாட்டுக் கலகம் ஏற்படுவதுடன் வகுப்புதுஷ்விஷமும் வீறுகொண்டெழுமே அன்றிவேறில்லை. நாடெங்கும் பொதுமக்களை சட்ட மறுப்புக்கு தூண்டிவிடுகிறது பெருங்குற்றமாகும் என்று அவர் கூறியிருக்கிறார் காங்கரசின் இறுதிக் காலம் தொடங்கிவிட்ட தென்றே இவைகளிலிருந்து ஊகிக்கக்கிடக்கிறது.

தோழர் இராசகோபாலாச்சாரியார் இரண்டொரு நாட்களுக்குமுன் சென்னை சட்டசபை காங்கரசுத்தலைவர் பதவியையும், சட்டசபை அங்கத்தினர் பதவியையும் ராஜிநாமா செய்தபொழுது தாம் கூண்டிலிருந்து வெளிவந்து விட்டதாகவும் சென்னை காங்கரசார் காந்தியாரின் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் செய்ததால் புதிய விலங்குகளை மாட்டிக்
கொண்டதாகவும் கூறினாராம். இந்திய சர்க்காரோ காந்தியாரின் புதிய இயக்கத்தைப் பற்றி அதிகமாய் கவலைப்பட்டுக்
கொண்டிருப்பதாய் தோன்றவில்லை. இந்த இயக்கம் சில இடங்களில் பரவினாலும் வெகுநாள் நிலைத்து நிற்காது என்று சர்க்கார் அதிகாரிகள் நினைக்கிறார்களாம். மேலும் அரசாங்கத்தார் எவ்வித நிலைமையையம் சமாளிக்கத் தயாராய் இருப்பதாகவும், காங்கரசுத்தலைவர் சட்டமறுப்பு தொடங்கினால் உடனே தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் “மெயில்” பத்திரிகையின் நிருபர் புதுடில்லியிலிருந்து அறிவிக்கிறார். ஆகவே காந்தியாரின் புதிய இயக்கம் மூன்று நாளை வேடிக்கையாகவே முடியும் என்று தோன்றுகிறது. அவ்வித முடிவை உண்டாக்க மக்கள் எல்லாரும் காங்கரசுமோகக் கூண்டிலிருந்து வெளிப்பட்டு காந்தியாரின் புதிய காளியாட்டத்தை அடக்க அரசாங்கத் தினருக்கு ஆதரவுதர முன்வரவேண்டும்.

(திராவிட நாடு 19.7.42)