அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


இதழ் வாழ்த்து
(அண்ணா தீட்டிய இறுதிக் கவிதை)
என்தம்பி தருகின்றான் எழிலார் ஏடு!
'தென்னகம்' என்னும்ஒர் தீந்தமிழ் ஏடிது
என்னகம் விழைத்திடும்பல் இயல்புடை இளவலாம்
பொன்னகம் என்னுமோர் பொலிவுசேர் கொங்கினான்
தன்னகம் விளைந்தஓர் தாழையாம் காணீரே!

தென்னகம் என்பது தேயமா? மாயமா?
என்றேலாம் பற்பலர் ஏசலைப் பேசினர்
அன்றெலாம் நமக்கென யார் துணை என்றனம்
கன்றெலாம் கனிஉதிர் காலமே வந்தது.

குன்றுபோல் நின்றனன், கொள்கையிற் திளைத்தனன்,
மன்றெலாம் கண்டனன், மதியழகன் எனும் பெயரினன்,
கொன்றையும் வென்றியும் கொண்டவர் திறத்தினை
அன்றவர் ஈட்டிய அருந்தமிழ்க் கீர்த்தியைச்
சென்றிவர் படித்துமே செப்பினர் நாட்டிடை
சேயிழை காணலில், செய்தொழில் தேடலில்
பாய்விழை மனதினர் பற்பலர் நடுவினில்
பாங்குறு இளவல்நற் பணிபல புரிந்தனன்
ஆங்கவன் ஆற்றிய அரும்பணி யாம்கரு
ஈன்றதோ பெருமிதப் போர்ப்படை யாகுமே!

அண்ணா மலைப்பல் கழகத்தி னின்றே
அணியொன்று கிளம்பிற்று காண்பகை வென்றே.
அந்நாளில் தமிழ்நாட் டார்கண் டதனைஎல்லாம்
அழகாக நாட்டவர்முன் காட்டினர் சொலல்வல்லார்!

ஆ இதுவோ நமதுமுறை! மருபிதுவோ! மாண்பிதுவோ
என்றே மக்கள்,
மனமுருகிக் கேட்டுணர்ந்து மகிழ்ந்தே நின்றார்.
மதியழகன் தந்ததிந்த எழுச்சி என்றே
மார்தட்டிப் புறப்பட்டார் பலரும் நன்றே!
கழகத்தின் எழிலுருவம் அமைந்த காலை
கருத்தளித்துக் காவல்நின் றான்இந்தக் காளை.
இழுக்கென்று சழக்கர் சிலர்கூறும் வேளை,
ஈதென்ன வம்புஎன ஓய்ந்தி டாமல்
என்னகம் சேர்உண் மைதனை எடுததியம்ப
எனக்குண்டு உரிமைகாண் என்றே கூறி,
சினங்கொண்டார் சிலர் தந்த கோலும் வாளும்
சிவப்பேற்றி உடலதனை வாட்டக் கண்டும்.
சிறிதேனும் பதறாது சிரித்தே நின்று
செந்தமிழைக் காப்பதற்கோர் பரிசாம் என்றார்!
அவர் சென்று காணாத ஊர்தா னில்லை.

அன்றுதொட்டு அவர்கண்டது அனேகம் தொல்லை!
அஞ்சாமல் களம்நிற் பார்அடுத் தடுத்து
அரும்மனதின் நிறைகுலையார். சிறைவாழ் போதும்.
அத்தகு மத்தகரி
இத்தினம் ஏற்றும்திரி
என்றுளம் மகிழ்கின்றேன்
இன்றையநல் ஏடுகண்டு!

ஏடு நடாத்துதல் பெரும்பாடு.
இல்லை எத்தொழிலிலும் இடர் இதற்குஈடு.
எனினும்,
சூழ நின்றிடும் சுற்றம் போல்வார்
துணைநிற்க வேண்டும் வந்து இதன்பால்.

ஏனோ எனில்,
பால்பொங்கும் நேரமிது!
பாங்குவளர் காலமிது!
பாரிலே உள்ளபலர் பரிந்து பேசிடுமோர்
நேரம்எதிர் பார்த்துத் தாம் நிற்கும்
நாளிதுகாண்!
கருப்பெல்லாம் வெளுப்பை நீக்கும் காலமிது!
கைகூப்பி வாழ்ந்தோ ரெல்லாம் கடாவுகின்றார்!
எனைஆள எதனாலே தகுதி பெற்றாய்?
ஏனிந்த வன்முறைகள், இனியும் இங்கே?
கானொன்று போதா தோதீ திருக்க
கடுகியே புறப்படு வாய், கலாம் விளையும்!
கனல்கக்கும் நிலைதனையே விழிகள் பெற்றால்
கருகிடும்உன் ஆதிக்கம் பொடியு மாகும்!
என்நாடு எனதாதல் தானே முறையும்
எடுத்தெடுத் தியம்பவோ இவ்உரையும்,
'எகு! நீ ஏகு!' என்ற ஆர்தெழுந்து
எங்கெங்கோ முழக்குகிறார் உரிமை வேட்கை,
சங்கதனை எடுத்துரைத்து எஃகுள்ளம் காண,
என் தம்பி தருக்ன்றான் எழிலார் ஏடு.

ஆங்காங்கு அரும்பிவரும்
அஞ்சாநெஞ் சாற்றலினை
சர்க்காரும் உணர்ந்திடவோர்
ஏடாக இதைச் செய்வார்,
பாங்கான திறமிதற்குப் பலவும் தேவை
பயமில்லை இவர்க்குண்டு அறிவோம் நாமே.
தென்னகம் பொன்னகமாய்த் திகழ்ந்த தோர்நாள்!
திக்கெட்டும் தமிழ்வீரம் நிலைநாட்டிற்று நம்வாள்!
காழகத்தொடு ஈழமும், சாவகத்தோடு யவனமும்
கண்டுமகிழ்ந்திட தந்தனர், பண்டுமணங்கமழ் நந்தமிழ்!
கரிகுழல் அசைவுற அவைவுறத்
'துயில்எழும் மயில்என மயில்எனப்
பரிபுரம் ஒலிஎழ ஒலிஎழப்
பனிமொழியவர்,
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகி,
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
நேயக்கவி அமுதளிப்பர்' என்றனர் புலவோர்
எனினும் மானமழித்திட மாற்றான் முனையுங்காலை
மயிலே! குயிலே! என்ற
மொழிபேசி மகிழும் போக்கு மாறி,

அதிர்ந்தன நாலுதிசைகள்!
அடங்கின ஏழுகடல்கள்!
பிதிர்ந்தன மூரி மலைகள்!
பிறந்தது தூளி படலம்!
என்றுபா எழத்தக்க வீரம் காட்டினர்.
வெற்றி ஈட்டினர்.
அத்தகு தென்னகம் அடைந்துளது இழிநிலை,
இதனை மாற்றிட உறுதிபூண்டோர் நமையன்றி
இன்றுவேறிலை!
இதற்கான படைக்கலன் கள்பல வற்றில்
ஈதென்று, இதைக்கொண்டு
வெற்றி காண்போம்!
தைத்திங்கள் நாளினிலே வந்த தாலே
தமிழர் உய்யும் வழிக்காட்டும் இவ்வேடு மேன்மேலே!
ஏடதனால் நாடுபய்ன அடையும் வண்ணம்.
வீடதனில் விளக்காக்கி மகிழ்வீர், திண்ணம்!
பாடுகிறான் அண்ணன் ஓர்கவிதை என்று,
பரிவாலே, எண்ணிடாதீர், உடன் பிறந் தாரே!
சீர்அறியேன், அணிஅறியேன், சிந்தைஉந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன். ஆசை யாலே!
"தென்னகம்" பெற்றுத் "தென்னகம்" வாழ்க!
என்னகம் மகிழ்ந்திட, 'பொன்னகம்' வாழ்க!

(தென்னகம் வார இதழ் - 16.01.1968)

(அண்ணா தீட்டிய இறுதிக் கவிதை)