அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேனுடன் வேம்பு!

“அது சரி, ஓய் குப்பு ஜோஸ்யரே, மாப்பிள்ளைக்கும் சம்மதந்தானோ. நம்ம பெண் அவனுக்குப் பிடித்தந்தானோ” என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, கலியாணத்தரகர், குப்பு ஜோஸ்யர் “அதைக் கேட்கவே வேண்டாம். உம்மபெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிள்ளையாண்டன் ஒத்தைக் காலில் நின்று தவங்கிடக்கிறான்” என்றுகூறிட பெண்ணின் தகப்பனார் மிக்க மகிழ்கிறார். கருத்தொத்து வாழுவர் மணமக்கள் என்று எண்ணி ஆனந்திக்கிறார். இவ்வளவு நல்ல செய்தியைக் கொண்டு வந்தவருக்குப் பாலும் பட்சணமும் பணமும் தாராளமாக.... காலையிலே இதுபெற்று, மாலையிலே மாப்பிள்ளை வீடு போகிறார் ஜோஸ்யர். மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் எப்படிப்பட்ட குணமுள்ளவளா வந்து வாய்க்குமோ என்பதிலே யோசனை. “வாங்கோ ஜோசியர்வாள்! பெண் வீட்டாரைக் கண்டு பேசினீளோ. பெண் எப்படிப்பட்டவள், குணம் எப்படி? குடித்தனத்திலே ஒழுங்காக நடக்குமோ?” என்று விசாரிக்கிறார் மாப்பிள்ளையின் தகப்பனார். “விவேகமான பெண்! குணவதி! தன் வீடு வேறு, மாமி வீடுவேறு என்று வித்தியாசம் பார்க்காமல், எல்லோரையும் ஒரே கண்ணால் கவனித்து நடப்பாள்” என்றார் ஜோதிடர். மாப்பிள்ளை வீட்டாருக்கு உள்ளம் குளிர்ந்தது.

முகூர்த்தம், விடியுமுன்! ஒரேகாலால் தவங்கிடக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே கண்ணால் கவனிக்கும் குணவதிக்கும் திருமணம் நடந்தேறியது. கதிரோனும் கிளம்பினான். மாப்பிள்ளைக்கு ஒருகால் ஊனம், நொண்டி! பெண்ணுக்கோ கண் நொள்ளை! ஒரே கண் மட்டுமே சரியாக இருந்தது, நொண்டி மாப்பிள்ளைக்கு நொள்ளைக்கண் நாயகி! சம்பந்திகளுக்குள் சண்டை! இரு குடும்பத்தினரும் குப்பு ஜோதிடரைக் குட்டினர். ஜோதிடர், “நான் முன்னமேயே சொன்னேனே, மாப்பிள்ளை ஒரே காலால் நிற்கிறான் என்று” என்று பெண் வீட்டாருக்குக் கூறிவிட்டு, “பெண் எல்லோரையும் ஒரே கண்ணால் கவனித்துக் கொள்ளும் என்று நான் ஏற்கனவே கூறினேனே” என்று மாப்பிள்ளை வீட்டாருக்கும் சமாதானங் கூறினாராம்.

இத்தகைய குப்பு ஜோதிடர் நிலைமையிலே அன்பர் ஆச்சாரியார் இருக்கிறார்! தரகர்களின் தன்மையே தனிரகம்! அதை ஆச்சாரியாரின் பேச்சும் போக்கும் நன்கு காட்டுகிறது.

எந்தவிதமாகவது, கலியாணத்தை முடித்து வைத்தால் தனக்கு இலாபம் உண்டு என்பது தெரிந்து குப்பு ஜோதிடர் நடந்துகொண்டதைப்போல், எப்படியோ ஒருவிதத்தில், தந்திரமாக காங்கிரசுக்கும் லீகுக்கும், இடையே சமரசம் உண்டாக்கி வைத்தால் தமக்குப் பதவிப்பரிசு கிடைக்குமென்று ஆச்சாரியார் கருதுகிறார், எனவேதான் அவர் எப்படியோ தாலி கழுத்திலேறினால் தமக்குப் பணம் கிடைக்கு மென்று எண்ணிய தரகன்போல், இருசாரருக்கும், சமர்த்தான மொழி புகன்று ஜோடி சேர்க்கப் பார்க்கிறார்.

சஞ்சலப்படும் சகாக்களிடமும் சீறும் சீடர்கள் முன்னிலையிலும், “நான் பாகிஸ்தான் கோரும் உரிமை முஸ்லீம்களுக்கு உண்டென்பதைக் காங்கிரஸ், கால நெருக்கடியை உத்தேசித்து ஒப்புக்கொள்ள வேண்டுமென்று கூறுகிறேனே யன்றி, பாகிஸ்தான் தந்துவிட வேண்டுமென்று கூறவில்லை” என்று தந்திரமாகப் பேசுகிறார். லீகர்கள், திராவிடர்கள் கூடிக் கேட்கையிலே, “சுயநிர்ணய உரிமையை நான் மறுப்பேனா? உங்கள் கோரிக்கை பிரிவினை எனில், அதைப்பெற்றுக்கொள்ளுங்கள். நான் தடை செய்யேன்” என்று கூறுகிறார். தமது தந்திரப் பேச்சினால் இருசாரரையும் ஏய்க்கப் பார்க்கிறார். இறை கிடைக்குமென்று அலைந்து திரிகிறார். புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்று மிரட்டி பழைய தோழர்களைத் தமது பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். அதைப்போலவே, புதிய நண்பர்களைப் பெற, அந்தக் கூட்டத்திடம் புன்னகை புரிந்தும், புகழுரை வீசியும் பார்க்கிறார். இந்தப் போக்கு ஆச்சாரியாருக்கு ஆரம்பத்திலே பலன்தரக்கூடும் என்றாலும், வெகுவிரைவிலே இது ஆபத்தையே விளைவிக்கும். இருசாரரின் சந்தேகமும், எதிர்ப்பும் பலப்பட்டு, இடையே இவர் சிக்கிக்கொண்டு சிதைவார். எனவே இந்தத் தரகுநிலையிலிருந்து நீங்கி, உண்மை உணரச்செய்து, ஏதாவதோர் பக்கம் இறுதிவரை பார்ப்பதென்று நின்றுழைக்க வேண்டும். இல்லையேல், தர்மதுரை, ஆச்சாரியார் செல்லுமிடமெங்கும் தொடரும் என்று நாம் அஞ்சுகிறோம்.

எண்ணித்துணிக கருமம்! துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பது வள்ளுவர் வாக்கு. ஆச்சாரியார், இப்போது கொண்டுள்ள அபிப்பிராயத்தைச் சமயம் கிடைத்ததும் மாற்றிவிடத் தயார் என்று தமது சகாக்களுக்குத் தேறுதல் கூறவே இங்ஙனம் பேசுகிறாரா என்று நாம் கேட்கிறோம். அபிப்பிராயங்கள் மாறுவது இயற்கை மட்டுமல்ல, மனவளர்ச்சிக்கேற்றபடி அதுமுறையுமாகும். ஆனால் அதிலே உண்மை உறவாட வேண்டும், பாவனை பரதமிடுவது பாதகம். தெளிவு ஏற்படாததால், ஒரு கருத்தைக் கொண்டவர், பின்னர் தெளிந்து, அக்கருத்தை மாற்றிக் கொள்வர். இதை உலகிலே நாம் காண்கிறோம். இம்முறையிலே ஆச்சாரியார் தமது பழங்கருத்தை மாற்றிக் கொண்டிருப்பின் நாம் மகிழ்வோம், ஆனால் அவரது சொற்பொழிவுகளிலிருந்து நமக்குச் சந்தேகம் பலப்படுகிறதே யன்றி, அவரிடம் நம்பிக்கை உதிக்கவில்லை.

“பாகிஸ்தான் திட்டத்தைப்பற்றி நான் முன்பு தவறான கருத்துகொண்டிருந்தேன். அதனைப் பழித்தேன். அதனை ஆதரித்தோரை இழித்துப் பேசினேன். இன்றோ, அந்தப் பாகிஸ்தான் தேவையானதும் நியாயமானதும், தடுக்க முடியாததுமான ஓர் நீதி என்பதை உணர்ந்தேன், எனவே அதனை நான் ஆதரிக்கிறேன்” என்று ஆச்சாரியார் கூறினால், அவரது மனம் உண்மையிலேயே மாறிவிட்டதென்பதை யறிந்துநாம் மகிழ்வோம். ஆனால் ஆச்சாரியார் அதுபோல் பேசுகின்றாரில்லை.

சென்னை வாலிபர் மாநாட்டிலே கடந்த வாரம் பேசுகையில் ஆச்சாரியார், “பாகிஸ்தான் குழந்தையை வெட்டுவது போலாகும். தாயைத் தண்டிப்பது போலாகும் என்றெல்லாம் நான் கூறியது உண்மையே. இவ்விதம் நான் முன்பு சொல்கையில் பாகிஸ்தான் ஓர் அபிப்பிராயமாகவே இருந்தது. இப்போது அது உண்மை விஷயமாக மாறியிருக்கிறது. படித்தவர் படிக்காதவர்கள் முதலிய ஏராளமான பேர்கள் அதை உண்மை விஷயமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிவிட்டு, “மீண்டும் பாகிஸ்தான் விஷயம் வெறும் அபிப்பிராய
மான நிலைமைக்கு மாறினால் நானும் பாகிஸ்தான் கெட்டது என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு மாறிவிடுவேன்” என்று சொல்கிறார்.

இந்தப் பேச்சிலே புதைந்துள்ள பயங்கரமான உண்மையைச் சற்று ஊன்றிப்பார்க்கும்படி தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

எட்டினால் குடுமி எட்டாவிட்டால் கால் என்ற பழமொழிக்கும் ஆச்சாரியாரின் பேச்சிலிருந்து தெரியவரும் அவரது போக்குக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது என்று கேட்கிறோம்.

முன்பு பாகிஸ்தான் வெறும் அபிப்பிராயமாக இருந்தது என்று ஆச்சாரியார் கூறுவதன் கருத்து என்ன? அகில இந்திய முஸ்லீம்லீக் மாநாட்டிலே பாகிஸ்தான் தீர்மானமாகி, லீக் தலைவரால் விளக்கப்
பட்டு, முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டபிறகு, ஆச்சாரியார், அதனை “வெறும் அபிப்பிராயம்” என்று எப்படிக் கருதலாம்! வெட்டிப்பேச்சு பேசுபவரா ஜனாப் ஜின்னா! லீகின் மூலாதாரக் கொள்கையாக பாகிஸ்தான் அமைந்தது சென்னையில் நடந்த மாநாட்டிலே. அப்போதும் ஆச்சாரியார், பாரதமாதாவை வெட்டும் கதையைத்தான் பிதற்றினார். அவரது பிரசாரம், அவரது சீடர்களிடையே பேதமையையும் ஆணவத்தையும் வெறியையும் வளர்த்தது. இன்று ஆச்சாரியாருக்குப் பாகிஸ்தான் உண்மையான விஷயமாகத் தெரிகிறதாம்! ஆனால் இதுவாவது நிலைக்குமா என்றால், இல்லை, மீண்டும் பாகிஸ்தான் வெறும் அபிப்பிராயமாக மாறும்போது இவர் பாகிஸ்தான் கெட்டது என்று கூறும் நிலைமைக்கும் மாறிவிடுவாராம். எவ்வளவு மமதை! இவர் கூறுவதே வேதம், காட்டுவதே வழி, தீட்டுவதே திட்டம், எந்தெந்த நேரத்திற்கு எப்படி எப்படித் தோன்றுகிறதோ அவ்விதம் மாறுவார், மொழிவார், அதனையே மக்கள் கொள்ளவேண்டுமாம்! ஜார்கூட இங்ஙனம் கூறினானென்று சரிதம் சாற்றக்காணோம்.

காலையிலே நான் சாது, மாலையிலே சூரன், மீண்டும் பொழுது விடிந்ததும் சாது என்று கூறினானாம் குடியன். போதைக் கேற்ற போக்கு அவனுக்கு! அதுபோல் ஆச்சாரியார், தமக்குப் பதவி வேட்கை ஏற்படும்போது பாகிஸ்தானை ஆதரித்துப் பேசுவார், அந்த விடாய் தீர்ந்ததும், பாகிஸ்தானைப் பழிப்பார் என்றே தோன்றுகிறது.

ஆச்சாரியார், இதுபோல், எதற்கும் கட்டுப்படமாட்டார், தமது கருத்தையேகூட அவர் கவைக்கு உபயோகிக்கத் துணைகொள்வாரே யன்றி கருத்தைக் கடைப்பிடித்தே நடப்பார் என்றும் கூறமுடியாது.

திருச்சி தேவரை டாக்டர் ராஜன் முறியடித்தபோது, டாக்டர் ராஜனைக் கண்டித்த அதே ஆச்சாரியார், பதவியில் அமரும் சமயம் வந்தபோது அதே டாக்டர் ராஜனுக்கு மந்திரிவேலையை அளித்தார். அவரது மனம் அவ்வளவு வளையும் பக்குவம் பெற்றிருக்கிறது.

சட்டசபைப் பிரவேசமே கூடாது என்று சண்டமாருதப் பிரசாரம் புரிந்தவர், தாமும் தமது சகாக்களும் சட்டசபை நுழையமுடியும் என்று தெரிந்ததும், புது வேடம் புனையவில்லையா!

எந்த வெள்ளையரை மூட்டை முடிச்சுடன் விரட்டப் போவதாகக் கூறினாரோ, அவர்களையே, தமது பதவியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, “வெள்ளையர் குரோட்டன்ஸ், குளிர்ந்த நீர் தெளித்தவண்ணம் இருக்கவேண்டும்” என்று கூறவில்லையா! எர்ஸ்க்கைன் பிரபுவின் பிரியத்தைப் பெறவில்லையா! தமது காரியம் பலிக்க, எதையும் செய்யவே ஆச்சாரியார் எப்போதும் தயாராக இருந்தார். இது அவரது சொந்த, தனிப்பட்ட இயல்பு அல்ல! இன இயல்பு! இதை மறப்போர், உண்மையை உணரார்!

பாகிஸ்தான் பிரச்னையை, காலநெருக்கடியுடன் சம்பந்தப்படுத்தி மட்டுமே பேசிவருகிறார் ஆச்சாரியார். இதிலேதான் ஆரிய சூட்சி ஆழப்புதைந்திருக்கிறது.

“ஜப்பானியரால் நாட்டுக்கு ஆபத்து நெருங்குகிறது. இந்த நேரத்திலே நாட்டிலே தேசீய சர்க்கார் வேண்டும். அதுபெற, லீகுடன் சமரசம் தேவை, லீகுடன் சமரசம்பெற, அது கோரும் பாகிஸ்தானை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்” என்று மொழிகிறார் சாணக்கிய சந்ததியார்.

அவர் பாகிஸ்தானைவிட, காலநெருக்கடி பற்றியே அதிகமாக வற்புறுத்திவருவதன் கருத்தை ஆராய்ந்து நோக்காது அவசர ஆனந்தமடைவோர் பின்னர் கைபிசைந்துகொள்ள நேரிடும்.

ஏகாதசி விரதமிருப்பது துவாதசி விருந்துண்ணவே, ஏகபத்னி விரதமிருப்பது குடும்ப பாரத்தைப் பெருக்காதிருக்கவே என்று ஆரிய சிகாமணிகள் வியாக்யானம் கூறுவர். அதுபோல், பாகிஸ்தானை ஒப்புக்கொள்வதாகக் கூறுவது பரிபாலனத்தைப் பெறவேயாகும், என்று ஆச்சாரியார் எண்ணுவார்.

தேசிய சர்க்கார் அமைத்து ஆண்டுவிட்டு, போர் முடிந்து புது அரசியல், வகுக்குங்காலை, பழையபடி பாகிஸ்தான் விஷயமாகப் பிரச்சனை கிளம்பியதும், காங்கிரசும் லீகும் மோதிக்கொள்ள நேரிட்டால், ஆச்சாரியார், அந்த நேரத்திலே, பாகிஸ்தானை எதிர்க்கத் தொடங்குவார். அவருக்கு அந்தத் துணிவு உண்டு.

இத்தனை நாளாக நாம் ஒன்றுகூடி ஆண்டுகொண்டு வந்தோமே” அதுபோல் இனியும் இருப்போம், பாகிஸ்தான் வேண்டாம். “மக்கள் பாகிஸ்தானை விரும்பவில்லை” நான் நெருக்கடியான நேரத்திலே வேதனைகூடாதென்பதற்காகப் பாகிஸ்தான் உரிமையை ஒப்புக்கொண்டேன். பாகிஸ்தான் கேட்கும் உரிமை உண்டென்பதை ஒப்புக்கொண்டேனேயன்றி பாகிஸ்தான் சரியானது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே” என்று கூறுவார். அதற்குத் தமது பழைய பேச்சை எடுத்துப் புதுவியாக்யானம் கூறிக்காட்டுவார், பாரதமாதாவின் படம் தீட்டுவார்!

உண்மையில் அவர் உளம்நிறைந்த அன்பும் தூய்மையும் கொண்டவரெனில், பாகிஸ்தான் திராவிடஸ்தான் கோரிக்கைகளை நியாயமானது என்று கூறவேண்டும், காலத்தின் நெருக்கடிபற்றியோ, தேசீய சர்க்கார் அமைப்பது பற்றியோ இதில் கலப்பது கூடாது. பிரிவினைத்திட்டம், காலம், அமைதியாக இருந்தபோதே பிறந்தது; போர்க்குழவியல்ல!

காலத்தின் நெருக்கடியைத் தீர்த்து எதிரியை முறியடிக்க இந்த வேதியர் தேவை என்று நாம் கருதவில்லை. டாங்கி, பீரங்கி, குண்டு, தளவாடங்கள், காலத்தின் போக்கை மாற்றியே தீரும், குட்டிக் கதைகள் தேவையில்லை. தேசிய சர்க்கார் என்பது விமானப்படையா, தரைப்படையா, கப்பற்படையா? இல்லை, பதவிப்படை! அதைக்கொண்டு எதிரியை விரட்டமுடியாது. அது இருந்தும் பிரான்சும் பிறவும் வீழ்ந்தன. போர்நிலைமை என்ன?

ரஷியகளத்திலே, ஜெர்மானியரின் திட்டம் குலைந்துவிட்டது. ரணகளச்சூரர் ரோமல் ஆப்பிரிக்கப் பாலைவனத்திலே, திட்டம் தகர்ந்து திணருகிறார். சீனர்கள் இரத்த ஆற்றில் நீந்தி, ஜப்பானியப் பிணக்குவியலைப் பெருக்குகின்றனர். ஜெர்மனிமீதோ ஆயிரம் பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு வீசுகின்றன. சொலோன் நகரிலே கிளம்பிய ஜ்வாலை, ஹாலந்திலே தெரிந்ததாம். ஒரேநாள் குண்டுவீச்சு அங்கு, பல இலட்சம் ஜெர்மானியர், வேறு பட்டினங்களுக்கு ஓடுகின்றனர். எசென் மீதும் 1000 விமானங்கள் தாக்கின. இவையத்தனையும் பிரிட்டனிலேயே செய்யப்பட்ட விமானங்கள். இந்தப்படையுடன் அமெரிக்கப்படையும் சேர்ந்தால், நிலைமை என்ன ஆகும்! ஜெர்மனியின் கதி இதுவென்றால், ஜப்பானின் ஜம்பம் எத்தனைநாள் செல்லும். இலங்கை இருப்புக்கோட்டையாகி வருகிறது. அங்கிருந்து, பிரிட்டிஷார் ஜப்பானை எதிர்த்துத் தாக்கத் தொடங்கி, அந்தமானைப்பிடித்து, மலேயாவை மீட்டு, பர்மாவைப்பிடித்து, ஜப்பானியரை விரட்டியடிக்கப் போகின்றனர். இதற்குள் டோக்கியோ தூளாகும்படி அமெரிக்க விமானங்கள் குண்டுவீசும். இந்தக்கிலி கொண்டே, ஜப்பான் அலாஸ்காவிலே அமெரிக்க விமான தளத்தைத் தாக்கிற்று.

ரஷியக்களத்திலே பிணம் புதைக்கும் வேலை, ஜெர்மனியிலே ஏ.ஆர்.பி. வேலை, பிரான்சிலே புரட்சி வீரர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கும் வேலை, நார்வேயில் படை எடுப்பைத் தடுக்க அரண் அமைக்கும் வேலை, லிபியாவிலே தப்பி ஓட மார்க்கம் தேடும் வேலை, இவைகளே ஜெர்மனியின் இப்போதைய வேலைகள்!

இந்நிலையில், போர் என்ற பயங்காட்டி புது உறவு தேடி, பின்னர் அவர்களைக் கைவிட்டுவிடும் கள்ளக்கருத்துடன் ஆச்சாரியார் உலவுவதுகூடாது என்போம். உண்மையிலேயே பிரிவினைத் திட்டம் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டால், அதற்கான முயற்சிக்கு யாவரும் ஒரே முகாமில் கூடுவோம்! ஆச்சாரியார் அதற்குச் சம்மதிக்கிறாரா, அன்றி கலியாணத் தரகர்போல், ஒரு சொல் இரு பொருள் அமையும் மொழிபேசி காலந்தள்ள போகிறாரா என்று கேட்கிறோம்.
வேட்டையாடி களைத்து, இரத்தந் தோய்ந்த வாயுடன் விளங்கும் வேங்கைபோல், கருவிழியின் நீரும், மையும் கலந்து கண்ணாடிக்கன்னத்தில், உண்டாக்கிய கரையும், புரண்டுகிடந்த தால், சுருண்டுகிடந்த கூந்தலும், கோபமும் சோகமும் கூத்தாடியதால் பொழிந்த வியர்வையும் கொண்டு, கைகேயி காணப் பட்டாள். அவளால் வீழ்த்தப்பட்ட வேந்தன், பஞ்சணைக்கருகே தரையிலே படுத்துக்கிடந்தான். நரையுந் திரையும் தெரியாதவிதமாக ஆனந்த வாழ்வு வாழ்ந்த தசரதன், கண்களில் நீர்புரள, மேல்மூச்சு வாங்கக் கீழே உருண்டிருந்தபோது, மந்திரி நுழைந்தார். மன்னனைக் கண்டார். “மயக்கமோ!” என்றார். “ஆம், சற்று சோகமும்” என்றாள் மதுரமொழி மாதரசி. பின்னர் வரவோ? என்று கேட்டான் மந்திரி. “வேண்டாம், மன்னன் ஆணையை நானே மொழிவேன், இராமன் 14 ஆண்டு காடேகட்டும், பரதன் முடி சூடட்டும் இதுவே சக்கரவர்த்தியின் கட்டளை” என்று சாற்றினாள் கேகயன் குமரி! இடிகேட்ட நாகமென்றானான் மந்திரி!

ஆரிய வீரனின் காதையாகிய இராமயணத்திலே இக்கட்டம் மந்தரையின் கலகம், கைகேயினுடைய மனமாற்றம், தசரதன் திகைப்பு, பட்ட மறுப்பு என்ற ரசங்களுடன் விளங்குவதைப் புராணீகர்கள் உரைத்து, உரைத்து அலுப்புதீர உருசியுள்ள பாலைப் பருகி, மேலும் பேசுவர் “இராமன் மரவுரி தரித்தான், சீதையும் புறப்பட்டாள், இலட்சுமணன் இங்கு இனி ஏன் நான் இருப்பேன் என்றான், மூவரும், காடேகினர்” என்று முடிப்பார். மக்கள் கண் துடைப்பர்!
“அந்த மந்திரி ஒரு மதியிலி!” என்றுரைப்பார் ஆச்சாரியார், எவரேனும் இந்தக் கட்டத்தைப்பற்றி அவரது கருத்து என்ன என்று கேட்பின்.

உண்மையில், சுமந்திரருக்குப் பதிலாக அன்பர் ஆச்சாரியார், கைகேயியின் பள்ளியறை சென்றிருப்பின் வேந்தன் விம்முவதைக் கண்டு வேல்விழியாள் விளம்பியதைக் கேட்டு, என்ன செய்திருப்பார் என்று எண்ணுகிறீர்கள்? சுமத்திரன்போல், இராமனைக் காடேற்றும் வேலையை விரைவில் செய்தா இருப்பார்! இல்லை! இல்லை!

“கேகய குமாரி! மெச்சினேன் உன்மதியை. பாராளும் திறன் படைத்தோன் பரதனே” என்றுரைப்பார்.

“மந்திரியாரே, மகிழ்ச்சி கொண்டேன். மன்னர், இதனை மறுத்து மெத்த வாதாடினார்” என்று கைகேயி கூறுவாள். “அன்பு, அவருக்குக் கருத்தை மறைத்திடும் திரையாயிற்று” என்பார் ஆச்சாரியார், சுமந்திரர் ஸ்தானத்திலே இருந்திருப்பின்.

“மன்னனை நான் தேற்றுவேன், மகாராணி தங்களுக்குச் சிரமம் வேண்டாம். மலர்ச்சோலைக்குச் சென்று உலவுங்கள் மனநிம்மதி ஏற்படும்” என்று கூறி, கைகேயியை அனுப்பிவிட்டு, தசரதனைத்தூக்கி நிறுத்தி, தலையை உயர்த்தி “மன்னா! மனவேதனையை விடும். கேகயன் மகளின் புத்திகூர்மை உமது ஆவியை அழிக்குமென்று அஞ்சாதீர். நான் இருக்கிறேன்.” என்று கூறுவார். “நீ இருக்கிறாயா? மிக நன்று. இராமன் போய், இங்கு எவர் இருந்தாலென்ன, இலாதொழியிலென்ன, நானே இருப்பேனோ இறப்பேனோ” என்று மன்னன் அழ, மந்திரி புன்சிரிப்புடன், மதியின் வழிசென்று மாதின் சதியை வெல்வோம். மன்னா கவலையுறாதே, பரதனே மன்னன் என்று புகன்றுவிடு. இராமன் காடு ஏகுவான் என்றும் கூறிவிடு. பரதனுக்குப் பட்டம்சூட்ட, முகூர்த்தம் குறிக்கவரும் முனிவரிடம் நான்பேசி பரதன் முடிதரித்தால், மண்டை ஆயிரம் சுக்கலாக வெடித்துவிடும் என்றோர் கிருஹதோஷமிருப்பதாகக் கூறச் செய்வேன். மகன் பிழைத்தால் போதும் மணிமுடி வேண்டாமென்று மான்விழியாள் கதறுவாள். வேண்டாம் வரம்! வேண்டாம் அரசு! என்று அலறுவாள்! என்று ஆச்சாரியார் யோசனை கூறுவார். “பெரும் புளுகு பேசுவதோ” என்று பேரரசன் கேட்பின் நீரோ கூறப்போகிறீர், அதற்கோர் பேர் வழியை அடியேனால் கொண்டுவர முடியும். புளுகியதற்குப் பின்னர் பரிகாரமும் தேடித் தருவேன் “அவனுக்கும்” என்று கூறி இராமாயணத்தின் போக்கையே மாற்றிவிட்டிருப்பார்.

ஆம்! ஆச்சாரியார் இதுபோது, அரசியலிலே நடத்தும் வியாக்யானங்கள் விளக்கங்கள், ஆகியவைகளையும்... அவருடைய போக்கையும் காணுவோர், அவரது புத்தி தீட்சணியம் தசரதனுக்குப் பயன்படுவதற்கின்றிப் போய்விட்டதே என்றும் வருந்துவர்.

தற்போது அவர் பிரசாரம் செய்வதிலே காணப்படும் மொழிகள் விதவிதமான வியாக்யானங்களுக்கு ஏற்றதாக, வேளைக்கோர் பொருள் தருவதாகவே இருக்கக் காண்கிறோம். திட்டமாக, தெளிவாக, பேச மறுக்கிறார். தேனையும் வேம்பின் ரசத்தையும் கலந்து குழம்பாக்குகிறார்.

7.6.1942