அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சங்கராச்சாரி பதவி தற்கொலை!
திடுக்கிடவேண்டாம்! அழ ஆரம்பித்து விடாதுர்கள்! அவர் செய்து கொள்வது பதவித் தற்கொலையேயொழிய, உயிரைப் போக் கடித்துக்கொள்ளும் செயலல்ல. இந்த நேரத்தில், சங்கராச்சாரியார், அரைப்படியை ஆழாக்காகக் காய்ச்சிய பாலிலே, சீனியும் குங்குமப் பூவும் கலந்து, சாரையும் பாதாமும் சேர்த்து நாதன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, பாலைப் பருகி, பஞ்சணை மீதுள்ள மான்தோலாசனத்தில் சாய்ந்துகொண்டு, மாத வரவுக் கணக்கையும் பாதக்காணிக்கை வருவாயையும் கொண்டு, மாத வரவுக் கணக்கையும் பாதக்காணிக்கை வருவாயையும் பிரதானியர் கூறக்கேட்டு, எம்பெருமான் திருநாமம் என்றென்றும் வாழ்க, என்று பூரிப்போடு கூறிக்கொண்டிருப்பார். ஆகவே, அவருக்கோராபத்துமில்லை. ஆனால், மன்னார்குடியில் ஏப்ரல் 11-ந் தேதி மாலை பேசிய ஜகத்குரு சங்கராச்சாரியார், பிறருக்குக் கூறிய யோசனையின்படி பேசிய ஜகத்குரு சங்கராச்சாரியார், பிறருக்குக் கூறிய யோசனையின்படி அவரே நடப்பதாக இருப்பின், பல்லாக்கும் பரிவாரமும், பாதக்காணிக்கையும், பட்டணப் பிரவேசமும, பணியும் பட்டாடையும், பேழையும் பிறவும் விடுத்து, துறந்து வெளியேறிவிட வேண்டிவரும். அது சங்கராச்சாரியார் என்ற பதவிக்குத் தற்கொலை செய்துகொள்வது போன்றதாகும். அக்கருத்தினைக் கொண்ட இந்தலைப்பு அமைந்துள்ளதாதலின், அவரின் அடியார்கள், அழுத கண்களைத் துடைத்துக்கொண்டு, மேலும் படிக்கக் கோருகிறோம்.

ஏப்ரல் 11ந் தேதி, மன்னார்குடியில் ஜகத்குரு சங்கராச்சாரியார் பேசியுள்ளார் அவரது சொற்பொழிவிலே காணப்படும் சில கருத்துகள், பிறருக்கு உபதேசமாக இருத்தலுடன், அவருக்கே, சட்டதிட்டமாகவும் அமைவதாயின், அவரது பதவியைத் துறந்து, பாதசாரியாகி, பாட்டாளியாகி, பாராருக்குழைக்கும் பண்பினராகி அவர் வெளிவந்துவிடுதல் வேண்டும்.

நீதி கெட்டது, கெடுக என் ஆயுள் என்றான் தமிழ் மன்னனொருவன். இதோ சங்கராச்சாரியார் அதுபோல், தமது பதவியினால் வரும், பதங்கள், பாசங்கள், பார்கெடவே உள்ளனவென்பதைத் தமது சொற்பொழிவால் விளக்கிவிட்டார். எனவே, அவர் மறத்தமிழ் மன்னன் போல், கெடுக என் பதவி என்று கூறத் துணிவாரா என்று கேட்கிறோம்.

பயங்கரமான இந்தப் போர், பலரைப் பல கூற வைக்கிறது. சிலரை, நேற்றொன்றும் இன்றொன்றும் இனிவேறொன்றும் பேசவைக்கிறது. இந்த இயல்பு படைத்ததாலேயே காங்கிரசார், முன்பு அகிம்சை என்றனர், இன்று ஆயுதம் என்கின்றனர். சங்கராச்சாரியார் தாமும் சில கூறலே முறை என கருதினார் போலும், அவர் சொன்ன சொற்கள் இவை.

இவ்வருஷம் மிராசுதாரர்கள் தங்களுடைய நியாயமான செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை ஏழைகளுக்கு அன்னமிடுவதில் செலவு செய்ய வேண்டுமென்றும் வீடு கட்டுவதோ, நிலம் வாங்குவதோ, ஆபரணங்கள் செய்வதோ, பாங்கியில் போடுவதோ, கூடாதென்றும், வியாபாரிகளும் இதரர்களும் அதோ மாதிரி இவ்வருஷம் கிடைக்கும் லாபத்தை மேற்சொன்ன வழியில் வினயோகிக்க வேண்டுமென்றும், அந்தப் பணத்தைத் தன்னுடைய குடும்பச் செலவுக்கு உபயோகப்படுத்தாமல் அதை விஷமாகப் பாலிக்கவேண்டுமென்றம், ஸ்வாமிகள் கூறினார், என மித்திரன் தெரிவிக்கிறது.

ஈட்டிய பொருளில், வாழ்க்கைக்குத் தேவையானது போக, மீதிறை சொத்தாகவும் சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டுமென்ற உருக்கமான இந்த உபதேசம், துறவு நிலைபீண்டுள்ளவரால், இல்லறவாசிகளுக்க எடுத்தோதப்படுகிறது. மிகச் சரி! ஆனால், ஸ்வாமிகளின் நிலைமை என்ன? அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது, பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே, பக்தகோடிகள் மேலும் மேலும் பணந்தரவில்லையே. சூடிய பூ, வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே. பணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர வேறு கவலையற்று, பாதத்தைப் பலர் தடவிக் கண்களில் ஒத்திக்கொள்ள, பரமனின் பிரதிநிதி நான் என்று கூறிக்ககொண்டு, கரி பரி காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரியாருடையது. முதலில்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்துகொண்டு, மிராசுதாரர், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்கு இதோபதேசமம் புரிவது, ஏதேனும் கொருளுடையதாகுமா! கன்னக்கோலான் களவின் கேடுபற்றியும், காம உள்ளத்தான், ஒழுக்க போதனையும், கசடன் கற்றதனாலாய பயனையும் எடுத்துக் கூறுவது, எள்ளி நகையாடக் கூடியதன்றோ! சாமரம் வீச, சல்லாபிக்க, சோபித வாழ்வுக்குச் சொத்துத் தர, பரிவாரம் பெற்றுள்ள சங்கராச்சாரியார், வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக, மீதியை ஏழைக்களிக்கவேண்டும் என்று கூறுகிறார் இந்த ஏட்டுச் சுரையைக் கண்டு எவரே போற்றுவர்! யாரை ஏய்த்துவிட முடியுமென்று இவர் கனவு காண்கிறார் என்று கேட்கிறோம்.

இல்லறவாசிகள், நியாயமான செலவு போக, மீந்த பணத்தை விஷம் எனக் கருதவேண்டுமென்கிறார் வேத விற்பன்னர்; வெகு நன்று. நாம் இல்லறவாசிகள், இன்னின்னவற்றையே நியாயமான செலவாகக் கொள்ளல் வேண்டும் என்றுங்குறிப்பிடத் தயார்! விஷம், அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார். ஆனால் ஸ்வாமிகாள்! தங்கள் விஷம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை என்ற தத்துவாசிரியருக்கு, துறவுக்கு மடம் ஏன், சொத்து சுகம் எதுக்கு, பணம் பரிவாரம் ஆகுமா? விஷமென்று எந்தப் பணத்தைக் குறிப்பிடுகிறீரோ, அதனைத் தாங்கள் பருகியபடியே தானே இருக்கிறீர்? மற்றவர்களாவது, ஓரளவுக்கேனம் உழைத்து, தமது திறமையையும் காட்டிப்பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பதுண்டா? உடலில் உழைப்பு தரும் ஓய்ச்சல் என்ற அனுபவம் தங்கட்குத் தெரியுமா? உழைத்தும பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்குண்டா? பசியை நீரறிவீரா! பஞ்சத்தில் அடிபட்டதுண்டா? இல்லையே! உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்களின் வாழ்க்கையின் வசீகரம், தங்கள் திறமையால் கித்ததுமல்ல! பிறரின் மடத்தனத்தால், தங்கட்குக் கிடைப்பது. இத்தகைய வாழ்விலே இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்றுரைக்க முடியுமா - என்று சங்கராச்சாரியாரை நாம் உறைகூவி அழைத்துக் கேட்கிறோம். அவரோ, அவரது அதிகாரம் பெற்ற வேறு யாரேனுமோ கூறட்டும் கேட்போம்.

வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக, மிகுவதை ஏழைகளுக்குத் தரவேண்டுமென்று இவர் மொழிகிறார். இவர் துறவியினுடைய நியாயமான செலவு போக, மேலும பணம் குவிப்பானேன்! இவரது இன்றைய வாழ்க்கை நியாயமான செலவினங்கள் கொண்டதுதானா!

துக்கஞ் சுகமான கட்டறிவு கெட்டவர்க்குத் திக்குண்டோ வெங்குஞ் சிவாலயமா - மக்கினிக்குப் பிச்சைப் பொதுநீழனீர் பேரிதுவே பேசார்தம் மிச்சையிருப் பேகாந்தத் தே துறவியின் இலக்கத்தை இங்ஙன முரைக்கிறார் கண்ணுடைய வள்ளலார், ஒழிவிலொடுக்கமெனும் நூற்கண்.

பசித்தால் புசிப்பது, இருத்தல் பொதுச்சாவடியோ, மரநிழலோ, தாகச் தணிய நீர், ஏகாந்தத்தில் இச்சை, இவையே துறவியின் இலக்கணமாம். இத்துடன், சங்கராச்சாரியாரின் இன்றைய வாழ்க்கை முறையைச் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்! நியாயமா அவர் வாழும் முறை? எவ்வளவு சுகானுபவம்! உபதேசம் ஊராருக்கு, இவர்க்கோ உல்லாசம்! இது நீதிதானா? என்று கேட்கிறோம்.
அரச உரிமையை, அந்தப்புரத்தை, அழகு மனைவியை, கொஞ்சும் குழவியைத் துறந்தார் புத்தர். அவர் துறவி, இவர், மடம், மட ஊழியர், மதியிழந்தோர் தரும் தனம், அத் தனத்தாற் பெறும் இன்பம். இவற்றிலே நீந்துகிறார். இவர் உபதேசிக்கவும் முன்வருகிறார்! ஊராரும் கேட்கின்றனர்! அதிலும் எந்த இடத்தில் தமிழகத்தில்! அரச போகத்தைத் துறந்த இளங்கோவடிகளென்ன. காதலையும் கருந்தனத்தையிந் துறந்த மணிமேகலையென்ன, மற்றும் பலரும் வதிந்த இங்குத் துறவுக் கோலமும் துரைமார் வாழ்புக்கு மேற்பட்டதான வாழ்வும் பெற்றுள்ள ஆரியத் தலைவர், உபதேசம் செய்கிறார்.

துறவியோ, தவம்புரிவோர் தவத்தின் இயல்போ எப்பொருளிடத்தும் பற்றிலாமை பொருளோ, பற்று உண்டாக்கும், மோக முறச்செய்யும். எனவே, பற்றற்ற பண்பு வேண்டினோர் உடைமை வேண்டா, என்றார் வள்ளுவனார்.

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து

எனவே, சங்கராச்சாரியார் சாற்றியபடி தாம் நடக்க முன்வரவேண்டும். உழைத்து வாழ, ஊராரின் உபதேசகராக இராமல், பாடுபட முன்வரவேண்டும். மடத்தை விடவேண்டும். மாநிதி துறக்கவேண்டும் இதந்தேடல் கூடாது. இனத்தாரை வாழவைக்கும் இயல்பினை நீக்கவேண்டும். மனிதராக வேண்டும். மனதுமறுபிறவி எடுக்குமா!!

மற்றொன்று கூறுகிறார். ஆஸ்திகமும் அறியாமையும் ஒன்று. இதுவரை பகவானைத் தொழவில்லை என்பது மற்றொன்று. இடருற்றபோது ஈசனை வழுத்தினால் போதும் என்பது இரண்டும், எத்துணை மடமையின் சிகரம் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. மக்கள் இன்றுவரை, பகவானை மட்டுமல்ல. அவரது பிரதிநிதியென்றுரைக்கும் பரப்பிரம்ம சொரூபிகளையும் தொழுது வந்தனர் வருகின்றனர். கண்ட பலன் என்ன? இதோ குண்டுவீச்சு! கடலில் கொந்தளிப்பு!! உள்ளத்திலே பதைப்பு!! இதுவரை தொழாதவர் போலவும், இன்றெனும் தொழுது பாருங்கள் என்று. கெஞ்சும் முறையிலும் சங்கராச்சாரியார் பெசுவதன் சூதை உணருங்கள். சண்டை நேரத்திலே, மக்கள் உயிரையும் உடைமையும், ஊரையும் உற்றாரையும் காப்பாற்றும் வேலையிலே இருந்துவிட்டுக் கோயிற் பெருச்சாளிக்குக் பொழுப்பேற்றும் வேலையைச் செய்ய மறந்துவிட்டால், ஆரிய இனம் இளைக்குமே என்றெண்ணியே போர் முடியுமட்டேனம் ஆண்டவனைத் தொழுவீராக என்று கூறினார்.

இத்தகைய பேச்சு, பாமரரை மேலும் மடத்தனத்தில் ஆழ்த்தும் சூது என்று நாம் கூறுகிறோம். இவரது உபதேசத்தின்படி, முதலிலே, இவர் தமது சொத்து சுகத்தைத் துறந்து, பாடுபட்டுழைத்து, பசித்தால் புசித்து.) வியர்த்தால் குளித்து வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளட்டும. பார்ப்போம். சங்கராச்சாரியார் என்ற பதவியைத் துறக்கத் தயாரா? என்று கேட்கிறோம் உண்டா பதில்! ஊரார் கேட்பரா!

(திராவிட நாடு - 19.04.1942)