அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வந்தேனே! நானே!!

“காக்கையே! சனிபகவானின் பிரதிநிதியாக, நீ கிளம்பு! சிவனாரின் பிரதிநிதியாக, காளையே நீ கிளம்பு. நாயே! நீயும் நட. வைரவருக்காக, உனக்கு வருகிறது யோகம்.

பழங்காலத்தை உருட்டும் பெருச்சாளியே! பதுங்காதே, வா வெளியே, கணபதியின் பிரதிநிதியாக நீ புறப்படு.

குப்பையில் புரண்டு கிடக்கும் கழுதையே! நீயும் புறப்படு, நீ தேவகானத்துக்குப் பிரதிநிதி என்று தெரிவித்துவிடு.

ரயில் பிரயாணத்திலே பெட்டியோ, கூஜாவோ, மூட்டை முடுச்சோ, திருடியவன், பிரயாணிகளின் பாதுகாப்புச் சங்கப் பிரதிநிதியாகக் கிளம்பட்டும்! உப்பு மூட்டையைத் திருடிவிட்டு, ஊராரிடம் உதைப்பட்டுக் கிடந்தவன் ஊர்காப்புச் சங்கத்தின் உன்னதப் பிரதிநிதியாகப் புறப்படட்டும். எட்டாவது கள்ள புருடனுக்காக, ஏழாவது பேர்வழியை ஏமாற்றியவள் கற்புக்கரசிகளின் கழகத்தின் சார்பாகப் பேசுவேன் என்று சொல்லிக்கொண்டு, சுழல் கண்ணும், “ஷோக்” நடையும், உடன்வரக் கிளம்பட்டும். உச்சுக் குடுமிகள் நவநாகரிகத்தின் பிரதிநிதிகளாகவும், ஊசல் ஊறுகாய்க்கு ஒரு காதம் ஓடும் பேர்வழிகள் வள்ளல்களின் வாரிசாகவும், கிளம்பட்டும். மூளையற்ற முத்தண்ணாக்களின் முழு அனுமதிபெற்ற ஏகப்பிரதிநிதி நானே என்றுரைத்துக்கொண்டு, பித்தன் புறப்படட்டும்,” என்று வேகமாகவும் உக்கிரமாகவும் கூறினான் நண்பன் வீரன்!

“வீரா! கோபம்வரக் காரணமென்ன? காக்கையும் கழுதையும், நாயும் நாசகாலியும், பெருச்சாளியும் பித்தனும், பிரதிநிதிகளாகக் கிளம்பட்டும், என்று கூறுகிறாயே, என்ன கருத்துடன் பேசுகிறாய், எனக்கும் பிறருக்கும் விளங்கக்கூறு. கோபத்தைக் குறைத்துக் கொள்” என்று நான் கூறினேன்.

“நண்பா, பரதா! நடந்தது என்னவென்று தெரியாதுபோலும். பத்திரிகைகளைப் பார்ப்பதில்லையோ?” என்று கேட்டான் வீரன்.

“பார்க்காமல் என்ன?” என்று பதில் கூறினேன் நான்.

“நீ பார்த்த இலட்சணம் தெரிகிறது. இதோபார். படி” என்று கூறிக்கொண்டே, சுதேசமித்திரன் பிரதியொன்றை என்னிடம் கொடுத்தான். படித்தேன்.

“ஸ்ரீமான் ராமஸ்வாமி நாயகருக்குக் கட்சியேதுமில்லை. அவரை ஆதரிப்பவரும் கிடையாது. தென்னிந்திய பிராமணரல் லாதாருக்கு அவரல்ல பிரதிநிதி. நானேதான்” - என்று ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டி மாஜித்தலைவர், ஸ்ரீமான் ஏ. குப்புசாமி முதலியார், சர். ஸ்டாபோர்டு கிரிப்சுக்குத் தந்தி கொடுத்திருக்கிறார்.” - என்று மித்திரனில் இருந்தது. வீரனுக்குக் கோபம் பிறந்ததன் காரணம், விளங்கிற்று. பார்ப்பனரல்லாதாருக்கு நான் பிரதிநிதி, என்று வேலூர் தோழர் குப்புசாமி கூறினதால், வீரன், காக்கை கழுதை, காலி கள்ளன், ஆகிய எதற்கும் பிரதிநிதி வேலைகொடுக்க முன்வந்தானென்பது விளங்கிவிட்டது.

உண்மைதானே! பார்ப்பனரல்லாதப் பெருங்குடி மக்கட்காக, தோழர் குப்புசாமி பிரதிநிதி என்று கூறத்துணியும்போது, அதிலும், பார்ப்பனரல்லாதாரின் கட்சியும், அதன் தலைவரும் இருக்க, அங்கு ஒண்டவோ, ஒதுங்கியிருக்கவோ, இடமும்பெறாது, அந்தக் கட்சியைக் கண்டபடி தூற்றிக்கொண்டு வாழும் ஒருவர், வெட்கமின்றி, நான்தான் பார்ப்பனரல்லாதாருக்குப் பிரதிநிதி என்று கூறுவது துடுக்குக் குணந்தானே! பிரிட்டிஷ் பேரறிவாளிகளைத் திணறும்படிச் செய்த திறமும் தீரமும் பெற்றிருந்த டாக்டர் நாயர் என்ன! திக்விஜயம் செய்துத்தமிழரைத் தட்டி எழுப்பி வெற்றிக்கொடி நாட்டி தமிழர் வெண்சாமரம்வீச கவர்னர் கைலாகு கொடுக்க ஆரியர் அஞ்சி ஒருபுறம் ஒதுங்கி நிற்க, அரசோச்சிய வீரத்தியாகராயர் என்ன! பாராளும் பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் புகழத்தக்க ராஜதந்திர நிபுணராக விளங்கிய பனகல் அரசர் என்ன! இவர்கள் தோன்றிய கட்சியிலே, எட்டுமுறை சிறைசென்று, கொட்டு முரசு தமிழா! என்று முழக்கி, கோல்கொண்ட ஆச்சாரியாரின் கோல் விழச்செய்து, தூங்கிய திராவிடரை எழச்செய்து, குகையைவிட்டு, சிங்கம் கிளம்புவதுபோல், குடும்பங்களை விட்டுத் திராவிடத் தோழர்கள் வெளிவந்து, ஆள்வோரின் வெஞ்சினத்தைக் கண்டு கலங்காது, சிறைசென்று மீண்ட, ஆயிரவருக்கு மேற்பட்ட அருந்தொண்டர் படையைத் திரட்டி, வெற்றிகண்ட பெரியார் என்ன! அவருக்குக்கீழ் தளபதிகள் பலர் என்ன! இத்தகையோரைப் பெற்ற, திராவிடத் திருக்குலத்தாருக்கு, இந்த ஆரியப் பாதந்தாங்கியா, பிரதிநிதி! நெல்லுக்குப் பிரதிநிதி பதரா! நீருக்குப் பிரதிநிதி சேறா? மலருக்குப் பிரதிநிதி கூளமா? தோழர் குப்புசாமியா, நமது சமூகப் பிரதிநிதி? என்ன நெஞ்சழுத்தம்! எவ்வளவு பித்தம். வீரன் கோபித்துக்கொண்டது தவறல்லவே. இந்தச் செய்தியைக் கேள்விப்படும், எவருந்தான் கோபிப்பர். நானும் கோபித்துக்கொண்டேன் முதலில், பிறகு, பரிதாபப்பட்டேன். ஆணவத்தின் ஆட்டத்தால், அவர் அதுபோல் கூறினார் என்றனர் நண்பர்கள். அது ஒரு நோய், என்று நான் கருதினேன், அவருக்காகப் பரிதாபமும் பட்டேன்.

வேப்பிலை எடுத்து அடியுங்கள்! மஞ்சள் நீரைத் தலையிலே கொட்டுங்கள்! சூட்டுக்கோலை எடுத்துக் காட்டுங்கள்! ஜாட்டை வாரை வீசுங்கள்! பாபம், அவரைப் பேய்பிடித்துக்கொண்டது. பித்தம் ஒரு பேய் போன்றதே! அதனிடம் சிக்கினோர், பிதற்றுவர், ஏதேதோ பேசுவர். இந்தவேளையில், எப்படி இருக்கிறாரோ தெரியாது. நிலைமை யாதாகி விட்டதோ! தலைகீழாக நிற்கிறாரோ? தத்தோமெனக் குதிக்கிறாரோ? நீரோடையில் புரள்கிறாரோ? நானறியேன், அவரது இப்போதைய நிலையை.

இவ்வளவு பித்த முதிர்ச்சியில்லாவிட்டால் கூப்பிடுவாரற்றுக் கிடக்கும் அவர், அழைப்பைப்பெற்று, நமது தலைவர், சர். ஸ்டாபோர்டு கிரிப்சைக் கண்டு பேசும் நேரத்திலே, பார்ப்பனரல்லாதாருக்கு நானே பிரதிநிதி என்றுரைப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள்.
வீட்டிலே பலர் விருந்துண்ண, புறக்கடை மேட்டிலே பன்றிகள் மலந்தின்னும் காட்சிக்கும், டில்லி நகரிலே, பெரியார் ராமசாமியும், குமாரராஜா, சாமியப்பா, பாண்டியன் ஆகியோர், பார்ப்பனரல்லாதாரின் பிரதிநிதிகளாக, திராவிட நாட்டுத் தலைவர்களாக, சர். கிரிப்சிடம், பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், வேலூர் வெத்துவேட்டு, வெந்ததைத்தின்றதற்கு வேலை வேண்டுமே என்பதற்காகப் பார்ப்பனரல்லாதாருக்கு நான்தான் பிரதிநிதி என்றுரைப்பதற்கும், அதிக வித்தியாச மில்லையல்லவா?

நரகல் நடையழகர், நடுங்கா நாக்கழகர், வேலூர் குப்புச்சாமியாரின் வாயிலிருந்து வெளிவந்த வாடைமிக்க வாசகங்கள் பல உண்டு. அவரது சகாக்களின் செவிகளுக்கும் நாராசம் போலிருக்கும் நடையில் பேசும் பெருங்குணவான் அவர். பொது மேடைகளில் எதிர்க்கட்சியினரைத் தாறுமாறாகத் திட்டுவதற்காகவே பிறவி எடுத்ததாகக்கருதிக் கொண்டுள்ள இந்த நடமாடும் தப்பட்டையின் போக்கைப்பற்றி நான் பலர் கூறிக்கேட்டதுண்டு, ஆனால் ஆச்சரியப்பட்டதுமில்லை, ஆயாசமடைந்ததுமில்லை. நாடாள நாயை அமர்த்தினால், அது வருகிறவர் போகிறவரைக் கண்டு ‘வள்’ எனக் குரைத்து வெடுக்கெனக் கடிப்பதுதான் முறை என்று கருதும். கழுதைக்குக் கிரீடம்கட்டினால், அது காலால் உதைத்தும், கத்தியும், தனது ஆட்சியைச் செலுத்தும். படிப்பு, பயிற்சி, பண்பு, பழக்கம், ஆகிய எந்தவிதத்தாலும், நாகரிகம் பெறாதவர்களை மேடைவாசி களாக்கினால், அவர்கள் நரகல் நடையழகைத்தான் காட்டுவார்கள். அவர்களிடம் உள்ளது அதுதானே! தறுதலைத் தாண்டவராயனுக்குத் தர்பாரில் இடங்கிடைத்தால், முடிச்சவிழ்த்த முத்தன், குடித்துப்புரளும் கோவிந்தன், கன்னக்கோல் கந்தன், ஆகியோர் பிரதானிகளாகி விடுகிறார்கள்! இதிலே ஆச்சரியமென்ன இருக்கமுடியும்! இயல்புக்கேற்றபடி இடம் இருக்க வேண்டும். தவறினால், வேறுபல தவறுகள் தானாக வளரும்.

வேலூர்த்தோழர் விடுத்த தந்தியைக் கண்டதும், சர். கிரிப்ஸ், என்ன செய்தார்! “கூப்பிட்டு வாருங்கள் அந்தக் குப்புச்சாமியாரை! அவரேதான் பிரதிநிதி” என்று கூறினாரா? இல்லை! அவர் தமது ஆளைக்கூப்பிட்டார். அவன் அந்தத்தந்தியைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வேறு வேலையைக் கவனித்தான். இத்தகைய முந்திரிக்கொட்டைகள் விடும் முடங்கலுக்கு வேறு என்ன கதி நேரிடமுடியும்!

பச்சைமுத்து, பவளம் பவுன் ஆகியவற்றைத் தூவிய பஞ்சணையில் சாய்ந்துகிடக்கும் சிங்காரச் சீமான், நானே தமிழரின் தலைவனாக வேண்டும் என்று கூறினாலும், நான் பாரிஸ்டர் படித்துத் தேறியவன், பல கலைவல்லவன், பட்டம் பல பெற்றவன், எனவே நானே தமிழரின் தலைவராக வேண்டும் என்று சொன்னாலும், தியாகத்தீயில் குளித்தெழுந்து, கஷ்டநஷ்டமெனும் கடலைக் கடக்கத்துணிந்து, மலைபோல் வரும் எதிர்ப்பை மலர்ச்செண்டுபோல் கருதி வரவேற்று, உழைத்து, உறுதிகாட்டி, ஊராள்வோரின் உபசாரமோ, உல்லாசவாசிகளின் உரசலோ இடையே உறவு கொண்டாட முன்வந்தாலும், மயங்காது, மனங்குலையாது உள்ளவரே எமக்குவேண்டும் அவரே எமது தலைவர், என்று கூறும் தமிழரிடையே, எதிலும் ஏழாமிடமும் பெறாத ஒருவர், நான் உங்கள் பிரதிநிதி என்றுரைத்தால், தமிழர் அதைக்கேட்க மனம் ஒப்புவார்களா? வீதி வழியேபோகும் வசீகரக் கன்னிகையை நோக்கி, அந்த மங்கைக்கேற்ற மணாளன் நானே என்று ஒரு மடமன்னார்சாமி கூறினால், பற்கள், கீழே வீழாதா! பக்கத்திலே இருந்து கேட்பவர்கள், சும்மா இருப்பார்களா?

பார்ப்பனரல்லாதாருக்குப் பிரதிநிதிகளாக, பண்புள்ளவர்கள் வேண்டும்! பக்குவமுள்ளவர்கள் வேண்டும்! பதவியும் பட்டமும் பெற்றவர்களைக் கண்டதும், பத்தும்விட்ட பன்னாடைகள்போல் பராக்குக்கூறும் பேர்வழிகள், எப்படிப் பார்ப்பனரல்லாதாருக்குப் பிரதிநிதியாக முடியும்! எதைக்கண்டு இந்தக் குப்புசாமியாரை சர். கிரிப்ஸ் கூப்பிடுவார். இது காங்கிரசிலே ஒரு கொடி தாங்கி! கோபுரத்துப் பொம்மை!! தமிழரின் கோடரி! இதனை ஏன் சர். கிரிப்ஸ் கூப்பிடப்போகிறார்!
தென்னாட்டுக் காங்கிரசின் பிரதிநிதியாக, ஒரு ஆச்சாரியார் போகமுடிந்தது! பார்ப்பன சபை காங்கிரஸ், என்பதற்கு, பளிச்சென்ற உதாரணம் இது. தென்னாட்டுக்காங்கிரசிலே, வேறு எந்த ‘தமிழர்’ பிரதிநிதியாக மதிக்கப்பட்டார்? தென்னாட்டுக்கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சிக்கு, 4 பேர் பிரதிநிதிகள்! நால்வரும் தமிழர்! காங்கிரசிலோ, தென்னாட்டுத் திருத்தூதராகச் சென்றவர் ஒரு பார்ப்பனர் மட்டுமே! ரோஷமிருந்ததா மற்றக் காங்கிரஸ் தமிழ்த்தலைவர்களுக்கு!! குமாரமங்கலம் ஜெமீன்தாரரைக் கூப்பிடுவார் இல்லை! ஒளி வீசும் வைரக்கடுக்கனை அணிந்து கொண்டு தஞ்சைத்தரணியில் காங்கிரசின் ஒளி வீசச் செய்வேன் என்றுகூறும் சீமான் நாடிமுத்து, சேலம் நாச்சியப்பர், கோவை ராமலிங்கர், கூடலூர் சீதாராம ரெட்டியார், மற்றும் முத்துரங்கம், வெங்கடசாமி முதலிய ஆழ்வாராதிகள், ஆகிய யாருக்காகிலும் அழைப்பு விடப்பட்டதா! கூப்பிடுவாருண்டா இந்தக் கூட்டத்தை! ஜஸ்டிசுக்கு 4 பேர் பிரதிநிதிகளாகப் போனார்களே, நமது தென்னாட்டுக் காங்கிரசுக்காகவும் நாலு பேரைக் கூப்பிடட்டுமே என்று கேட்கக்கூட ரோஷம் பிறக்கக்காணோம்.

“எங்கள் நாட்டிலே, காங்கிரசென்பது ஒரு பார்ப்பன சபை என்றுதான் நாங்கள் கருதியிருக்கிறோம்.”

“காரணம்?”

“காரணம் ஆயிரமுண்டு, ஒன்று பாருங்கள். தென்னாட்டுக் காங்கிரசுக்காக ஒரு ஆச்சாரியார்தானே இங்கு வந்தார்?

“ஆமாம்.”

“மற்றும், அதிலே எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பன தாசர்கள்.”

பெரியாருக்கும், சர். கிரிப்சுக்கும் இதுபோன்றுதானே பேச்சு நடந்திருக்கும்! சர். கிரிப்ஸ், காங்கிரசில் பார்ப்பனியம் தாண்டவமாடுவதைத் தெரிந்து கொண்டிருப்பார் என்பது திண்ணம்.

இந்த இலட்சணத்திலே குமாரமங்கலம் ஜெமீன்தாரும், மாஜி முதலமைச்சரும், பாரிஸ்டர் படிப்பும், மேனாட்டுப் பழக்கமும் பெற்ற சுப்பராயன் போன்றவர்களின் கதி இருக்கிறதென்றால், மற்றக் குப்பன் சுப்பனைக் கேட்பவர் யார்? எங்கே கிடந்தால்தான் என்ன? இதைக் கவனிக்காது, தோழர் குப்புச்சாமி, நான்தான் பார்ப்பனரல்லாதாருக்குப் பிரதிநிதி என்று கூறுகிறாரே, இந்தப் பித்தத்தைத் தமிழரே, தயவு செய்து தெளியவைக்க வேண்டாமா!

‘மதனகாமராஜன்’ என்ற தமிழ் படத்திலே, ஹாஸ்ய நடிகர் தோழர் துரைராஜ், தாண்டவன் என்ற பாத்திரமாக நடிக்கிறார், பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தோட்டத்திலே வேலை செய்யும் தாண்டவனை, திமிர்பிடித்தக் குறும்பனொருவன், “நீர் ஓர் மன்னன் முற்பிறப்பிலே, இப்போதும், உனது நாட்டுமக்களும் உனது மாஜிபட்டமகிஷியும் உன்வரவுக்காகக் கார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றுகூற, தாண்டவன் அதை நம்பி தலையிலே பாகை சுற்றிக்கொண்டு, மண்வெட்டிக் காம்பை, செங்கோல் எனக்கொண்டு, ராஜநடை நடந்து, ராணியைக் காணச் செல்கிறான். தோழர் குப்புசாமியும், இனி, சர். கிரிப்சுக்குத் தந்த தந்தியைக் கையில் பிடித்துக்கொண்டு, “வந்தேனே! நானே! வண்மைத்தமிழரின் பிரதிநிதிதானே” என்று பாடிக்கொண்டும், வருவார்போலும்!! யார் கண்டார்கள் இன்னம் என்னென்ன நடக்குமோ!

5.4.1942