அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேண்டாம் விபரீதம்!

அண்மையில், வடிகட்டும் முறையை எதிர்த்து மாணவர்கள் நடதத்திய அறப்போரின் விளைவாகச் சில இடங்களில் பள்ளித் தலைவர்கள் மாணவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிய வருகிறோம். சிறிதும் ஆத்திர உணர்ச்சியின்றி, தமது அதிருப்தியைக் காட்டிக்கொண்ட மாணவ அரும்புகிளின், கல்விப்பாதையில் ‘தடைகளைப்‘போட்டு அவர்கள் வாழ்வைக் கருகச் செய்வதென்பது, நல்லதல்ல. இவ்வித அடக்குமறைப் பாதையில் சென்று, ‘எதிர்காலத்தின்‘ சாபத்துக்கு ஆளாக வேண்டாமென, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம். தமக்கேற்பட்ட அநீதிபோக்கி, நீதிபெற விரும்பிய மாணவர்களை, பள்ளியிலிருந்து நீக்குவதாலும் ‘வராதே‘ என்று விரட்டுவதாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளலாமே தவி – அதனால் ஏற்படும் விபரீதங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆத்திர உணர்ச்சியால், இளமலர்களைக் கசக்கி எறிவதென்பது கல்மனதினர் செயல்! இவ்வித நடவடிககைகளை மேற்கொள்வோர், கண்ணீர் சிந்தி பள்ளி வாயிலில் நிற்கும் மாணவர்களின் தந்தையரின் இதயம் எவ்விதம் துடீக்குமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வத்தலகுண்டிலிருந்து வந்த ஓர் செய்தி, மிகவும் வருந்தச் செய்தது. இவ்வித நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து, மீண்டும் அந்த மாணவர்களுக்கு கல்வி ஒளி, கிடைக்குமாறு செய்தல் அவசியமாகும். ஒருநாள் உத்தரவு! பலரது வாழ்வையே, பாழ்படுத்திவிடும். கற்றறிந்தோர், அறியாததல்ல, இது ஆகவே, ஆவன செய்வார்களென எதிர்பார்க்கிறோம்.

திராவிடநாடு - 28-12-52