அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிராயச்சித்தம்
“கருமம் விடாது,” முற்பகல் செய்யின் பிற்கல் பிறையும்’ “பழித்தார்’ பழிக்கப்பெற்றோரின் வாயிலை நண்ணி அவர் தயவுக்காகக்கெஞ்சும் காலமும் வரும் “என்று சொல்லுவர். அத்தகைய நிலை தோழர் இராசகோபாலாச்சாரியாருக்கு இதுபோழ்து நேரிட்டுள்ளது. சென்ற 24.6.42ந் தேதி அவர் பம்பாயில் அகில இந்திய முஸ்லிம் லீக்தலைவர் ஜனாப் ஜின்னாபைப் பேட்டிககண்டு ஒன்றரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தாராம். மறுநாளும் அவர் விக்தலைவரை சந்தித்து ஐந்துமணிநேரம் பேசினாராம். இந்து முஸ்லிம். ஒற்றுமை பற்றியே பேச்சுவார்த்தை நடந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்தச் செய்தியைக் கேட்டதும் ஆச்சாரியார் தம் உத்தியோகபருவத்தில் செய்த கரு, மக்களுக்காக தற்போதைய உத்தரபருவத்திலே அவர் செய்யும் பிராயச்சித்தமா இது என்ற எண்ணம் தோன்றுகிறது.

“பாகிஸ்தான் திட்டத்தை எதிர்த்தே தீரவேண்டும். அது தாய்நாட்டைக் கூறுபோடுவதாகும், பாற் பசுவை வெட்டுவதாகும்” என்ற பொருத்தமற்ற கதைகள் கூறிக்கண்டித்த ஆச்சாரியார் இன்று சம்மந்தி காந்தியாரையும் எதிர்த்து பாகிஸ்தான் திட்டத்துக்கு ஆதரவுதரும் காட்சியைக் காண்கிறோம். பாகிஸ்தான் என்றால் பசுவை வெட்டுவதில்லை; நாட்டைக் கூறுபோடுவதல்ல; இந்தியா ஒரு கண்டம், அதில் பல தனி அரசு நாடுகள் இருக்கலாம் என்று நியாயம் பேசி ஜனாப் ஜின்னாவின் நட்பை நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது. முஸ்லிம் லீகை வகுப்புவாதக் கட்சி என்றும், லீக்தலைவர் ஜனாப்ஜின்னா கிடைக்க முடியாத காரியத்தைக் கேட்கிறார், அவருடன் சமரசம் பேச முற்படுவது வீண்வேலை என்று துச்சமாய் பேசிய அதே ஆச்சாரியார் இன்ற ஜனாப் ஜின்னாவைப் பேட்டிகண்டு பேசியிருப்பதை காலத்தின் கோலம் என்று சொல்லுவதா அல்லது இந்திய அரசியல் விந்தை என்று சொல்லுவதா என்று தெரியவில்லை.
இந்தப்பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் திட்டம்பற்றியே முக்கியமாக விவாதம் நடந்திருக்கக் கூடும். இப்பொழுது இருதரத்தாரும் ஒன்றுபட்டு அரசாங்கத்தை ஏற்று நடத்துவோம்; யுத்தத்துக்கப் பின் பாகிஸ்தான் திட்டம்பற்றி ஆற அமரப்பேசி முடிவுசெய்து கொள்ளலாம் என்று ஆச்சாரியார் கூறி இருப்பார். லீக் தலைவரோ அதுகேட்டு குறுநகை செய்து “இல்லை, நண்பரே அவ்வித ஏற்பாடு கவைக்கு உதவாது பாகிஸ்தான் திட்டத்தை நீரும் உம்மை ஆதரிப்போரும் மாத்திரமல்ல. காந்தியாரும் காங்ரசிலுள்ள மற்றெல்லாரும், இந்துசபையார் எனப்படுவோரும் இப்பொழுதே திட்டமாக ஒப்புக்கொள்ள வேண்டும். யுத்தம் முடிந்தபின் வேறு எவ்விதப் பேச்சும் ஆராய்ச்சியும் இல்லாமலே பாகிஸ்தான் திட்டம் அமலுக்க கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு இணங்கினால்தான் சமரச ஒப்பந்தத்துக்கு இடம் உண்டு” என்ற ஐயம் திரிபற எடுத்துக்கூறி இருப்பார். ஆச்சாரியார் மாயவலையில் விழ லீக்தலைவர் அவ்வளவு ஏமாந்தவரல்ல. “வந்தவர் அனுமாரா, விபீடணனா, அல்லது எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்க வல்லுநரா என்று தீர விசாரித்துத் தெரிந்து தான் உருவான காரியத்தில் ஈடுபடுவர் என்பது திண்ணம். பேச்சு முடிந்ததும் தோழர் ஆச்சாரியார் வாதாவுக்கு சம்மந்தி காந்தியாரைக் கலந்து பேசப்போயிரக்கிறாராம். காலம் முழுமூச்சாய் ஆச்சாரியார்மீது வஞ்சம் தீர்க்க தொடங்கி இருப்பதாக காணப்படுகிறது. காங்கிரசு ஆட்சியில் முதல் மந்திரியாய் இருந்த பொழுது எதிர்க்கட்சியாரைப் பொருட்படுத்தாமல் எதேச்சாதிகாரம் செலுத்தய வருக்கு இதுகாலை முன்பு புறக்கணித்த கட்சியின் நிழலிலே நின்று பிரசாரம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. திராவிடன்தான் என்பதை போக்கற்ற. பேச்சு என்ற உல்லங்கனம் செய்த ஆச்சாரியார் பெரும்பான்மை மக்கள் கேட்டால் திராவிட நாட்டையும் பேறுபிரித்து விடலாம் என்கிறார் இப்பொழுது. அந்று அரியணைமீது சில காலம் வீற்றிருந்த பொழுது அவர் கூறியுள்ள ஆனவப் பேச்சுகளை எல்லாம் இப்பொழுது திரும்ப எடுத்து வாயிலிட்டு விழுங்க வேண்டியதாகி விட்டது. அன்ற நமது நாட்டுக்கு பொதுமொழி வேண்டாமா என்று கூறி இந்தியை வலுக்கட்டாயமாக தமிழர்மீது சுமத்தி வீர இளைஞர்கள் தாலமுத்து, நடராசன் இருவரின் மாணங்களுக்கும் பொறுப்பாளி ஆனார். இன்று அதற்கு மாறாக சென்னை மாகாணத்தின் நிலையே வேறு ஆகையால் காங்கிரசார் உத்தியோகம் ஏற்றே தீரவேண்டும் என்ற பிரசாரம் செய்து வருகிறார் ஆச்சாரியாரின் நடத்தையைக் கண்டு உலகம் சிறு நகைகொள்ளுகிறது. இந்த நிலைமையில் ஆச்சாரியார் மனம் மாறிவிட்டார், இனி நிலைமாறார் என்று பரவசம் பட்டு, அவருக்கு துணை நிற்கவேண்டும் என்ற வீணாகப் பேச்சுப் பேசுவதற்கு இடம் இல்லை. பிரயாசித்தம் இன்னும் பூர்த்தியாகவில்லை. காங்கிரசாட்சியில் தமிழர் பட்ட துன்பங்களுக்கும் வீரவாலிபர்களின் அகாலமரணங்களுக்கும் பிராயசித்தம் தேடவேண்டாமா? ஆரிய ஆதிக்கம் அடியோடு ஒழிவதற்கு ஆயிரக்கணக்கான தியாகங்களாலுமன்றோ அவை சரிப்படுத்தப்பட வேண்டும். காலமும் வீரத்மிழர்களின் ஆண்மையுமே அதற்கு வழிகோலட்டும் அதனிடையில், ஆச்சாரியாரின், பிராயச்சித்த பருவநிகழ்ச்சிகளை கண்டுகளிப்போம்.

திராவிட நாடு 28.6.1942