அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேச்சுரிமைப் போர்முரசு ஒலித்தது

இராமநாதபுர மாவட்ட தி.மு.க முதல் மாநாட்டின் இரண்டாம் நாள் நடவடிக்கையின் கடைசியில் பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாநாட்டின் வெற்றிக்குக் காரணமாயிருந்த வர்களைப் பாராட்டிப் பேசினார். திராவிடரியக்கம் நாட்டில் வளர்ந்துவரும் வேகத்துக்கு சிவகெங்கையே ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார்.

“பத்து ஆண்டுகளிருக்கும் இதே சிவகெங்கையில் நானும் பெரியாரும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச, அழைக்கப்பட்டிருந் தோம். பேச வந்திருந்த எங்களை, ஊர்வலமாக, அழைத்துச் செல்ல இவ்வூர் நண்பர்கள் முடிவு செய்தார்கள். அது படி நாங்கள் காரில் அமர்த்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறோம். அன்று கண்ட காட்சி, இன்னும் நினைவிலிருக்கிறது சிவகெங்கையின் கடை வீதிகளிலெல்லாம், இருமருங்கும், செருப்புகளைத் தொங்க விட்டிருந்தார்கள். வரிசை வரிசையாக கோர்த்து கட்டியிருந்தார்கள்! எங்களை அன்று வரவேற்ற, சிவகெங்கையையும் இன்று வரவேற்கும் சிவகெங்கையையும் கண்டால் மடுவுக்கும் மலைக்குமுள்ள வித்தியாசமிருக்கிறது! செருப்புகளைத் தோரணங்களாகக் கட்டி வரவேற்றது. மட்டுமல்ல அது நடந்த சில ஆண்டுகளுக்கெல்லாம் மற்றொரு முறையும், இந்நகருக்கு வந்தேன். கூட்டத்தில் பேச எழுந்தேன். எனக்கு எதிரியிலேயே, ஒரு காங்கிரஸ் பிரமுகர், இன்னொரு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டார். நான் பேச வாயெடுத்து ஒரு வார்த்தை கூறுவேன். அவர் உடனே, கூச்சல் போட்டு எதிர்ப்பார்! அப்பேர்ப்பட்ட சிவகெங்கையில் அன்று எதிர்ப்பைக் காட்டிய சிவகெங்கையில் இன்று விழிப்பு! பிரம்மாண்டமான பந்தல் கண்ணைக் கவரும் அலங்காரம் எட்டியதூரம் வரை மக்கள் வெள்ளம்!!

இந்த மாற்றத்தை நாடாளும் சர்க்கார் காண வேண்டும். கண்டால் மட்டும் போதாது. ‘எப்படி ஏற்பட்டது இவ்வளவு ஆதரவு இவர்களுக்கு’ என்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அவர்களது சிந்தனையைத் திறக்கவேண்டுமென்பதற்குத்தான் இதுபோன்ற மாவட்ட மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இம்மாநாடுகளை, நாட்டின் நிலையை விளக்கும் நாடிகளாக நாடான வந்தோர் கருதவேண்டும்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளார்கள். அவர்கள் மனதிலும், செயலிலும் புதுமை தாண்டவமாடுகிறது. புதுமலர்ச்சி காணக்கிடக்கிறது! புதியதொரு மாற்றம் தென்படுகிறது எனினும் ஒழுங்கே உருவாக அமைதியே உயிராக இருக்கிறார்கள். இத்தகைய மக்களின் மகத்தான குரலான, நமது கட்சி துவேஷத்தை உண்டு பண்ணி நாட்டில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறதாம்! கூறுகிறார்கள்!!

சட்டத்தை சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதை, ஒழுங்கு நாட்டில் நிலவச் செய்வதில் கவலையும் சிரத்தையும் கொண்டோர் எம்மைத் தவிர, வேறு யார்? 14 ஆண்டுகள் ஆட்சி பீடத்தமர்ந்திருந்த கட்சியின் வழித்தோன்றல்களாகிய எமக்கு, தந்திக்கம்பியை அறுத்து, தபால்வண்டியைக் கொளுத்தி, ‘ஆகஸ்டு’ செய்த இந்த ஆளவந்தாரை விட, சட்டத்தின் மேன்மை, ஒழுங்கின் அவசியம் நன்றாகத்தெரியும். ஆகவேதான் நாங்கள் நாட்டில் அமைதியைக் காப்பதில் கவனம் செலுத்துகிறோம் அக்கறை காட்டுகிறோம் அதிசரத்தை கொள்ளுகிறோம். அமைதியின் காவலர்களாக உலவும் எங்களுக்கே சிறைத்தண்டனை என்றால், சட்டத்தைப்பற்றிக் கவலைப்படாதவர்களை எப்படி நடத்தும் இந்த சர்க்கார்?

என்ன குற்றம் செய்தேன்-நூல் எழுதினேன். அதுவும் இப்போதல்ல, நான்கு வருடங்களுக்கு முன்! எழுதியதும் நூலாக அல்ல, தனித்தனியாக! சொந்த அபிப்பிராயங்களைக் கூட அல்ல வித்தகர்கள். இன ஆராய்ச்சிக்காரர்கள், சரித்திர வல்லுநர்கள் சொல்லியதைத் தொகுத்து எழுதினேன். 4ம் 4ம்=12 என்று எழுதவில்லையே! இருந்தும் இவர்களுக்கு என் மீது துவேஷம் பொறாமை! கோர்ட்டுக்கு இழுத்தடித்து, சிறைக்குள்ளே தள்ளி, பின்னர் ‘தஸ்தாவேஜுகளைப் புரட்டி, விடுவித்திருக்கிறார்கள்!!!

நமது முன்னேற்றக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட 17.9.49 அன்றே, ஆளவந்தாரின் இந்த முயற்சி முளைத்தது. அன்று ஆரம்பித்த முயற்சி, சரியாக ஓராண்டு முடிந்ததும், முடிவடைந்திருக்கிறது.

கழகம் துவங்கப்பட்ட அன்று மாலை சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு போலீஸ் அதிகாரி சாதாரண உடையில் என்னைச் சந்தித்து ‘இலட்சிய வரலாறு’ ‘ஆரிய மாயை’ நூல் எழுதினீர்களா, என்று கேட்டார். அன்று ஆரம்பித்த வழக்குகள் நடைபெற்ற முறை விசித்திரமாக இருக்கும். இலட்சிய வரலாறு வழக்கு சென்னையில்! திருச்சியில் ஆரியமாயை கேஸ்!

எனக்குள்ள, எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அங்கிருந்து வருவேன் மீண்டும் இங்கிருந்து போவேன். இப்படி, வழக்குகள் மூலம் நான் பட்டபாடுகளை நினைத்தால், வேண்டுமென்றே, இந்த ஆளவந்தார் எடுத்துக்கொண்ட விசேஷ முயற்சியில்லாவது வேறென்ன?
18ந் தேதி, தண்டிக்கப்பட்டோம். சிறைக்கு அனுப்பினார்கள், பின்னர் மீண்டும் திறந்துவிட்டு விட்டார்கள். காரணம் தஸ்தாவேஜுகளை பரிசீலனை செய்து, விடுவித்தார்களாம், வழக்கு ஓராண்டு நடைபெற்றபோது, தஸ்தாவேஜுகளில் தலையிட முடியாத சர்க்கார் இப்போது மட்டும் ஏன் தலையிட்டது? என்ன அவசரம் வந்தது? இது யோசிக்கப்பட வேண்டிய சங்கதியாகும்.

நாட்டில், நாங்கள் உள்ளே பூட்டப்பட்டதும் நடைபெற்ற நானாவித கிளர்ச்சிகளைக் கண்ட பின்னர், காலங் கடந்து தஸ்தாவேஜுகளிடம் போயிருக்கின்றனர்.

உலக வரலாற்றை நாம் படித்திருக்கிறோம். சரிந்து போன சர்க்கார் அத்தனையும் காலங்கடந்துதான் ஒவ்வொன்றையும் படித்திருக்கிறது. அதைப்போலவே, இவர்களும் படித்திருக் கிறார்கள். இந்த சர்க்காரிடம் ஆத்திரப்படவில்லை பரிதாபப்படுகிறேன்!

நாமென்ன, பிற அரசியல் கட்சிகள் போன்றவர்களா? ‘எலக்ஷனை’ச் சொல்லி, ஏதாவது ஆசைப்படுவதற்கு.

கட்சிகள் என்றிருந்தால், அரசாங்கத்தைக் கைப்பற்றவும், பதவியிலமரவும், திட்டங்களோடு நடவடிக்கைகளை எடுக்கும் நாம் அப்படியல்லவே! தேர்தல் வேண்டாமென்கிறோம் பதவி, பட்டங்களை வெறுக்கிறோம்.

தெளிவாகச் சொன்னால் சமுதாய நன்மைக்கான குறுக்குப் பாதையில் செல்கிறோம். ஆள்வோருக்கும், மக்களுக்கு மிடையிலே நிற்கிறோம். இருந்தும், இந்த சர்க்கார் நம்மைத் துவேஷக் கண்ளோடு பார்க்கிறது காரணம், நாட்டில் நமது இயக்கம் புயல் வேகத்தில் பரவுவதுதான்.

நாம் என்ன பிர்லாவிடமிருந்து பணம் பெறுபவர்களா? அல்லது டாடாவின் ‘செக்’ நமக்கு வருகிறதா? அல்லது-டால்மியாவின் பணப்பெட்டி நமக்காகத் திறக்கப்படுகிறதா? நம்மிடமிருந்த ஓரிரண்டு எட்டையபுரம் மிட்டாதாரும், பெத்தாபுரம் ஜமீனும், ஜரிகைக் குல்லாய்களும் தான் ‘சேலத்தால்’ மிரண்டோடி விட்டனரே!

இருந்தும், எப்படி நமது இயக்கம் புயல் வேகத்தில், ஆளவந்தார் பொறாமைப்படும் அளவில், பரவுகிறது? எப்படி இந்த ஜீவசக்தி, ஏற்பட்டது? மாலை போட்ட மந்திரிகள் முக்காடிட்டு திரியவேண்டி அளவுக்கு ஜீவசக்தியை நாம் உண்டாக்கியிருக் கிறோம்-மக்களிடையில், அதைக்கண்டு மருள்கிறார்கள்! நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல நாமோ களத்திலே பலியாகத் துடிக்கும் பட்டாளம்! நமது குறிக்கோள், நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது, நமது ஆசை இரவல் மோட்டாரில் செல்வதல்ல, சத்திரத்துச் சாப்பாடு அதுவும் ‘டெல்லி’ சமையல்காரன் செய்து போடுவதுக்கு ஏங்கியிருப்பதல்ல!

இலட்சிய வீரர்கள் நாம்! உரிமை வேட்கையோடு உலவும் ஜீவசக்தி படைத்தோர் நமது இயக்கத்தவர் இதை அடக்க முடியாது என்னை அடக்கிப் போட்டாலும் எனது இயக்கத்தவரை தடுத்துப்போட முடியாது! ‘பேசாதே! எழுதாதே’ என்று அடக்கி விட முடியாது! இதை. இந்த ஆட்சியாளர் கவனத்தில் கொள்ளட்டும். பாலைவனத்தை சோலையாக்குபவர்கள் எமது தம்பிமார்கள்! தமிழ் அவர்கள் தாழ்வாரத்து சொத்து!

அதை அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாது பிரிக்கவும் விடமாட்டார்கள். ஆட்சி உன்னிடம்! பட்டாளமுமிருக்கிறது. போலீஸ் உண்டு துப்பாக்கியும் வைத்திருக்கிறாய் நீதிபதி உன்னிடத்திலே ஜெயிலும் உன்னிடத்திலே! இதையெல்லாம் காட்டி, மிரட்டலாம். ஆனால் பலன் தோல்விதான் கிடைக்கும்!

என்னிடமிருந்து, ‘ஆரிய மாயை’ வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.700 அபராதமும் வசூலிக்கப்படுமாம். சொல்கிறார்கள் சர்க்கார் சார்பில் என்னிடம் எனக்கென இருப்பது ஒரே கார். அதை ஜப்தி செய்வதன் மூலம் வேண்டுமானால், வசூலிக்கலாம். ஆனால் அபராதம் என்ற முறையில் அரை பைசா கூட என்னிடமிருந்து ஏ. சர்க்காரே நீ பெறமுடியாது, என்னிடமிருப்பது அந்த மோட்டார் ஒன்றுதான்! வேண்டுமானால் ஏலம் போட்டுப்பார். பிறகு தெரியும் அது காராக உலவுமா! அக்குவேறு ஆணி வேறாக ஆகுமா என்பது!

ஏதாவது வைத்திருப்பவர்களிடம் வேண்டுமானால் அதை ஜப்தி செய்யலாம். ஆனால், எதுவுமேயில்லாது ஆயிரமாயிரம் வீரர்கள் இருக்கிறார்களே! அவர்களிடம் எப்படி வசூலிக்க முடியும். உன்னால் எங்களைச் சிறைக்குள் வைத்து, கவுரவத்தைக் காக்க முயன்ற ஆட்சியே, முடியுமா உன்னால், கேட்டால், கொடுக்கத்தான் போகிறார்களா, அவர்கள் இருந்தால்தானே கொடுக்க?

வகுப்பத் துவேஷிகள் வாய்கூடாது, கூறுகின்ற ஆளவந்தாரைக் கேட்கிறேன். யார் வகுப்புத் துவேஷி? நாங்களா மனதில் வைத்துச் சொல்! நாங்களா?

வகுப்புத் துவேஷம் வளர்ப்பதே எங்கள் நோக்கம் என்றால், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்க மாட்டோமே நாங்கள்.

பொன்னான சந்தர்ப்பம் கோட்ஸே காந்தியைச் சுட்டுக்கொன்ற நேரம் அந்த நேரத்தை. நாங்கள் பயன்படுத்திக்கொண்டோமா? கோட்ஸே பிறந்த வகுப்பைச் சொல்லி துவேஷ தீ பரவச் செய்தோமா? திருச்சி ரேடியோவில் “காந்தியாரைக் கொன்றவன் ஒரு தனிப்பட்ட ஆள். அதற்காகச் சாதியின் மீது பாயாதீர்கள்” என்றே பேசினோம். இதுவா, வகுப்புத் துவேஷம்?

கோல்ஹாப்பூர்-நாங்கலில்லாத இடம்-அங்கே அக்கிரகாரத்துக்கு தீ! அட்டகாசம் மூண்டது. பட்டாளம் போய்தான் அதையடக்க முடிந்தது. நாங்களில்லாத அங்கே அப்படி? நாங்கள் உலவும் இங்கே அதுபோல நடந்ததா? அது யாரால்-எம்மால்தானே! இதற்குப் பரிசா, வகுப்புத்துவேஷி பட்டம் வழக்கு சிறைவாசம்!

துவேஷம் ஊட்டுவதென்பது சுலபமான வேலை. அதைச் செய்யத் தெரியாதவர்களுமல்ல நாங்கள். ஆனால் அதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் அராஜகமும் அட்டூழியமும் தலைவிரித்தாடுவதைக் காண சந்தோஷப்படுபவர்கள் அல்ல நாங்கள். இங்குள்ள பார்ப்பன நண்பர்கள் எங்கள் விரோதிகளுமல்ல. இருந்தும், ஏதோ குற்றஞ்சாட்டி, எங்களை அடக்கப்பார்க்கிறாய்! இது, முடியாது. நீதியும் நேர்மையுமே வெல்லும்.

சிவகெங்கை மாநாட்டின் போது, ஆங்காங்கு கழகத்தோழர்கள் மீது ஆளவந்தாரால் போடப்படும் தடையுத்திரவுகள் குறித்து கண்டித்துப் பேசினார் தி.மு.க. பொதுச் செயலாளர்.

பேச்சுரிமை காக்க, தடையுத்திரவு போட்டால் மீறவேண்டும் என்று அறிவித்த சி.என்.ஏ. “எழுத்துரிமை காக்கவும் இனி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உருவான காரியங்கள் நடைபெறத்தான் போகிறது. உணரட்டும் இந்த ஆட்சியாளர்” என்று ஆவேசத்தோடு வெளியிட்டார். அதன் பகுதி கீழே தரப்படுகிறது.

“அடக்குமுறை வளர்ந்துகொண்டே போவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆளவந்தாருக்கு சுதந்திரம் என்பதன் அருமையை அறியச் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி போதையில் தலைகால் தெரியாமல் நடந்துகொள்ளுகின்றனர். அதன் விளைவாகவே, எழுத்துரிமை பேச்சுரிமை மீது பாய்கின்றனர். பேச்சுரிமை காக்க, இந்த அரசாங்கத்தின் 144ஐ மீறுவது தவிர வேறு வழியில்லை. அதேபோல எழுத்துரிமை காக்கவும், செய்யப்படவேம்டிய வழிவகைகளை, கோவில்பட்டி மாநாட்டிலேயே, வெளியிட்டிருக்கிறேன். அதைக் காரிய மாற்றுவதில் தான் நமது கவனம் செல்லவேண்டும்.

தடை செய்யப்பட்ட நூற்களை, விலை கூறிவிற்கவும்
தடை செய்யப்பட்ட ‘இரணியன்’ போன்ற நாடகங்களை நடத்தவும்,

பலர் துடிக்கின்றனர். ‘அனுமதி வேண்டும்’ என்று ஆவலோடு கிடக்கின்றனர். அவர்களைக் காண மகிழ்கிறேன்! இரு கைகளோடு வரவேற்கிறேன்! உரிமைக்காக உயிரையும் தத்தம் செய்வோம் என்று முழக்கமிடும் அவர்கள் நமது உழைப்பின் செல்வங்கள். அத்தகைய வீரர்கள், இனி நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆங்காங்குள்ள வீரர்கள் கைகளில் ‘ஆரியமாயை’ போன்றவைகளை நாடு காணட்டும்! ‘இரண்யன்’ களாக எனது தம்பிமார்கள் உலவத்தான் போகிறார்கள்! இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுமுன், தலைமைக் கழகத்துக்கு எழுதி அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்.

முறைகளையும் வழிகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

நமது இலட்சியங்களைக் காப்பாற்ற, இனி தியாகத் தழும்புகள் ஒவ்வொருவர் உடம்பிலும் காணப்பட வேண்டும். உரிமைகளுக்குப் போராடும் நம்மை, மிரட்டும் இந்த சர்க்கார்! மிஞ்சினால் சிறையிலே போடும்! சிறை ஒன்றும் பாலைவனமல்ல-அங்கும் ஆயிரக் கணக்கில்தான் மனிதர்கள் உள்ளனர். அதோடு அங்கு பஞ்சம் எதுவுமில்லை!

அண்னையா தண்டித்தாய் நானும் வந்து விட்டேன் என்று தம்பிகள் கிளம்பட்டும்!

கணவனையா தண்டித்தாய், இதோ என்னையும் அடை என்று அவர்களின் மனைவிமார்கள் எழும்பட்டும்!

குடும்பம், குடும்பமாக இந்த கொடுங்கோலாட்சியின் சிறைக்கூடத்தை நிரப்புவோம்! நமது இலட்சியம் வலுப்பெற, இதெல்லாம் செய்யத் தயங்க மாட்டோம்!

நாட்டின் அமைதியைக் குலைக்கவோ, கெடுக்கவோ அல்ல நாம் இருப்பது, பணிபுரிவது நாட்டின் வாழ்வுக்காக! வாழ்வைப் பெற எந்த விலையும் கொடுக்கத்தான் வேண்டும். கோழைகளல்ல செயல் வீரர்கள் என்பதை விரைவில் இவர்களுக்கு காட்டுவோம்!

சந்தர்ப்பம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. இனி, தாமதிக்க நேரமில்லை!

(திராவிடநாடு 8.10.50)