அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாஸ்கோ ரேடியோ

கொடுமையான இந்தப்போருக்குக் காரணம் ஜெர்மன் மக்களல்ல, அந்த மக்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிவிட்ட ஹிட்லர் கூட்டமே. இதனை ஜெர்மன் மக்கள் உணரும்படி சோவியத்நாட்டு ரேடியோ பன்முறை பல உண்மை நிகழ்ச்சிகளையும், செய்திகளையும், ஜெர்மன் தாய்மார்களுக்கு எடுத்துரைத்து வருகிறது. விஷயமறியாமல், ஹிட்லராட்சியின் அடிமையாகி அவதியை அனுபவிப்பவரிடம் அனுதாபம் காட்டுவது, உபதேசிப்பது! பாசிசப் பித்துப் பிடித்தலைந்து ஹிட்லரையே பரமபிதாவெனப் போற்றி, உலகை ஆளவேண்டு மென்று பேராசை கொண்டிருக்கும் பேர்வழிகளுக்கு, காரசாரமாகச் சூடுகொடுத்து புத்தி புகட்டுவது, ஆகிய இரண்டு முறைகள், மாஸ்கோ ரேடியோவால் கையாளப்படுகிறது. மாஸ்கோ அழைக்கிறது! என்று மாஸ்கோ ரேடியோ கூவினதும், பெர்லின் முதலிய பட்டின மக்கள், போர் முனையின் உண்மை நிகழ்ச்சி இப்போது தெரியும் என்று கூறுவர்; உண்மையை கூறி உள்ளத்தை உருக்குகிறது ரஷிய ரேடியோ.

ஓர் ஏழை ஜெர்மன் சோல்ஜர். பட்டிமாடு! கூலிக்காகக் களம் புகுந்தவன், குடலறுபட்டு மாண்டான். அவனது குடும்பத்திற்கு, மாஸ்கோ ரேடியோ ஆறுதல்கூறி, அறிவுறுத்துகிறது. படியுங்கள், இருதயத்தைத் தடவும் இயல்புடனுள்ள இந்த ரேடியோ பேச்சை.

“மாஸ்கோ அழைக்கிறது! இபென்ஸ்டாட் நகரத்துவாசி, பிராகிரீமர் என்ற அம்மையை, ரேடியோ அருகேவரச் சொல்லுங்கள். அந்த அம்மையாருக்கு அத்யாவசியமாகத் தெரியவேண்டிய செய்தி இருக்கிறது.

அம்மையே! 116ம் நம்பர் ஜெர்மன் காலாட்படையிலே இருந்த உன் கணவன், லட்விக்ரீமர் என்பவர், ரஷிய வைத்யசாலையிலே இறந்துவிட்டார் என்ற வருத்தமிக்க செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறாம்.

பெரிசினா நதிக்கரையிலே, ஜெர்மானியர் தாக்குதல் நடத்தியபோது, அவன், ஈரலில் குண்டுபாய்ந்துக் கீழே சாய்ந்தான்.

எங்கள் படைவரிசைக்கு எதிரிலே, 1300 ஜெர்மானியர் வீழ்ந்து கிடந்தனர்; ரஷிய வைத்யசிகிச்சை வண்டிகள், அவர்களில் காயமுற்ற வர்களுக்குச் சகாயமளிக்க வந்தன, ஜெர்மானியர் அப்போதும் சுட்டனர்.

எங்கள் வைத்யசாலையிலே, உமது கணவன், 18 மணி நேரம் இருந்தான், உங்கள் வீட்டுத்தோட்டத்திலே, நீயும் உன் குழந்தைகளும் இருக்கும் காட்சியடங்கிய ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

உன் கணவன் நல்ல போர் வீரன்! போலந்து, பல்கேரியா, யூகோஸ்லாவியா ஆகிய இடங்களிலெல்லாம் சண்டை செய்திருக்கிறான். வீரத்திற்காக அவனைப் பாராட்டித் தரப்பட்ட இரண்டு சிலுவைகளை அணிந்திருந்தான்.

ஆனால், கிரீமர் அம்மையே! உன் கணவன், ஏன், பெரிசீனா நதிக்கரை வந்தான்? அவன் அணிந்திருந்த கௌரவ சிலுவைகளால் உன் குழந்தை குட்டிகள் காணப்போகும் பலன் என்ன? மற்றவர்களின் வீடுகளிலே நுழைந்து, அவ்வீடுகளின் தாய்மார்களையும் குழந்தைகளையும் கொல்வது முறையா? லட்விக்கிரீமர், இவற்றைச் செய்ய விரும்பவில்லை.

நீ அவனுக்கு எழுதிய கடைசி கடிதத்திலே, விரைவில் அவன் வீடு திரும்புவான், உன்னுடனும் குழந்தைகளுடனும் வாழ்வான், விரைவில் சாந்தி ஏற்படும் என்று நம்புவதாக எழுதியிருந்தாய்.

நீங்கள் யாவரும் சமாதானமே விரும்புகிறீர்கள்; நாங்கள் விரும்புவதும் சாந்தியே! ஆனால் ஹிட்லர் அதை விரும்பவில்லை!! அவன் போரை விரும்புகிறான். தாய்மார்கள் தவிக்கும்படி செய்யப்படுவானேன்? சிந்திய இரத்தம் போதாதா?

ஆனால் ஹிட்லருக்கு இது தெரியாது, கணவனை இழந்த காரிகையின் கலக்கம், தந்தையை இழந்த தனயனின் துயரம், மகனை இழந்த தந்தையின் தவிப்பு, ஆகியவைபற்றி ‘ஹிட்லருக்குத் தெரியாது. அவனுக்கு மனைவியுமில்லை, குழந்தையுமில்லை!

மாஸ்கோ ரேடியோவின் மொழி, அம்மாதை மட்டுமா, உலகத்தின் மனதையே உருக்கியதன்றோ! மக்களிடம் மாஸ்கோ காட்டும் அன்புக்கு இஃதோர் எடுத்துக்காட்டு. ஆனால் மமதைக்காரன் மாஸ்கோ ரேடியோ, செய்தி இதோ, மற்றோர், ரேடியோ செய்தி, இது ஆணவம் ஒரு ஜெர்மன் மாதுக்கு, கூறுவது.

ஏ! பிராவெர்னர்! உன் கணவனுக்கு நீ எழுதிய கடிதத்திலே, போர்முனையிலே ஆனால் என்னைப்பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் நினைத்துக்கொள் என்று எழுதி இருந்தாய்.

ஜூலை 29ந் தேதி எழுதிய கடிதத்தில் எவனாவதொரு ரஷியனிடமிருந்து ரோமத்தால் செய்த மேலங்கி எடுத்து அனுப்பினால் மகிழ்ச்சியாக இருக்கும், ரஷியாவில் அத்தகைய மேலங்கிகள் ஏராளமாக கிடைக்குமாமே, என்று உன் கணவனுக்கு எழுதியிருந்தாய்.

எது கிடைத்தாலும் அங்கு இங்கு, சர்வத்திற்கும் இருக்கிறது என்று எழுதினாய்.

ரஷியத் திருட்டுப்பயலைத் தீர்த்துக்கட்டுவதில், முனைந்து செய், என்றும் எழுதியிருந்தாய்.

அம்மையே! உன் கடிதம் உன் கணவனுக்குக் கிடைத்தது. ஆனால் உன் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத நிலை அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவன் ரஷியாவில் பிணமானான்!!

ரஷியாவிலே, ஏராளமான மேலங்கிகளும், மற்றப்பொருளும் உள்ளன. ஆனால் கொள்ளையர்கள் அவைகளை அடித்துக்கொண்டு போகாமல் பாதுகாக்க 200,000 மக்கள் இருக்கின்றனர்!

இதை, இப்போது ரஷியாவில் உள்ள ஜெர்மன் படையினரின் தாய்மார்களுக்குக் கூறு.”

15.11.1942